Thursday, March 20, 2014

தயவு செய்து குடிகாரர்கள் படிக்க வேண்டாம்...!

         மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இன்னும் ஆழமான புரிதல் தேவைப்படுகிறது. கோபம் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கின்றேன். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளக் கூடாது. நியாயமான விசயங்களுக்கு , நேர்மறையான எண்ணங்களுடன் கோபம் கொள்ள வேண்டும் என்றும் கற்று தந்துள்ளேன். நம்முடைய கோபம் தப்பு செய்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாகவும், தவற்றை செய்யாமல் தடுப்பதாகவும், தவறு செய்யும் எண்ணத்தை போக்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளேன். கோபத்தை அடக்க வேண்டாம் என்றும் கற்பித்தவன் என்ற விதத்தில் , சில புரிதல்கள் எனக்கு தேவைப்படுகிறது. அநியாயங்களுக்கு சீறுவதில் தப்பில்லை தான். அதற்காக இப்படியா?
      இந்த மாதிரியான கோபத்தை என்னவென்று சொல்வது? நிச்சயம் புரிதல் தேவை என்பதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது.
      நேற்று, மிகவும் சோர்வாகவும், சோகமாக காணப்பட்ட வகுப்பு மாணவனை விசாரித்தேன். அவன் சொன்ன விசயம் தூக்கி வாரி போட்டது. எதைய்ம் சட்டை செய்யாமல் எதார்த்தமாக அவன் சொன்ன பதில் வியக்க செய்கிறது!
     “நேத்து நைட் தூங்கலை சார் அதான் டையர்டா இருக்கு” என்றவனிடம் ”ஏன்?” என தொடர்ந்தேன். ”எங்கப்பா தண்ணி அடிச்சு கலாட்டா பண்ணீனாரு...” என அமைதியாக சலனமின்றி பதில் அளித்தவனிடம் , “ நம்ம செய்யும் யோகா செய்ய சொன்னியா ?” என கேட்க, மிக விரைவாக , ” அட போங்க சார்... சும்மா யோகா அது இதுன்னு ...அதெல்லாம் சரி பட்டு வராது.. ” என கோபமாக சொன்னான். ” சரி.... ஏன் சோகமா இருக்க... அப்ப கொஞ்சம் கொஞ்சமா குடியை நிறுத்துவாரு ... “ என சாந்த படுத்த முயற்சித்தேன். “ சார்... இனிமேல் குடிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன் “ என்றான் .
“வெரி குட் இந்த நம்பிக்கை தான் நமக்கு தேவை.. இந்த நம்பிக்கையே உங்க அப்பாவை குடிக்காம பார்த்துகொள்ளும்” என்று எல்லோரும் கை தட்டுங்க என்றேன். அனைவரும் கை தட்டி முடிந்ததும் மெதுவாக நிதானமாக கூலாக பதில் சொன்னான். என்னை தூக்கி வாரி போட்டது. ஆகவே, நிதானமாக, கூலாக , அதிர்ச்சி அடையாமல் அவன் சொன்ன விசயத்தை படிக்கவும்.
     “குடிச்சு பிட்டு .. எங்க அம்மாவை தகாத வார்த்தை பேசினார்.. குடிச்சா தானே இப்படி பேசுறன்னு.. பக்கத்தில இருக்கிற அம்மிக்கல்ல தூக்கி அவரு கால்ல போட்டுட்டேன்.. இனிமே குடிக்க மாட்டேன்ன்னு என் கால்ல விழுந்து கும்பிட்டு சத்தியம் செய்து கொடுத்துட்டார்.... அப்புறம் டாக்டர்ட்டா கூட்டி போய் ... கட்டு போட்டு ஆய்ண்மெட் வாங்கி கொடுத்தேன்..”
      வகுப்பறை நிசப்தமானது. எல்லா மாணவர்களும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர். வகுப்பிலுள்ள ஒரு மாணவி “அப்பதாண்ட குடிக்க கடையை தேடி போக மாட்டாங்க “ என்றாள். அதிர்ச்சியில் மேலும் உறைந்து போனேன்.
“டேய்.... கல்ல தூக்கி போடுறது கொலை குத்தமில்லையா...? போலீஸ் கேசாகிடாதா? டாக்டர் எப்படிடா டீரீட் மெண்டு எடுத்தார் ?“ என்றேன்.
“ டாக்டர் எப்படி வீங்கிச்சுன்னு கேட்டார்...நான் தான் கல்ல தூக்கி போட்டேன்... குடிச்சு அசிங்கப்படுத்துரார்ன்னு சொன்னேன்... அவரு ஒண்ணும் சொல்லாம கட்டு போட்டு விட்டுட்டார்..அப்புறம் தனியா கூப்பிட்டு இனி இப்படி செய்யகூடாதுன்னு சொன்னார்... இனி உங்க அப்பன் குடி பக்கம் தலைய வச்சு கூட படுக்க மாட்டார்ன்னு சொன்னார் ...அது தான் எனக்கு சந்தோசமா இருந்தது “ என்றான்.
“அது சரி உங்கப்பா வேலைக்கு போக மாட்டார்.. சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க... இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. இனி இப்படி செய்ய கூடாது “
“சார்... அம்மா வேலைக்கு போறாங்க.. சாய்ங்காலம் நானும் அண்ணனும் அப்பளக் கம்பெனிக்குபோவோம் இரவு பதினோரு மணிக்கு தான் வருவோம்.. அந்த வருமானம் போதும் . அப்பா சம்பதிக்கிறது குடிக்கவே பத்தாது... அவரு பாக்கெட்டில் இருந்து திருடினா தான் உண்டு....அது தான் அவரு கொடுக்கிற சம்பளம் ”
“ டேய்... அதான் நீ எப்பவும் தூங்குவது போல் உள்ளாயா?” என அதிர்ச்சி அடைந்தேன். மாணவர்களிடம் இன்னும் புரிதல் தேவைப்படுகிறது. அவர்களுடன் இன்னும் இறங்கி பழக வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்களுள் ஒருவனாக தோழனாக மட்டும் இல்லாமல், நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டும் என்பதை உணர்கின்றேன்.
காந்தி சுயசரிதை நோத்து தானே படித்து காட்டினேன். தவறுக்காக மனம் வருந்தினார். சிக்ரெட் குடித்தது, தன் அண்ணணிடம் தங்க காப்பு அறுத்து எடுத்தது.. போன்ற விசயங்களுக்கு மனம் வருந்தினார் இல்லையா.. தந்தையிடம் கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டார் இல்லையா...? நீயும் மன்னிப்பு கேட்க வேண்டும் ”என்றேன்.
தலையை ஆட்டினான். ”குடிக்கலைன்னா அவரு ரெம்ப நல்லவரு.. அவர எனக்கு ரெம்ப பிடிக்கும்” என்ற அவனின் பாசம்.. என்னை திக்குமுக்காட செய்தது. கண்களில் நீர் வடிய காட்டிக் கொள்ளாதவனாக ”இனி யாரும் இந்தமாதிரி கோபம் படக்கூடாது “ என்றேன்.
“ சார்... அவன் கல்லை அப்பா கால்ல போட்டது தப்பு தான்.. சாரயம் விக்கிற அரசாங்கத்து மேலே போடணும்...” என்றான்.
“எப்படி டா... அரசு மேல கல்ல போட்டுறது? “ என்ற சக தோழிக்கு..அவன் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது. (அவன் நான் கண்ட மாணவர்களில் (20வருட அனுபவத்தில்) மிகவும் வித்தியாசமானவன். அவனைப் பற்றி சுட்டி விகடனில் பேச இருக்கிறேன். அடுத்துஅவனைப்பற்றி தான் எழுத போகிறேன். நீங்களே அவனை பார்க்க வருவீர்கள். )
“ எலக்சன் வருதுல்லா... நம்ம ஓட்ட கல்லா போட்டா போச்சு.. துண்ட காணாம் துணிய காணாம்ன்னு ஓடப்போறாங்க...ஒவ்வொருத்தனும் உங்க அம்மா அப்பா அண்ணன் கிட்ட சொல்லி சாராயத்த ஒழிக்கிற கட்சிக்கு ஓட்டு போட சொல்லுங்க.. தானா சாராயத்தை ஒழிச்சிடலாம் “ என்றான். அதிர்ச்சி உறைந்து போனேன். என்ன முதிர்ச்சி. அவன் கூறிய பதில்கள் நாம்மையே சிந்திக்க செய்கின்றன. இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பதில் பெருமை படுகின்றேன். அதிர்ச்சி தொடரும்.....

Friday, March 7, 2014

எம்.ஜி.ஆர் வந்துட்டார்…!


மதுரை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்ததுஎந்த விஐபி வந்தாலும் , தேவர் சிலை அருகில் டிராபிக் மாற்றம் மாறாதஒன்றுஅன்றும் அப்படித்தான்மீனாட்சி கல்லூரி வழியாக பெரியார் நோக்கி செல்லும் பேருந்துகள் மாற்றி விடப்பட்டன.பெரியார்- கோரிப்பாளையம் செல்லும் வண்டிகள் சிம்மக்கல் தரைப்பாளம் வழியாக இராஜாஜி ஆஸ்பத்ரி பின்புறம் வழியாக சிறிய கார்கள், ஆட்டோக்கள், டுவீலர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது. இனி இராஜாஜி மருத்துவமனை பின்புறம் பயணிப்போம்.
”பெரியம்மா…கால மடக்கு”
“ஏம்பா… என்ன பண்ணப்போற …”
“தேங்காய் உடைக்க போறேன்..”
“அட பாவி முச்சந்தியிலா… தேங்காய் உடைக்க போற…”
“ஆங்… இல்ல உங்க கால பார்த்து உடைக்க போறேன்.. கால மடக்குன்னா… “
”இந்த டிராபிக் வேற.. மாசத்துக்கு இரண்டுதடவ இப்படி மாத்தி விடுறானுக.. இவனுக வேற நிம்மதியா இருக்க விட மாட்றானுக..”
“என்ன பொழம்புற..”
“இருங்கடா..கால …எடுத்துக்குறேன்…”
“இங்கப் பாருடா…முச்சந்தியில தேங்காய் உடைக்க கூட இந்த பெரிசுகள் விட மாட்டீங்கிறாங்க…”
“சரி சரி பேச்ச குறை..வெட்டிய பேசாம தேங்காய உடை…”
தூரத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் தேங்காய் உடைப்பதை பார்த்து ஓடி வருகின்றனர்.
“டேய் சத்தம் போடாம.. சண்டை போடாம பொறுக்குங்கடா…”
ரோட்டில் கும்பல் கூட , டிராபிக் ஜாம் ஏற்பட   தொடங்கியது..
“ஏம்பா…ஆத்து வோற பாதையில போக கூடாதா..”
“யேய் கிழவி.. அந்தபக்கம் தோண்டி போட்டு கிடக்கு..தெரியாத…”என ஆட்டோகாரன் திட்டி நகர்ந்தான்.
முச்சந்தி டீக்கடையில் ஜோரா டீ வியபாரம் நடந்து கொண்டிருந்தது.
“டேய் சுவாமி நாதா.. பில்டர் வில்ஸ் கொடுப்பா…”
“என்ன பாண்டி இந்தபக்கம்…”
“மதுரையில வர வர டிராபிக் பெருகி போச்சு… பஸ், கார் இந்த முச்சந்தி வழியாக மாத்தி விட போறாங்கன்னு … இங்க டூட்டி போட்டுறுக்காங்க…”
”சரி சரி நீ டிராபிக் போலீஸ்ன்னு தெரியும் ..அது என்ன கூட ஒரு பொண்ண கூட்டி வந்திருக்க…”
“டேய்..டேய் சுவாமி நாதா… சத்தமா பேசாதடா… அந்தம்மா காதுல விழப்போகுது… அந்தம்மா. மப்டியில வந்திருக்கிற பெண்போலீஸ்… சத்தமா பேசி காதுல விழுந்தா.. அப்புறம் உன் பெட்டிக்கடை சூரையாடிடும்…”
”யோவ்.. ஏட்டு பாண்டி, என்னய்யா காதக்கடிக்கிற…”
“அட ஒண்ணுமில்லேம்மா…பெட்டிக்கடை சுவாமிநாதன் என் பழைய சிநேகிதன்.உங்கள விசாரிச்சான்…அதான் சொல்லிகிட்டு இருந்தேன்..”
“யோவ்… பெட்டிகடை சுவாமி..உன் நண்பனுக்கு என்ன மாமூல் கொடுக்குறீய்யோ..அத எனக்கும் கொடுக்கணும் …புரிஞ்சுதா..”
“நாசமா போச்சு… அவனுக்கு சாரி… நண்பர் பாண்டி ஏட்டுக்கு பில்டர் வில்ஸ் கொடுத்தேன் ..கலி முத்திபோச்சு..உங்களுக்கும் தரட்டா…”
“யோவ் ..பேச்சை நிறுத்து.. ஏட்டு என்ன உன் நண்பருக்கு வாய் ஓவரா நீளுது..”
“ஏண்டா சுவாமி நாதா… என் ஜீவனை வாங்குற… அம்மாவுக்கு ஒரு பன்னீர் சோடா குடுடா…”
என்று சொல்லியவாரு வண்டிகளை ஒழுங்கு படுத்த கிளம்பினான். நாலு அடி தள்ளி வண்டிகளை ஒன்றுக்கு பின் ஒன்றாக செல்ல சொன்னான்.
பன்னீர் சோடாவை போலீஸ்கார பெண்மணியிடம் கொடுத்தான், சுவாமிநாதன்.
“யேவ் பெட்டிக்கடை..உன் பன்னீர் சோடா நல்லாதான்யா இருக்கு…”
“அம்மா கொஞ்சம் உட்காருங்க…..”
“நான் உட்கார்ந்து ரெம்ப வருசமாச்சு… நீ ஒண்ணும் குச்சு கட்ட வரவேணாம்…”
“என்னம்மா நான் ஒண்னு சொன்னா..நீங்க ஒண்ணு சொல்லுறீங்க..குண்டக்க மண்டக்கா பேசுறீங்க.. சேர் கொண்டுவந்து போடுறேன்னு சொன்னேன்…”
  ”சேர் மட்டும் போடு..என்னை சேர் பண்ணணும்ன்னு நினைக்காத ..அப்புறம் அறுத்து புடுவேன்.. “ என சொல்லி எதிரில் வந்த காரை நிறுத்தினாள்.
“பட்டத்து ராணி பார்வை…” என ரேடியோவில் பாட்டை ஆன் செய்த …கடைபையனிடம்,
“டேய் பாட்டை நிறுத்துடா… அதற்கும் அந்த அம்மா கோச்சுக்க போகுது…”
”யேவ் ஏட்டு…என்ன டிராபிக் கவனிக்கிற அங்க பாரு …கார்காரன் முந்தி வந்திகிட்டு இருக்கான்..இந்த குறுகிய சந்தில…இவ்வளவு வேகமாவா வற்ரது… நிறுத்து…”
“டேய்…வண்டிய நிப்பாட்டு… சின்ன சந்தில..இவ்வளவு வேகமாவா வருவே…என்ன குடிச்சுருக்கீயா..எங்க வாய ஊதிக்காட்டு…”
ஊதுகிறான்.
“சரி போ… மெதுவா போ…”
“வாய மட்டும் ஊதிகாட்ட சொன்னான்… நல்லவேளை காரை சோதனைப்போடலை…தப்பிச்சோம்…என்னய்யா நான் சொல்றது..”
“டேய் மாங்கா மடையா.. அரைவேக்காடு..பேசாம …காரை ஓட்டு ..எதையாவது பேசி மாட்டிவிட்டுறாத…”
அடுத்து வந்த காரை ஏட்டு பாண்டி துருவி துருவி சோதனை போட்டு கொண்டு இருந்தான்.
“யோவ் அப்படி என்னத்தய்யா பார்க்கிற… சந்தேகமா இருந்த வண்டிய… ஊத சொல்லி அனுப்பிட்ட.. இந்த வண்டிய ..துருவி துருவி சோதனை போடுற…”
”இல்லம்மா..இவன் தான் வேகமா வந்தான்..அதான் என்ன அவசரம்ன்னு செக் பண்ணிகிட்டு இருக்கேன்..”
“டிராபிக் ஜாம் ஏற்பட்டுகிட்டு இருக்கு.. வண்டிய ஓரமா போட்டு செக் பண்ணு…”
வண்டியில் இருந்து இறங்கிய பணக்கார மனிதர்,”யோவ்.. டிரைவர் ..இவ்வளவு டிராபிக்.. ஹாரன் சத்தம்.. எந்த கவலையும் இல்லாம..ரோட்டில் படுத்து உறங்கிற ஜனத்த பார்த்தியா…அங்க பாரு ரோட்டிலேயே குளிக்கிறான்..அட சாக்கடை பக்கத்துல..இடியாப்பம் தீங்கிறான்…எந்த கவலையும் இருக்கிற மாதிரி தெரியலைய்யே..”
“அய்யா … வண்டிய செக்பண்ணியவுடன் ஓரமா போட்டு வர்றேன்.. அந்த டீக்கடைகிட்ட நில்லுங்க…”
டீக்கடைக்காரனிடம் காரில் இருந்து இறங்கிய மனிதன்
“இந்த ஜனங்க.. எந்த கவலையும் இருக்கிற மாதிரி தெரியலையே… கொடுத்து வச்சவங்க...”
“அய்யா அப்படி சொல்ல முடியாது.. இருப்பதை கொண்டு திருப்தி அடைஞ்சவங்க.. இன்று என்ன என்பதை மட்டும் பார்த்து வாழ்றவங்க…அதனால் கவலை மறந்து வாழ்றாங்க…”
“அய்யா வண்டி செக்பண்ணிட்டாங்க.. எடுத்து வரவா..”
”இல்ல வேண்டாம்… இந்த ஜனங்களை வேடிக்க பார்க்கணும் போல இருக்கு…வண்டி ஓரமா தானே நிக்குது…”
“யோவ் …வண்டிய ஓரமா நிற்பாட்டி …என்னத்தய்யா டீக்கடையில செய்யுற…”
“சார்…எங்க முதலாளிக்கு இந்த குடிசை மக்கள பார்க்கணும் போல இருக்காம்…”
“அதுசரி..எத வேடிக்க பார்க்கணும்ன்னு விவஸ்தை இல்லை… டிராபிக் ஆகிறதுக்குல்லா எடுத்துடு..”
“டிரைவர்..அங்க இருக்கிற கிழவிக்கு என்ன வேண்டும்ன்னு கேளு…ரோட்டில..கார் போனாலும் வண்டி போனாலும் கவலைப்படாம பேட் பிடித்து விளையாடுற பசங்களுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு இந்த கடையில இருக்கிறத வாங்கி கொடு..”
“ என்ன சார்.. ஏழைகளுக்கு உதவணும்ன்னு மனசு இருக்கு..எதாவது பக்கத்தில ஓட்டலுக்கு போய் சாப்பாடு வாங்கி போடுங்க…”என்றான் ஏட்டு பாண்டி.
“யேவ் ஏட்டு என் பொழப்ப கெடுக்காதீய்யா.. மவராசன் என் கடையில் விக்கிற பொருள்களை வாங்க சொல்லியிருக்காஙக்.. நீஎன்னடான்னா..இதான்யா போலீஸ்காரன் சவகாசம் கூடாதுன்னு சொல்றாங்க…”
“டேய் சுவாமி நாதா.. கோச்சுக்காத…”
“இல்ல ஏட்டய்யா.. எதோ சின்ன பசங்கள பார்த்தவுடன் வாங்கி கொடுக்கணும்ன்னு தோணுச்சு… கிழவிகள பார்த்ததும் எங்க அப்பாயி நினைப்பு வந்திருச்சு.. அதான்…”
“என்ன டிரைவர் மொத்தம் எத்தனை பேர் இருப்பாங்க…”
“அய்யா.. சின்ன பசங்க… 30 பேர் இருப்பானுக..கிழவிக இந்த கடைசியில இருந்து அந்த கடைசி வரைக்கும் 16 பேர் தெருவில உட்கார்ந்து இருக்காங்க…”
“இந்த பெட்டிக்கடையில விற்கிற இனிப்பு, முறுக்கு ,ரொட்டி என எல்லாத்தையும் வாங்கி கொடு…”
டிரைவர் பசங்கள அழைக்க… அனைவரும் ஓடி வந்தனர். பெட்டிக்கடையில் கூட்டம் கூடியது.
“இருங்க..எல்லாருக்கும் உண்டு..வரிசையா வாங்கிகங்க…”
“டேய் சுவாமி நாதா.. எல்லா பொருளும் நல்ல பொருள்தானே…சின்ன சிறுசுக.. கிழடு கெட்டைக..சாப்பிடுறது..எதாவது ஏட கூடமா ஆயிடப்போகுது..நான் வேற டூட்டியில ஸ்பாட்ல இருக்கேன்…”
“எல்லாம் நல்ல சரக்குதான்…கவலைப்படாதே பாண்டி”
கூட்டத்தைப் பார்த்து வந்த போலீஸ்காரம்மாவிடம்,
“அம்மா..அதிகாரி அம்மா…அய்யா கணக்குல… உங்களுக்கு பன்னீர் சோடா தரட்டா… “
“வாங்கிகங்க..மேடம்…”
“ஐயா மகராசன்… நல்லா இருக்கணும்…யாரு எம்.ஜி.ஆரா வந்திருக்காக…அவரு தான் என்ன மாதிரி கிழவிகளையும் ஏழை ஜனங்களையும் பார்த்தா எதையாவது செய்யணும்ன்னு தோணும்…”
“யாரவது எதாவது கொடுத்த எம்.ஜி.ஆர்ன்னு சொல்லுவியா..போ..கிழவி போ…”
என ஏட்டு பாண்டி அதட்டினார்
இவரின் வண்டிக்கருகில் மெதுவாக ஒரு கார் ஒதுங்கியது.
“யோவ் ஏட்டு.. பார்த்தியா..அப்பவே சொன்னேன்… அங்க வண்டிய பார்க் பண்ண விடாதேன்னு… இப்ப பாரு இன்னோரு வண்டி.. அந்த வண்டி பின்னாடி பார்க் ஆகுது…”
“யேவ் வண்டிய எடு…”
”இல்லீங்க.. இந்த வண்டி எங்க அய்யா வண்டி..அதான் நிற்ப்பாட்டினோம்..”
“அதோ அங்க நிக்கிறார்.. வண்டிய ஓரமா போடு…”
“இல்லீங்க..அய்யா..மகள் பிரசவ வலியால துடிக்கிறாங்க.. ஆஸ்பத்ரிக்கு போகணும்… ரூட் மாத்தி விட்டுறுக்கிறதால சிக்கிரம் போக முடியல.. உதவுங்க..அய்யாவையும் கூட்டிகிட்டு போயிடுறோம்..”
“மகராச உன் மகளுக்கு சுக பிரசவம் ஆகும்.. நீ போய் பிள்ளைய பாருய்யா… மகளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகட்டும் அப்புறம் வந்து எங்கள பாருய்யா…”
”அய்யா மவளுக்கு பிரசவ வலி வந்துடுச்சுன்னு சொல்லி டாக்டர ரெடியா இருக்க சொல்ல போறப்பா தான் .. உங்கள பார்த்துட்டு அப்படியே நிண்ணுட்டாரு…”
“அப்படியா சங்கதி… ஏன் துரை..எலெக்சன்லா. நிக்க போறிய்யா… கண்டிப்பா நீ எந்த கட்சியில நின்னாலும் நாங்க ஓட்டு போடுறோம்…உங்க மகளை ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போங்க…”
”இல்லை…டிரைவர் நீங்க போங்க.. பிரசவம் ஆனவுடன் போன் பண்ணுங்க… இவங்களோட செத்த இருந்துட்டு வர்றேன்…”
வண்டி கிளம்பியது.
”அம்மா தாய்மாரே … நான் ஓட்டு கேட்டு வரல..உங்க வாழ்க்கை முறை என்ன பாதிச்சிடுச்சு… எதுவும் இல்லாட்டினாலும் முகத்தில் ஒரு சந்தோசத்தை பார்த்து நிண்ணுட்டேன்…இது உங்களுக்கு பழகி இருக்கலாம்…எனக்கு இந்த நிலையான சந்தோசம் புதுசா இருக்கு…”
“என்னங்க சாமி.. எங்கள பார்த்து சந்தோசப்படுறீக..நாங்க சந்தோச முகத்தோட இருக்கோம்ன்னு சொல்லுறீங்க…”
“உங்கள பார்த்து பிரமிச்சு போயிட்டேன்… இப்படி நான் ஒருநாளும் இருந்தது இல்லை…”
“ஆண்டவன் புண்ணியத்தில எந்த கஷ்டமும் இல்ல சாமி…விடலை பயலுக..வெள்ளையடிக்க.. கட்டிட வேலைக்கு போறானுக… பொம்பளை பிள்ளைக.. பெரிய வீட்டில பத்து பாத்திரம் தேச்சு..அங்க இருக்கிற மிச்சம் மீதியை கொண்டு வரும்…அத அப்படியே சாப்பிட்டு பொழுத கழிச்சுடுவோம்..எந்த குறையும் இல்ல…”
“சரி உங்களுக்கு எதாவது செய்தாகணுமே…”
“சாமி சொன்னா கோபிச்சுக்கபாடாது.. காலை 11.30 ஆகுது… மதியம் சாப்பாட்டுக்கு எதாவது வாங்கி வர சொல்றீய்யா…”
“ஏய் கிழவி சும்மா இரு… சார் தப்பா நினைக்க போறார்…”
“சும்மா சொல்லுங்க..இதில் தப்பு என்ன இருக்குது….ஒண்ணுமில்லை.. எத்தனை சாப்பாடு வாங்கி வர சொல்ல…”
“சாமி.. வெட்கமா இருக்கு .. சொல்லவா வேணாமா…”
“இதில் என்ன வெட்கம் சொல்லுங்க.. எங்க ஜனங்க எல்லோருக்கும் கோழி பிரியாணி வாங்கி தர முடியுமா..” என்று வெட்கி சிரித்த கிழவியின் கையை பிடித்து ,”அவசியம்” என்றார்.
“டிரைவர்..எல்லோருக்கும் அம்சவள்ளியில கோழி பிரியாணி சொல்லு… “
“எத்தனை…”
“மொத்தம் 300 பேரு தெருவில இருப்போம் சாமி…சின்ன பயலுக.. பெரியவங்க.. கிழவிக எல்லாத்தையும் சேர்த்துட்டேன் சாமி”
கைதொலைபேசியில் அவர் பல ஹோட்டல்களுக்கு பிரியாணி ஆர்டர் கொடுக்க… அனைவரும் அவரை ஆவென அவரை பார்த்தனர்.
12.30க்கு பிரியாணி வந்தது. பிரியாணியுடன் மினரல் வாட்டர் பாட்டிலும் வந்தது.
”அப்ப நான் கிளம்புறேன்..”
”சாமி.. அது எப்படி ..நீங்களும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடணும்…”
“நான் எனக்கு சாப்பாடு வாங்க சொல்லவில்லையே…”
“அதனால என்ன சாமி.. எங்க பொட்டலத்தில இருந்து ஆளுக்கு ஒரு கை தருகிறோம்..சாப்பிடுங்க..”
காரில் வந்த பெரியவர் அவர்களுடன் கலங்கிய கண்களுடன் அமர்ந்து சாப்பிட்டு சென்றார்.
“அய்யா.. சாமி..உனக்கு பேரன் பிறந்து இருப்பான்.. சுகப்பிரசவம் ஆகியிருக்கும்..கவலைப்படாம போ…” என்ற முதியவரின் வார்த்தையை கேட்டு சிரித்தபடி காரில் சென்றார்.
“யோவ் சாமிநாதா என்னாய்யா ஆச்சு..இன்னிக்கு நல்ல மனசு காரன்கள பார்க்க முடியுது…”
“ஆமாம் பாண்டி… இன்னிக்கு எம்.ஜி.ஆர் பிறந்த நாள்… அந்த மவராசன் மேலே இருந்து …நல்ல மனசு காரங்கள அனுப்புகிறார் போல… ”
ரேடியோவை ஆன் செய்தான். உரிமைக்குரல் படத்திலிருந்து எம்.ஜி.ஆர் பாடல் பாடிக்கொண்டு இருந்தது.
 ( இக்கதை என் நண்பர் சுரேந்திரபாபு எழுதியது. அதை என் எழுத்துக்களில் செம்மைப்படுத்தியுள்ளேன். அவர் எம்ஜிஆர் ரசிகர். அவரை வாழ்த்தலாம். வாருங்கள்.)
-மதுரை சரவணன்.