Tuesday, March 22, 2011

எங்கள் வீட்டுக் கிழவி


நீண்டு வளர்ந்து
தொங்கும் காது
அனுபவங்களை
சுருக்கமாக
கொண்ட முகம்
நிற்க மறுக்கும் தலை
நடுங்கிய படி
வெத்திலை
இடிக்கும் கரங்கள்
சிவந்து
தடித்த நாக்கு
பற்களற்ற வாயுடனே
எங்கள் வீட்டுக் கிழவி
இடித்து இடித்து
எங்கள் நகரத்தின்
கதைகளை
வாயில் குதப்பி
துப்புகிறாள்..!

Saturday, March 19, 2011

நேசமித்திரனின் பத்து கட்டளைகள்

      மதுரைக்கு நேசன் மிகவும் நேசமாகிவிட்ட ஒருவர்.  நேசன் வருகையென்றாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். ”மதுரையில் இருக்கிறேன், மூட்டா ஹால் எங்கு இருக்கிறது?” என்ற அவரின் அழைப்பு ,என்னை ஆகாயத்தில் பறக்க வைத்தது. என் நண்பன் ஸ்ரீ யை அழைத்தேன். தாங்கள் அவருடன் இருக்கவும், நான் வந்து சேர்ந்துக் கொள்கிறேன் என்றார். கவிதை விமர்சனத்தை விட கூடுதல் இலக்கிய விருந்தாகவே அமைந்தது.    நேசனின் கவிதைகள் எனக்கு ஒரு வித வியப்பையும் , ஈப்பையும் ஏற்படுத்தியதற்கு காரணம் , அவரின் கனிவான பேச்சும், அன்பான நட்பும், அவரின் வாசிப்பும் , அதனை நண்பர்களிடம் பகிரும் முறையுமாகும்.

    அவரிடம் எழுத்து வயப்பட்டு ,கட்டுப்பட்டு இருந்தாலும் காட்டாற்று வெள்ளம் போல கவிதைகளில் பெருகிவருவது வியப்பையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த இலக்கிய அரசியலுக்குள்ளும் சிக்காத ஒருவர்.எழுத்தில் அல்லது கவிதையில் நாம் செய்யும் தவறுகளை  தைரியாமாக சுட்டிக்காட்டி திருத்தச் சொல்லுபவர். அவரின் கவிதைகள் எளிய புரிதலை அற்று , கடினமாக இருப்பதும் , புதிய வார்த்தைகளின் சேர்ப்பும் தங்களை கவிதையில் இருந்து தள்ளி நிற்கச் செய்கிறது என்றாலும் , கோபப்படாமல், ஒரு தாயின் பரிவோடு , தன் பிள்ளையின் பெருமையை எடுத்துச் சொல்லும் இயல்பு , அவரை கவிஞர்கள் பலரில் இருந்து மாறுபட்டு ஒரு வித நட்புணர்வை அவரிடம் கொள்ளச் செய்யும்.




தனக்கு ஒரு கவிதை தொகுப்பு வந்து விட்டது என்ற எந்த வித பந்தாவும் இல்லாத மனப்பான்மை, தன்னை இன்னும் செழுமைப்படுத்த வாசிப்பு தேவை என்னும் பணிவும் , தன் இலக்கிய நண்பர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமும், இலக்கிய சந்தேகங்களை போக்கும் விதமும் என அனைத்திலும் அவரின் கவிதைகளைப் போலவே மென்மையாக காணப்படுகிறார். சமீபகாலமாக என் கவிதைகள் தரமானதாக மாறி உயர்தரமான இலக்கிய இதழ்களில் வெளியிட என்ன செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் முயற்சி செய்து வரும் எனக்கு அவரின் சந்திப்பு , என்னை செதுக்க ஒரு பட்டறையாக பயன்பட்டது.




நவீன அல்லது மரபு அற்றக் கவிதைக்கு அவர் வகுக்கும் இலக்கணம்

1. கவிதை படித்து முடித்தவுடன் ஒரு வித உணர்வை ஏற்படுத்த வேண்டும்

2.கவிதை செய்தி சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை

3.கவிதையை கடினமான சொற்கள் கொண்டு தான் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.உங்களுக்கு தெரிந்த,பழகியச் சொற்களைக் கொண்டு எழுதுங்கள்.

4. முதலில் நீங்கள் சொல்ல வரும் விசயத்தை வாக்கியமாக எழுதுங்கள். பின்பு அந்த வாக்கியத்தில் தேவையில்லா இணைப்புச் சொற்களை அகற்றி விடுங்கள். எந்த ஒரு சொல்லை அல்லது வாக்கியத்தை எடுத்தாலும் அதன் அர்த்தம் மாறவில்லை என்று எண்ணிணால் அந்த சொல்லையோ அல்லது வாக்கியத்தையோ அகற்றி விடுங்கள்.

5. கவிதை எதை பற்றியதாகவும் இருக்கலாம். அது காதல், காமம் என இருக்க வேண்டிய கட்டாயமில்லை;

6. கவிதை பன்முகத் தன்மையுடன் அமைந்தால் சாலச் சிறந்தது.

7.கவிதைகளில் நீதி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

8.கவிதையை பிரசுரிக்கும் முன் அதனை பலமுறை படித்து உங்களுக்குள் ஊறப்போட்டு , அதனை மொருகேற்றி , ஒரு தாய் தன் குழந்தையை சுமப்பது போல உங்களுக்குள்ளே சுமக்கப் பழகிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு வித பீல் கிடைத்தவுடன் வெளியிடுங்கள்

9.பலரின் கவிதைகளை படியுங்கள் . அதில் கையாளப்படும் உத்திகளை மனதில் கொள்ளவும் . எக் காரணம் கொண்டும் காப்பி அடிக்க கூடாது.மாறுபட்ட கோணத்தில் சிந்தியுங்கள். ஒரு விசயத்தை அவர் ஒன்றால் வகுத்தால் , நீங்கள்  அதில் இருந்து விலகி காரணங்களை வரிசைபடுத்தி , வேறு ஒரு எண்ணால் வகுக்க பழகுங்கள்

10.நீங்கள் எழுதுவது தான் சரியென நினைத்து , எவரையும் பற்றி கவலைப்படாமல் எழுதுங்கள். கவிதை வசப்படும் .


தாகம் சந்திப்பில் உணவு இடைவேளையில் என்னுடன் பகிர்ந்து கொண்ட விசயம் . என் மரத்தடி பாடம் கவிதையை பார்த்து விட்டு உங்களின் எழுத்து மேன்மைப்பட்டுள்ளது , ஆனால் இன்னும் கவிதை தன்மை பெறவில்லை. அதற்கான பீல் -லை உருவாக்குங்கள். நீங்களும் விரைவில் ஒரு கவிதை தொகுப்பு போடலாம். அதற்கான உழைப்புக்கு தயாராகுங்கள் விரைவில் கவிதை வசப்படும் என்று சொன்னதுடன் அல்லாமல் மரத்தடிப்பாடம் என்ற தலைப்பில் உடனே ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்தக் கவிதை இதோ ...


மரத்தடி நிழலில்
கார்டூன் சித்திரமாய்
நீள்கிறது வயது குறைந்து
சேர்க்கப்பட்ட் சிறுமியின்
சிறுநீர்குடை.
அண்டைச் சிறுவனுக்கு
இடிக்காமல் சிலேட்டை
பிடித்தெழுதக் கூடவில்லை
பார்த்தப்படி நகரும்
பியூன் தாத்தா நீர் பெய்ய
போகிறார் புதிய
கட்டிடத்திற்கு...
இருமருங்கும் பார்த்தப்படி

இது நேசன் கவிதை மேல் கொண்டிருக்கும் அளவில்லா காதலால் ஏற்பட்ட விளைவு என்பதை விட அவரின் வாசிப்பின் ஆழத்தில் அளவாகவே எடுத்துக் கொள்கிறேன். வாசிங்க மக்கா..சுவாசிங்க வாசிப்பை.. எல்லாம் உங்கள் வசப்படும். நன்றியுடன் நேசனை வாழ்த்துவோம். 

Friday, March 18, 2011

கார்டூன் சித்திரங்கள்


வயது குறைந்த
சிறுமியின் கற்றல்
கூண்டுக்குள்
சிறகுகள் வெட்டப்பட்ட
பறவையாய்
பற்ற இயலா விரல்களில்
சுண்ணக் கட்டிகள்
உதடுகளை வண்ணமாக்குகின்றன
வகுப்பறைச் சுவற்றில்
வரையப்பட்ட கார்டூன் சித்திரங்கள்
நிஜங்களாய்
வகுப்பறை முழுவதும் சிதறிக்கிடக்கின்றன
சிறுநீர் கழித்து அழுகிறது
வடிவமுறக் காத்திருக்கும்
களிமண் பொம்மை ....
பள்ளியின்
பிரதான வாயிலில்
காத்திருக்கிறாள் அம்மா..!

Thursday, March 17, 2011

புதிர்

பொம்மைகளின் உலகம்
தனியானது
அவைகளிடம்
மிருக இயல்புகள் இல்லை
அதனாலே அவைகள்
குழந்தைகளால் விரும்பப்படுகின்றன.

முடுக்கிய விசையால்
துரத்தும் கரடி
உறுமாத புலி
கர்ஜனையற்ற சிங்கம்
கடிக்க தெரியாத
குரைக்கும் நாய்
வலைப்பின்ன தெரியாத
சிலந்தி
கொட்ட இயலா தேள்
விஷம் கக்கா பாம்பு
புகை கக்காமல்
ஒலித்து செல்லும் இரயில்
சிரிக்க மட்டுமே
தெரிந்த டோரா
புட்டி எடுத்தால்
அழும் குழந்தை
இன்னும் எராளம்....

பொம்மைகளுடனே
பொம்மையாய்
படுக்கையில்....

புரியாத புதிர் ...?

ஒவ்வொரு விடியலும்
பொம்மைகளின்
இயல்புகள் அகற்றி
மனித தன்மையை
உள் வாங்கிய மிருகமாய்..!




Wednesday, March 16, 2011

சைக்கிள்

இறுகப் பற்றிய 
கரங்களில் 
ஹேன்ட்பார்...  
சாய்கிறது 
சரியாகத் தான் 
பிடித்திருந்தாள்  
இருப்பினும் சாய்கிறது...
சைக்கிள் வாங்கிக்
கொடுத்த தாத்தாவின் 
கரங்களில் பைபிள் 
சாய்கிறது 
நிமிர்கிறது 
பாதையிலிருந்து 
விலகியும் விலகாமலும் 
வளைந்தும் நெளிந்தும்
பைபிளின் பக்கங்களை 
புரட்டியவாறு 
தாத்தா நிமிர்ந்து பார்கிறார் 
பயம் விலகி 
கொஞ்சம் கொஞ்சமாய் 
அழுத்திய பெடல் 
பறக்கிறது 
காற்றை கிழித்து 
ஆகாயம் தாண்டி...
மேடு பள்ளங்களில் 
மணல் வீதிகளில் 
செம்மண் சாலைகளில் 
தார் ரோடுகளில் ...
சைக்கிள் விடுமுறைகளை 
தனதாக்கிக் கொண்டது 
தாத்தாவின் சர்ச்சை போல்... 
சைக்கிள் சுமக்கிறது 
பள்ளி செல்லும் 
அவளின் பையை 
புல்லுக் கட்டை 
தண்ணீர்க் குடத்தை 
தங்கச்சி பாப்பாவை ...

நினைவுகளிலிருந்து 
விலகி 
மகளின் ஸ்கூட்டியை 
துடைத்துக் கொண்டிருக்கிறாள் 
அம்மா ...

Tuesday, March 15, 2011

கவிதை - தாகம்

வாரங்கள் உருள்கின்றன.. கனவுகள் கரைகின்றன...விடியல் மட்டும் தொடர்கிறது .

நண்பர்கள் சந்திப்பு மட்டும் என்றும் குறைவதில்லை  .அதில் குறையுமில்லை . சமீபகாலமாக  வாரக் கடைசி நாட்கள் இலக்கிய அமர்வாக அமைந்த காரணத்தால் கட்டுரைகளை மறந்து , கவிதை எழுதும் முயற்ச்சியில் உள்ளேன். கவிதை என்பது நம் அனுபவத்தில் இருந்து வரும் ஒரு வித வெளிப்பாடகவே அமைகிறது. நம் நிலம்  தந்த விசயமாகவே படுகிறது. என் நண்பர் ஸ்ரீ யின் தொடர்ந்த கவனிப்பும் , அன்பும் , திருத்தலும் ,கூடிய விரைவில் நீ ஒரு இலக்கிய வாதியாக வருவாய் என்ற உற்சாகப்  பேச்சும், பல கவிதை புத்தகங்களை தந்து படிக்க உதவிய விதமும் என் இலக்கை நோக்கி பயணிக்க வைத்தது .  


      13 -03 -2011 காலை பத்து மணிக்கு தாகம் தயவில் அன்றைய   நாள்  முழுவதும் இலக்கிய விருந்தாகவே அமைந்தது. தெரிந்த, தெரியாத, பழகிய, பழகாத பல நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் ,    புதிய நண்பர்களின் அறிமுகங்களையும் உருவாக்கி தந்தது தாகம். அதற்காக செந்திலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.    அன்று மூட்டா அரங்கம் நிறைந்து விட்டது. செல்மா நல்லதொரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவே தான் அவர் செல்மா பிரியதர்ஷன் -னோ .யவனிகா ஸ்ரீ ராம் தலைமை ஏற்க சமயவேல் அவர்களின் ”மின்னிப் புற்களும் முதுக்கம் பழங்களும்” கவிதை தொகுப்புக்கு தலைவரே விமர்சனம் வைத்தார். யவனிகா கூறும்  போது தற்கால கவியர்களுக்கு ஒரு போட்டியாக திகழ்கிறார் . நகரத்தின் மறுபக்கத்தை பிரதிபலிக்கிறது  என்றார்.

அடுத்ததாக சக்தி ஜோதி எழுதிய "எனக்கான ஆகாயம்" என்ற கவிதை தொகுப்புக்கு சுகுமாரன் அய்யா அவர்கள் விமர்சனம் வைத்தார்கள். அருமையாகவும் , எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. சக்தி ஜோதி கவிதைகள் காதலை முன்னிலை படுத்துகின்றன. அவர் ஆண்களுக்கான கவிதைகளை தந்துள்ளார் என்பது போன்ற நிறையும் குறையும் எடுத்துரைக்கப் பட்டன. 


லீனா அவர்கள் சக்தி ஜோதியிடம் அவரின் கவிதைகளின் பாதுகாப்பு தன்மையை பற்றிக் கேட்டார். அதற்க்கு லீனா என்பதால் அப்படி ஒரு பதிலை தந்துள்ளார் என்றே தெரிகிறது. உடல் உறுப்புகளை நான் மையாப்படுத்தி எழுதுவதில்லை என்று கேள்வியின் தன்மை புரியாமல் பதிலளித்து ஒரு எதார்த்த கவிஞராக    இருந்தார். மேலும் அவர் நான் நேசிக்கும் ஆண் பற்றிய காதலை எழுதுகிறேன் , நான் காமத்தையும் எழுதியிருக்கிறேன் என்றும், பைபிளில் ஒரு கதையும் சொல்லி பதிலளித்தார். 


ஹவியின் "இசைக் குமிழி" க்கு ந.ஐய பாஸ்கரன் விமர்சனம் வைத்தார். அவர் "ஆத்மா நாமின் கச்சிதம், பிரமிளின் தீவிரம் , நகுலனின் விடுபடல் போன்றவையே இனியான ஆட்ட முறைக்கான  தற்காலிக விதிகளாக இருக்கக் கூடும் என்றும் , இம் மூவரின்  வழியிலேயே நவீன கவிதா உலகம் வழிந்து கொண்டிருக்கிறது என்றும் ஹவி அபிப்பிராயப்படுகிறார். "என்றார்.  

மதியம் அருமையான சிற்றுண்டி வந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்பு மீண்டும் கவிதை மழை கொட்ட ஆரம்பித்தது.    
எஸ் . செந்தில் குமாரின்  "முன் சென்ற காலத்தின் சுவை " பற்றி ஸ்கூட்டிக்  கவிஞன் ’இசை’ விமர்சனம் வைத்தார்கள்.  

தேவேந்திர பூபதியின் "முடிவற்ற நண்பகல் " கரிகாலனால் விமர்சிக்கப்பட்டது. தன் கவிதையில் காதல் கவிதைகள் தான் நிரம்பியுள்ளன என்ற கூற்றை தேவேந்திர பூபதி மறுத்தார் , தன் தந்தை இறப்பில் எழுதிய கவிதைகள் ஏராளமாக உள்ளன என்று கூறினார்  .  


லிபி ஆரண்யா வின் (அட நம்ம மாகால் வாத்தி சரவணன் ) "தப்புகிறவன் குறித்த பாடல் " என்ற கவிதை தொகுப்புக்கு லீனா மணிமேகலை விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது. நகுலனின் கவிதையை லிபி பகடி செய்துள்ள கவிதையை வாசித்து காட்டினார். (ஆதிமுலம் குறித்த கவிதையில் உள் மூலம் ,  வெளி மூலம் மூலம் அவர் புரிந்த பகடி)லீனா அனைவரும் பாராட்டும் விதமாக விமர்சனம் வைத்தார்.
     

  இவ்வளவுக்கும் மத்தியில் என் நண்பர் நேசனுடன் ஒரு பெரிய கவிதை பாடம் நடந்தது...அதனை பற்றி விரிவாக அடுத்த இடுகையில்..செந்தில் நன்றி கூறும்   போது அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்த விநாயகம் இறந்த நிகழ்வை கூற தாகம் சோகமாக முடிந்தது. உண்மையில் தாகம் கவிதை மீது தீரா தாகத்தை தந்தது என்பது தான் உண்மை. மீண்டும் நன்றி செந்தில்...

Monday, March 14, 2011

தேடல்

மெய் ஞானம் பெற 
பரவிக்கிடக்கும்
புத்தகக் குவியல்களில் 
தேடினேன் ...
இருளின் இருப்பிடம் விட்டு 
வெளிச்சத்தை நோக்கி 
ஊர்ந்தது கரப்பான் பூச்சி 
அருவெறுப்பு தட்டவே 
தூக்கி எறிந்தேன் 
கொன்றது 
புத்தனின் போதனைகள் 
அடங்கியப் புத்தகம்
    



Friday, March 11, 2011

மரத்தடி வகுப்பறை

வானத்தையே கூரைகளாக்கி
ஆல மரக் கிளையிலாடும்
குரங்குகளை துணையாக்கி
தாவி ஓடும் மனம்
ஆசான் கையில் குச்சி  
ஒடுக்கியது  
இலைகளின் ஊடே பரவி
சுடும் வெயில் 
உரைத்தது 
மரத்தடிப்  பாடம் ...

எலும்புக் கூடாய் 
நினைவுகளை தாங்கி 
பராமரிப்பு அற்று 
பெற்றோரை போல  
பழைய வகுப்பறை    
ஏக்கங்களுடன் 
மாணவர்கள் ...
  
அணில்கள் ஓடி விளையாண்டு
மரத்திலிருந்து    
தொப் என்று விழுந்தன 
அனைவர் கவனமும்
சிதறாமல் 
அப்போது தான்
வகுப்பறை உயிரோட்டமாய்....

மரம் அசைந்தது
கரும்பலகை கணக்கும்
கண்கள் சொருகின
குறிப்பேடுகள்
மை கொண்டு
நிறமாகின
குறியீடுகள்  
முக்கியத்துவம் 
உணர்ந்த மாணவர்கள் 
உதிந்த இலைகளை 
உருவமாக்கி 
மண் துகள் படிந்த
கரங்களுடன்
இப்படித்தான் 
நடக்கிறது 
மரத்தடிப்  பாடம்  





Thursday, March 10, 2011

அலுவலகம் இயங்கியது...!


ஜன்னல் இடுக்குகளில் 
புகுந்து 
இருள் விரட்ட 
கைகளை நீட்டினான் 
கதிரவன்  
அலுவலகத்தில் இருள்
அப்படியே இருந்தது
நீட்டிய கரங்களினால் ...


குவிக்கப்பட்ட கோப்புகள் 
நீட்டப்பட்ட கைகள் 
கவர்கள் 
நகர்ந்தின பைல்கள் 
அலுவலகம் இயங்கியது ..!

பிரசவம் 
சுகமாகத்தான் 
முடிந்திருக்கும்...
கவர்கள் 
கிழிக்கப்படாததால்
கிழிக்கப்பட்டு 
வந்தது சிசு ...

வெட்டப்பட்ட மரம் 
வறண்ட கண்மாய் 
வாட்டும் வெயில்            
இடம்  பெயருகிறான்   
நகரமாதலில் 
வெட்டப்படுகிறது 
தொடர்ந்து மரம் ....!




Monday, March 7, 2011

என் வீதி

மரம் வளர்ப்போம் 
மழை பெறுவோம் என்றார்கள் 
வளர்த்தேன் ....  
ஒன்றே போதும் என்றார்கள் 
அப்படியே
வளர்ந்த பின் தான் தெரிகிறது ...
வம்பு வளர்த்தான் அயலான் 
இலை உதிர்ந்து குப்பையாகிறதென்று...
வெட்டு வெட்டு என்றான்
எதிர்வீட்டுக்காரன் கத்தினான் 
வயர் தட்டுகிறதென்று....  
வெட்டு வெட்டு என்றான்  
எச்சமிட்ட பறவையை 
எறிந்தான் கல்லால்  
பாதாசாரி  
ஜன்னல் கண்ணாடி   
நொறுங்கியது  
என்னோடு ....
எட்டிப்பார்த்தேன்
தெருவை 
வெறிச்சோடி இருந்தது
மரங்கள் அற்ற வீடுகளை போல ...
ஆடுகளும் மாடுகளும் 
மரநிழலில் 
காற்றில் அசைந்து 
கிளைத்தாவி கிசுகிசுக்கும் 
இலைகளின் மொழியில் மயங்கி...
சனியன் பிடிச்ச மரத்தை வெட்டுங்க
தெருவின் கடைசி வீட்டுக் காரன் 
ஹரன் காது சவ்வு கிழிய    
மாடு நகர்ந்து தொலைய மாட்டேங்கிது...
நித்தம் பிரச்சனைகள்
அத்தனையும் இருந்தும் 
மரம் 
இலை உதிர்த்தது 
இலை தளிர்த்தது 
பூ பூத்தது 
காய் காய்த்தது 
பழம் பழுத்தது 
கிளை ஒடிந்தது 
கிளை விட்டது 
ஆனால் 
என் வீதி மட்டும்
அப்படியே....  


Saturday, March 5, 2011

காதல் கவிதைகள்

இருசக்கர  வாகனத்தை 
பின்தொடர்ந்தேன்
கருப்பு புகை துப்பிச் செல்கிறது 
உன்னை போல் ...

வண்டியை பார்க் செய்து 
பார்க்கில் பார்த்தேன் 
அழகு.... 
மனம் பறக்கிறது  
உயரே உயரே 
ஊஞ்சலில் நீ...

பார்க்கும் இடங்களில் எல்லாம் 
நீ ...
செடியிலும் கொடியிலும் 
மலர்ந்த மலரிலும் 
மலரா மொட்டிலும் 
காய்யிலும் கனியிலும்  
அயர்ந்து அமர்ந்தேன் 
மரத்திலிருந்து உதிர்ந்த இலை 
என் மடியில் 
நீ....     

மரம் 
காயம் பட்ட 
மரப்பட்டையிலிருந்து
வடிக்கிறது 
என்னை போல 
கண்ணீர் ....

  
வருடங்கள் கடக்கின்றன 
நான் நீ 
எழுதிய பெயர்கள் 
மரங்களில் அழியாமல் 
என் இதயம் போல் .....
நான் அமர்ந்திருந்த இடத்தில் 
புதிதாய் செடி முளைத்திருந்தது ...



Friday, March 4, 2011

நம்பிக்கை

அறிவிலியானேன்
புனைவுகளின் வாழ்வில் 
கண் திறந்த கனவுகளில் 
மார்கழி கோலமாய்
வண்ணமிட்டு வந்தாய் 
இதயத்தில் நீ(ர்) தெளித்து 
குப்பைக் கூடைகள் நிரம்பின 
வார்த்தைகள் வந்து விழாமல் 
வார்த்தைகள் கை கூடும் போது 
பாதை மறந்த வழிப்போக்கனாய் 
அம்மாவசை இரவுகள் 
உன்னை காணாத நாட்கள் 
நீ நின்று சென்ற இடங்களில் 
வசிக்கிறேன் நம்பிக்கையுடன் 
உயிர்பெறுகிறது ஒரு துளி 
பெரு மழைக்காக ...

  


Thursday, March 3, 2011

வாழ்க்கை ..!

நம் மனங்கள் 
புல்லி இதழாய் 
பிறர் மீதான கருத்துக்கள்
அல்லி இதழாய் 
சூரியனின் கோடை வெப்பம் 
கார்மேகமாகத் திரண்டது 
மெல்லிய  உன் இதழ் புன்னகையில் 
உறவுகள் வசப்படும்
சூழக அறையில்
தன் மகரந்த சேர்க்கையில்   
இடியுடன் கூடிய மழை....
ஈரம் பட்ட பூமியின்     
சருகுகளுக்கு மத்தியில் 
புதைந்த விதை 
வேர் விடத் தொடங்கியது... 
நீ தந்த முத்தங்கள் 
நான் தந்த முத்தங்கள் 
காமமின்றி பகிரப்படுகிறது 
மெண்டலின் விதிப்படி 
என் முகச் சாயலும் 
உன் புன்னகையையும் ....
இப்படித்தான் எல்லாரும் 
பிறக்கிறார்கள்...!

காமம் அற்ற இரவுகள் 
நட்சத்திரங்கலற்ற வானமாய் 
பொர்ணமி நிலவாய் 
உறங்குகிறது குழந்தை  
நமக்கு நடுவில்..! 
மாமாங்கமாய் பிரிந்த உறவுகள் 
கூடு நோக்கிய பறவைகளாய் 
ஆகாயத்தில் நகரும் மேகங்களாய் 
வாழ்க்கை ..!



Wednesday, March 2, 2011

திருட்டு

முன்னோக்கி அணுகும் போது
விலகிச்  செல்லும்  சாலையாய்  
மரங்கள் உதிர்க்கும் இலைகளாய் 
நீ ....
துளிர்விடும் இலைகளை போல் 
உன் புன்னகை அமையும் என 
வேர்களின் வழியாக ஊடுருவி 
உன்னை அணுகும் போது 
ஆவியாகி அனுப்புகிறாய்   
பாவியாய் காத்திருக்கிறேன் ....
இருந்தும் இல்லாமலும் இருக்கிறேன் 
கோடையின் பகலில் வீசும் காற்றாய் 
உன் பார்வை  
இரவினில் மூட மறுக்கும் இமைகளுக்கு 
வானத்தின் நட்ச்சத்திரங்களாய் ஜொலிக்கிறாய் 
மூட மறந்த கதவுகள் 
திருட கொடுத்தது பொருளை மட்டுமல்ல 
வாழ்வையும் சேர்த்தே...         

Tuesday, March 1, 2011

பூத்தலின் பூவமை நன்று

பூத்தலின்  
     குழந்தைகள் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும்.  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பெருகிவரும் இவ்வுலகில் ,இத் தொழில் நுட்பங்கள்  பாலியல் சார்ந்த தவறான கருத்துக்களை  கொஞ்சம் கொஞ்சமாக முதல் வகுப்பில் காலடி வைக்கும் போதே தொலைக்காட்சிகள் அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. ஆசிரியர்களின் தொடர்ந்த கவனிப்பும் , அன்பும் , கனிவான பேச்சும் மட்டுமே அவர்களை ஒழுக்க நிலைக்கு மாற்றக் கற்றுத்தருகிறது. 

        இன்று 'ஐ லவ் யு செல்லம்' என்பது காதலை குறிக்கும் தவறான வார்த்தை என்றாகி விட்டது. ஒன்றாவது குழந்தை டீச்சர் இவன் என்னைப் பார்த்து ஐ லவ் யு சொல்கிறான் என்று தவறான உணர்வுடன் தவறான கண்ணோட்டத்தில் குறை கூறும் போது மனம் பதை பதைக்கிறது. ஆங்கில வழிக் கல்வி முறையில் இது எப்படியோ தெரியவில்லை,  இருப்பினும் வீட்டுக்கருகில் வளரும் குழந்தைகளை காணும் போது அவர்களுக்கும் அப்படியே லவ் என்ற வார்த்தையை காதலை குறிக்கும் சொல்லாகவே உணர்வதாக உணருகிறேன். 

         திரைப் படங்கள் தொலைகாட்சி வழியாக வந்து நித்தம் குழந்தைகளை சீரழிக்கின்றன.திரைப் பாடல்கள் அனைத்தும் காட்சி படுத்தும் போது காமம் கலந்த காதலாக வருவதால் ஆணும் , பெண்ணும் சேர்ந்து பேசுவதும் காதலாகவே படுகிறது. இளம் வயதில் அவர்கள் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் சிக்குண்டு மீளமுடியாமல் தவிக்கின்றனர். தன்னுடன் பயிலும் மாணவிகளை தன்னை அறியாமல் கனவுலக மாயையினால் சிரித்துப் பேசுவது என்பதும் காதலாகத்  தான்  படுகிறது. மேலும் பல மாணவர்கள் "சார், அவன் பெம்பாலப் பசங்க கூட பேசுறான், அவன கண்டிச்சு வையுங்க சார்",என்று சொல்லும் போது நமக்கு பயமாகத்தான் இருக்கிறது.  ஆசிரியர்கள் இவர்களை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் பாத்ரூம் செல்ல வெளியில் நகரும் சமயத்தில் நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்ல மாளாது. 

      பெற்றோர்களும் தங்கள் பங்கிற்கு "டேய் , டீச்சர் கிட்ட மட்டும் உட்கார்ந்துக்க .. எந்த பொம்பள பிள்ளை கிட்டையும் சேரக்கூடாது" என்று அச்சுறுத்துவது அவர்களுக்கு எதையோ தூண்டுவதுப் போலாகிவிடுகிறது.பத்துக்கு பத்து அறைகளையே வீடுகாளாக கொண்டுள்ள பல குடும்பங்களின் குழந்தைகள் , ஆசிரியர் அல்லாத சமயங்களில் தங்கள் பிறப்பு உறுப்புக்களை பிடித்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். அதனை பார்க்கும் பலரும் கெட்டுப்போக சந்தர்ப்பம் உள்ளது. 
  
    இன்று வகுப்பறைகள் மாணவர்களை சார்ந்து அவர்களுக்கு பிடிக்கும் விதமாக உள்ளதால், நான் மேலே குறிப்பிட்டுள்ள சேட்டைகள் குறைந்து உள்ளன. மாணவர்களுக்கு பிடித்த படம் வரைதல், பொம்மைகள் செய்தல், காகிதத்தில் கலைப்பொருட்கள் செய்தல் , பொம்மலாட்டம் , கதை புத்தகம் படித்தல் ,உள் விளையாட்டு, வெளி விளையாட்டு என மாற்றப் பட்டுள்ளதால் , பால் உணர்வு சார்ந்த எண்ணங்கள் எழாமல் , நன்முறையில் பாடங்களை படிக்கின்றனர். இருப்பினும் ஆசிரியர் கவனம் சிதறும் பட்சத்தில் அல்லது செயல் வழிக் கற்றல்   முறையிலிருந்து மாறி பழைய முறைகளில் பாடம் கற்பிக்கும் போது இத்தவறுகள் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. 

      இன்று மூன்றாம் வகுப்பிலேயே பெண் குழந்தைகள் பூப் பெய்துகின்றனர். எங்கள் பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் வயதிற்கு வந்துள்ளனர்.  இவர்கள் ஆண் , பெண் உறவுகளை உணரும் முன்னே ஒரு வித கனவுலகில், பாலியல் குறித்த விழிப்புணர்வு பெறாமலே பெரிய மனுஷிகளாக உலாவருவதால், பல சந்தர்பங்களில் தவறான முறையில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதை விட வளர்ந்து விடுகிறார்கள் என்பதே உண்மை. இவர்களை ஆசிரியர்கள் மட்டமே திருத்த முடியும்.  

      எங்கள் பள்ளியில் பயிலும் மாணவியை,அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் வயதுக்கு வந்த பெண் (பள்ளியில் அல்ல, அவர்கள் வீட்டுப்பக்கத்தில் ) அவளது பிறப்புறுப்பில் கை வைத்து தவறாக நடக்க சொல்லியிருக்கிறாள். இது எப்படியோ மாணவிகள் மூலமாக ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு தெரிய வர , அம் மாணவி அவரால் எச்சரிக்கப் பட்டு , தவறை திருத்தியுள்ளார். மேலும் அவர்கள் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை படுத்தியுள்ளார். ஆனால் , அவர்களின் பெற்றோர்கள் இதை நம்பாமல் ஆசிரியரை, "என் பிள்ளையை  அப்படி தப்பா சொல்லாதீங்க டீச்சர் , மத்த பிள்ளைக மாதிரி என் பிள்ளை கிடையாது ... வேறு எந்த பிள்ளையாவது செய்து இருக்கும் என்று சண்டைக்கு வர ..." விஷயம் என் காதுகளுக்கு கசிந்தது.    

      இவை எப்படி சாத்தியம்... குழந்தைகளுக்கு அதுவும் மூன்றாம் வகுப்பிலே செக்ஸ் பம்பந்தாமாக அதாவது தாம்பத்தியம் சந்தமாக தவறான புரிதலை ஏற்படுத்தி வைத்து , தங்கள் இளமையை சீரழிக்க வாய்ப்பு உள்ளது . அரசு இதனை கவனத்தில் கொண்டு துவக்க பள்ளியளவில் பாலியல் கல்வி கொண்டு வர வேண்டும் . துவக்க பள்ளியில் கட்டாயம் ஒரு மன நல மருத்துவரை நியமிக்க வேண்டும் . வாரம் ஒரு முறை அனைத்து மாணவர்களையும் அழைத்து பேச வேண்டும். மேலும் இது போன்ற சேட்டை செய்யும் மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் தரவேண்டும். பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் தர வேண்டும்.  

      தகவல் தொழில் நுட்பம் தொலைக்காட்சி , சினிமா அளவில் இவ்வளவு பாதிப்பு என்றால் இன்டர் நெட் பார்க்கும் குழந்தைகளை பற்றி சொல்ல வேண்டுமா... ? கனத்த மனதுடன் இதை முடிக்கிறேன்.ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன. இத் தொழில் புரட்சி பூத்தலின் பூவமை நன்று என்றே படுகிறது.