Wednesday, February 24, 2010

தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறையிலாவது மதிப்பெண்ணை மையப்படுத்தும் கல்வி சூழல் மாறுமா?

  
    ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்  கட்டுரை கொடுத்து , அதனை எழுதிவர செய்தார். அவர் கொடுத்த தலைப்பு ..."கடலில் நீந்துவது எப்படி? உன் அனுபவத்தை பகிர்ந்து கொள்."

      கொடுக்கப்பட்டது என்னவோ வீட்டுப்பாடம் , இருந்தாலும் அவர் அதனுடன் ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தார்."இக்கட்டுரைக்கு நான் மதிப்பெண் தருவேன். அதில் அதிக  மதிப்பெண் பெற்று முதல்  இடம் பிடிக்கும் கட்டுரைக்கு உரிய மாணவன் தான் , மாவட்ட அளவில் நடைபெறும் கட்டுரை போட்டிக்கு அனுப்பப்படுவர்".  எப்படி ?
  
        மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுத ஆரம்பித்தனர்.  கட்டுரையும் சமர்பிக்கப்பட்டது. கட்டுரை எழுதிய மாணவர்களை நீச்சல் தெரிந்து அதை அனுபவித்து எழுதியவர்கள், நீச்சல் தெரிந்தவர்களிடம் நீச்சல் பற்றி கேட்டு எழுதியவர்கள், நீச்சல் பற்றி தெரியாமல் , தெரிந்தவரிடமும் கேட்காமல் , புத்தகத்தை பார்த்து காப்பி அடித்து எழுதி வந்தவர்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம்.

       யாருக்கு பரிசு கிடைத்து இருக்கும் என நினைக்கிறீர்கள்? நிச்சயம் அனுபவித்து உண்மையை உணர்ந்து எழுதியவர்களுக்கு கிடைக்க வில்லை . சரி , அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து பெற்ற அறிவை பயன்படுத்தியவர்களுக்காவது கிடைத்திருக்குமானால் அதுவும் இல்லை, அப்படியே மனணம் செய்து காப்பி அடித்த மாணவனுக்கு தான் முதல் பரிசு கிடைத்தது.
  
        அதேபோல் தான் ,மாவட்ட அளவில் நடை பெற்ற போட்டியிலும் மனணம் செய்து , புத்தகத்தை காப்பி அடித்தவனுக்கு தான் கிடைத்து.  எதோ கட்டுரை பற்றி பேசுகிறேன்... என்று நினைத்து விடாதீர்கள். அதில் உள்ள உண்மையை  நினைத்து பாருங்கள் ! நம் கல்வி முறையின் அவலம் புரியும் !

         செயல் படுத்த தெரியாதவர்களிடம் தான் இன்று நிர்வாக திறன் போய்கொண்டு இருக்கிறது . நாம் பிந்தி இருக்கிறோம் ,அனைத்திலும் ..., பட்டியலிட அவசியம் இல்லை. செயல் முறை அறிவு பெறாமல் , புத்தகத்தை மட்டுமே  கரைத்து குடித்து மனணம் செய்து, அப்படியே வாந்தி எடுத்து , அதற்கும் அருமையாய் மதிப்பெண் அளித்து, மதிப்பெண் அடிப்படையில்  அனுபவம் பெறாத கல்வி ...எல்லா இடத்திலும் அரியணை நடத்தி கொண்டுஇருக்கிறது.


          அனுபவம் பெற்று அதை சுவைபட எழுத தெரியாமல் , ஆனால் செயல் படுத்த சொன்னால் , அருமையாய் செயல் படுத்தி வெற்றி கனியை கொடுக்கும் பண்பு நலன் அல்லது செயல் படுத்தும் அறிவு பெற்றவர்கள் ... அடிமைகளாய் அத்த கூலிகளாய் ...கால் வயிற்று கஞ்சிக்கு ...காய்ந்து ,வாழ்வில்  காணாமலே  போய் விடுகிறார்கள்.

         வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள் அனுபவம் கூடி , அதுவே அவர்களுக்கு புதிய உத்திகளை கையாளச்  செய்து ,அனைத்து துறைகளிலும் புதுமை கண்டுபிடிப்புகளை உண்டாக்கி , சாதனை படைத்து தமிழகத்தை , ஏன் , இந்தியாவையே முதன்மை நிலைக்கு உருவாக்கிவிடுவார்கள். இந்த சமச்சீர் கல்வி முறையிலாவது செயல் முறை அடிப்படையில் மதிப்பிடல் கொண்ட கல்வி திட்டம் அமையுமா?
 
           "எது செயல் முறை சார்ந்த கல்வியாகும் ?" என கேட்பது புரிகிறது . நாம் பாடம் நடத்தி விட்டோம், அதை நாம் படித்து புரிகிறதோ , புரிய வில்லையோ ...மனணம் செய்து, விடை தாளில் கக்க(வாந்தி எடுக்க ) செய்கிறது தற்போதைய கல்விமுறை  .

          அதை தவிர்த்து , பாடம் நடத்திய பின் , மாணவர்களை குழுக்களாக பிரித்து , அதை பற்றி விவாதம் செய்ய சொல்லி , அப்பாடத்தில் உள்ள முக்கிய கருத்துக்களை மாணவர்களே அக்குழுவில் குறித்து , குறிப்பிட்ட நேரம் முடிந்த பின் , அவர்களை அப்பாடத்தில் உள்ள கருத்துக்களை குழுவுக்கு ஒருவர் வீதம் எடுத்து சொல்ல செய்யலாம் . பின்பு மறு நாள் , அப்பாட சம்பந்தாமான செயல் பாடுகளை செய்து வர செய்து , அதனை தனி தனியாக மாணவர்கள் மத்தியில் தனி நபராக(presentation ) செய்து காட்ட செய்யலாம்.   அதன் மூலம் அவனின் செயல் முறை அறிவு மேன்மை அடைந்து , அனுபவம் வாயிலாக கற்றல் நடைபெற்று  , தவறுகள் நீக்கி , பிழைகள் தவிர்த்து,முழுமையான கல்வி கிடைக்கும் .

          செயல் அறிவு  பெற்ற மாணவன் ....எடுபிடியாக இல்லாமல் , உண்மையான அதிகாரிகளாக இருப்பார்கள், அது புதுமையான கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும் . மாணவனின் முழுமையான திறன் வெளிப்பட்டு , போலியான மதிப்பெண் சார்ந்த கல்விமுறை முற்று பெற்று , உண்மையான அறிவாளிகள் அதிகாரிகளாக வர நேரிடும்.   

        மாணவனின் நுண் அறிவு வளர்க்கும் கல்விமுறை செயல்படுத்தி , மாணவனின் செயல் அடிப்படையில் மதிப்பெண் கொடுத்து , உண்மையான திறமைசாலிகளுக்கு  வாய்ப்பை கொடுத்து , எதிர்காலம் நல்ல வலுவுள்ளதாக மாற்றுவோம். 
  
     மதிப்பிடல் மாணவனின் மானப்பட சக்தியை சோதிப்பதாக அமையாமல் , அவன் புத்தகத்தில் பெற்ற அறிவை செயல் படுத்தும் விதமாக அமைந்து, அச்செயல் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும்.  அறிவை செயல் முறை படுத்தும் சந்ததியினரை உருவாக்கி, உண்மையான அறிவாளிகள் பணிகளில் அமர்த்தப்பட வேண்டும். முறையான மதிப்பிடல் நடந்து உண்மையான திறமைசாலிகளுக்கு வாய்ப்பு போய் சேரவேண்டும். 
      (கல்வி சார்ந்த மதிப்பிடல் தொடரும் ...கருத்து மாறுபாடு இருப்பின் பகிர்ந்து கொள்ளலாம்)

2 comments:

பனித்துளி சங்கர் said...

புதுமை . நானும் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி

Aba said...

கலக்கிட்டிங்க சார், நானும் ரொம்ப நாளா நெனச்சுகிட்டே இருக்கிற உண்மைய சொல்லிட்டிங்க...

உங்க பதிவுகளை இன்னிக்குத்தான் படிக்க ஆரம்பித்தேன்... அனைத்தும் அருமை.. நல்லா எழுதறீங்க.. ஒரு பத்தாம் வகுப்பு மாணவனா உங்க எழுத்தப் படிக்கும் போது, நம்ம ஸ்கூல்ல இப்பிடி ஒரு ஆசிரியர் இல்லையேன்னு ஏக்கமா இருக்கு......

Post a Comment