Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, December 17, 2013

11 கோடிக்குழந்தைகள் காப்போம்…. !



பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அடுத்தடுத்த மிகப்பெரிய அதிர்ச்சிகள் நம்மை வந்து தாக்கிக் கொண்டு இருக்கின்றன. இதற்கிடையில் பீகார் மட்டுமல்ல, பல மாநிலங்களில் தலைமையாசிரியர்கள் உணவை சாப்பிட்டு  பார்த்த அரைமணி நேரத்திற்கு பின் தான் மதிய உணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பையும் , பல இடங்களில் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. பீகார் ஆசிரியர் சங்கம் மதிய உணவு அளிப்பதை தனியாக எஜென்சி கொண்டு செயல்பட வலியுறுத்தியுள்ளது.


12 இலட்சம் பள்ளிகளில் 11 கோடி குழந்தைகள் சமைக்கப்பட்ட மதிய உணவை உண்கிறார்கள் என புள்ளி விபரம் தருகிறது, மனிதவள மேம்பாட்டுத் துறை. மதிய உணவு திட்டத்தில் ஊழல் புரையோடியுள்ளது , தரமான உணவு பொருடகள் வழங்குவது இல்லை, உணவு பொருட்களை பாதுகாக்க தகுந்த இடங்கள் போதுமானதாக இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் நாடுமுழுவதும் இருந்தாலும் , தமிழ்நாட்டை பொறுத்தவரை மதிய உணவு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்பது தான் உண்மை.

கர்மவீரர் காமராஜர் ஏழைக்குழுந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் பள்ளிக் கூடங்களில் அனைத்து குழுந்தைகளுக்கும்  இலவச மதிய உணவு வழங்குவது பற்றிமுதன்முதலாக ஆலோசித்தார்அதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையை கூட்டி ஆலோசித்து, வருவாய்த் துறையினரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து , 1955 ல் ஆரம்பிக்கப்பட்டது தான் மதிய உணவு திட்டம். இது மறைந்த முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின் வாரம் ஒரு முட்டை என இருந்தது, வாரம் இரண்டு ,மூன்று  என உயர்த்தப்பட்டு, இப்போது வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை வழங்கப்படுகின்றன.(முட்டையின் எடை குறைந்தது 46 கிராம் இருக்க வேண்டும்)
இதுதவிர கொண்டைக்கடலை , வேக வைத்த பாசி பயிறு , உருளைக்கிழங்கும் வழங்கப்படுகின்றன.  
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 55 இலட்சம் மாணவர்கள் சத்துணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
இந்தியா முழுவதும் இத்திட்டத்தினால் ஏழை மாணவர்கள் , குறிப்பாக பெண்குழுந்தைகள் உணவுக்காக பள்ளிக்கு செல்கின்றனர். மதிய உணவு அக்குழந்தைகளின் உடல் நலதிற்கு போதுமான சத்துக்களை வழங்குவதுடன், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், நாள்தவறாமல் பள்ளிக்கு வருகைபுரியவும் வகை செய்கிறது.
 ப்ரோப் (Public Report on Basic Education ) அறிக்கையான கூறுவதுயாதெனில், 84% குடியிருப்புகள் தங்கள் குழந்தைகள் மதிய உணவு பெறுவதாகவும், அங்கு வழங்கப்படும் வேறுபட்ட மெனுவை விரும்பி சாப்பிடுகின்றனர். சாப்பிடும் முன்னும் பின்னும் கை கழுவும் பழக்கத்தை பள்ளியில் கற்றுக் கொடுத்துள்ளனர். பள்ளியில் சேர்க்கையும் அதிகரித்துள்ளது என்கிறது. அசர் (Annual Status of Education Report ) 83.4% பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது (ஒருநாள் பார்வை) , ஏறக்குறைய அதே அளவில் 81.3% பள்ளிகளில் சமையல் கூடங்கள் உள்ளன. பரவலான மேம்பாட்டுடன் கிடைக்ககூடிய மதிய உணவு பள்ளியின் வருகையை அதிகரித்துள்ளது என்கிறது.


இத்திட்டம் இன்னும் வெற்றிக்கரமாக நடைப்பெற உணவு பொருட்கள் பலகட்ட சோதனைகளுக்கு பின்தான் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு பள்ளிகளில் வந்திறங்கும் உணவு பொருட்களை பாதுக்காப்பாக வைக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலங்குகள் , பூச்சிகள், புழுக்கள் ஆகியவை உணவு பொருட்களை சேதப்படுத்தாத வகையில் உணவு பாதுகாப்பு கூடங்களை உருவாக்க வேண்டும். (உணவுப்பொருட்களை பாதுகாப்பதற்கும் குழந்தைகளுக்கு தரமான ஆரோக்கியமான உணவினை வழங்குவதற்காக  5.77 இலட்சம் பாதுகாப்பு வசதியுடன் கூடிய சமையல் கூடங்கள் அமைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது ).மாவட்ட தலைவரின் நேரடிக்கட்டுப்பாட்டிலுள்ள சத்துணவு திட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சேமிப்பு கிடங்குகளிலிருந்து உணவு பொருட்கள் மதந்தோறும் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முன் , கிடங்குகளில் உணவு பொருட்களின் தன்மை பரிசோதிக்கப்பட வேண்டும். இவ்வாறன பரிசோதனை  நல்ல தரமான உணவு பொருட்களை வழங்கி , அதன் வாயிலாக தரமான உணவை மாணவர்களுக்கு வழங்க உதவிடும்.  
எது எப்படியோ இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  22 ஜீலை 2013 ல் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கைட்லைன் படி (F.NO. 1-4/2013 DESK (MDM) DEPARTMENT OF SCHOOL EDUCATION & LITERACY) தினமும் ஒரு ஆசிரியர் மற்றும் அவருடன் பள்ளியின் கல்விக்குழு உறுப்பினர் வீதம் உணவை சாப்பிட்டு பார்த்த பின்னர் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். உணவு தரம் குறித்து தனியான நோட்டு போடப்படவேண்டும். இது உணவை தரமாக மாணவர்களுக்கு வழங்கிட உதவும்.
அக்கையேட்டில் தமிழ்நாட்டில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
   










நம்  குழந்தைகள் அவர்களின் வளமான வாழ்விற்கு, பிரகாசமான எதிர்காலத்திற்கு உணவை ருசித்தப்பின் வழங்குவது நமக்கு கஷ்டமல்ல.  இக்கட்டுரையை எட்டையாபுரத்தில் காமராசர் மதியஉணவுதிட்டத்தில் பேசிய உரையுடன் முடிப்பது சிறந்தது. "அன்னதானம் நமக்குப் புதிதல்லஇதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவுஅளித்தோம்இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம்இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம்,படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விடஎனக்குமுக்கியமான வேலை வேறு இல்லைஎனவேமற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுஊர்வலமாக வந்துபகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்."
  
க.சரவணன்,பி.எஸ்.சி.,எம்.ஏ.,எம்.எட்.,
தலைமையாசிரியர்,
செல்; 934124572

இக்கட்டுரை மாணவர் உலகம் இதழுக்காக எழுதியது. 

Thursday, November 7, 2013

போட்டி தேவையில்லை....!


     இன்று குழந்தைகளை குறை கூற இயலவில்லை . ஏன் அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் கூட, அவர்கள் அதை உடனே அடுத்தவர்கள் மீது சுமத்த பார்க்கிறார்கள். டேய் வீட்டுப்பாடம் ஏண்டா எழுதவில்லை என்று கேட்டால் அடுத்த நிமிடத்தில் ,  நான் மட்டுமா எழுதவில்லை, அவனும் தானே என்று தங்கள் குறைகளை மறைக்க பார்க்கின்றனர்.

     இன்னும் தெளிவாக கூறினால், ஒழுங்கு தவறி, ஓடிவரும் ஒருவனை , வரிசையில் செல் என்றால், அவன் மட்டும் ஓடி வருகின்றான் என்று பிறர் குறைகள் மீது சவாரி செய்து, தம்மை ஏமாற்றிக்கொள்கிறார்கள் . புத்தக்கத்தை ஏண்டா இப்படி கிழித்து வைத்துள்ளாய் என்று கேட்டால், நான் புக்கு வாங்கிய உடனே சொன்னேன் சார், எங்க அப்பா தான் மூணு மாசத்துக்கு தாண்டான்னு சொல்லிட்டார் என்று சொல்லி அட்டை போட விடவில்லை என்கின்றான். இப்படியாக மாணவர்கள்  பிறர் தவறுகள் மீது சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர்.

      அடுத்தவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம், தன் தவறுகளை மறைக்க பார்க்கின்றனர் அல்லது நியாயப்படுத்த பார்க்கின்றனர். ஒரு வினாவிற்கு இன்னொரு வினா பதிலாக முடியுமா? இன்று சீருடை ஏன் அணியவில்லை என்று கேட்டால் ,    அம்மா துவைக்கவில்லை அழுக்கா இருந்துச்சு என்று ரெடிமேட் பதிலை தந்து அம்மாவின் மீது பலியை தூக்கி போட்டுவிடுகின்றார்கள்.

       தவறுக்கு தவறு விடையாக அமைந்துவிடுகின்றது.இந்த தவற்றில் இருந்து தான் எல்லா தவறுகளும் ஆரம்பமாகின்றன. இதை போக்க வேண்டியது எல்லா ஆசிரியர்களின் கடமை. மாணவர்களுக்கு தேவை சரியான மன பயிற்சியும் , அதன் மூலம் மன ஒருங்கும். சுவாமி விவேகானந்தர் சொல்கின்றார், சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

        பள்ளிகளுக்கு அரசு கால அட்டவணை தயாரித்து கொடுத்துள்ளது.  தியான வகுப்புகளுக்கு நேரத்தை ஒதுக்கியுள்ளது.  அந்த குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி தியானம் செய்தோமானால், நிச்சயம் மனம் ஒருங்கு படும். மன அமைதி பெறும் போது, தெளிவானை சிந்தனை  அமைய வாய்ப்புகள் அதிகம்.  அதனால் அடுத்தவர்களின் குறைப்பாடுகள் தம்மை குறிக்கிடுவதை அனுமதிக்க மாட்டார்கள்.
     
        ஆசிரியர்களும் மாணவர்களை குறைகூறாமல், நம்மை நாம் திருத்திக்கொள்வோம். மாணவர்களின் குறைபாடுகள் நம்மை குறுக்கிடுவதை தவிர்த்து, அவர்களுக்கான சரியான பாதையை காட்டுவோம். சிலர் அந்த பையன் எப்போதும் இப்படிதான் ... வேண்டும் என்றால் கேளுங்கள்  என்ற பதிலை தருவதை பார்த்திருக்கின்றேன். தங்களின் தவறு அல்லது இயலாமையை தவிர்த்து , நம்மை மாற்றிக்கொள்ள பயிற்சி பெறுவோம்.  

மாணவர்களும் , ஆசிரியர்களும் எல்லா சந்தர்பங்களிலும் அடுத்தவர்களின் தவறுகளுடன் போட்டி போடாமல், அதனை கடந்து செல்வோம்.

மதுரை சரவணன். 

Thursday, September 26, 2013

நகரங்களின் குப்பையிலிருந்து மீண்டு எழும் முயற்சி.


    இவ்வுலகில் வாழ்வதற்கு பயமாக இருக்கிறது. செய்திதாள்கள் சுமந்து வரும் செய்திகள் மனத்தின் ஆழத்தில் கிடக்கும் பயத்தை உடனடியாக பிறசவிக்கின்றன. நண்பனே நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல நண்பர்களுடன் முயற்சிக்கின்றான். நம் வாழ்வின் மீதான நம்பிக்கை இச்செய்திகளால் நாம் இழக்க வேண்டியிருக்கிறது. பாதுகாப்பின் அவசியத்தை தேட வேண்டியுள்ளது. இதை எழுதும் இத்தருவாயில் என் நினைவுக்கு வரும் நிகழ்வு பாதுகாப்பு வரி ஆலயத்தில் விதித்த பாதிரியார் குறித்த என் நண்பர் சேவியர் சொன்ன செய்தியாகும்.  தம் மக்களை காப்பாற்ற பாதுகாப்பு வரி விதித்த பாதிரியார் உண்மையில் தீர்க்க தரிசியாக காட்சியளிக்கிறார்.

    சேவியருடன் உரையாடலில் ஊழலில் ஈடுபடும் பாதிரியார்கள் பற்றி சக பாதிரியார் எழுதிய புகார் கடிதம் குறித்து வாசகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதுவும் பொது சொத்து பாதுக்காப்பிற்காக எழுதப்பட்டது தான். அக்கடிதத்தின் வாசகம் இது தான்.
   
   “நீங்கள் யாரும் யோக்கியர்கள் அல்ல. உங்களின் தவறுகளை நீங்களே அறிவீர்கள். உங்களைப் பற்றி சொல்லும் படியாக ஒன்றுமில்லை. இதை உணர்ந்து நீங்களே இடத்தை காலிசெய்து விடுங்கள்”

    இதை எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கிறேன். அரசியலாகட்டும்,அரசு அலுவலகமாகட்டும், தனி நபர் நிறுவனமாகட்டும், தொண்டு நிறுவனமாகட்டும், அரசு சாரா நிறுவனமாகட்டும் இப்படி எல்லா இடங்களிலும் இதை பொருத்திப்பார்க்கிறேன்.
விளைவு என்னவாக இருக்கும்?

உங்களின் பதில் கட்டாயம் இப்படிதான் இருக்கும்.
இக்கடிதத்தை எழுதியவர் தண்டிக்கப்பட்டு இருப்பார்.
ஆனால் இக்கடிதம் எழுதியவர் அதன் பின் அமைதியாகி விட்டதாக அறிந்தேன். (மிரட்டப்பட்டிருப்பார்).

நம்முடைய பொருளாதரமே குடியை ஆதாரமாக கொண்டு செயல்படும் நிலையில் , சமீபத்திய குடிக்கான சர்வேயில் நாம் முதலிடம் பிடிக்கவில்லையே என ஆதங்கப்படும் சமூகவலைத்தள ஆர்வலர்களின் ஸ்டேட்டஸ் ஏகப் பட்ட லைக் வாங்கியிருந்தது. அதில் நானும் லைக்கி விட்டேன். ஏனென்றால் இந்த ஸ்டெட்டஸ் நம் மக்கள் குடியினால் கெட்டு குட்டிச்சுவராகிப் போன வாழ்வின் ஆவணமாக கருதுகிறேன். குழந்தைகளுடன் குழந்தைகளாக தெரிவதால் குடி எவ்வாறு குடியை பாதித்துள்ளது என்பதை நான் அறிவேன்.

ஆங்கில பரீட்சை நன்றாக எழுதாத நன்றாக படிக்கும் மாணவனைப் பார்த்து ஏண்டா உடம்பு எதுவும் சரியில்லையா? தேர்வு மீண்டும் வைக்கட்டுமா?  நாளைக்கு எழுதிக் கொள்ளலாம் என கனிவுடன் கேட்டேன்.
“இல்ல சார் பரவாயில்லை. மனசுக்கு சரியில்லை. ( ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்)”
”என்னடா? பெரிய மனுசனாட்டம் பேசுற?”
”எங்க அத்தை நேத்து தூக்குமாட்டிகிட்டு செத்து போச்சு சார்”
”ஏண்டா? எதுவும் குடும்ப பிரச்சனையா?”
”அட இல்லைங்க சார்… எல்லாம் எங்க மாமாவால தான்..!”
”என்னடா உங்க மாமா எதுவும் திட்டி விட்டாரா?”
”இல்லை சார்.. தினமும் குடிச்சுட்டு வந்திருக்கு… காசு கேட்ட கொடுக்கல…குழுவில வாங்கின கடனை கூட அடைக்க முடியல… வீட்டுக்கு எதுவும் தரதில்லை..டெய்லி தண்ணிப் போட்டு சலம்பியிருக்கு…. அதான் தூக்கு போட்டுகிட்டாங்க…”
”என்னடா கோழையாட்டம் …. உங்க அம்மா அப்பா கண்டிக்கலையா….?”
”எங்க மாமாவா  எதுவும் கேக்காது சார்… எங்க அத்தை மவன்கள் தான் பாவம் சார் ஒருத்தன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இன்னொருத்தனுக்கு ஒன்றரை வயதாகிறது.”
”யாருடா பார்த்துக்கிற… எங்க அம்மா தான் சார் …. அது என்னையும் ஊருக்கு (வரிச்சியூர்) கூட்டிகிட்டு போயிடுச்சா… அதான் ரிவிசன் விடாம வந்துட்டேன்… யோசிச்சு யோசிச்சு எழுத வேண்டியதாய் இருக்கு…”
அதற்குள் பக்கத்திலிருந்த மற்றொரு மாணவி,
“சார்..இப்படிதான் சார்… எங்க அம்மா ஒருதடவ தூக்கு மாட்டிக்க போனாங்க.. நானும் எங்க அண்ணணும் ஒரே அழுகை …அப்புறம் சேலையை அவுத்துகிட்டு அழுதுச்சு….இந்நேரம் நாங்களும் அனாதையாகி இருப்போம்.. ஆனா இன்னும் எங்க அப்பா திருந்தல சார்…”
”எனக்காக குடிக்காத அப்பா.. ன்னு சொல்லு..”
”அட போங்க சார்…. சொன்னா என்ன அடிக்க வரும்.. .
அருகிலிருந்த மாணவன்,
”எங்க அம்மா… வாங்கி வந்த வார சம்பள காச… தூக்கிட்டுப் போயிட்டாரு சார்…எங்க அப்பா குடிக்க…. எங்க அம்மா ஒரே சண்டை … நாங்க ஞாயிற்று கிழமை மூழுவதும் பட்டினியா கிடந்தோம்… ”

      வீடுகளில் குடியினால் அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டுவருவதை யாரும் உணர வாய்ப்பில்லை. குழந்தைகளின் உள்மன வலியின் கொடூரம் சமூகத்தில் எப்படி வெளிப்படும் என்பதை கண்டு பயப்படுகிறேன். குடியினால் இவர்கள் மரணத்தை தேடிக்கொள்வதுடன் , குடும்பங்களிலும் மரணத்தை விதைப்பதை உணர்வதில்லை. இதனை உணர்த்துவதற்கான சந்தர்பங்களையும் அரசு ஏற்படுத்தி தரவில்லை. குடி குடியைக்கெடுக்கும் என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள வாசகங்கள் போதையேறி வீழ்ந்து கிடக்கின்றன. போதை தலைக்கு ஏறி , குமட்டி, பித்து களைந்து , அவர்கள் எடுக்கும் வாந்திகளில் உருண்டு , சித்தம் கலங்கி, வேதனையின் சீல்கள் அப்பிய கண்களுடன் வரும் குழுந்தையின் அழுகுரல்களை கேளுங்கள் ஆட்சியாளர்களே , ஒருவேளை நீங்கள் மதுகடைகளை முடுவதற்கான சாத்தியங்கள் நிகழக்கூடும்.

    கடந்த வாரம் நடந்த விநாயகர் திருவிழா ஊர்வலங்களினால் மதுரை மாநகராட்சியில் 500 டன் குப்பைகள் அள்ளமுடியாமல் தேங்கியுள்ளன. 1600 டன் குப்பைகள் விழாவை ஒட்டி அள்ளப்பட்டிருக்கிறது. தேங்கியுள்ள குப்பைகளை  அப்புறப்படுத்த கமிஷனர் 90டிப்பர் லாரிகள் ,11 டம்பர் பிளேசர்கள்,5 காம்பேக்டர்கள்,37 டிராக்டர்கள், 37 ஆட்டோக்க்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     நம் மனக்குப்பைகளையும் அள்ள இப்படிப்பட்ட வாய்ப்பு இருக்குமானால் எவ்வளவு சிறப்பானதாக வாழ்வு அமைந்திருக்கும். நான் இப்படி கிறுக்கி என் மனக்குப்பைகளை அகற்றுவதுண்டு. யோகா, தியானம் தராத ஒரு மன அமைதி ஏற்படுகிறது. நீங்களும் முயற்சியுங்களேன்.

மதுரை சரவணன்.
9344124572

Tuesday, August 27, 2013

தலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம்.

நான் செய்யும் சேவையானது ஒரே ஒரு துளிதான். ஆனால் தேவையோ ஒரு கடலளவு. அந்த ஒரு துளியை நான் சேர்க்காவிடில், கடலில் ஒரு துளி குறைந்து விடும்” - அன்னை தெரசா.

ஆதரவற்ற குழந்தைகள் , தொழு நோயாளிகள் , சாவின் விளிம்புகளில் ஆதரவற்று வாழும் ஜீவன்கள் , போர் அகதிகள், அனாதை குழந்தைகள் , போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், தீராத நோய் கண்டவர்கள் , உடல் ஊனமுற்றோர், ஏழைகள்  என அனைவரும் நீலக்கரையிட்ட எளிய, கெட்டிப்புடவைக்கு சொந்தக்காரியான அன்னையின் அணைப்பில் கடலளவு சேவையை பெற்றவர்கள்.

யுகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோப்ஜே என்ற ஊரில் 1910ம் ஆண்டு ஆகஸ்டு 27ல் பிறந்த அக்னேஸ் என்ற குழந்தை , முதல் உலகப்போரின் முடிந்த மூன்றாண்டுகளில் தந்தையை இழந்தவர், யுகேஸ்லோவியாவில் பள்ளிப்படிப்பை முடித்து, 18 வயதில் பெண் துறவியானவர் தான் நம் அன்னை தெரசா.  1946 செபடம்பர் 10 இந்தியாவின் இயமமலையின் கர்ஸியாங் பகுதியிலுள்ள தூய மேரி மடத்தில் சேர்ந்து, கல்கத்தாவின் சேரிப்பகுதியில் தன் தொண்டை ஆரம்பித்தார்.

பள்ளியில் புவியியல் ஆசிரியராக பணியினை தொடங்கிய அன்னை, பள்ளியின் எதிரில் உள்ள மோதிஜீல் பகுதியிலுள்ள ஏழை மக்களின் வாழ்வு நிலமையினை பார்த்து , அவர்களின் நோய் , வேலையின்மை, பசி, கல்வியற்று தெருக்களில் சுற்றி திரியும் குழந்தைகளின் நிலமையினை பார்த்து , மடத்தை விட்டு( அனுமதியுடன்) வெளியேறி, சேரி மக்களுடனே  வாழ்ந்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து, அப்பகுதியில் அவர்களுக்கு என்றே ஒரு பள்ளியை தொடங்கி தன் சேவையை துவக்கியவர் தான்  நம் அன்னை தெரசா.

மைக்கேல் கோம்ச் என்ற தர்ம சிந்தனையாளர் அளித்த ஒரு சிறிய அறையில் 1948ல் அன்னை தன் (அன்னை இல்லம்)அறக்கட்டளையை துவங்கினார். எண்டாலியில் தன்னிடம் பயின்ற சுபாஷிணிதாஸ் முதல் உதவியாளராக சேர்ந்து சேவைபுரிந்தார். இன்று மைக்கேல் தந்த இடம் தான் தலைமையகமாக செயல்படுகிறது.

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து , தியானம், பிரார்த்தனை, கூட்டுவழிப்பாடு என நடத்தி முடித்து, எளிய உணவு அருந்திய பின், கல்கத்தாவின் குடிசைப்பகுதியில் பசியால் வாடும் மக்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை தேடி அழைத்து உதவி செய்வார்கள் அன்னையின் உதவியாளர்கள்.

கல்கத்தாவின் காளி கேயில் எதிரில் மாநகராட்சி ஒதுக்கிய வீட்டில் சாவும் தருவாயில் உள்ளவர்களுக்க்கான இல்லம் தொடங்கப்பட்டது. சாகும் தருவாயில் ஆதரவற்று நிற்கும் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம், இறப்புக்கு முன் சிறிய மகிழ்ச்சி பெறுவதை அன்னை விரும்பினார். சாக விரும்பி வந்தவர்கள் மனம் மாறி மீண்டும் தங்கள் இல்லம் சென்றதும் உண்டு. நோயின் கொடுமையால் விடப்பட்டவர்கள் (காலரா, கால் புண் புரை) அன்னையின் அன்பில் , மருத்துவ சேவையில் குணமாகி சென்றுள்ளனர். இந்து மத எதிர்ப்பு குரல்கள் இவரின் சேவையை கண்டு ஒதுங்கி சென்றனர். காளி கோயில் பூசாரி காலரா நோயால் கைவிடப்பட்ட போது, அன்னை தன் அன்பால், மருத்துவ சேவையால் காப்பாற்றியதை அறிந்து , எதிர்த்தவர்கள் மனம் வருந்தினர்.

1972 ஜவஹர்லால் நேரு விருது, 1973 மத நல்லிணக்கத்துக்கான டெம்பிள்டன் விருது, 1974 ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின், மாடர் எட் மஜிஸ்ட்ரா விருது, 1979 அமைதிக்கான நோபல் பரிசு , 1980 ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது ஆகியவை அன்னை பெற்ற விருதுகள்.


தன்னலமற்று எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சேவைபுரிபவர்கள் அரிதாகி விட்ட இன்றைய கால கட்டத்தில், அன்னையின் வரலாற்றை விதைப்பதன் மூலம் , நம் குழந்தைகளிடத்தில் சேவை மனப்பான்மையுடன் அன்பு செய்ய கற்று தருவோம். தலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றி, வரியவர்களுக்கு உதவி செய்யும் தலைமுறையை உருவாக்குவோம். 

Thursday, April 12, 2012

இலையுதிர் காலம்


   பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள இடைவெளி தான், நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. இந்த இடைவெளி வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கு இடமளிக்கின்றன. நாம் வாழும் சூழல், சூழல் வாயிலாக ஏற்படும் பயணம் , அதன் நீட்சிகள்  வாயிலாக இந்த இடைவெளி நிரப்பப்படுகிறது.  

   வாழ்வில் நாம் பல தரப்பட்ட விசயங்களை சந்திக்கின்றோம். அவைகள் வாயிலாக நாம் எதை கற்றுக் கொண்டோம் என்பது தான் நம்மையும் , நம் வாழ்வையும் தீர்மானிக்கும். நம் செயல்கள் தான் நம்மை உலகுக்கு அடையாளம் காட்டுபவை. நம் வெற்றி தோல்விகள் என்பவை நம்மை உலகில் தக்க வைத்துக் கொள்ள நாம் நடத்தியுள்ள (நல்ல அல்லது கெட்ட) செயல்களின் விளைவுகள். இவை நமக்கு மட்டுமே பலன் தருபவை. இதற்கும் அப்பாற்பட்டது தான் நம்மை உலகுக்கு அடையாளப்படுத்துப்பவை.

   நான் சிறுவனாக இருக்கும் போது , ஜன நெருக்கமான , குறுகலான சந்துகளை கடந்து தான் பள்ளியை அடைய நேரிடும். மதுரை காமராஜ புரம் என்றாலே அனைவருக்கும் ஒரு வித பயம் தான் . நான் குடியிருந்த பகுதி ராம் தியேட்டர் பின்புறமாக உள்ள சி.எம்.ஆர் ரோடு. ராம் தியேட்டர் ஓட்டியுள்ள பீ சந்து வழியாக தான் கடக்க வேண்டும் . இல்லையென்றால் பள்ளிவாசல் தெருவை கடந்து வந்து , பின் மார்க்கெட் அடைந்து, பால ரெங்கா புரம் ஆஸ்பத்திரியை ஓட்டியுள்ள சந்து , பின் ஆஸ்பத்திரியின் எதிர்புறம் பயணித்து கார்பிரேசன் மருத்துவமனை,  குயவர் சாலை வழியாக செயிண்ட் மேரிஸ் .

   பீ சந்தை கடக்கும் போது குடலை பிரட்டி வரும். அதுவும் பெண்கள் பேசும் வசவுகள் காதுகள் கூட அழச் செய்யும். “நல்ல பார்த்துட்டு  போங்கடா… உங்க ஆத்தாகிட்ட இருக்குறது தான்…”. “மசிறுதான்டா தெரியும் … தே..பயலே..” “ நல்ல தூக்கி காமிடி … பார்த்துகிட்டு போயி ..அடிச்சுகிட்டு திரியட்டும்…”. “யேய் …ஆளுங்க வர்றானுங்க எந்திருச்சு நில்லுடி..” இவை எங்களுடன் வரும் வளர்ந்த பசங்களுக்கும் , வாட்ட சாட்டமான ஆள்களுக்கும் கிடைக்கும் வசனங்கள்.  இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் எட்டாம் வகுப்பு வரை கடந்து சென்றுள்ளோம். எட்டு வருடமாகியும் அந்த குடலை பிடுங்கும் வசவுகளும் நாற்றங்களும் மறைந்த பாடில்லை. பொது கழிப்பிடம் தான் அரசு சார்பில் பெருகின. இருந்தாலும் இயற்கையாக இருந்து பழகிய அவர்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வில்லை. அதற்கு அருகில் ஒரு திருமண மண்டபம் கட்டிக் கொடுத்தார்கள். அது திருடர்கள் மற்றும் குண்டர்களின் கூடாரமாக தான் இருந்தது. அதனாலும் அவர்களை ஒன்றும் செய்ய வில்லை. அதனை ஓட்டியுள்ள இடத்தில் தான் காய்கறி மார்க்கெட். இருந்த கையோடு , காய் வாங்கி செல்லும் பலரை பார்த்து வியந்துள்ளேன். என் வீட்டிலும் அங்கு தான் காய் வாங்குவார்கள் !

    நேற்று என் பள்ளியின் உதவி ஆசிரியை மாலை அரைமணி நேரம் முன் கூட்டியே செல்ல அனுமதிக் கேட்டார். ஏன் என்றேன். என் தோழி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டார் என்றார்.
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக நானும் ரமேஷ் என்ற மூத்த மாணவனும் பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தோம். நாங்கள் பள்ளி செல்லும் போது சாலை ஓரங்களில் உள்ள வீட்டின் படிகளில் ஏறி இறங்கி பயணிப்போம். அதில் எங்களுடன் கிருஷ்ண குமார் என்ற நண்பன் வந்தால் மிகவும் ஜாலியாக இருக்கும். அவன் படிகளில் ஏறும் போது காலிங் பெல் அடித்து விடுவான். இது தெரியாமல் எங்களை போலவே விளையாடி வரும் பள்ளி செல்லும் மாணவர்கள் பல சமயங்களில் மாட்டிக் கொண்டு வசவு வாங்கியுள்ளார்கள். சில சமயங்களில் படிகளில் ஏறும் போதே எங்களை விரட்ட காத்திருக்கும் ஆட்களும் உண்டு.
அன்று பாலரெங்காபுரம் ஆஸ்பத்திரி எதிர் புறமுள்ள சந்தில் சென்று, கல் சந்தை ஓட்டி திரும்பும் போது உடலில் தீ பற்ற வைத்து கொண்ட ஒரு ஆண் எங்களை நோக்கி ஓடி வந்தார். கண் முன் உடலில் தீ எரிகிறது. செய்வது அறியாது அப்படியே நின்றோம். அவர் அலறிய படி அம்மா தாங்க முடியல… தாங்க முடியல.. என சொல்லிக் கொண்டே மீண்டும் வீட்டினுள் நுழைந்து நீர் உள்ள அண்டாவுக்குள் தன் தலையை  நுழைக்க முயன்ற போது சரிந்து விழுந்தார்.  வெந்த சதைப்பிண்டமாக பார்த்த காட்சி இன்னும் கண் முன் நிற்கிறது. மண்டை ஓடு பொரிந்து சதைகள் வெந்து தொட்டால் ஓட்டும் நிலையில் இருந்தது. எவரும் அருகில் வரவில்லை. மண்ணெண்ணெய் நெடி மட்டும் உடலில் இருந்து வந்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு தடியாள் எங்களை போங்கடா என விரட்ட நாங்கள் மௌனமாக நகர்ந்தோம்.

    தீ காயம் என்றவுடன்  என் நினைவுகள் என்னை வாட்டி விட்டது. சரி சென்று வாருங்கள். பயந்து விடாதீர்கள் . மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். வீட்டுக்காரர் வேலைக்கு செல்ல வில்லை, வேலைக்கு போக சொல்லி சண்டை . அவரு போன பின்னாடி மண்ணெண்ணெய் ஊத்திகிடுச்சு  என்றார்.
                                               தொடரும்…

Wednesday, March 21, 2012

விகடன் ரீச் உண்மையிலே ரிச் !


   கடந்த வாரம் ஆனந்த விகடன் என் விகடனில் என் பிளாக் அறிமுகம் செய்யப்பட்டது. 
   பல பணிகளுக்கு இடையில் பிளாக் பக்கம் வர இயலவில்லை. விகடன் வாயிலாக என் பள்ளியில் 1978 படித்த சோம சுந்தரம் என்ற பழைய மாணவர் சிங்கப்பூரில் இருந்து தொடர்பு கொண்டார். அவர் தான் படித்த போது அவரின் ஆசிரியையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனுப்பி தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

    ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்து ரத்தின வேல் அய்யா விகடன் பார்த்து முதலாவதாக வாழ்த்து தெரிவித்தார். என்னையும் என் எழுத்தையும் செம்மைப் படுத்தி ஒரு நல்ல நிலமைக்கு வர வேண்டும் என்று துடிக்கும் என் இனிய நண்பன் சகோதரன் கா. பா குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

   பல ஆசிரிய நண்பர்கள் விகடன் மூலமாக நான் பிளாக்கில் எழுதி வருவதை அறிந்து மகிழ்ந்தார்கள். என்னுடைய முன்னாள் நிர்வாகி திரு ராஜா அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அல்லாமல் நான்கு ஆனந்த விகடன் வாங்கி கொடுத்து அதிகாரிகளிடம் தெரிவிக்க சொன்னார்.

   என் குடும்ப நண்பர் மற்றும் தற்போதைய பள்ளி நிர்வாகி திரு சுரேந்திரன் எ பாபு அக மகிழ்ச்சி கொண்டதுடன் ,  2002 ல் வெளியிடப்பட்ட படைப்பான “நீங்களும் முதல்வராகலாம்” என்ற புத்தகத்தை நினைவில் கூர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன் , பெங்களூரில் உள்ள தன் மகளிடம் பகிர்ந்து கொண்டு நெட்டில் படித்து வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்.

    இப்படி பல வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டே செல்லலாம்.  அத்தனை ஆனந்தத்திற்கும் ஒரே காரணம் ஆனந்த விகடன் மட்டுமே…!

   ஓரே வரியில் நன்றி என்று சொல்லி விட மனமில்லை. என் மகிழ்வுக்கும் என்னுடைய எழுத்தின் விரிவுக்கும் அதன் பின் உள்ள மகத்துவத்திற்கும் , என் பணியின் ஆழத்திற்கும் உள்ள உன்னத தொடர்பை எடுத்து கொடுத்த ஆனந்த விகடனுக்கு என் வாழ் நாள் முழுவதும் கடமைப் பட்டவனாவேன்… !

ஐ லவ் விகடன்…!


இந்த வாரம் பாவா சொன்னது போல அதன் ரீச் உண்மையிலே ரிச்.