Friday, November 20, 2015

வகுப்பறையில் மாணவர் சாவு ..அதிகாரம் செய்யும் ஆசிரியர்களை என்ன செய்வது? விடை

விண்ணைத் தாண்டி....நம்மை அழைத்து செல்லும் குழந்தைகள்!
*
நான் குழந்தைகளுக்கு கற்று தருவதை விட, அவர்களிடம் இருந்து கற்று கொள்வது தான் அதிகம்.
என்னை பார்த்ததும் எப்போதும் ஆசிரியர்கள் கேட்கும் முதல் கேள்வி, குழந்தைகளை அடிக்காமல், அவர்கள் இஷ்டத்திற்கு விட்டால் எப்படி கற்று கொள்வார்கள்? எதுவும் கற்று தாராமல் அவர்களாக எப்படி படிக்க முடியும் ? என்பது தான்!
எப்போதும் போல் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். சென்ற பதிவில் கூட ரத்தினவேல் அய்யா சேர் செய்ததில், ஒரு ஆசிரியர் உங்கள் கற்பனை அருமை என கமண்டு போட்டிருந்தார். நிச்சயமாக நான் கற்பனை திறன் மிக்கவனாக விளங்குவதி்ல் பெருமை கொள்கின்றேன். ஆனால் இதற்கு எல்லாம் காரணம் என்னுடைய மாணவர்கள்!
எப்போதும் போல் ஒரு கட்டுபாடுள்ள வகுப்பறையை உருவாக்கி , கருத்துக்களை போர்டில் எழுதி போட்டு , அதனை திரும்ப திரும்ப படிப்பதன் மூலம் மனப்பாடம் செய்ய வலியுறுத்தும் கல்வி முறையில் இருந்து வெளியில் வாருங்கள். குழந்தைகளின் தேவை அறிந்து சுதந்திரமான கற்றல் சூழலை உருவாக்குங்கள். குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரம் நம் கற்பித்தலை எளிமைபடுத்துவதுடன், நம்மை மிகவும் வலுவான , ஆற்றல் மிக்க கல்வியாளர்களாக மாற்றி விடும்!
குழந்தைகளின் ஆற்றல் அபரீதமானது. குழந்தைகள் கற்பனை திறத்துடன் வளர்க்கின்றார்கள். பள்ளிக்கும் வளமான கற்பனையுடன், அதிக சிந்தனை திறனுடன் வருகின்றார்கள். என் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனையும் அவ்வாரே சந்திக்கின்றேன். என்னை விட அறிவாளிகளாக இருப்பதை காண்கின்றேன். அவர்கள் திறனை முறைப்படுத்தினால் போதும், குழந்தைகள் நாம் கொஞ்சம் கூட கற்பனை செய்திராத இடத்தை அடைந்திருப்பார்கள் / எட்டு பிடித்து இருப்பார்கள்.
குழந்தைகளின் ஆற்றலை வெளி கொண்டு வருவது மிகவும் இலேசான வேலை!
உண்மை. அதற்கு வகுப்பறையில் குழந்தைகளை பேச அனுமதிக்க வேண்டும். அதன் அர்த்தம் என்னவெனில் , நீங்கள் கருத்துக்களை திணிக்காமல், குழந்தைகளுக்கு தெரிந்த விசயத்தில் இருந்து தெரியாத விசயத்தை அறிந்து கொள்ள செய்வதாகும்.
குழந்தைகளை பேச அனுமதியுங்கள் . குழந்தைகள் ஆசிரியர்களை குழந்தைகளாக மாற்றி விடுவார்கள். வெளியில் இருந்து பார்க்கும் யாரும் நம்மை குழந்தையாகவே பார்க்க கூடும்.
கேலி செய்யவும் செய்ய கூடும்.
நான் குழந்தை போல் நடந்து கொள்கின்றேன் என்று பலரும் கூற கேள்வி பட்டிருக்கின்றேன். இதற்கு விடையை இரண்டு பாரக்களுக்கு பின் படிக்கவும்.
என்னுடைய பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். பலரும் அப்படியே சாப்பிடுவார்கள். நானும் மற்ற ஆசிரியர்களுக்கு முன்னோடியாக மாணவர்களுடன் இணைந்தே வட்டமாக அமர்ந்து உணவு அருந்துவேன்.
ஏன்? குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்த வேண்டும்? அதனால் எந்த குழந்தை சாப்பிடுகின்றது. அவர்கள் எதை சாப்பிட வேண்டும். எந்த உணவை விரும்புகின்றார்கள். எந்த உணவை புறக்கணிக்கின்றார்கள். உணவு கெட்டு போய் உள்ளதா? அவன் மதியம் உணவு அருந்துகின்றானா? இல்லையா என்பது போன்ற பல விசயங்களை ஆசிரியர் அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அதனுடன் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு எவ்வகையான உணவு தேவை என்பதை அறிந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் கூற முடியும்.
குழந்தைகளுடன் சாப்பிடும் ஆசிரியர்களாகிய நீங்கள் குழந்தையை போலவே சிந்தி சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். குழந்தையை போலவே ரசித்து , ருசித்து குழந்தையாகவே மாறி சாப்பிடுவீர்கள்.
என் குழந்தைகள் சார் நீங்களும் எங்களை போல சின்ன பிள்ளை போலவே சாப்பிடுகின்றீர்கள் என்பார்கள். எப்படி சாப்பிட வேண்டும் ? என வினா எழுப்பும் போது, அவர்கள் எப்படி சாப்பிட வேண்டும் என்ற ஒழுங்கின்படி சாப்பிட ஆரம்பித்து நமக்கு முன்னோடி ஆகி இருப்பார்கள். என்னை கேலி செய்து ரசிக்கும் குழந்தைகளின் உள் அன்பை காண நீங்களும் உங்கள் வகுப்பு குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுங்கள்.! உணர்வீர்கள்.
.குழந்தைகளுக்கு விண்வெளி, செயற்கை கோள், ராக்கெட், நிலா இவற்றை பற்றிய சமூகவியல் பாடம் நடத்த வேண்டும். விண்வெளி அவர்கள் தெரிந்த விசயம் ஆனால் அது புதிய வார்த்தை. ஆகவே வானத்தை பார்த்திருக்கின்றாயா? அதில் என்ன தெரியும்? என்பது போன்ற கேள்வி கேட்டு பதில் அளிக்க செய்தேன்
சூரியன் , நிலா, நட்சத்திரம், ஓகே வேறு எதுவும் தெரிகின்றதா?
“சார்.. நான் வெளியே போய் பார்த்துட்டு வரவா?” - முத்துபாண்டி.
அனுமதித்தேன்.
“சார்.. நானும் போறேன். “ கிளம்பினான் சமய ராஜ்.
“ சார்.. விண்கற்கள் “ என்றாள் கீர்த்தனா.
“ சார் மேகம் தெரிகின்றது “ என்றான் முத்துபாண்டி.
“வெரி குட்..” என்றேன். சமயராஜ் சிரித்தான்.
”சார் .. சிரிக்கின்றான். இவனுக்கு வேற தெரியுதாம்..” என்றான் முத்துப்பாண்டி.
“என்ன தெரியுது ? சும்மா தைரியமா சொல்லு..”
“சார்.. ஒரு தென்னை மரம்..”
“வெரி குட்...”
“சார்.. அவன் முட்டாள் மாதிரி பேசுறான் . நீங்களும் வெரி குட்ன்னு சொல்றீங்க...” என கோபித்தாள் சோலையம்மாள்.
“யே..போய் பாரு...வானத்தில் தென்னை மரம் தெரியும்..டேய் முத்துப்பாண்டி நான் காட்டினேன் நீ பார்த்தையில்ல சொல்லு...”
“எங்க நான் போய் பார்க்கின்றேன்..” ஓடினாள் சோலையம்மாள்.
“சார் பொய் சொல்றான்..” என திரும்பி வந்தாள்.
“சார்... எங்கம்மா.. இப்படி தான் சார்..ஒரு நாள் மதியம் மேகத்தில் முயல் பாரு என சொன்னாங்க..ஓடி போய் பார்த்தேன் அப்படியே வெள்ளை முயல் ஒன்னு இருந்துச்சு.. என் தம்பி ஓடி வருவதற்குள் முயல் மறஞ்சு போச்சு...அது மாதிரி இன்னைக்கு தென்னை மறைந்து போயிருச்சு... ” என்று விளக்கினான் சமயராஜ்.
“டேய் வேற என்ன என்னடா.. உங்க அம்மா காட்டினாங்க..” என கலாய்த்தாள் ப்ரியா.
”அன்னைக்கே அந்தமுயல் ,ஒரு காடு மாதிரி மாறிச்சு..அப்புறமா மனிசனாயிடுச்சு..அப்புறம் யானை மாதிரி மாறிச்சு.. அப்புறம் வீடு மாதிரி மாறிடுச்சு “ என்றான்.
“சார்..நல்லா கதை விடுறான் சார்..”
“ஓகே ஓகே..இவனுக்கு ஒரு கதை சொல்லுவோம்..”என்றேன்.
“சார்...நான் கதை சொல்லவா..அதுவும் இவன் சொன்ன விசயத்தை வச்சு...” என்றான் முத்துப்பாண்டி இளித்தப்படி..
“அட எண்டா சிரிக்கிற..பயந்து போயிட்டேன்...கதையை சொல்லு..”
“சார் ..அவசர படாதீங்க..அப்புறம் கதை மறந்திடப்போறான்... “ என்று முத்துபாண்டிக்கு ஆதரவாக சரவணக்குமார் வந்தான்.
“சார்.. ஒரு ஊரில் ஒரு முயல் இருந்துச்சா...அந்த முயல் காட்டுக்குள்ள ஓடி போச்சா...அப்புறமா மனுசன் காட்டுகுள்ள முயல் பிடிக்க போனானா..முயல மட்டும் பிடிக்காம காட்டையும் சேர்ந்து அழிச்சான். காடு அழிந்து போச்சா.. யானை போன்ற விலங்குக எல்லாம் தண்ணி தேடி நாட்டுக்கு வந்துச்சா.. மனுசன் அரண்டு போனானாம்..” என்றான்.
“சபாஷ் ...” அனைவரும் கை தட்டினார்கள்.
சார் நான் கதை சொல்றேன்... என அனைவரும் குரல் கொடுக்க.. திசை திருப்பினேன்.
”ஓகே .. நிலாவை யாரெல்லாம் பார்த்திருக்கீங்க.. நிலா பத்தி கதை சொல்லுங்க...”
”நிலா நைட்டுதான் வரும்.. ” என்றபடி எல்லோரும் நான் பார்த்திருக்கேன் என கத்தினார்கள்.
”நிலாவை பார்த்தப்படி என் அம்மா எனக்கு சோறு ஊட்டி இருக்காங்க.. அதே போல் யார் அம்மாவாது சோறு ஊட்டி இருக்காங்களா..? “ என கேட்டேன்.
“சார்.. எங்கம்மா...” என சிலர் கை தூக்கினர்.
“வெரிகுட்..நான் பெயர் சொல்லி கூப்பிடுவேன். அவுங்க மட்டும் அவுங்க அம்மா சொன்னதை சொல்லணும்..”
“நிலாவில் ஒரு பாட்டி இருக்குண்ணு எங்கம்மா சொல்லுச்சு...” என முந்திகொண்டு கூறினாள் சினேகா.
“சரி கீர்த்தனா நீ சொல்லு...?”
“சார்..நிலாவில் ஒரு பாட்டி வடை சுட்டு விக்கிதுன்னு எங்கம்மா சொன்னாங்க..”
அனைவரும் ஆமாம் சார் நிலாவ பார்த்தா பாட்டி வடை சுடுகின்ற மாதிரியே தெரியும்.
”சார் எப்ப பார்த்தாலும் பாட்டி ஒரே இடத்தில் வடை சுட்டு விக்கின்ற மாதிரியே தெரியுதே..” என கேட்டாள் முருகேஸ்வரி.
”அது வேற ஒண்ணுமில்ல..பூமி சூரியனை சுற்றி வரும் நேரமும், சந்திரன் பூமியை சுற்றிவரும் நேரமும் ஒரே மாதிரி இருகின்றதாலா..நாம நிலாவோடு ஒரே பகுதியை பார்க்கின்றோம்..” என்றாள் கீர்த்தனா.
அப்படியா.. ? நாளைக்கு ஹோம் ஒர்க் இது தான் நீங்க கீர்த்தனா சொன்னது சரியா தப்பான்னு யார்கிட்டையாவது கேட்டு கொண்டோ , படித்தோ தெரிச்சு வரணும். “
”குட்.. வேற என்ன புதுசா ...” என முடிப்பதற்குள்,
“சார்.. நிலாவில் ஒரு மலையாள எழுத்து தெரியும் சார்.. எங்க பாட்டி சொல்லுச்சு...நீங்க கவனிச்சு பாருங்களேன்” என முத்துப்பாண்டி எனக்கு ஹோம் ஒர்க் கொடுத்தான்.
“கீர்த்தனா.. சார்..அப்ப நிலாவில் இருக்கின்ற பாட்டி வடை சுட்டு இருக்காது..”
“அப்புறம் வேற என்ன சுட்டிருக்கும்? “ என கேட்டேன்.
”சார் மலையாளம் தெரிஞ்ச பாட்டின்னா..அது புட்டும், சுண்டகடலையும் , கிழங்கும் அவிச்சுகிட்டு இருக்கும்...” என்று கூறினாள் கீர்த்தனா.
அனைவரும் கரக்ட்டா சொன்ன என கீர்த்தனாவை பாராட்டினார்கள்.
நான் ஆச்சரியப்பட்டேன். என்ன கற்பனை வளம், சிந்தனை திறன், பொருத்தி பார்க்கும் அறிவு குழந்தைகளுக்கு ! மலையாள எழுத்து என்றவுடன் அங்கு புட்டு தான் அவிப்பார்கள் என்ற அனுபவத்தை இச்சம்பவத்துடன் இணைத்து பொருத்தமாக பதில் அளிக்க தெரிந்திருக்கின்றாள்.
ஆசிரியர்களே குழந்தைகளுடன் உரையாடி பாருங்கள் . நாம் எதிர்பார்க்காத விடைகளை தருவார்கள். கற்பனையுடன் சிந்தனையுடன் இருப்பதை உணர்வீர்கள்.
வானத்திற்கும் அப்பால் பரவி யுள்ள வெற்றிடம் விண்வெளி என்பதைபுரிந்து கொண்டார்கள். ரக்கெட் செயற்கை கோளை எடுத்து செல்லும் வாகனம் என்பதை நான் கேட்காமலே சொல்லி வியப்பில் ஆழ்த்தினார்கள். செயற்கை கோள் பற்றி தெரிந்தே வைத்திருக்கின்றார்கள். உனக்கு தெரிந்த விண்வெளி வீரர் பற்றி செய்தியை திரட்டி வர கூறி வகுப்பை முடித்தேன்.
ஆசிரியர்களே! குழந்தைகளை வகுப்பில் பேச அனுமதியுங்கள். அவர்களை முறைப்படுத்துங்கள். குழந்தைகள் கற்பனை திறன் மிக்கவர்கள். அவர்களுக்கு தேவையான சூழலை உருவாக்கினால் அவர்கள் தானாகவே கற்க தொடங்கிவிடுவார்கள்.
வகுப்பறைகளை அதிகார மையமாக்கி , வானளாவிய அதிகாரம் கொண்டவராக ஆசிரியர்கள் விளங்கி , குழந்தைகளை அடக்கி ஆள்வதை தவிர்த்து விடுங்கள். உங்களின் அதிகாரத்தை கொண்டு குழந்தைகளை அடக்கிவிடாதீர்கள்..கொஞ்சம் குழந்தைகளை வகுப்பறையில் பேச ,கேள்வி கேட்க அனுமதியுங்கள்.குழந்தைகள் விண்ணை தாண்டி நம்மை அழைத்து செல்வார்கள் ..!
மதுரை சரவணன்.

Tuesday, November 17, 2015

பாரதி தம்பி கல்வி கட்டுரையின் நம்பகத்தன்மை...!

பாரதி தம்பி போன்ற கல்வி கட்டுரைகளை எழுதும் எழுத்தாளர்களின் உழைப்பு போற்ற தக்கதே...!
*
கொஞ்சம் யோசிக்கவே வைக்கின்றது குழந்தைகளின் கலந்துரையாடல்கள்..!
குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை கேள்வி கேட்க செய்ய வேண்டும்.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால்/ அளிக்க முயன்றால் போதும் , நாம்( ஆசிரியர்கள் ) சுயமாக சிந்திக்க தொடங்கி விடுவோம். இதனால் குழந்தைகள் நம்மை அழைத்து சென்றுவிடுவார்கள், சிகரத்தின் உச்சிக்கு! ஏனென்றால் குழந்தைகளின் கற்பனைத்திறன் எல்லையற்றது. அது நம்மை விட பல மடங்கு அதிக திறன் உள்ளது.


ஆசிரியர்கள் அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு , தாங்கள் கூறும் கருத்துக்களை அப்படியே உள் வாங்கி வெளியிடும் ஜெராக்ஸ் மிசின்களாக மாணவர்களை உருவாக்குவதால் எந்த பயன் ஏற்படாது என்பதை உணர வேண்டும். குழந்தை மையக்கல்வி முறையை ஆதரிக்க வேண்டும். நாம் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுக்கும் செய்தி (கல்வி) , ஒரு பிரதியாக தான் இருக்கும். அது பல சமயங்களில் மிஷினி மாட்டி கொண்டு கிழிந்துவிடும் பேப்பராக கூட மாறலாம். அசல் பிழை என்றால், பிழையான பிரதியே நமக்கு கிடைக்கும்!


தானே கற்றல் நிகழும் வகுப்பறையாக நம் வகுப்பறைகளை மாற்ற வேண்டும். தானாக கற்பதற்கு தகுந்த சூழலை உருவாக்குபவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். குழந்தைகளை வகுப்பறையில் கலந்துரையாட செய்வதன் மூலமாக, அவர்களின் சிந்தனை திறனை வெளிப்படுத்த செய்யலாம் அல்லது சிந்தனையை தூண்டலாம்.
குழந்தைகளின் கலந்துரையாடல் சுதந்திரமாக இருத்தல் அவசியம். குழந்தைகளின் கலந்துரையாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதற்கு தடை போடும் விதமாக நம் கருத்துக்களை அவர்களின் கலந்துரையாடலில் திணிக்க கூடாது.


இன்று என் வகுப்பறையில் பெண்கல்வி குறித்தும், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வராமைக்கு காரணம் , வீட்டில் தம்பி /தங்கையை கவனிக்க செய்வதால் அல்லது அம்மா/தாய் நோய்வாய்ப்பட்டதால், அவரின் பணிகளை செய்ய வேண்டி இருப்பதால் பெண் குழந்தைகள் வருவதில்லை என்று சொல்லியவுடன் , “சார் ஏன் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருக்கின்றார்கள் என்று காரணத்தை பற்றி விவாதிக்கின்றோம் ” என்று கீர்த்தனா கூறியவுடன், மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து செயல்பட்டார்கள்.
“ஏன் சார் பெண் மட்டும் தான் பள்ளிக்கு வரவில்லையா? பசங்களும் பள்ளிக்கு செல்வதில்லை அவர்களை பற்றி ஏன் கவலை கொள்ள கூடாது ? அவர்களை பற்றியும் எழுதுகின்றோம் ”என ரோஹித் கூற , செந்தில் தலைமையில் மற்றொரு குழு செயல்பட ஆரம்பித்தது.


என் வகுப்பறையில் இந்த பருவத்திற்கு விளையாட்டு முறையில் பிழையின்றி எழுதுவதற்கு பயிற்சி தருகின்றேன். அதனை சோதிப்பதற்கு களமாக இந்த உரையாடலை எழுத்துவடிவில் பதிய செய்ய கேட்டு கொண்டேன். விளையாட்டு கல்வி பலன் தந்தது. முழுவாக்கியத்தை எழுத கற்று கொண்டுள்ளார்கள். பிழைகள் மிகவும் குறைவாக , நன்றாக வளர்ந்திருக்கின்றார்கள். 5 ம் வகுப்பில் நான் இப்படி முழுவாக்கியத்தை அமைத்து எழுதியது இல்லை. உங்கள் பார்வைக்கு அதனை அப்படியே கொடுத்துள்ளேன்.
நான் கலந்துரையாடலை முறைப்படுத்துவபவனாகவும், திசை மாறி சென்று விடாமல் கண்காணிப்பவனாகவும் தான் எப்போதும் செயல்படுவேன். ஆகவே, நான் வெளியில் இருந்து கவனிக்க தொடங்கினேன். அனைத்து மாணவர்களின் பங்கெடுப்பும் இருக்க செய்தேன். குழுத்தலைவரை எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்து விவாதிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்க உதவினேன்.



டிராப்பவுட் இல்லை என கணக்கு கொடுக்கும் அதிகாரிகளே தயவு செய்து இதனை கணக்கில் கொண்டால் பள்ளி செல்லா குழந்தைகளை பற்றிய விபரம் அதிகம் தான் என்பதை அறியலாம். இது அவர்களின் கற்பனை அல்ல. தங்கள் குடியிருப்பு பகுதியில் , தாங்கள் கண்ட, கேட்ட, உடன் இருக்கும் அண்ணன் , தம்பி, தங்கை, அக்காக்களின் கதையாக இருக்கின்றது.
நாம் முன்னேற வேண்டிய தூரம் வெகுதூரம் இல்லை என்பதையும் நாம் போலியான புள்ளி விபரங்களை சுமந்து கொண்டும், எல்லோருக்கும் (அனைவருக்கும் )கல்வி என்பதை நம்பி கொண்டும் உள்ளோம்.
நம் பள்ளிக்கூடங்கள் மதிப்பெண் அடிப்படையில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி செயல்படுவதை, குழந்தைகளின் வார்த்தைகளில் இருந்து காணலாம்.


பாரதி தம்பி போன்ற பத்திரிக்கையாளர்கள் கல்வி கட்டுரைகள் எழுதும் எழுத்தில் கற்பனை இல்லை என்பதும் , அவர்கள் கல்விக்காக மெனக்கெடும் உழைப்பும் எவ்வளவு உன்னதமானது என்பதும் புரியும். இது ஒரு வகுப்பறையில் உருவாகி உள்ள புள்ளி விபரம் என்றால், இப்படி எல்லா வகுப்பறையிலும், எல்லா பள்ளிகளிலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதன் காரணத்தையும் , அதனால் இன்றும் பள்ளி செல்லாமல் வேலைக்கோ , ஊர் சுற்றி திரியும் குழந்தைகளின் விபரங்களை சேகரித்தால், 10 , 12 வகுப்புகளில் பள்ளியின் தேர்ச்சிக்காக, பள்ளியை விட்டே துரத்தப்படும் குழந்தைகளின் புள்ளி விபரம் அதிர்ச்சி ஊட்டக்கூடும்..!
குழந்தைகளை கலந்துரையாட செய்வோம். குழந்தைகளிடம் இருந்தே நம் கல்வி முறையில் சீர்திருத்தத்தை கொண்டு செல்வோம்.
கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எப்.ஏ . ஏ வுக்கு 10 மதிப்பெண் வழங்கினேன். மனநிறைவோடு...ஆசிரிய பணியில் வாழ்கின்றேன்.
மதுரை சரவணன்.

Monday, November 16, 2015

குழந்தைகள் தினம் - புதிய தலைமுறை செய்தி




விளையாட்டு முறை கல்வி குறித்து குழந்தைகள் தினத்தில் புதிய தலைமுறை செய்தியில் ஒளிப்பரப்ப பட்ட செய்தி..உங்கள் பார்வைக்கு. நன்றி: புதிய தலைமுறை செய்தி சானல்.