Thursday, December 19, 2013

தமிழகத்தில் சி.சி.இ….. ! மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் சி.சி.இ.


     சி.சி.இ … தமிழக மாணவர்கள் , பெற்றோர்கள் உச்சரிக்க தொடங்கியிருக்கும் வார்த்தை. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்பதன் சுருக்கம் தான் சி.சி.இ. மாணவர்களை ஆசிரியர்கள் இதுவரை முழுமையாக மதிப்பீடு செய்யவில்லையா? அது என்ன தொடர்ச்சி…? என்ற விபரங்களை தெரிந்துக் கொள்ளும் முன் இது எப்படி வந்தது என்று பார்ப்போம்.
ஆர்.டி.இ என்னும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மாணவர்களுக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதம் தான் இந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு. சி.சி.இ என்பது கல்வி மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவன் காட்டும் ஈடுபாடு, ஆர்வம், முயற்சி, ஒழுங்குமுறை, செயல்திறன், ஆளுமை வளர்ச்சி என உடல், மனம், சமூகம் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடுதலாகும்.   
சற்றுப் புரியும் படி சொல்வதென்றால், முழுஆண்டுத்தேர்வு என்று ஒன்றை வைத்து மாணவனின் அடைவுத்திறனை மதிப்பிடுவது  தவிர்க்கப்பட்டு, கற்றல் நடைப்பெறும் போதே மாணவனை தொடர்ந்தும், குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மதிப்பீடு செய்தலாகும். இதனால், மாணவனுக்கு தேர்வு பயம் முற்றிலும் நீங்குகிறது. மாணவன் அறியாமலே, அவன் மதிப்பிடப் படுகிறான். அதனால், ஆசிரியர் அவனின் மதிப்பீட்டை கொண்டு, அவனுக்கு தேவையான உதவிகளை செய்ய முடிகிறது .அதனால் மாணவனின் கற்றல் மேம்பாடு அடைவதுடன் , கற்றலில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, பள்ளி வருகை சதவீதம் அதிகரிக்கிறது. தோல்வியும் தவிர்க்கப்படுகிறது.
   அட ஆமாங்க … பெயில் ஆக்க மாட்டாங்க… சாரி பெயில் ஆக மாட்டான். எத்தனைப் பேர் தோல்வியால் அவமானம் அடைந்து, மீண்டும் அதே வகுப்பில் தன்னை விட வயது குறைந்தவர்கள் அல்லது தம்பியுடன் சேர்ந்து படிப்பதற்கு அஞ்சி அல்லது கூசி  , இடைநிற்றல் () அடைந்துள்ளதை , அதாங்க பள்ளியை விட்டு நின்று விடுவதை , ஓடிவிடுவதை பார்த்திருக்கிறோம். அவையெல்லாம் முற்றிலும் தவிர்க்கப் பட்டு, மாணவன் ஆசையுடன் செல்ல வழிவகைசெய்கிறது இந்த சி.சி.இ.

அது சரி… எல்லாரும் பாஸ் . அப்புறம் எப்படி வாத்தியார்  பாடம் சிறப்பா சொல்லிக் கொடுப்பாரு… பையன் படிப்பான்…ன்னு இழுக்கிறது தெரியுது…! குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அத்தியாம் 4 , பிரிவு 24  படி ஆசிரியர் பள்ளிக்குத் தொடர்ச்சியாகவும் உரிய நேரப்படியும் வருதல், கலைத்திட்டத்தை முடித்தல், முழு கலைத்திட்டத்தையும் வரையறுக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்தல், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனையும் மதிப்பிடுதல் , தேவைப்படுமானால் கூடுதல் பயிற்சி வழங்கி ஈடு செய்தல், பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளருடன் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி, குழந்தையின் தொடர்ச்சியான வருகை, கற்றல் திறன், கற்றலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இதர பொருத்தமான தகவல்களைத் தெரிவித்தல் ஆசிரியரின் கடமை என கூறுகிறது. இக்கடமைகளை செய்யத்தவறினால் அவர் மீது பொருத்தமான பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தலாம் என உறுதியளிக்கிறது. அது மட்டுமல்ல பிரிவு 29 மதிப்பீட்டு முறை குறித்தும் , அதை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து விளக்கப்பட்டுள்ளது.
அட சட்டத்தை விடுங்க… தற்போதைய கல்வி முறையில் பாட போதனாமுறை செயல்வழிக்கற்றல் முறையை கொண்டுள்ளதால், அதாவது மாணவனை மையப்படுத்துவதாக உள்ளதால், ஆசிரியரை மட்டுமே மையமாக கொண்டு கற்பித்தல் நடைப்பெறாமல், ஆசிரியர் மாணவனுக்கு கற்க உதவியாக இருப்பதால், ஆசிரியர் மாணவர் உறவு சுமூகமாக இருக்கிறது. சக மாணவன் உதவியுடன் கற்பதால் , கற்றல் பயம் நீங்கி, உந்துதல் ஏற்பட்டு கற்றல் இனிமையாகிறது.  அதுவே , ஆசிரியர் அவனின் செயல்பாடுகளை எளிமையாக மதிப்ப்பீடு செய்து, மாணவனின் கற்றல் சிறக்க உதவியாக இருக்கிறார் .

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு இரண்டு பிரிவுகளில்  மதிப்பிடப்படுகிறது. அவை வளரறி மதிப்பீடு(40) மற்றும் தொகுத்தறி மதிப்பீடு(60) ஆகும்.வளரறி மதிப்பீடு(அ) 20 மதிப்பெண்கள் .இதுவே எப்.ஏ. (ஏ) எனப்படுகிறது. கற்றலில் குழந்தையின் தன்னார்வம், பங்கேற்றல், முயற்சி, ஆர்வம், ஈடுபாடு , மகிழ்ச்சி ஆகியவற்றை அளவிடுகிறது. சிறு குழு மதிப்பீட்டை உள்ளடக்கியது. ஆசிரியரின் உற்று நோக்கல், இடைவினையாற்றலை அடிப்படையாக கொண்டு மதிப்பிடுகிறது. எ.கா., பாடுதல், திரும்பக்கூறுதல், பங்கேற்று நடித்தல், பொம்மலாட்டம். செயல்திட்டங்களும் எஃப்.ஏ(ஏ) மதிப்பீடு வகையைச் சேர்ந்தது. அதில் மாதிரிகள் தயாரித்தல், கைவினைப் பொருள்கள் செய்தல், தகவல்கள் திரட்டுதல், பாடத்தொகுப்பு தயாரித்தல்,நேர்காணல், மேற்கோள்கள் திரட்டுதல், அகரமுதலியைப் பயன்படுத்துதல், துண்டுப்புத்தகம் தயாரித்தல் போன்றவைகள் அடங்கும்.
வளரறி மதிப்பீடு(ஆ) 20 மதிப்பெண்கள். இது குறிப்பிட்ட பாடப்பொருள்/ அலகில் மாணவர்களின் கற்றலடைவை அறிய, வாய்மொழியாகவும் , சிறு எழுத்துத் தேர்வு வாயிலாகவும் மதிப்பிடலாம். நெகிழ்வு தன்மை மிக்க இம்மதிப்பீடு பருவம் முழுவதும் கற்றல் நடைபெறூம் பொழுதும் கற்றல் முடிந்த பின்னும் பல்வகை வினாக்களை அமைத்துக் கற்றலடைவைச் சோதக்கவும், குறைகளைக் கண்டறியவும், குறைதீர் கற்பித்தலுக்கு திட்டமிடவும் துணைப்புரிகிறது. எ.கா. சரியா? தவறா? , பலவுள் தேர்வு, பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, வரிசைப்படுத்துக, சொல்லைக் கேட்டு எழுதுக, சிறுவினா, குறுவினா, விடுகதைகள், புதிர்கள்.
தொகுத்தறி மதிப்பீடு 60 மதிப்பெண்கள் கொண்டது. இது பருவ இறுதியில் வினாத்தாள் திட்ட வரைவின் (புளு பிரிண்டு) அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது.  

பருவ மதிப்பீடு செய்வதால் பெற்றோர்கள் ஆசிரியரை வருடத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது சந்திக்க நேர்வதால், தங்கள் குழுந்தையின் முன்னேற்றம் குறித்து அறிய முடிகிறது, அதனால் ஆசிரியருடன் இணைந்து செயல்பட முடிகிறது.
முன்ன மாதிரி ஆண்டுக்கடைசியில பெயிலுன்னு தெரிஞ்சு, நம்ம பையனோட படிப்பு பத்தி அறிய வாத்தியாரை போய் பார்த்து, கடைசியில பையன் சரியில்லைன்னு சொல்லி படிப்ப நிறுத்துற பழைய தேர்வு முறையை தூக்கி போட்டுட்டு சி.சி.இ க்கு கை கொடுப்போம்.

(மாணவர் உலகம் மாத இதழில் வெளிவந்த கட்டுரை )

Tuesday, December 17, 2013

11 கோடிக்குழந்தைகள் காப்போம்…. !பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அடுத்தடுத்த மிகப்பெரிய அதிர்ச்சிகள் நம்மை வந்து தாக்கிக் கொண்டு இருக்கின்றன. இதற்கிடையில் பீகார் மட்டுமல்ல, பல மாநிலங்களில் தலைமையாசிரியர்கள் உணவை சாப்பிட்டு  பார்த்த அரைமணி நேரத்திற்கு பின் தான் மதிய உணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பையும் , பல இடங்களில் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. பீகார் ஆசிரியர் சங்கம் மதிய உணவு அளிப்பதை தனியாக எஜென்சி கொண்டு செயல்பட வலியுறுத்தியுள்ளது.


12 இலட்சம் பள்ளிகளில் 11 கோடி குழந்தைகள் சமைக்கப்பட்ட மதிய உணவை உண்கிறார்கள் என புள்ளி விபரம் தருகிறது, மனிதவள மேம்பாட்டுத் துறை. மதிய உணவு திட்டத்தில் ஊழல் புரையோடியுள்ளது , தரமான உணவு பொருடகள் வழங்குவது இல்லை, உணவு பொருட்களை பாதுகாக்க தகுந்த இடங்கள் போதுமானதாக இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் நாடுமுழுவதும் இருந்தாலும் , தமிழ்நாட்டை பொறுத்தவரை மதிய உணவு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்பது தான் உண்மை.

கர்மவீரர் காமராஜர் ஏழைக்குழுந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் பள்ளிக் கூடங்களில் அனைத்து குழுந்தைகளுக்கும்  இலவச மதிய உணவு வழங்குவது பற்றிமுதன்முதலாக ஆலோசித்தார்அதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையை கூட்டி ஆலோசித்து, வருவாய்த் துறையினரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து , 1955 ல் ஆரம்பிக்கப்பட்டது தான் மதிய உணவு திட்டம். இது மறைந்த முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின் வாரம் ஒரு முட்டை என இருந்தது, வாரம் இரண்டு ,மூன்று  என உயர்த்தப்பட்டு, இப்போது வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை வழங்கப்படுகின்றன.(முட்டையின் எடை குறைந்தது 46 கிராம் இருக்க வேண்டும்)
இதுதவிர கொண்டைக்கடலை , வேக வைத்த பாசி பயிறு , உருளைக்கிழங்கும் வழங்கப்படுகின்றன.  
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 55 இலட்சம் மாணவர்கள் சத்துணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
இந்தியா முழுவதும் இத்திட்டத்தினால் ஏழை மாணவர்கள் , குறிப்பாக பெண்குழுந்தைகள் உணவுக்காக பள்ளிக்கு செல்கின்றனர். மதிய உணவு அக்குழந்தைகளின் உடல் நலதிற்கு போதுமான சத்துக்களை வழங்குவதுடன், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், நாள்தவறாமல் பள்ளிக்கு வருகைபுரியவும் வகை செய்கிறது.
 ப்ரோப் (Public Report on Basic Education ) அறிக்கையான கூறுவதுயாதெனில், 84% குடியிருப்புகள் தங்கள் குழந்தைகள் மதிய உணவு பெறுவதாகவும், அங்கு வழங்கப்படும் வேறுபட்ட மெனுவை விரும்பி சாப்பிடுகின்றனர். சாப்பிடும் முன்னும் பின்னும் கை கழுவும் பழக்கத்தை பள்ளியில் கற்றுக் கொடுத்துள்ளனர். பள்ளியில் சேர்க்கையும் அதிகரித்துள்ளது என்கிறது. அசர் (Annual Status of Education Report ) 83.4% பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது (ஒருநாள் பார்வை) , ஏறக்குறைய அதே அளவில் 81.3% பள்ளிகளில் சமையல் கூடங்கள் உள்ளன. பரவலான மேம்பாட்டுடன் கிடைக்ககூடிய மதிய உணவு பள்ளியின் வருகையை அதிகரித்துள்ளது என்கிறது.


இத்திட்டம் இன்னும் வெற்றிக்கரமாக நடைப்பெற உணவு பொருட்கள் பலகட்ட சோதனைகளுக்கு பின்தான் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு பள்ளிகளில் வந்திறங்கும் உணவு பொருட்களை பாதுக்காப்பாக வைக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலங்குகள் , பூச்சிகள், புழுக்கள் ஆகியவை உணவு பொருட்களை சேதப்படுத்தாத வகையில் உணவு பாதுகாப்பு கூடங்களை உருவாக்க வேண்டும். (உணவுப்பொருட்களை பாதுகாப்பதற்கும் குழந்தைகளுக்கு தரமான ஆரோக்கியமான உணவினை வழங்குவதற்காக  5.77 இலட்சம் பாதுகாப்பு வசதியுடன் கூடிய சமையல் கூடங்கள் அமைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது ).மாவட்ட தலைவரின் நேரடிக்கட்டுப்பாட்டிலுள்ள சத்துணவு திட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சேமிப்பு கிடங்குகளிலிருந்து உணவு பொருட்கள் மதந்தோறும் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முன் , கிடங்குகளில் உணவு பொருட்களின் தன்மை பரிசோதிக்கப்பட வேண்டும். இவ்வாறன பரிசோதனை  நல்ல தரமான உணவு பொருட்களை வழங்கி , அதன் வாயிலாக தரமான உணவை மாணவர்களுக்கு வழங்க உதவிடும்.  
எது எப்படியோ இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  22 ஜீலை 2013 ல் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கைட்லைன் படி (F.NO. 1-4/2013 DESK (MDM) DEPARTMENT OF SCHOOL EDUCATION & LITERACY) தினமும் ஒரு ஆசிரியர் மற்றும் அவருடன் பள்ளியின் கல்விக்குழு உறுப்பினர் வீதம் உணவை சாப்பிட்டு பார்த்த பின்னர் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். உணவு தரம் குறித்து தனியான நோட்டு போடப்படவேண்டும். இது உணவை தரமாக மாணவர்களுக்கு வழங்கிட உதவும்.
அக்கையேட்டில் தமிழ்நாட்டில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
   


நம்  குழந்தைகள் அவர்களின் வளமான வாழ்விற்கு, பிரகாசமான எதிர்காலத்திற்கு உணவை ருசித்தப்பின் வழங்குவது நமக்கு கஷ்டமல்ல.  இக்கட்டுரையை எட்டையாபுரத்தில் காமராசர் மதியஉணவுதிட்டத்தில் பேசிய உரையுடன் முடிப்பது சிறந்தது. "அன்னதானம் நமக்குப் புதிதல்லஇதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவுஅளித்தோம்இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம்இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம்,படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விடஎனக்குமுக்கியமான வேலை வேறு இல்லைஎனவேமற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுஊர்வலமாக வந்துபகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்."
  
க.சரவணன்,பி.எஸ்.சி.,எம்.ஏ.,எம்.எட்.,
தலைமையாசிரியர்,
செல்; 934124572

இக்கட்டுரை மாணவர் உலகம் இதழுக்காக எழுதியது. 

Monday, December 16, 2013

மன அழுத்தம் நீக்கும் திறந்த புத்தக தேர்வு முறை – சாவால்ளும் ஆலோசனையும்


கட்டாய இலவசக் கல்வி சட்டம் ,அதை  தொடர்ந்து தேர்வு முறைகளில் புதிய அணுகுமுறை என  மாற்றங்களை தந்து மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று என்று நிரூபித்திக் கொண்டு இருக்கும் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி இலாக்காவின் புதிய அறிவிப்பு  திறந்த புத்தக தேர்வு முறை ஆகும்.

சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தாண்டு பத்தாம் வகுப்பிலும் அடுத்தாண்டு முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளிலும் திறந்த புத்தக தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பல கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  
மனப்பாடம் செய்யும் முறைக்கு டாட்டா காட்டி, மாணவர்கள் தாம் கற்ற பாடங்களில் புரிந்து படித்துள்ளார்களா என்பதை சோதிக்கும் விதத்திலும் , அவர்கள் சிந்தித்து பதிலளித்து, உண்மையான திறமையை வெளிப்படுத்தும் விதத்திலும் இந்த திறந்த புத்தக தேர்வு முறை அமைந்து இருக்கும்.
பலர் நினைப்பது போல புத்தகத்தை தேர்வு அறைக்கு எடுத்துச் சென்று , புத்தகத்தை வைத்து எழுதுவது கிடையாது இந்த திறந்த புத்தக தேர்வு முறை.
பல மேலை நாடுகளில் கணினி மென்பொருள் மொழிகள், பொறியியல், அறிவியல், கணிதம் மற்றும் மொழிப்பாடங்கள் போன்றவற்றிற்கு  திறந்த புத்தக தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. அதுவும் புத்தகம் கொண்டு எழுதும் தேர்வுகள் , புத்தகத்தை அப்படியே பார்த்து எழுதுவதாக அமையாது. புத்தகங்கள் உதவியுடன் , குறிப்புகள் கொண்டு வீட்டிலேயே தேர்வு எழுதும் முறையில் , நேரக் கணக்கு (time limited) உண்டு. இவை அவ்வாறு எழுதும் போது யாருடனும் கலந்து ஆலோசிக்காமலும் , பிறருடன் கலந்து ஆலோசித்தும் (Can discuss with others), ஆனால் பதிலை தானாக எழுதுவதாகவும் அமையும். இப்போது சிபிஎஸ்சி கொண்டு வந்துள்ள திறந்த புத்தக தேர்வு புத்தகங்கள் கொண்டு, குறிப்பு எடுத்து வகுப்பில் எழுதும் தேர்வாக , நேரக் கணக்குடன் இருக்கும்.
சிபிஎஸ்சி கொண்டு வந்துள்ள தேர்வு முறை Pre-Announced Test (PAT) ஆகும். நான்கு மாதங்களுக்கு முன்பே தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, வகுப்பறையில் புத்தக உதவியுடன் எழுதுவாதாக அமையும் . தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை, நேரடியாக புத்தகத்தை பார்த்து எழுதுவதாக அமையாமல், அவை மாணவனின் உயர் சிந்தனை திறனை சோதிப்பதாக அமையும்.  

திறந்த புத்தக தேர்வு முறையை பொருத்தவரை மாணவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1.இந்த தேர்வு தாங்கள் படித்த விசயத்தை நினைவு படுத்துவதாகவோ , தங்களின் மனப்பாட திறனை சோதிப்பதாக அமையாது. தாங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடம் சார்ந்த திறனை புதிய சூழலில் பொருத்திப் பார்ப்பதாகவும், பிற சூழலுடன் ஒப்பிட்டு பார்பதாகவும், தாங்கள் கற்றதை ஒரு ஆதாரமாக பயன்படுத்துவதாகவும் தேர்வுகள் அமையலாம்.

2. தேர்வுக்கு தயாராக வேண்டிய அவசியமில்லை என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் தேர்வை எழுதி முடிக்க வேண்டி உள்ளதால், தேர்வுக்குரிய பாடப்பகுதிகளை நன்கு படித்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குறிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். அப்போது  தான் தேர்வுகளில் பதிலளிக்கும் போது தேவையான விவரங்களை வழங்கவும், உதாரணங்களை எடுத்துரைக்கவும், உங்கள் விவாதத்திற்கு தேவையான புள்ளிவிபரங்களை வழங்கவும் எளிதாக அமையும்.

3. தேர்வுக்கான தயாரிப்புகள் தற்போதைய தகவல்களுடன் ஒத்து போவதாக அமைந்திருத்தல் அவசியம். புத்தகத்தை படித்து , குறிப்புகளை சுருக்கமாகவும், நம்பிக்கையுடனும் , திட்டமிட்டும் தயாரித்து கொள்ளுங்கள். உங்களின் சொந்த கருத்துகளை எழுதுவதன் மூலமும், சரியான கேள்விகளை தேர்ந்தேடுத்து, எதிர்ப்பார்க்கும் பதில்களை ஆதாரங்களுடன் ,உங்களின் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெறலாம்.

4. தேர்வுக்கான கேள்விகள் எந்த மாதிரி அமையலாம் என மாதிரி வினாத்தாள்களை வாங்கி பாருங்கள். ஒருபோதும் மாதிரி வினாவிடைகளை படிக்காதீர்கள். அது உங்களின் சிந்தனைக்கு தடையாக அமையலாம். இது உயர் சிந்தனைத் திறனை சோதிப்பதற்கான தேர்வு என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.

5.  உங்கள் பதில்களில் முக்கியமானவைகளை கலர் பேனாவால் அடிக்கோடிடவும். மன வரைப்படம் (கான்சப்ட் மேப்) முடிந்தால் வரையலாம்.தலைப்புகள் ,உப தலைப்புகள், முக்கியமான தகவல்கள் ஆகியவற்றில் அடிக்கோடிடவும். இது எளிதாக மதிப்பிட உதவும். தங்களின் மேல் மதிப்பீட்டாளருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
  
6.  வினாத்தாளை முழுமையாக வாசிக்கவும். எந்த மாதிரியான பதிலை நம்மிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை முடிவு செய்யவும். கேட்கப்பட்ட கேள்விகளில் எவை மிகவும் எளிதானதாகவும் , அதற்கு தேவையான போதுமான அளவு பதில்களை அளிக்க முடியும் என்பதை முடிவு செய்து அதற்கான பதிலை எழுத ஆரம்பிக்கவும். இது நமக்கு நம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, தேவையில்ல பயத்தை பதட்டத்தை போக்க உதவியாக இருக்கும். காலக் கொடுவுக்குள் தேர்வினை எழுதி முடிக்கும் விதத்தில் வினாவுக்கான பதிலை குறிப்பிட்ட காலத்திற்குள் எழுதி முடிக்க முன்கூட்டியே தீர்மானிக்கவும். இது அதிக மதிப்பெண்ணை பெற்று தரும்.  
  
திறந்த புத்தக தேர்வு மாணவனுக்கு சிசிஇ மதிப்பீட்டு முறையில் மேலும் 20 மதிப்பெண்களை பெற்று தருவதாக அமைந்துள்ளது. திறன்கள் அடிப்படையில் மதிப்பிடப்படும் இந்த மதிப்பீட்டு முறை உண்மையான திறமையான மாணவர்களை அடையாளம் காட்டும். புரிந்து படிப்பதற்கு அடிப்படையாக அமையும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து , மாணவர்களின் உயர் சிந்தனை அறிவு திறனை சோதிக்கும் கேள்விகள் தயாரிக்க பயற்சிகள் வழங்கும் பட்சத்தில் , திறந்த புத்தக தேர்வு பாராட்ட தக்கதாக அமையும். விரைவில் தமிழகத்திலும் இம்முறையிலான மதிப்பீட்டை எதிர்ப்பாக்கலாம்.  

Sunday, December 15, 2013

நல்லாசிரியர் விருது கிடைக்க சில வழிமுறைகள்


   இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தால் அவரை இழந்து விட்டாதீர்கள். அவரை பற்றி உங்கள் பிற மாணவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். பெற்றோர்களை அழைத்து சென்று பாராட்டுங்கள். தலைமையாசிரியர் , அதிகாரிகளிடம் எடுத்து சொல்லுங்கள். அதுவே அவருக்கு கிடைக்கும் நல்லாசிரியர் விருது.
1.   நீங்கள் வகுப்பறையில் கோபம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டாலும் , எல்லை மீறி கோபம் உண்டாக்கினாலும், உங்கள் மீது வன்முறையை உபயோகிக்காமல், அமைதியாய், அன்பால் உங்களை திருத்த முற்படுவார்.
2.   உங்களின் மோசமான எழுத்துக்களை பார்த்து, கேலி பேசாமல், பிறரிடம் உங்களின் எழுத்துக்களை காட்டி எள்ளி நகையாடாமல், இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அழகாக எழுதி விடலாம் என்று பாராட்டி, எவ்வாறு அழகாக எழுத வேண்டும் என்றும் எழுதி காட்டி நம்மை பழக்கப்படுத்துவார். நம்மை திருத்தி அழகாக எழுதச் செய்பவர்.
3.   எப்படிப்பட்ட தருணத்திலும் உங்களை பிற மாணவனுடன் ஒப்பிட்டு பேச மாட்டார். பிற மாணவரை உதாரணம் காட்டி நம்மை சூடு ஏற்றி , வெறுப்பை உண்டாக்க மாட்டார். நம்மிடம் உள்ள தனித்திறமையை கண்டு பிடித்து பாராட்டுபவர்.
4.   எல்லா தருணங்களிலும் சிரித்த முகத்துடன் நம்மிடம் உள்ள குறைகளை கூட நிறைகளாக காட்டி, நம்மை குறிக்கோளை நோக்கி செயல்பட வைப்பவர்.
5.   உங்கள் முகத்தில் மாறுதல் ஏற்பட்டால், உங்கள் முகம் வாடியிருந்தால், அன்னையை போல அரவணைத்து நம் முக வாட்டத்தை போக்குபவர். ஆதரவாக பேசுபவர்.
6.   உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிறைகளை பெறுமையாக பேசுவார். அதே நேரம் உங்கள் தவறுகளை நேரடியாக குறைகளாக கூறாமல், இவைகள்( குறைகளாக இருப்பவையெல்லாம்) இப்படி இருந்திருந்தால் முதல் மாணவனாக உருவாக வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டுபவர்.
7.   பிற ஆசிரியர்கள் அடித்து  அல்லது திட்டி நீங்கள் அழுவதைப் பார்த்தால், அவரும் அழுதுவிடுவார் அல்லது மனம் வருத்தப்படுவார். அடுத்த முறை அடித்த ஆசிரியர்  பாராட்டும்படி நீ நன்றாக படிக்க வேண்டும் என்று உற்சாகமூட்டுபவர்.
8.   மாணவர்களுக்கு மட்டுமல்லாது , பிற ஆசிரியர்களுக்கும் முன் உதாரணமாக செயல்படுபவர். நேர மேலாண்மையில் சரியாக பயன்படுத்தி, நேரம்தவறாமையை கடைப்பிடிப்பவர். நம்மையும் கடைபிடிக்க தூண்டுபவர்.
9.   உங்களை மாணவனாக கருதி தள்ளி வைக்காமல் , நண்பனாக கருதி பழகுபவர் அதே நேரத்தில் நம்மை மரியாதையால், நம்மை ஆசிரியருக்குரிய மரியாதையுடன் நடக்க செய்பவர்.
10. பாட புத்தகங்களை திறக்காமல், துணைக்கருவிகளுடன் , மாணவர் மையப்படுத்தியதாக கற்பித்தல் பணிபுரிபவர். கதைகள் கூறி மாணவர்கள் இதயத்தை இடம்பிடிப்பவர்.
11. நீங்கள் அவருக்கு ஏற்றார் போல மாற வேண்டும் என கண்டிசன் போடமாட்டார். ஆனால் நாம் எதிர்பார்பது போல அவரே மாறி , நம்மில் ஒருவராக இருந்து நம் முன்னோற்றத்தில் உதவிபுரிபவர்.
12. நீங்கள் அவர் வகுப்பிலிருந்து மாறி சென்றாலும், நம்மீது அக்கறை மாறாமல் இருப்பவர். நம்மை பற்றி எப்போதும் விசாரித்து , நம் முன்னோற்றத்தில் அக்கறைக் கொள்பவர். தகுந்த ஆலோசனைகளைக் கூறுபவர்.

Friday, December 13, 2013

தேசத்தின் வெற்றிக்குறியீடு சச்சின்...!
----------------------------------------------------------------------
22 கஜங்கள் , 24 ஆண்டுகள் கொடுத்திருப்பது பாரத ரத்னா. இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு மிகவும் உன்னதமானது.

நமது காலத்தில் வாழும் சூப்பர் ஹீரோ சச்சின். பெரும்பாலான கிரிக்கெட் சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பவர் அவர். இந்தியாவில் அவரை கிரிக்கெட் கடவுளாக ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட்  முன்னால் கேப்டன் மைக் ஆதர்டன்.
25 ஆண்டுகளுக்கு முன் மைதானத்தை தொட்டு கும்பிட்டு விளையாட தொடங்கிய சச்சின் , தனது கடைசி போட்டியை விளையாடிய வான்கடே ஸ்டேடியத்தில் தான் உலக கோப்பையை பெற்று தந்தார். சச்சின் சச்சின் என்று ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்களின் உணர்ச்சிகளால் நிரம்பியிருந்த அந்த தருணங்களை மறக்க முடியாது.
பலரும் கிரிக்கெட் விளையாட இவரின் விளையாட்டை பார்த்து தான் வந்திருப்பர். கிரிக்கெட் விளையாட்டை பற்றி தெரியாதவர்கள் கூட இவரின் விளையாட்டை பார்த்தால், கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டு விடுவார்கள். குறிப்பாக இவர் பின் காலில் சென்று ஆடும் கவர் டிரைவ், நான்கு ரன்களை அள்ளித்தரும் இவருக்கே உரித்தான ஸ்ட்ரெய்ட் டிரைவ் பார்க்க பார்க்க அழகாக இருக்கும். இவர் விளையாடிய ஆரம்பகாலங்களில், இவர் ஆடினால் ,இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கணித்து வைத்து இருந்தனர். இவர் ஆட்டம் இழந்தால் டிவி பெட்டியை முடிவைத்து சென்ற காலங்களும் உண்டு. எதிர் அணியினரும் அப்படி தான் கருதினர். சச்சினை அவுட் ஆக்கினால் போதும், இந்தியாவை வென்று விடலாம் என நினைத்தனர். 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வெற்றிக்குறியீடாக விளங்கினார்.
200 போட்டிகள் , 100 சதங்கள் , என பல சாதனைகள் தன்னகத்தே கொண்ட சச்சின் முன்னேற்றத்தின் காரணம் பயிற்சி மட்டுமே.  கடைசி போட்டியிலும் வலைப்பயிற்சி எடுத்து கொண்டதில் இருந்து அவரின் கடின உழைப்பு நிரூபணமாகின்றது.     
உடல் காயங்களுக்கு நடுவிலும் அவர் தமது ஆட்டத்தின் திறனை வெளிப்படுத்த தவறியதில்லை. அவர் சந்தர்பத்திற்கு ஏற்ப தன் ஆட்டத்தினை தகவமைத்து கொள்ளும் திறன் பெற்று இருந்தார்.
2007 , 2009, 2010 ஆண்டுகளில் சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் இவர் ஓய்வு பெற வேண்டும் என குரல்கள் ஒலித்தன. 2009ல் ஆஸ்திரேலியாவுடன் அதிவேக 175 ரன்களை எடுத்து , தனது திறமையை நிருப்பித்தார். 2010ல் ஆப்ரிக்காவுடன்  ஒருநாள் போட்டியில் 200 ரன்களை எடுத்து உலகசாதனை படைத்தார்.
2011 ல் தன் திறமையால் உலக கோப்பை பெற்று தந்தார். அத்தொடரில் அதிக ரன் குவித்த முதல் இரண்டு வீரர்களில் சச்சினும் ஒருவர். பல தடுமாற்றங்களுக்கு நடுவில் தனது 100வது சதத்தை வங்காளதேச அணியுடன் அடித்து முடித்தார்.
சரி இவரின் வாழ்க்கை பாடம் நமக்கு கற்றுத்தருவது என்ன? எந்த தருணத்திலும் அவர் அவப் பெயரை எடுத்ததில்லை. அவர் மீது எந்த தருணங்களிலும் குற்றங்கள் எழவில்லை. எந்த சர்சையிலும் மாட்டிக்கொள்ள வில்லை.  
அவர் கடைசியாக நிகழ்த்திய உரையில் இருந்து அவர் கொண்டுள்ள ஒழுக்க நெறிகள் அல்லது சாதனைகளுக்கு காரணத்தை பின்வருமாறு பட்டியலிடலாம்.
1.   நீ குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் சென்று அடைய வேண்டும் என்ற அவரின் தந்தை மொழி. – நேர்மை,
2.   தாயின் பிரார்த்தனை. –  கடவுள் நம்பிக்கை .
3.   அத்தையின் உணவு _ நல்ல ஆகாரம். உடல் திடம் பெற போதிய உணவு தேவை
4.   எதை செய்தாலும் 100 % அற்பணிப்புடன் செய் ( அண்ணன் அறிவுரை)
5.   நல்ல துணை. ( மனைவி அஞ்சலி)
6.   குரு மீது பற்று ( அச்ரேகர் குறித்து பேச்சு)
7.   நாட்டுக்காக விளையாடுதல்
8.   பிற விளையாட்டு வீரர்களுடன் கொண்டுள்ள இணக்கமான உறவு( சக வீரர்களுக்கு நன்றி கூறும் பேச்சு)
9.   மன்னிப்பு கேட்கும் குணம். ( விடுபட்டவர்களுக்காக மன்னிப்பு குறித்த பேச்சு)
10.  நன்றி கூறும் பண்பு ( பள்ளி நாட்களின் விளையாடிய தோழர்களுக்கு நன்றி கூறல்)

சச்சின் பாரத ரத்னாவுக்கு பொருத்தமானவரா என கேட்பவர்கள், பாரதத்தின் ரத்தினங்களுள் சச்சினும் ஒருவர் என்பதை மறுக்க மாட்டார்கள்.


கால்பந்து ஜாம்பவான் பீலேவின் 1,281 சர்வதேச கோல்கள், டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரின் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், சர் ஸ்டீவ் ரெட்கிரேவ்ஸின் 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் ஆகியவற்றுக்கு நிகரானது சச்சினின் சாதனை என்று மிர்ரர் இதழில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ஆகவே சச்சின் பாரதத்தின் மதிப்பு மிகுந்த ரத்தினம் என்பதை ஒப்புக்கொள்வோம். அவர் வாழ்க்கை வரும் இளைய தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.

மதுரை சரவணன்.

Thursday, December 12, 2013

எங்கிருந்து தொடங்குவது … ...!(குழந்தைகளை பாலியல் குற்றங்கள் இருந்து காப்போம்.)


   பள்ளிக்கல்வி துறை வகுப்பில் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது , அப்படி வந்தால், ஆசிரியர்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டு , பள்ளி முடிந்து, வீட்டுக்க  அனுப்பும் போது எச்சரித்து திருப்பி கொடுக்க வேண்டும் என்கிறது. இச்செய்தியை பகிர்வதற்கான அவசியம் இருக்கிறது. இன்று செய்தி தாள்களின் பக்கங்களை சிறுவர்களின் மீது ஏற்படுத்தும் பாலியல் வன் கொடுமை தினம் தினம் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் உரிமை சட்டம் சொல்லும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணங்களை சீர்தூக்கி பார்த்தால் , அது வீட்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. நாம் வாங்கி தரும் ஆடைகள் மிகவும் மார்டனாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு ஆடைகளை வாங்கும் போது, நம் குழந்தைகளின் உடல் வாகுவிற்கு பொருந்தாத ஆடைகள் உடலில் பாகங்களை வெளிப்படையாக காட்டுகின்றன. மார்டன் ஆடை என்ற பெயரில் நாம் விலைகொடுப்பது, நம் குழந்தைகள் மீது செலுத்தப்படும்  வன்கொடுமைகளையும் சேர்த்து தான்.

   குழந்தைகளிடம் இருந்து தப்பி செல்ல வேண்டும் அல்லது ஏதோ ஒருவேளையை நிம்மதியாக பார்க்க வேண்டும் என்று நினைத்து டி.வி பார்க்க வைக்கின்றோம். அவர்கள் சினிமா சம்பந்தமான விசயங்களையே பார்க்கின்றனர். அதனால் மனரீதியாக சில செக்ஸ் வக்கிரங்களை அவர்களை அறியாமலே பதிந்து விடுகின்றனர்.  நாம் நம் குழந்தைகளை அண்டை அல்லது தெரிந்த நபர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் இச்சைகளுக்கு உடந்தையாக்கி,  குழந்தைகள் சீரழிந்து போகின்றன. சில சமயம் நமக்கு தெரிந்தவர்களே நம் குழந்தையை சீரழிக்கின்றனர்.

 குழந்தைகளிடம் கொடுக்கப்படும் அலைப்பேசி மிகவும் ஆபத்தனாது. அவர்கள் வரம்புக்கு மீறிய பேச்சுக்கு துணைப்போவதற்கு நாமே உதாவுவது போல் ஆகும். அதில் பதிவிறக்கம் செய்யப்படும் படங்கள் , குழந்தைகள் மனதை மிகவும் பாதிக்கின்றன. குறிப்பாக நடிகைகளின் படங்கள் வால் பேப்பர்கள் அவர்களின் மனதை அலைபாய வைக்கின்றன. அதுவே அவனை ப்ளூ பிலிம் வரை கொண்டு சென்று விடும்.

    குழந்தைகள் முன்னால் பேசப்படும் ஆபாச பேச்சுக்கள் , ஆபாச வார்த்தைக்ள் குழந்தைகளின் மனதை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. முக்கியமாக கணவன் மனைவி இருவரும் போடும் சண்டைகள் குழந்தைகளை மிகவும் பாதித்து, மனசிக்கலை உருவாக்குகின்றன. அது வெளியில் நமக்கு தெரிந்தவர்களால் அல்லது குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லும் நபர்களின் இச்சைக்கு உடன்பட வைத்து , பாலியல் குற்றங்களில் நம் குழந்தைகளை ஈடுபடுத்த நேரிடலாம்.

    இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் வேலை காரணமாக , குழந்தைகளை தனிமையில் விட்டு செல்ல நேரிடுகின்றது. எவ்வளவு தான் வீட்டை பூட்டி, மிகவும் பாதுகாப்பாக இருந்தாலும் குழந்தைகளின் மனதை பாதிக்கின்றன. தனிமை குழந்தைகளிடம் மனசிதைவை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகள் அன்புக்காக ஏங்கி தவிக்கின்றனர். ஆகவே,குழந்தைகளிடம் பேசுங்கள். அவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள். நம் குழந்தைகளை எந்த புறக்காரணிகளும் பாதிக்காது.


    தமிழ்நாட்டில் பெருகி வரும் மதுக்கடைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சர்வேக்கள் சொல்கின்றன. ஆகவே, பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் கருதி குடிக்காமல் இருந்தல் நலம். மது அருந்துபவர்களை நம்பி நம் குழந்தைகளை ஓப்படைத்து செல்லாதீர்கள். குறிப்பாக பெண் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டாம். போதையில் என்ன செய்கின்றோம் என்பதை மறந்து நடக்க கூடும்.
  
    சினிமாவை குழந்தைகள் ஒதுக்கி வைப்பது நல்லது. ஹீரோயிசம் என்ற அடிப்படையில் குழந்தைகள் தன்னை ஒரு ஹீரோவாக உருவகம் செய்து, சண்டையில் ஈடுபடுகின்றனர் அதன் விளைவாக காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர். அது காமத்தை தூண்டும்விதமான பாடல்களால் நம் குழந்தைகளை தவறான வழியில் நடக்க செய்யலாம்.

    குழந்தைகள் கோபப் படும் படியாக பேசாதீர்கள். அவர்கள் அடிக்கடி கொள்ளும் கோபம் மனசிதைவை ஏற்படுத்த வாய்ப்பாக அமையலாம்.
இப்படி ஏறக்குறைய குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியில் வன் கொடுமைகளுக்கு குடும்ப சூழலே காரணமாக அமைவதால் , நாம் நம் குழந்தைகளை காலத்தின் அவசியம் கருதி அன்போடு, நல்ல பழக்க வழக்கத்தோடு, கோபப்படாமல், இனிமையாக பேசி, வீட்டில் புத்தகங்கள் நிறைந்து நம் குழந்தைகளோடு டிவி தவிர்த்து, பிறர் கண்களுக்கு உறுத்தாத ஆடைகள் அணிந்து, செல்போன் தவிர்த்து (கொடுக்காமல்)  வாழ்ந்தாலே போதுமனாதாகும்,அது நம் குழந்தைகளை பாலியியல் ரீதியான துன்புறுத்தல் அச்சத்திலிருந்து காத்துவிடும். 

Sunday, December 8, 2013

குழந்தைகளுக்கு தேவையா பாலியல் கல்வி ? குழந்தைகளுக்கு கொடுப்போம் பாலியல் கல்வி


குழந்தைகள் நமது சொத்து. அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. பள்ளிக்கல்வித் துறை இதை உணர்ந்து பாடத்திட்டத்தில் ஆரம்பக்கல்வி முதலே பாலியல் கல்வியை கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் கல்வி இணைச்செயல்பாடுகளில் வாழ்க்கைத் திறன் பகுதியில் பாலியல் அறிவு குறித்து மதிப்பீடு செய்ய வாய்ப்பளித்திருப்பது வரவேற்க்கத்தக்கது.
   மாணவர்களுக்கு பாலியல் சார்ந்த அறிவை கொடுப்பது ஆசிரியர்களின் கடமை. குழந்தைகள் பெற்றோர்களிடம் இருப்பதை விட ஆசிரியர்களிடமே மிகவும் அதிக நேரம் இருக்கிறார்கள் , அதனாலே குழந்தைகள் ஆசிரியர்களிடத்தில் அன்பும் , பாதுகாப்பும் கிடைப்பதாக உணர்கிறார்கள். ஆசிரியர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் உடனிருக்கும் வாய்ப்பு இருப்பதால் , குழந்தைகளிடம் தெரியும் மாற்றங்களை அறியும்  ஆற்றலும் அறிவும் உடையவராக ஆசிரியர் திகழ்கிறார். குழந்தைகளுக்கு நிகழும் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த மாற்றங்களை உணரும் வாய்ப்பு அதிகம் கொண்டிருக்கிறார் என்பதால் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை வழங்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
     ஆசிரியர்கள் குழந்தைகளிடம்  அன்பும் , பாதுகாப்பும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை கட்டாய இலவசக்கல்விச்சட்டம் அத்தியாயம்4 ல் விதி 17 (1) எந்தவொரு குழந்தையும் உடல் ரீதியாக தண்டனைக்கோ மன ரீதியான துன்புறுத்தலுக்கோ உள்ளாக்கப்படக் கூடாது என்று உறுதியளிக்கிறது. அது மட்டுமல்ல , அத்தியாயம் 6 குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது . ஆசிரியர்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்ய முடியும், பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தையை அக்கொடுமையை மறந்து, முழு ஆற்றலுடைய குழந்தையாக மாற்ற கூடிய பொறுப்பும் கடமையும் ஆசிரியருக்கு உண்டு , அவர்களால் மட்டுமே இயலும் என்பதை இச்சமூகம் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறது.
        சமீபத்திய செய்திகளில் இருந்து பாலியல் கொடுமை இழைப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்களாகவும் (பெற்றோர் , தாத்தா, பாட்டி, மாமா, சித்தி, பெரியப்பா, போன்றார்களாகவும், குடும்ப நண்பர்களாகவும், அண்டை வீட்டார்களாகவும், பள்ளி அல்லது சொந்த வாகனங்களின் ஓட்டுநர்களாகவும் , விளையாட்டு பணியாளர்களாகவும் , அரிதாக ஆசிரியர்களாகவும் உள்ளார்கள்.
    அது சரி குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து தடுப்பது எப்படி ? ஆசிரியர்கள் குழந்தைகளிடம் எடுத்துக்கூறுங்கள் இவ்வாறு:
1.   உங்களின் (குழந்தைகளின் ) தனிப்பட்ட உறுப்பை தொடுதல்
2.   உங்களின் உடம்பை தடவுதல்,
3.    உங்களை மற்றவர்களின் தனிப்பட்ட உறுப்பை தொடச் செய்தல் அல்லது பார்க்க செய்தல்
4.   பாலுணர்வை தூண்டும் படங்களை காட்டுதல் அல்லது நிர்வாணமாக படமெடுத்தல்
5.     அருவருக்கத்தக்க பாலுணர்வை தூண்டும் விதத்தில் பேசுதல்
போன்ற செயல்களில் யாரும் ஈடுப்பட்டால் உடனே ஆசிரியர்களிடம் அல்லது பெற்றோர்களிடம் தெரிவிக்க செய்யவும். (மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் குட் டச் பேட் டச் குறித்த அறிவை வளர்த்தல் வேண்டும்)
     குழந்தைகளூக்கு  தீங்கிழைப்பவர் குறித்து பயமும், தீங்கை வெளியே கூறினால் தம்மை தவறாக நினைப்பார்கள் என்ற உணர்வும், அதை பிறரிடம் தெரிவிக்கும் வாய்ப்பு குறைவு. ஆசிரியர்கள் குழந்தைகளின் நடவடிக்கை மாற்றங்கள் மூலமாக பாலியல் தீங்கிற்கு உள்ளாகியுள்ளார்களா என்பதை கண்டறியலாம். திடீரென்று மாணவன் மனச்சோர்வு மிக்கவனாக காணப்படலாம். அல்லது மதிப்பெண் குறைவாக பெற்று , பாடங்களை கற்பதில் சிரமம் பெற்றவனாகவும், சிந்தனையை ஒருமுகப்படுத்துவதலில் சிரமம் உடையவனாகவும் இருப்பான். விளையாட்டு , பொழுதுபோக்கு போன்ற உடலுழைப்பு சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட ஆர்வமின்றி இருப்பான், உடல்ரீதியாக காரணம் ஏதுமின்றி தலைவலி, வயிற்றுவலி அல்லது வாந்தி பற்றி முறையிடுவான் . இதன் தொடர்ச்சியாக மாணவன் விட்டை விட்டு ஓடிப்போகலாம் அல்லது குடி, போதை பழக்கம் எற்பட வாய்ப்பு உள்ளது.  தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் பாலியல் கொடுமையிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறிவதன் மூலம் நாம் அக்குழந்தைக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளதை உறுதி செய்யலாம்.
   மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் குழந்தைகள் நிச்சயமாக தமக்கு நேர்ந்த தீங்கை சொல்லும் வாய்ப்பு உள்ளது, இருப்பினும் குழந்தைகள் விட்டு விட்டு  கூறும் . அப்போது ஆசிரியர்கள் குழந்தைகளை நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு ஆதரவாக பேச வேண்டும். நடந்த சம்பவத்திற்கும் குழந்தை எந்தவிதத்திலும் பொறுப்பு  இல்லை என்று நம்பிக்கையளிக்கவும். தயவு செய்து குழந்தை  உங்களிடம் கூறியதை வேறொறு ஆசிரியரிடம் சொல்லாதீர்கள். தங்களால் அப்பிரச்சனைக்கு தீர்வு எடுக்க முடியவில்லையெனில் 1098 உதவியை நாடலாம்.
   ஆசிரியர்கள் இக்கட்டுரையை படிப்பதன் மூலம் தங்களிடம் பயிலும் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அறிவை வழங்க முடியுமானால் இதுவே இக்கட்டுரையின் வெற்றியாகும். மாணவர் உலகம் வாசகர்கள் , பெற்றோர்கள், மாணவர்கள் இக்கட்டுரையை படித்து பாலியல் தீங்கு குறித்த விழிப்புணர்வு பெறுவார்கள் என்றாலும் இக்கட்டுரையினை வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.
  மதுரை சரவணன்.
9344124572