Thursday, February 12, 2015

கை துப்பாக்கியும் சாக்பீஸ் கையும்


குளிர் இதமாக இருந்த காலத்தில் உறங்க மனம் இல்லாமல், கையில் கிடைத்ததை படித்து, இரவை குடித்து கொண்டிருந்தேன். இப்போது குளிர் ரணமாய் இருக்கின்றது. நடுங்க வைக்கின்றது. கால் நரம்புகளை சுண்டி இழுக்கின்றன. கெட்டியான போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இரவை கடக்க வேண்டி இருக்கின்றது. அப்படித்தான் நேற்றும் போர்வைக்குள் கிடத்தினேன். ஒரு கை என் கரங்களைப் பற்றி, இழுத்து கொண்டு போனது. “டார்லிங் பயப்பட ஒன்றுமில்லை” என்று குரலில் ஒடுங்கி போனேன்.

அது மலை. பனி போர்வையால் சுற்றப்பட்டிருந்தது. காற்று பனியாய் வீசியது. மன நடுக்கத்தை விட உடல் நடுக்கம் அதிகமாகி இருந்தது . நான் இதுவரை பேசிடாத மொழியில் அந்த கை வழியாக குரல் ஒலித்தது. ஆனால் அதன் அர்த்தம் புரிந்தது. இப்போது நன்றாக உற்று பார்க்கின்றேன் , மற்றொரு கரம் தூப்பாக்கியை பிடித்தப்படி இருக்கின்றது. என்னை குறி பார்த்தப்படி உரையாடல் தொடர்கின்றது.

அமைதியாக பயணிக்கின்றேன். அது பள்ளிக்கூடம் என்று தான் நினைக்கின்றேன். நுழையும் போதே குழந்தைகளின் குரல்கள் ஒலிக்கின்றனவே! அங்கே அமர்ந்திருப்பது எனது குழந்தைகள். மனது இப்போது தெளிவாகின்றது. உடல் இன்னும் அந்த குளிரில் நடுங்கி கொண்டிருக்கின்றது.

இப்போது ஒரு ஜீப் வருகின்றது. இராணுவ ஜீப். அதில் அமர்ந்திருப்பவர்களின் சீருடை அப்படித்தான் நினைக்க வைக்கின்றது. ஏறி அமர்கின்றேன். இப்போது வழியெங்கும் பனி பூத்தூறலாய். உயர்ந்த ஊசி போன்ற பெயர் தெரியாத மரங்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. இப்போது உடலில் இருந்த நடுக்கமும் காணாமல் போகின்றது. இயற்கையை ரசிக்கின்றேன். செல்லும் வழியெங்கும் முள் வேலிகள். அதன் அந்த புறம் தூப்பாக்கி ஏந்தியப்படி வீரர்கள். நிச்சயமாக இராணுவ முகாமாக தான் இருக்க வேண்டும். அவர்கள் வட நாட்டவர்களை போல சிவப்பாக , மூக்கு நீளமாக , கண்களின் விழிகள் பசுமையாக காட்சியளித்தனர்.

பெரிய கேட் திறக்கப்படுகின்றது. 132 குழந்தைகள் என்னை வர வேற்கின்றார்கள். அவர்கள் கையில் சிவப்பு ரோஜா. வாங்கி கொள்கின்றேன். இதழ்களில் பூத்துள்ள நீர் துளிகளை கையில் தொடுகின்றேன். என் விரல்களில் இரத்ததின் பிசுபிசுப்பு. உள்ளே செல்கின்றேன். சுவர்களில் சிரித்தப்படி அவர்களின் குரூப் போட்டோ பெரிதாக தொங்கி கொண்டிருக்கின்றது. திரும்பி பார்க்கின்றேன் . யாரும் இல்லை. இப்போது என் எதிரில் ஆசிரியர்கள் குழுவாக குழுமி இருக்கின்றனர். அனைவர் கையிலும் துப்பாக்கி. வெல்கம் என்று அவர்கள் மொழியில் அழைக்கின்றார்கள். புரிகின்ற அந்த நொடிப்பொழுதில் என் கைகளிலும் ஒரு துப்பாக்கி தரப்படுகின்றது. நீங்கள் இப்போது துப்பாக்கி லைசன்ஸ் பெறுவதற்கான பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ளீர்கள் என்றபடி துப்பாக்கியை தந்து செல்கின்றான், மீசையை முழுவதுமாக வழித்திருந்த அழகான உயர்ந்த அந்த இராணுவ வீரன்.

துப்பாக்கி லேட்டஸ்ட் வெர்சன் கை துப்பாக்கி. ஏதோ பெயர் சொன்னார். வாயில் நுழையவில்லை. துப்பாக்கியின் பெயரா முக்கியம் எப்படி சுடுவது என்பது தான் முக்கியம் ! கைகளை நன்றாக உயர்த்தி எதிரே இருக்கும் பொம்மையை பார்க்கின்றேன். என் எதிரில் இருக்கும் பொம்மையை தவிர , மற்ற அனைவரும் சுடுவதற்கு வைத்துள்ள பொம்மைகளாக நானே காட்சி தருகின்றேன். கண்களை குறிபார்த்து சுட கற்று தருகின்றார். விசையை அழுத்த சொல்கின்றார். அனைவரும் ஒரே மாதிரியாக ஒரே இடத்தில் சுடுகின்றார்கள். இப்போது என் இதயத்தில் இருந்து இரத்தம் வழிகின்றது. 132 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. புகைப்படத்தை பார்க்கின்றேன், வீல் என்று அழறுகின்றேன். குமட்டல் எடுக்கிறது. குடல் வெளிவந்து விடுவது போல் இருக்கின்றது. கதறி அழுகின்றேன். நீங்கள் துப்பாக்கி உபயோகிப்பதை பற்றி அறிந்து கொண்டீர்கள் ! இனி உங்களால் சுடமுடியும். நீங்கள் மிக பலவீனமான இதயம் படைத்தவர். இனி நீங்கள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்து செல்லலாம் என்றார்.

இப்போது யோசித்து பார்த்தேன். கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.. பாவம். தலைமையாசிரியர், அதிகாரிகள் .அதைவிட குழந்தைகளை நினைத்தால் பயமாக தான் இருக்கின்றது.

என் வகுப்பறை குழந்தைகள் பயிலும் அந்த பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றேன். நான் என் வகுப்பறைக்குள் நுழையும் முன் , ஆசிரியர்கள் எப்படி கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என பார்வையிட செல்கின்றேன். ஒவ்வொருவர் டேபிளிலும் துப்பாக்கி. அதுவும் குண்டுகள் நிரப்பப்பட்டு. ஆஹா என்னோடு எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுப்படும் அந்த ஆசிரியர், என்னை பார்த்ததும், “ ஒழுங்க இருங்கடா...பள்ளிக்கூடம் வந்தோமாஆ.படிச்சமா (அது மட்டும் மிகவும் லேசான குரலில் ). பேசாம போனாமான்னு இருங்க “ என துப்பாக்கியை தூக்கி பிடித்தப்படி என் காது பட காத்துகின்றார். அப்போது நினைத்து கொண்டேன், என் சாவு துப்பாக்கியால் தான் நிகழும் என்பதை.

இவரை விட எனக்கு இன்னும் பயமா இருந்தது. அந்த ஆசிரியை நினைத்து தான்! எப்போது அவர் வகுப்பை பார்வையிட்டாலும் ஏதாவது ஒரு குறையை சுட்டி காட்ட வேண்டியது வரும். நான் சென்ற பின் அந்த வகுப்பில், (துப்பாக்கி இல்லாத சமயத்திலே ) டம் டும் என வெடி வெடிக்கும். உங்களாளத்தான் சனியங்களா..நான் திட்டு வாங்குறேன். நான் கேட்டப்ப நல்லா தானே பதில் சொன்ன..இப்ப என்ன வந்துச்சு.என தன் கைகளில் ரேகைகளை முதுகில் பதிப்பார். பல பாராட்டுகளை சொல்லி ஒரிரு குறைகள் சுட்டிக்காட்டினாலும் அந்த வகுப்பில் அதே நிலைத்தான். அவர் வகுப்புக்கு முன் நிற்கின்றேன். எப்போதும் போல் அவர் தனது ஆயுதத்தை மறைத்தே வைத்திருந்தார்.

இவரை விட கொடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் அதை விட மோசம். எப்போதும் இவருக்கு உதவியாக ஒருவன் பணி செய்து கொண்டே இருப்பான். அவர் பாடம் நடத்தும் போது, யாராவது திரும்பி பார்த்தால், இவன், அவனை பெண்டு கழட்டி விடுவான். எழுதும் போது பேசினால், மண்டையில் கொட்டி விடுவான். இப்போது அந்த ஆசிரியர் வகுப்பில் நிற்கின்றேன். அய்யோ .. அந்த ஆசிரியரின் துப்பாக்கி நான் நினைத்தப்படியே அவனின் கையில் !

இப்படி எல்லா வகுப்புகளையும் கடந்து வந்து கொண்டிருந்தேன். எல்லா துப்பாக்கிகளும் என்னை நோக்கியப்படியே இருப்பதை நினைத்தேன். மனசு பதறியது. என்னை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டேன். காரணம் உண்டு.

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில எழுத்து தெரியவில்லை. வகுப்பில் பாதி மாணவர்கள் வாசிக்க தெரியவில்லை. காரணம் கேட்டால், அதற்கு முன்பு உள்ள வகுப்பில் கற்று தரவில்லை என்று காரணம் கூறிகிறார், வகுப்பாசிரியர். அவருக்கு விளக்கம் கேட்ட அதிகாரியின் மீது சாதி பெயரை சொல்லி திட்டுகின்றார் என காவல் துறையில் புகார் பதிந்தது இல்லாமல், மிரட்டல் விடுக்கும் நண்பர்களை நினைத்து சந்தோசப்பட்டேன். என்னை விட அவர்கள் நிலை தான் மோசம்.

இப்போது என் அறையில் அமர்கின்றேன். வேகமாக வந்த ஆசிரியை, தன் கை துப்பாக்கி உள்ளதா என சரிபார்த்தார். தனது துப்பாக்கியை பற்றி விரிவாக சொன்னார். அதன் வேகம். அதன் சிறப்பு. சுடும் போது சத்தம் எழுப்பாத தன்மை. நான் தலையாட்டியப்படி கேட்டு கொண்டிருந்தேன். இப்போது மெதுவாக துப்பாக்கியை துடைத்து கொண்டே..ஒரு மாத விடுப்பு கேட்டார். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. தலையாட்டி சம்மதம் தெரிவிப்பதை தவிர்த்து.

தீவிர வாத கும்பலிடம் மாட்டிக் கொண்டவன் போன்ற உணர்வை தந்தது. கிள்ளி பார்த்தேன். மீண்டும் வகுப்பறையை பார்வையிட வேண்டும் என்று தோன்றியது. உற்று பார்க்கின்றேன். அவர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை. ஆனால் இப்போது என்னை இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தப்படி அழைத்து சென்றனர்.

“உங்களுக்கு துப்பாக்கி பயன்படுத்த தெரியவில்லை. அதனை வைத்து கொள்ளவும் பயப்படுகின்றீர்கள்.உங்களை நம்பி இத்தனை குழந்தைகளை அனுப்புவது ! உங்களால் ஆசிரியர் பணியை தவிர வேறு எந்த பணியும் செய்ய இயலாது. ஆகவே,...”

“வகுப்பறைக்குள் துப்பாக்கி தேவையில்லை. தப்பை குச்சிகளையே பயன்படுத்த கூடாது என்று சட்டம் இருக்கிறது. துப்பாக்கியால் நாம் நம் குழந்தைகளை காப்பாற்ற முடியுமா ? தவறான முன் உதாரணம். பள்ளிகளுக்கு கண்காணிப்பு கேமிரா பொருத்துங்கள். அலாரம் பொருத்துங்கள். அந்த அலாரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை சமிஞ்சை கொடுக்கும் விதத்தில் அமையுங்கள்”
சிரித்தார்கள்.

“உங்கள் ஆலோசனைக்கு நன்றி. எங்கள் குழந்தைகளையும் , ஆசிரியர்களையும் உங்களால் பாதுகாக்க முடியாது. ஆகவே...”

இப்போது இரணுவ வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றேன். வந்த பாதை. நினைவு படுத்துதல். அந்த பனி மலையில் நான் இறக்கி விடப்படுகின்றேன். மற்றொரு இராணுவ வண்டியில் என் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் வருகின்றனர். என்னை போல் அவர்களும் இறக்கி விடப்படுகின்றார்கள். வாருங்கள் நாம் நம் பள்ளிக்கூடத்திற்கு செல்வோம் என்கின்றேன்.

இப்போது அனைவரும் சிரிக்கின்றனர்.

நீங்கள் செல்ல வேண்டிய இடம் அது அல்ல என்றார்கள்.
அனைவரும் தங்கள் கை துப்பாக்கியை எடுத்தனர்.
எனக்கு புரிந்து போயிற்று.
டம் டம் டம்..டம்..
இரத்த வெள்ளத்தில் மிதக்கின்றேன்.
”கதவை எத்தனை தடவ தட்டுறது. நைட்டு தேவையில்லாத விசயத்தை படிச்சிட்டு..யோசிச்சு கிட்டே படுக்க வேண்டியது...விடிஞ்சது கூட தெரியாம தூங்க வேண்டியது...ஜன்னலை திறந்து தண்ணீயை ஊத்து ...”
முகத்தில் வடியும் நீரை துடைத்தப்படி எழுந்திருக்கின்றேன். இப்போது பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்!
மதுரை சரவணன்..

Monday, February 9, 2015

இது காதலர்கள் படிக்க கூடாத பதிவு...!


என் பெயர் தாஜ்மஹால். அப்படித்தான் அழைக்கின்றார்கள். நான் பிறந்த போது சிவப்பாக இருந்தேன். அந்த பனி இரவில் நடுங்கியப்படி இருக்கின்றேன்.
என்னருகில் போர்டியாக்ஸ், அவலாஞ்சி, பீட்ச் அவலாஞ்சி, ரெட்கார்விட்டி,ரயல் சர்க்கஸ் இருக்கின்றனர். ஆம் அவர்கள் பெயர் அது தான். ஒவ்வொரு முறையும் யாராவது வரும் போது அப்படி தான் பெயர் சொல்லி அழைத்து சென்றார்கள்.
என் நண்பர்கள் பேசிக்கொண்டதை கேட்டு கொண்டிருந்தேன். வேலண்டைன் பாதிரியார் பற்றி பேசி கொண்டு இருந்தனர். ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது நான் இன்னும் ஒரிரு தினங்கள் தான் உயிரோடு இருப்பேன்!
காதல் காதல் என்று அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. காதல் போகின் சாதல் நன்று ! என்றார்கள். காற்றில் பறந்து வந்த செய்திதாளில் இளவரசன் இரயிலில் மோதி கிடக்கும் படம் ஒன்று கண்டேன். அந்த செய்தியையும் படித்துள்ளேன்.
காதல் என்றால் என்ன? என்று கேட்க நினைத்தேன். என் மனக்குரல் எப்படியோ அவலாஞ்சி காதில் விழுந்து விட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் காதல் என்றது. ஏன் முட்டாள் மாதிரி உளறு கிறாய் என்றேன். யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு பார் ! காதலுக்கு அர்த்தம் இப்படி தான் கூறுவார்கள் என்று என்னை கடிந்து கொண்டது.
சென்ற முறை உன் சகோதரி பீட்ச் அவலாஞ்சி யை பொக்கேவாக செய்து சென்றவனை கவனித்தாயா? என்றேன்.
பார்த்தேன். தான் காதலிக்கும் பெண்ணுக்கு , காதல் பரிசாக பொக்கே வாங்கி சென்றான் என்றது.
அங்கு தான் ஒன்றை மறந்து விட்டாய். அவன் போனில் பேசிய பெண்ணின் பெயரும் , அந்த பொக்கையில் இருந்த பெண்ணின் பெயரும் ஒன்றாக இல்லை. ஒருவன் போனில் ஒருவரையும், நேரில் ஒருவரையும், காதலிப்பது தான் காதல் என்றேன். உன் கண்ணில் தான் இந்த மாதிரி விசயங்கள் படுகின்றது என சிரித்தது போர்டியாக்ஸ்.
உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. உலகம் வேகமாக சுழன்று கொண்டு இருக்கின்றது. தகவல் புரட்சியில் இன்று வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர், வாய்ஸ் சார்ட் என பல உருவாகி விட்டன. ஒவ்வொன்றிலும் பல பெண்களை ஆண்களும், ஆண்களை பல பெண்களும் லவ் பண்ண தொடங்கி விட்டனர். லவ் என்பது நுகர்பொருளாகி விட்டது என்றது ராயல் சர்க்கஸ்.
பாவம் அந்த பாதரியார். அவர் பெயரை சொல்லி அன்பை கொச்சைப்படுத்துவது தெரிந்தால் நொந்து போய் இருப்பார் என்றேன்.
காதல் என்பது அன்பை உள்ளத்தால் மீட்டு எடுப்பது என்பதை தாண்டி உடலால் தீண்டி பெறுவது என்றாகி விட்டது. அதற்கு இந்த காதலர் தினம் உதவி செய்யும் கருவி என்றது ரெட்கார்விட்டி.
உண்மையான காதலர்கள் இருக்கின்றார்களே! அவர்கள் பாவம் தானே. இந்த மாதிரி இழிவானவர்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றார்களே! அதனால் தான் காதலர்கள் கூடும் இடத்தில் சிலர் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள் என்றேன்.
நீ உண்மையான காதலை பற்றி பேசுவதால் தான் உனக்கு தாஜ்மஹால் என பெயர் வைத்துள்ளனர் என்றது ராயல் சர்க்கஸ்.
நான் குளிரில் நடுங்கி கொண்டிருப்பதற்கு காரணம் உங்களுக்கு புரிந்து இருக்கும். எனக்கு கவலையாக இருக்கின்றது. இன்னும் ஓரிரு தினங்களில் என்னை பறித்து விடுவார்கள். நான் உண்மையான காதலுக்கு பரிசாக அமைய வேண்டும். இந்த மாதிரி மொல்லமாரி காதலுக்கு உபகரணமாக இருந்து விடக்கூடாது !
உங்களில் யாராவது உண்மையான காதலர்களாக இருக்கின்றீர்களா? தயவு செய்து இதை படிப்பீர்களானால், ஓசூரில் இருக்கின்றேன். வந்து பறித்து செல்லுங்கள். உங்கள் உள்ளங்களில் என்றும் உயிரோடு இருப்பேன். காதலின் நினைவு பரிசாக இருப்பேன். உண்மையான காதல் காதலர்கள் கொடுக்கும் முதல் பரிசை மறப்பதில்லை !
உண்மையான காதலுக்காக காத்திருக்கின்றேன்.
மதுரை சரவணன்.