Friday, November 28, 2014

விருதுநகர் மாணவர் கொலை பின்னனி? யார் குற்றவாளி?


என்ன சொல்வதென்று தெரியவில்லை ?  மாணவர்களிடம் ஏன் இப்படிப்பட்ட ஒழுக்க கேடான செயல்கள் இருக்கின்றன என தெரியவில்லை.  மாணவர்களிடம் மோதல் , கொலை, கடத்தல் என மோசமான செயல்களில் ஈடுப்படுகின்றார்கள். யாரை குறை கூறுவதென்று தெரியவில்லை.
ஆனாலும் மனம் வலிக்கின்றது. ஏன் குழந்தைகள் தங்கள் மனதில் வன்மத்தை வளர்த்து கொள்கின்றன?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக கொண்டு பாடம் நடத்துகின்றனர். சோசியல் மீடியாக்களில் ஆபாசம் மட்டுமே பெரிதாக படுகின்றது மாணவர்கள் பருவத்தில் !

மாணவர்களின் ஒழுக்க கேடான செயல்களுக்கு காரணம் என்ன? ஏன் ?

எல்லோரும் இயந்திரத்தனமாக இருக்கின்றார்கள். பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருக்கின்றார்கள். ஆசிரியர்கள் மதிப்பெண்கள் பெற்றுத்தரும் இயந்திரமாக இருக்கின்றார்கள். மாணவர்கள் தங்களின் குழந்தை தன்மையை இழந்து விட்டார்கள். மாணவர்கள் தங்களின் இயல்புகளை மறந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.


ஆசிரியர்களும் மதிப்பெண்கள் என்ற அசுரனால், தங்களின் மன நிம்மதியை இழக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பணிபுரியும் இடத்தில்  உள்ள பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருக்கின்றார்கள். இப்படி எல்லா இடங்களிலும் மனம் நிம்மதி இழந்து கிடக்கின்றது.

எந்த இடத்தில் இருந்து நாம் பிரச்சனைகளை ஆராய்வது ? யாரிடம் இருந்து விசாரணைகளை தொடங்குவது? நம் குழந்தைகளிடத்தில் ஒழுக்கம் சார்ந்த குறையை ஏற்படுத்தியது எது?

எல்லாவற்றையும் அவிழ்க்கும் முடிச்சாக நம் கல்வி முறை உள்ளது. குழந்தைகள் மையப்படுத்துதல் எல்லாம் சரிதான். ஆனால் நாம் கவனிக்க மறந்த ஒழுக்கம் சார்ந்த நன்னெறியை எந்த தருணத்திலாவது எதிர்பார்த்திருக்கின்றோமா? இல்லை அது சார்ந்து நாம் யோசித்து இருக்கின்றோமா? பெற்றோர்கள் தங்கள் மகனின் மதிப்பெண் தவிர்த்து பள்ளிகளில் மாணவனின் ஒழுக்கம் சார்ந்து பேசி இருக்கின்றோமா? ஆசிரியர்கள் தான் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்து புகார் அளிக்கின்றோமா?

கலாச்சார ரீதியாக நாம் பலவிசயங்களை முன்னெடுத்து பேசுகின்றோம். எது எதற்காகவோ குரல் கொடுக்கின்றோம். எது எதற்காகவோ ஆதங்கப்படுகின்றோம். அதிகாரிகளும் ஆசிரியர்களும் 30 ஆயிரங்களுக்கு மேல் சம்பளம் வாங்குகின்றார்கள் என பிரச்சனை வரும் போதெல்லாம் பேசுகின்றோம். சாதரணமாக 160 ரூபாய் அடிப்படை சம்பளம் பெற்ற போது இருந்த ஒழுக்க நெறி இல்லை என்கின்றோம்.

கொஞ்சம் நிறுத்தி இங்கு சிந்திப்போம். மாணவர்களை அடிக்க கூடாது, அடிப்பது என்பது மனித உரிமை மீறல் என சட்டம் சொல்கின்றது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது, அதே சமயம் மனரீதியாகவும் புண்படுத்தக்கூடாது என்கின்றது கட்டாய இலவசக் கல்வி சட்டம். ஆசிரியர்களும் பயந்தோ அல்லது சட்டத்திற்கு கட்டுப்பட்டோ அடிக்க தவறுகின்றார்கள். மீறி கோபம் ஏற்பட்டு அடித்தால், மாணவர்கள் அளிக்கும் புகார்களால், சட்டம் தன் கடமையை செய்வதை பல இடங்களில் செய்தியாகவும் பார்க்கின்றோம். இப்போது பெற்றோர்கள் அந்த கடமையை கையில் எடுத்து பள்ளிகளில் அடியாட்களை வைத்து ஆசிரியர்களை மிரட்டி அடிக்கவும் செய்கின்றார்கள்.


மாணவர்களுக்கு கல்வி எதற்காக போதிக்கப்படுகின்றது? இதற்கு பதிலாக பெற்றோர் மட்டும் அல்ல மாணவனும் சேர்ந்து நல்ல வேலை கை நிறைய சம்பளம் என்கின்றார்கள். ஆசிரியரும் அதற்கு தகுந்தாற்போல் அடிக்காமல் பாடத்தை புகட்டி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். இங்கு திறமைகளோ திறன்களோ பரிசோதிக்கப்படுவதில்லை.   இவர் மாணவனுக்கு மதிப்பெண் பெறச் செய்ய ப்ரவேட் டியூசன் எடுக்கின்றார். சட்டம் டியூசன் எடுக்க கூடாது என்கின்றது. ஆனால் இவர்கள் சொல்கின்றார்கள். அச்சட்டம் 1 முதல் 8ம் வகுப்பு வரை சொல்லிக்கொடுக்கும் மாணவர்களுக்கு தான். கட்டாய கல்வி சட்டம் 8 வரை உள்ள குழந்தைகளையும் ஆசிரியர்களையும் குறிக்கின்றது. ஆகவே, நாங்கள் டீயுசன் எடுப்பது தவறில்லை என்கின்றார்கள். இப்படி பெற்றோர்கள், மாணவர்கள் நல்ல சம்பளம் வேலை குறித்தும், ஆசிரியரும் நல்ல மதிப்பெண் அதற்காக காசு என்றும் இருக்கின்றனர்.


இதில் மாணவனின் மனநிலையில் ஏற்படும் அழுத்தம் ஒரு சிலரை தற்கொலைக்கு இழுத்து சொல்கின்றது.  அவர்கள் கோழைகள் என்கின்றார்கள். அதனை நான் மனசு பக்குவப்படாத பிஞ்சுக்கள் என்கின்றேன். சிலர் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க , தைரியமாக சோசியல் மீடியாவுக்குள் நுழைந்து பாதை தடுமாறி, பாழான பலவிசயங்களை தெரிந்து, தங்கள் பால்ரீதியான விசயங்களுக்கு தங்களை பலிகொடுத்து இயங்க ஆரம்பிக்கின்றார்கள். அதில் வரும் பிரச்சனை, மன உளைச்சல் தைரியம் அடிதடிக்கு வலிசெய்கின்றது. முடிவில் கொலையாகவும் முடிகின்றது!

கொஞ்சம் யோசியுங்கள். எதற்கும் நான் விடை தேட முயற்சிக்க வில்லை. பிரச்சனைகளை மட்டுமே காரணமாக முன்னிலைப்படுத்த வில்லை. ஆனாலும் இந்த புதிரை அவிழ்க்க வேண்டிய இடத்தில் கல்வியாளர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் உள்ளோம் என்பதை மட்டு ம் மிக ஆழமாக பதிய ஆசைப்படுகின்றேன்.


மதுரை சரவணன். 

Saturday, November 22, 2014

தள்ளாடும் மதுரை


சனிக்கிழமையாகி விட்டாலே பயமா இருக்கு. மாலை 5 மணிக்கு நண்பரை போனில் அழைத்தேன். இன்று மாலை சந்திப்போம் என்று கூறி இருந்தார். அதனை தொடர்ந்து பலமுறை போன் செய்தேன். அவர் எனக்கு எந்த பதிலும் தரவில்லை. வழக்கமாக எஸ்.எம். எஸ் அனுப்பிவிடுவார். வருகின்றேன். இல்லை நீங்கள் போங்கள் என்பார். ஆனால் இன்று அவரிடம் எந்த பதிலும் இல்லை. மழை துணையாக வந்து என்னோடு ஒட்டிக்கொண்டது.

போனை தொலைத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. சரி அப்படியே நனைந்தவாரே என் அம்மா வீட்டிற்கு செல்வோம் என்று நினைத்தேன். அதற்கு முன் மீண்டும் ஒருமுறை போன் செய்து பார்ப்போம் என போன் செய்தேன். இப்போதும் அவர் எடுக்க வில்லை. நான் காத்திருக்கின்றேன் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு திரும்பி பார்க்கின்றேன். ஒருவன் என்னைப்பார்த்து பல் இளித்தான். புரியவில்லை. திரும்பி பார்த்தேன். என் பின்னால் எவரும் இல்லை. மீண்டும் சிரித்தான். அவன் தடுமாறி நடக்கும் போது சாராய அரக்கன் அவன் உடம்பில் இருப்பது தெரிந்தது, !

சரி இவனிடம் தப்பிக்க வேண்டும் என்பதற்காக கல்கி வாங்க அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு புகுந்தேன். அங்கே ஒருவன் கடைக்காரரிடம் சிக்ரெட் தா .. நாளைக்கு காசு தருகின்றேன் என வாதாடிக்கொண்டிருந்தான். வருகின்ற கஸ்டமரை கவனிக்க இயலாத அவர், ஒரு சிக்ரெட் மட்டும் தந்து அனுப்பினார். சாய்ங்காலம் ஆயிட்டாலே இப்படி போதைக்கிராக்கிங்க வந்து உயிர எடுக்கிறாங்க..! தெரிஞ்சவன் சார், சிக்ரெட் தராவிட்டால் இங்கேயே டோரா போட்டு விடுவான். அப்புறம் கஷ்டமர்கள் சங்கடப்படுவார்கள் என புலம்பினார் .

சிரித்துக்கொண்டே அருகில் இருந்த டீக்கடையில் டீ குடிக்க ஒதுங்கினேன். போன் வந்தது. அவராக தான் இருக்கும் என நினைத்து ஹாலோ என்றேன். இது ஈரோடா என்றான். இல்லை மதுரை என்றேன். அட ஈரோட்டுக்கு போன் போட்டா மதுரைக்கு போகுது.. சரி கொஞ்சம் அப்படியே போன ஈரோடுக்கு கொண்டு போய் கொடு என்றான் போனில் பேசியவன். யாரோ தெரிந்தவர்கள் தான் கலாய்க்கிறார்கள் என நினைத்து, எனக்கு ஈரோட்டில் உள்ள பிரபலம் கதிரை தான் தெரியும் என பதிலுக்கு கலாய்த்தேன். அங்கே இருந்தவன், “ மாமு இவனும் போதையில் இருக்கான் போல தெரியுது. இவன் சரிபட்டு வர மாட்டான் என கட் செய்தான்.

கஷ்ட காலம் ! காலையில் இருந்து நான் யாருக்கு போன் போட்டாலும் போனை எடுக்க மாட்டேன் என்கின்றார்கள். இவர்கள் போனை உபயோகிப்பது எதற்கு? அவசரத்திற்கு கூப்பிட்டால் என்ன செய்வார்களாம் என மனதில் திட்டியப்படி டீ ஆர்டர் கொடுத்தேன். அப்போது ஒருவன் சார் 5 கொடுங்க.. டீ சாப்பிடணும் காசு பத்தலை என்றான். நான் வேறு சிந்தனையில் இருந்ததால் , அவசர பட்டு 5 ரூபாயை கொடுத்து விட்டேன். அவன் சென்று விட்டான். டீக்கடைக்காரர் சார் இப்படி யார் கேட்டாலும் கொடுக்காதீங்க சார். அவன் கட்டிங் போட கேட்கின்றான். அங்கே பாருங்க என்றார். அங்கே இன்னொருவரிடம் நான் கொடுத்த 5 ரூபாயை காட்டி, மற்றொரு 5 ரூபாய் பெற்றான். இப்படியே 100, 200 தேத்தி, 7 மணிக்கெல்லாம் போதையை போட்டு இந்த ரோட்டில் சலம்பி , கடைசியில் மட்டையாகி ரோட்டில் கிடப்பான் என்றார்.

கடைசி வரை நான் எதிர்பார்த்த நண்பர் வரவில்லை. அவரிடம் இருந்து அழைப்பும் வரவில்லை. மழை மட்டும் என்னோடு துணைக்கு இருந்து கொண்டே இருந்தது. அதுவும் என்ன நினைத்ததோ தெரியவில்லை. என்னோடு சேர்ந்து சுத்தினால், எதாவது பிரச்சனை வந்துவிடும் என நினைத்து ஒரு மணி நேரத்தில் அதுவும் டாட்டாக்காட்டி சென்றது. (மழை நின்றது ) அப்போது தான் பார்க்கின்றேன். அந்த டீக்கடையில் மழைக்கு ஒதுங்கியவர்கள் பாதிப்பேர் போதையில் இருந்ததை!

வண்டியை ஸ்டார் செய்தேன். வேகமாக தள்ளாடியப்படி ஒருவன் வந்தான். நிறுத்தினான். மாப்பிள்ளை இதுக்கு மேல வண்டி ஓட்ட முடியலை. எஸ்.இ.வி ஸ்கூல் முன்னாடி வண்டிய பார்க் பண்றேன். ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போறேன். வீட்டுக்கு வந்து சாவி வாங்கி எடுத்துட்டு வந்துடு என்றான். தெளிவாத்தான் இருக்காங்க என நினைத்தப்படி வண்டியை எடுத்தேன். ஆட்டோ வந்தது. அவன் ஏறினான். ஆனால் ஆட்டோ தள்ளாடியப்படி சென்றது.

சனிக்கிழமை மாலை ஆகிவிட்டாலே ரோட்டில் வண்டியை ஜாக்கிரதையாக தான் ஓட்ட வேண்டி இருக்கின்றது.
மதுரை சரவணன்.

Friday, November 21, 2014

என்னமா யோசிக்கிறாங்கப்பா...!

எப்பொழுதும் ஆசிரியர்களை விட மீடியாக்கள் மிகவும் பவர் புல்லாக இருக்கின்றன. தான் சொல்லவருகின்ற அனைத்து விசயங்களும் புரிகின்றதா என்பதை உடனடியாக எந்த ஆசிரியரும் சரிப்பார்ப்பதில்லை. அவர்களின் சரிப்பார்ப்பு (மதிப்பீடுகள்) வாந்தி எடுக்கும் வித்தையை மட்டுமே சரிப்பார்க்கின்றன.
மீடியாக்கள் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக சரியான புரிதலுடம் விதைக்கின்றன. இதில் சிறுவர்களிடம் தான் பாதிப்பு அதிமாக உள்ளது.
நேற்று எப்போதும் போல் தமிழ்பாடத்தில் இருந்து பொருள் கூறுககேட்டுக்கொண்டு வந்தேன். அப்போது அம்மா என கேட்டேன். தாய் என கூறுவதற்கு பதிலாக மாணவர்களில் பாதிப்பேர் சத்தமாக மக்களின் முதல்வர் என கூறினர். சிரித்து விட்டேன். மீடியாக்கள் தங்கள் கருத்துக்களை எவ்வளவு பேண்டசியாக திணிக்கின்றன. நாம் தான் மாணவர்களை புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றோம்.
மதுரை சரவணன்.

Tuesday, November 18, 2014

தயவு செய்து என் மீது வாந்தி எடுத்து விடாதீர்கள் !


இன்று ஆசிரியர்கள் என்பவர்கள் பாடங்களைக் கற்றுத்தருபவர்களாகவும் மதிப்பெண்களை எடுக்க வைக்கும் இயந்திரங்களாகவும் செயல்படுகின்றார்கள். வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தருபவர்களாகவும், வழிநடத்துபவர்களாகவும் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.

பல இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடைபெறும் கல்விமுறையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.

பெரியவர்களுக்கு கீழ்படிதல், குருபக்தி போன்றவை இல்லாமல் போய்விட்டன. பெரியவர்களையும், ஆசிரியர்களையும் பட்டப்பெயர்கள் கொண்டு அழைக்கும் மாணவர்கள் அதிகமாக பார்க்க முடிகின்றது. இது அவர்கள் குறையா? இல்லை அவர்கள் வளரும் முறையில் உள்ள குறையா? அவர்கள் வளரும்முறையை உருவாக்கும் சமூகக்குறையா?கல்விமுறையில் உள்ள குறையா? கல்வி கொடுக்கும் ஆசிரியர்களிடம் உள்ள குறையா?

இன்று மாணவர்கள் மீடியா உதவியால் தனித்திறமைகளை வெளிப்படுத்துபவர்களாக உள்ளார்கள். தனித்திறமைகள் பெற்றோரின் உதவியுடனே அரங்கேற்றப்படுகின்றன. சாதரணமாக அந்நிகழ்வில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்கொள்ள இயலாதவர்களாக குழந்தைகள் உள்ளார்கள். காரணம் ஆசிரியர்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை, தோல்வியை எதிர் நோக்கும் பண்பு, போட்டி மனப்பான்மை, குழுமனப்பான்மை, விளையாட்டு விதிகளை பின்பற்றுதல்,விட்டுக்கொடுத்தல், ஒருங்கிணைத்தல், ஒன்றாக செயல்படுதல் என்பது போன்ற இயல்புகள் இல்லாமல் மதிப்பெண் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக செயல்படுவது ஆகும், அதே மனநிலையில் வெற்றி மட்டுமே இலக்காக மேடைநிகழ்வுகளில் செயல்படுவதால் வரும் குறைப்பாடாகும். இக்குறைப்பாடுகளை பயன்படுத்தி மீடீயாக்கள் தங்கள் டிஆர்பி ரேட்டை ஏற்றிக்கொள்கின்றன.

அன்பு , பாசம், மனிதநேயம், மனிதாபிமானம்,சமத்துவம், சகோதரத்துவம், கீழ்படிதல், மதித்தல் போன்ற பண்புகள் மதிப்பெண் கல்வி முறையில் அடியோடு மறக்கடிக்கப்படுகின்றன. இவை எல்லாம் இல்லாத மதிப்பெண் மட்டுமே வாழ்வாக கொண்டவன், சமூகத்தில் அடியெடுத்து வைக்கும் போது எப்படி லஞ்சம் இல்லாமல் வாழ முடியும்? லஞ்சம் என்பதை கையூட்டு மட்டுமல்லாமல்,வாழ்வுக்கு ஒத்துவராத பண்பாகவும் பார்க்கவும்.

அப்படியானால் நம் கல்விமுறையில் மாற்றம் வராதா? யார் சொன்னது கல்வியாளர்கள் மாற்றங்கள் ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். கல்வி முறையில் ஏற்படும் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லையா ! இல்லை தயங்கும் ஆசிரியர்களிடம் உள்ள குறைப்பாடு தான் என்ன?

திட்டங்கள் கொண்டு வரும் அதிகாரிகளே அத்திட்டம் நடைமுறைப்படுத்தி வெற்றிப்பெறும் முன் , மதிப்பெண் வேண்டும் , 100 சதவீத தேர்ச்சி வேண்டும் என்று கட்டளை இடுவதும், ஆங்காங்கே மீட்டிங் போட்டு தலைமையாசிரியர்களை வறுத்து எடுப்பதும் ஆகும். செய்திதாள்கள் நாள் தோறும் 100 சதவீத தேர்ச்சி குறித்து பார்க்கும் போது அத்தனை நவீனங்களும் ,குழந்தை மையக்கல்வி முறையும் மீண்டும் மதிப்பெண் என்ற வாந்தி யெடுக்க வைக்கும் முறைக்குள் புதைக்கப்பட்டு விடுகின்றதே என்ற ஆதங்கம் ஏற்படச் செய்கின்றது!

ஆசிரியர்களுக்கு நவீன கல்வி முறை குறித்த பயிற்சி முறையாக கொடுப்பது இல்லை. நவீன கல்வி முறை செயல்படுத்தப்படுகின்றதா என்கின்ற கண்காணிப்பும் இல்லை. முறைப்படுத்தாமைக்கு விளக்கமும் கேட்பதில்லை. எல்லாம் ஒரு வட்டத்திற்குள் செயல்படும் சர்க்கஸ் வித்தையாகவே உள்ளது. ஆம் ரிசல்ட் என்ற புள்ளி எல்லா ஆரம்பங்களையும் தொடக்கப்புள்ளிகளிலேயே நிறுத்தி விடுகின்றது. ஆரம்பித்த இடத்திலேயே ஓட வேண்டியதாக உள்ளதாக ஆசிரியர்கள் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.

ஆரம்ப பள்ளிகளில் செயல்படும் எளிய செயல்வழிக்கற்றல் முறை, படைப்பாற்றல் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால், நாம் எதிர்நோக்கும் குழந்தை மையக்கல்வி முறை நடைமுறைக்கு வந்துவிடும். அது ஏன் குழந்தை மையக்கல்வி முறை ? அப்போது தான் ஆசிரியர்கள் கம்பு எடுத்து தான் சொல்வதை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. இன்னும் புரியும் படி சொன்னால், குழந்தைகள் தங்கள் இயல்பு மாறாமல், ஜாலியாக வெவ்வேறு இடங்களில் சென்று, நண்பர்களுடன், சகஜமாக பேசி, தனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து, தனக்கு தெரியாதவற்றை எந்த சங்கோஜம் இல்லாமல் தெரிந்து கொண்டு, தேவைப்படும் போது ஆசிரியர் உதவியை நாடி, குழந்தை தன் இயல்பில் கற்றுக்கொள்வதாகும்.

வாந்தி எடுக்கும் முறையை ஒழிக்க திறமைக்கு உண்மையான ஆளுமைக்கு மதிப்பு அளிப்போம், மதிப்பெண்களை தவிர்த்து மதிப்பிடுவோம் மாணவனை! மதிப்பு மிக்க சமூதாயத்தினை படைப்போம்!

மதுரை சரவணன்.

Monday, November 17, 2014

இதை சொன்னா என்னை லூசுன்னு சொல்றான்...!


எல்லாக்குழந்தைகளிடமும் ஆர்வமும் ஆற்றலும் இருக்கின்றன. அவற்றை கண்டறிந்து , குழந்தைகள் விரும்பும் வண்ணம் தேவையான சரியான கல்வி கொடுக்கும் ஆசிரியர்கள் குறைப்பாடு , மாணவர்களை திறமை குறைந்த மாணவர்கள் என்று தரம் பிரிக்க சொல்கின்றது.

மொழித்திறனில் பிரச்சனை உள்ள மாணவர்களுக்கு மொழிப்பயிற்சியினை குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்து கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு மொழித்திறன் வளர்ப்பதில் ஆர்வம் உண்டாக்கலாம். அதற்கு குழந்தை மையக்கல்வியை முதன்மைப்படுத்த வேண்டும். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க செய்ய வேண்டும்.

அரசாங்கம் மிகத்தெளிவாக அரசாணை வெளியிட்டுள்ளது. காலை மாலை செயல்பாடுகள். அதன் படி ஆசிரியர்கள் தெளிவாக செயல்பாட்டால், வாசித்தல் எழுதுதல் தானாக வரும். அதன் பின் திறன்களை செயல்வழிக்கற்றல் முறையில் கற்றுக்கொடுத்தால் போதும். மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் தமிழ் ஆங்கிலம் சரளமாக வாசிப்பதால், பிழையின்றி எழுதுவதால்,நூலகத்திற்கு சென்று புத்தகம் வாசிப்பவனாக மாறிவிடுவான். பல புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து விடுவான். தினமும் செய்திதாள்களை தானாக வாசிப்பதால் , சமுக சிந்தனை கொண்டு சமுக நலனில் அக்கறை காட்டுபவனாக மாறி விடுவான்.

"working memory is the gateway to long-term memory " என்பது அறிவியல் உண்மை. தினமும் மாணவன் மதிய உணவு இடைவேளையில் தமிழ், ஆங்கிலம், வாய்ப்பாடு சொல்லுதல், எளிய கணக்குகள் செய்தல் போன்றவற்றை தினப்பயிற்சியாக செய்து வருவதால் , அவை நீண்டகால நினைவுகளாக மாறி, பிழையின்றி எழுதவும் பேசவும், கணிதங்கள் செய்யவும் பழகிவிடுவார்கள். மேலும் மாணவனுக்கு பிடித்தப்படி செயல்வழிக்கற்றல் முறையில் பாடங்கள் நடத்தினால் அப்பாடத்திலுள்ள திறன்களை எளிதாக கற்றுக்கொள்வான்.

திறன்கள் என்பது மதிப்பெண் பெறுவதற்கானது அன்று என்று ஆசிரியர்களுக்கு எப்போது புரியுமோ !. மாணவர்களிடம் எதிர்பார்க்கும் அனைத்து திறன்களும் அவனை இச்சமுகச்சூழ்நிலையில் மகிழ்ச்சியாக வைப்பதற்கும், சமுக சூழல் மகிழ்வாக இருக்க சிந்திப்பதற்கும் தான். திறன்கள் இன்று மதிப்பெண்களால் மழுங்கச்செய்யப்படுகின்றன.

தயவு செய்து குழந்தைகளை குழந்தைகளாக நடத்துங்கள். குழந்தைகளை மதியுங்கள் . அதாவது மகிழ்வாக வைத்திருங்கள். குழந்தைகள் உரிமையை உறுதிப்படுத்துங்கள். அட ஆசிரியர்களே ஒன்றும் செய்ய வேண்டாம். நீங்கள் குழந்தைகள் சரியான செயல்களுக்கு கைத்தட்டி பாராட்டினால் போதும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட பலமடங்கு திறன்களைப் பெற்று திறமைசாலிகளாக மாறிவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமா கல்வி கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விதத்தில் ஆடிப்பாடி ஓடி சொல்லித்தாருங்கள். ஒரே இடத்தில் கை கட்டி வாய் பொத்தி அமர்வதை தவிர்க்கவும். குழந்தைகள் நம்மைப்பார்த்தால் மகிழ்ச்சியாக ஓடி வரவேண்டும். பத்தடி தூரம் ஓடக்கூடாது.

அட மாணவர்களிடம் குழுக்கற்றல், சக மாணவர் துணையோடு கற்றல், தனித்து கற்றல் போன்ற எல்லாவகையான கற்றலையும் முறைப்படுத்துங்கள் . நான் சொல்லுவேன் அதை நீ கேட்க வேண்டும் என்பதை தவிர்த்து விடுங்கள். குழந்தைகள் இன்று நம்மை விட புத்திசாலிகளாக இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழையவும்.

கல்வி கற்றுக்கொடுத்தல்அல்லது திறன்களை மாணவர்களுக்கு கொடுத்தல் என்பது தொடர் நிகழ்வு என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.

மொத்தத்தில் குழந்தைகளை குழந்தைகளாக மதித்தால் , கற்றல் தானாக முறைப்படும். டியூசன், கூடுதல் வகுப்புகள் செய்யாத ஒன்றை செய்து தரும்.

மதுரை சரவணன்.

Friday, November 14, 2014

குழந்தைகளோடு இருப்பவன் பாக்கியவான்



வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒற்றை சொல் அன்பு. குழந்தைகள் எத்தனை ப்ரியமானவர்கள்! அவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நான் கடவுளர்களுடன் கடவுளின் சன்னிதானத்தில் இருக்கின்றேன் என்பதை நினைக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றேன். பெருமைப்பட்டுக் கொள்கின்றேன். நான் பாக்கியவான் என்பதில் ஐயமில்லை.

நேற்றே ஒருவள் வந்தாள், “குழந்தைகள் தினம் எப்படி கொண்டாடுவீங்க ? என கேட்டாள். எப்போதும் போல் என்றேன். நாங்க எல்லாம் டீச்சர்ஸ் டே உங்களுக்கு பிடிச்சப்படி கொண்டாடினோமே? என்றனர்,அவளுடன் இணைந்து கொண்ட என் வகுப்பு மாணவர்கள்.
(ஏன் இப்படி சொல்கின்றனர் என்பது உணராமல் எப்போதும் போல் பதிலளிக்கின்றேன்)

ஓவியம் பாட்டு, டான்ஸ், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்கள் அன்று காலை பிரார்த்த்னைக் கூட்டத்தில் பேசுவார்கள் என்றேன். அப்புறம் ...என வித்தியாசமாய் ஒருவன் கேட்டான். பரிசு பொருள்கள் வழங்குவோம் என்றேன். அவர்கள் மூஞ்சி ஒருமாதிரி போனதை பார்த்து நானே இவ்வாறு கேட்டேன்.

சரி என்ன செய்ய வேண்டும் ?
“சார் எப்பவும் போல் போர் அடிக்க வேண்டாம். பிரார்த்தனை கூட்டம் வேண்டாம். நாங்க ஜாலியா காலையில் வந்து சந்தோசமா இருக்கோம். எங்களுக்கு தெரிஞ்சதை போர்ட்டில் வரைகின்றோம். எங்க பெயரெல்லாம் எழுதி போடுவோம். நீங்க ஒண்ணும் சொல்லக்கூடாது”
இது ஒட்டுமொத்த குரலாக ஒலித்தது. சரி என்றேன்.

“சார், கலர் டிரஸ் ”என்றான் ஒருவன். “ஓகே .எல்லோரிடமும் நாளை கலர் டிரஸ் நானே சொல்லிட்டு வருகின்றேன் ”என என் கட்டளைக்காக காத்திராமல் ஒருவன் ஓடினான்.

இன்று காலை வந்த போது எனக்கு முன்பாகவே கரும்பலகையில் ரோஜா வரைந்து குழந்தைகள் அழகாக எழுதி இருந்தனர். கீழ்மட்ட கரும்பலகையில் தங்கள் பெயர்களை (கையெழுத்து இடுவது போல் )வரிசையாக மயில் போன்ற பறவைகள் வரைந்து எழுதி இருந்தனர். காலை செய்திதாள் வாங்கி வந்திருந்தேன். செய்திகளை குறித்தேன்.ஒருவன் என்னைப் பார்த்தான். ரகசியமாக டேய் சார், ப்ரையர் வெளியில் (காமன் பிரையர் ) வைக்க போகின்றார் என கூறினான். அதற்குள் பெண் குழந்தைகள் சார் ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே.. என கை குலுக்கி, எனக்கு ஒரு கடலை உருண்டையை தந்தனர். மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டேன்.

“சார், எங்க முன்னாடி சாப்பிடுங்க ”என்றான் ஒருவன். “ சார் சாப்பிடலைன்னா நானே ஊட்டி விட்டுவேன் ”என்றான் மற்றொருவன். “அதென்ன சோறாடா.. ஊட்டி விட.. வாங்கி வாயில திணிச்சுடுவேன்னு சொல்லு “ என்றான் மற்றுமொருவன்.அவர்கள் பேசுவதை கேட்டு, அனைவரும் ஹா ..ஹா என சிரித்தனர்.

இருந்தாலும் அத்தனை கொண்டாட்டமான பேச்சுக்களுக்கும் நடுவில் , கடிகாரத்தை பார்த்து கொண்டனர். மணி ஒன்பது பத்து ஆகியது. நான் ப்ரேயர் அழைத்துவிடுவேன் என பயந்த படி இருந்த என் வகுப்பு குழந்தைகள் , “சார் நாங்க எல்லோருக்கும் சாக்லெட் வச்சு இருக்கோம். நாங்க எல்லா டீச்சருக்கும் மிட்டாய் கொடுத்துவிட்டு வருகின்றோம்” என்று சென்றனர். சிரித்தேன். சரி என்றேன்.

ப்ரேயர் இருக்கிறதா ? தேசியக்கொடி கம்பத்தில் கட்டி வைக்கவா ?என கேட்க வந்த ஆசிரியர் குழந்தைகள் எனக்கு மிட்டாய் கொடுப்பதை பார்த்து, “சார் தான் உங்களுக்கு வாழ்த்து சொல்லி கை கொடுக்க வேண்டும் நீங்க வித்தியாசமா உங்க சாருக்கு கை கொடுத்து மிட்டாய் கொடுக்குறீங்க..?” என்றார்.

“மிஸ் அவரும் சின்ன பிள்ளை தான் மிஸ்.. பச்ச பாப்பா அவர்கிட்ட எல்லாம் நாம மிட்டாய் கேட்க கூடாது..” என்றாள் துடுக்கான மாணவி.

“சாரை இப்படி எல்லாம் பேசக்கூடாது. வாய் உங்களுக்கு ஜாஸ்தி. சார் உங்க பசங்கள கண்டிச்சு வைங்க.. உங்க குழந்தைகளுக்கு ரெம்ப தைரியம். இதே மாதிரி தான் எல்லா டீச்சர் கிட்டையும் பேசுதுங்க.. உங்களுக்கும் பயப்படுறதில்லை. அதனால எங்களையும் எதிர்த்து பேசுதுங்க “ என்றார்.

“நாங்க ஏன் பயப்படணும் ? தப்பு செஞ்சா தான் பயப்படணும். “ என்றான் என் வகுப்பு புத்திசாலி மாணவன்.

“அதானே, தப்பு செய்கின்றவன் தான் பயப்படணும்” என்றேன்.

அந்த ஆசிரியர் எரிச்சலுடன் “ நல்ல பிள்ளைங்க.. நல்ல ஹைச்சம்.. ” என காது பட ஏசி விட்டு சென்றார்.

“நல்லவிசயம் யாருக்கு தான் பிடிக்கும் “ என்றேன் நான்.

“சார் ரெம்ப பீல் பண்ணி உடம்ப கெடுத்துகிடாதீங்க ” என்றான் சுமாராக படிக்கும் மாணவன். எல்லோரும் சிரித்தனர்.

பின்பு ஓடி சென்று தங்கள் இஷ்டம் போல் எல்லா ஆசிரியர்களுடனும் கை குலுக்கி, மகிழ்ந்து தாங்கள் அணிந்து வந்திருந்த உடைகளை பிறருடன் காட்டி மகிழ்ந்து கொண்டனர்.

மணி 9. 40 ஆகி விட்டது. அனைவரும் நான் அழைக்காமலே வந்தமர்ந்து, பாரதிதாசனின் பெண்கல்வி குறித்த பாடலான “தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போ என்று சொன்னால் உன் அன்னை” என்று கோரஸாக பாடத் தொடங்கினர்.

எப்போதும் போல் பழைய மாணவர்கள் எங்களை (ஆசிரியர்களை ) பார்க்க வந்தனர். என்னிடம் ஆசிர் வாதம் பெற்று சென்றனர். “சார் எப்பவும் இப்படி தான் பிள்ளைகள் இஷ்டம் போல் ஜாலியா இருக்க விடுவார். டெயிலி விளையாடுகின்றது போலத்தான் தெரியும், ஆனா நிறைய சொல்லி கொடுத்திருக்கார்ன்னு வெளியே போன பின்னாடி தான் புரியுது.. சார் நம்ம பிள்ளைகள் தான் எங்க போனாலும் பஸ்ட். எந்த கேள்விக்கும் பயப்படாம பதில் சொல்லுதுங்க.. நாங்க உங்க பெயரைத்தான் சொல்லுறோம் “ என்றார்கள்.

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்களில் ஒருவர் தன் வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் , தன் வகுப்புக்கு வாழ்த்து சொல்ல வந்த அனைத்து குழந்தைகளுக்கும் சாக்லெட் வாங்கி கொடுத்தார். மதியம் அவர்கள் வகுப்பு முன் இருந்த எல்லா குழந்தைகளுக்கும் சாக்லெட் வழங்கினார்.

என் குழந்தைகளிடம் “என்ன உங்க சார் கொடுத்தார் ?” என அந்த ஆசிரியர் கேட்டு உள்ளார். ”அட போங்க டீச்சர், நேத்து நம்ம மோகன் சார் கிட்ட , நாங்க டீச்சர் டேயை கொண்டாடினோமே , நீங்க என்ன சார் செய்ய போறீங்கன்னு கேட்டான்”

“அதுக்கு அவரு நான் வேணும்ன்னா ஒரு டான்ஸ் ஆடி காட்டுறேன்னு சொல்லி ஆடிக்காட்டுறாரு மிஸ்..” “செம ஜாலி மிஸ்” கோரசாக.
“டான்ஸ்.. தான் ஆடி காட்டினாரா.. ஒண்ணும் தரலீய்யா..” என உசுப்பு ஏத்தி கேட்டுள்ளார்.
“ அதெல்லாம் தானா வரணும் மிஸ்.. உங்க கிளாசில் இருந்திருந்தா ..இந்நேரம் சாக்லெட் கிடைச்சிருக்கும்..” என ஒரு மாணவி ஏக்கத்துடன் கூறி மீண்டும் ஒரு சாக்லெட் பெற்று உள்ளனர்.

” ஆமா உங்க சார், இன்னைக்கு ப்ரேயாரே வைக்கல.. இதுல உங்களுக்கு
பெரிசா வாங்கி கொடுத்திட போறார்...” என அவர் அவர்களிடம் வேண்டுமென்றே வாயை கிளற..
“மிஸ் நாங்க தான் ஜாலியா இருப்போம். இன்னைக்கு ப்ரேயர் வேண்டாம் என சொன்னோம்.” என கத்தியுள்ளனர்.

“ ஆனா மிஸ் ..வகுப்பில ப்ரேயர் வச்சுட்டார் மிஸ்...நாங்க தலைவாரிப்பூச்சூடி ன்னு பாட்டு படிச்சா.. அப்புறம் படிப்போம் வகுப்பு ப்ரேயர் நில்லுன்னுட்டு .. ஆரம்பிச்சுட்டார்“ என்றனர்.

”நீங்க தான் காரணமா.. அதான் நேத்தே எல்லா ஆசிரியர்களும் வகுப்பில் ப்ரேயர் வைச்சு குழந்தைகள் தினத்தை வகுப்பறையில் குழந்தைகள் இஷ்டப்படி நடத்த வேண்டும் என சொல்லிவிட்டாரா “ என
சஸ்பென்ஸ் உடைத்த அதிர்ச்சியில் ஆசிரியர் ஆச்சரியப்பட்டுள்ளார்.

காலையில எல்லா பிள்ளைகள் வகுப்புக்கும் சென்று கை குலுக்கி , ஆடி பாடி ஓடி விளையாண்டதே ரெம்ப சந்தோசம் டீச்சர் என்று விடைப்பெற்றவாரே மதிய வாய்ப்பாடு, சொல்லுவதை எழுதுதல், போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கினர்.

மதியம் ஒன்றாம் வகுப்பு ஆசிரியருடன் நடந்த நிகழ்வை மாலை இடைவேளையில் சொல்லிவிட்டு சிரித்தனர்.
அதில் ஒருவன் “சார் எல்லோரும் மூக்கில விரலை வைக்கிற மாதிரி பொருள் வாங்கி கொடுங்க “ என்றான்.

“ குழந்தைகள் எப்போதும் தங்கள் விருப்பங்களை கூட, பெரியவர்கள் ஆச்சரியப்படும் விதமாக வேண்டுவார்கள் . ஆண்டவனின் சன்னிதானத்தில் ஒலிக்கப்படும் அத்தனையும் வேதங்களே/மந்திரங்களே எனில் குழந்தைகளின் மொழிகள் அத்தனையும் வேதங்களே/ மந்திரங்களே! ”

என் வகுப்பு குழந்தைகளுக்கு திங்கள் அன்று ஏதாவது வாங்கி செல்ல வேண்டும். என்ன தருவது யோசிக்க தொடங்கிவிட்டேன்.

இனி எழுதுவதை தொடர முடியாது.

மதுரை சரவணன்.

Monday, November 10, 2014

பொங்கல் கடையில் கற்றுக்கொண்ட மொழிப் பற்று


மொழி அழிவதை யாராலும் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.
இந்த உண்மையை ரோட்டில் பொங்கல் கடை வைத்திருப்பவர் எனக்கு புரியவைத்து விட்டார்.

இணையத்தில் எப்பொழுதும் மொழி குறித்து விவாதம் நடந்து வருகின்றது. தமிழ் மொழியின் மீது பற்று இருந்தாலும், இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருதம் திணிப்பு என சர்ச்சைகள் வரும் போதெல்லாம், பிற மொழியை கற்பதால் நம் தமிழ் ஏன் அழியும் என யோசிப்பேன். அதன்காரணமாக மொழி சர்ச்சைகள் உள்ள பதிவை மேலோட்டமாகவே படித்து கடந்து இருக்கின்றேன்.

பல மொழி கற்க வேண்டும் அதன் பயனாக நாம் பிறமொழியின் கலாச்சாரம் , தொன்மை, வரலாற்றை அறிய முடியும் என்பதோடு அல்லாமல் , நம் மொழியின் தொன்மையை, பழமையை, புதுமையை, வரலாற்றை, நம் கலாச்சாரத்தை அங்கு எடுத்து சொல்ல முடியும் என்று நினைப்பதாலும் பிற மொழியினை படிக்க கூடாது என்ற கருத்தியலை தவிர்த்து வந்தேன். பிற மொழியினைப் படிப்பது என்பது திணிப்பு என்று திரிப்பதாகவே நினைத்து வந்தேன்.

என் எண்ணம் ,என் சிந்தனை தவறானது என்பதை , ரோட்டில் பொங்கல் கடை வைத்துள்ள நபர் தவிடு பொடி ஆக்கிவிட்டார். வழக்கம் போல் ஏ.ஆர்.ஹாஸ்பிட்டல்(தபால்தந்தி நகர்) அருகில் உள்ள சந்தில் பொங்கல் கடையில் இட்டலி சாப்பிட அமர்ந்தேன். எனக்கான உணவினை சொல்லி, காத்திருந்தேன். எனக்கு எதிர்புறம் இருக்கையில் எல்.கே.ஜி படிக்கும் மாணவனை அவனின் தாயார் அமரச் செய்து , அவனுக்கும் இட்டலி ஆர்டர் செய்தார்.

கடை வைத்திருப்பவர் சௌராஷ்டிரா மொழி பேசுபவர். என் எதிரில் அமர்ந்த பெண் மணியும் அதே மொழியினை சேர்ந்தவர். ஆனால் அவர் தமிழில் தான் பேசினார். ஆனால், கடைக்காரர் மனைவி சௌராஷ்டிரா மொழியில் அவரிடம் பேசினார். நான் எப்போது சென்றாலும் அங்கு தமிழிலேயே பேசுவேன் . அவர்களும் என்னிடம் தமிழில் பேசிவந்தனர்.
இங்கு ஒன்றை முக்கியமாக சொல்லியாக வேண்டும் எனக்கு சரளமாக சௌராஷ்டிரா பேசத் தெரியும்.

அப்பெண்மணி என்னைப்பார்த்தார். பின் மகனிடம் சௌராஷ்டிரா மொழியில் பேசினார்.

தம்பி மழை வருகின்றது. வேகமாக சாப்பிடு. இல்லை என்றால் எதிர் வீட்டில் உள்ள கிழவி நம்மை பிடித்து கொள்ளும் என்றார். ( ரோட்டின் அந்தபுறம் எதிரில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள் இருந்தன) .சிறிதளவு பிய்த்த இட்டலியை சாப்பிட வெகு நேரம் ஆக்கினான்.

அவன் சாப்பிட்டு கொண்டே என்னைப்பார்த்தான். அருகில் இருந்த டம்பளர் நீர் கொட்ட போனது. நான் பதறி அவனிடம் பனி லுச்சன் சாரஸ் என்றேன். (தண்ணீர் கொட்டப்போகிறது) அவன் சிரித்து கொண்டே கைகளை தள்ளி வைத்தான். இப்போது அவனின் அம்மா தம்பி தண்ணியை தள்ளி வை என்றார். அவன் அவனது அம்மாவை பார்த்தான்.

நான் அவனிடம் சௌராஷ்டிரா மொழியில் மழை வருகின்றது (திறந்த வெளி ரோட்டுக்கடை ) வேகமாக சாப்பிடு நனைந்துவிடுவாய் என்றேன். இப்படியாக அவன் மொழியில் அவனிடம் பேசினேன்.

கடைக்கார பெண்மணி அப்போது, “யார் சௌராஷ்டிரா என தெரியவில்லை. யாரிடமும் பேசினாலும் தப்பாகி விடுமோ என பேசுவதில்லை “ என என்னிடம் தெரிவித்தார். (தமிழில் )

எதிரில் உள்ள பெண்மணி இப்போது சௌராஷ்டிராவில் பேசினார்.
“நம்(சௌராஷ்டிரா மக்கள் ) மத்தியில் தமிழ் மொழி பேசுபவர்கள் இருக்கும் போது நம் மொழியை பேசினால், ஏதோ அவர்களுக்கு தெரியாமல் ரகசியம் பேசுவதாக நினைக்கின்றார்கள். மேலும் புரோக்கர்( இடம், பொண், பொருள் ) தொழில் செய்வதால் நாம் அவர்களுக்கு தெரியாமல் , கமிசன் வைக்க பார்க்கின்றோம் என நினைக்கின்றார்கள் என்றார்.

உடனே கடைக்காரர், “ ஏன் நாம் நம் மொழியினை பேசுவதை தவிர்க்க வேண்டும். இப்படியே நீங்கள் பேசுவதை தவிர்ப்பதால் நம் மொழி அழிந்து வருகின்றது. நாம் நம் தாய்மொழியை பிறருக்காக பேசாமல் இருந்தால் நாளை நம் சந்ததியினர் சௌராஷ்டிரா என்ற மொழி இருந்ததா என கேட்க நேரிடும். பேசினால் தான் ஒரு மொழி வளரும். தமிழ் பேசினால் தமிழ் தான் வளரும். “ என சௌராஷ்டிரா மொழியில் அவரிடம் பேசினார்.

அதற்கு அப்பெண்மணி, “ இவன் படிக்கும் பள்ளியில் உள்ள மிஸ், இவனிடம் தமிழில் பேசுங்கள். அப்பதான் அவன் என்ன சொல்றான் என்பது எங்களுக்கு புரியும். அவன் சொல்வது எங்களுக்கு புரிய மாட்டேன் கிறது என்கிறார்கள் . அதனாலே இவனிடம் வீட்டில் கூட பல சமயங்களில் தமிழ் பேசுகின்றேன். என்ன செய்ய ? ” என அவரிடம் சௌராஷ்டிரா மொழியில் பேசினார்.

“இப்படியே நீங்கள் கல்விக்காக, தொழிலுக்காக , என ஒவ்வொன்றிற்காக பேசுவதை தவிர்த்தால், நம் மொழி நாளடைவில் இல்லாமல் ஆகிவிடும். யார் சௌராஷ்டிரா என அறியாமல் செய்து விடப்போகின்றீகள். அதனால் எப்பவும் நம் ஜனங்கள் இருக்கும் போது நம் தாய் மொழியிலேயே பேசுங்கள். அது நம் மொழி அழிவதை தவிர்க்கும் “ என்றார். (சௌராஷ்டிரா மொழியில்)

“இப்ப பாருங்க. இவர் சௌராஷ்டிரா என்பது இவர் பேசும்போது தான் தெரிகிறது. (இதனை அப்பெண்மணி சொல்லும் போது 6ம் வகுப்பில் வெளிநாடு கடற்பயணம் செய்த கணவன் நாகர் இனத்தவரிடம் இருந்து தப்பி வந்த கதை தான் நினைவில் வந்தது. ஏனெனில் நான் கேட்காமலே சாம்பர் சட்டி கூடுதலாக வைத்துக்கொண்டே பேசினார்). அன்று அப்படி தான் நான் கருப்பாக ஒருவர் வந்தார். அவரிடம் நான் தமிழில் பேசினேன். என்னை எல்லாம் பார்த்தால் சௌராஷ்டிரா மாதிரி தெரியலைய்யா என கோபப்பட்டார். இப்படி நம் மொழி மீது பற்று கொண்டவர்கள் அதிகம் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் இல்லை என்றால் சௌராஷ்டிரா மொழி அழிந்து தான் போகும். ஆகவே பள்ளியில் சொல்கிறார்கள் என தமிழில் பேசினால் உங்கள் மகன் நம் மொழியினை மறந்துவிடுவான் “ என்றார். (சௌராஷ்டிராவில் பேசினார்)

“என்ன செய்ய, நாம் தமிழை நம் பிள்ளைகளுக்கு கற்று தரவேண்டும் . அவர்களும் படித்து நான்கு எழுத்து தெரியவேண்டும் அல்லவா” என்றார் அப்பையனின் தாயார். (சௌராஷ்டிராவில்)

“ இப்படிவேறு மொழி படிக்கின்றேன் என நம் மொழியினை மறந்து போகின்றீர்கள். இப்பொழுத்தெல்லாம் சௌராஷ்டிரா பேசுவதை தவிர்க்கின்றீர்கள் . தமிழில் பேசுகிறீர்கள் இது தமிழ் மொழி திணிப்பு மாதிரி படுகிறது “ என்றார்.

“நாம் பிற மொழி பேசுவது அதனை படிப்பது எப்படி அம்மொழியின் திணிப்பாக முடியும் ? “ என கேள்வி எழுப்பினேன். (சௌராஷ்டிராவில்)

“ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாம் இந்த பத்து நிமிடத்தில் தமிழில் மட்டும் பேசினால், நமக்கு சௌராஷ்டிரா மொழி குறித்த சிந்தனை அறிவு மறைந்து போகும். நாம் வார்த்தைகளை பேசுவதற்கு தமிழில் தான் தேடுவோம். அப்போது நம் மொழிகுறித்த அறிவு இங்கு பயன்படாது. ஆரம்பத்தில் சமமான வார்த்தைகளை நம் தாய்மொழியில் தேடுவோம். நாளடைவில் அதற்கு அவசியம் ஏற்பாடாது. நம் தாய்மொழி சிந்தனை அறவே மற்ந்து போகும். இது ஒருவிதத்தில் மறைமுகமான திணிப்பு தான்” என்றார். (சௌராஷ்டிராவில்)

“ஆமாம். என் மகன் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசுவதால்,வீட்டிலும் சில பொருட்களை தமிழிலேயே கேட்கின்றான். இது நம் மொழி அழிவுக்கு காரணமாகவும் படுகின்றது. திணிப்புமாகி விடுகின்றது ” என்றார் அப்பையனின் பெண்மணி.

“அதற்காக தமிழ் படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. எப்போதும் நம் ஆட்கள் மத்தியில் வீட்டில் தாய்மொழியிலேயே பேசவேண்டும் “ என்றார். (சௌராஷ்டிராவில்)
அதற்குள் மழை வலுத்துவிட்டது. நான் சாப்பிட்டதற்கான தொகையை கொடுத்து வேகமாக வண்டியை எடுத்தேன்.

ஒருமொழியினை படிக்க சொல்வது. அதனை குறித்து பேசுவதை பிற மொழியினை மறக்க செய்யும் என்பது இப்போது உண்மை என புரிய வருகின்றது. ஆகவே நாம் எந்த இடத்தில் இருந்தாலும், நம் தாய்மொழி தமிழில் பேசுவோம். பிற மொழி கற்றுக்கொண்டாலும் பேசுவதை எழுதுவதை விட்டுவிட வேண்டாம்.

நம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது. நமக்கு கற்றுக் கொடுக்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதில் சிறியவர் பெரியவர், பெட்டிக்கடைக்காரர், தள்ளுவண்டி காரர், விற்பன்னர், மருத்துவர் , ஆசிரியர், பேராசிரியர் என பேதம் இல்லை.

கடைசியில் அந்த சிறுவனிடம், “ மழை வருகின்றது ,வீட்டிற்கு வேகமாக செல் . நனைந்துவிடாதே “ என தமிழில் கூறி வந்தேன்.

மதுரை சரவணன்.

Friday, October 24, 2014

பெட்டிக்கடை

எப்பொழுதும் பெட்டிக்கடைகள் வார இதழ்கள் படிப்பதற்கான இடமாக மட்டுமல்லாமல், பல நண்பர்களை தரும் இடமாகவும் உள்ளது. நம்மை உயர்த்துவதற்கான இடமாகவும், பல தொடர்புகளை ஏற்படுத்தி தரும் தளமாகவும் இருப்பதை உணர்கின்றேன்.

பெருமழையில் ஒதுங்கிய போது தான் எனக்கும் பெட்டிக்கடைக்குமான நட்பு மலர ஆரம்பித்தது. மதுரை, திணமனி தியேட்டர் சந்திப்பு பகுதியில் பல கடைகள் உள்ளன. இட்லிக்கடை, புரோட்டாக்கடை, பொங்கல் கடை, பூக்கடை, இவற்றுடன் பல பெட்டிக்கடைகளும் உள்ளன. ரவி பெட்டிக்கடை என்றால் தனிக்கூட்டம் உண்டு.கல்லூரி நாளில் புத்தகங்களின் மீது கொண்ட காதலில் தொடங்கியது தான் பெட்டிக்கடை சிநேகம். முத்தாரம் ,ராணி, ஆனந்தவிகடன், குமுதம், துக்ளக், ஜீனியர்விகடன் என பல இதழ்களை அறிமுகப்படுத்திய இடம் தான் பெட்டிக்கடை.

நூலகங்கள் செல்வதற்கு வெகுதொலைவு பயணிக்க வேண்டும். அதே வேளையில் நூலகத்தில் எந்த நேரத்திலும் சென்று படிக்க முடியாது. காலவரையறை உண்டு. ஆனால் , பெட்டிக்கடை அப்படி அல்ல. பெட்டிக்கடை வைத்துள்ள நண்பர்களுடன் கொஞ்சம் பேசினால் போதும், கடை நமக்கானதாகி விடும். எந்நேரமானாலும் நமக்கு வேண்டிய புத்தகங்களை படிக்கலாம். ஆனால் , அவர்கள் எல்லோரிடமும் அவ்வளவு எளிதாக பழகி விடுவதில்லை. அதேவேளையில் அவர்கள் நண்பர்களாகிவிட்டால்,நம்மை எளிதில் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. ரவியுடனான உறவு சிறிய டீயில் தான் ஆரம்பித்தது. ஆனால் இன்று ஆலமரமாக விரிந்து பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

திருமணமாகி வீடு மாறிய பின்பு பெட்டிக்கடைகள் நட்பு விரிந்துள்ளது. பெட்டிக்கடைகள் என்னை மட்டும் நட்பாக்கி கொள்ள வில்லை. தன்னோடு நட்பாகி உள்ள அனைவரையும் நமக்கு தந்துவிடுகின்றன. சிறிது நேரம் நாம் செய்திதாளை விரித்து படித்துக்கொண்டிருக்கையில் , அங்கு சிக்ரெட், பாக்கு, கூல்டிரிங்க்ஸ் மற்றும் பத்திரிக்கைகள் வாங்கும் டாக்டர், இன்ஞிநியர்கள், வக்கில்கள்,ஆசிரியர்கள்,அரசியல் வாதிகள் மற்றும் பலத்தரப்பட்ட தொழில் புரிவோரை நமக்கு நட்பாக தந்துவிடுகின்றது. சிறிய புன்னகையுடன் ஆரம்பிக்கு இந்த அறிமுகம் நாளடைவில் பெரிய நட்பாக மாறவும் வாய் ப்பு உள்ளது. வியபாரிகள் பொருத்தவரையில் இந்நட்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

மாவட்ட நீதிமன்றம் எதிரில், திணமனி தியோட்டர் அருகில், சௌராஷ்டிரா பள்ளி அருகில் , அம்மா மெஸ் எதிரில், அய்யர் பங்களா கார்னர், புதூர் பிடிஆர் அருகில், எஸ்.இ.வி பள்ளி எதிர்புறம், அவுட் போஸ்ட், ஆத்திக்குளம் கார்னர்  என பெட்டிகடையின் நட்பு விரிந்து கொண்டே செல்கின்றன.

எங்காவது நாம் நின்று பேசும்போது, எவராவது நம்மை பார்த்து புன்னகையை மலர விட்டால், நாம் புன்னகையை பதிலுக்கு அளிப்பதுடன் ,சிறிய யோசனையுடன் யார் என யோசிக்கும் நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். பின் நாம் யோசித்து யோசித்து கொண்டு வர முயற்சி செய்து பல சமயங்களில் தோல்வியில் , தெரிந்த யாரோ ஒருவர் என முடிவுக்கு வந்துவிடுவோம். அதே நாளில் எதாவது ஒருபெட்டிக்கடையில் நாம் மீண்டும் பார்க்கையில் நினைவுக்கு வந்து அவர் பெயரை கேட்டு, நலம் விசாரிக்கும் போது நட்பு இன்னும் பலம் பெற்றுவிடுகின்றது.

அப்படிதான் இன்று மாலை ஆத்திக்குளம் பகுதியில் நண்பனுக்காக காத்திருந்து ஏமாந்த வேளையில் ஆனந்தவிகடன் வாங்க சென்றேன். தீபாவளியை ஒட்டி பெட்டிக்கடையும் மூடிவிட்ட நிலையில், டீ குடிக்க நினைத்து டீ சாப்பிட நினைக்கையில், தெரிந்த முகம் , நினைவுக்கு வர சிரமப்படுத்தியது. அவரும் என்னை பார்த்தது மாதிரி தெரிகின்றது என புன்னகை மலர செய்தார்.

அவரை நினைவுக்கு கொண்டு வந்து நானே அருகில் சென்று, நீங்கள் சூர்யா புத்தக நிலையத்தில் காமிக்ஸ் புத்தகம் வாங்குவீர்களே என்று கூறி, என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். சிரித்தப்படியே, நான் ராஜ் என்றார்.

அவரை முதன் முதலில் சூர்யா புத்தக நிலையத்தில் (அவுட் போஸ்ட் )  பார்த்தப்போது கைநிறைய காமிக்ஸ் புத்தகத்தை வைத்திருந்தார். அந்த தருணம் என் நண்பன் கார்த்திகைப்பாண்டியன் (கா.பா) என் நினைவில் மின்னல் போன்று மின்னிச் சென்றார். ஆம் காமிக்ஸ் கா. பாவுக்கு  மிகவும் பிடித்த ஒன்று. முத்து காமிக்ஸ் புத்தகம் மீண்டும் கொண்டு வருகிறார்கள் என்றவுடன் பைக்கில் சிவகாசிக்கு நேரில் சென்று புத்தகம் வாங்கி வந்தவர். ஒரே நாளில் வாசித்து முடித்ததாக அப்போது கூறினார். காமிக்ஸ் குறித்து கா.பா பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு ப்ரியம்.

நானும் என் வாசிப்பை காமிக்ஸ் மூலமே ஆரம்பித்தேன்.என் நண்பன் ப்ரேம்நாத் உடன் சேர்ந்து வரைந்து நாங்களே தாளில் கதையை உருவாக்கி உள்ளோம். அதனை நண்பர்களுக்கு தனி பிரதியாக கொடுத்து மகிழ்ந்துள்ளேன். அப்போது நான் 10வது  படித்து கொண்டிருந்தேன். ப்ரேம் படிப்பை நிறுத்தி விட்டு பட்டுநூல் தொழிலுக்கு பேய் இருந்தான். ஆனாலும் தீவிர காமிக்ஸ் வாசகன். அவனே எனக்கு எழுதுவதற்கு உந்துதலை தந்தவன். அதன் தொடர்ச்சியாக அப்போது குமுதம், ஆனந்தவிகடனுக்கு கதைகளை அனுப்புவேன். ஒருவருடம் எந்த கதையும் வெளிவரவில்லை என்றவுடன் நாங்களே கையெழுத்து பிரதி ஆரம்பித்தோம். அவன் தன்னுடன் வேலைபார்க்கும் பெண்களிடம் எங்களின் படைப்புகளை கொடுத்து படிக்க சொல்வான். என்னை பாராட்டுவான். ராஜேஸ்குமார் நாவல்களை படிப்பான். சுபா நாவல்களை படிப்பான். சுபா இருவர். அவர்கள் எழுதுவது போல் நாம் சேர்ந்து கதை எழுதினால் என்ன? என்பான். இன்று ப்ரேம் குடும்ப சூழலில் மதுரையில் இல்லை. அப்படி தான் நினைக்கின்றேன். வாழ்க்கை நாம் நினைப்பது போல் நம் கதைகளை வடிப்பதில்லை. அவை அதன் போக்கில் நம்மை வளைத்து கொள்கின்றது. நாமும் நீரோட்டத்தின் போக்கில் செல்வது போல், இழுத்து சொல்லப்படுகின்றோம்.

ராஜ் அவர்களிடம் காமிக்ஸ் ஆர்வம் குறித்து கேட்டேன். சிறுவயது முதல் படித்து வருவதாக சொன்னார். காமிக்ஸ் படங்கள் , அதில் உள்ள வசனங்கள் நமது கற்பனையை தூண்டுபவை. தான் சிறுவயதில் படித்த கதையையும் புத்தகத்தின் பெயரையும் சொல்லி அசத்தினார். போர் குறித்தும், அதில் வீரர்கள் இழப்பு, உணவு பற்றாக்குறை, என காமிக்ஸ் விவரித்தது தனக்கு புது அனுபவத்தை இளமையில் தந்தது என்கின்றார். சமீபத்தில் காமிக்ஸ் கொஞ்சம் பரவாயில்லை. அதற்கு முன் சிறுவர் மலர்களில் காமிக்ஸ் அர்த்தமற்று வந்தது என்றார். காமிக்ஸ்க்கு ஓவியம் மிக முக்கியம். அந்த ஓவியம் பல கற்பனைகளை உருவாக்க வேண்டும் என்றார். ஒரு ப்ரேமுக்கும் மற்றோரு ப்ரேமுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்றார். அதில் அச்சிடப்படும் மொழி முக்கியம் என்றார். அது தான் நம் மொழித்திறனை வளர்க்கும் என்றார். ஆனால் சில வருடங்களுக்கு முன் டிவி க்களை முன் நிறுத்தி தங்கிலீஸில் வெளிவந்தன சிறுவர் மலர் இதழ்கள். அவை நம்மிடம் இருந்த தமிழையும் கொலை செய்தன என்றார். சிறுவர்களை வாசிப்பு அனுபவத்தை விளையச்செய்பவை காமிக்ஸ் என்றார்.

நல்ல சந்திப்பு. என் நண்பன் கா.பா வை நினைவு கூற செய்த நிகழ்வு. அவர் யோக டீச்சர் என்றவுடன் இன்னும் நெருங்கி விட்டோம். இப்படி தான் பெட்டிக்கடைகள் நமக்கு ந்ல்ல உறவுகளை தருகின்றன.

பெட்டிக்கடைகள் புகை பிடிக்கும் அல்லது பீடி சிக்ரெட் விற்கும் இடம் மட்டும் அல்ல . அது தொடர்புகளை உருவாக்கும். தொடர்புகள் தொடரும்.

மதுரை சரவணன். 

Tuesday, October 21, 2014

கசக்கிறது தீபாவளி.!


மண் அதிர
புகை கக்கி 
வானத்தில் தீப்பிழம்பு தெரிய
காதுகளை செவிடாக்குமளவுக்கு
ஓசை ...
வெடிக்கிறார்கள் என்கிறார்கள்.
இதயம் பதறுகிறது
இப்படியாக..
இரத்தம் சிதறி
மண்டை பிளந்து
மூளை வெளிவர
சிதறிய இரத்தம்
முகத்தில் தெறித்த மாத்திரம்
அதிர்ச்சியில் மரணம்
நூறாக ..
வெடித்து சிதறிய பிண்டம்
ஆயிரமாக
எல்லாம் கண்முன் கோரக்காட்சியாக கிடக்க
பித்த நிலையில்
மற்றுமோர் பத்தாயிரம்
இதயம் பதறுகிறது
இப்படியாக இருக்ககூடாது..
வெடிப்பது தவறுதான்
தீபாவளியாக இருந்தாலும்
நிலத்தை இழந்தவன்
உடல் இன்னும் அதிர்ச்சியுற்று
அதிர்வுறுகிறதே...!
மதுரை சரவணன்.

காதல் கவிதை

முழுநிலவு
--------------------
உயரத்திலிருந்து பறக்கும் பருந்தின் கண்கள்
கூர்மையாக்கி கொத்தக் காத்திருக்கின்றன
என்னைப்போலவே...
பார்வை வேறுயெங்கும் இல்லை
என்பதறிந்தும் ரசிக்கின்றாய்
கண்டும் காணாதும்...
கடல் அலையின் இடைவிடா மோதல்
தொடர்ந்து கரையை முட்டிக்கொண்டிருக்கின்றது
கரைக்கும் அலைக்குமான விளையாட்டாய்
நம் பார்வை
ஏழு வகுப்புகள் கடந்தும் ஏழு தோழனை எதிரியாக்கியும்
எதிரியாய் இருக்கும் உன் சகோதரனை நண்பனாக்கியும்
உன் தாய்க்கு பலசரக்கு வாங்கி கொடுத்தும்
உன் தந்தைக்கு பல சரக்குகள் வாங்கி கொடுத்தும்
சிந்துபாத் கதைகளை விட கடுமையான இடர்பாடுகளை
கடந்து எப்போதும் உன்னோடு இருக்கும்
எந்தன் உயிர் உன் இதழ் விரிகையில் பறக்கிறது
அள்ளிக்கொள்கின்றாய் சொல்லிக்கொள்ளாமலே.
கதவு தட்டும் சத்தம் கேட்கின்றது
திறக்கின்றேன் இரவின்
வானத்தில் நட்சத்திரங்களுக்கு மத்தியில்
முழுநிலவாய் நீ.
மதுரை சரவணன்.

Wednesday, October 1, 2014

மதுரையும் காந்தியும் - சிறப்புக்கட்டுரை


காந்தியடிகள் மதுரைக்கு ஐந்துமுறை வருகைப்புரிந்துள்ளார். 

முதல்முறையாக 1919 மார்ச் மாதம் 26ம் தேதி ரௌலட் சத்தியாகிரகத்திற்கு ஆதரவாக மதுரைக்கு வந்தார். ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் தங்கினார். பின் மதுரை கல்லூரித்திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடினார். அவரது உரையை T.S.S.ராஜன் தமிழில் மொழிப்பெயர்த்தார். அந்தக்கூட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைப்பெற்ற சத்யாகிரகப் போராட்டத்தில் பங்குபெற்ற நாகப்பன் குறித்தும், தெனாப்பிரிக்காவில் நடைப்பெற்ற சத்யாகிரகத்தில் ஈடுப்பட்டதற்கு சிறைத்தண்டனை பெற்று தனது 16வது வயதில் உயிர் நீத்த தமிழ்பெண் நாகலெட்சுமி அம்மாள் அவர்களின் தியாகம் குறித்தும் காந்தியடிகள் பேசினார்.

இரண்டாவது முறையாக ஒத்துழையாமை நடைப்பெற்று கொண்டிருந்த போது வருகைப்புரிந்தார். 1921 செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து டேர் நம்பர் 251 –ஏ, ராம்ஜி கல்யாண் ஜி என்பவரது இல்லத்தில் தங்கினார். மறுநாள் (செப்டம்பர் 23) காலை காந்தியடிகளின் உடையில் பெரும்மாற்றம் ஏற்பட்டது. சட்டை மற்றும் தலையில் சுற்றிக்கொள்ளும் ஆடை ஆகியவற்றை நீக்கிவிட்டு இடுப்பளவு மட்டும் உடை அணிந்து வந்தார். ஏழை மக்கள் மிகுதியாக உள்ள இந்தியாவில், அனைவரும் அணிவதற்கு போதிய ஆடை இல்லாததால், தான் இடுப்பளவு மட்டும் ஆடை அணியப்போவதாக கூறினார். இடுப்பளவு ஆடை மட்டும் அணிந்து சௌராஷ்டிரா மக்களது கூட்டத்தில் உரையாற்றினார். அவர் உரையாற்றிய இடம் இந்நாளில் அலங்கார் திரையரங்கு அருகில் காந்தி சிலையுடன் காந்தி திடல் என்று அழைக்கப்படுகிறது.

மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி, “கதராடை அணிந்து சுதேசி இயக்கத்தை வலுப்படுத்தினால்தான் சுயராஜ்ஜியம் பெற முடியும்” என்று மக்களிடம் பேசினார்.

கதரியக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு நாட்டின் பலப்பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 1927 செப்டம்பர் 28ம் நாள் மதுரைக்கு மூன்றாவது முறையாக வருகைபுரிந்தார்.  T.C.செல்வம் அய்யங்கார் தனது கையால் நூற்ற அழகிய மூன்று நெசவு கதர்துணிகளை காந்திக்கு வழங்கி வரவேற்றார். அன்று பேசிய பொதுக்கூட்டத்தில் மதுரை பள்ளிகளில் மாணவர்களின் நூல் நூற்றல் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்று கூறி மதுரை நகராட்சியை பாராட்டினார். அன்று இரவு ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் தங்கினார்.

மாரியம்மன் தெப்பக்குளத்தின் கீழ்புறம் அமைந்துள்ள சௌராஷ்டிரா கிளப்பில் 1927 செப்டம்பர் 29ல் காந்தியடிகள் உரையாற்றினார். சௌராஷ்டிரா சமூகத்தினர் கதர் நிதியாக ரூ 3669/- நன்கொடையை காந்தியிடம் வழங்கினர். கூட்டத்தில் கலந்து கொண்ட சௌராஷ்டிரா மகளிர் பலர் தங்களது தங்க அணிகலன்களையும் காந்தியிடம் அன்பளிப்பாக வழங்கினர்.

1927 செப்டம்பர் 30ல் மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தி உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு மதுரை மகளீர்கள் ஏரளமாக கூடினர்.  மதுரை மக்கள் கதர் நிதிக்கென வழங்கிய நன்கொடை ரூ13,472/- மகாத்மா காந்தியிடம் வழங்கப்பட்டது. இப்பெரும் நிதியை திரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர் திரு A. வேதராம ஐயர் ஆவார். மதுரையில் மகளிரின் கதர் நிதையைப் பெருமளவு பெற ஜார்ஜ் ஜோசப்பின் துணைவியார் திருமதி சூசன் ஜோசப் முயற்சி செய்தார். மதுரை மகளிரால் கதர் நிதிக்கு வழங்கப்பட்ட தொகை சென்னை நகரையும் ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடதக்கது.

 மகாத்மா காந்தி நான்காவது முறையாக 1934 ஜனவரியில் வருகைப்புரிந்தார். ஜனவரி  25, 26 என இரண்டு நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். இம்முறை என்.எம்.ஆர் சுப்புராமன் இல்லத்தில் தங்கினார்.

        1934 ஜனவரி 26 மதுரை சேதுபதி பள்ளியில் நடைப்பெற்ற கூட்டத்தில், அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, சேதுபதிஉயர்நிலைப்பள்ளி, மதுரைக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி மதுரை கல்லூரியில்படித்த மாணவர்கள் , அரிசன நிதியை திரட்டி காந்தியிடம் வழங்கினர். அரிசன மாணவர்களைத் தங்களது சகோதரர் போல் நடத்த வேண்டும் என்றும் சேரிகளில் வாழும் அரிசன குழந்தைகளின் ஆடைகள் சுத்தமாக இருக்க உதவி செய்யுமாறும் இக்கூட்டத்தில் காந்தியடிகள் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.              

    அதேநாளில், மேலமாசி வீதியில் அமைந்துள்ள சந்திரா திரையரங்கில் நடைபெற்ற மகளீர் கூட்டத்தில் நாட்டுப்பற்று மிக்க பெண்கள் பலர், தங்களது தங்க அணிகலன்களை அரிசன நிதிக்காக மகாத்மா காந்தியிடமும் அவருடன் வருகைபுரிந்த ஆங்கிலேய பெண்மணியான மீரா பென் அம்மையாரிடமும் வழங்கினர். அன்று மதுரை சேரிகளை பார்வையிட்டார். அதன் பின் முனிச்சாலை பகுதியிலுள்ள மணல்மேட்டில் பேசினார். தீண்டாமை நமது நாட்டிலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும் என்று கூறினார். தான் பொதுமக்களிடம் பெற்ற அரிசன நிதியிலிருந்து ஒரு தொகையை மதுரை அரிசன மக்கள் நலனுக்காக வழங்கினார்.

 1934 சனவரி 26ல் விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ,“தீண்டாமை ஒரு பாவச்செயல் , அதை நமது சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும்” என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டார். அக்கூட்டத்தில் அரிசன மக்கள் நலனில் மிகுந்த ஆர்வமுடைய ச். தாயம்மாள் மகாத்மா காந்தியிடம் விலையுயர்ந்த பரிசுபொருட்களை அரிசனநல நிதிக்காக வழங்கினார்.

ஐந்தாவது முறையாக காந்தியடிகள் 1946 பிப்ரவரி 2ம் தேதி மதுரை 
வந்தார். அன்று மாலை பந்தயத்திடலில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அன்று இரவு பனகல் மன்னர் கட்டிடத்தில் (இன்றைய அரசினர் மீனாட்சி மகளீர் கல்லூரி ) தங்கினார். மறுநாள் பிப்ரவரி 3ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். “எனது மனதிலிருந்து நீண்டநாள் ஆவல் இன்று நிறைவேறியது குறித்து நான் மிக்க மகிழ்வடைகிறேன்” என்று மீனாட்சி அம்மன் கோவிலின் பார்வையாளர் ஏட்டில் மகாத்மா காந்தி குறிப்பிட்டார். V.I. முனிசாமி பிள்ளை, கே.காமராஜ், தக்கர் பாபா மற்றும் பலர் மகாத்மா காந்தியுடன் கோவிலி வழிபட சென்றனர். 1939 சூலை  8 முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அரிசன மக்களின் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்ட சிறப்பு மிக்க நிகழ்வுக்கு மதுரை மக்களைப் பாராட்டவே ஐந்தாவது முறையாக மதுரைக்கு மகாத்மா காந்தியடிகள் வருகைப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சரவணன். தலைமையாசிரியர்
மதுரை 9.
செல் 9344124572

(இக்கட்டுரை அக்டோபர் மாத மாணவர் உலகம் இதழில் வெளிவந்துள்ளது. )   

Monday, September 22, 2014

புத்தக விமர்சனம்.

’என் முதல் ஆசிரியர்’ – சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய ரஷ்ய மொழி குறுநாவல். இதை தமிழில் பூ. சோமசுந்தரம் என்பவர் மொழி பெயர்த்துள்ளார். புரட்சிக்கு பிந்தைய சோவியத் சமுதக்த்தில் குர்க்குரீ என்ற கிராமத்திற்கு வரும் துய்ஷேன், கல்வியறிவு இல்லா கிராமத்தில் தனிமனிதனாக பள்ளிக்கூடம் தொடங்கப் போராடுகிறார். அம்மக்களின் கேலிகளையும் புறக்கணிப்புகளையும் தாங்கிக் கொண்டு, அக்கிராமத்தின் நிலப்பிரபுக்கள் காலி செய்து விட்டுப்போன குதிரைக் கொட்டடியில் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கின்றார்.
    எந்த படிப்பறிவு வாசனையும் இல்லாத அக்கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை வேண்டா வெறுப்பாகவே அனுப்பி வைக்கின்றனர். துய்ஷேன் பள்ளியை ஆரம்பிப்பதற்காக வீடுவீடாக சென்று குழந்தைகளை தூக்கி வருகின்றார். அப்படி அப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டவர் தான் இக்குறுநாவலின் நாயகி அல்டினாய்.


    தாய்-தந்தை இருவரையும் இழந்து அநாதையாகிவிட்ட இளம் சிறுமி அல்டினாய், அவளது சித்தியால் கொடுமைப்படுத்தப்படுகிறாள். அல்டினாய் பள்ளிக்கு செல்வதை அவள் விரும்பவில்லை. அவளுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்கின்றார். சித்தியை மீறி அல்டினாய் படிப்பை தொடர துய்ஷேன் என்ன உதவி செய்தார் என்பதை மிகவும் பரபரப்போடு ஆழ்ந்த துக்கத்துடன் கதை விவரிக்கிறது.
அல்டினாயின் முதல் ஆசிரியர் துய்ஷேன், முறையான ஆசிரியர் பயிற்சி பெற்றவர் அல்ல. அவருக்கு இலக்கணம் தெரியாது. பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையும் தெரியாது. ஆனால் அவரால் ஆரம்ப எழுத்தறிவைக் கற்றுத்தர முடிந்தது.  
   அவரால் அல்டினாய் போல் பல பிள்ளைகளுக்கு  ஒரு புத்தகமும் இல்லாமல், சாதரண பாலப்பாடகப் புத்தகம் கூட இல்லாமல், குழந்தைகளுக்கு கற்றுத்தர முடிந்தது. அந்த குழந்தைகளால் அவரின் மண் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு புதிய ஆச்சரியமான உலகத்தை பார்க்க முடிந்தது.
காலத்திற்கும் மாறாத வசனங்கள் இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ளன.
“துய்ஷேன் டீச்சரா கட்டைச் சுமந்து செல்கிறார்?”
“அவனே தான்”
“பாவம் , ஆசிரியர் வேலைகூட சுலபமானது இல்லை போலிருக்கிறது “
“நீ என்ன நினைத்தாய்? பார், கொத்தடிமைக்கு எந்த விதத்திலும் குறையாமல் எவ்வளவு சுமக்கிறான்”
மாணவர்கள் ஆசிரியர் உறவை மிகவும் அருமையாக இக்குறுநாவல் எடுத்துரைக்கிறது. ஆசிரியர் மூன்று நாட்கள் விடுப்பு எடுக்கிறார். அவர் வரும் நாளுக்காகக மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.இன்றும் நல்லாசிரியர்களுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அல்டினாய் அவளுடைய ஆசிரியருக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் அவஸ்தையை இவ்வரிகள் நமக்கு எடுத்துரைக்கும்.
“எங்கே ஆசிரியரே, எங்கே உங்களைக் காணோம்? உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தாமதப்படுத்தாதீர்கள், விரைவில் திரும்பி வாருங்கள். நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றோம். புரிகின்றதா? ஆனால் ஓர் ஆள் கூட தென்படவில்லை”    
குர்க்குரீ கிராமத்துப்பண்ணை விவசாயிகள் சேர்ந்து கட்டிய புதிய பள்ளிக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்காக அந்தக் கிராமத்தின் முதல் ஆசிரியரும், முதல் கம்யூனிஸ்டுமான துய்ஷன் அழைக்கப்பட்டு பெருமையும் , கவுரவத்தையும் அடைந்திருக்குமாறு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாசுமருவற்ற பொன் போன்ற அந்த அம்மனிதர் வாழ்த்துத் தந்திகளை விழாவிலிருந்தவர்களிடம் சேர்ப்பதற்காகச் சிரமப்பட்டு சவாரி செய்கிறார். மற்ற தந்திகளைக் கொடுப்பதற்காகவும் அவர் போய் கொண்டிருக்கிறார். இதுமாதிரியான சம்பவங்களை நாம் தினமும் எதிர்கொள்ளவே செய்கிறோம். ஆகையினால்தான் குறநாவலின் நாயகி அல்டினாய் எழுப்புகிற இந்த கேள்வியை நமது இதயமும் வேதனைப் பெருமூச்சினிடையே எதிரொலிக்கிறது என இக்குறுநாவலுக்கு முன்னுரை எழுதிய கமலாலயன் கூறுகிறார்.

கிராமத்து பள்ளிக் கட்டிடத்திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் கல்வித்துறை அறிஞர் அல்டினாய் , விழாவிலிருந்து உடனடியாக இரயில் ஏறி சென்றுவிடுகின்றார். அதன்பின் அவ்விழாவில் கலந்து கொண்ட இலக்கிய படைப்பாளியும் ஓவியருமான இளைஞருக்கு எழுதும் கடிதத்தினால்  வாரலாறாக வளர்ந்து நிறைவு பெறுகிறது இந்நாவல்.

ஆசிரியர்கள் இச்சமுகமாற்றத்திற்கு எவ்வளவு பாடுபடுகின்றனர் என்பதையும், அவர்களுக்கு உரிய மதிப்பு எப்போதும் அளிக்கப்படுவதில்லை என்பதையும் ’முதல் ஆசிரியர்‘ மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்நாவல் காலத்தால் முற்பட்டாலும் இளம் வயது திருமணம் என்பது இன்றும் தொடர்கதையாக வருகின்றது என்ற வகையில் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் ஆகும்.
வெளியீடு : புக் பார் சில்ட்ரன்
விற்பனை உரிமை: பாரதிபுத்தகாலயம்
விலை. 40/-

Saturday, September 20, 2014

அணிலும் மாயமாய் மறையும் குதிரையும்- சிறுவர்களுக்கான கதை


பள்ளி முடிந்து வந்த முகிலன், வீட்டில் தன் அக்கா அகிலா இல்லாததால், அவளைத் தேடிக்கொண்டு சென்றான். எப்போதும் விளையாடும் அந்த புங்கைமரத்தடியில் தேடினான். அவள் அங்கு இல்லை. அம்மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த ராகவனிடம் தன் அக்காவை பற்றி விசாரித்தான். அகிலா அடுத்த தெருவில் வசிக்கும் ரேகாவிடம் பாரதியார் பற்றிய புத்தகம் பெற்றுவர சென்றிருப்பதாக கூறினான். 
முகிலன் வேகமாக தன் அக்காவைத் தேடி அடுத்த தெருவிற்கு ஓடினான்.

அவன் சிறிது தூரம் நகர்ந்து இருப்பான். அவனை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தான். ஓட்டத்தை தளர்த்தி நின்று திரும்பி பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை யாரும் தென்படவில்லை. ஏன் அப்படி எண்ணத்தோன்றியது என்றபடி நடந்தான். 

அவனுக்கு முன்னால் விரைந்து ஓடிய அணில், அவனை திரும்பி பார்த்தது. “என்ன முகிலா, நின்றுவிட்டாய், மூச்சு திணறுகிறதா ? “ என்றது. 

முகிலன் குரல் மட்டும் கேட்கிறது யாரும் இல்லையே என பயந்தான். முகிலா பயப்படாதே , நான் தான் அணில் பேசுகின்றேன் என்றது. தனக்கு முன்னால் நிற்கும் அணிலை பார்த்து ஆச்சரியப்பட்டான். உனக்கு பேசத்தெரியுமா? என்று கேட்டான். ஏன் தெரியாது? தினமும் நீங்கள் புங்கை மரத்தடியில் இருந்து விளையாடும் போதும் , அம்மரத்தடியில் இருந்து கதைகள் கூறும் போதும் நான் கேட்டு இருக்கின்றேன். உங்களிடம் இருந்து நான் பேசக்கற்றுக்கொண்டேன் என்றது அணில்.

அப்படியானால் நீ தான் என்னை பின் தொடர்ந்தாயா? என்றான் முகிலன். ஆம் என்றது அணில். ஏன் நீ என்னுடன் ஓடி வருகிறாய்? என கேட்டான் முகிலன். நீண்ட நாட்களாக பாரதியார் பற்றி அறிந்து கொள்ள ஆசை. உன் அக்கா பாரதியார் பற்றி புத்தகம் வாங்கி வருவதாக கேள்வி பட்டேன் அதான் உன்னை பின் தொடர்ந்தேன் என்றது அணில். 

பாரதி பற்றி உனக்கு தெரியுமா? என்றான் முகிலன். அதான் நீங்கள் அடிக்கடி ஓடி விளையாடு பாப்பா என பாடியபடி அந்த மரத்தை சுற்றி விளையாடுவீர்களே அப்போது இருந்தே அவர் யார் என அறிந்து கொள்ள ஆசை என்றது அணில். 

சரி வா அக்காவிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என இருவரும் ரேகா வீட்டை நோக்கி ஓடினார்கள்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று கூறிய பாரதி, சமஸ்கிருதம், பிரான்ஸ், வங்காளம், இந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று திகழ்ந்துள்ளார் என்றாள் அகிலா. தூரத்தில் தனியாக பேசிக்கொண்டு வரும் முகிலனை பார்த்ததும் ரேகா, அகிலாவின் பேச்சை நிறுதி, “ அகிலா உன் தம்பி தானாக பேசிக்கொண்டு வருகின்றான் அங்கே பார்” என்றாள்.

என்னடா, நீயா பேசிகிட்டே வருகிறாய்? என்றாள் அகிலா. அக்கா நானா பேச வில்லை. இதோ இந்த அணிலுடன் தான் பேசிகிட்டு வருகின்றேன் என்றான். என்ன அணில் பேசுகிறதா என இருவரும் ஒருசேர கேட்டனர். ஆமாம் , நான் தான் அணில் பேசுகின்றேன் என்றது அணில். ஆச்சரியமாக பார்த்தனர். நம்ம கதையை நாம் பேசலாம். பாரதியார் பற்றி புத்தகத்தில் படித்து சொல்லுங்கள் என்றது அணில். ஓ பாரதி பற்றி தெரியணுமா? என கேட்டாள் ரேகா.

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும் என வாசிக்க தொடங்கினாள் அகிலா.

நான் ஒண்ணும் புத்தகத்தை வரிக்கு வரி வாசித்து காட்டச் சொல்லவில்லை. அவரை பற்றி சுவரசியமான தகவல் இருந்தால் சொல்லுங்கள் என்றேன் என்றது அணில். ஓ உனக்கு புத்தகம் படிக்க தெரியுமா? என கேட்டாள் ரேகா. ஏன் தெரியாது? உங்களிடம் இருந்து பேசக்கற்ற நான் , வாசிக்கவும் கற்றுக் கொண்டேன் என்றது அணில்.

“வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர். பாரதி “ என்றாள் ரேகா. இப்படித்தான் அறிய தகவலை பரிமாறச் சொன்னேன் என்றது அணில்.

“மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார் தெரியுமா?” என்றான் முகிலன்.

“சேதுபதி மேல்நிலைப்பள்ளி எங்கு இருக்கிறது” என கேட்டது அணில்.

“நம்ம மதுரை இரயில்வே நிலையம் அருகில் இருக்கும் ஹெட்போஸ்ட் ஆபீஸ் அருகில் தான் சேதுபதி பள்ளி இருக்கிறது ” என்றாள் அகிலா.

நாம் அவர் பணியாற்றிய பள்ளியை பார்ப்போமா? “ என்றது அணில். “அய்யோ, அது இங்கிருந்து 5 கிலோமீட்டர் இருக்குமே” என்றாள் ரேகா.

”என் நண்பன் குதிரையை அழைக்கின்றேன், கண்மூடி திறப்பதற்குள் நம்மை அங்கு சேர்த்திருப்பான் “ என்றது அணில்.

“அய்யோ குதிரையிலா எனக்கு பயமா இருக்கும் “ என்றான் அகிலன். “பயப்படாதே, அது பறந்து செல்லும் குதிரை . யார் கண்ணுக்கும் தெரியாது. நாம் அதில் ஏறி அமர்ந்ததும் நாமும் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம் “ என்றது அணில். அனைவரும் உற்சாகமாகினர். அகிலா அரை மணி நேரத்தில் திரும்பி விட வேண்டும், இல்லை என்றாள் அம்மா தேடி இங்கு வந்துவிடுவாள் “ என்றாள் அகிலா. “சீக்கிரம் வந்துவிடுவோம் “ என்றது அணில்.

அணில் தன் நண்பன் குதிரையை அழைத்தது. குதிரை கம்பீரமாக வெள்ளை நிறத்தில் தோன்றியது. அனைவரும் ஏறி அமர்ந்தனர். கண்மூடி திறப்பதற்குள் சேதுபதி பள்ளி வாசலில் இறங்கினர். வாட்ச் மேன் அப்போது தான் டீக்குடிக்க சென்றான். நுழைவாயிலில் அனைவரும் நுழைந்தனர். கழுத்தளவு வரை இருக்கும் பாரதி சிலையை பார்த்தனர்.

“ஆஹா , என்ன கம்பீரமாக தோன்றுகிறார். இவர் தான் பாரதியா என்றது குதிரை.

“ஆம், இவனின் கவிதைகள் இதை விட கம்பீரமாக இருக்கும்” என்றாள் ரேகா.

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடியவன் பாரதி “ என்றாள் அகிலா.

“விடுதலைக்கவி மட்டுமல்ல. அவன் பெண்கள் விடுதலைக்காகவும் பாடுபட்டவன் குதிரையாரே” என்றது அணில்.

 "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடியவர் “ என்றாள் ரேகா.

“ஆஹா..சபாஷ் “ என்ற குதிரை தன் நாவல் பாரதியை வருடியது.
“குழந்தைகளுக்காக புதிய ஆத்திச்சூடி எழுதியவர் பாரதி “ என்றான் முகிலன்.

“அவர் பதினொரு வயதில் கவி திறனை வெளிப்படுத்தினார். எட்டையாபுர மன்னர் அவருக்கு பாரதி என்ற பட்டத்தை தந்தான் “ என்றாள் அகிலா.

“அவருக்கு மணிமண்டபம் எட்டையாபுரத்தில் கட்டியுள்ளனர் “ என்றாள் ரேகா.

“அங்கு அவரின் முழு உருவ சிலை 7 அடி உயரத்தில் எழுப்பி உள்ளனர் “ என்றாள் அகிலா.

“அணிலே அணிலே உன் குதிரை நண்பன் உதவியுடன் நாம் இப்போது அங்கு செல்ல முடியுமா? “ என கேட்டான் முகிலன்.

“அய்யோ , அம்மா தேடுவார்கள் . வேண்டுமானால் அவர் பாடம் நடத்திய இந்த பள்ளியின் வகுப்பறைகளை பார்வையிட்டு வருவோம் “ என்றாள் ரேகா.

“இங்கே கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. பழைமையான கட்டிடம் இரண்டு மட்டுமே உள்ளன. வா அதை பார்ப்போம் “ என்றது குதிரை.

அனைவரும் சுற்றி பார்த்து விட்டு திரும்பினர்.

“அவர் எப்படி இறந்தார் ? “ என குதிரை கேட்டது.

“யானை மிதித்ததால், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் “ என்றாள் ரேகா.

”கீதையை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார் பாரதி “ என்றாள் அகிலா.

“சரி.. அவரின் கவிதை வரிகளில் உனக்குபிடித்த கவிதையை சொல்லு “ என்றது குதிரை.

அகிலா கவிதை புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தாள். நான் சொல்கின்றேன் என்றது அணில்.

அக்கா அம்மா தேடி வரப்போறா வா நேரமாவது என்றான் முகிலன்.

சரி அணில் நண்பா கவிதையை சொல் கேட்டுவிட்டு நாம் கலைந்து செல்வோம். நாளை மீண்டும் சந்திப்போம் என்றாள் அகிலா.
“தேடிச் சோறுநிதந் தின்று
     பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?” என்றது அணில்.

அனைவரும் கைத்தட்டி அணிலை பாராட்டினர்.

“இப்ப ஏன் பாரதி பற்றி பேச்சு வந்தது “ என்றது

”அதுவா, வருகிற செப்டம்பர் 11 பாரதியின் நினைவு நாள் வருகிறது. அதற்கு கட்டுரை தாயாரிக்க வேண்டும் . அதற்காக தான் ரேகா வீட்டிற்கு வந்தேன் “ என்றாள் அகிலா.

“சரி எனக்கு நேரமாகி விட்டது , நான் வருகின்றேன் “ என கூறி பறந்தது குதிரை.

ரேகாவும் எனக்கு ஹோம் ஓர்க் அதிகமா இருக்கு என்று கூறி விடைப்பெற்றாள்.

முகிலனும், அகிலாவும் ,அணிலும் நடந்தவண்ணம் பாரதி பற்றி பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

நாளைக்கு புதிசா வேறு விசயம் பேசுவோம் மறக்காம வந்துடங்க என்று கூறி புங்கை மரத்தில் ஏறி மறைந்தது அணில்.

க.சரவணன்.
தலைமையாசிரியர்
மதுரை -9