Monday, April 16, 2012

எரிகற்கள்…


சுமந்து வரும்
புத்தகப் பை
சுட்டிக்காட்டுவது
அவனின் மனச்சுமையையும் தான்…!

எத்தனையோ அடக்கு முறைகளையும்
அதன் விளைவுகளையும்
கற்றுத் தரும் ஆசிரியருக்கு
ஏன் புரியவில்லை
அவர்களின் அடக்கு முறை…!
வகுப்பறைகளில்
ஆசிரியர்களின் சூரிய வட்டத்தில்
நட்சத்திரங்களாய் ஜொலிக்கும்
மாணவர்கள்…
வெளியில் வந்தவுடன்
எரிகற்களாய்
இலக்கை அடையும் முன்
எரிந்து சாம்பலாவது ஏன்..?


புரியாத குறியீடுகள்


வகுப்புகள் தொடங்கின
வழக்கமாக கத்தும் காக்காயும்
சரியான நேரத்திற்கு கத்த துவங்கியது….
காக்காயை பார்க்கும் போதெல்லாம்
ஏமாந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது
நரித்தனம் இல்லாத மனிதர்கள் யார் ?
இன்னும் பாடம் நடத்தி முடியவில்லை…
எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி
கவருடன் வந்த தலைமையாரிசியை
பைன் வாங்குவது நல்ல விசயம் தான்
நீங்கள் திருந்த கொடுக்கும் வாய்ப்பு
யாரோ தவறாக தகவல் கொடுத்துள்ளார்கள்
நீங்கள் யாரும் விசாரித்தால்
பைன் வாங்குவதில்லை என கூறுங்கள் என்றார்
காகம் இன்னும் கரைந்து கொண்டிருந்தது
கணித குறியீடுகள் புரியாத மாணவர்கள்
மேலும் குழம்பிப் போய் இருந்தனர்
காந்தி மட்டும் இன்னும் சிரித்துக் கொண்டிருந்தார்
சத்தியமேவ ஜெய
எந்த மாணவனும் சுயசரிதையை வாசிக்க பயப்படுகிறான்
உண்மைகள் மறைந்த உலகில் …! 

Thursday, April 12, 2012

இலையுதிர் காலம்


   பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள இடைவெளி தான், நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. இந்த இடைவெளி வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கு இடமளிக்கின்றன. நாம் வாழும் சூழல், சூழல் வாயிலாக ஏற்படும் பயணம் , அதன் நீட்சிகள்  வாயிலாக இந்த இடைவெளி நிரப்பப்படுகிறது.  

   வாழ்வில் நாம் பல தரப்பட்ட விசயங்களை சந்திக்கின்றோம். அவைகள் வாயிலாக நாம் எதை கற்றுக் கொண்டோம் என்பது தான் நம்மையும் , நம் வாழ்வையும் தீர்மானிக்கும். நம் செயல்கள் தான் நம்மை உலகுக்கு அடையாளம் காட்டுபவை. நம் வெற்றி தோல்விகள் என்பவை நம்மை உலகில் தக்க வைத்துக் கொள்ள நாம் நடத்தியுள்ள (நல்ல அல்லது கெட்ட) செயல்களின் விளைவுகள். இவை நமக்கு மட்டுமே பலன் தருபவை. இதற்கும் அப்பாற்பட்டது தான் நம்மை உலகுக்கு அடையாளப்படுத்துப்பவை.

   நான் சிறுவனாக இருக்கும் போது , ஜன நெருக்கமான , குறுகலான சந்துகளை கடந்து தான் பள்ளியை அடைய நேரிடும். மதுரை காமராஜ புரம் என்றாலே அனைவருக்கும் ஒரு வித பயம் தான் . நான் குடியிருந்த பகுதி ராம் தியேட்டர் பின்புறமாக உள்ள சி.எம்.ஆர் ரோடு. ராம் தியேட்டர் ஓட்டியுள்ள பீ சந்து வழியாக தான் கடக்க வேண்டும் . இல்லையென்றால் பள்ளிவாசல் தெருவை கடந்து வந்து , பின் மார்க்கெட் அடைந்து, பால ரெங்கா புரம் ஆஸ்பத்திரியை ஓட்டியுள்ள சந்து , பின் ஆஸ்பத்திரியின் எதிர்புறம் பயணித்து கார்பிரேசன் மருத்துவமனை,  குயவர் சாலை வழியாக செயிண்ட் மேரிஸ் .

   பீ சந்தை கடக்கும் போது குடலை பிரட்டி வரும். அதுவும் பெண்கள் பேசும் வசவுகள் காதுகள் கூட அழச் செய்யும். “நல்ல பார்த்துட்டு  போங்கடா… உங்க ஆத்தாகிட்ட இருக்குறது தான்…”. “மசிறுதான்டா தெரியும் … தே..பயலே..” “ நல்ல தூக்கி காமிடி … பார்த்துகிட்டு போயி ..அடிச்சுகிட்டு திரியட்டும்…”. “யேய் …ஆளுங்க வர்றானுங்க எந்திருச்சு நில்லுடி..” இவை எங்களுடன் வரும் வளர்ந்த பசங்களுக்கும் , வாட்ட சாட்டமான ஆள்களுக்கும் கிடைக்கும் வசனங்கள்.  இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் எட்டாம் வகுப்பு வரை கடந்து சென்றுள்ளோம். எட்டு வருடமாகியும் அந்த குடலை பிடுங்கும் வசவுகளும் நாற்றங்களும் மறைந்த பாடில்லை. பொது கழிப்பிடம் தான் அரசு சார்பில் பெருகின. இருந்தாலும் இயற்கையாக இருந்து பழகிய அவர்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வில்லை. அதற்கு அருகில் ஒரு திருமண மண்டபம் கட்டிக் கொடுத்தார்கள். அது திருடர்கள் மற்றும் குண்டர்களின் கூடாரமாக தான் இருந்தது. அதனாலும் அவர்களை ஒன்றும் செய்ய வில்லை. அதனை ஓட்டியுள்ள இடத்தில் தான் காய்கறி மார்க்கெட். இருந்த கையோடு , காய் வாங்கி செல்லும் பலரை பார்த்து வியந்துள்ளேன். என் வீட்டிலும் அங்கு தான் காய் வாங்குவார்கள் !

    நேற்று என் பள்ளியின் உதவி ஆசிரியை மாலை அரைமணி நேரம் முன் கூட்டியே செல்ல அனுமதிக் கேட்டார். ஏன் என்றேன். என் தோழி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டார் என்றார்.
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக நானும் ரமேஷ் என்ற மூத்த மாணவனும் பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தோம். நாங்கள் பள்ளி செல்லும் போது சாலை ஓரங்களில் உள்ள வீட்டின் படிகளில் ஏறி இறங்கி பயணிப்போம். அதில் எங்களுடன் கிருஷ்ண குமார் என்ற நண்பன் வந்தால் மிகவும் ஜாலியாக இருக்கும். அவன் படிகளில் ஏறும் போது காலிங் பெல் அடித்து விடுவான். இது தெரியாமல் எங்களை போலவே விளையாடி வரும் பள்ளி செல்லும் மாணவர்கள் பல சமயங்களில் மாட்டிக் கொண்டு வசவு வாங்கியுள்ளார்கள். சில சமயங்களில் படிகளில் ஏறும் போதே எங்களை விரட்ட காத்திருக்கும் ஆட்களும் உண்டு.
அன்று பாலரெங்காபுரம் ஆஸ்பத்திரி எதிர் புறமுள்ள சந்தில் சென்று, கல் சந்தை ஓட்டி திரும்பும் போது உடலில் தீ பற்ற வைத்து கொண்ட ஒரு ஆண் எங்களை நோக்கி ஓடி வந்தார். கண் முன் உடலில் தீ எரிகிறது. செய்வது அறியாது அப்படியே நின்றோம். அவர் அலறிய படி அம்மா தாங்க முடியல… தாங்க முடியல.. என சொல்லிக் கொண்டே மீண்டும் வீட்டினுள் நுழைந்து நீர் உள்ள அண்டாவுக்குள் தன் தலையை  நுழைக்க முயன்ற போது சரிந்து விழுந்தார்.  வெந்த சதைப்பிண்டமாக பார்த்த காட்சி இன்னும் கண் முன் நிற்கிறது. மண்டை ஓடு பொரிந்து சதைகள் வெந்து தொட்டால் ஓட்டும் நிலையில் இருந்தது. எவரும் அருகில் வரவில்லை. மண்ணெண்ணெய் நெடி மட்டும் உடலில் இருந்து வந்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு தடியாள் எங்களை போங்கடா என விரட்ட நாங்கள் மௌனமாக நகர்ந்தோம்.

    தீ காயம் என்றவுடன்  என் நினைவுகள் என்னை வாட்டி விட்டது. சரி சென்று வாருங்கள். பயந்து விடாதீர்கள் . மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். வீட்டுக்காரர் வேலைக்கு செல்ல வில்லை, வேலைக்கு போக சொல்லி சண்டை . அவரு போன பின்னாடி மண்ணெண்ணெய் ஊத்திகிடுச்சு  என்றார்.
                                               தொடரும்…