Saturday, June 27, 2015

குழந்தை கொத்தடிமைத்தனம் இல்லை என்று யார் சொன்னது!




குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஒரு சரியான தகவல் நமக்கு கிடைக்க வில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2004 ன் படி 8.4 மில்லியன் என்கிறது. சமீபத்தில் மதுரை மாவட்டத்தில் 3000க்கு மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக செய்தி படித்தேன்.
குழந்தை பள்ளிக்கு செல்ல வில்லை என்றால் என்ன நிகழும்? உழைப்பாளியாக மாறிவிடுவார்கள். அக்குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும். குழந்தைகளுக்கு குழந்தைக்குரிய அனுபவங்கள் கிடைக்காமல் போய் விடும்.



இந்த அவலம் நிகழாமல் இருக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்கு வரும் வகையில் கற்றல் பணி செய்ய வேண்டும். அவர்களின் பெற்றோர்களிடம் கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பதை உணர்த்த வேண்டும். மாணவர்களின் சமூக பொருளாதர நிலையை கண்டறிந்து உதவிட வேண்டும். பெற்றோர்களிடம் தொடர்ந்து பேச வேண்டும். கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
குழந்தை தொழிலாளர் முறை என்று இல்லை என்று கூறுபவர்களுக்கு சாட்சியாக ஒரூ நிகழ்வை சுட்டி காட்ட விரும்புகின்றேன். ஆதரவு நிலைப்பாடு எனும் போது எப்படி போராடுவது என்பவர்களுக்கும் ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.




எனது பள்ளிக்கு சிந்தாமணிப்பகுதியில் இருந்து மாணவர்கள் வருகின்றார்கள். சிந்தாமணி பகுதியில் அப்பளக்கம்பெனிகள் நிரம்பிய பகுதி. அங்கு வாழும் மக்கள் தினக்கூலிகளாகவோ அல்லது வார சம்பளம் பெறுபவர்களாகவோ இருப்பார்கள். நடுத்தர வர்க்கமும் மிகவும் பொருளாரத்தில் பின் தங்கியவர்களும் வாழும் பகுதி.
இரண்டு வருடங்களுக்கு முன் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தை இரண்டு நாள்கள் பள்ளிக்கு வரவில்லை. விசாரிக்க சொன்னேன். அவர்கள் தாய், தந்தை அப்பளக்கம்பெனியில் அட்வான்ஸ் பெற்று
அதை திரும்ப தர இயலவில்லை. தாய்க்கு உடம்பு சுகமில்லை. ஆகவே, கடனை அடைக்க கூலி வேலைக்கு தன் மகளை ஓனரின் கட்டாயத்தில் அனுப்பி உள்ளார் என்ற விபரம் அறிந்தேன். உடனே ஆசிரியரை அனுப்பி பெற்றோரிடம் முறையிட சொன்னேன். அவர்கள் வறுமையை சுட்டி காட்டினர். நீங்க வேணும்னா 40 ஆயிரம் தாங்க என பேசி உள்ளார். தெரிந்தநபர்கள் மூலமாக ஓனரிடம் பேச செய்தேன். அவர் இதை அறியாதவர் மாதிரி, அப்படி யாரும் தன்னிடம் வேலை பார்க்கவில்லை என்று அடம் பிடித்து பேசினார்.
கடைசியில் சைல்ட் லைனுக்கு ஆசிரியரை பேச செய்தேன். அவர்கள் விபரம் மட்டும் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம் என கூறி வைத்துவிட்டனர்.
குழந்தையை காண வீட்டிற்கு சென்றேன். அவரின் தாயிடம் குழந்தையை வேலைக்கு அனுப்புவது தவறு . சட்டப்படி குற்றம். நான் புகார் அளித்தால் அது மேலும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று மிரட்டி வந்தேன்.
அடுத்த நாள் உடனே பிள்ளையை அனுப்பி விட்டார். ஆனால்
அப்பளக்கம்பெனிக்காரர் அவர் உறவினர் மூலம் அப்பகுதியில் தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் எங்கள் பள்ளியில் சேர்க்க கூடாது என கூறி விட்டார்.
அடுத்தவருடம் டிசி வாங்கி அருகில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.



குழந்தைகளுக்கு கல்வி கற்கும் உரிமைக்கான ஆதரவான சூழ்நிலை,பெற்றோரிடம் விழிப்புணர்வு, நல்ல ஆசிரியர்கள் ஆகியோரால் மட்டுமே சாத்தியம். அப்போது மாணவியின் பெற்றோரை அணுகி பேசிய எங்கள் பள்ளி தங்கலீலா ஆசிரியரை நினைத்து பார்க்கின்றேன். சைல்ட் லைனில் பேசிய போது அவர் அடைந்த பதற்றம் சிரிப்பு வரவழைத்தது. பயம் . தன்னை பற்றி விசாரிப்பார்களோ என்று, நான் தைரியமாக தலைமையாசிரியர் தான் பேச சொன்னார் என்று கூறி வெற்றி கண்டோன். அப்பெண் வேறு பள்ளியில் சேர்ந்தாலும் அந்த ஆசிரியரின் தொடர் கண்காணிப்பு பாராட்டுகுரியது. அவளை வேலைக்கு அனுப்பினா நான் புகார் அளிப்பேன் என தொடர்ந்து அந்த பெற்றோரிடம் கூறிவந்தார்.
பள்ளிக்கு செல்லா எல்லா குழந்தைகளுக்காகவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் போராட வேண்டும்.


நேற்று என் குழந்தைகளுக்கு அறிவியல் இரண்டாம் பாடத்தில் மதிப்பீடு செய்ய விளையாட்டு கற்று கொடுக்கப்பட்டது. சரணாலயங்களும் அங்கு வாழும் விலங்குகள் குறித்தும் மதிப்பிடப்பட்டது.
முதுமலை என்று கூறினால்,மாணவர்கள் யானைப்போல் செய்து காட்ட வேண்டும். கிண்டி என்றால் மான் போல் குதித்து காட்ட வேண்டும். பன்னீர் கட்டா சூ என்றால் பட்டாம் பூச்சி பறப்பது போல் கை அசைக்க வேண்டும். கிர் காடு என்றால் சிங்கம் போல் கர்ஜனையுடன் செய்ய வேண்டும். முண்டந்துறை என்றால் புலி மாதிரி பாய்ந்து காட்ட வேண்டும். வேடந்தாங்கல் என்றால் பறவை போல் பறந்து காட்ட வேண்டும்.
மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். தவறான செய்கை காட்டும் மாணவர்கள் விளையாட்டில் இருந்து விலக்க படுவார்கள். பின்பு அவர்கள் விளையாட்டை நடத்தும் தலைவனாக விளையாட்டு தொடரும். தொடர்ந்து விளையாடுதல் மூலம் அப்பாடப்
பகுதியில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.
பள்ளியில் குழந்தைகள் குறித்து யோசனை செய்யும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து பேசியப்படி உங்களுடன் விளையாட்டை பகிர்கின்றேன்.
நாளை அரசு மான்யம் உபரி ஆசிரிர்கள் மூலம் எப்படி வீணாக்கப்படுகின்றது என்று கட்டுரையை வாசிப்போம்.
கல்வி குறித்து மாற்றி யோசிப்போம்.
மதுரை சரவணன்.

Thursday, June 25, 2015

ஆசிரியருக்கு பாடம் கற்றுத்தரும் மாணவர்கள் – ஆச்சரியம் அளிக்கும் அதிர்ச்சி தகவல் !


Education is not the learning of facts, but the training of the mind to think. – Albert Einstien
ஒரு நாட்டின் வளமே மனித வளம் தான். மனிதனை வளமுள்ளவனாக உயர்த்துவதற்குக் கல்வி ஒன்று தான் சிறந்த மூலதனம். அக்கல்வி தரமான ஒன்றாக அமைய ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். நவீன கற்றல் உத்திகளை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதை புரிந்து நடக்கும் உளவியலாளராக செயல்பட வேண்டும். கல்வியை குழந்தைகள் மையப்படுத்தி கற்று கொடுக்க வேண்டும்.


இன்னும் ஆசிரியர்கள் பழைய பஞ்சாங்கத்தை கையில் தூக்கி கொண்டு , நான் தான் உனக்கு ஆசிரியர், நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும். பேசாதே, கையை கட்டி உட்கார், வாயை பொத்து என்று கூறிக்கொண்டிருந்தால், நாம் மாணவனை வகுப்பறையில் புதைக்கின்றோம் , அத்துடன் நம்மையும் சேர்த்தே அழித்து கொள்கின்றோம்.
நான் இன்று ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றேன். இப்படி பட்ட நிகழ்வுகளுக்காக பல நாட்கள் காத்திருப்பேன்.காத்திருந்து இருக்கின்றேன். இந்த வருடம் என் வகுப்பில் பயிலும் மாணவர்கள் மிகவும் எழுச்சியுடன், நற்சிந்தனையுடன், அவர்களின் படைப்பாக்க திறன் வெளிப்படுத்துவபவர்களாக காணப்படுகின்றனர். அதற்கு காரணம் கடந்த நான்கு வருடங்கள், அவர்கள் ஏபிஎல் எனப்படும் குழந்தை மையக்கல்வி முறையில் பயின்றதாக இருக்கின்றது. குழந்தை மையக்கல்வி மாணவர்களின் பயத்தை நீக்கி இருப்பதுடன், அவர்களை சுயமாக சிந்திக்க வைத்திருக்கின்றது. அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.


தினமும் ஒரு விளையாட்டு என்ற அடிப்படையில் பாடம் முடிந்ததும் செயல்படுத்துவது வழக்கம். இன்று ஆங்கிலப்பாடத்திற்கான pronoun குறித்த விளையாட்டை கற்றுக் கொடுக்க, விளையாட்டு விதிமுறைகளை சொல்லி கொண்டிருந்தேன். அப்போது ராகவன் என்ற மாணவனும் முத்து பாண்டி என்ற மாணவனும் வந்து சமூகவியல் பாடத்திற்கு விளையாட்டு சொல்லி தரவில்லை. ஆகவே, நாங்களே உருவாக்கி உள்ளோம் என்றனர்.
எனக்கு நானே கை தட்டி கொண்டேன். என் முதுகை பலமாக தட்டி கொண்டேன். நான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டேன். ஆம். என் மாணவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். புதிய ஒன்றை முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். ஜனாதிபதி கையில் விருது வாங்கி இருந்தாலும் இப்படி பட்ட மகிழ்ச்சி என்னில் உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே!

நாளை நாம் ஆங்கிலப்பாடத்திற்குரிய விளையாட்டை விளையாடலாம். இப்போது ராகவன் நமக்கு விளையாட்டை கற்று கொடுப்பான். சிரித்தான். கூச்சப்பட்டான். “சும்மா சொன்னேன், சார் “ என தடுமாறினான். “அட சும்மா சொல்லு பயப்படாதே” என்றேன்.
அருகில் இருந்த நவீன், “டேய் மனசுக்குள்ளேயே வைச்சுகிட்டு இருந்தா தப்பு, கல்வின்னா உள்ளே உள்ளதை வெளிப்படுத்துவது தான், சும்மா சொல்லு. சார் தப்பா நினைக்க மாட்டார். நமக்கு உதவுவார்” என்றான். முத்துப்பாண்டி அது வந்து சார் என ஆரம்பித்தான்.
சோழர்கள் என்றால் புலி மாதிரி ஆக்சன் செய்ய வேண்டும்” என்றான் சூப்பர் என்றேன். உடனே ராகவன் , சோரர் என்றால் வில் விடுவது போல் நிற்க வேண்டும் “ என கூறி செய்து காட்டினான். அனைவரும் ஆர்வம் ஆகினர். அடுத்து பாண்டியன் என்று கூறினால் மீன் நீந்துவது போல் அசைக்க வேண்டும் என்றான். சூப்பர், எல்லோம் கை தட்டுங்கள் என்றேன்.அனைவரும் கை தட்டினார்கள்.


”சார், இவ்வளவு தான் சார் யோசித்தேன். அப்புறம் எப்படி விளையாடுவது என தெரியவில்லை “ என்றான் முத்து பாண்டி. கவலையை விடு கான்சப்ட் உன்னோடது. அதை டெவிலப் பண்ணி முழு விளையாட்ட உருவாக்குவது என் பொறுப்பு என்றேன்.
அனைவரும் கை தட்டி சூப்பர் என்றனர். இது எனக்கு இல்லை ராகவாவுக்கும் முத்து பாண்டிக்கும் கிடைத்த பாராட்டு என்றேன். மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்போது கரிகாலன் என்பேன் , நீங்கள் உடனே புலிப்போல் ஆக்சன் செய்ய வேண்டும் என்றேன். ஆமா சார் அவன் சோழ மன்னன், புலிப்போல தான் ஆக்சன் செய்ய வேண்டும் என்றான் ராகவன். இளங்கோவடிகள் என்றேன். உடனே முத்து பாண்டி வில் விடுவது போல் நின்றான். அனைவரும் இவன் சேர மன்னன் தம்பி ஆகவே வில் என்றனர். மதுரை என்றேன். பாண்டியர் தலைநகரம் என கூறி மீன் நீந்துவது போல் நீந்த ஆரம்பித்தாள் ப்ரியா.
இப்போது எல்லோருக்கும் விளையாட்டு புரிந்தது. நான் கூறும் வார்த்தையை கவனித்து , அந்த வார்த்தை எந்த மன்னர்களுடன் தொடர்பு உடையது என அறிந்து அதற்கு தகுந்த மாதிரி ஆக்சன் செய்ய வேண்டும். எங்கே ஒரு முறை செய்து காட்டுங்கள். பாண்டியன் என்றேன். அனைவரும் நீந்துவது போல் செய்கை செய்தனர். சேரன் என்றேன். வில் விடுவது போல் ஆக்சன் செய்தனர். கரிகாலன் என்றேன். உடனே புலி உறுமுவது போல் ஆக்சன் செய்தார்கள். சூப்பர் விளையடலாம். வட்டத்தில் நிற்க வேண்டும். தவறாக செய்தவர்கள் அப்படியே அதே இடத்தில் அமர வேண்டும் அதன் பின் அவர்கள் வார்த்தைகளை கூறலாம் என்றேன்.
சிலப்பதிகாரம் என்றேன் அனைவரும் வில் போன்று நின்றனர். வேம்பு என்றேன் அனைவரும் நீந்த ஆரம்பித்தனர். கல்லணை என்றேன் புலி போல் உறுமினர். இமயவரம்பன், வஞ்சி, உறையூர், கங்கை கொண்ட சோழபுரம், ராஜ ராஜன். கண்ணகி என வார்த்தைகளை கூற மாணவர்கள் அதை ,மூவேந்தர்களுள் யாருக்குரியது என சிந்தித்து செய்கை செய்து காட்டினர. தவறியவர்கள் அமர்ந்து பிறர் கூறுவது சரிதானா என பார்த்தனர்.

பாடங்கள் திட்டமிடல், பாடத்தை நிருவகித்த, பொருள் புரிந்து கொள்ள செய்தல், வளங்களை கையாளுதல் ஆகிய எல்லா வற்றையும் விட மாணவர்களை புரிந்து கொள்ளுதல் , அவர்களின் சிந்தனையை இயல்பு நிலையில் இருந்து படைப்பூக்க நிலைக்கு அழைத்து செல்லும் என்பது உண்மை ஆகிவிட்டது.
ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை சிந்தனைத்திறன்களும் வளர்ச்சியடைய கல்வி அமைப்பும், பயிற்சி முறையும், ஆசிரியரின் ஊக்குவிப்பும் அவசியம் . இவைகள் எவ்வையான உள்ளீடுகளை வழங்குகின்றன என்பதை ஆசிரியர்கள் கல்வியாளர்களாக இருந்து சீர்தூக்கி பார்த்தால், தரமான கல்வி சாத்தியப்படும்!
மதுரை சரவணன்.

Wednesday, June 24, 2015

ஆசிரியர்களின் மனப்பான்மையில் மாற்றம் தேவை ! - உண்மை ரிப்போர்ட்


*
இன்று துவக்கப்பள்ளி அளவில் கல்வி முறை மாறி விட்டது. கல்வி குழந்தை மையமாக உள்ளது. ஆகவே, குழந்தைகளை மையப்படுத்தி கல்வி கற்பிக்க படுவதற்கு ஏற்றார் போல், கற்பிக்கும் முறைகளிலும் SABL, ALM என்று மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மாணவர்களை மதிப்பீடு செய்வதிலும் பெரும் மாற்றம் கண்டுவருகின்றோம்.


மாற்றங்கள் இப்படி எல்லா நிலைகளில் மாறினாலும், அம்மாற்றம் கற்று கொடுக்கும் ஆசிர்யர்களின் மனதில் வர வேண்டும். இன்று சூழல் மாறி விட்டதாக உணர்கின்றேன். முகநூலினை திறந்தால் ஆசிரியர்கள் குழுமமாக செயல்படுவது ஆச்சரியமாகவும், கல்வி குறித்த மாற்று சிந்தனையுடன் செயல்படுவதாகவும் உணர்கின்றேன்.
ஒருவரின் செயல்பாடுகளில் இருந்து மற்றொருவர் செயல்களை எடுத்துக் கொண்டு, அச் செயல்பட்டைபள்ளிகளில் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.


குழந்தைகள் பள்ளிகளில் எளிய செயல்பாட்டின் வழியாக கற்பதையே விரும்புகின்றனர். களப்பயணம், உற்று நோக்குதல், பதிவு செய்தல், விவாதித்தல், ஒருமித்த கருத்தை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபாட்டுடன் திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் விளையாட்டையும் விரும்புகின்றனர்.


விளையாட்டுகளை பொதுவாக மதிப்பீட்டு செயல்பாடுகளுக்கு உருவாக்கி கொள்வது ஆசிரியர்களுக்கு நல்லது. மாணவர்கள் அறியாமலே அவர்களை மதிப்பிட உதவும். அதன் வழியாக மாணவர்கள் பின் தங்கியுள்ள பகுதிகளில் முழு திறன் பெற மாணவர்களுக்கு உதவ முடியும். ஒட்டுமொத்தமாக எல்லோரும் பின்தங்கிஉள்ளர்கள் எனில் கற்பித்தல்முறையில் மாற்றம் செய்யவும், அப்பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தவும், ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்தி கொள்ள உதவும்.
அறிவியல் 5 ம் வகுப்பு , “பசுமை உலகம்” பாடத்தில் பூவின் பகுதிகள் பாடத்தினை செம்பருத்தி பூவினை வைத்து மாணவர்களுக்கு அதன் பகுதிகளான ஆண் பகுதி மகரந்தம் பெண் பகுதி சூலகம் என்பதனை விளக்கி, ஆண் பகுதியில் மகரந்த தாள் , மகரந்த துகள், மகரந்த கம்பி ஆகியவற்றை பிளேட்டால் அறுத்து மாணவர்களிடம் காட்டவும். அதன் பின் பெண் பகுதியான சூலகத்தில், சூல் முடி, அதனை தொடர்ந்து சூல் தண்டு, சூல் பை, சூல்கள் ஆகியவற்றை செம்பருத்தி பூவில் வெளியில் எடுத்து காட்டவும். அதன் பின் ஒவ்வொரு மாணவர்களுக்கும் செம்பருத்தியினை கொடுத்து , மாணவர்களை ஆசிரியர் செய்து போல் பூவின் ஆண், பெண் பகுதிகளை அறுத்து டிஸ்ப்ளே செய்ய சொல்லவும்.


மாணவன் இச்செயல் பாட்டின் வழியாக பூவின் ஆண், பெண் பகுதிகளை புரிந்து கொண்டானா என அறிய , மாணவர்களை வட்டமாக நிற்க செய்யவும்.
பூவின்ஆண் பகுதிக்கு உரிய பாகங்களை சொன்னால் வட்டத்திற்கு வெளியேயும், பெண்பகுதிகளை சொன்னால் வட்டத்திற்கு உள்ளேயும் குதிக்க சொல்லவும். சூல் முடி என்றால் மாணவன் வட்டத்திலிருந்து முன்னால் குதிக்க வேண்டும். மகர்ந்த துகள் என்றால் பின்னால் குதிக்க வேண்டும்.


இவ்வாறு ஆண், பெண் பகுதிகளை கூறி குதிக்க செய்யவும். மாணவர்கள் ஆசிரியர் கூறும் பூவின் பகுதியை கவனித்து குதிக்க வேண்டும். தவறாக செய்யும் மாணவன் வட்டத்தில் அதே இடத்தில் கீழே அமர்ந்து , அவர்களில் ஒருவர் பூவின் பகுதிகளை கூற வேண்டும். இப்படி தொடர்ந்து விளையாட ஒரு மாணவன் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட, அவனே வெற்றிப்பெற்றவன் ஆவான். இதனை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் மாணவர்கள் பூவின் ஆண் மற்றும் பெண் பகுதி குறித்து தெளிவு பெறுவர்.
அதன் பின் பூவின் குறுக்கு வெட்டு தோற்றம் வரைந்த தாளினை கொடுத்து மாணவர்களிடம் பூவின் பாகங்களை குறிக்க செய்ய, சரியாக குறிப்பார்கள். மாணவர்களை இவ்வாறாக மதிப்பிடலாம்.
விளையாட்டாக கற்பதால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வருகை தருகின்றார்கள். வீட்டில் படித்து விட்டு வருகின்றார்கள். அடுத்த நாள் கொடுக்கும் விளையாட்டில் தவறில்லாமல் செய்ய வேண்டும் என்று முயன்று கற்று கொள்கின்றனர். இந்த இயல்பூக்கத்தினை பயன்படுத்தி ஆசிரியர்கள் அவர்களின் சிந்தனைக்கு வேலைகொடுத்தால், படைப்பாக்க திறன் வெளிப்பட்டு உண்மையான கல்வியின் குறிக்கோள் நிறைவடையும்.
எல்லா பாடங்களுக்கும் வகுப்பறை விளையாட்டுகள் உள்ளன. இனி தினமும் விளையாட்டு தொடரும்.
மதுரை சரவணன்.

Tuesday, June 23, 2015

வகுப்பறையை விளையாட்டு மைதானமாக மாற்றிய ஆசிரியர்

குழந்தைகளின் விளையாட்டுத்தனம் படிப்புக்கு உதவும்!
*
குழந்தைகள் இயல்பாக இருப்பதை எப்போதும் விரும்புகின்றார்கள். குழந்தைகளை இயல்பாக வைத்திருக்கும் ஆசிரியரின் வகுப்பறை என்றும் உயிரோட்டம் உள்ளதாக அமைந்து விடுகின்றது. குழந்தைகளின் இயல்பு தனத்தை அப்படியே வகுப்பறையில் பின்பற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத ஆசிரியராக இருப்பதை காணலாம். உங்கள் நினைவுகளில் நிற்கும் ஆசிரியரை பற்றி சிந்தியுங்கள். நிச்சயம் உங்கள் இயல்பை அவர் தக்க வைத்திருப்பார்.

குழந்தைகள் இயல்பு என்பது விளையாட்டு தனமாய் இருப்பது. நல்ல ஆசிரியருக்கு மூலதனமே அந்த குறும்பும் விளையாட்டுத்தனமும் ஆகும். என்றும் என் மாணவர்களை விளையாட்டு தனத்துடன் விளையாட அனுமதிப்பதால்,அவர்கள் எளிதில் கற்று கொள்ள உதவுகின்றேன் . அத்துடன் ,நான் அவர்களுக்கு பிடித்த ஆசிரியராகவும் மாறி விடுகின்றேன். 


அறிவியல் பசுமை உலகம் பாடத்தில் விதைகள் பரவுதல் குறித்து விளையாட்டு கற்று தந்தேன். புகைப்படங்களை பார்த்தால் மாணவர்களின் மகிழ்ச்சி தெரியும்.
விதைகள் காற்று, நீர் , விலங்குகள் , பறவைகள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவுகின்றன. இவைகள் விதை பரவுவதற்கு உதவும் காரணிகள் ஆகும். இலவம் பஞ்சு காற்று மூலம் பரவுகிறது. ஆகாயத்தாமரை நீர் மூலம் பரவுகின்றது. நெருஞ்சி முள் விலங்குகள் மூலம் பரவுகின்றது. ஆலம் விதை பறவைகள் மூலம் பரவுகின்றது. இப்படி நாம் ஏற்கனவே கற்று தந்திருப்போம்.

அவர்கள் விதை பரவுதல் குறித்து கற்று கொண்டுள்ளனரா? என மதிப்பிடவும். அவர்களுக்கு வலுவூட்டல் செய்வதற்கும் இச்செயல்பாடு பயன்படும்.
மாணவர்களை வட்டமாகவோ இல்லை வரிசையாகவோ நிற்க செய்யவும். நிற்கும் போது இரு கைகளையும் நீட்டி அடுத்தவர் மீது படாதவாறு நிற்க செய்யவும்.


நீங்கள் வெண்டை, தென்னை, தாமரை, வேம்பு, துவரம் பருப்பு, கடுகு,
என தாவரங்களின் பெயர்களை கூற வேண்டும். காற்று மூலம் பரவும் தாவரங்களை கூறும் போது மாணவர்கள் அவர்களை நோக்கி விசிறி கொள்ள வேண்டும். பறவைகள் மூலமாக பரவும் தாவரங்களை கூறும் போது பறப்பது போல் காட்ட வேண்டும். நீர் மூலமாக பரவும் தாவரங்கள் கூறும் போது தண்ணீர் குடிப்பது போல் செய்ய வேண்டும். விலங்குகள் மூலமாக பரவும் தாவரங்கள் பெயர்களை கூறும் போது யானைப்போல் துதிக்கை மடக்கி பாவனை செய்ய வேண்டும். மனிதர்கள் மூலமாக பரவும் தாவரங்கள் பெயர்களை கூறும் போது மாணவர்கள் நடக்க வேண்டும்.


தாமரை என்றவுடன் மாணவர்கள் நீர் குடிப்பது போல் செய்து காட்டுவர். அவர்களின் செய்ய தவறியவர் விளையாட்டில் இருந்து நீக்கப்படுவர். ஆலமரம் என்றவுடன் பறவைப்போல் பறந்து காட்டுவார்கள்.

இப்படி நாம் தாவரங்களின் பெயர்கள் சொல்லும் போது மாணவர்கள் விதை பரவுவதில் எவ்வளவு அளவு அறிவு நிரம்பியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். சரியாக, விதை பரவுதல் சார்ந்த அறிவு பெற்றவர்களுக்கு இது வலுவூட்டல் செயலாகவும், அது சார்ந்த அறிவு பெறாதவர்களுக்கு அது சார்ந்த அறிவு பெற மீள் கற்றலாகவும் இருக்கும்.
மதுரை சரவணன்.

Friday, June 19, 2015

குழந்தைகளை வகுப்பறையில் பேச அனுமதியுங்கள்!

நாயை நன்றி உள்ள விலங்குன்னு ஏன் அழைக்கின்றோம் தெரியுமா?
*
Man Versus Nature என்ற முதல் பாடத்தினை வாசிக்க பயிற்சி அளித்து கொண்டிருந்தேன். bowed என்ற சொல்லை உச்சரிக்க தெரியாமல் முருகேஸ்வரி என்ற மாணவி திணறிக்கொண்டிருந்தாள். bow ,பொவ் என கூற சொன்னேன். அருகில் இருந்த ராகவன், “ யே முருகேஸ்வரி , நாய் மாதிரி குரைக்க தெரியாதா.. இந்த இப்படி தான் என பொவ் பொவ் “ என செய்து காட்ட அனைவரும் சிரித்தனர். அருகில் இருந்த தனசீலன் bow என்றால் வணங்குதல் தானே என்றான். ஆமாம்டா என்றான் அருகில் இருந்த பா. மணிகண்டன். “ bow.. bow.. பொவ், பொவ் என குரைப்பதால், ஓனரை பார்த்து வணங்குறேன்னு வணங்குறேன்னு தானே நாய் சொல்லுது ..அதனால தான் நாம் .. நாய்யை நன்றி உள்ள விலங்குன்னு சொல்றோம்.. சரிதானே சார்” என்றான் தனசீலன்.
குழந்தைகளை பேச அனுமதித்தால் போதும் அவர்கள் சிந்தனைகளை சிறகடித்து பறக்க செய்து நம்மை வியக்க செய்துவிடுகிறார்கள். சுதந்திரமான கற்றல் தான் சுயமான சிந்தனையை வளர விடும். தினமும் ஒரு சுவையான நிகழ்வுடன் இனி உங்களை சந்திக்கின்றேன்.
மதுரை சரவணன்.

Thursday, June 18, 2015

கவிதை கூறும் புகைப்படம்

மீட்டு எடுத்த பால்யம்
*
தெருவில் சிறுவர்கள் விளையாடும்
கிரிக்கெட்டை வேடிக்கை
பார்த்து கொண்டிருந்தேன்
ஓங்கி அடித்த பந்து உருண்டு
என்னருகில் வந்தது
எடுத்து கொடுத்த பந்துடன் நானும்
விளையாட்டில் இணைந்து கொண்டேன்
வேகமாக ஓடிச்சென்று வீசியப் பந்தை
மட்டைப்பிடிப்பவன் மட்டையை சுழற்றி அடிக்க
என்னை நோக்கி திரும்பிய பந்து
பால்யத்தையும் திருப்பி கொண்டு வந்திருந்தது!

மதுரை சரவணன்.


Wednesday, June 17, 2015

நூலகத்தில் அட்டகாசம் செய்த மாணவர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்



ஒவ்வொரு நாளையும் மாணவர்களுக்காகவே ஒதுக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு மாணவனாக எதை எதை இழந்தேனோ அதை எல்லாம் என் மாணவர்கள் இழக்க கூடாது என்று நினைத்து செயல்படும் போது , அவர்கள் விரும்புவதை செய்வதாக உணர்கின்றேன். அதானால் அவர்கள் வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கின்றேன்.

சுட்டி விகடன் , மாணவர் உலகம், கோகுலம், சிறுவர்கள் கதைகள் என சிறுக சிறுக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து, வாசிப்பின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு மாணவராக பொதுநூலகத்தினை அறிமுகம் செய்து, நூலக உறுப்பினராக்கி, வருட முடிவில் தினமும் நூலகம் செல்லும் மாணவனாக மாற்றி வருவது எனது வழக்கம்.






பாடப்புத்தகங்களை தவிர்த்து பிற புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அவன் தனது அறிவை பெறுக்கி கொள்ள முடியும் என்று நம்புவனாக உள்ளதால் , நூல்களை எப்படியும் படிக்க செய்ய பழக்குவது எனது வழக்கம்.
இந்த முறை வந்த மாணவர்களில் பாதிக்கும் மேல் ,அவர்களின் அண்ணன், அக்கா என யாரவது ஒருவர் என்னிடம் பயின்றவர்களாக உள்ளதால், என்னை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்ததால், ஆரம்பம் முதலே என்னிடம் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். பயம் என்பது ஆசிரியரிடம் விடுப்படுமானால் கல்வி தானாக அங்கு துலங்க ஆரம்பித்து விடும் . பல ஆசிரியர்கள் இன்னும் ஆசிரியர்கள் என்ற நிலையிலே தங்களை பாவித்து வருகின்றனர். ஆதலால், கருத்துக்களை திணிப்பவர்களாகவே உள்ளார்கள். இந்த திணிப்பு மாணவர்கள் இன்னும் பயந்து நடுங்கி இயல்பு கற்றலை மறக்க செய்து விடுகின்றது.





கற்றலில் மாணவர்களின் ஈடுப்பாடு, முயற்சி மிகவும் அவசியம். அதனை நாம் ஏற்படுத்தினால் போதும் அவர்கள் தாமாகவே கற்றுக் கொள்வார்கள்.ஆசிரியர்கள் அவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற சூழலையும், அதற்கான தளத்தையும் ஏற்படுத்தி , ஒரு தோழனாக , துணையாக இருந்து வசதிகளை பெருக்கி கொடுத்து கற்றலுக்கு உதவுபவனாக இருத்தால் போதும், நாம் எதிர்பார்த்தைவிட மிக அருமையான அறிஞர்களாக , சான்றோர்களாக உருவாகி வருவார்கள்.
காலையில் வந்தவுடன் சுட்டிவிகடனில் எப்.ஏ பேஜ் பார்த்து ராகவன் “சார், சூப்பரா இருக்கு.எங்க சார் இந்த புத்தகத்தை வாங்கிறது. “





“டேய்...காசு இல்லைன்னா..நம்ம நூலகத்தில் போய் படிக்கலாம். அங்க இந்த புத்தகத்தை பார்க்கலாம்” பா. மணிகண்டன். 
“சார், லைப்ரேரி கூட்டிட்டு போவீங்களா? அங்க புத்தகம் எடுத்து படிக்கவா..?” 
“ஓ கே . நீ டெய்லி புத்தகம் படிப்பீய்யா.. சார், உங்க டேபிளில் இருந்த மாணவர் உலகத்தை படிச்சுட்டேன்.”
“சூப்பர்.. எல்லோரும் வாசிக்க தெரிஞ்சா போதும், புத்தகத்தை எடுத்து படிக்கலாம். வாசிக்க அரை குறையாக வந்தாலும் பரவாயில்லை, படக்கதை, சிறுவர் பாடல் என சில புத்தகங்கள் இருக்கும்..அதை படிக்க படிக்க வாசிப்பு மேம்பட்டு நீயாகவே விக்ரமாதித்தன் கதை, சிந்துபாத் கதைன்னு படிக்க ஆரம்பிச்சு விடுவாய்”
”சார்.. நான் இந்த வருடம் 400 புத்தகம் வாசித்து உலக சாதனை படைப்பேன் ” என்றாள் கீர்த்தனா. 
“வெரி குட். பொதுநூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்து படிக்க , முதலில் உறுப்பினராக வேண்டும்.அதன் பின் நூலகர் நமக்கு ஒரு கார்டு தருவார். அதன் மூலம் நமக்கு தேவையான நூல் பெற்று வீட்டில் கொண்டு வந்து படிக்கலாம். புத்தகத்தை நல்ல நிலையில் திருப்பி கொடுக்க வேண்டும்.”






“சார்...நிறைய புத்தகம் இருக்குமா.. நமக்கு வேண்டியதை எப்படி தேடி பிடிக்க முடியும்?” என கேட்டாள் வீரம்மாள்.
“நூல்களை வரிசைப்படுத்தி இருப்பார்கள். இலக்கியம், சிறுவர் இலக்கியம், கவிதைகள், சிறுவர்களுக்கான கவிதைகள். தன்னம்பிக்கைபுத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், சுயசரிதை புத்தகங்கள், அறிவியல் பகுதி என வரிசைப்படுத்தி நமக்கு தேவையான தலைப்பில் புத்தகங்களை வகைப்படுத்தி இருப்பார்கள். புத்தகத்தின் பெயர் தெரிந்தால் , அதனை கூறி நாம் நூலகரிடம் பெற்றுக் கொள்ளலாம்.”
“சார்... அப்ப எப்ப போகலாம்..”
“இப்பவே...வாங்க போவோம்.அப்படியே வரும் வழியில் காற்று எப்படி மாசுப்படுகின்றது என்பதை வாகனங்களில் வெளிப்படும் புகை அளவு, வாகனங்களின் எண்ணிக்கை மூலம் அறிவோம்..ஓகே”
“சார், நம்ம ஏரியாவில் ரைஸ் மில்லில் இருந்து புகை வருமே..”
”ஆமாம்...நாம் லைப்ரேரி சென்று, மீண்டும் திரும்பும் வரை காற்று மாசுப்பட காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.”
“அய்யா ...சூப்பர்...” என சமயவேல் கூறியவுடன் அனைவரும் அய்யா என கத்த ஆரம்பித்தனர்.
“அமைதியா இரு.. லைப்ரேரியில் எல்லோரும் படித்து கொண்டிருப்பார்கள். ஆகவே, நாம் அமைதியாக செல்ல வேண்டும். மேலும் அங்கு புத்தகம் வாசிக்கும் போது அமைதியாக புத்தகங்களை வாசிக்க வேண்டும். பிறருக்கு இடையூறு விளைவிக்ககூடாது. “
“ஓகே சார்.. என அனைவரும் அமைதியாக நூலகம் கிளம்பினார்கள்”
“சார்.. நீங்க தான் சார்..பிள்ளைகளை நூலகதிற்கு அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். சென்ற வருடம் உங்க கிளாஸ் பிள்ளைகள் நாங்க திறந்தவுடனே வந்து செய்தி தாள் படித்து புதுசா புத்தகம் வாங்கி சென்று வ்ந்தார்கள். உங்களை மாதிரி எல்லோரும் இருக்க வேண்டும்.” என்றார் நூலக பெண்மணி.
“சார் தப்பா நினைக்க மாட்டீங்களே.. நூலக ப்ரீயர் வச்சு இருக்கீங்களா,, அதுக்குன்னு தனியா மார்க் போடுவீங்களா..? “என லைப்ரேரியன் கேட்டார்.
“சாரி சார்.. பாடப்புத்தகத்தை தாண்டி நிறைய விசயங்கள் புத்தகங்களில் இருக்கு என்பதை காட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். இங்கு தான் நூலகம் உள்ளது என்பதை காட்ட வேண்டும். புத்தகம் பெறுவது எப்படி என்பதை பழக்கி கொடுக வேண்டும். நூலகத்திலுள்ள நூல்களை காணச்செய்ய வேண்டும். பயமின்று துணிந்து உள்ளே நுழைந்து உங்களுடன் பேசிப்பழகி, நூல்களை எடுத்து செல்ல வேண்டும். இது தான் என் ஆசை. இதை செய்தால் போதும் அவர்களாகவே புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்றேன்.
“ஆமாம் சார்.போன வருடம் பசங்க ரெம்ப சுறுசுறுப்பான பசங்க.. டெய்லி எடுப்பாங்க.. பரீட்சை அப்ப கூட எடுத்து படிச்சாங்க.. நான் கேட்டப்ப..நாங்க பாடத்தை எப்பவோ படிச்சுட்டோம். இன்னும் படிக்காத விசயத்தை தேடி வந்திருக்கோம் கொடுங்க என வாங்கி படிப்பாங்க.. நல்லா பேசுவாங்க சார்.. எல்லாம் உங்க ட்ரைனிங்“ என்றார் நூலக பெண்மணி.






“நீங்க கூட புத்தகம் படிச்சுட்டாங்களான்னு தெரிஞ்சுக்க.. என்ன படிச்சே கதை சொல்லுன்னு கேட்டு சொன்னவுடன் சாக்லெட் வாங்கிகொடுத்து அனுப்பி இருக்கீங்க..உங்க கிட்ட கதை சொல்லி சாக்லெட் வாங்கணும்ன்னு என் கிட்ட கதை சொல்லி பார்த்து வந்த பசங்க அதிகம். இந்த உற்சாகத்தை நீங்க இங்க இருந்து செய்றீங்க.. நான் அங்கு இருந்து செய்கின்றேன். மானவர்கள் வாசிக்கணும்...அது தான் நமக்கு முக்கியம். ”
“உங்களுக்கு சூப்பர் தலைமையாசிரியர் கிடைச்சு இருக்காரு...”
என லைப்ரேரியன் கூற , மாணவர்கள் தங்கள் வருகையை நூலக பதிவேட்டில் எழுதி கையொப்பமிட்டு புத்தகம் எடுத்து வாசிக்க் ஆரம்பித்தனர்.
அரைமணி நேரம் வாசித்த பின், நூலகத்தை சுற்றி காட்டி, புத்தகம் அடுக்கி வைத்திருந்த நூல்களை காட்டி, நூல்களின் வகைகளை பார்க்க செய்து நூலகரின் வாழ்த்துக்களுடன் பள்ளிக்கு வந்து சேர்ந்தோம்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள் நீங்கள் இளமையாக மாறுவீர்கள். குழந்தைகளுடம் பழகுங்கள் நீங்கள் குழந்தை தன்மையுடன் என்றும் புதுமையாக இருப்பீர்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள் என்றும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்”
அட மேலே சென்ன இது நம்ம வாத்தியாருங்களுக்கு....!
அப்பா கொஞ்சம் வாத்தியார் என்கின்ற பழமை கெட்டப்பை தூக்கி எறிந்து குழந்தைகளுடன் குழந்தைகளாக இருக்க பழகுங்கப்பா.. புதுசு புதுசா கல்வியில் சாதிக்கலாம்.
மதுரை சரவணன்.

Tuesday, June 16, 2015

வைகை மாசுப்படுதல் குறித்து மாணவர்கள் கள ஆய்வு.!


கொடுத்திடுவோம் அனுபவக்கல்வி! விதைத்திடுவோம் நற்சிந்தனையை!

      பள்ளி தொடங்கிய மூன்றாவது நாள் (3-06-2015)பள்ளிச்செயலரின் அனுமதிப்பெற்று மாணவர்களை வைகை ஆறு எவ்வாறு மாசு அடைந்துள்ளது என்பதை நேரில் ஆய்வு செய்துவர அழைத்து சென்றேன். இது பாடம் சார்ந்த எப்.ஏ. செயல்பாடாகும். ஐந்தாம் வகுப்பு தமிழ் எனக்கு இறக்கைகள் முளைத்தால் பாடத்திற்கும் , ஆங்கிலப்பாடம் மேன் வெர்சஸ் நேச்சர் என்ற பாடத்திற்கும் உரிய செயல்பாடாகும்.






வைகையை பார்த்த ஒரு மாணவன், “ இதிலேயா சார் அழகர் இறங்கி வருகிறார்” என்றான். “பாவம் சார் கடவுள் ”என்றான் மற்றொருவன். இந்த வருடமும் சூப்பராக களப்பயணம் சென்றதில் பெருமிதம் கொள்கின்றேன்.

 டேங்கர் லாரியில் கழிவுகளை கொட்டிய போது, “ சார் எப்படியெல்லாம் அசுத்தம் ஆக்கிறாங்க .. யாரு சார் இவுங்களை தண்டிக்கிறது” என்று கத்தினான். அருகில் நின்றிருந்த பெரியவர், “ இப்படி தான் சமூக கோபத்தை உண்டாக்க வேண்டும் ” என என்னை பாராட்டி சென்ற போது இன்னும் நிறைய செய்ய வேண்டியது உள்ளது என எண்ணித் தோன்றியது.


 புகைப்படங்கள் மாணவர்களே எடுத்தது. அவர்கள் நீர் மாசுப்படுதலை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை மட்டுமே ஏற்படுத்தி கொடுத்தேன். ஆய்வு மனப்பான்மையை வளர்த்துள்ளேன் என்பதை சொல்லி கொள்வதில் பெருமைப்படுகின்றேன்.


மாணவர்கள் சாக்கடை கழிவுகள் வைகையில் கொட்டப்படுவதை நேரில் கண்டனர். மாடுகள் ஆடுகள் ஆற்று ஓரங்களில் வளர்க்கப்படுகின்றன. மனித கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன. ஆற்றில் துணிக்கு குறிப்பாக சேலைக்கு சாயம் ஏற்றும் தொழில் நடைப்பெற்று வருகின்றது. உரச்சாக்குகள் அலசப்படுகின்றன. மாமிச கழிவுகள் கொட்டப்படுகின்றன. நெகிழி குப்பைகள் பரவி கிடக்கின்றன. இப்படி அடுக்கி வைத்துள்ளனர். அவர்களிடம் இந்த வருடம் வைகை குப்பை இல்லாமல் இருக்க புதுமையான உத்தியை கூற வேண்டும் என்று கூறியுள்ளேன். விரைவில் அதற்கான தீர்வுடன் உங்களை சந்திக்கின்றேன்.

மதுரை சரவணன்.

வகுப்பறையில் பேயை கொண்டு வந்த மாணவன்! - அதிர்ச்சி தகவல்!

தயவு செய்து வகுப்பறையில் மாணவர்களுடன் உரையாடுங்கள்!

*

மாணவர்களிடம் உரையாடும் போது, சமய நம்பிக்கைகளும் சடங்குகளும் அவர்கள் மனதில் விதைவிட்டு கிளைப்பரப்பி விரிந்துதுள்ளன என்பதை அறிய முடிகின்றது. அதேவேளையில் இந்த நச்சை எப்படி களைவது என்பதிலுள்ள சிக்கல் ஆசிரியர்களுக்கு மட்டுமே பெரிய சுமையாக உள்ளதையும் உணர முடிகின்றது.

நேற்று என் பள்ளியில் புவிவெப்பமாதல் குறித்து உரையாடலை மாணவர்கள் மத்தியில் தொடங்கினேன்.

“முன்னெல்லாம் வெளியே சென்றால், அவ்வளவாக வியர்க்காது. வெப்பமா இருக்காது. தலையெல்லாம் சுடாது. வெட்க்கையா இருக்காது. இப்ப என்னடான்னா.. வெளிய தலைக்காட்ட முடியலை.. சூடு அதிகமா இருக்கு. பூமி வெப்பமா இருக்கு. இதுக்கு எது காரணம் தெரியுமா?”

“புகை, சார்” என்றான், மணிகண்டன்.
“புகைன்னு மொட்டையா சொன்னா எப்படி ?” எதிரே இருந்த கீர்த்தனா சிரித்தாள். சிக்ரெட் புகையா?

“ சார், வாகனப்புகை, தொழிற்சாலை புகை “ என்று விளக்கமாக பதிலளித்தான்.

“அது சரி, வாகனப்புகை முன்னேயும் இருந்துச்சு.. ” என்றேன். அதற்குள் முனிஸ்ரீ , “இப்பரெம்ப அதிகமாக இருக்கு “ என்றான். ”வெரி குட், இந்த புகைக்கும் புவியின் வெப்பம் கூடுவதற்கும் என்ன சம்மதம்? ” என கேட்டேன்.

“சார், சாமி மேலே இருக்கா...” என்று இழுத்தான் ராகவன்.

“என்னது.. விளக்கமா சொல்லு...எல்லோரும் கொஞ்சம் தம்பி சொல்றதை கேளுங்கள்”

“சார், அதான் சார் கடவுள் . (ஆமாம்) அவரு மேலே இருக்காருல்ல..இந்த புகை எல்லாம் மேலே போகுதுல்ல..அப்ப அவருக்கு கண்ணு எரியும் தானே.. (ஓ அப்படியா?) அப்ப கடவுளுக்கு கோபம் வந்துச்சா.. அவரு அப்படியே பூமியோட வெப்பத்தை கூட்டிட்டாரு.சபிச்சுட்டாரு”

(சிரிப்பு வந்தது. )

“ஓ, சூப்பர். இவன் சொன்னதில் இருந்து ஒரு விசயம் தெளிவா புரியுது. புகை வானத்தில் அதிகமாக செல்வதால், புவி வெப்பமாகின்றது. சரி தானே. (ராகவன் தலையாட்டினான்) நாம எந்த வழிகளில் எல்லாம் புகையை மேலே அனுப்புறோம். வாகனம் , தொழிற்ச்சாலைன்னு மணிகண்டன் சொல்லி இருக்கான். வேறு யோசிச்சு சொல்லுங்க..”

“சார்.. பிளாஸ்டிக் குப்பையை எரிக்கின்றோம்” என்றாள் கீர்த்தனா.
அவள் அருகில் இருந்த ப்ரியா , பிளாஸ்டிக் இல்ல , நெகிழிக்குப்பைன்னு சொல்லு. சார் டையர், ரப்பர் போன்றவற்றை எரிப்பதனால் புகை உண்டாகின்றது” .

”சார், வயர் எரிப்பாங்க சார்...” என்றான் ரா. மணிகண்டன்.

“வீட்டில் இருக்கின்ற .. பிரிஜ் வெளியிடுகின்ற காற்று...சிஎப்சி என்கின்ற குளோரே புளோரே கார்பன் போன்ற வாயுக்கள் புவி வெப்பதுக்கு முக்கிய காரணமா இருக்கு ” என்றேன்.

“சார், ஏசி ரூம், ஏசி கார்...” என்றான் வீர மணிக்கண்டன்.

“சூப்பர். இப்ப கவனி. இந்த புகை எல்லாம் மேலே போய் என்ன செய்யுது?”.என கேட்டேன்.

“மேலே போய் மேகமா மாறுது ”என்றான் ராகவன்.

“டேய், மேகமாவா மாறுது...?” என்றேன்.

“சார், மழை வந்தா கண் எரிதுல..அந்த காத்து தானே மழையா வருது..அந்த மழை தோலில் பட்டால் வெந்து போகும் “ என்றான் முகிலன்.

“மேலே காத்து கடவுள் வீட்டுக்கு போகுது சார்...”என்றான், முனிஸ்ரீ.

”கடவுள் வீடு எல்லாம் வேணாம். மேலே என்ன இருக்கு சொல்லுங்க..”
“மேகம்.. “ “சார் சூரியன்”
அப்புறம் ...

“வானம்.. “ அப்புறம்.
”சார் விண்வெளி “ என பல குரல்கள் ஒலித்தன.

“வானத்தில் , விண்வெளியில் சூரியன் இருக்கு. அது தான் நமக்கு வெப்பத்தை தருது. சரிதானே..”

”சார்.. சூரியன் தான் சார்... ஓவரா வெயில் அடிக்கிறதால.. நமக்கு பூமி வெப்பமா இருக்கு “ என்றான் சமயவேல்.

“இதுக்கு முன்ன இதே சூரியன் தானே இருந்துச்சு.. அப்ப எல்லாம் இல்லாத வெப்பம் தீடீர்ன்னு எப்படி கூடுச்சு...”

“சார் கடவுள் மேலே இருக்காரா.. அவரு கண் எரியுதா.. சூரியனை வச்சு..நம்ம எல்லாம் வாட்டுறாரு சார்..அதான் ஒரே வெப்பமா இருக்கு” என்று மீண்டும் ஆரம்பித்தான் ராகவன். அவனோடு பலரும் ஆமாம் சார் என தலை அசைத்தனர்.

“ தம்பி சூரியன் தீடீர்ன்னு வெப்பத்தை எப்படி கூட்ட முடியும். நீ சொல்ற மாதிரி கடவுள் சொல்லிட்டார்.. எப்படி இது சாத்தியம். ”
அனைவரும் சிரித்தார்கள்.

“யோசி, சூரியனின் வெப்பம் அதிகமாகிருக்கு. நாம் புகையை மேலே நிறைய அனுப்புறோம். அந்த புகைக்கும் இந்த சூரியனுக்கும் நடுவில் வானத்தில் என்னமோ நடந்து இருக்கு..யோசி..”

”சார்.. அதுவந்து சார்... மேலே..” என இழுத்தாள் கீர்த்தனா.

“இப்ப நாம் குளிருதுன்னா..வச்சுக்க உடனே கம்பளி போர்த்தி குளிரில் இருந்து பாதுகாத்து கொள்கின்றோம். அதே மாதிரி சுடுதுன்னு வச்சுக்க.. பாத்திரத்தை கையில் சூடுபடாம தொட துணி வச்சுக்குவோம்.. அது மாதிரி.சூரியன் வெப்பம் நேரடியா விழாம இருக்க...”

“சார்.. சாமி தப்பு செய்தா.. தண்டனை தரும். புகையை மேலே கடவுள் வீட்டுக்கு அனுப்புறோமில்லே அதான் கோபிச்சு.. நம்ம வசிக்கிற பூமியை சூடாக்கிட்டார் ” என்றான் சமயவேலும் ராகவனுடன் இணைந்து.

“யோசி.. சாமியை மறந்து யோசி...புகையை மேலே அனுப்புறோம். இதுக்கு முன்பும் புகையை அனுப்பி இருக்கோம். ஆனா இப்ப மட்டும் பூமியில் வெப்பம் அதிகம்..அப்ப வானத்தில் என்னமோ நிகழ்ந்து இருக்கு..யோசி” என்றேன்.

”கீர்த்தனா.. வானத்தில் சூரியன் வெப்பத்தை தடுக்க ஒரு போர்வை இருக்கு சார்.. அதுல ஓட்டை விழிந்திருச்சு...4வதுல .. படிச்சு இருக்கேன்,சார்..,அது வந்து ...”

“வெரி குட்..... நம்ம சூரியனின் அக,புற ஊதாகதிர்களில் இருந்து பாதுகாக்க ஓசேன் படலம் வானத்தில் உள்ளது. அதில் நாம் அனுப்பும் இந்த வாயுக்கள் ஓட்டையை உருவாக்கி இருக்கு.. அதனால் நேரடியாக சூரியன் பூமியின் மீது படுவதால்..வெப்பம் கூடியிருக்கு..”

“ஆமாம் சார்.. ஓசோன் படலம் ஓட்டையாகிடுச்சு..” என அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.

“இப்ப சொல்லு .. பூமி வெப்பத்துக்கும் கடவுளுக்கும் சம்மதம் உண்டா..?”
அனைவரும் சிரித்தனர்.
“சரி புகையை குறைக்க என்ன செய்யலாம்?”
“எல்லோரும் நடந்து போவோம் சார். வண்டி ஓட்டக்கூடாது சார்.”
“சார்..எங்க வீட்டில் சைக்கிள் மட்டும் தான் சார்.. எங்கப்பா வண்டியை வித்துட்டார்.. “ என்றான் பா. மணிகண்டன்.
“வெரிகுட்..”
“அப்புறம் ஏசி போடக்கூடாது. ப்ரிஜ் யூஸ்பண்ணக்கூடாது..”
”சார், மரம் வெட்டக்கூடாது. மரம் வளர்க்கணும்”
”சூப்பர் ...ஏன்? “
“ மழை தரும்...”
“ வேற..ஏன் மரம் வளர்க்கணும்.. இந்த புகைக்கும் மரத்துக்கும் சம்பந்தம் இருக்கான்னு யோசி.”
“சார்.. மரம் காத்த உறிஞ்சுக்கிடும்...” என்றாள் ப்ரியா.
”இப்படி தான் அறிவியல் பூர்வமாக சிந்திக்கணும். ஒரு கதை சொல்றேன். கதைக்கு முடிவை அறிவியல் பூர்வமா சொல்லணும்.”

ஒரு ஊரில் ஒரு அம்மாவும் மகனும் வசித்து வந்தாங்க. ஒரே மகன். அவன் படிச்சு முடிச்சுடுறான். பக்கத்து டவுனில் வேலை கிடைச்சு போச்சு. மகன் அம்மாவை விட்டு டவுனில் வேலைக்கு சேர ஆசை படுகிறான். அம்மாவுக்கு மகனை அனுப்ப விருப்பம் இல்லை. ஒத்த மகனாச்சே. ஒரு யோசனை செய்கிறா? அவன் கிட்ட ஒரு சத்தியம் வாங்குறாங்க. அந்த காலத்தில் டவுனுக்கு போகணும்ன்னா.. மாட்டு வண்டியிலோ இல்லை நடந்தோ தான் போக வேண்டும். அதுனால வழி நெடுக பயணப்படும் போது சாப்பிட லெமன் பொட்டலம் தயார் செய்து தருகின்றாள். மகனே நீ போகும் போது புளிய மரத்தில் ஓய்வெடுத்து உறங்கு.. நகரத்தில் வேலை சேர்ந்து ஒருவேளை பிடிக்க வில்லை என்றால் வரும் போது வேப்ப மரத்தடியில் படுத்து உறங்கி வா என்று சொல்லி அனுப்புகிறாள். அவன் போன வேகத்தில் வேலையில் சேராமல் அம்மாவை தேடி ஓடி வந்துவிட்டான். எப்படி? என கேட்டேன்.

நம்ம ராகவன். ஒரே வரியில் விடை சொன்னான். சார் புளிய மரத்தில் பேய் இருக்குமா. அவன் நைட் தூங்கும் போது அவனை பயமுறுத்தி அவனை பிடிச்சு கிறும்..அவன் பயந்து .வேலைக்கு போகல.. வரும் போது வேப்ப மரத்தில் மாரியாத்தா.. இருக்குமா.. அந்த சாமி பேயை ஓட்டிடும். அதுனால சந்தோசமாக, அவுங்க அம்மாகிட்ட மகிழ்ச்சியா திரும்பி வந்துட்டான்”

“உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது” என்று விவேக் மாடுலேசனில் சொல்லி விட்டு.. சாமி பூதம் ன்னு போலியான விசயமா சிந்திக்காம , அறிவியல் பூர்வமா யோசி.. உங்க அம்மா அப்பாகிட்ட இந்த கதையை சொல்லி விடை தெரிஞ்சுகிட்டு வா என பாடத்தை முடித்தேன்.
(இந்த உரையாடல் நிகழும் போது கலகல வகுப்பறை சிவா என் வகுப்பில் அமர்ந்து மாணவர்களின் பேச்சை கவனித்து கொண்டிருந்தார்)

மதுரை சரவணன்.

Friday, June 5, 2015

மன்னித்துவிடு மரணமே! (சிறுகதை)


இறப்பை பற்றிய நினைப்பு எரிச்சல் தருகின்றது. இறப்பது எல்லோருக்கும் நிகழும் ஒரு நிகழ்வு தான் என சாதாரணமாக கடக்க முடியவில்லை. இப்போதெல்லாம் கோபம் நிறைய வருகின்றது. அதுவும் அன்புக்குரியவர்களிடம், எரிச்சல் படும் போது, இதற்கு விரைவில் இறந்துவிடலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
ஆதங்கத்தின் முழுவடிவம் அன்புக்குரியவர்களிடத்தில் அதிரும் குரலாக ஒலிக்கும் போது, அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து போவது எதார்த்தமே! அப்படி எளிதாக பிரிந்து போக விட முடியவில்லை. எப்படியாவது மீண்டும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொள்கின்றேன். இருந்தாலும் நான் அவளிடம் அப்படி பேசியிருக்க கூடாது.
மரணம் என்பதை விட மரணபயம் மிகவும் கொடிதாக இருக்கின்றது. இது தான் வியாதி என்று தெரிந்த பின் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நேரம் குறித்த பின் அதைவிடவும் கொடுமையாக இருக்கின்றது. இனி நாம் இப்புவியில் வருவோமா? தெரியவில்லை.
அப்படி பிறந்தாளும் அவள் என் தாயாக வருவாளா? இல்லை எனக்கு நட்பாக இருப்பாளா? அவளை ஒருபோதும் தோழியாக நினைக்கவில்லையே? ஒரு தாயாக தானே நினைத்தேன். இன்று மட்டும் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் கொப்பளித்து வருகின்றது? அப்படி மூஞ்சியை ஏறிட்டு பார்க்காத அளவுக்கு திட்டி விரட்டி இருக்க கூடாது? உனக்கு யார் மீது கோபம்? அவள் மீதா? இல்லை
மரணத்தின் மீதா? உனக்காக அழ இனி யார் இருக்கிறார்?
இந்நினைவுகளுடன் அய்யோ என கதறி அழுகின்றான் சுதாகரன். என்னை மன்னித்துவிடு. கவிதா.. வர வர எனக்கே என்னை பிடிக்காமல் போகும் போது ,எப்படி நான் உன்னிடம் முகம் கொடுத்து பேசுவது?
என் இயலாமையை உன்னிடம் எப்படி தெரிவிப்பது? தவிக்கின்றேன். என்னிடம் ஏதோ ஒரு மாற்றத்தை நீ காண்கின்றாய். சத்தியமாய் உன்னை விட்டு பிரிய மனமில்லை. ஆனால் பிரிந்து தானே ஆக வேண்டும். சண்டை இட்டு விலகுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை , என தலையில் அடித்து அழுத சுதாகரன், கொஞ்சம் நேரத்தில் சுயநினைவு இன்றி கீழே விழுந்து கிடந்தான். சுற்றி ஈக்கள் மொய்க்க தொடங்கி இருந்தன.
மரணம் அடைந்துவிட்டானா? இல்லையா? புதிராக தான் இருக்கின்றது. நானும் உங்களைப்போன்று தான் ,அவனிடத்தில் ஏதாவது ஒரு அசைவு தெரிகின்றதா? என்றபடி காத்திருக்கின்றேன். கவிதா அவனை பார்க்க வருவாளா? இதை நீங்கள் கவிதாவிடம் தான் கேட்க வேண்டும்.

நீங்கள் கவிதாவை தேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,
கவிதா இவனை நினைத்து தானே கழுத்தில் கட்டிகொண்ட தாலியை கழுத்தில் இருந்து கழட்டி எரித்து கொண்டிருந்தாள்!
மதுரை சரவணன்.

குழந்தைகளை சேர்க்க எளிய வழி - பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ஸ்.


இரண்டு நாட்களாக என் பள்ளியில் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் ஒருவர் என்னிடம் ஓர் வேண்டுகோள் விடுத்து கொண்டிருக்கின்றார். குறிப்பிட்ட பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதியில் , அக்குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அழைத்து துண்டு போட்டு, இவர் நம் பள்ளிக்காக குழந்தைகளை நிறைய சேர்த்துவிடுவார். விட்டுள்ளார் என பாராட்டி உள்ளார்கள். அதனால் நம் பள்ளி குழந்தைகள் நான்கு பேர் அப்பள்ளிக்கு சென்று விட்டனர். எனவே, நாமும் அப்படி செய்வோம் என்றார்.
நான் அந்த ஆசிரியரிடம் நீங்கள் அக்குழந்தைகளின் பெற்றோரிடம் நாங்கள் துண்டு போடுவதில்லை. நாங்கள் ஆள்சேர்ப்பதற்கு அரசியல் கட்சி நடத்தவில்லை , பாடம் கற்று தரும் ஆசிரியர்கள். ஆகவே, உங்கள் குழந்தைகளுக்கு நன்றாக பாடம் சொல்லி தருவோம் என உறுதி அளித்து வாருங்கள். முடிந்தால் என்னிடம் பேச செய்யுங்கள் என்றேன்.
அந்த ஆசிரியை, துணைக்கு மற்றொரு ஆசிரியரை அழைத்து சென்று, அந்த பெற்றோரிடம் நான் கூறியது போல கூறியுள்ளனர். மேலும் என்னிடம் பேச சொன்னதற்கு அக்குழந்தையின் தந்தை மறுத்துள்ளார். அதை என்னிடம் வந்து தெரிவித்தனர்.மறுநாள் சென்று எப்போது அம்மாணவர்களின் தந்தை இருப்பார் என அறிந்து வாருங்கள் , நான் வருகின்றேன் என்ற தகவலையும் தெரிவியுங்கள் என்றேன். அவரின் மாமா ( துண்டு வாங்கியவர் ) இருக்கும் போது அவசியம் நான் வருகின்றேன் என்றேன்.
மறு நாள் காலை ஆசிரியர் அப்பெற்றோர் வீட்டில் இருந்தபடி போன் செய்தார்கள். “சார் ,மாலை வந்து பேச சொல்லுகின்றார்” என்றார் ஆசிரியை. என்னிடம் ஒருநிமிடம் பேச சொல்லுங்கள் என்றேன். அவர் லைனில் வந்தார்.
“சார், நாங்கள் உங்கள் குழந்தைக்கு நன்றாக கற்று தருவோம். தந்துள்ளோம். அதில் குறை இருக்கின்றது என்றால், நானே உங்களுக்கு முறையாக டிசி வழங்கி அனுப்பி வைக்கின்றேன். முதல் வகுப்பு குழந்தை செய்தி தாள் வாசிக்கின்றது. நீங்கள் எங்கு சேர்க்க விரும்புகின்றீர்களோ அப்பள்ளி குழந்தைகள் அருகில் இருந்தால் வாசிக்க சொல்லுங்கள். விபரம் புரிந்துவிடும். நாங்கள் நன்றாக கற்று தருகின்றோம். நாங்கள் பாடம் நடத்த தொடங்கி விட்டோம். உங்கள் குழந்தைகளின் படிப்புக்கு நான் கேரண்டி ” என்றேன். நாளை பள்ளிக்கு அனுப்புகின்றேன் என்றார்.
இன்று பள்ளிக்கு குழந்தைகள் வந்துவிட்டார்கள்.
அட ஆசிரிய பெருமக்களே ! குழந்தைகளை சேர்ப்பது எப்படி ? என விழித்துக் கொண்டு தெருதெருவாக போய் வீடு வீடாக ஏறி இறங்க வேண்டாம். குழந்தைகளை சேர்க்க இரு எளிதான வழி முறைகளை கூறியுள்ளேன்.
இதில் எது உங்களுக்கு எளிதோ அதை உடனே செயல்படுத்துங்கள்.
தரம் தான் என்றும் நிரந்தரம் என்பதை மனதில் நிலை நிறுத்தி கொள்ளுங்கள்.
மதுரை சரவணன்.

Tuesday, June 2, 2015

வெகுஜனங்களின் மத்தியில் இந்த அரசு வெற்றி கண்டுள்ளது!

இது சார் கொடுத்த புத்தகம் அல்ல. அரசு கொடுத்தது!
*
நேற்றே ஜாலி தொடங்கி விட்டது. முதல் பாடம் சக்ஸஸ்.
பாடநூல், நோட்டு என எல்லா இலவசங்களையும் கொடுத்தவுடன் பாடம் தொடங்குவது தானே கடமை!
அதுக்குள்ள பாடமா? ஆமாங்க. என் முதல் பாடம் ஆசிரியர் மீதுள்ள பயத்தை போக்குவது தான்! அதுக்கு முதல்ல நாம் யாரையும் அடிக்க மாட்டோம். யாரையும் தேவையில்லாமல் திட்டமாட்டோம் என்பதை உணர்த்த வேண்டும். அதுக்காக நான் அடிக்க மாட்டேன், திட்ட மாட்டேன் என்றால் ஏறி மேய்ந்து விடுவார்கள். அதுவும் துவக்கப்பள்ளி மாணவர்கள் ரெம்ப விவரம். மாணவர்களை நேசியுங்கள் . இவ்விசயம் தானாக அமைந்துவிடும்.
மாணவர்களை நேசிப்பவர்கள், தான் கற்றுத்தருகின்றோம் என்ற மனநிலையை மறந்து, தாம் கற்பதற்கு உதவுகின்றோம், அதேவேளையில் கற்று கொள்கின்றோம் என்பதை உணர்ந்து செயல்படுவார்களாக இருப்பர். 

நான் எப்போது என் மாணவர்களுக்கு கற்று தருவதில்லை. அவர்கள் கற்பதற்கு உதவி செய்து வருகின்றேன். கற்பதற்கான சூழலை உருவாக்கி தருகின்றேன். இணை கற்றலை, குழு கற்றலை ஊக்குவிப்பவனாக இருக்கின்றேன். அதனால் என்னை அவர்களில் ஒருவனாக நினைக்கின்றனர். தங்கள் நினைக்கும் கருத்தை வெளிப்படுத்துகின்றனர். அதன் மூலம் எது சரி? எது தவறு? என்பதை தங்களுக்குள் விவாதித்து புரிந்து கொள்கின்றனர். அதிகம் சிந்திக்கு திறன் பெற்றவர்களாக இருப்பதால், தங்களுக்குள் உள்ள தனித்திறன் வெளிப்படுத்துபவர்களாக உள்ளார்கள்.
இன்று அறிவியல் முதல் பாடம் எடுத்தேன். எல்லோரும் பாடப்புத்தகத்தை திறந்தனர். வேண்டாம் . முடிவையுங்கள். தேவைப்படுமானால் நான் திறக்க சொல்லும் போது திறங்கள். பாட அறிமுகம் செய்து வைக்கின்றேன் என்றேன்.
ஆமா என்ன படிக்க போறோம்ன்னு தெரிஞ்ச பின்னால நாம் புத்தகத்தை திறப்போம் என்றான் ரா. மணிகண்டன். வீர மணிகண்டன் சார் நீங்க சொல்லுங்க சார், இவன் எப்பவும் இப்படி தான் முந்திரி கொட்டை மாதிரி பேசுவான் என ரா. மணிகண்டனை பிரேக் செய்தான்.
சரி உயிருள்ளவை எவை? உயிர ற்றவை எவை? என கேள்வி கேட்டேன். அனைவரும் செடி கொடி மரம் மனிதன், விலங்கு உயிர் உள்ளவை என கத்தினர். யார் பெயர் சொல்லி அழைக்கின்றேனோ, அவரே தான் பதில் சொல்ல வேண்டும். வேறு யாரும் பதில் கூற வேண்டாம்.. அப்படி அழைப்பவரை தவிர்த்து வேறு யாராவது பதில் அளித்தால், அவர்கள் அடுத்து நாம் விளையாட போகும் விளையாட்டில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்று குண்டை தூக்கி போட்டேன். அனைவரும் அமைதியானார்கள். மிகவும் கவனமாக கவனித்தார்கள்.
உயிர் இல்லாதவைகள் கல், மண் , பெஞ்சு என பா. மணிகண்டன் கூற , பொதுவாக சொல்லவும் என கூறினேன். அவன் யோசிக்க ஆரம்பித்தான். பின் மூன்று பேராக யோசித்து கூறவும் என்றேன். மணிகண்டன் குழு நீர் , காற்று என்று பதில் கூறினர். சபாஷ் என அனைவரையும் பாராட்ட சொன்னேன். . உடனே சினேகா குழு சூரியன், நிலம் என்று கூறியது. அக்குழுவிற்கும் கைதட்டல் கூறினேன்.
இப்போ விளையாடலாம் என்றேன். அனைவரும் ஜாலி ஆனார்கள்.
வட்டமாக நிற்க சொன்னேன். அனைவரும் வட்டமாக நின்றனர்.ராகவன் என்ற புதிய மாணவன் சார் பாத்ரூம் என்றான். சென்று வா என்றேன். அவன் வரும் வரை காத்திருக்க நினைத்து அவனின் புத்தகத்தை திறந்தேன். அருகில் இருந்த ரஞ்சித், “ சார், புத்தகத்தில் விளையாட்டு போட்டிருக்கா? “ என கேட்டான். இல்லை, அடுத்து என்ன நடத்துவது என பார்த்தேன் என்றேன்.அதற்குள் மூஞ்சு இறைக்க ஓடி வந்தான், ராகவன்.
சார் , என் புத்தகத்தை காணாம் என்றான். அதற்குள் முத்துகுமார், “ சார் வச்சு இருக்கார் தெரியலைய்யா? “ என மறு வினா எழுப்பினான். ”சார் என் புத்தகம் அது, தாங்க “ என்றான். “டேய், சார் தானே , உனக்கு புத்தகம் தந்தார், அவருக்கே புத்தகம் கொடுக்க மாட்டேன்னு சொல்ற !” என்றான் முத்து குமார். அதற்கு யாரும் எதிர்பார்திராத பதிலை ராகவன் சொன்னான்.
“இது ஒண்ணும் சார் தரலை, கவர்மெண்டு தந்த புத்தகம்”
”என்ன இருந்தாலும் அதை சார் தானே வாங்கி தந்தார். அதுனால சார் புத்தகம் தான்” என்று தொடர்ந்தான் முத்துக்குமார்.
“அப்படி பார்த்தா இது முதல்வர் அம்மா கொடுத்த புத்தகம் “ என ராகவன் பதிலுக்கு பேசினான்.
நான் அவனை சைகையில் அருகில் அழைத்தேன். அவன் பயந்து போய், “சார், சாரி சார்” என்றான். இப்போது நானே அவன் அருகில் சென்றேன். அவன் கைகளை குலுக்கினேன். அவன் மகிழ்ச்சியுடன் குலுக்கியப்படி , “சார், நீங்க அடிக்க போறீங்கன்னு பயந்தே போயிட்டேன்” என்றான்.
”இப்படி தான் தைரியமாக எது மனசில் பட்டதோ அதை பேச வேண்டும். உண்மையில் அது உன்னுடைய புத்தகம் தான். அரசு உனக்கு அளித்த புத்தகம் . அடுத்து செயல்பாட்டிற்காக பார்த்தேன். இந்தா...” என்றேன்.
“சார், நான் படிச்ச பழைய பள்ளி கூடத்தில் இப்படி எல்லாம் சார் டீச்சர் கிட்ட பேச முடியாது சார். நீங்க ஜாலியா அடிக்காம சிரிச்சு பேசுறீங்க..அங்க கேள்வி கேட்டாலே முட்டிய பேர்த்துபுடுவாங்க ” என கண்களில் நீர் பூக்க என் கரங்களை பற்றி பேச தொடங்கினான்.
வா விளையாடலாம்..இந்த வருடம் முழுவதும் நீ கேள்வி கேட்கலாம். பயப்படாம பதில் சொல்லலாம். நிறைய பிரண்ட்ஸ் கூட பேசலாம் என கூறி வட்டத்தில் நிற்க வைத்தேன். முதல் கேம் ஸ்டார் ஆகியது. உயிருள்ள பொருள் சொல்லும் போது வட்டத்தின் உள்ளே குதிக்க் வேண்டும். உயிரற்ற பொருள் கூறும் போது அப்படியே இருக்க வேண்டும். சிறிது அசைந்தாலும் அப்படியே அமர்ந்து விட வேண்டும்.
மீன் என்றேன். ஒருவன் மட்டும் அப்படியே நின்றான். அவனை அமர செய்தோம். கல் என்றேன். அடுத்து உட்கார்ந்த மாணவனை இப்படி மாற்றி மாற்றி பெயர்களை கூற சொன்னேன். ஆனந்தமாக விளையாண்டனர்.
அடுத்தடுத்து ஓவ்வொருவராக ஒவ்வொன்றாக நீர் காற்று சூரியன் நிலம் உயிரற்றவை மனிதன் விலங்கு பறவை உயிருள்ளவை என கூற வேண்டும். முதல் மாணவன் நீர் என்றான் அடுத்தவன் காற்று என்றான். மூன்றாமவன் நிலம் என்றான். அவுட் அமர சொன்னேன். மீண்டும் நீர் காற்று சூரியன் நிலம் உயிரற்றவை மனிதன் விலங்கு பறவை என வரிசையை நினைவு படுத்தி மீண்டும் கூற சொன்னேன். மாற்றி கூறியவர் அவுட் . இப்படி விளையாட்டு தொடர்ந்தது.
இது அரசு அளித்த புத்தகம் என தைரியமாக பதில் சொல்லியதன் மூலம் ஆசிரியரிடம் உள்ள பயம் நீங்கியது கண்டு மகிழ்ந்தேன். முதல் பாடத்தில் நான் பாஸ் செய்து விட்டேன். இனி தொடர்ந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
மதுரை சரவணன்.