Sunday, October 31, 2010

தீவுவாசியாகவே....

நான் பயணிக்கும் பாதை
முள்ளாக இருந்தாலும்
முன்னேச் சென்று
மலர் தூவி
தன் காலில் முள் சுமந்து
சுகம் மட்டும் தரும்
என் நட்பே...

நான் அழும் தருணங்களில்
என் கண்ணீராய்...
என் துயரம் துடைத்தாயே...

பிளாட்பாரக் கார வடைக்கு
ஏங்கியபோது ...
பின்னாலே வந்து
வாங்கித் தந்து
என் தந்தையாகிப்போனாயே...

பள்ளியில் காலடி எடுத்துவைத்த
நாள் முதலாய்
என் அருகில் இருந்து
அன்னையைப்போல
எல்லாத் தருணங்களிலும் காத்தாயே...

நான் எழுதாத பக்கங்களை
நீ எழுதி
முற்றுப்பெறச்செய்தாய்...
போட்டியில் வெற்றிப் பெறச் செய்தாயே
பரிசு மட்டும் என்னுடன்

உன்னைப்போலவே...!

நீ வராத காலைப் பொழுது
எனக்கு விடியாதே...
உன்னுடன் பேசாத இரவும்
எனக்கு கரைந்து போகாதே...
தொடர்புகள் அறுந்த
ஒரு தீவுவாசியாகவே
உன்னைக் காணாப்பொழுதுகளில்....

உன் கரம் பிடித்து
கதைத்து சென்ற கடற்கரையும்
பாலைவனாமாய் மாறியதே
நீ இல்லாமல்...

நீ இல்லா வாழ்வு
கனவாகக் கூட
இருக்கக் கூடாது
என்பதாலே இரவுகளில்
உன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே
கண் திறந்து உறங்குகின்றேன்....

நான் கவிதையானால்
நீ கவி வரிகாளாய் இருக்கிறாய்...
நான் கதையானால்
நீ கதைக் கருவாய் இருக்கிறாய்...
நான் எழுத்தானால்
நீ பேனா மையாய் மாறி
எனக்கு உருக் கொடுக்கிறாய்...
நீ இல்லா உலகம்
எனக்கு ஒரு நரகம்
எனவே உனைத் தேடி வருகின்றேன்...
உன்னைப்பார்த்த மகிழ்ச்சி
பட்டாம்பூச்சியாய் பறக்கிறேன்
நட்புக் கொள்ளுங்கள்
வண்ணமயமான இறக்கை முளைக்கும்
பறந்துச் சொல்லுங்கள்
நட்புன் அருமையை....!

Friday, October 29, 2010

மனசு சொன்னது

மருத்துவமனையில்
சாகும் தருவாயிலுள்ள
நோயாளியை
பார்க்கும் போது பிறக்காத இரக்கம்
உன்னை பார்த்தபோது ஏற்பட்டு   
மனசு சொன்னது
நீ செத்துப்  போ என்று ...!

எனக்கு மட்டும் எமன் போல
உயிர் பறிக்கும் உரிமை இருந்தால்
உன்னை பார்த்த மாத்திரத்திலேயே
கொன்றிருப்பேன்...
இந்தியாவில் பிறந்ததினால்
அதற்கு சட்டத்தில் இடமில்லை...!

உயிர் ...
இரத்தமும் சதையுமாய் உருவானது
நீயோ
மலமும் சலமுமாய்
மனநலமும் இன்றி
உருகிக் கொண்டு இருப்பதாலே
ஈக்கள் மொய்த்த உடலை
ஈக்கள் மொய்த்த சடலமாய்
பார்க்க ஆசை படுகிறேன்
என்னை மறந்து சென்றக் காதலியை
புதைத்ததுப் போலவே
அப்படியே அள்ளி புதைக்கவே
மனம் விரும்புகிறது ....!

நடைப்பாதை
நாடக மேடை
உன்னையும் ஒரு நடிகையாகப்
பார்த்தாலும் ...
எனக்கு மட்டும் பிடிக்கவில்லை
ஆடைகள் அற்ற உன்னை
மேயும் கண்கள்
இரவு நேர ஆந்தைகள்
இரைக்கு...
நீ இறந்தே போகலாம் ...!

இரவு நேர வேட்டையில்
நகக் கீறல்களினால்
ஏற்பட்ட தொடை காயங்களில்
புழுக்கள் நெளிந்தாலும் ...
ஜன்னலோர பேருந்து வாசிகள்
சைக்கிள் , ரிக்ஷாக்காரன்
மோட்டார் வண்டிக்காரன்
என் அத்தனை காரனின்
பார்வையும் ....
காயம் படாத ....
மறைக்கப்படாத  மார்பில் அல்லவா
புழுக்களைப் போல
நெளிந்து செல்கின்றன...
இதைக் கூட அறிய முடியாத
நீ இருப்பதை விட
இறப்பதே மேல்...!

கருணை மனுக் கொடுத்து
காத்திருக்க விரும்பாததால்
நீ உடனே சாக
வழித்தெரியாமல்
முழிக்கிறேன் வலியுடனே...!

நான் உடுத்திய உடையை
உன் மீது போர்த்திய போது
என்னை பார்த்து ஏளனமாய்
சிரித்து
என் சட்டையை மட்டும் கிழித்து
எறிய வில்லை
என்னையும் சேர்த்து
எறிந்து விட்டாய்
பார்வையில் அம்மணமாய்
தெரிபவர்கள் எல்லாம்
என் மானத்தை பார்த்து
சிரித்து ஏமாளி , கோமாளி
என்கின்றனர்...
மன நோயாளிகள் .!

Wednesday, October 27, 2010

வென்று சொல்

தொலைவில் இருந்தாலும்
தொலையாமல் தான் இருக்கிறாய்...
தொலைந்துப்போன பென்சில்
தொலைவில் உள்ள உன்னை
அதனுடனே மூலை முடுக்குகளிலெல்லாம்

தேட வைத்தது...
கிடைத்தது தேடும் போது ...
நீ கொடுத்த அத்தனையும்
ஆசையுடனே அள்ளிப்பார்த்தேன்
நேற்று வரை நீ எனக்கு கொடுத்த
செண்டு பாட்டில் வரை.....
ஸ்பிரே செய்தேன்
உன் வாசனை வந்தது...
தோழமை வீசியது ...
என்னைப்போல
நீயும் எதை தொலைத்து
என்னைத் தேடுகிறாயே....
நீயும் நானும் ஒண்றாய்
ஒரு தட்டில் உணவருந்தும்
புகைப்படம் ....
வேதம் ஓதும் உன் தந்தை
கருப்பு அணிந்து சொல்லுவாரே
கடவுள் மறுப்பு என் தந்தை
இருவரும் அருகில்
நம் நட்பில்.....
அன்பாய் ஒருங்கிணைந்து இருந்தனரே...

நட்புக் கொள்
வென்று சொல்
என்னைப்போல ....

Tuesday, October 26, 2010

மதுரை சாம நத்தம் -3

  பெரியவர் வேகவேகமாக நடக்க , மதியம் வெயில் உச்சியில் அதுவும் செருப்பில்லாமல் நடக்கிறீர்களே என கேட்க நாற்பது வருடமாக செருப்பில்லாமல் பழகியாயிற்று .... பள்ளி வயதில் போட்டது ... ஒண்ணும் செய்யாது என சொல்லிக்கொண்டே தன் நடையுடன் பழைய நினைவுகளையும் வேகமாகவே பகிர்ந்துக் கொண்டார்.
                                          வேகமாகச் செல்லும் பெரியவர் சொக்கர்.

   திருஞானசம்பந்தர் தம் மூன்றாவது பதிகத்தில் சமணரை கீழ்க்கண்டவாறு சாடுகிறார்.

   தம்மை வணங்குபவருக்கு நிரம்ப ஆசிகளைச் சொல்லும் பண்பற்றவர்கள் சமணரும் சாக்கியரும் , சிவ நெறியில் சேராதவர்கள் , சிவநெறியில் செல்பவரை இகழ்ந்து அன்பில்லாது பேசுபவர். அவர் சொற்களை பொருட்படுத்த வேண்டா.

”ஆசியா ரமொழி யாரமண் சாக்கிய ரல்லா தவர் கூடி
எசியி ராமில ராய்மொழி செய்தவர் சொல்லைப் பொருளென் னேய்”

     இப்படி தம் சமயமே பெரியது என வாழ்ந்த  திருஞான சம்பந்தரின் சமயப் போரில் சமணர்களை கழுவேற்றம் செய்த  சாமநத்தம் கிராமம் இன்று அவரின் சிலையுடன் அவரை தெய்வமாகக் கருதி ஒரு கோவிலை கொண்டுள்ளது. இக் கோவில் கோபுரங்களில் சிவபுராணக் காட்சிகளும் , சிவனும் பார்வதியும் உள்ள சிலையும், முருகன் , விநாயகர் சிலையும் உள்ளன. அக்கோவிலை பராமரிக்க மன்னர் காலத்து இரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு , அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இரண்டு வேளை பூசை நடைப்பெறுகிறது என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.


                    அருள்மிகு திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆலயக் கோபுரம்  


அய்யனார் கோவில் எல்லையில் இருக்க , அதை கீழ்தட்டு மக்கள் பராமரிக்கிறார்கள். கோவில பூட்டப்பட்டு இருக்கிறது. அக்காலத்தில் இக்கோவிலுக்கு அருகில் வரவே பயப்படுவார்கள் என சொல்லிக்கொண்டே .... இருளப்பன் கோவிலுக்கு காலனி குடியிருப்புகளுக்கு ஊடே நடந்துக்கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தார்.

    கிராமத்துக் கதைகள் என்றாலே அதில் சாமிக் கலப்படம் உண்டு. அதுவும் காத்துக் கருப்பு கதைகள் மிகவும் சுவரசியமாக இருக்கும். அதுவும் பெரியவர்கள் வாயால் அவர்கள் பாணியில் கேட்பது நாமே அதில் பாதிக்கப்பட்ட விதமாக இருக்கும். இக் காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் அழிந்த நிலையில் , சக்கரத்தைக் காலில் கட்டிக் கொண்டு இயங்கும் தனிக் குடும்பச் சூழலில் கதைகள் அவர்களின் தாத்தா பாட்டிப் போன்றே காணாமல் போயிற்று என்பதுடன் மறுக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை. இன்று பள்ளிகளிலும் கதைச் சொல்லும் ஆசிரியர்கள் அதிகமில்லை , மலிந்து வருகின்றனர்.

                                                         இருளப்பர் படுக்கை      

அந்தக் காலத்தில பெண்கள் இந்த பக்கமே வரப் பயப்படுவாங்க... அதுவும் தீட்டான சமயம் இங்கு தெரியாத்தனமாக வந்தா அவ்வளவு தான் முனி அடிச்சுடும் என்றார். இப்படி தான்தெரியாத்தனமாக வந்த பெண் (ஏதோ பெயர் கூறினார்) முனி அடித்து, அப்படியே ஸ்பாட்டிலேயே அவுட் என்றார். சிறுவனாக இருக்கும் போது இங்கு வரவே பயப்படுவோம் என்றார். இருளப்பன் வேட்டைக்குச் சென்று திரும்பிய பின் படுக்க , இது தான் அவனின் படுக்கை என பட்டியக் கல் மேடையை காட்டினார். மிகவும் பயப்பக்தியுடன் செருப்பைக் கழட்டி போட்டோ எடுத்துக் கொண்டேன்.

  இருளப்பன் கோவிலுக்கு அவர் விறு விறு என்று நடந்தார். நாங்களும் அவருக்கு ஈடாக நநக்க முடியவில்லை. கோவிலுக்கு உள்ளே உள்ள மரம் நீண்டுக் கொண்டு வள்ர்ந்து சென்றது. அதில் மணி கட்டப்பட்டு இருந்தது. அது உடை மரம் என்று சொன்னார்கள். அம்மரம் வானைப் பார்த்து உயரமாக வளராமல், நெடுக்காக நீண்டு வளரும் அதை வெட்டி வெட்டி உடைத்து விடுவதால், அதற்கு உடைமரம் என்று பெயர் வந்துள்ளது என்றார்கள்.

   அய்யனார் கோவில் எதிர்புறம் கண்மாய் இருந்தது. அதில் இக்கிராமத்தில் பயன்படும் அத்தனை அசுத்த தண்ணீரும் கலப்பதைப் பார்க்கும் போது வருத்தமளித்தது.
மேலும் முறையாக பயன்படுத்தாமல் பாசி ஏறி , தண்ணீர் பச்சை பசேல் என்று இருந்தது. இதை சமநத்தம் கிராம நிர்வாகம் கவனிக்காமல் , நவின முறையில் குளத்தை கழுவேற்றம் செய்கிறது. அப்பெரியவர் பார்வைக்கு எடுத்து சென்று , குடி நீர் அவசியத்தை கூறி விடைப்பெற்றேன்.

    கிராமம் ஒரு வரலாற்று சம்பவத்தை மறந்து , முட்களுடன் , ஒரு பிற்போக்கான கிராமமாக உள்ளதை பார்க்க அதிசயமாக இருக்கிறது. நாமே தேடி பிடித்து விசயத்தை சேகரிக்க வேண்டியுள்ளது,அப்படி இருக்க இன்றைய குழந்தைகள் பழைமையை மறந்து , அஞ்சா செஞ்சுடன் வாழ்வதால் எதுவும் பயனுண்டா?   (அய்யா சாமி....இதில் எந்த அரசியல் உள் குத்தும் இல்ல...நான் மதுரையில பிழைப்பு நடத்தனும் ...ஒரு ஆதங்கத்தில் வந்தா வார்த்தை ... நான் சொக்கு வீட்டில் கதை கேட்கும் போது அவர் பேரன் பய்மின்றி... எங்களை இடையூறு விளைவிக்கும் வண்ணம் பிளாஸ்டிக் குடத்தில் தாளமிட்டான் என்பதை தான் அஞ்சா நெஞ்சு என்றேன்)       

சாமநத்தத்தில் ஒரு நூலகம் உள்ளது. அங்கே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது. நிறைய சிறுசிறு கோவில்கள் உள்ளன. அவை சாதி ரீதியாக உள்ளதை பார்க்க முடிகிறது. சாயப்பட்டறை தொழில்கள் உள்ளன். ரைஸ் மில் கண்மாய்க்கு மறுபுறம் மெயின் ரோட்டில் உள்ளது. அனைவரும் மதுரை சார்ந்த தொழிலையே கொண்டுள்ளனர். சாலைகள் முறைப்படி பாராமரிக்க வில்லை என்றே படுகிறது. கிராம மக்கள் அன்பாக பழகுகிறார்கள் . மதம் சார்ந்த கிராமம் ஆதலால்  அன்பு சிறந்தரமாக  உள்ளது. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு மட்டுமே என்று அன்புடன் அடுத்த பயணம் ...  திருப்புவனம் சிவன் கோவில்...

                                                                               அடுத்து திருப்புவனம் சிவன் கோவில்.... 

Sunday, October 24, 2010

சாம நத்தம் 2  கீழக் குயில் குடி சமணமலையை பார்க்கும் போது சாமநத்தம் கழுவேற்றம் மிகவும் பாதிக்கவே ,சாமநத்தம் எங்குள்ளது என விசாரிக்க தொடங்கி விட்டேன். மதுரை மஹால் அருகில் செயின் மேரீஸ் பள்ளியின் பின் புறம் சிந்தாமணி ரோடு செல்கிறது அதன் வழியாக பயணம் செய்தால் நெடுங்குளம் செல்லும் வழியில் ஆறு கிலோ மீட்டருக்கு முன்பாக வலது புறம் ஒரு கிளை ரோடு பிரிகிறது, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாம நத்தம் கிராமம் உள்ளது. ஊர் செல்லும் வழியில் சாய பட்டறை காணப்படுகிறது.அக் கிராமத்தில் முதலியார்கள், யாதவர்கள் , ஒரே ஒரு சைவ குடும்பம் என கலந்து வாழ்கின்றனர். கிராமம் தெருக்களுக்கு செல்லும்  முன்பாக இடது புறம் செல்லும் பாதையில் அய்யனார் கோவிலின் வலப்புறம்  காமராசர் திறந்து  வைத்த அரிஜனக் காலனி . அதன் உள்ளே ஐம்பத்து ஐந்தாயிரம் செலவில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் என ஒரு கட்டுப்பாடான கிராமமாகவே திகழ்கிறது. 


            இருளப்பர் கோவில் முன் மதுரை சாரவணனும் , கற்பூர சொக்கும்

    சாம நத்தம் கழுவேற்றம் செய்யும் முன் சமணர்களுக்கும் , சைவ சமயத்தை சார்ந்த திருஞான சம்பந்தருக்கும் அனல் வாதம் , மற்றும் புனல் வாதம் நடந்தது. அதாவது அவர்கள் பாடிய பாடல்கள் உள்ள ஏடு அனலில் அதாவது தீயில் போடும் போது அது எரிந்து போகாமல் , அதில் உள்ள செய்திகள் அப்படியே வெளிப்படுமாம். அதே போல் தண்ணீரில் போடும் போது , அது நீரை எதிர்த்து தன் உரையை வெளிப்படுத்துமாம்  . நான் ஏற்கனவே சொன்னது போல திருஞான சம்பந்தர்  ஏடு வைகை நீரில் எதிர்த்து சென்று திருவேடகம் அடைந்ததாக வரலாறு சொல்லுகிறது.எல்லை காக்கும் அய்யனார்  கோவில் முன் ரவி, பிரபாகர் மற்றும் பெரியவர் கற்பூர சொக்கு 


கூன் பாண்டியன் நோய் தீர்க்க சம்பந்தர் பதிகம் பாடியதாக வரலாறு கூறுகிறது. புறச் சமயம் மறுப்பில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரம் எழாம் நூற்றாண்டை சார்ந்தது. அதில் ஒவ்வொரு பத்து பாடலிலும் சமண , பௌத்த மதத்தை எதிர்த்து பாடல்கள் உள்ளன. 

  முதல் பதிகத்தில் புத்தரும் , அறிவில்லாத சமணரும் நேர் நின்று பேச முடியாது, புறம் கூறவும், வரம்புக்கு உட்படாமல் ஒரே கருத்தை சொல்லவும் செய்வர் ,உலகத்தே பிச்சை ஏற்று என்  உள்ளம் கவர்ந்த கள்வன் சிவன் ஏறும் பாடுகிறார். 

பாடல் வரிகள் இதோ...
"புத்தரோடு பொறி யில் சம ணும்புறங் கூற நெறி நில்லா      
ஒத்தசொல் லவுல கம்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன் "

                                              சாம நத்தம் இருளப்பர் படுக்கை 

     பெரியவர் கதை சொன்னது மட்டும் அல்லாது  எங்களுடனே வந்து , அதோ அய்யனார் கோவில் இருக்கிறதே , அதன் மேற்கே உள்ள திடல் தான் சமணர் கழுவேற்றப்பட்டு , பின் எரித்த புதைக்கப்பட்ட இடம் . இது முழுவதும் நான் படிக்கும் காலத்தில் ஒரே சாம்பல் திட்டாக இருக்கும் என்று தன் நினைவலைகளை பின்னோக்கி செலுத்தி எங்களையும் அந்தக் காலத்திற்கு அழைத்துச் சென்றார்.    சீர்வாகனம் தூக்கும் ஒருவர் மீனாச்சி அம்மன் கோபுரம் உச்சில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான் என்ற வரலாறு , மதத்தின் மீது மனிதனுக்கு  உள்ள பிடிப்பை எடுத்துக் கூறியது . சமணர்களுக்கும் , சைவர்களுக்கும் சண்டை வந்த போது , சமணர்கள் சைவக் கோவில்களை இடித்து  , அவைகளை சேதப்படுத்தியதாகச்  சொல்கிறார்கள். அவ்வாறு  வரும் போது மீனாச்சி அம்மன் கோவிலை நெருங்கி அழிக்க  முற்படும் போது ,சீர் வாகனம் தூக்கும் ஒருவர் கோபுரத்தின் மீது ஏறி , தன் மண்டை சிதறி ரத்தம் தெறிக்கும் வண்ணம் தற்கொலை செய்து கொண்டானாம் , அதை பார்த்தவர்கள் ஏற்கனவே ரத்தம் சிந்திய கோவிலை அழிப்பதில்லை என்பதால் , அப்படியே விட்டு விட்டு சென்றனராம்.இது ஐதீகம் என்கின்றனர்.
          உச்சத் திடல் உள்ள பகுதி பணிக்களுக்கு பின்னால் காமராஜர் திறந்த காலனி

இவ்வொரு மதத்தின் மீது  பற்றுக் கொண்டு தன்னை தானே அழித்துக் கொண்ட சீர்வாகணனுக்கு , உத்திர பூஞ்சை இரண்டு ஏக்கர் ஆகவும், சாவன் செய் இரண்டு ஏக்கர் ஆகவும் மன்னனால் வழங்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. அந்த நிலங்களை அவர்களின் வழித் தோன்றல்கள் விற்று விட்டதாகவும் சொல்கிறார்கள்.      நாயக்கர் காலத்தில் இந்த சீர் தூக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் , தற்போது அது திருவாப்புடையார் கோவில் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள். 


                                                                                  சாம நத்தம் கிராம் பற்றி செய்திகள் சாம்பல் பறக்க தொடரும்..... 

Saturday, October 23, 2010

சாம நத்தம்

    சாம நத்தம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அங்கு கழுவேற்றம் நடந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்பதுபோல் கிராமம் உறங்கி கிடக்கிறது . முகவரி தொலைத்த சிறுவர்களை போன்ற உணர்வுடன் நின்றிருந்த எங்களை பார்த்த பெரியவர் விசாரித்து , கொஞ்சம் தள்ளி போங்க .. திருஞான  சம்பந்தர் கோவில் இருக்கு, ஊர் பெரியவர் யாராவது இருப்பாங்க கேட்டு தெரிஞ்சுக்கங்க என வழி அனுப்பினார்.


           இந்த பகுதியை காட்டி இது தான் சமணர்களை எரித்த இடம் என்கிறார்கள் .

                 திருஞான சம்பந்தர் கோவில் நாங்கள் சென்ற போது பூட்டி இருந்தது. கோவிலில்  ஒரு பெரியவர் அமர்ந்து இருந்தார். நடக்க முடிய வில்லை. கோவில் பூசாரி வீடு அருகில் தான் என்று கூறி யாரையோ அழைக்க ,ஒருவர் ஓடி வந்து நீங்கள் யார் எந்த பத்திரிகை என விசாரிக்க ,இல்லை நான் பொழுது போகாமல் மதுரையின் வரலாற்றி தோண்டுகின்றேன் என மனசு வந்தாலும் , சாமநத்தம் கிராமம் பற்றி அறிந்து செல்ல வந்திருக்கும் ஒரு பள்ளியின் ஆசிரியர் என்றே சொல்ல ...காரை திருப்புங்க என அழைத்துச் சென்றார்.

 எங்களை கற்பூரசொக்கு என்ற என்பது வயது பெரியவரிடம் அழைத்துச் சென்றார். கிராமம் அதற்கே உரிய அழகுடன் சிறியதாக இருந்தது.  மேல் மட்ட சாதிக் காரர்கள் ஒருபுறமும் , கீழ் தட்டு மக்கள் ஒருபுறமும் இருந்தனர். இதில் கீழ்தட்டு மக்களுக்கான குடியிருப்புக்கள் காமராஜரால் திறந்து  வைக்கப்பட்டு உள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு  மேற்கே தான் சமணர்களை கழுவேற்றம் செய்து, எரித்ததாக அந்த பெரியவர் சொல்கிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது இந்த சாம்பலை நெற்றியில் பூசி , பள்ளிக்கு செல்வாராம் அது மூன்று நாள்களுக்கு அழியாதாம்  என வரலாற்றை தமக்கு  தெரிந்த மாட்டில் சொன்னார்.

                           காமராஜர் திறந்து வைத்ததாகச் சொல்லப்படும் குடியிருப்பு பகுதி

   கூன் பாண்டியன் சமண மதத்தையும் , ராணி மங்கையர்கரசி சைவ சமயத்தையும் தழுவிய போது , மன்னனின் வெப்பு நோயை திருஞான சம்பந்தர் போக்கினார் என்றும் , அவர்களுக்குள் விவாதம் நடந்தது அப்படி நடக்கும் போது ,ஏடு வைகை ஆற்றில் விடும் போது சைவர்கள் விட்ட ஏடு மேற்கு நோக்கி சென்று அடைந்த இடம் திருவேடகம் எனவும் , அதுபோல சமணர்கள் விட்ட ஏடு கிழக்கு நோக்கி சென்ற இடம் திருப்பவனம் என்றும் கூறுகிறார். இன்றும் திருப்பவனத்தில் சிவன் கோவில் நாயக்கர் காலத்தை சார்ந்தது வரலாற்று சான்றாக உள்ளது என கதை சொல்ல ஆரம்பித்தார்.

                                             திருஞான  சம்பந்தர் கோவில் கோபுரம்

மேலக்கால் அதாவது கொடிமங்கலம் பகுதியில் இருந்து சாமநத்தம் வரை கழுவேற்றம் நடந்தது , சாமணர்கள் இங்கு தான் எரிக்கப்பட்டு சாம்பல் பரவி கிடந்ததால் இந்த ஊர் சாம்பல் நத்தம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சம்பந்தர் கோவிலுக்கு இரண்டு ஏக்கர் நிலம் பாண்டியன் காலத்தில் வழங்கப்பட்டது. அது இப்போதும் கிராமத்து சபையால் பாராமரிக்கப்படுகிறது. இந்த நிலம் இன்று குத்தகைக்கு விடப்பட்டு , அதன் வருமானத்தின் மூலம் கோவில் பூஜை நடக்கிறது என்கிறார்.

    சித்திரை திருவிழா பற்றி கேட்கும் போது ... ஆறாம் நாள் கழுவேற்றம் இப்போது இல்லை. அது கோவிலிலேயே நடக்கிறது என்கிறார். இக்கிராமம் செங்குந்த முதலியாருக்கு பாத்தியப்பட்டது என்றும் கதை கூறுகிறார்.

         இந்த கிராமம் மீனாட்சி கிராமம் என்றும் அழைக்கப்பட்டது . இது சீர் வாதக் கட்டளையை சார்ந்தது. அறுபத்தி நான்கு பேர் மீனாச்சி கல்யாணத்தின் போது சுவாமி சிலையை சுமப்போம் . முன்னர் சுவாமி சிலையை சுமப்பவர்கள் எழுகடல் தெருவில் தான் இருந்தோம் , பின்பு ராணியால் எங்களுக்கு இந்த கிராமம் வழங்கப்பட்டது என்கிறார்

          மீனாட்சிக்கு பங்குனி சீர் மீனாட்சி திருக்கோவிலில் இருந்து திருப்புவனம் கொண்டு செல்லப்படும் மீண்டும் அங்கிருத்து கோவிலுக்கு ஒரே நாளில் கொண்டு சேர்க்கப்படும் . அதன் பாதை சாமநத்தம் , பனையூர், கீலடி , சிலைமான், மணலூர், திருப்புவனம் ஆகும்.  இப்படி ஒருநாள் சீர் எடுத்து செல்லும் போது திருப்புவனம் அருகில் ஆற்றில் வெள்ளம் வந்தது , அப்போது கழுத்தளவு வெள்ளத்தில் நீந்தி சீர் தூக்கி வந்ததால் அவர்களுக்கு வீர செங்குந்த முதலியார் என பெயர் வந்தது என்கிறார்.

         பங்குனி மாதம் பொன்னடியார் நாடகம் நடத்த கோவிலில் இருந்து சீர் சுமப்பது எங்கள் வழக்கம் . சொக்கரை சுமக்க இருபத்தி நான்கு நபர்கள். அதாவது நான்கு புறமும் ஆறு நபர் என்று இருப்பத்தி நான்கு நபர்கள். அது போல மீனாட்சி அம்மனை சுமக்க இருபது நபர் . நான்கு  காலுக்கு ஐந்து நபர்கள் வீதம் இருபது ஆட்கள். பிள்ளையாருக்கு எட்டுபேர். தண்டீஸ்வரருக்கு நன்கு பேர் . முருகனுக்கு நான்கு  பேர். அகுதாங்கு அதாவது சப்ஸ்டிடுட் நான்கு பேர். மொத்தம் அறுபத்தி  நான்கு நபர்கள். என கணக்கு கூறினார்.  எட்டு எட்டு விதமாக அறுபத்தி நான்கு பங்காளிகள்.
                                கற்பூர சொக்கு , ரவி சந்திரன் மற்றும் madurai  saravanan
                            பேசிக் கொண்டிருந்த எங்கள் மீது சம்பல் புழுதி வீசி பெரியார் பேருந்து நிலையம் போர்டு மாட்டிய பேருந்து பறந்து சென்றது. வாங்க அந்த மேட்டுப் பகுதியை காட்டுகிறேன் என முற்காடுகள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றார்.

                                                                                            சாமபல் பறக்கும்.....
                                                             

Friday, October 22, 2010

காலடி நிழல்

என் நிழல் எனக்கே பாடம் கற்றுத் தந்தது...
தன் நிழல் காலடியில் விழும் போது
என்னை உணர்ந்தேன்....
வாழ்வும் நீண்டும் , குறுகியும்
நிழல் போலவே மாறி மாறி வரும்...
வாழ்வும்  எப்போதும் மாறுபட்டே
நிழல் போலத் தோன்றினாலும்
உழைப்பில் வியர்வைச் சூரியனில் ....!
அதிகாலை போல நீண்டே
வசந்தத்தின் தொடக்காமாய் இருக்கும்..!
உழைத்துப்பார் வாழ்வின் அருமை
உன் காலடி நிழல் போல
உன்னுடன் ஒட்டிக் கொள்ளும் ... !

Tuesday, October 19, 2010

மதுரை இராணுவ கண்காட்சி 2010

வழக்கம் போல இராணுவ கண்காட்சி 2010 காண என் பள்ளி செயலர்  திரு'பி. சௌந்தர பாண்டியனிடம் காலை பள்ளி வந்தவுடன் அனுமதி கோரினேன். என்ன திடீர்ன்னு என்று விளக்கம் கேட்டார். சார், இன்று கடைசி நாள் ஆகவே மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நூறு நபர்களை பார்க்க அழைத்து செல்ல அனுமதி வேண்டும் , படிப்பு மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது அதை தவிர பிற விசயங்களையும் நாம் அறிந்து கொள்ள உதவ வேண்டும் என்றேன். சரி , பள்ளி பேருந்தை எடுத்து பத்திராமாக அழைத்துச் செல்லுங்கள் என அனுமதிக் கொடுத்தார். மிகவும் மகிழ்ச்சியாக காலைப்  பொழுது நன்றாகவே விடிந்தது. எங்கள் முலந்தைகள் பாக்கியம் செய்தவர்கள் எங்கள் பள்ளி நாடார் உறவின் முறையால் நடத்தப் படுகிறது . இதுவரை வந்த அனைத்து பள்ளி செயலரும் மிகவும் அருமையானவர்கள். அவர்களில் சௌந்தர பாண்டியன் எளிமையானவர் , இனிமையானவர்.  மாணவர்களுக்கு என்றால்   உடனே எதையும் செய்ய துடிப்பவர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்துவார்.
எந்த தமிழ் மீடியம் பள்ளிகளும் வராத இந்த ராணுவ கண்காட்சிக்கு எம்பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி கொடுத்த அவருக்கு இதன் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

                     மைதானத்தை நோக்கி விரையும் எம் பள்ளி மாணவர்கள்
 


                                                    இராணுவ வீரர்களின் சகாசங்கள் 

  
                           இராணுவ வீரர்களின் உடைகள் அன்றிலுருந்து இன்று வரை

                                     அந்தரங்கத்தில் சாகசம் செய்யும் இராணுவ வீரர்.
                                                         2023 mm  2 பி கன்

 மேலே படத்தில்  காட்டியுள்ள கன் ரஷ்ய தயாரிப்பாகும். இது முப்பது மி,மீ.கனமான இரும்பு தகட்டையும் துளைக்கும் சக்தி படைத்தது. ஒரு மணிக்கு 1080 மணி வேகத்தில் செல்லும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் சக்தி படைத்தது. ஒரு வினாடியில் இருப்பத்தாறு முதல் முப்பத்தி மூன்று ரவைகள் வெளி வரும் . ஒரே சமயத்தில் இரண்டு குழலிலும் இருந்தது நாண்ணூறு ரவைகள் வெறியேறி எதிரிகளை தாக்க வல்லது .இதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முப்பத்தைந்து  முதல் நாற்பது வினாடிகள் மட்டும் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

                                                   இராணுவ ஆண் அழகர்கள்
        இது போல பாலங்கள் அமைப்பது சார்பாக விளக்கப் படங்களும் , சில பாலங்களும் மாடலுக்கு வைக்கப்பட்டு இருந்தன. ஜாமர் கருவிகள். பாம் எடுக்க உதவும் உடை , பாம் ஆபத்தில்லாமல் இயந்திரத்தின் உதவியுடன் எப்படி எடுப்பது என செயல் வடிவில் காட்டினர். துப்பாக்கிகளின் வகைகள் அவற்றை எப்படி இயக்குவது என்பதும் செய்து காட்டப்பட்டது. இராணுவ வீரர்களின் ஸ்டம்ப் கலைக்சன் மிகவும் அருமையான சேமிப்பு ஆகும்.  மாணவர்களை எளிதில் கவர்ந்தது. மதியம் உணவு பத்து ரூபாய்க்கு அற்புதமாக  பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டு வழங்கப் பட்டது. டி இரண்டு ருபாய்  ஐம்பது காசுக்கு வழங்கப் பட்டது .      
             இராணுவ வீரர்களின் கலரி சண்டை மிகவும் ஆக்ரோசமாக இருந்தது

          அங்குள்ள  பார செயிலிங் என் கல்லூரி கால நினைவுகளை தூண்டி விட்டன. இரண்டாம் ஆண்டு நேவியில் இருக்கும் பொது சரஸ்வதி நாராயன் கல்லூரில் பார செய்லிங் கேம்ப் அட்டன்ட் செய்ததும் அதில் முதல் முதலில் தைரியமாக நானே ஆர்வமாக பயணித்ததும் . ஜீப் முன்னே நாகர நான் பார சூட்டில் மேலே பறக்க கயிறு ஜீப்பிலிருந்து விடுவிக்க , மேலிருந்து கீழே இறங்க , கால்கள் சாய்த்து முட்டியில் அடிபடாது பக்கவாட்டில் லேண்ட்டாண அனுபவங்கள் என் கண் முன்னால் வந்து சென்றன.  
      இராணுவத்தில் காயமடைந்த முன்னால் படி வீரர்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்ட போது எடுத்தப் படம்


    மாணவர்களையும், பொது மக்களையும் இராணுவத்தில் இணைக்க இக் கண்காட்சி உதவியாக இருந்தது.இராணுவத்தின் நவீன தொழில் நுட்பத்தாலும் , இராணுவ வீரர்களின்  சாகசத்த்தாலும் பொது மக்கள் தங்கள் குழந்தைகளையும் பயமின்றி  இராணுவத்தில் பணிபுரிய தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.  
                        தாமரை பூ உருவாகும் முயற்சியில் இராணுவ வீரர்கள்.

   .
     ராணுவ வீரர்களின் மராட்டிய நடனம் . இது போரில் வெற்றி பெற்ற பின்பு நடைபெறும் களிப்பில் ஆடும் நடனம் இன்று கூறினர். மிகவும் அற்புதமாக பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.
  
                                              இராணுவ வீர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசம்
       கண்காட்சி முடித்து வந்த ஒரு மாணவனுடன் பேசினேன். இதனை பற்றி கேட்டேன். அவன் சார் நானும் ஒரு ராணுவ வீரனாகி இந்திய நாட்டை காப்பாற்றுவேன் என்றான். இந்த கண்காட்சி ஏதோ ஒரு விதத்தில் பொது மக்கள் மற்றும் மாணவர்களிடம் இராணுவ பணியில் சேர்வது குறித்த மயக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை பார்க்க முடிகிறது
         ஆர்வமுடன் இராணுவ கண்காட்சியை காணச் செல்லும் எம் பள்ளி மாணவிகள்.

                          இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வத்தை ஏற்படுத்தியதில்  நானும் என் மாணவர்களுக்கு தூண்டுகோலாக இருப்பது என் அதிர்ஷ்டம் ஆகும்.

                                                             ஜெய் ஹிந்த் .

Monday, October 18, 2010

திருக்குறள் பொது அறிவு வினா

1.திருக்குறளில் இடம்பெற்ற மரங்களை கூறுக .
   பனை, மூங்கில்
2. திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண்   ஏது ?
   ஒன்பது
3.திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு ஒரே அதிகாரம் ஏது ?
   குறிப்பறிதல்
4. திருக்குறளில்   இடம் பெறாத ஒரே உயிரெழுத்து ஏது ?
     ஒள  
5.திருக்குறளில் இடம் பெற்ற ஒரே விதை ஏது ?
   குன்றிமணி
6.திருக்குறளில் இடம் பெற்ற மலர்கள் ஏது ?
  அனிச்சை , குவளை
7. திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் ஏது?
  நெருஞ்சி

தற்போது வயது குறித்து பொது  அறிவு வினாக்கள். (சாதனைக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை )

1.ஐன்ஸ்டீன் விளையாடுவதற்கு கொடுத்த மின் காந்த திசை காட்டும் கருவியில் உள்ள தந்துவத்தை கண்டறிந்தபோது வயது ஐந்து

2.விவேகானந்தர் சமஸ்கிருதத்தில் விகண்டுகளை மனப்பாடம் செய்த போது வயது பத்து.

3.சர்.சி.வி ராமன் மின் பொறி கருவிகளை கொண்டு ஆராய்ச்சி செய்த போது வயது பன்னிரண்டு .

4.பாரதி என்று பட்டம் பெற்றபோது வயது பதினொன்று .

Sunday, October 17, 2010

உங்கள் குழந்தைகள் டி.வி பார்க்கிறதா ..?

தொடர்ந்து இரண்டு மணி நேரம் உங்கள் குழந்தைகள் டி.வி  பார்க்கிறதா ? உடனே நிறுத்துங்கள். இல்லையென்றால் அது உங்கள் குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம்.  

  ஹிந்துவில் அக்டோபர் பதிமூன்றில் ஒன்பதாம் பக்கம் டி.வி பார்க்கும் நேரம் மனநலம் சார்ந்த பிரச்னையுடன் தொடர்புடையது என்ற தலைப்பில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 

தொடர்ந்து இரண்டுமணி நேரம் டி. வி. அல்லது கணினி பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் மனநலம் தொடர்பான பிரச்சனைக்கு ஆளாகி இருக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். 
   
     தொடர்ந்து டி.வி பார்க்கும் பதினோரு வயது குழந்தைக்கு மனநலம் சார்ந்த கேள்வி கொடுக்கப்பட்டு , சரி பர்ர்க்கபட்ட போது , மனநலம் பின் தங்கி இருந்தது அதாவது பாதிக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

  
   ஆயிரத்து பதிமூன்று குழந்தைகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு , தொடர்ந்து டி.வி.மற்றும் கணினி  திரை முன்னால் இருக்கும் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது .நல்ல ஆரோக்கியமான உடல் நலம் உள்ள குழந்தைகள் தொடர்ந்து டி.வி பார்க்கும் நேரத்தை அதிகரிக்கும் என்றாள் அவர்களின் மன நலமும் பதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

     இரண்டு மணி நேரங்களுக்கு  தொடர்ந்து டி.வி பார்க்கும் குழந்தகைள் அறுபது சதவீதம் மன நோயிக்கு ஆளாக நேரிடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. 


ஆகவே குழந்தைகளுக்கு டி.வி முன்னால் இருப்பதை விட நல்ல உடல் பயிற்சி வளர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபட்டால் நல்லது என்றும் ஆய்வு கருத்து தெரிவிக்கிறது. 


        இந்த ஆய்வி ஒரு எச்சரிக்கையே தமிழகப் பெற்றோர்களே எனக்கு தெரிந்து மாலை நாடகம் பார்க்க தொடங்கும் நீங்கள் பத்து மனைக்கு தான் டி.வியை அணைப்பதாக தெரிகிறது. டெலிவிஷன் தொடர்களின் ரேட்டிங் அதையே வலியுறுத்துகிறது.  தாங்க்கள் டி.வி பார்த்தால் நிச்சயம் தங்கள் குழந்தைகளும் பார்க்கும் மாலை ஐந்து மணி , இரவு பத்து மணி ....இதன் நேரம் ஐந்து மணி நேரம் .நிச்சயம் குழந்தைகள் மன நோயிக்கு ஆளாக நேரிடும். 

       சமீபத்தில் பள்ளி மாணவன் சக மாணவனை நகைக்காக கொலை செய்துள்ளான் என்ற செய்திகள் இதன் விளைவாக இருக்குமோ என்று ஐயத்தை ஏற்படுத்துகிறது . பள்ளிகளில் பல மாணவாகள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவே உள்ளனர். மேலும் அவர்கள் தனித்து இருக்கவே விரும்புகின்றனர். இது அந்த ஆய்வல் உறுதி படுத்தப் பட்டுள்ளது. 


    பள்ளிகளில் ஆசிரியர் ஏதாவது சொன்னால் , மிகவும் தேம்பி அழுகின்றனர். சக மாணவன் ஏதாவது அவர்களின் புத்தகத்தை எடுத்து விட்டால் , உடனே வன்முறையில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் மிகவும் மெத்தனமாக உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அழைத்து பேசினால் அதிகம் டி.வி பார்பதாகவே சொல்லுகின்றனர்.  இந்த என் அனுபவம் அந்த ஆய்வுடன் பொருந்துவதாகவே உள்ளது. 


      தயவு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை வேலையில் கோவில் அல்லது பார்க் அழைத்து செல்லுங்கள். மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்.பாரதி சொன்னபடி மாலை முழுவது விளையாட்டாக இருக்கட்டும். நீங்களே அவர்களுக்கு பாட புத்தகத்தை வைத்து சொல்லி கொடுங்கள். முடிந்த மட்டும் தனி படிப்பு (டியுசன் ) வைப்பதை தவிர்த்து விடுங்கள். குழந்தைகள் தங்கள் கவனிப்பிலே வளர்வது நல்லது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் டி.வி. பார்க்க அனுமதியுங்கள். 
   
  

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -6

இப்படி எட்டாம் நூற்றாண்டின் வரலாற்றை தன்னகத்தே புதைத்து , கல் குவாரி முதலாளிகளின் கையில் அகப்பட்டு , தன் உடம்பில் கீறலை ஏற்படுத்தி, தன்னை நேசிக்கும் மக்களால் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப் பட்டு , தொல்லியல் துறையின் கைகளில் தற்போது தவழ்ந்தாலும் , படுகையின் பாதைகளில் சாராய மற்றும் பீர் பாட்டில்களின் சிதறல்கள் சமூக விரோத செயல்களுக்கு துணை போவதாகவே உள்ளது .

     சுற்றுலா தளம் என்ற போர்டும் அதற்க்கான செலவும் பட்டியலிடப்பட்டுள்ளது . ஆனால் , இது எந்த நூற்றாண்டை சார்ந்தது ?, இதன் தொன்மை என்ன ?, இதன் வரலாறு என்ன? என்பதற்கான எந்த குறிப்புகளும் இல்லை . ஏன் இதற்க்கான முயற்ச்சிகளை யாரும் எடுக்க வில்லை ? என்பதும் எனக்கு புலப்பட வில்லை. தொல்லியல் துறையில் இது சம்பந்தமாக புத்தகம் எதுவும் உள்ளதா என கேட்டபோது ,"இது சம்பந்தமாக குறிப்புகள் இருப்பதாக தகவல் இல்லை என்றும் சொல்லவில்லை, இது சம்பந்தமாக குறிப்புகள் இதோ என்றும் சொல்ல வில்லை. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி  உள்ளேன் . இம்மலை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை.தென் குன்றம் என்ற வேதாச்சலம் எழுதிய புத்தகமும் இல்லை.அத் துறையில் வேலை பார்த்த அவரின் தற்போதைய முகவரியும் இல்லை. அதனால் தான் என்னவோ இதை கல் குவாரிக்கு அரசு கொடுத்துள்ளதோ என்று ஐயாப்படும் நிலவுகிறது "

         தயவு செய்து இது சம்பந்தாமாக ஒரு போர்டை தொல்லியல் துறை வைத்தால் நலமாக இருக்கும் . மேலும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இதன் வரலாற்று முக்கியத்துவம் எடுத்துச் சொல்லலாம். இப்பகுதியை சுற்றி தான் கல்லூரிகள், பல்கலைக்கழகம் உள்ளன. ஏன் இம்மாணவர்கள் இத் தொன்மையை பற்றி உணர வில்லை ? வரலாற்றை தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை , தொல்லியல் துறையின் வேலை தயவு செய்து , விரைவில் ஒரு போர்டை வைத்து அதன் தொன்மையை அறிய செய்யவும். இது ஒரு மக்கள் போராட்டமாக உருபெற்றால் தான்  சாத்தியமா? மலை தான் இதற்க்கு சாட்சி . கிராம மக்கள் விழிப்புணர்வு பெற்று அதை மேற்கொள்ள வேண்டும் . பொறுத்திருந்து பார்ப்போம்.

            இப்படி பட்ட சிந்தனைகள் அம்மலை அடிவார அரச மர காற்றில் அமர்ந்திருந்த என் எண்ணத்தில்  தோன்றியது . ரோட்டின் ஓரம் ஒரு கல்  மண்டபம் இருந்தது . அது எனக்குள் ஏதோ ஒன்றை சொல்லுவது போல் உணர்ந்தவனாக , அருகில் இருந்த தங்கச் சாமியிடம் எதற்கு அங்கு மண்டபம் என கேட்டேன். அவர் இதுவரை மகிழ்ச்சியாக பதில் சொல்லியவர் . இவன் ஏன் இதனை கேட்கிறான் என்பது போல என்னை ஏறிட்டு பார்த்தார். "என்னங்க ஐயா ...எதுவும் பேசாமல் இருக்கீங்க என்றேன். "" இல்லைப்ப இது தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் குல தெய்வம் ..அவர்கள் கும்பிடுகிற சாமி ." என மெல்லிய  தேய்ந்த குரலில் கூறினார்.

          கிராமத்து ஏற்றத்  தாழ்வுகள் அங்கும் குடி கொண்டுள்ளதை அறிய முடிந்தது. சமணர்களால் இவர்கள் வாழ்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலும் அவர்களின் மனதில் புரையோடி உள்ள இந்த சாதிய தாழ்வுகள் இன்னும் மறையாமல்  , அப்படியே அடி மனதில் புதைந்துள்ளது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள ஊரணிகள் வற்றாமல் இருப்பது , இவர்களின் அறியாமையை நினைத்து நித்தம் கண்ணீர் வடிப்பதால் தானோ ? என்ற எண்ணம் ஏற்படச் செய்தது. மலை மீது இருந்து வழியும் தண்ணீர் கூட  இவர்களின் அறியாமையை, மூடதனத்தை பார்த்து மலை விடும் கண்ணீராகவே தென்பட்டது.

          நானும் அப்பாவியாக , "அங்க தனியா குல தெய்வம் இருக்குன்னா.. இந்த கோவிலில சாமி கும்பிட வர மாட்டங்களா ...?" என்று அதிர்ச்சியுடன் அரிச்சந்திரனிடம் கேட்டேன் . "இல்லை அவர்கள் தாராளமா கும்பிடலாம் ...ஆனா கோவிலுக்கு உள்ள செல்ல அனுமதி கிடையாது.." என்றார். "இன்னும் இந்த  கொடுமை இருக்கா ...காந்தி மீனாச்சி அம்மன் கோவிலுக்கு அரிஜனங்கள் நுழைந்த பின் தான் சென்றார்....அது போல இன்னும் ஒரு காந்தி பிறக்கணும் போல " என்றேன். அதற்குள் அவர் " நாங்கள் யாரயும் தற்போது தடுப்பதில்லை , ஆனாலும் அவர்கள் யாரும் இது வரை இந்த கோவிலுக்குள் சென்று கும்பிடனும்ன்னு அனுமதி கேட்டதும் இல்லை. அந்தமாதிரி யாரும் தப்ப நினைக்கவும் இல்லை .." என்றார்.

     மலையை போல கிரமாமும் தன் பழமையை மறக்காமல் இருக்கிறது . மிகவும் ஆச்சரியம் தான். நீண்ட மௌனத்திற்கு பின் அவர்களிடம் இருந்து விடை பெற்று , எங்கள் காரில் பயணத்தை தொடங்கினோம்.

      சமண மலை விட்டு வெகு தொலைவில் வந்திருப்போம். அப்போது தான் நினைவுக்கு வந்தது , மதியம் உணவு அருந்தவில்லை என்பது . மலையில் வசித்த சமண முனிவர்கள் இப்படித்தான் இயற்க்கை காற்றை சுவாசித்து நீண்ட சக்தியுடன் வாழ்ந்திருப்பார்களா!  என வியக்க வைக்கிறது. மலை மீது இருக்கும் போது , நாங்கள் எந்த அக நினைவுகளும் அற்று , மலையை போன்ற உணர்வுடன் , எங்களுக்குள் சக்திகள் நிரம்பி , அமைதியாகவும் , சாந்தமாகவும் , வந்த வேலையில் கவனாமாக இருந்து இயற்கையை ரசித்து, அதனுடனே லயித்து ,தகவல்களை மட்டும் செகரிப்பவர்களாக இருந்தோம் !
மலை நமக்கு புகட்டும் பாடமும் , வரலாறும் விலை மதிப்புகள் அற்றவை .அவைகள் மீண்டும் எம்மை தன் நினைவுகளுக்குள் அழைப்பதாகவே  உணருகின்றேன் ! அடுத்த முறை புதிய தகவல்கள் நமக்கு தரும் என்று நம்புகிறேன்.

                                                பயணம் தொடரும் ...அடுத்து சாமநத்தம்.
 

Saturday, October 16, 2010

உணர்த்துதல் மற்றும் உணர்தல்

 இன்று சீன அய்யாவின் பிறந்த நாள். அய்யா இன்று போல் என்றும் நலாமாக ,வளமாக வாழ வாழ்த்துகிறேன். அவரின் நட்பு ஒரு வழிகாட்டியாக , என்னை நல் வழிப்படுத்துவதாக   உள்ளது. அவர் தன் வயதை மறந்து அனைவருடனும் நட்பாக பழகுவது என்னை வியக்க வைக்கிறது. பதவியில் இருப்பவர்கள் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பகட்டில்லாத , பதவியின் பந்தாவில்லாத ஒரு நபர். எல்லாருக்கும் ஓடிச் சென்று உதவும் மனப்பான்மை என்னை வியக்க வைக்கிறது. ஒரு கல்லூரி மாணவனைப் போன்று சுறுசுறுப்பு கொண்டவர்.  எழுதும் ஆர்வம் உள்ள அனைவரையும் உற்ச்சாகாப் படுத்தும் ஒரு டானிக். அவரின் பக்க பலம் அவரின் துணைவியார். (மனைவி கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ... வரிகளை உண்மை ஆக்கியவர். )மதுரை பிளாக்கர் என்றாலே சீனா வர்கள் தான் நினைவில் வருவார் . அவர் அனைவரையும் ஒருமுகப் படுத்தும் விதம் அவர் உயர்வுக்கு எடுத்துக்காட்டாகும். அவரை வாழ்த்த வயதில்லை எனவே வணக்குகிறேன்.


 கடந்த வாரம் என் கணினி என்னுடன் சண்டை போட துவங்கியதால் என்னால் சரியாக என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக மருத்துவரை (அதான் சாப்ட் வேர் இஞ்சினியர் )அழைத்து  சரி செய்துள்ளேன். கடந்த  திங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பயணம் செல்வதற்காக புறப்பட்ட போது ஒரு பெற்றோர் , இரண்டாம் வகுப்பு மாணவியை அழைத்து என் அறையில் காத்திருந்தனர். நான் வேகமாக விரைந்து , காரணம் கேட்டபோது  வெள்ளி மாலை பள்ளி பேருந்தில் தன் புது பையை தொலைத்து விட்டதாக புகார். அதுவும் ஆசிரியர் இது கனமாக இருக்கிறது என கூறி பள்ளி பேருந்தின் லக்ககேஜ்  வைக்கும் இடத்தில் வைத்துள்ளார். இறங்கும் போது காணவில்லை என்று கூறினார்கள். நானும் ஆசிரியரை அழைத்து விசாரிக்கிறேன் என்று மாணவர்களுடன் பயணித்தேன். மதியம் வந்தவுடன் சார் எழாம் வகுப்பு மாணவி திவ்யா என் பையை வைத்துள்ளதாக தெரிகிறது என்றனர். நானும் அழைத்து விசாரிக்கிறேன் என சொல்லி என் வகுப்பிற்கு சென்று படம் நடத்தினேன். பின்பு மறந்து விட்டேன். மீண்டும் மறுநாள் காலை அதே பெற்றோர் சார் எல்லாரிடமும் கெட்டு விசாரித்து கொடுங்கள் . அது புது பை என் இப்படி திருடுகிறார்கள். பிறர் பொருளை எடுக்கக் கூடாது என தெரியாதா ? என அடுக்கினார். அன்று பள்ளி பேருந்தில் சென்றா ஆசிரியரை அழைத்து என்ன விசாரித்தீர்களா என கேட்டேன். ஆமாம் சார் , ஒரு பேக் இருக்கு என்றனர். நான் திவ்யா வீட்டிற்கு சென்றேன் விசாரித்தேன் அதற்கு அவர்கள் அம்மா இல்லை என்று கூறி விட்டதாக சொன்னார் . அவரை வகுப்பிற்கு அனுப்பி விட்டு , ஒரு மாணவியை அழைத்து திவ்யாவை அழைத்து வர செய்தேன். திவ்யா வந்தாள்.
அவள் வந்தவுடன் இரண்டாம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கோபமாக பேசினார். நான் அவர்களை சற்று அமைதியாக இருக்க சொல்லி விட்டு , மெதுவாக திவ்யாவிடம் என்ன நீ நல்ல பிள்ளை ஆயிற்றே..என்னை ஏன் இப்படி தப்ப சொல்லுறாங்க ...? உனக்கு புதுசா பேக் வேண்டுமென்றால் சொல்லு நான் வாங்கி தருகிறேன்.தெரியாம எடுத்திருந்தா என் கிட்ட வந்து கொடுத்திடு ... நானே பச்சில கிடந்துச்சுன்னு கொடுத்து விடுகிறேன். .. ஐந்தாம் வகுப்பு வரை நல்ல  பிள்ளை என பெயரெடுத்து , ஆறாவது சென்றவுடன் குணம் மாறுகிறது என்றால் என் மீது தான் தவறு இருக்கிறது என்றேன். உன்னை நல்ல முறையில் பாடங்களுடன் நல்ல ஒழுக்கத்தை அல்லவா கற்றுக் கொடுத்தேன் , நீ இப்படி மாறிவிட்டாய் என்று சொல்லுவது என்னையே திருடன் என்று கூறுவது போல உள்ளது .. நீ வகுப்பறையில் பேனா கிடந்தாலும் , நோட்டு கிடந்தாலும் சார் யாரோ கீழே போட்டு விட்டார்கள் கொடுத்து விடுங்கள் என்று அல்லவா சொலுவாய் ... நீ செய்திருக்க மாட்டாய் இருப்பினும் நான் வளர்த்த முறை சரி இல்லை போலும் என்று மனம் வருந்தி உரையாற்றினேன்.  மேலும் காலை  வீட்டிற்கு ஆசிரியரை அனுப்புகிறேன் , எடுத்திருந்தால் கொடுத்து விடவும் என்றேன்.   பின்பு அவளை அவள் வகுப்பிற்கு செல்லும் படி சொல்லி விட்டேன்.

     பெற்றோரிடம் விரைவில் எடுத்துக் கொடுக்கிறேன். இரண்டு நாள் விடுமுறை என்பதால் பஸ்ஸில் சென்ற மாணவர்களை அழைத்து பேசி , யார் எடுத்துள்ளார்கள் என கண்டு பிடித்து கொடுக்கிறேன் என்று பெற்றோரையும் அனுப்பி வைத்தேன். மீண்டும் வகுப்பிற்கு சென்று என் வேலையை செய்தேன். மாலை பள்ளி கல்வி அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பினேன். சரியாக எழு மணிக்கு ஒரு போன் வந்தது என் கை தொலை பேசியில் .."சார், நான் திவ்யா சார்,சாரி சார் என்னை மன்னிச்சுடுங்க சார் ... நான் உங்க மாணவி தான் சார்... மனவருத்தப்பட வைத்ததற்க்கு மிகவும் சாரி சார்... நான் தான் அந்த பையை வைத்துள்ளேன்... காலையில டீச்சை அனுப்ப வேண்டாம் நானே பையை கொடுத்து விடுகிறேன்... சார் மன்னிச்சுடுங்க சார் .... இனிமே இந்த தவறை செய்ய மாட்டேன் .. என்று அழும் குரலில்  திவ்யா பேசினால்.

      என் மனைவி என்னை பார்த்தால் "யாருங்க ... எதுவும் பேசாமல் இருக்கீங்க  ...." நடந்ததை சொன்னேன். பரவாயில்லையே உங்க பள்ளிகூடத்தில் இதுவும் நடக்குதா.. நல்ல பிள்ளை.... தவறை உணர்வது மிகவும் அபூர்வம் ... அதை உணர்த்துவது அதை விட அபூர்வம் ... இன்னைக்கு தான் உருப்படியான விஷயத்தை பார்க்கிறேன். " என்றாள்.

   இதற்க்கு முன்னாள் இப்படி பட்ட விசயத்தை சொல்லுவேன் .. ஆனால் நம்ப மாட்டாள் தற்போது ஆவலுடன் இருக்கும் போதே ஒரு மாணவி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது அவளை உணர்ச்சி வசப் படச் செய்து என்னை பாராட்டச் செய்தது.

   உணர்த்துதல் மற்றும் உணர்தல் எவ்வளவு கடினாமான விஷயம் தெரியுமா...? அதை உணர்பவர்கள் தான் அதன் அருமையை உணர முடியும் . என் பணியினை சரியாக செய்த உணர்வோடு என் பகிர்தலை நிறுத்துகிறேன். உணர்த்தல் வாழ்வு முழுக்க நடைபெறும்.    

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -5

                படிகளில்  இறங்கும்  போது காற்று நம்மை கீழ் நோக்கி தள்ளி , குளத்தில் வீழ்த்திவிடுவது போல் இருந்தது. உடலை இறுக்கி கொண்டு , உயிரை கெட்டியாக பிடித்துக் கொண்டு கீழே இறங்கினோம். ஆம்., மலை மீது இருக்கும் போது உயிர் எங்களிடம்  இல்லை. அது சுதந்திரமாக மலை மீது அலைந்து திரிந்தது. எதவித பற்றுதலும் இல்லை. ஆனால் அங்கு இருந்து கீழே இறங்க இறங்க, எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றுதல் மீண்டும் தொற்றிக் கொண்டது.  மலை மீது இருந்து அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் பார்க்க அழகாக தெரிந்தது
    


   கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டதற்கு அதிகமான சான்றுகள் வைக்கப்படுகின்றன. இருப்பினும் அங்குள்ள மீன் சின்னம் அதை உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. கோவிலை அழுகுற பெயிண்டிங் செய்துள்ளனர்.இது கல்லில் செதுக்கப்படுள்ளதா அல்லது வரையப்பட்டுள்ளதா  என்ற ஐயப்பாட்டை தோற்றுவிக்கிறது.
கோவிலுக்கு நுழைவதற்கு முன்னாள் ஒரு சின்ன கோவில் உள்ளது . அதன் சுற்று சுவரில் ஒரு கல் பதிக்கப் பட்டுள்ளது . அதில் , முசுறுப்படைகளை விரட்டிய வீரத்தேவன் குறித்த செய்தி நம்மை இந்த மண்ணின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தி இதன் வரலாற்றை  ஆவலுடன் அறிய உதவுகிறது.
மலை மீது இருந்த பேச்சியம்மன் கோவில் கீழே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. குதிரைகள் நம்மை குலை நடுங்கச் செய்கின்றன.காவல் தெய்வங்கள் பலம் பொருந்தி , நம்மை கை எடுத்துக் கும்பிடச் செய்கின்றன. 'காவல் கோட்டம்' படித்தவர்களுக்கு இந்த காவல் வீரரின் கடமைகள் அதன் இரண்டு பக்கங்களிலே அருமையாக விளக்கப்பட்டுள்ளது. அந்த நாவலில் உள்ள சடச்சி இந்த மலையில் தான் தங்கிய உணர்வு  படிக்கும் போது ஏற்படுத்துகிறது. படித்து சொல்லுங்களேன். அய்யனார் கோவிலின் புதுமைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. கூன் பாண்டியனின் உடல் இரண்டாக பிரிக்கப்பட்டது போன்று இந்த கோவிலும் இரண்டாக பிரிக்கப்பட்டு , ஒருபுறம் சைவ சாமிகளும், மறுபுறம் அசைவ சாமிகளும் உள்ளன. ஒருபுறம் மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட உக்கிரமா பாண்டியன் , பாண்டிய ராஜன், சொக்கேஷ்வரர், பைரவர் என்று உள்ளன. மறுபுறம் வீர பத்திரர்,முனியாண்டி, சோனை சாமி, முத்துக் கருப்பான சாமி ,இருளாயியம்மன் என்ற எல்லா காவல் அசைவ தெய்வங்களும் வைக்கப்பட்டு வணக்கப்படுகின்றன.  
  இந்த கிராம  மக்களின் வாழ்வில் சமணர்கள் தங்கள் கருத்துக்களை பரப்பியுள்ளனர் என்பது இவர்களின் வழிப்பாட்டு முறைகளில் வெளிபடுகிறது. கிராம மக்கள் சமணர்களுக்கு மரியாதை கொடுத்தனர் என்பதும் நம்மை அதிசியக்கச்  செய்கின்றன. காவல் தெய்வங்களுக்கு பலிக் கொடுக்கும் போது , சுவாமி சன்னதிக்கு திரையிடப்படுகிறது. இது உயிர்களை கொல்லாதே என்று சொல்லும் சமணர்களுக்கு மரியாதை என்கின்றனர். 

   கோவில் ஆகம விதிக்களின் படி கட்டப்பட்டுள்ளது , கோவில் இராவதம் என்ற பெண்யானையை உதன்மையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ரேகை மண்டபம், பாவாடை மண்டவம், பூஜை   மண்டபம் ,அதற்கடுத்து சுவாமி சன்னதி என வடிவமைக்கப்பட்டுள்ளது. 
   
   இது பாண்டியர் காலத்தை சார்ந்தது என்பதற்கு சான்றுகள்....

1. மீனாச்சியம்மன் கோவில் போல் மண்டபம் சிறியதாக உள்ளது. ஆம் மீன்ச்சி யம்மன் கோவில் பழைய  மண்டபம் மிகவும் சிறியதே.     

2. பாவாடை மண்டவத்தில் மீன் சின்னம் பொறிக்கப் பட்டுள்ளது.  நவ கிரகங்கள் உள்ளன. 

3. பாவாடை பூஜை மீனாச்சி அம்மன் கோவிலில் மட்டுமே பாண்டியனின் காலத்திலிருந்து அய்யானாருக்கு நடத்தப்படுகிறது. அதே போல இங்கும் , மார்கழி மாதத்தில் நடத்தப்படுகிறது. இது பிற எல்லை தெய்வங்களுக்கு நடத்தப்படாது என்பது குறிப்பிடத் தக்கது. 

4. மண்டப தூண்களில் சிவன் சிலை , மற்றும் அஷ்ட லச்சுமியின் சிலை இவை பாண்டிய காலத்து கோவில் வடிவமைப்பாகும் . 

5.இந்த கோவில் பாம்பாட்டி சித்தர் என்பவரால் உருவாக்கப்பட்டது . இவர் கார முனிவர்  என அழைக்கப்படுகிறார். மலை மேலேவுள்ள கார் சுனை இவர் பெயாரால் அழைக்கப்படுகிறது. இவர் பாண்டிய காலத்தவர் என்பதாலும் இக் கோவில் பாண்டியர் காலத்தது ஆகும் 

      நம் கண் முன் பல வரலாற்று காட்சிகளை கொண்டு வந்தாலும் சாதிய அமைப்புகளில் இன்னும் மாற்றம் இல்லை என்பதை அங்கே அருகில் உள்ள ஒரு கல் மண்டபம் சாட்சியாக உள்ளது.  
                                   சாதி அது ஒரு தீ ... பொறுக்கவும் . தீ எப்படி என்னை பற்றியது என்பதை அடுத்த முடிவு பகுதி சொல்லும் .  

Friday, October 15, 2010

பள்ளியில் உலக கைகழுவும் தினம் ..

       இன்று அக்டோபர் பதினைந்து என் பள்ளியில் உலக கைகழுவும் தினம் கொண்டாடப்பட்டது. எம் பள்ளி இந்திரா ஆசிரியர் மாணவர்களை கொண்டு கை கழுவுதலின் முக்கியத்துவம் பற்றி அற்புதமான நாடகம் ஒன்றை நடத்திக் கொடுத்தார். மாணவர்களும் தங்கள் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தி இன்று காலை பிரார்த்தனையை பயனுள்ளதாக ஆக்கினர்.


கை எப்படி கழுவ வேண்டும் அந்த நாடகத்தில் அற்புதமாக மருத்துவரிடம் செல்லும் பள்ளி குழந்தைகள் வாயிலாக விளக்கமளித்தது அனைவரையும் கவர்ந்தது. 

                                          நாடகத்தில் நடித்த மாணவர்களுடன் நான்.

    நாடகத்தில் ஒரு காட்சியில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசுவது போல் காட்சி இருந்தது. அதில் துணி துவைத்துக் கொண்டும்  , மற்றொருவர் கீரை ஆய்ந்துக்கொண்டும் இருப்பது போல காட்சி. அதில் தொலைக்கட்சியில் செல்லமா நாடகம் பற்றி பேசுவதில், "இந்தா பாருக்கா, இந்த நாடகத்தில் அவன் வீட்டிலியே திருடுகிறதை...காலம் கேட்டுப் போய் கிடக்கு ..."என்ற எதார்த்தமான வசனம் எல்லாரையும் கை தட்ட செய்தது.                         
     
    பின்பு மரபாட்சி பொம்மைகளைக்   கொண்டு தன் சுத்தம் பற்றி நாடகம் என்னால் மாணவர்கள் உதவியுடன் செய்து காட்டப்பட்டது. 
மரபாட்சி பொம்மைகள் கொண்டு நாடகம் 

 மாணவர்களைக் கொண்டு எம் பள்ளியில் அடுத்த மாத முதல் வாரத்தில் பொம்மலாட்டம் கண்காட்சி நடத்த உள்ளது. அதில் முப்பது கதைகள் மாணவர்கள் செய்து காட்ட உள்ளனர். எம் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட இன்று முதலே மாணவர்களை தாயார் படுத்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. . 
    
      இன்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் தினம் , மற்றும் பார்வை அற்றவர் தினம் இதன் முக்கியத்துவமும் மாணவர்களுக்கு என்னால் எடுத்து சொல்லப்பட்டது. 

     நாடகத்தில் நடித்த  அனைவருக்கும் பேனா பரிசாக வழங்கப்பட்டது. 


Thursday, October 14, 2010

இரயிலை பார்க்க ....

ரவீந்திர நாத் தாகூர் அவர்களின் நூற்றி ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக , இந்திய ரயில்வே , ஒன்பது மே அன்று ஹவுராவிலிருந்து , தாகூர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தாங்கிய இரயிலை , இரயில்வே அமைச்சர்  மம்தா பானர்ஜி கொடியசைக்க  இயக்கியது. அந்த இரயில் மதுரையை ஒன்பது அக்டோபர் அன்று வந்தடைந்தது. 
                                                                            இரயிலை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் எம் பள்ளி மாணவர்களின் புகைப்படம். 
                 இரயிலில் கண்காட்சியை பார்வையிடும் எம் பள்ளி மாணவர்கள்.                                                                            
                    அந்த இரயிலை பார்க்க திட்டம் தீட்டி , என் பள்ளி செயலர் திரு.பி . சௌந்தர பாண்டியன் அவர்களிடம் அனுமதி பெற்று , திங்கள் பதினொன்று காலை மதுரை ரயில்வே நிலையத்தின் எட்டாவது பிளாட்பாரத்தை நோக்கி, எம் பள்ளியின் நான்காவது, ஐந்தாம் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டோம் . என்னையும் சேர்த்து ஐந்து ஆசிரியர்கள் பள்ளி பேருந்தில் சென்றோம். வெயில் வாட்டினாலும் , தீபாவளி முன்னிட்டு மதுரை அதிகாமான மக்களை சுமந்தது , தன் அழகை வெளிப்படுத்தியது. 


ரயில் நிலையம் இறங்கியவுடன் பாதி மாணவர்கள் நான் இன்னும் ரயிலையே நிஜத்தில் பார்த்தது இல்லை என்று கூறியது  எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும் , அந்த வாய்ப்பை இன்று நாம் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மன மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இரயிலில் குளிர்சாதன வசதி இருக்கிறதா என ஆச்சரியம் வேறு. குளு குளு பெட்டியில் தாகூரின் நினைவுகளில் மனக் குளிர்ச்சி அடைந்தனர் மாணவர்கள்.


குரு தேவ என்று அழைக்கப்பட்ட தாகூர் கொல்கத்தாவில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தி ஒன்றில் மே எழாம் நாள் பிறந்தார். எட்டு வயதில் கவிதை புனைந்திருந்த
தாகூர் ,  தனது பதினாறாவது வயதில் முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டார்.
இவரது தலை சிறந்த படைப்புகள் என்பன கீதாஞ்சலி, கோரா , காரே-பிரே ஆகும்.இரண்டு நாடுகளின் தேசிய கீதத்தை இயற்றிய தாகூரின் வாழ்வை விளக்கும் என் பள்ளி ஆசிரியை .                                                 தாகூரின் ஓவியங்களுள் ஒன்று.

           நம் தேசிய கீதமான 'ஜன கன மன' மற்றும் வங்காள தேசத்தின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பங்களா ' ஆகிய இரண்டும் தாகூரால் இயற்றப்பட்டவை.   
ஆயிரத்து தொள்ளாயிரத்து  பதிமூன்றாம் ஆண்டில் நோபல் பரிசை பெற்றார். நோபல் பரிசை   பெற்றதில் முதல் ஐரோப்பியரல்லாதவர் என்ற சிறப்பும் உண்டு .   ஆயிரத்திற்கு
மேற்பட்ட கவிதைகள், எட்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இருபதிற்கு மேற்பட்ட நாடகங்கள், எட்டு நாவல்கள் இவர் எழுதியவைகளாகும் .

 
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதில் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் நடைபெற்ற விவாதத்தில் தன் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க தேவை இல்லாத அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இது அவரின் அறிவு திறத்திற்கு சான்றாகும் .    
தாகூரின் ஓவியத்தை பார்வையிடும் என்பள்ளி மாணவர்கள் .

தாகூரின் ஓவியத்தில் என்னைக் கவர்ந்தது இதோ.... 
தாகூர் பன்முக புலமை பெற்று விளங்கினார். கவிஞர் , நாடக ஆசிரியர், ஓவியர், இசைக் கலைஞர் என்று திகழ்ந்த அவரின் வாழ்க்கை என் மாணவர்களுக்கு பல துறைகளில் சாதிக்கலாம் என்ற ஊக்கத்தை கொடுத்தது. அத்துடன் வெளியே வந்ததும் ரயில்வேயின் எச்சரிக்கை படம் மற்றும் கண்காட்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  


 
பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் தலைமை ஆசிரியர்.

காந்தியுடன் தாகூர். 
பெட்டி ஒன்றில் அவரின் வாழ்க்கை, சாந்தி நிகேதன் , ஸ்ரீ நிகேதன் பற்றி விளக்கும் படங்கள் இருந்தன. 

இரண்டாவது பெட்டியில் பாடல்கள் கவிதைகள் இடம் பெற்றிருந்தன. 
மூன்றாவது பெட்டியில் சிறு கதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் இடம் பெற்று இருந்தன. 
நான்காவது பெட்டியில் ஓவியங்கள் கண்களை கவர்ந்தன. 
ஐந்தாவது பெட்டியில் அவரின் இறுதி பயணம் குறித்து விளக்கப்பட்டு இருந்தது.  

       மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த இந்த ரயிலை ஏற்பாடு செய்து கொடுத்த ரயில்வே துறைக்கு எம் பள்ளி சார்பாக வாழ்த்துக்கள். இன்று ரயில் ராமேஸ்வரம் அடைந்துள்ளது.