Thursday, January 15, 2015

உழவன் கதை. சிந்திப்போம் !


*
உழுதவன் கணக்கு பார்த்த உலக்கு கூட மிஞ்சாது...என்ற சொல்லாடல் உண்மை தான் என்பதை சமீபத்தில் தான் உணர்ந்தேன்.
என் மனைவியின் அண்ணனும் தம்பியும் இணைந்து எர்ரம்பட்டி என்ற கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி இருந்தார்கள். எழுபது செண்ட் இருக்கும். அவர்கள் இருவரும் மதுரையில் இல்லை. ஆகவே, விவசாயம் செய்வது என முடிவெடுத்து, என்னுடைய அத்தையும் மாமாவும் தபால் தந்தி நகரில் இருந்து சாத்தையார் டேம் அருகிலுள்ள (பாலமேடு) கிராமத்திற்கு சென்று வந்தனர்.
விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. போர் போடுவது என்றால் செலவு 1 லட்சம் பிடிக்கும் என்றனர் கிராமத்தினர். ஆகவே அதனை கைவிட்டார்கள். டேம் அருகில் இருந்தாலும், 300 அடியில் தான் தண்ணீர் என்றனர். அருகில் ஒருவர் போர் போட்டு தண்ணீரே வரவில்லையாம்! எங்கள் நிலத்திற்கு அருகில் கிணறு ஒன்று உள்ளது. 100 அடி இருக்கும் .ஆனால் தண்ணீர் இல்லை.
எப்படியும் மழை உண்டு என தீர்மானித்தவுடன், தீபாவளிக்கு முன் நிலத்தை உழுது போடுவது என முடிவெடுத்தார்கள். மானாவரி பூமி. வானம் பார்த்த பூமி. மழையை எதிர்பார்த்து தான் விவசாயம். நிலத்தை சுத்தப்படுத்த வேண்டும். ஆகவே, உழுவது என முடிவெடுத்தார்கள். உழுவதற்கு 1000 ரூபாய் செலவாகியது. அதன் பின் மழை பெய்ய தொடங்கியது.
மொச்சை விதை வாங்கினார்கள். ரூபாய் 700 ஆகியது. அதன் பின் விதையை விதைப்பதற்கு சென்றனர். ஆள் வைத்து விதைத்தனர். அதற்கு கூலி ரூபாய் 1000 ஆகியது.எதிர்பார்த்தப்படி மழையும் பெய்ய துவங்கியது. விதை முளைக்க தொடங்கியது. வாரம் ஒரு முறை சென்று வந்தார்கள். களை முளைத்திருந்தது. களை எடுக்க முடிவெடுத்தார்கள் களை எடுப்பதற்கு1200 ஆகியது. அதன் பின் லேசாக மழை வந்து போகியது.
செடி நன்றாக வளர்ந்தது. பூ பூக்க ஆரம்பித்தது. ஒரு மாதம் சென்று பார்த்தனர். காய் வந்திருந்தது. ஆனால் பூச்சி மண்டி கிடக்க மருந்து அடிக்க முடிவு செய்தார்கள். ரூபாய் 800 செலவானது. இவர்கள் அங்கே தங்கி இருக்க முடியாததால், ஆடு மாடு மேய்ந்து விடக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள தோட்டத்து காரனையே காவல் காக்க வைத்து இருந்தனர். காவல் கூலி 1000. அதன் பின் ஒரு பை நிறைய காய் பறித்தனர். எங்கள் வீட்டிற்கு இரண்டு படி மொச்சை. அவர்கள் அண்ணன் வீட்டுக்கு இரண்டு படி மொச்சை. பின் எங்களுக்கு இரண்டு படி மொச்சை கிடைத்தது.
மழை பெய்தால் தான் காய் விடும் என்று சொன்னார்கள். மழையை எதிர்பார்க்க பனி மட்டுமே விடாது பொழிந்து கொண்டிருந்தது. அறுவடை செய்ய வேண்டும். தொடர்ந்து இப்போது போய் வந்தனர். பூச்சி குறைந்தபாடில்லை. சந்தையில் நாமே கொண்டு சென்று விற்கலாம் என முடிவெடுத்தார்கள். சந்தை ஆரப்பாளையம் தீக்கதிர் ஆபீஸ் தான். அறுவடைக்கு செலவு 1000 ஆகும் என்றார்கள். அதனை கொண்டு சென்று விற்க வேண்டும். போக்குவரத்து செலவு ரூபாய் 300 பிடிக்கும் என்றார்கள். யோசித்த என் மூத்த மைத்துனன். அங்கேயே விற்பது என முடிவெடுத்தார். கடைசியில் போன வாரம் அங்கு பேசி அப்படியே குத்தகைக்கு விற்றதில் ரூபாய் 6000 கொடுத்தனர். ஒரு படி மொச்சை பறித்து கொள்ள கேட்டதற்கு முடியாது என சொல்லிவிட்டாராம் காண்ட்ராக்டர்.
அவர்கள் மூன்று மாதம் சென்று வந்துள்ளனர். போக்குவரத்து செலவு குறைந்தது 500 என வைத்து கொள்வோம். இனி கணக்கு பாருங்கள்.அவர்களின் உழைப்புக்கு கூலி என்ன ? எது தான் மிச்சம்.
இந்தியா விவசாய நாடு என்கின்றோம். அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை, ஒன்று மட்டும் நிச்சயம். வருங்காலம் விவசாயத்தை நம்பியே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
செங்கலையும் மணலையும் மண்ணையும் நம்மால் திண்ண முடியாது. அப்ப விவசாயம் நடைபெற வேண்டுமே! அது லாபகரமாக அமைய வேண்டுமே! சந்தையாக்கும் பன்னாட்டு கம்பெனிகள் மூடப்பட வேண்டுமே ! விவசாய தற்கொலையை தடுக்க வேண்டுமே ! விவசாயிகள் மழையும் விலையுமே நம்பி பிழைப்பை நடத்துகின்றனரே..!
இந்தியர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டுமெனில் நிச்சயம் நதிகளை இணைத்தே ஆகவேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் மழை நீரை சேமித்து வைக்கும் வித்தையை அறிந்து வைத்திருக்க வேண்டும். தண்ணீர் சேமிப்பு இதில் நிச்சயம். கம்மாய்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும். நம் வீட்டு கழிவு நீர்களை தேக்கி வைக்கும் இடமாக சாக்கடையாக ஆறுகளும், ஏரிகளும், கம்மாய்களும் உள்ளதை நாம் உணர வேண்டும்.
சமீபத்தில் என் நண்பர் செல்வம் இராமசாமியும் ,பிரசன்னாவும் நாகனாகுளம் கண்மாயை தூய்மைப்படுத்தி தந்தனர். மழை பொழிந்தது. நீர் நிரம்பியது. மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் அவர்கள் மனம் மாறவில்லை. படித்த பெரிய பணக்காரர்கள் நிரம்பிய அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு கழுவுகளை பாதை அமைத்து அதில் கலக்க செய்கின்றனர். சிந்திக்க வேண்டும். என் நண்பர்களின் உழைப்பு என்பது தனியாக இருக்கட்டும். அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களே இல்லை. யாருக்காக செய்தார்கள் என்பதை உணர வேண்டும். மக்கள் திருந்த வேண்டும். நண்பர்கள் உதவியால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பேரில் தண்ணீர் மீண்டும் கிடைத்துள்ளது. குப்பைகளை மீண்டும் கொட்ட துவங்கியுள்ளனர். மக்கள் மத்தியில் நீர் குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை எனில் நாம் அழிவது நிச்சயம்.
நீர் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கட்டும். தூய்மை இல்லாத , கழிவுகள் நிரம்பிய நீரை நாம் பயன்படுத்துவதால் பல தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். புதிய நோய்கள் பரவ வாய்ப்பாக அமையும்.
விவசாயிகள் வாழ வேண்டும் என்றால் நாம் , மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அடுத்த நாட்டினர் கேரளம், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை என்று புலம்புவதை தவிர்த்து , இருக்கும் அல்லது கிடைக்கும் நீரினை சேமிக்கவும், அதனை முறையாக தூய்மையாக பராமரிக்கவும் தெரிந்து வைத்தால் போதும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். நாமும் வானம் பார்த்து விவசாயத்தை செய்ய வேண்டியதில்லை. ஒரு கிணறு போதும் 100 ஏக்கருக்கு மேல் விவசாயாம் செய்யலாம். இது அனுபவத்தின் வாயிலாக சொல்வதே..!
விவசாயம் பிழைக்க , விவசாயிகள் வாழ்வு பெருக மாற வேண்டியது நாமே! இந்த சிந்தனையுடன் பொங்கலை கொண்டாடுவோம். உறுதி எடுப்போம்! வழி பிறக்கும்!
செல்வம் ராமசாமி,பிரசன்னா போன்றவர்களுக்கு இந்த பொங்கலை படைக்கின்றேன். அவர்களின் நண்பன் என்பதில் பெருமை அடைகின்றேன்.
மதுரை சரவணன்.

Tuesday, January 13, 2015

வார்டு எண் 99 (இராஜாஜி அரசு மருத்தவ மனை )


சாலை பாதுகாப்பு வாரம் நடைப்பெறும் இந்தவேளையில் தினமும் சாலை விபத்துக்கள் நடைபெறுவது வருத்தமளிக்கின்றது. நம் வீதிகள் 1970களில் உள்ளது போன்று தான் உள்ளன. வாகனங்கள் பெருகி விட்டன. ஆனால் நான்கு வழிசாலைகள் பெருநகரங்களை இணைக்கின்றன. வாகனங்களின் வேகம் அதிகரித்து விட்டது. நகரங்களை இணைப்பது அதே சமயத்தில் விதி மீறல்கள் அதிகமாகி விட்டன.
வாகன நெருசலில் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதால், மேலும் நெருசலை இடியாப்ப சிக்கலாக்கி வருகின்றது. இன்ஞினின் குதிரை திறன் அதிகமாகி கொண்டே வருகின்றது. சக்கரங்கள் பெரிதாகி கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாடலில் இருசக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் 18 வயது வந்தவுடனே இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய ஆரம்பிக்கின்றனர். கல்லூரி பெண்கள் ஒவ்வொருவரும் இருசக்கர வாகனங்களில் தான் செல்கின்றனர். நகரங்களில் சேர் ஆட்டோக்கள் பெருகிவிட்டன. நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் வாகனங்களின் எண்ணிக்கையை பெருக்கி கொண்டே வருகின்றன.
தினமும் சாலையில் ஒருவர் கீழே விழுவதை பார்த்து கொண்டே தான் இருக்கின்றேன். இதில் கொடுமை என்னவென்றால் யாரும் அவர்களை தூக்கி விடுவதில்லை. கொஞ்சம் இறக்க குணம் கொண்டவர்கள் 108க்கு போன் அடித்துவிட்டு சென்று விடுகின்றனர். தினமும் பொது பேருந்தின் அடியில் இரு சக்கர வாகனம் சிக்கி இரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்க்கும் போது இதயம் நின்று விடும் போல் இருக்கின்றது.
வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சாலை விதிகளை மீறுபவர்களை பிடித்து பைன் போடுவதை தவிர்த்து, அவர்களை மதுரை பெரியாஸ்பத்திரி எனப்படும் இராஜாஜி அரசு மருத்துவ மனையில் 99 வார்டில் இரண்டு நாட்கள் தங்கி இருக்க செய்தால் நிச்சயம் அந்த இரத்த வாடையையும், வாகனவிபத்தில் கை கால் இழந்தவர்களின் கதறலையும் அவர்களின் குடும்பத்தாரின் குமுறலையும் பார்ப்பவர்கள் அடுத்த முறை இத்தவற்றை செய்ய மாட்டார்கள்.
எனக்கு தெரிந்த சாலை விளக்குகள் குறித்து ஒன்றாம் வகுப்பிலேயே அறிமுகம் கிடைத்து விடுகின்றது. மூன்றாம் வகுப்பில் சாலை விதிகள் சாலையை எப்படி கடப்பது சாலையில் உள்ள குறியீடுகள் குறித்து அறிந்து கொள்கின்றான். ஐந்தாம் வகுப்பு வரும் போது அனைத்து சாலை குறியீடுகள் மற்றும் இரயில்வே குறியீடுகள் குறித்தும் தெரிந்து கொண்டு விடுகின்றான்.
லைசன்ஸ் எடுக்கும் போது சாலை விதிகளை தெரிந்த பின்பே லைசன்ஸ் கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் என்ன நடக்கின்றது என்பது நாம் அறிந்த விசயம் தான். நாம் வண்டி ஓட்ட கற்றுக்கொள்வதற்கு மெனகெடுவதே அதிகம். லைசன்ஸ் பெறுவது என்பது மிக எளிது. வண்டி ஓட்டும் முன் LLR போட்டு விடுகின்றோம். சரியாக ஆறுமாதம் முடியும் முன் நான் லைசன்ஸ் எடுத்துவிடுகின்றோம்.
என் மைத்துனன் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கின்றான். வாகன லைசன்ஸ் பெற அப்ளை செய்துள்ளான். ஏதோ டிகிரிக்கு படித்தது போன்று விடுப்பு எடுத்து ஒரு வாரம் வாகன விதி முறைகள், வாகனத்தை பற்றிய அறிவு, பேரிடர் மேலாண்மை குறித்து தொடர்ந்து படித்து வந்தான் . ஏன் என்று கேட்டேன். தேர்வில் பாஸ் செய்தால் மட்டுமே முறைப்படி வண்டி ஓட்டி காட்டி லைசன்ஸ் கிடைக்குமாம்!
இந்தியாவை முன்நிறுத்த ஆன்மிக பாதை தேவை இல்லை. ஊழல் அற்ற வழிமுறைகளை கையாள்வதன் வாயிலாக மட்டுமே முன்னுக்கு கொண்டு வர முடியும். மதவாதம் அடிப்படையில் எந்த மாற்றத்தைஅம் செய்துவிடாது. அது பழைமையை நோக்கி பயணிக்கவே செய்யும். தூய்மை பாரதம் என்பது தெரு சுத்தம் மட்டும் அடைவது அல்ல. கை சுத்தமும் சேர்ந்தே அடைவது தான்.
ஒரு சின்ன கதை. இதை படித்து இருப்பீர்கள். தான் என்ற அகங்காரம் படைத்த ஒருவன் தன் குருவை மட்டம் தட்ட வேண்டும் என்று நினைக்கிறான். அடுத்தவரை மட்டம் தட்டிக்கொண்டே இருக்கும் அவன் தான் ஒரு கனவு கண்டேன். அதற்கு விளக்கம் அளிக்க முடியுமா? என்கின்றான்.
“ என் கனவில் நீங்களும் வந்தீர்கள். நீங்கள் உங்கள் கரத்தால் தேன் பாத்திரத்தை வழித்து கொண்டு இருக்கிறீர்கள். நான் என் கரத்தால் கழிப்பறை மலத்தை சுத்தம் செய்கின்றேன்” என்கின்றார் அந்த குரு.
இவன் அவரை மட்டம் தட்ட நினைத்து, “ அதே தான். உங்கள் தகுதிக்கு நீங்கள் அதைத்தானே செய்வீர்கள் ” என்கின்றான்.
“இல்லை தம்பி, கனவு இன்னும் இருக்கிறது. அடுத்து நடந்ததை நீ கேட்கவில்லையே ! நான் உங்கள் கையையும் நீங்கள் என் கையையும் நக்குகின்றீர்கள் “ என்றார் குரு.
மதுரை சரவணன்.