*
இருப்பதிலே மிகப்பெரிய அவஸ்தையும், மிகப்பெரிய நிம்மதியும் மலம் கழித்தல் ஆகும்.
சிறுவயதில் இருந்தே கழிப்பறைகளை பயன்படுத்திய பலரும் காலை கடன் முடிக்க கிராமத்தினர் பலரும் படும் பாடு அறிந்திருத்தல் அரிது.
காரைக்குடிக்கு பெரியம்மா வீட்டிற்கு சென்ற போது திறந்தவெளி மலம் குறித்து அனுபவம் ஏற்பட்டது.
1980 வாக்கில் சென்றதாக நினைவு.
அக்காமார்கள் 4 அல்லது 5 மணி வாக்கில் , இன்னும் சரியாக சொல்லப்போனால் விடிந்தும் விடியாமலும் உள்ள நேரம், கையில் வாளியும், பித்தாளை செம்பும் எடுத்து சென்றார்கள். கோலம்போட செல்கின்றனர் என நினைத்து உறங்கி விட்டேன். நேரம் சென்று எழுந்து ஆய் வருது என்ற போது உங்க அண்ணன் கூட போ என்றார் பெரியம்மா.
அவர் வீட்டிற்கு வெளியில் அழைத்து சென்றார். நல்லா பார்த்துக்க நாளை பின்ன வந்தா நீயா தான் போகணும் . கம்மாய் ஆழம் ஜாஸ்தி . நான் காட்ற இடத்தில தான் கால் கழுவணும் என கண்டிசன் போட்டார். என் கண்டிசன் ரெம்ப மோசமாகவே கம்மாய் வரை தாங்காது என்றேன்.
அடக்கிக்க என்றார். வந்தவுடனே செல்லும் நகரத்து வாசியான எனக்கு பழக்கம் இல்லாததால் ஓரத்தை தேடினேன் . அங்க இருந்த ஆச்சி திட்டுவாங்க ..இன்னும் செத்த நட என அவசரப்படுத்த ...இரண்டு தெரு வரை திரும்பிய நான் தாங்க முடியாத அவசரத்தில் டவுசரில் இருந்து விட்டேன் .
அப்புறம் அண்ணன் வீட்டுவரை சென்று வாளியில் தண்ணீர் கொண்டு வந்து கழுவி, பின் அம்மணமாக டவுசரை இடது கையில் பிடித்து கூனி குறுகி நடந்து வந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் பெரியம்மா அந்த பீ த்த டவுசரை அப்படியே போட்டு வர வேண்டியது தானே என்றார். அழுகையாக வந்தது . அது இரண்டு மாதம் முன் தீபாவளிக்கு வாங்கியது.
பாவம் பெண்கள் நன்கு விடிந்த பின் செல்ல முடியாது. விடிவதற்கு முன்பே சென்று விட வேண்டும். அவர்கள் அவஸ்தை தனி.
வீட்டின் முன்புறம் வராண்டா இருக்கும். அதில் என் அக்கா அமர்திருந்தாள். வீட்டினுள் இருந்த பெரியம்மா அக்கா வீட்டுக்கு தூரம் . அவளை தொடாம வா என்றார். ஆய் வந்தா என்ன செய்வே என்றேன். விராண்டாவின் கடைசியில் மாடம் மாதிரி சதுரமாக கட்டி இருந்தனர். பள்ளமாக சறுக்கலாக குழி இருந்தது. அதில் ஆய் இருந்து மண் அள்ளி போடுவார்கள் என விளக்கம் அளித்தார். அதில் மறைப்பாக கோணி சாக்கு இருந்தது.
இன்று சக்கிமங்கலம் பகுதியில் இருந்து எங்கள் பகுதிக்கு வரும் பல மாணவர்களும் திறந்த வெளியில் மலம் செல்பவர்களே!
பல மாணவர்கள் அதன் கஷ்டத்தை உணர்ந்து பள்ளிக்கு வந்தே மலம் கழிக்கின்றனர்.
பல மாணவர்கள் அதன் கஷ்டத்தை உணர்ந்து பள்ளிக்கு வந்தே மலம் கழிக்கின்றனர்.
பல பள்ளிகளில் கழிப்பறை இருந்தாலும், அடைக்கப்பட்ட அல்லது திறந்த அரங்கில் பொது மேடை அமைத்து அதில் மலம் கழிக்கின்றனர். இங்கு முட்காடுகள் மட்டும் இல்லை. அதற்கு பதில் கான்கிரீட் தளம் .
திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது. அதனால் நோய்கள் பரவுகின்றன. வாஸ்தவம்.
ஆனால் இயலவில்லை. என்ன செய்வது?
பள்ளிகளில் செயல்படும் கழிவறைகளே, பல மாணவர்களுக்கு கழிப்பறை.
நவீன படுத்தப்பட்ட பல கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் அழிவு நிலைக்கு ஒரு சில மாதங்களிலே சென்று விடுகின்றன.
கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் தமிழக கல்வி துறை தொடக்கப் பள்ளி அளவிலாவது அதனை பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இந்து செய்தியில் குஜராத் பள்ளிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பது குறித்த செய்தி படித்தேன். அங்கு மட்டும் இந்த நிலமை இல்லை. தமிழகத்திலும் தான்.
குழந்தைகளிடம் தான் நல்ல பழக்கத்தை விதைக்க முடியும் . குழந்தைகளிடம் இருந்து ஆரம்பிக்கும் ஆரோக்கியமே நிரந்தரம்.
நர்மதா கிராமத்தில் நடைமுறை படுத்தப்பட்ட இவ் விசயம் பாராட்டதக்கது. அதேவேளியில் கழிப்பறை கட்ட பணவசதி களை அரசும் ஏற்படுத்தி தர வேண்டும் . இல்லை எனில் வருகைப்பதிவேட்டு வாசிக்கும் போது இப்படி எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை அய்யா என்பது பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் !
மதுரை சரவணன்