Tuesday, January 31, 2012

இலவச பஸ் பாஸ் நிறுத்த வேண்டும்.


    இலவச பஸ் கட்டண அட்டை வழங்குவதை தமிழக அரசு ஏன் நிறுத்தக் கூடாது?

     இத்தனை நாள் நல்லா தானே எழுதி கொண்டு இருந்த… இப்ப என்ன உனக்கு கொள்ளையில போயிருச்சு என பொது ஜனங்கள் சாடுவது புரிகிறது. அட மானம் கெட்ட மாகா  ஜனங்களே என் மீது கோபம் கொள்ளாமல் தயவு செய்து நான் சொல்வதை கேளுங்க…

    ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என்பது புதிய கல்வி கொள்கைப் படி அதாவது கட்டாய இலவச கல்வி சட்டம் சரத்து படி உள்ள விசயம்.  அவர்கள் சட்டம் இயற்றும் முன்பே மாநகராட்சிகளில் தெருவுக்கு ஒரு பள்ளி அமைந்துள்ளது. அதுவும் தினுசு தினுசான போர்டுகளில் ( மெட்ரிக், நர்சரி, தமிழ் வழி, ஆங்கில வழி மத்திய அரசு திட்டம்) என அமைந்துள்ளது இங்கு கவனிக்க பட வேண்டிய ஒன்று.

    அண்மையிலுள்ள பள்ளிகளில் கட்டாயம் 25 சதவீதம் இலவசமாக மாணவர்களை எந்த போர்டாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜனத் தொகை குறைவாக உள்ள இக்காலத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உத்தேசமாக ஐம்பது மாணவர்கள் என வைத்துக் கொண்டாலும்,  அனைவரும் இலவசமாக தான் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும். 

இது இப்படியே இருக்கட்டும் … தனியார் பள்ளிகளில் பேருந்து வைத்துள்ளனர்.  மாணவர்கள் மாதம் ஐநூறு ரூபாய் கொடுத்து தனியார் பள்ளி பேருந்தில் வருகின்றனர்.  கட்டாயம் அவர்கள் அப்பள்ளியில் படித்தே ஆகவேண்டும் என பெற்றோர்கள் விரும்புவதால் , பள்ளி பேருந்தில்   அவர்கள் அனுப்புகின்றனர்.

    கிராமபுறங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி கூட இல்லாத நிலை யுள்ளது என்பது வருத்தத்துக்குரியது.  ஆனால் , மக்கள் நினைத்தால் அரசு பள்ளிகளை திறக்க செய்து முறையான பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தப்பட்டால், ஆசிரியர்களிடம் இருந்து நல்ல கல்வியை பெற முடியும்.  

அரசு இலவச பஸ் பாஸ் வழங்குவதால், அது மறைமுகமாக தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவுவதாகவே அமையும்

    நாம் மனசாட்சியை அடகு வைக்காமல் சொல்வதென்றால், இலவச பஸ் பாஸ் வாங்கிக் கொண்டு அரசு பள்ளியில் பயில்வதும் இல்லை. அதே போல நல்ல உயர்நிலையில் உள்ள பள்ளியிலும் நாம் இலவசமாக கல்வியை பெற்று விடுவதும் இல்லை.

    அருகாமை பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் பயில வேண்டும் என்றால், அரசு இலவச பேருந்து கட்டணம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். அருகாமைப்பள்ளிகளில் இலவசமாக மாணவர்களை மெட்ரிக் பள்ளிகள் சேர்க்க வேண்டுமென்றால் , தனியார் பள்ளிகளுக்கும் பேருந்து இயங்க அனுமதி மறுக்கப்படவேண்டும்.
     
   அம்மா மனசு வைத்தால், தமிழகத்தில் கல்வி அரசுடமையாக்கப்படலாம். கல்வி அரசுடமையாக்கப்பட்டு , எந்த வித பேதமின்றி அனைவருக்கும் சமமான., சமத்துவமான , இலவச கல்வி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கனவு நினைவு ஆக முதலில் இலவச பஸ் பாஸ் நிறுத்த வேண்டும்.  


Thursday, January 19, 2012

மருந்திடப்பட்ட மரக்குச்சிகள்


பள்ளி தோட்டத்தின் பலகையில்
பூக்களை பறிக்காதீர்கள்
கையில் குச்சியுடன் ஆசிரியர்
வகுப்பறையில்…!
 -----------------------------
தெருவோர குப்பைதொட்டி
சிரிக்கிறது…
வகுப்பறையில் மாணவர்கள்…!
 -----------------------------------
வகுப்பறையில்
மரப்பாட்சி பொம்மைகள்
ஆசிரியரின் தோதுக்கு ஏற்ப
ஆட்டுவிக்கப்படுகின்றன…
மரக்குச்சிகளின் தலையில்
மருந்திடப்பட்டாலும் …
அது உராய்சும் இடத்தின்
பதத்தை பொருத்தே
பற்றி எரிகிறது….!


Friday, January 13, 2012

விடியல்



சேவல் கூவி அழைக்க
சூரியன் தன் கைகளை
மெல்ல விரித்து
இருளின் முகத்தை துடைக்க….
வீட்டு மேற்கூரை வழியாக
ஊடுருவி வெளிச்சம் ….
வெளிச்சமாக்குகிறது
இருளின் உச்சத்தில்
நீண்ட புணர்தலுக்கு பின்
கவ்வி பிடித்து தூங்குபவர்களின்
நிர்வாணத்தை …
அழுகையும் சிரிப்புமாய் இருக்கும்
கனவுலகின் கதவுகளை உடைத்து
குழந்தைகளுக்கு நிஜத்தினை…
வீடுகளற்று
மூத்திர வீதிகளின் முடுக்குளில்
நடுங்கும் பனியில்
பயந்துறங்கும் பிச்சைக்காரியின்
முலையினை….
தெருநாயின் அதிகாலை புணர்தலை
விரைத்தகுறியுடன் ஏக்கமாய்
பார்க்கும் தெருவோர அனாதைகளை…
இப்படியாக எங்கும் பரவிய வெளிச்சம்
தன்  
அகண்ட கைகளைக் கொண்டு
அனைவரையும் தட்டி எழுப்புகிறது…
உறங்கிக் கொண்டிருந்த அனைத்தும்
விழிக்கின்றன..
விழித்துக் கொண்டிருந்த அனைத்தும்
உறங்கிப் போகின்றன…
உண்மையும் பொய்யாய்
பொய்யும் உண்மையாய்
கைகள் முழுவதும் விரிந்த நிலையில்
எல்லாம் நிகழ்கிறது…
சேவல் மீண்டும் கூவுகிறது…
மெல்ல கைகளை சுருக்கி
வீட்டின் மையப்பகுதியிலிருந்து ….
புறக்கடை வழியாக வெளியேறி
வீதிகளின் தெரித்து ஓடி
இருளுக்கு வழிவிடுகிறது
சேவலின் கூவல் நின்றபாடில்லை…!

Tuesday, January 10, 2012

கஷ்டப்படுத்தும் இந்த விசயத்தை புறக்கணீக்காதீர்கள்…!


   கல்வியின் பரிமாணம் உடனடி வேலைவாய்ப்பு ,கைநிறைய சம்பளம், முதலீடுக்கு தகுந்த உடனடி லாபம், உத்திர வாதம் அளிக்கும் எதிர்பார்க்கும் உடனடி பயன் என ரெடிமேட் உணவகம் போல் குறுகி விட்ட நிலையில் , நாம் நாட்டின் நன்மை நோக்கிய விழுமியங்களை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சாத்தியம்.

     நாம் மிருக காட்சி சாலைக்கு சென்று மிருகங்களை காணும் காலம் மாறி விட்டது. ஆம், முன்பெல்லாம் விடுமுறை என்றால் நாம் சித்தப்பா , பெரியம்மா  வீட்டுக்கு சென்று, அப்படியே சென்னையில் மிருக காட்சி சாலைக்கு சென்று மிருகங்களை கண்டு களித்து வரலாம் என்று திட்ட மிடுவோம். இன்று காலத்தின் கோலம், கல்வியின் அவசர அதிரடி விழுமியத்தின் விளைவு, மனிதன் மனிதனை காட்சி பொருளாக காணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கை நிறைய காசு , காண்பதற்கு அழகிய மனைவி என கூடிய வாழ்க்கையுடன் கண்ணுக்கு எட்டாத தொலைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு , நம் பெற்றோர்களை அனாதைகளாக விட்டுவிட்டு என்பதை விட அவர்களுக்கு நல்ல பாதுகாப்பு என்ற அடிப்படையில் வசதியான ஒரு முதியோர் விடுதியை ஏற்படுத்தி கொடுத்து சென்று விடுகின்றோம். விடுமுறைகளில் மிருக காட்சி சாலைகளுக்கு சென்று மிருகங்களை பார்க்க திட்டமிடுவது போன்று நம் மனித தெய்வங்களை ஒரு நாள் பயணமாக காணச் செல்கிறோம். எவ்வளவு மாறியுள்ளோம்? சாரி கல்வியின் விழுமியம் மாற்றியுள்ளது.

     அது மட்டுமல்ல அறிவியல் பூர்வமாக சிந்திக்க தவறியுள்ளோம். எதற்கும் பயம். எதற்கும் போராட்டம்.  எதனாலும் நன்மை கிடைக்கும் என்றால் உடனே அதனை தேர்ந்தெடுக்க தவறுவதில்லை. அது போலவே எதனாலும் தீமை வந்துவிடுமென்றாலும் அதற்காக எப்போதும் விட பயப்படுவதும் உண்டு. சக்கரத்தை பார்த்து பயந்திருந்தால் , என்ன நடந்திருக்கும்? பல்பு எறிவதை கண்டு பயந்திருந்தால், இன்னும் இருளில் மூழ்கி இருப்போம். இப்படி அறிவியல் வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நாம் எப்போதும் தவறவிடுவதில்லை. அவை நம்மை அறியாமல் நம்மை தொற்றிக் கொள்ளுகின்றன. ஆனால் இன்று அணு உலை விசயத்தில் நம் விஞ்ஞானி அப்துல் கலாம் சொன்னாலும் ஏற்க மறுக்கிறோம். ஏன்? மிக தூய்மையான மின்சாரம் அணு உலையினால் கிடைக்கும் என்கிறார்களே? சிந்திக்க மறுக்கும் மனதினை கொடுத்ததும் , நம் கல்வி முறையில் உள்ள கோளாறை எடுத்து இயம்புவதாகவே நம்புகிறேன். மாற்று எரிசக்திக்கான உடனடி தேவை குறித்த ஆய்வை மேற்கொள்ள நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தமிழக முதல்வர் அம்மாவின் பசுமை வீட்டு திட்டத்தில் சூரிய மின்கலன் கொடுக்கப்படுவது பாராட்டுக்குரியது.

     மாணவர்களிடம் அறிவியல் ரீதியில் உண்மைகளை தேடும் கற்றலை தொடக்க கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். (அறிவியலில் கற்றல் ஆனந்தமாக இருக்க ஆசிரிய பயிற்றுனர்கள் மூலமாக அறிவியல் ஆனந்தம் பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது )  எதையும் பகுத்து ஆராயும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.

    ஆன்மிகத்தையும் கற்று கொடுக்க வேண்டும். அப்போது தான் மாணவன் அதனை மறுக்கும் போதோ , ஏற்கும் போதோ அதனை அறிவியல் சார்ந்து புறக்கணிக்கவோ , ஏற்கவோ முடியும். ஒரு சி.டி பிளையரில் சி.டியை போட்டு பாட்டோ, படமோ, பாடமோ கேட்கும் போது நாம் நடுவில் ஆப் செய்கிறோம். ஆனால் , அது மீண்டும் இயக்கும் போது , மீண்டும் முதலில் இருந்து தான் தொடங்குகிறது. எப்படி? ஏன்? இது எதனுடன் பொருந்தும் என சிந்திக்க செய்யுங்கள். இதனை நான் ரிக் வேதத்தில் உள்ள கருத்தோடு பொருத்திப்பார்க்கிறேன். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் அந்நிகழ்வு நடக்கும் என்ற ரிக் வேத கருத்துடன் இந்த சி.டி மேட்டரை பொருத்தும் போது மீண்டும் அதே இடத்தில் ப்ளே(play) ஆவதைப் போன்று பத்தாயிரம் ஆண்டு கழித்து மீண்டும் இதே போல ஒரு போஸ்டில் உங்களுடன் இதே போன்று தொடர்பு கொள்வேன் என நம்புகிறேன்.
    
    நான் எதிர்பார்க்கும் கல்வி மாணவர்களுக்கு கிடைக்க ஆசிரியர்கள் அற்பணிப்பு பண்புடன் மாணவர்களின் சிந்தனையை தூண்டும் விதமாக செயல் பட வேண்டும். மேலும் விழுமியங்களை அவனையறியாமல் உணரச் செய்ய வேண்டும் . எதிர்ப்பார்க்கும் நற்பண்புகளால் மட்டுமே நாம் இந்தியாவை முன்னேரிய உலக நாடுகளில் ஒன்றாக பார்க்க முடியும். 

Friday, January 6, 2012

மருத்துவர்களாலும் ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்ட குறைபிரசவக் குழந்தையின் உலக சாதனை


    வானொலியில் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் சேது ராக மாலிகா தன் குழந்தைக்காக பட்டுள்ள கஷ்டங்களை கேட்டால் நீங்கள் கண்ணீர் வடித்து விடுவீர்கள். எட்டுமாதத்தில் குறைபிரசவம் … தட்டை குச்சியாய் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையை பார்க்க வந்து செல்வோரும் , மருத்துவரும் இக்குழந்தை இறந்து விடும் .. இதற்கு மேல் செலவழிக்காதீர்கள் என கை விரித்து விட்ட நிலையில், தந்தை கல்யாண குமார சாமி மற்றும் ராக மாலிகாவின் தன்நம்பிக்கையிலும் தெய்வ நம்பிக்கையிலும் பிழைத்து வந்த குழந்தை விசாலினி.  வாய் பேச வில்லை என மருத்துவர்கள் பலரை பார்த்துள்ளார். அனைவரும் அறுவை சிகிச்சை செய்தால் தான் பேச்சு வரும் என கைவிரித்து விட்டனர். இது குறைமாதத்தில் பிறந்ததால் குறைபாடுள்ள குழந்தை ,தட்டையான நாக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று பலர் முன்மொழிந்த நிலையில் மருத்துவர் ராஜேஸ் விசாலினியிடம் புதைந்துள்ள அற்புத ஆற்றலை கண்டு ஐக்யு டெஸ்ட் எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

”என்ன கதை விடுறீங்களா ? குறைமாதம்… பேச்சுக்குறைபாடு … இதுக்கு எதுக்குங்க ஐக்யூ டெஸ்ட் ? யாராவது காதுல பூ சுத்தியிருப்பான் அவன் கிட்ட போய் சொல்லு …” என்று நீங்கள் விமர்சிப்பது கேட்கிறது. ”ஏன் ?எதற்கு? எப்படி? ” ன்னு கேள்வி கேட்டால் தான் அறிவு வளரும் என்றார் சாக்ரடீஸ்.  நம்ம விசாலினி இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போதே டாக்டரிடம்…” ஏன் இந்த விசமம் புடிச்ச மீனு தண்ணில இருந்தா உயிர்வாழுது.. தரையில வந்தா செத்து போகுது…? என டாக்டரிடம் கேள்வி கேட்டுள்ளார். இரண்டு வயதில் இப்படி சிந்தனை வர வாய்ப்புயில்லை என உணர்ந்த டாக்டர் ராஜேஸ் இவர்களை சரியான பாதையில் பயணிக்க வைத்துள்ளார். குழந்தைக்கு மதுரை மருத்துவர் உளவியலாளர் நம்மாழ்வாரிடம் பினேகாமத் என்ற ஐக்யூ டெஸ்ட் எடுத்தப்போது அவரின் நுண்ணறிவு திறன் ஈவு 225 என அறியப்பட்டுள்ளது.

      சாதரண மனிதனின் நுண்ணறிவு திறன் ஈவு 90 முதல் 110 வரை. மனவளர்ச்சி குன்றியோருக்கு ஐக்யூ லெவல் 60 விட குறைவு.  அதிக பட்சமாக கவிஞர் பைரன் ,தத்துவ மேதை பேகன் ஆகியோருக்கு ஐக்யூ 200 தானாம். அத விடுங்க நம்ம பில்கேட்சுக்கு ஐக்யூ லெவல் 160 தான் பாருங்களேன். இது வரை உலக சாதனைக்கான ஐக்யூ லெவல் சவுத் கொரியாவின் கிம் யுங் எங் (Kim Ung Yung)   உடையதாம் IQ 210. உலக சாதனைக்கான பதிவில் வெளிவர போதிய வயது வரம்பு இல்லை என்பதால் இன்னும் பதியப்பட வில்லை எனப்து வருத்தத்துக்குரியது.
     
  அதை விட கொடுமை பள்ளிகளில் இவரின் நுண்ணறிவு திறன் மற்றும் கேள்வி கேட்கும் ஆற்றல், தான் படிக்கும் வகுப்பையும் தாண்டி பிற வகுப்பு பாடங்களையும் ஒரே வருடத்தில் முடிக்கும் அறிவு ஆற்றலை கண்டு இவரை பள்ளியில் இருந்து தூரத்தியது தான். அதிக அறிவு ஆபத்து என்பது விசாலினியையும் விட்டு வைக்க வில்லை. தற்போது ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் ஆனால் எட்டாம் வகுப்பு பாடங்களை படிக்கிறாள். இதற்கு இவளின் பெற்றோர்கள் போராடிய கொடுமைகளை அவரின் வீட்டில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் யுனிபார்ம்களே சாட்சி என இவரின் பாட்டி சிரித்து கொண்டு சொல்கிறார். இன்னும் கல்வி துறையில் இருந்து இவளுக்கு டபுள் புரமோசன் கொடுக்க எந்த ஆணையும் பெறப்படவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. வெளிநாட்டில் இக்குழந்தை பிறந்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள். வெளிநாடுகளில் விசாலினியை தத்து கேட்கின்றனராம். 
  
    விரைவில் தமிழக முதல்வர் அம்மாவின் பார்வை கிட்ட நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் . அதன் தொடக்கம் தான் அஅதிமுகவின் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ திரு. இசக்கி சுப்பையன் அவர்களிடம் பிளாக்கர்கள் ஒருங்கிணைந்து தமிழக முதல்வர் அம்மாவிடம் விசாலினியை சந்திக்கவும் அதன் மூலம் உலகுமுழுவதும் புகழ் பரப்பவும் ஏற்பாடு செய்து தருமாறு சிறிய வேண்டுகேளை கொளசல்யா , செல்வா ஸ்பிக்கிங் ஆகியோரின் முயற்சியில் வைத்துள்ளோம். மதுரையில் இருந்து சீனா அய்யாவும் , நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.

   ஐக்யூ வைத்து மட்டும் விசாலினையை நாங்கள் முன் நிறுத்த வில்லை. அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் CISCO நிறுவனம் நடத்தும் ஆன்லைன் தேர்வான (எம்.பி.ஏ மற்றும் பி.டெக் , எம்.இ. மாணவர்கள் எழுதும் கடினமான தேர்வு)  CCNA தேர்வை தன் பத்தாவது வயதில் எழுதி முடித்துள்ளார். நான்காம் வகுப்பு மாணவி எழுதும் தேர்வா இது?




    இந்த தேர்வை தன் பன்னிரெண்டாவது வயதில் முடித்த பாகிஸ்தான் மாணவன் இர்டிசா ஹைதர் என்பவனை பாகிஸ்தான் நாடு ராணுவ வெப்சைட்டில் PRIDE OF PAKISTHAN என குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவில் விரைவில் இப்படிபட்ட அங்கீகாரம் பாளையங்கோட்டை விசாலினிக்கு கிடைக்க அனைவரும் முயற்சி மேற்கொள்வோம்.

    இவர் அகில உலக சான்றிதழ்களான மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் MCP , ORACLE நிறுவனத்தின் OCJP , CISCO நிறுவனத்தின் CCNA SECURITY முடித்துள்ளார். இன்னும் பல கணினி பட்டங்களை படிக்கிறார்.
அவருக்கு தமிழக கல்வி துறையின் சார்பாக கூடுதல் வகுப்பில் பயில்வதற்கான புரமோசன் ஒப்புதல் ஆணை பெறவும் ,அரசு முறையான அங்கீகாரம் வழங்கவும் அனைத்து பிளாக்கர்களும் உதவுவோம்.   

Wednesday, January 4, 2012

எது விழுமியம் தரும் கல்வி..?


    கல்வி சாலைகள் பெருகிவரும் இச்சூழலில்.. கல்வியின் தரம் உண்மையில் வளமை குறைந்து இருந்த போதிலும்,  ஒரு வித மாய தோற்றத்துடன் ஓங்கி பெருகி இருப்பதைப்  பார்க்கும் போது மக்கள் மேல் அதிர்ப்தி ஏற்படுகிறது. இன்னும் பள்ளி கூடங்களையும் , கல்லூரிகளையும்  ஆரம்பிக்க தொழில் அதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் , கல்வி தொழில் ஆகி, முதலீடை நஷ்டமடையாத அசையா வைப்பு நிதியாக்கி, வட்டிக்கு வட்டி கணக்கு பார்த்து குட்டிப் போடும் நல்ல தொரு வியபார நிறுவனமாக உள்ளது. போட்டி உலகில் பெற்றோரும் எதையும் எதிர்ப்பாராமல் இங்கு சேர்த்தால், நல்ல வேலை வாய்ப்பு உள்ளது , எதிர்காலம் உள்ளது என முடிவுடன் பணத்தை அள்ளி கொட்டுகிறார்கள். கல்வியின் முழு தன்மை , விழுமம் செயல் இழந்து , நவீனத்துவத்தில், பணம் போட்டால் பணம் என்கிற ரீதியில் செயல் பெற்று , உண்மையான ஆற்றலை , மனிதன் புதைத்துள்ள திறனை மங்கச் செய்கிறது.
இதன் வெளிப்பாடு தான் … லஞ்சம், லாவண்யம். ஆயிரம் அன்னஹசாரே வந்தாலும் , அடிப்படையில் ஓட்டையை வைத்துக் கொண்டு சட்டம் இயற்றி சரி செய்து விடலாம் என்றால் முடியவே முடியாது. ஆதியாய் இருக்கும் கல்வி முறையில் விழுமியங்கள் பூஜ்ஜியமாய் இருக்கும் போது , மேல்மட்டத்தில்  லஞ்சத்தை ஒழிப்பது என்பது முடியாத காரியம்.

    தேசிய ஒருமைப்பாடு , வேற்றுமையில் ஒற்றுமை என ஏட்டளவில் , உதட்டளவில் விழுமியங்களை கற்று கொடுத்ததன் விளைவு இன்று முல்லை பெரியாறு பிரச்சனை. அன்றாடம் ஒருவரின் தீக்குளிப்பு. சிந்தியுங்கள். தொடரும் வன்முறை தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை  உணராமல் தொடரும் போரட்டங்கள். கேரள அரசின் பிடிவாதம்.  மக்கள் பற்றிய சிந்தைனைகள் அற்ற அரசியல் சதுரங்கத்தில்  மக்கள் கொண்டுள்ள வெறுப்பின் வெளிப்பாடு போரட்டமாக வெளிப்படுவதை நினைக்கும் போது , கல்வி முறையில் இந்திய அளவில் விழுமியங்கள் குறைந்து , வட்டார அளவில் அவை வித்தியாசப் பட்டுள்ளதை தெள்ள தெளிவாக காட்டுவதாகவே அமைகிறது.   நதி நீர் பிரச்சனையில் இந்தியா முழுவதும் நதிகளை ஒன்றிணைக்கும் முயற்சி செயலாக்கம் தரும் வகையில் நீர் பங்கீடுகள் தனிப்பட்ட ஆணையத்தின் கட்டுப்பாட்டில் , மாநில அரசுகளின் முடிவு இன்றி செயல் படும் அமைப்பின் கையில் கொடுக்கப்பட வேண்டும்.

   எக்ஸைல் நாவலில் சாரு குறிப்பிடுவது போல தமிழ்நாட்டில் வாழ்வது என்பது” ஒவ்வொரு நாளுமே மரண வேட்டை தான். ஒவ்வொரு நாளுமே உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போராடுவதிலேயே நம் சக்தியெல்லாம் போய்விடுகிறது”. எங்கும் எதற்கும் போராட்டங்கள். அணு உலை, மருத்துவர் கொலை, நான்கு வழிச்சாலையில் கோர விபத்து சாலை முற்றுகை… என சொல்லி மாயாது. செய்திகளை தேடி அலைந்த காலம் மாறி விட்டது. இவையெல்லாம் அடிப்படையில் நம் கல்வி முறையில் எதோ ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள தவறின் அடையாளமாகவே நான் கருதுகின்றேன். விதி மீறல் என்பதே விழுமியம் அற்ற தன்மை. கல்வி ஆசிரியர்களிடம் இருந்து முழுமையாக வெளிப்பட வில்லை என்பதை விட அடிப்படையில் ஆசிரியர்களின் நியமனம் தவறாக உள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகிறது. கற்பித்தல் என்பது செயல் வடிவமாக்கப்பட்டு , அதன் உண்மை நிலை அறியாத அல்லது புரியாத தன்மையுள்ள ஆசிரியர்கள் வேலையில் அமர்த்த படுவதால், மாணவனிடம் விழுமியங்களும் , கற்றல் திறன்களும் முழுமையாக சென்றடைய வில்லை . அதன் தொடர்ச்சி  தான் மேல் படிப்பில் ஆதாயத்தை நோக்கிய கல்வி மதிப்பீடு . (தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளைப் பொறுத்து வேலை வாய்ப்பு )

    அரசு இலவச கல்வியை கொண்டு வருவதால் மட்டும் இந்த நிலமை மாறிவிடும் என்பது அபத்தம். அதற்காக பொது பள்ளிமுறையை வேண்டாம் என சொல்வது அதை விட அபத்தம். கல்வியாளர்கள் சிறந்த ஆர்வமுள்ள , தன் பணியின் தன்மையை முழுவதும் உணர்ந்த , அற்பணிப்பு எண்ணம் கொண்ட ஆசிரியர்களை துவக்கப்பள்ளி முதல் பணியமர்த்த வேண்டும். சிறப்பாக செயல் படும் அலுவலர்களை கவுரவிப்பது போல , வட்டார அளவில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆர்வம், அற்பணிப்பு , மாணவர்களின் விழுமியங்களின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை கணித்து ஒரு விருது வழங்கலாம் . இது கூடுதலாக ஈடுபாட்டை கொடுப்பதுடன் பிற ஆசிரியர்களுக்கும் தூண்டுகோலாக அமையும். முதல்வர் ஆசிரியர்கள் மீது கவனம் செலுத்தி , நல்லாசிரியர் விருது போல ஒரு விருதை ஏற்படுத்தலாமே…!   

Tuesday, January 3, 2012

மரம் வளர்கிறது..


மரங்கள் வேர்விட்டு
ஓங்கி நிற்கின்றன..
மரத்தை சுற்றி ஓடியாடி திரியும்
சிறுவன் விழும் போது ….
உதிர்கின்ற இலைகள்
தளிர்க்கின்றன
ஒவ்வொரு முறையும்
விழுந்த சிறுவன் நம்பிக்கை பெறுகிறான்…
 மரம் வளர்கிறது..
இவனும்…
ஆனால்… வளர்ந்த பின்
வெட்டுவதேன்..!

Monday, January 2, 2012

இலவச கல்வி அரசு அறிவிக்குமா…!


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….
     சமச்சீர் கல்வி சென்ற ஆண்டு நம்மை வாட்டி வதக்கி எடுத்து விட்டது. தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்பதில் அனைவருக்கும் மாற்று கருத்து இல்லை. இன்று மெட்ரிக் பள்ளிகள் பெருகி விட்ட சூழலில் ,சமச்சீர் பாடதிட்டம் , சமச்சீர் கல்வியில்  சமம் என்ற  மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளது.   தமிழகத்தில் இன்னும் பல்வேறு போர்டுகள்(வாரியங்கள்) இருந்து கொண்டு , ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி கொண்டு தான் உள்ளது. பொது பள்ளி முறை நடைமுறைப் படுத்தப்பட  வேண்டும். இப் புத்தாண்டு தமிழக அரசு மூலமாக அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஏற்ற தாழ்வுகள் எதுவும் இன்றி , அரசு நிறுவனமாக மாற்றி, மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்க வேண்டும். இதற்கு அனைத்து கல்வியாளர்களும், அரசியல் வாதிகளும், பொது மக்களும் அரசுக்கு தந்தி மூலம் கோரிக்கையை வைக்க வேண்டும் என்ற சின்ன ஆசையை இந்த புத்தாண்டில் முன் மொழிகின்றேன்.  

    ஜனவரி முதல் அனைத்து பள்ளிகளும் 4.40 மணி வரை செயல்பட்டு வருவது மகிழ்ச்சியை தருகிறது. இதனால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் கூடுதலாக கல்வி பயில்வார்கள். அவர்களுக்கு பாட சுமையை திணிக்கும் விதமாக பள்ளிகளில் ஆசிரியர்கள் செயல்படுவது, அவர்களுக்கு கல்வியில் இனிய சூழலை உருவாக்காது என்பது மட்டும் மாணவர் நிலையில் நின்று உறுதியாக கூற முடியும். ஆகவே, பாடங்களை முடிக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் மனநலனையும் புரிந்து செயல் பட்டால் கற்றல் இனிமையாக அமையும் . ஆசிரியர்கள் புரிந்து செயல்படுவார்கள் என நம்புவோம்.    

    மாணவர்களின் கல்வி பாதிப்படையும் என்பதால் , பெற்றோர்கள் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையை செலுத்தி படிக்க வைக்கின்றனர். டி கட்டணங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டுமென்றால் , அனைத்து பள்ளிகளையும் பொதுவாக அரசே எடுத்து நடத்த வேண்டும். கட்டண விவகாரம் என்பது முற்றுபுள்ளிப் பெறும்.


     தரமான கல்விக்கு ஆசிரியர் மாணவர் விகிதம் மாற்றி அமைக்கப் பட வேண்டும். அண்மைக் கல்விக்கு ஆதரவு தர வேண்டும்.  இலவச கட்டாய கல்வி சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இப்படி பல கனவுகள் காண்கிறேன். தமிழக முதல்வர் என் போன்ற ஆசிரியர்களின் கனவை எப்படி பொங்கல் போனஸ் முன்கூட்டியே அறிவித்தார்களோ அதேப்போன்று , பொது கல்வி முறையை செயல் படுத்த விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்கள் என நம்புகிறேம்.