Tuesday, February 2, 2010

பரிசு வழங்க வேண்டும்

    ஆனந்த விகடன் 03 .02 .2010 இதழில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய  "நீங்கள் அன்பளித்தது எப்போது? "  படித்தேன். அதில் சிறுகதை ஆசிரியரான கு.அழகிரிசாமியின் 'அன்பளிப்பு' கதை ,மற்றும்  ஹாலிவுட் திரைப்படம் 'ரேடியோ ' மூலம் பரிசின் முக்கியத்துவத்தை பற்றி கூறியிருந்தார். அனைவரும் படிக்கவேண்டிய அற்புதமான படைப்பு. அவரின் கருத்தை வலியுறுத்தி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்  என் அன்பான வேண்டுகோள்.
         நான் படிக்கும் காலத்தில் அதாவது நல்லது செய்தால் ஆசிரியர்களும் , தலைமை ஆசிரியர்களும் பரிசளித்து ஊக்குவித்த கதைகள் ஏராளம். அன்று , இன்று போல் கை நிறைய காசு வாங்கவில்லை ஆசிரியர்கள், இருந்த போதும் தன் மாணவன் சந்தோசத்தையும் , நல்ல பழக்கவழக்கத்தையும் தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காக தன் வருமானத்தில் சிறுபகுதியை செலவிட்டனர். 

         இன்று கை நிறைய காசு வாங்குகிறார்கள் , ஆசிரியர் தொழில் (மன்னிக்கவும் பொதுஜனங்கள் சொல்லுவது ) மிகவும் பாதுகாப்பானது , காலை ஒன்பது மணிக்கு சென்று , மாலை நான்கு பத்துக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடலாம் . சொகுசான வாழ்க்கை இன்று ஆசிரியர் பணியை தொழிலாக மாற்றிவிட்டனர். ஆகவே தான் இன்று பரிசு என்பது பிறந்த நாள் , திருமண நாள், பண்டிகை என குறிப்பிட்டுக் கொடுக்கும் ஒரு நினைவு பொருளாகிவிட்டது.

        மாணவர்களுக்கு கனவாகி போனது பரிசும் . ஆகவே தான் அரசும் பொது மேடைகளில் புத்தகங்களை பரிசாக தரவும் என நினைவுபடுத்தியுள்ளது. கனவுகளாகிப் போன பரிசு, மாணவன் வாழ்வில் ஊக்கத்தையும், உற்சாகத்தையும்   சேர்த்து கனவாக்கி போனது.

        பிறந்த நாள் என வரும் மாணவனிடம் பேனா கொடுத்துப்பாருங்கள் அவனின் மகிழ்ச்சியும் , "சார் நான் நல்ல படிச்சு உங்ககிட்ட பரிசு வாங்குவேன் சார் ..."என்ற பதிலும் . ஆண்டு விழாவில் முதல் மதிப்பெண்  பெற்ற மாணவனின் மகிழ்ச்சியும் , இரண்டாவது பரிசு பெரும் மாணவனின் சபதமும் , பார்த்து பரவசம் அடையும் பெற்றோர்களும் ... எவ்வளவு ஆனந்தம் .  பரிசு பட்ட கஷ்டத்தை எல்லாம் பறக்கச் செய்யும் .
      
        பெற்றோர்களே  உங்கள் பையன் செய்யும் நல்ல காரியங்களுக்கு எல்லாம் சின்ன சின்ன பரிசு அளியுங்கள் . பரிசு  என்பது வெறும் பொருள் மட்டுமல்ல , அருகில் உள்ள பார்க் , நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து செல்லுதல்  போன்ற இட மாற்றங்களும், சிறிய விருப்பங்களும்  மிகப்பெரிய மன மாற்றத்தை மாணவனிடம் அழைத்து செல்லும் .

          ஆசிரியர் அனைவரையும் குறை கூற வில்லை.எல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல. எனக்கு தெரிந்து என்னுடன் பணியாற்றும் ஆசிரியை தன் மாணவர்களுக்கு தகுந்த சமயத்தில் அவனுக்கு வேண்டியதை பரிசாக தருவதை பார்த்திருக்கிறேன். தன் வருமானத்தில் கால் வாசி மாணவர்களுக்காக செலவிடுகிறார். தன் கணவனுக்கு தெரிந்து அநாதை குழந்தைகளுக்கு படிப்பு செலவு ஏற்று , தாய் போல் கண்டிப்புடன்    
வளர்த்து வருகிறார். கண்ணுக்கு தெரியாத அறப்பணி செய்யும் ஆசிரியர்கள் எத்தனையோ?
  
     சக ஆசிரியர்களின் ஏளனம் மிகவும் கொடுமை. "அவ , உலகத்தை தலைகீழ மத்திட போற ...வந்தோமா சம்பளம் வாங்கினோமா போனோமா ...இல்லாம ..."
"நாமக்கென்ன செய்ய தெரியாத ... என்னோமோ இவ்வ செயிராலாம் ..."
"நாம செய்யலாம்... பா ... ஆனா இவ செய்யுறதா பார்த்து தான் நாம உதவுகிறோம்முநு நினைப்பு வந்திடும் ..செய்ய தெரியாமலா ..."
இவை எல்லாம் ஆசிரிய பணியை  தொழிலாக செய்பவர்களின் இயலா மொழி . ஆனால் உதவும் ஆசிரியர் எதை  பற்றியும் கவலை படாமல் தன் அற பணியினை தவறாமல் செய்து , மாணவர் முன்னேற்றம் ஒன்றே குறிகோளாக செயல் படுவார்.

           நான் கல்லூரி பயின்ற பொழுது கூட பரிசு வழங்கும் ஆசிரியர்கள் அதிகம் . பரிசு என்பது கொடுப்பதன் மூலம் பிறரின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக கருதுவதாகும். மாணவர் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் மாணவனுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பரிசு வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்தி , நல்ல பண்பை ஊக்குவிப்போம், வளர்ப்போம். மதிப்பெண் அதிகம் வாங்கினால் தான் பரிசு வழங்க வேண்டும் என்பது அல்ல. நல்ல பண்பு வளர்பதற்கும் , மனதை பக்குவபடுத்தி , அன்பை பெருக்குவதற்க்கும் ஆகும்.

   பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவ்வப்போது பரிசுகளை தந்து , அன்பை பெருக்கி , பண்பை கூட்டி , நற்பண்பை நிலை நிறுத்தி , அவர்களின் எதிர்காலத்தின் நிலைப்புத் தன்மையை உறுதிப்படுத்த உழைப்போம்.

    உங்கள் நினைவில் நின்ற ஆசிரியர்களை பற்றி கருத்திட்டு ஆசிரிய சமுகம் , இன்னும் முனைப்பாக உழைத்திட உற்ச்சாக படுத்துவோம்.கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

1 comment:

Post a Comment