Wednesday, April 22, 2015

கவிதை -

கடவுள் காஞ்சனாவாகி விடுகின்றார்...
*
சைக்கிளில் தடுமாறி விழுந்தவனை தூக்க
நினைத்தாலும் வேலை நிமித்தம் கடக்கும் போதும்
பைத்தியக்காரி என்று தெரிந்தும்
துணிவிலகி தெரியும் மார்பை மறைக்காமல்
பார்த்தவாறே கடந்து செல்லும் போதும்
மனைவி இருப்பது கூட தெரியாமல்
தொப்புள் தெரிய நடந்துவரும் பெண்ணை காண
அலைபாயும் கண்களுடன் கழுத்தை திருப்பும் போதும்
பேருந்தில் இருந்து தவறி விழுந்தவன் விபரம் தெரிந்தும்
வீண்வம்பு வந்துவிடுமோ என்று காணது செல்லும் போதும்
நண்பர் மகள் திருமணத்திற்கு கடன் கேட்டு வரும் போது
தன்னிடம் பணம் இருந்தும் தட்டிக்கழிக்கும் போதும்
இழவு என தெரிந்தும் அங்கு இளித்து நின்று
சொத்து குறித்தும் பாகப்பிரிவினை குறித்தும்
பேசி பிரச்சனை உண்டாக்கும் போதும்
மனிதனிடத்தில் பொதிந்துள்ள கடவுள்
கஞ்சனா வேடமிட்டு லாரன்ஸ் ராகவேந்தராக காட்சியளிக்கிறார்...!
மதுரை சரவணன்.

Thursday, April 16, 2015

இதை படிச்ச பின் குழந்தை பெத்துக்க கூடாதுன்னு எவனும் சொல்ல முடியுமா?

வேலூரில் சிப்பாய் சரவணன்.
*
கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. என்ன அழுகின்றீர்கள் என மனைவி அருகில் அமர்ந்து ஆறுதல் படுத்தினாள். ஒன்றுமில்லை என்றபடி முகத்தை நீரால் கழுவினேன்.
இன்று எதுவும் பள்ளியில் நடந்ததா! ஏதாவது பிரச்சனையா? என கேட்டாள். ஒன்றுமில்லை என்றாலும் மனம் அதையே நினைத்து குமுறி கொண்டு இருந்தது. முகநூல் எடுத்து வைக்கலாம் என்று நினைத்தாலும் மனது அதையே நினைத்து புலம்ப ஆரம்பித்தது.
என் மனைவி சந்தேகப்பட்டவளாக சக ஆசிரியருக்கு போன் செய்ய தொடங்கினாள். யாராலும் சமாதானப்படுத்த முடியாது. நினைவுகள் காற்றில் என்னை பின்னோக்கி அழைத்து செல்ல தொடங்கின. அவை மிகவும் மெல்லிசான இறகாக பறக்க தொடங்கின.
இங்கு அருணாச்சலம் அவர்கள் எடுத்தப்புகைப்படம் நினைவில் தொக்கி நிற்க, என் நினைவு இறகும் முள்மேல் விழுந்து முன்னும் செல்ல இயலாமல், பின்னோக்கியும் வர இயலாமல் , அதே இடத்தில் காற்றில் படப்படத்தது.
ஆம். அப்போது 5ம் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருந்தேன். சுவர் சொல்லும் கதைகள். கோட்டைகள் பற்றிய பாடம். எப்போதும் இல்லாத அளவில் உள்ளம் களிப்போடு வேலூர் கோட்டை பற்றி சொல்ல ஆரம்பித்தேன். சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது.
இந்த கோட்டையை பிஜ்ஜப்பூர் சுல்தான்கள், மாராடியர்கள், ஆற்காடு நவாப்புகள் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியர்கள் ஆண்டார்கள் என்றேன்.
நம் சுதந்திர வரலாற்றில் மிகவும் சிறப்பு பெற்றது என்றேன். வேலூர் புரட்சி இங்கு தான் நடைப்பெற்றது. இங்கு சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். 1806 ஜீலை 10ல் கோட்டைக்குள் ஆங்கில அதிகாரிகள் மீது தாக்குதல் தொடங்கினர். 150 வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களுமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் செய்தி கேட்டு வெகுண்ட ஆங்கிலேயர்கள் ஆற்காட்டிலிருந்து வந்து மறுநாள் 800 சிப்பாய்களை கொன்று குவித்தனர். நம் சுதந்திரம் இரத்தம் சிந்தி பெறப்பட்டது என்றேன்.
சார் அந்த பூமி முழுவதும் இரத்தமா இருந்திருக்கும்ல என்றான் வசந்த்.
சார் சாகும் போது அழுக்குரல் கேட்கவே பயமா பாவமா இருந்திருக்கும்ல என்றாள் சுவாதி.
நினைத்து பார்த்தேன். அய்யோ அதற்கு மேல் பாடம் நடத்த முடியவில்லை.
கமலம் கண்ணீர் வடிக்க தொடங்கினாள். ஏன் என்றேன். “சார் எங்க தெருவில ஒரு ரவுடிய ஓட ஓட வெட்டி கொன்னுட்டாங்க.. ரோடு எல்லாம் இரத்தம். பார்க்கவே பயமா, பயங்கரமா இருந்துச்சு . பாவம் சிப்பாய்கள் ”என அழுதாள். நான் அப்போது அழத்தொடங்கியவன் . இன்னும் நிறுத்த முடியவில்லை.
உங்க அப்பா சரியான லூசு என போன் பேசி முடித்தவள் கூறினாள்.
நான் அப்படியே உறங்கிப்போனேன்.
அந்த இறகு இப்போது பலத்த காற்றில் விடுப்பட்டது. ஒருபைத்தியம் போல் நிதானம் இல்லாமல் பறக்க தொடங்கியது.
கடா மீசையை முறுக்கிய படி காவல் காத்து கொண்டிருக்கின்றேன். அந்த சிறை கம்பிகளுக்கு பின்னால் பத்தே ஹைதர் நின்று கொண்டு இருக்கின்றான். திப்பு சுல்தானின் மூத்த மகன். “இது நம் பூமி. இதை நாம் தான் ஆள வேண்டும். நாம் யாருக்கும் அடிப்பணிய தேவையில்லை. நம்மிடம் இல்லாத ஒற்றுமையால் தான் அந்நியர்கள் நம்மை சிறைபிடித்து கைது செய்து வைத்துள்ளார்கள். நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் நாம் கம்பெனிக்காரர்களை எதிரித்து போரிட வேண்டும் “ பத்தே ஹைதரின் உரை எனது காதுகளில் ஏறவில்லை. ’
சுதந்திரம்’ என்ற வார்த்தையை முதன் முதலில் கேள்வி படுகின்றேன். இதற்கு முன்னால் நான் சிப்பாயக தானே இருந்தேன். இப்போது இவர்களுக்கு இருக்கின்றேன். வித்தியாசம் இல்லை. இருந்தாலும் நம் இனத்தவர்களையே எதிர்ப்பது தான் எனக்கு பிடிக்க வில்லை. போர் என்று வந்தால் அருகிலுள்ள இவன் தானே வருவான் சண்டைக்கு... எல்லாம் ஒன்று தான் என சும்மா இருந்தேன்.
இரவு காவலுக்கு பின் வீடு செல்ல தயாரானேன். ஓர் ஆங்கிலேயன் என்னை அழைத்தான். என் மீசையை சுட்டிக்காட்டி ஏதோ பேசினான். ஒன்றும் புரியவில்லை. என்னை படைத்தலைவன் (ஆங்கிலேயன்) அறைக்கு அழைத்து சென்றார்கள். உன் கடா மீசையை நறுக்கி விட்டு சாதரணமாக வா என்றான். மறுத்தேன். என்ன நினைத்தானோ தெரியவில்லை, என் மீசையை இழுத்து பிடித்து தன் கத்தியால் அறுத்து விட்டான். எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. கை நரம்புகள் புடைத்தன. அமைதியாக இருக்க சொன்னான் என்னுடன் வந்து ,தன் வேட்டியை பறிகொடுத்த சக காவலன். அவன் உடை வித்தியாசமாக இருந்தது.
வெளியில் வந்தேன். காது அறுப்பட்டு ஓடினான் ஒருவன். என்ன என்று விசாரித்தேன். கடுக்கண் கழற்ற மறுத்ததால் காதை அறுத்து விட்டார்களாம்!
அட கொடுமை! மறுநாள் என் தலைப்பாகையும் பறிக்கப்பட்டு தொப்பி வைக்கப்பட்டது.
பிழைக்க வழியில்லாமல் நிலத்தை பறி கொடுத்த விவசாயிகள் . இந்த படையில் ஏராளம். எங்கள் உணர்வுகள் பறிக்கப்பட்டன. இருந்த விளைநிலங்களுக்கு பறித்து கொள்ளப்பட்டன. வரி செலுத்த முடியாமல் அடிமைகளாக ஆக்கப்பட்டனர் பலர். வரி கட்ட தவறிய மன்னர்கள் சிறைபிடிக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டனர். வேறு வேலைகள் இன்றி கம்பெனி படையில் சிப்பாயாக பலர் சேர்ந்தனர்.
நானும் ஹைதரோடு சேர்ந்து இவர்களை எதிர்க்க முடிவெடுத்து விட்டேன். என்று மீசை போனதோ அன்றே இவர்கள் மீது வெறுப்பு அதிகமானது. எங்கோ மூலையில் இவர்கள் அந்நியர் என்று இருந்த வெறுப்பு பற்றிக் கொண்டது.
அன்று இரவு காவலுக்கு வந்தேன். ஆனால் நான் வரும் முன்பே ஹைதர் சிறையில் இருந்து தப்பித்திருந்தார். திடீரென்று இந்திய சிப்பாய்கள் அங்கிருந்த ஆங்கிலேயர்களை தாக்க ஆரம்பித்தனர். நானும் நிலமையை புரிந்து கொண்டு வாளை உருவி சுழற்ற ஆரம்பித்தேன். தோட்டாக்கள் சீறி பாய்ந்தன. இருந்தாலும் தப்பித்தவாறு எதிர்பட்ட ஆங்கிலேயரை தாக்கினேன்.
விடியலில் இரவின் கருமையை சிவப்பாகி கொண்டிருந்தது. முற்றிலும் இருள் அகற்று விடும் இந்த விடியலை போல் நம் வாழ்வு ஒளிமயமாகி விடும் என்று எண்ணியப்படி போரிட்டேன். ஆனால் எங்கிருந்து வாந்தார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் ஆர்காட்டில் இருந்து வந்த படை என்றார்கள். பீரங்கி முழங்க தொடங்கியது. டம்... டம்.... டுமீல்... டும்... டுமீல் ...இப்போது நாங்கள் கொத்து கொத்தாக மடிய தொடங்கினோம்.
ஆயிரம் போர் இருப்போம். 800 பேர் பிணங்களாக கிடந்தார்கள்.
மீதி இருந்தவர்கள் சிறை பிடிக்கப்படனர். நானும் சிறை பிடிகப்பட்டேன்.
என்ன நடந்தது என அறியும் முன்னே துப்பாக்கியை கொண்டு தாக்க ஆரம்பித்தான். எதற்காக கலவரம் வெடித்தது. ஏன் கொன்றீங்கள். ஹைதர் எங்கே? என கேள்விகளால் துளைத்தார்கள்.
என் அருகில் இருந்தவன் வாயில் துப்பாக்கியை விட்டு , நடந்ததை சொல் என்று விசாரித்தார்கள். அவன் தெரியாது என்று
தலையாட்டினான். விசையை அழுத்த மூளை சிதற இரத்தம் தெறித்தது. என் கண்களில் வழிந்தது. இந்த முறை நான்.
நீங்கள் பயந்த படி துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. என்ன சொல்வது? உன்னை பிடிக்க வில்லை. நீ வரி என்ற பெயரில் புரியும் அக்கிரமம் சகிக்க வில்லை. எங்கள் கலாச்சாரத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பு உன்னை வெறுக்க செய்கின்றது என சொல்ல ஆசை தான்.
“வாயை திறந்தேன். உன்னை பிடிக்க வில்லை. என் சிற்றரசை விட்டு வெளியேறு. எம் கோட்டையை எமக்கு கொடு” என பயத்தையும் மீறி கூறிவிட்டேன். அவனுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை!
சிரித்தான் பரங்கியன். இருவர் வந்தனர். என் இரு கைகளையும் பிடித்து இழுத்து சென்றனர். திமிறினேன். அடுத்து இன்னும் நான்கைந்து பேர் வந்தனர். எல்லோரும் சேர்ந்து என்னை தூக்கி, பீராங்கியின் வாயிலில் கட்டி வைத்தனர்.
சண்டைக்கான கலகத்துக்கான காரணத்தை கூற மறுத்த பலரும் பீராங்கி குண்டுக்கு பலியாக துரத்தில் கைகள் கால்கள் கட்டி நிறுத்தப்பட்டனர். எப்படியும் தப்பித்து விட வேண்டும். என் மனைவி நினைவிற்கு வந்தாள். என் குழந்தைகள் வந்தனர்.
அடுத்து நான் யாரை நினைக்க டம் என்று பீரங்கி வெடித்தது. துண்டு துண்டாகி போனேன்.
கதவு காற்றிற்கு டம் என்று அடித்தது.
“என்னங்க கதவ சாத்திட்டு தூங்கிறது இல்லையா? அப்ப இருந்து டம் டம் ன்னு கதவு அடிக்கிற சத்தம் கேட்கலைய்யா? என கத்தினாள் மனைவி.
என் காதிகளிலும் அந்த டம் டம் ஓசை கேட்க தான் செய்கின்றது என்றபடி அழுகின்றேன்.
அவள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றாள்.
பைத்தியம் தான். நான் பைத்தியம் தான்!
இந்த பைத்தியம் இன்று இல்லை என்பதால் தான் நாம் பெற்ற சுதந்திரத்தின் மகிமை கூட அறியாது, சிறுபான்மையினர் குழந்தை பெற்று கொள்ளக்கூடாது என்று கூச்சல் போடுகின்றோம்!
மதுரை சரவணன்.

Wednesday, April 15, 2015

நூல்விமர்சனம்- கரும்பலகை (அர்ஷியா.எஸ்)

கரும்பலகை - அர்ஷியா. எஸ் நூல் விமர்சனம் - மதுரை சரவணன். 

சமீபகாலமாக கல்வி, கல்வி சார்ந்த மாற்றங்கள் குறித்து பேசுவதற்கு நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. கல்வி என்பது ஆசிரியர்களின் மனநிலையை கொண்டும் கணக்கிடப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியும், ஆசிரியர்களை அலைக்கழிக்க செய்வதால் ஏற்படும் அதிகார வர்க்கத்தின் லாபத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியும், இதுவரை யாரும் பேசாப்பொருள் குறித்து எஸ்.அர்ஷியாவின் ’கரும்பலகை’ நாவல் பேசுகின்றது.  

எஸ்.அர்ஷியா ஆசிரியர்களின் பணி இடமாற்றம் என்ற ஒரு மையக்கருத்தை வைத்து கொண்டு இந்நாவலை எழுதியுள்ளார். பணி நிரவல், பணி மாறுதல் என்பது ஆசிரியர்களின் மனநிலையை எவ்வாறு சிதைவடைய செய்கின்றது, இப்பணி நிரவல் காரணமாக ஆசிரியர்கள் ஊக்கம் இழந்து விடுவதுடன், குடும்ப சிக்கல்களிலும் தள்ளப்படுகின்றனர் என்பதை இராஜ லட்சுமி என்ற ஆசிரியரை கதாநாயகியாக படைத்து, நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றார்.  பல மைல்கள் கடந்து குடும்பத்தை பிரிந்து ஒத்தையாக வாழும் ஆசிரியர்களின்  மன அவஸ்தைகளை மிக எதார்த்தமாக தன் விறுவிறுப்பான நடையில் மிக அழுத்தமாக எஸ்.அர்ஷியா தனது கரும்பலகை நாவலில் பதிவு செய்துள்ளார்.

இந்த நாவலில் நாயகி இராஜ லட்சுமியின் முன் அனுபவம் மெட்ரிக் பள்ளியாக இருப்பதாக காட்டி, தனியார் பள்ளியின் வணிக மனோபாவத்தை , மிக அருமையாக சாடுகின்றார். கிராம பள்ளிகளின் நிலமையையும், கிராம பள்ளிகளின் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலமையையும், கட்டிடங்கள் கட்டுவதில் தலைமை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் கமிஷன்கள் குறித்தும் உண்மையை போட்டு உடைக்கின்றார்.

கிராம மாணவர்களின் சினிமா மோகம் குறித்து பேசும் போது மாணவிகள் தங்கள் பெயர்களை சினிமா நடிகைகள் பெயர்கள் மூலம் அழைப்பதில் இருந்து வெளிப்படுத்துகின்றார். இந்த நாவலை படிக்கும் போது ஆசிரியர்கள் ஏன் இந்நாவலில் ஆசிரியர் அர்ஷியா பேசும் பிரச்சனைகள் குறித்து கூட்டணியில் பேசவில்லை. அரசுக்கு அதிகார வர்கத்திற்கு எதிராக குரல் எழுப்பவில்லை ? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.  தோழர் அர்ஷியா சமூக அக்கறையுடன் எழுதிய இப்படைப்பில் ரியல் எஸ்டேட் பற்றியும் சாடுகின்றார். ரியல் எஸ்டேட் தொழில் நுணுக்கம் குறித்தும் பேசுகின்றார்.

பணிமாறுதல் பெற்ற பின்னும் ஆசிரியர்கள் படும் அவஸ்தையை இவ்வாறு விவரிக்கின்றார்.  
“சொந்த மாவட்டம்ன்னு வந்தாச்சு. வந்ததுக்கு அப்புறம்தான்  தெரியுது. தூராத்து ஊரே பரவாயில்லைன்னு. ரெண்டு பஸ்ஸீ மாறிப்போய் வர்றதுகுள்ளாற எலும்பெல்லாம் கழண்டுருது. அதே நேரம் தான் இங்கேயும் ஆகுது” ( பக் 148)


பணிமாறுதலுக்கு பணம் எவ்வளவு முக்கியம் ? என்பதை அர்ஷியா இந்நாவலில் வெளிச்சம் போட்டு காட்டுகின்றார்.  
“அமைச்சர் கையெழுத்து ஒண்ணரை லட்சம். அதுல கையெழுத்து வாங்கி, எஜுகேசன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைக்க எனக்கு ஐம்பதாயிரம். எஜூகேசன் டிப்பார்மெண்டுல எந்த கேள்வியும் கேட்காம அந்தப் பேப்பரை நகர்த்தி, சீல் வச்சு உங்கக் கைக்கு வந்து சேர எல்லாமா அம்பதாயிரம்,. ஆக ரெண்டரை லட்சம். ரெடியா இருந்தா , வாங்க !” (பக்150)

மெட்ரிக் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மதிப்பெண் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்பதையும் போகிற் போக்கில் சாடுகின்றார்.
“கூண்டிலடித்து, விலங்குகளுக்கும் பயிற்சி கொடுப்பது போலிருக்கும். இதிலெல்லாம் ராஜ லட்சுமிக்கு உடன்பாடு இல்லை. அங்கே, பிரம்புக்கம்பின் பயன்பாடும் இருந்தது. மெத்து மெத்தான அச்சதை விளர்ந்து, கன்றிப்போகச் செய்யும்அடிக்கு பயந்து , சுவரேறிக்குதித்து ஓடிப்போன, தாக்கு பிடிக்க முடியாத மாணாவர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் பலரை, பெற்றோரே மீடு, திரும்ப அழைத்துக் கொண்டு வந்து, இனி இப்படி என் மகன் நடந்து கொள்ள மாட்டான் என்று அழுவாச்சி கடிதம் எழுதிதந்து, பெருமை தேடிக்கொள்வார்கள். “ பக் 22.

கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள் எவ்வாறு பந்தாடப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலக பணியாளர்கள் தரும் மரியாதையை இந்நாவல் சாடுகின்றது. அதே நேரம் ஆசிரியர்கள் செய்யும் தில்லுமுல்லு தனத்தையும் தோல் உறித்து காட்டுகின்றார் அர்ஷியா. ஆசிரியர்களை போற்றாத சமூகம் என்றும் உருப்படாது. நல்ல ஆசிரியர்கள் எந்த சூழ்நிலையிலும் தன் கடமையை தவறுவதில்லை என்பதை இந்நாவலின் கதாநாயகி ராஜலட்சுமி வாயிலாக மிக அருமையாக படைத்துள்ளார். பாராட்டுதலுக்குரியத். அனைவரும் , குறிப்பாக கல்வி துறை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் படிக்க வேண்டிய நாவல். சமீபகாலத்தில் சமகால நிகழ்வுகளை கல்விதுறையில் உள்ள பிரச்சனைகளை முன் வைக்கின்ற நாவல் கரும்பலகை ஆகும்.


புத்தகத்தின் பெயர் : கரும்பலகை
ஆசிரியர் பெயர் : எஸ். அர்ஷியா
பதிப்பகம்: எதிர் வெளியீடு
விலை ரூ. 150
விமர்சனம் : மதுரை சரவணன்.   
(இந்த நூல் விமர்சனம் மாணவர் உலகம் 2015 ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ளது ) 

Monday, April 13, 2015

இரத்தம் கொதிக்கின்றது ...கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்!

படபடக்கின்றது காலண்டர் தாள் !
*
கண்கள் திறக்க முடியவில்லை. மனத்திற்குள் அழுத்தம் உண்டாகியது. காலண்டரில் தேதி ஏப்ரல் 8 என்று காட்டியது. காற்றாடியில் காலண்டர் காகிதம் படபடத்தது. அதையே கவனிக்க தொடங்கினேன்.
காற்று சுழன்று அடிக்க தொடங்கி இருந்தது. இப்போது சத்தம் மாறி இருந்தது. குதிரையின் குளம்படி சத்தம் காதை கிழித்தது. அதற்கு மேல் தூங்க வில்லை. எழுந்து கொண்டேன். எனக்கு நினைவுகள் சுழல ஆரம்பித்தன.
எனது அருகில் துப்பாக்கி இருந்தது. எல்லோரும் தயாராகுங்கள் என்று ஆங்கிலமும் தமிழும் கலந்த சத்தம் என் காதுகளை கிழித்தன.
துப்பாக்கி ராவையை எடுத்தேன். அந்த கொழுப்பின் வாசனை எனக்கு குமட்டலை உண்டாக்கியது. வாந்தி வருவது போல் இருந்தது. எனக்கருகில் இருந்தவன் மஞ்சள் நிற திரவமாக வாந்தி எடுக்க தொடங்கினான். எனக்கு மண்டை கிர் என்று சுற்ற ஆரம்பித்தது. என் மனதை வாட்டிய அந்த வாதை வெகுண்டு எழுந்தது. துப்பாக்கியை ஒரு தோளில் போட்டு கொண்டு என் உடை வாளை எடுத்து சுழற்ற ஆரம்பித்தேன். இனி யாராவது இந்த கொழுப்பை பயன்படுத்த சொன்னால் அவ்வளவு தான்.. !
சார்ஜண்ட் மேஜர் ஹியூசன் என்னை பிடித்து கட்ட சொன்னான்.
என்னை பிடிக்க எவரும் முன் வரவில்லை. பெங்காலி மொழியில் என்ன செய்கின்றாய்...! என சிலர் கூச்சலிட்டனர். இது போன்ற எந்த குரலும் என் காதுகளை அடையவில்லை.
யாரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நான் அந்த மேஜரை என் வாளில் வெட்டி சரித்தேன். முதல் முறையாக கும்பினியனின் இரத்தத்தை இந்த பூமி சுவைத்தது ! இதுவரை எந்தன் இனத்தவனின் இரத்தத்தை வேண்டா வெறுப்பாக சுவைத்திருந்த பூமி உடனே அவனின் இரத்தத்தை உறிஞ்சியது.
இப்போது குதிரையில் லெப்டினெட் அந்தஸ்தில் உள்ள ஒருவன் வேகமாக வந்தான். எல்லோரும் பா... கத்தியை கீழே போடு என்றனர். நிச்சயமாக இந்த குரல்கள் பெங்காலியின் குரல்கள் அல்ல. இவை ஆங்கிலம் கலந்திருந்தன.
பா ...த்து போ.. என்றபடி எந்தன் துப்பாக்கில் ரவையை திணித்தேன். திணிக்கும் போது இருந்த அத்தனை வெறுப்பையும் ஒன்றாக டிகரில் சேர்த்து அழுத்தினேன். குதிரையில் இருந்து சரிந்தான் பா. இப்போது பா துப்பாக்கியில் குறிபார்க்க , என் வாளை எடுத்து சுழற்ற ஆரம்பித்தேன். அவனும் சரிந்தான். மீண்டும் இந்தியத் தாய் ருசிக்க ஆரம்பித்தாள் . அவள் உதட்டின் சாயம் கண்டு ரசித்தேன்.
நான் ஏன் இப்படி கொலை வெறியனானேன். என்னை நானே கிள்ளி பார்த்தேன். இப்போது ஒரு கம்பெனிக்காரன் என்னை குறி பார்க்க , எதிரே இருந்த பெங்காலியன் அவனை தட்டி விட்டான். ஒருபுறம் கம்பெனிக்காரர்கள். மறு புறம் என் இனத்தவர்கள். “பாண்டேயை தொடவிடமாட்டோம்.” .பாண்டே எனது பெயர் என அறிந்து கொண்டேன்.
கர்னல் வீலர் வருகிறார் என்று கம்பெனிக்காரர்கள் சொன்னார்கள். அனைவரும் அமைதியாகினர். இருந்தாலும் பாண்டே பாண்டே என்பது மட்டும் என் காதில் விழுந்தது. அந்த கொழுப்பின் அறுவெறுப்பு இன்னும் என்னை விட்டு அகலவில்லை. எனக்கு மட்டும் அல்ல.. இது கொழுப்பின் மீது மட்டும் இருந்த வெறுப்பு அல்ல என்பது மட்டும் எனக்கு புரிந்தது. அது அடி மனதின் ஆழத்தில் இருந்த வெறுப்பு . கம்பெனியரின் மீது இருந்த வெறுப்பு.தாய் மண்ணின் மீது இருந்து பிடிப்பினால் உருவான வெறுப்பு என்பது என் வாளில் இருந்து கொப்பளித்து பூமியை நனைத்து கொண்டிருந்த இரத்தம் கூறி கொண்டு இருந்தது.
இப்போது எந்தன் வாள் கீழே சரியத்தொடங்கியது. இப்போது கம்பெனியர்கள் என்னை நெருங்கி கொண்டிருந்தனர். எனக்கு சுயநினைவு தட்டியது. இவர்கள் கையிலா சாவது? துப்பாக்கியை எடுத்தேன்.. சுட்டு கொண்டேன். அதற்குள் ஒருவன் என் மீது பாய்கின்றான். குறி தவறி காயமடைகின்றேன்.
எனக்கு வலி பொறுக்க முடியவில்லை. அது இராணுவ முகாம் என்பது மட்டும் தெரிகின்றது. சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள். யார் உன்னை தூண்டியது சொல் ? என்று புரியாத பெங்காலி மொழியில் ஆங்கிலம் கலந்து கேட்கின்றான் ஒருவன். உனக்கு உயிர் பிச்சை தருகின்றோம் சொல் என்று என் மீது இரக்கம் கொண்டு ஒருவன் பேசுகின்றான்.
“ஆங்கிலேயரை சுட்டேன். அவர்கள் உயிர் போய்விட்டது. எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. எனக்கு தேசம் தான் உயிர் . அது தான் என் மதம். அது தான் என் தர்மம். தேசம் தெய்வம் தர்மம் இம்மூன்றின் பெயரில் வாளை சுழற்றினேன். என் தேசத்திற்காக என் உயிரை கொடுப்பேன். இது என் ஒருவனால் நிகழ்ந்தது அல்ல. என்னைப்போன்ற மங்கல் பாண்டே பலரும் இருக்கின்றார்கள் “
“உனக்கு தூக்கு உறுதி “
சிரித்தேன். என்னை பைத்தியம் என்றார்கள்.
1857 ஏப்ரல் 8 இப்போது காலண்டர் பட படத்தது. தூக்குப்போட கயிறு மாட்டுபவர்கள் வர மறுக்கின்றார்கள் என்றனர். அவர்கள் தூக்கு மாட்டினால் உனக்கு ஒரு இராஜாங்கத்தை தருகின்றோம் என்றனர். அவர்கள் ஏற்று கொள்ள வில்லை. நீங்கள் என் இரத்தமடா? ஒரு உயிர் போக விட மாட்டீர்கள் என்பது தெரியும்! நான் இங்கு மடிய வில்லை. விதைக்கப்படுகின்றேன் என்றேன்.
வேறு இடத்திலிருந்து தூக்கு மாட்ட ஆள்களை அழைத்து வந்தனர். என்னை ஈட்டி, கத்தியை கொண்டு மிரட்டி , கயிற்றில் கட்டி இழுத்து வருகின்றனர். அப்போதும் அவர்கள் என்னிடம் ஆசை வார்த்தை காட்டினர்.
“ உயிர் தப்பிக்கலாம். சொல். உன்னுடன் சேர்ந்து செயல்பட்டது யார்? “
“சொல்ல மாட்டேன்”
இப்போது என் கழுத்து இறுக்கப்படுகின்றது.
1857 போராட்டத்தில் முதல் பலி மங்கள் பாண்டே !
ஏப்ரல் 8 காலண்டரில் படபடக்கின்றது. எழுந்து நிற்கின்றேன்.
டீ வருகின்றது. கழுத்தில் இறுக்கி இருந்த துண்டை எடுத்து போட்டு டீயை சுவைத்தப்படி செய்தி தாள் படிக்கின்றேன். மங்கள் பாண்டே பற்றி எந்த செய்தியும் காணவில்லை. சுதந்திர இந்தியாவில் அதற்கான ஆணிவேர் மறக்கடிக்கப்பட்டிருந்தது.
பாரதிய ஜனதா அதன் தேர்தல் அறிக்கையில் கூறியப்படி செயல்படவில்லை என சுப்ரமணிய சுவாமி பேட்டி என்றிருந்தது. ஆ ரூட் மாறுதே என்று படிக்க ஆரம்பித்தேன். எனக்கு காலண்டர் படபடப்பது தெரிய ஆரம்பித்தது. அய்யோ...!
மதுரை சரவணன்.

Friday, April 10, 2015

இசைக்காத இசைக்குறிப்பு - வேல்கண்ணன் - கவிதைகள் குறித்து விமர்சனம்.

இசைக்காத இசைக்குறிப்பு - வேல்கண்ணன் - புத்தக விமர்சனம்.

“ஒரு வரி கூட எழுதவில்லை இன்று எழுதிவிட வேண்டும் ஒரு வரியாவது” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு வேல்கண்ணன் கவிதை  குறித்து எழுத தொடங்கினேன்.
‘முலைக்காம்பில் திரண்டு நிற்கும் வியர்வைத்துளி’
’கிழிந்து தொங்குகின்றது வானம்’
‘கர்ப்ப கிரஹத்தில் எதிரொலிக்கிறது/ கருவறையற்றவளின் விசும்பலோசை’
போன்ற வரிகள் என்னை எழுத விடாமல் தொடர்ந்து என்னுள் ஒருவித இரசமாற்றத்தை ஏற்படுத்தி பலவித சிந்தனையை பறக்க விடுகின்றன.  

கரையோரத்து மணலை
இரு கைகளால் அள்ளி
மூடினேன்.
மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது 
நதி என்ற கவிதை வேல்கண்ணனின் நினைவோட்டமாக இருந்தாலும், அது தரும் குறுகுறுப்பு கொஞ்சம் நெஞ்சை சுடத்தான் செய்கின்றது.

எங்கள் ஊரின் வைகையை கடக்கும் போதெல்லாம், என் குழந்தைகளுக்கு கைகளில் அள்ளிக்காட்ட மணல் கூட இல்லாமல் இருப்பது குறுகுறுக்கத்தான் செய்கின்றது. சாக்கடைகள் வழிந்தோட நாற்றத்துடன் காணும் வைகையின் மீது குழந்தைகள் தொடுக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், வேகமாக ஓசையெழுப்பி கடந்து செல்லும் வாகனங்களில் உதிரும் மணல் கண்களை நெருடவே, மெல்ல கண்களை கசக்கி செல்கின்றோம். இந்த குறுகுறுப்பை எல்லோரும் தங்கள் ஊரில் ஓடும் நதியோடு உணர்ந்திருப்பீர்களானால், நிச்சயம் அது வேல்கண்ணன் முன் வைக்கும் அரசியல் எது என்று நீங்கள் உணரக்கூடும்.
வேல்கண்ணன் வைக்கும் அரசியல் கவிதையில் சொற்பமாக இருந்தாலும் அதுவே இக்கவிதை தொகுப்பு பேசப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றது.  

வேல்கண்ணனின் கவிதை சமகால அரசியலை பேசுகிறது. அதற்காக அவர் எந்தவித கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்த வில்லை. அதேசமயம் அதை எளிதாக புரியாத விதத்தில் தமிழக அரசியல் தலைவர்களை செவிட்டில் அறைவது தெரியாமல் கடிந்து ஈழம் குறித்து பேசுகின்றார். அதனாலே வேல்கண்ணன் முதல் போட்டியிலேயே எளிதாக டபுள் செஞ்சுரி அடித்து விளாசுகின்றார்.

மறுக்கையில்
நிர்மூலமாக்கப்பட்ட பிடரியில்
வெடித்தது துவக்கு
ஒன்றன் பின் ஒன்றாக
கையொப்பம் இட்டு நிமிர்கையில்
உடைந்தது சூரியன்
என்று முடியும் கவிதையில் ……துவக்கு என்ற சொல் பிரயோகம் இலங்கையில்
துப்பாக்கிக்கு பயன் படுத்தும் சொல்லாகும்.  உடைந்தது சூரியன் என்ற வரிக்கு நான் அர்த்தம் கூறத் தேவையில்லை. ஆக அவரின் கவிதைகள் சமகாலம் குறித்து பேசுகின்றன என்பதை இக்கவிதை உறுதிப்படுத்துகின்றது.
“இறுதி செய்தி” என்ற கவிதையில்

இனம் அழித்தல் பற்றியும்
இனம் அழிதல் பற்றியும் பேசிக்கொண்டோமே
அது நடந்தேறி விட்டது
என்று சொல்லிவிட்டுப்போகத்தான் வந்தேன்.
நான் இனி திரும்பி வரப்போவதே இல்லை
இனி நீ ஒளியவேண்டிய அவசியமும் ல்லை” என்று சலிப்போடு முடிக்கிறார் வேல்கண்ணன்.

இனி நீ ஒளிய வேண்டிய அவசியமும் இல்லை என தமிழக தலைவர்களை பார்த்து நகைப்பது போலவே உள்ளது. அந்த நகைப்புக்கு பின் பொதிந்துள்ள எரிச்சல், மன கசப்பு, மனக்குமுறலை சொல்லி மாளாது. இது ஒவ்வொரு தமிழனிடமும் உள்ள மன எரிச்சலாகும். வேல்கண்ணன் முன்னிலை படுத்தும் அரசியலை நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை எனில் இக்கவிதையை வாசிப்பதால் பயன் எதுவும் நிகழ்ந்துவிடாது.

வேல்கண்ணனின் கவிதைகள் பால்யம்காமம்கழிவிரக்கம்ுயரம்நிராயாசைதாம்பத்யம்ாதல்துரோகம்...என இசைத்துக் கொண்டே இருக்கின்றன. அவரின் அனுபவங்கள் தந்த கசப்பு, இனிப்பு தன்னைத்தானே இசைக்கமுற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அவரின் கவிதைகள் பல இடங்களில் அதிபுனைவு வழியாக பயணித்து ஒரு கவித்துவத்தை அடைகின்றன. ஒரு கதை சொல்லலில் ஆரம்பித்து, தன் ஆற்றாமையை கவித்துவமாக்குகின்றார். அவர் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு கவிதைகளிலும் இன்னும் புதிய புதிய சொற்சேர்க்கைபுதிய மொழிதல் முறைசில பரிசோதனைமுயற்சி,அலுப்பற்ற மொழிநடை இவற்றையெல்லாம் அமிர்தம் சூர்யா கூறியது போல வரும் காலங்களிலும்செய்து பார்க்கவேண்டும்.   
இந்தத் தொகுப்பில் ’என் காதல் விதையும் நீயும்’, ’மௌன தவம்’, ’மௌனப் புரிதல்’, சரிகை வண்ணத்துப் பூச்சி...போன்ற கவிதைகளில்  பறக்கிற வண்ணத்துப்பூச்சிஅளவுக்கு அதிகமாகவே தமிழ் நவீனக் கவிதைகளில் பறந்துஅலுத்துவிட்டன என்றாலும், அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் அவை அவரை அறியாமலே பறக்கின்றன.இக்கவிதைகள் வேல்கண்ணனை சமகால கவிஞர்கள் மத்தியில் இருந்து ஒரு அடி தூரம் எட்ட வைக்கின்றது. வரும் காலங்களில் அவற்றை தவிர்ப்பார் என நம்புகின்றேன். இது குறையாக கருதவில்லை. இருந்தாலும் பல நிறைகளை கொண்ட வேல்கண்ணணிடம் வாசகர்கள் எதிர்பார்ப்பது அதனை விட சிறந்த ஒன்றை தான். பட்டாம்பூச்சிகளை கொண்டு கவிதைகளை எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு முறையும் சென்னைக்கு பயிற்சிக்கு செல்லும் போது வேல்கண்ணனுக்கு போன் செய்வதுண்டு. அவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்க முயற்சி செய்வார். அந்த வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை. இதுவரை நாங்கள் இருவரும் நேரில் சந்தித்தது இல்லை. இந்த கவிதை வாசிப்பின் வாயிலாக அவரை நான் சந்திக்க கோவை இலக்கிய நிகழ்வு 49 வாய்ப்பளித்திருக்கின்றது. எனது மனமார்ந்த நன்றிகள். அவரின் கவிதைகள் வாயிலாக வேல்விழியை அறிய முடிந்தது. கழுத்தை இறுக்கிய பிஞ்சுக்கரங்களில் தன் ஆற்றமை , கசப்பு , எரிச்சல் என எல்லாவற்றையும் மறந்துவிடுவதையும் அறிந்து மகிழ்ச்சி கொள்கின்றேன். என்னைப்போல் ஒருவன் இருந்தால் யாருக்கு தான் மகிழ்ச்சி இருக்காது!

தீவிர இலக்கியத்தின் மீது ஆசையும் பற்றுதலும் இருந்தாலும் அந்த வெகுஜன இயல்பு என்றுமே மாறுவதில்லை. ஏனெனில் ஒரு தீவிர வெகுஜன இயல்பு தான் ஒரு வாசகனை தீவிர இலக்கியத்துக்குள் எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையில் இயங்குபவன். அந்தவகையில் என் வெகுஜன ரசிப்புக்குள் பயணிக்கும் வேல்கண்ணனின் கவிதை.
சவுக்கால்/தன்னையே அடித்துக்கொள்ளும்/இளைஞனின் கால் சலங்கை ஒலிக்கேற்ப/இடுப்பசைத்தபடியே/ முதுகின் வழி பாதம் தொடும்/ சிறுமி.
அதிர்ந்து பார்க்கும் என்னுடைய/வலது மணிக்கட்டை தொட்டு/ ‘பசிக்குதுண்ணா’/என்றபடி கைநீட்டும் பெண்.
செல்லும் பேருந்து வந்து விட்டது.
என்னிடம் இருப்பது ஒன்றுதான்./பயணத்தை தொடங்கவில்லை/ இன்னும் நான்.
இது போன்ற நிறுத்தங்கள் தான் தொடர்ந்து நம்மை வேல்கண்ணனுடன் பயணிக்க செய்கின்றன. வேல்கண்ணன் தொடர்ந்து எழுதவேண்டும். அவரின் அடுத்தபடைப்புக்காக ஒரு வாசகனாக காத்திருக்கின்றேன். வாழ்த்துக்களுடன்.   

மதுரை சரவணன்.

Wednesday, April 8, 2015

காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழில் வெளிவந்த கவிதை

மாணவர்கள் அற்ற வகுப்பறை
இந்த வகுப்பறை 
இப்போது 
மாணவர்கள் அற்று காட்சியளிக்கலாம்.
இதற்கு முன் 
இருவர் தங்களுக்குள் சண்டையிட்டு இருந்திருக்கலாம்
இருவர் பாடம் கவனிக்காமல் எங்கோ இருந்திருக்கலாம்
இருவர் நட்பை பரிமாறியிருந்திருக்கலாம்
இருவர் தங்கள் ரகசிய தோழி குறித்து
சிலாகித்து இருந்திருக்கலாம்
இருவர் மதிய உணவு குறித்து சிந்தித்து இருந்திருக்கலாம்.
இருவர் நேற்று இரவு பார்த்த சினிமாவை நினைத்தப்படி இருந்திருக்கலாம்.
இருவர் எதிரில் கொடுமைப்படுத்தி கொண்டிருப்பவரை
கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்
இருவர் வீட்டில் நடந்த சண்டை குறித்து கவலைக் கொண்டவர்களாக இருந்திருக்கலாம்
இருவர் ஓடிய்ப்போன சகோதரி குறித்த பயத்தில் இருந்திருக்கலாம்
இருவர் முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும்
ஆயாவையோ தாத்தாவையோ எண்ணி வருந்தி இருந்திருக்கலாம்
இருவர் தன் தாய் கொண்டு வரும் உணவுக்காக காத்திருந்திருக்கலாம்
இருவர் எதையோ சாப்பிட்டு வாந்தி எடுத்திருக்கலாம்
இருவர் வாத்தியார் திட்டியதை நினைத்தப்படி அவர் மேல் வஞ்சத்தை செலுத்திக் கொண்டிருக்கலாம்
இப்படி எத்தனையோ இருந்திருக்கலாம்
வகுப்பறை என்றும் வெறுமை அற்று
காட்சியளிப்பதில்லை
மாணவர்கள் அற்ற வகுப்பறையை
அட இதில் என்ன இருக்கிறது
என சாதாரணமாக 
கடக்க இயலாது...!

மதுரை சரவணன்.

நன்றி காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்