Thursday, October 22, 2015

புத்தகங்களை கண்டு குழந்தைகள் ஓடுவதேன்? அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

வாசிக்க வைப்போம் புத்தகங்களை நேசிக்க செய்வோம்!
*
A man may as well expect to grow stronger by always eating as wiser by always reading - Jeremy collier
குழந்தைக்ளின் வாழ்வில் பள்ளிப்பருவம் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. ஒவ்வொரு குழந்தைகளும் எதார்த்தமான கருத்துக்களுடன் அவர்களுக்கே உரிய மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை தருகின்றனர். குழந்தைகள் பிரகாசமாக காட்சி அளிக்கின்றனர். அந்த பிரகாசத்தினை மங்கிவிடாமல் பாதுகாக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.

குழந்தைகளின் சகஜமான அனுபவத்தையும், மகிழ்ச்சி மிக்க புலனறிவையும், உலகைக் கண்டு கொள்வதையும் அப்படியே பதுகாத்து வர வேண்டுமென்றும், கல்வி கற்றல் என்பது குழந்தைகளுக்கு உத்வேகமூட்டுகிற, கவர்ச்சி மிக்க உழைப்பாக இருக்க வேண்டுமென்றும் ஆசிரியர்கள் அனைவரும் உண்மையிலேயே விரும்ப வேண்டும் என்கின்றார் ஆசிரியர் வசிலி சுகம்லீன்ஸ்கி. (சோவியத் யூனியன் போதனா முறை விஞ்ஞானப் பேரவையின் உறுப்பினர்).
குழந்தைகளிடம் மொழியின் வளர்ச்சியை காண வேண்டுமானால், குழந்தைகளை புத்தகங்கள் வாசிக்க பழக்க வேண்டும். வாசிப்பு என்பது சுவாசிப்பை போன்று இயற்கையாக நிகழ வேண்டும். சாத்தியமா? எப்படி குழந்தைகள் புத்தகங்களை எடுத்த எடுப்பில் வாசிக்க வைக்க முடியும்! அவர்களுக்கு வார்த்தைகள் தெரிய வேண்டாமா?
7 வயது நிரம்பிய குழந்தை 3000-3500 வார்த்தைகளை அவற்றின்
உணர்ச்சி வித்தியாசங்களுடன் புரிந்து கொள்கின்றனர் என்கின்றனர் கல்வியாளர்கள். தாய்மொழி அறிவு கொண்டு புத்தகங்கள் மீது நேசத்தை உருவாக்கலாம். தாய்மொழி கல்வி புத்தக வாசிப்பை மேம்படுத்தும். வாசிப்பதற்கான தளத்தை உருவாக்கி தர வேண்டும்.

நடைமுறையில் நான் செயல்படுத்தும் வாசிப்பு முறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
1. வாசிக்க வைத்தல் என்பது ஒரு போதனை அல்ல என்பதை மனதில் விதைத்து கொள்ளுங்கள். அது பழக்கப்படுத்துவதால் வருவது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
2. எடுத்த எடுப்பிலே குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர்த்துவிடுங்கள்.
3. வாசிப்பை கட்டாயப்படுத்த மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொள்ளுங்கள்.கட்டாயப்படுத்தும் எண்ணம் குழந்தைகளை புத்தகங்களை கண்டால் ஓட வைத்துவிடும்.
4. முதலில் குழந்தைகளுக்கு கதைகளை வாய்மொழியாக கூற ஆரம்புயுங்கள். ஒவ்வொரு முறையும் கதைகள் வாயிலாக பாட கருத்துக்களை கூற முயலுங்கள். கதைகூறி முடித்தவுடன் நான் இக்கதையை இந்த புத்தகத்தில் இருந்து வாசித்து உங்களுக்கு கூறினேன் என்பதை அவசியம் தெரிவியுங்கள்.
5. கதைகள் உங்கள் வகுப்பறையின் ஒரு அங்கமாக இருக்கட்டும். உங்கள் வகுப்பறையில்,புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். எளிய படக்கதைகள். சிறிய புத்தகங்கள் என இருக்கட்டும். அதனை எடுப்பதற்கு அதனை தொட்டு உணர்வதற்கு படங்களை பார்ப்பதற்கு என அனுமதியுங்கள். ஆனால் வாசிக்க சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.
6. புத்தகங்களை படம் பார்க்க எடுக்கும் சிலர் படிக்க ஆரம்பிப்பார்கள். அப்போது நான் சொன்ன கதை இந்த புத்தகத்தில் தான் இருக்கின்றது என கூறுங்கள். நிச்சயம் குழந்தைகள் வாசிக்க தொடங்குவார்கள். பிரிதொரு நாளில் சார் அன்னைக்கு நீங்க சொன்ன கதை இந்த புத்தகத்தில் தானே இருந்து கூறினீர்கள் என்று சொல்வார்கள்.
7. ஒரே ஒரு குழந்தையை வாசிக்க செய்துவிட்டால். அதாவது புத்தகத்தை கையில் எடுத்து நுகர செய்தால் போதும். அது எல்லா குழந்தைகளுக்கும் வைரசாக பரவி விடும். புத்தகத்தை வாசிக்க தொடங்கும் குழந்தையை கதை கூற சொல்லுங்கள். பாராட்டுங்கள்.
8. வகுப்பறையில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி புத்தக வாசிப்புக்கு அனுமதியுங்கள். வாசித்த விசயத்தை நண்பர்களுடன் பகிர செய்யுங்கள்.
9. புத்தகங்கள் வாசிக்க தொடங்கியவுடன் குழந்தைகள் வார மாத நாளிதழ்களை வகுப்பறையில் வாங்கி போடுங்கள். நீங்கள் படிக்கும் வார மாத பத்திரிக்கைகளை குழந்தைகள் வாசிக்க அனுமதியுங்கள்.
10. பொது நூலகத்தின் பயன்பாட்டை கற்று தாருங்கள். புத்தகங்கள் தேர்ந்தெடுப்பதை கற்று தாருங்கள் பொது நூலகத்தில் உறுப்பினராக்குங்கள். வாரம் ஒரு முறை நூலகத்திற்கு அழைத்து செல்லுங்கள். அவர்கள் தினமும் சென்று புத்தகம் எடுக்க கற்று கொள்வார்கள்.


 தொடர் விடுமுறை வருவதால் லைப்ரேரி சென்று புத்தகங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையில் அழைத்து சென்றேன். அரை மணி நேரம் நூலகத்தில் பல்வேறு நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள்,சிறுவர் புத்தகங்கள் படித்தார்கள். தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேடி தேடு எடுத்தார்கள். அதுவும் பெண் குழந்தைகள் தேர்வு வித்தியாசமாக இருந்தது. விடுமுறைக்கு பின் நிறைய கதைகளை பகிர்வார்கள் . காத்திருக்கின்றேன். அவர்களுக்கு கதைகள் கூற நிறைய படிக்க வேண்டும்.



இப்படி தான் நிறைவு செய்ய நினைக்கின்றேன்.
“It is well to read everything of something and something of everything" - Brougham.
மதுரை சரவணன்.

Tuesday, October 20, 2015

குழந்தைகளிடம் இதயத்தை ஒப்படையுங்கள் - விருது உங்களை தேடி வரும்...!

       
           அன்பு நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். நேற்று (19-10-2015) மாலை தினமலர் அலுவலகத்தில் லட்சிய ஆசிரியர் விருதினை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் இருந்து பெற்றேன். என்னுடைய ஆசிரியர் பணிக்கு கிடைத்த ஊக்கமாகவும், அங்கீகாரமாகவும் இவ்விருது அமைய பெற்றமைக்கு பெருமை படுகின்றேன். அதனை வழங்கி கவுரவித்த தினமலர் நாளிதழுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். 
உண்மையான போதகராக இருக்க வேண்டுமானால் குழந்தைகளிடம் நம்முடைய இதயத்தை ஒப்படைத்து விட வேண்டும் என்பதை முழுமையாக உணர்கின்றேன். குழந்தைகளுக்கு அவர்களை பெற்ற அம்மாவை போல் அன்புக்குரியவனாக இருப்பதில் பெருமிதம் கொள்கின்றேன். இவை வார்த்தைகள் அல்ல. உண்மைகள். இந்த விருது அதற்கான அங்கீகாரமாகவே கருதுகின்றேன். 


குழந்தைகளை அவர்களின் போக்கில் அழைத்து செல்கின்றேன் என்ற உண்மையை உணர்ந்த தருணங்களாக இதனை கொள்கின்றேன். குழந்தைகளுக்கான பேச்சுக்களை வகுப்பறையில் உருவாக்கியவன் என்பதால் வகுப்பறைகளை எப்போதும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான  தயாரிப்பு களமாக பயன்படுத்தாமல், அவர்களின் சுயம் வெளிப்படும் விதத்தில் உருவாக்கி தருவதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றேன்.  


குழந்தைகளை எல்லாவித பயங்களில் இருந்து காப்பவனாக இருக்கின்றேன். குழந்தைகளின் மென்மையான இதயங்களை பயம் தாக்குவதில் இருந்து காப்பவனாக இருப்பதில் பெரும் முயற்சியை மேற்கொள்கின்றேன். ஆகவே, இவ்விருதினை அவர்களுடன் பகிர்வதிலும் அவர்கள் இன்றி இவ்விருதுக்கான மரியாதை சாத்தியமில்லை என்பதால் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வதில் பெருமை படுகின்றேன். 

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றேன். அதனால் அவர்கள் எனது ஆரோக்கியத்தின் மீது கவலை கொள்கின்றனர். இம்மாதிரியான சமயங்களில் எனக்கு தாயாக மாறி விடுவதை காண்கின்றேன். மிகவும் பெருமையான தருணங்களை ஏற்படுத்தி கொடுத்த என் வாழ்நாளில் வந்து சென்ற அத்தனை குழந்தைகளுக்கும் இந்த தருணத்தில் நன்றியினையும் இவ்விருதினால் கிடைத்த பெருமையையும் அக்குழந்தைகளுக்கே சமர்பிக்கின்றேன். 



எனக்கு ஆசிரியர் பணியினை வழங்கி , தலைமையாசிராக பதவி உயர்வளித்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்துவரும் எனது பள்ளி நிர்வாகத்திற்கும் , பள்ளி தாளாளர் திரு ஏ.வி.எஸ்.என் . சண்முகநாதன் அவர்களுக்கும் ,உறவின் முறை நிர்வாகத்திற்கும் என்றும் நன்றி கடன் பட்டவன்.  என்னுடன் பணியாற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும், என் பள்ளி பெற்றோர்களுக்கும் ஆசிரியர் அல்லா பணியாளர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் பகிர்ந்து கொள்கின்றேன். 




இவ்விருதினை என்னை போன்ற ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் வழங்கி கவுரவிக்கும் தினமலர் நாளிதழுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். இவ்வுறவு என்றும் இவ்வாசிரியர்களின் பணியினை மேன்மை படுத்தும் என்பதால் என்றும் நன்றி கடன் உரியவனாக இருப்பேன். 

Wednesday, October 14, 2015

இயல்பு தன்மை மாறினால் உணவு மட்டும் கெட்டுப்போனதாக அர்த்தமல்ல...!

நான் என்ன நீ டைப் பண்ற மிசினா..?
*
என் மகனை அழைக்க அவனது பள்ளிக்கு சென்றிருந்தேன். என்னை பார்த்ததும் சத்யாவின்  ஆசிரியர், “ சத்யா , எப்பவும் பேசிக்கிட்டே இருக்கான்.நான் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேன்கின்றான். ரெம்ப மெதுவா எழுதுகிறான்.. சாப்பிடவே மாட்டேன்கிறான்..இப்படி ரெம்ப சேட்டை செய்கின்றான் ” என குறைகளை அடுக்கி வைத்தார்கள்.
“ம்ம்.. குழந்தை தானே.. போக போக சரியாகிவிடுவான்.. கொஞ்சம் பொறுத்துக்கங்க “ என்றேன். ஆசிரியை ஏற இறங்க இவனே ஒரு குழந்தையைப் போல் லூசு மாதிரி பேசுகின்றான் என்ற தொணியில் பார்த்தார். அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
வெளியில் வந்ததும் சத்யாவிடம் மிஸ்.. குறை சொல்லும் அளவா நடந்து கொள்வது! சாப்பாடு கூட சாப்பிடுவது இல்லை என்கின்றார்கள் என கேட்டேன்.
“டாட்.. நான் என்ன உன்னை மாதிரி பெரிய ஆளா..? அம்மா நிறைய சாப்பாடு கட்டி கொடுத்துட்டா.. என் சின்ன வயித்துக்கு தகுந்த மாதிரி சாப்பிட்டேன்.. டிப்பன் பாக்ஸ் முழுவதும் சாப்பிடலைன்னு மிஸ் திட்டுனா.. என்ன செய்ய? இப்படி சாப்பிட்டா உன்னை மாதிரி தொப்பை தான் வரும்! “ என சிரித்தான்.
அது சரி ஏன் பக்கத்துல இருக்கிற பையன்கிட்ட பேசிகிட்டு இருக்க.. மிஸ் கிட்ட மட்டும் பேச மாட்டேன்கிற..?”
“அதுவா. டாட்.. அது வந்து அவன் பேசினான்.. நான் பேசினேன். அவன் கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது எதாவது சொன்னா நான் எப்படி டாட்.. பதில் சொல்வேன். இதுக்கெல்லாம் திட்டுவாங்களா? நான் மிஸ்கிட்ட பேசுறேன்..டாட்..ஆனா என் பிரண்டு மாதிரி பேச மாட்டா...”
“ ஏன் எழுத மாட்டேன்ன்னு புகார் சொல்றாங்க..? “
“அதுவந்து டாட்.. வேகமா எழுத சொல்றாங்க .. அதே சமயம் அழகாவும் இருக்கணும்மா.. எப்படி டாட் முடியும் நான் என்ன நீ டைப் பண்ற மிசினா..? “ என சிரித்தான்.
குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவும் அதே வேளையில் புத்திசாலியாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சத்யா மட்டும் உதாரணம் அல்ல... எல்லா குழந்தைகளும் இப்படி தான். நாம் தான் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிப்பதில்லை. நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் குறைகளை கூறி கொண்டே, நம் எண்ணங்களை குழந்தைகளின் மீது திணிக்கின்றோம். 
நண்பர்களே.. குழந்தைகளை அதன் இயல்பில் அவர்களின் குழந்தை தன்மை மாறாமல் குறைகள் சொல்லாமல், எதையும் திணிக்காமல் , அவர்களின் இயல்பு நிலையிலேயே வளரச் செய்வோம். இயல்பு தன்மை மாறினால் உணவு மட்டும் கெட்டு போனதாக அர்த்தம் அல்ல. 
 
மதுரை சரவணன்.

Friday, October 9, 2015

இதை படித்தால் உங்களுக்கும் மனநோய் இருப்பதை உணர்வீர்கள்.

எல்லோரும் இங்கு பைத்தியம் தான்...!
*
ரைட்டில் இண்டிகேட்டர் போட்டு லெப்ட் சைட்டில் திரும்பிய ஆட்டோக்காரனால் , அவன் பின்னால் மனைவியுடன் வந்த பைக்காரர் கீழே விழுகின்றார். பின்னால் வந்தவன் மோதி கீழே விழுந்தவன் பற்றி கவலை கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவண்ணம் சென்றுவிடுகின்றான். ஆட்டோக்காரன். பொண்டாட்டியோடு வர்றோமே கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா? என்றபடி கடக்கிறார்கள், பாதாசாரிகள்.
என் முதுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் மனைவி.. என்ன வண்டி ஓட்டுற.. ஸ்கூலுக்கு நேரமாச்சு.. உன் ஓட்டை வண்டி இதுக்கு மேலே போகாதா..? வேடிக்கை என்ன வேண்டி கிடக்கின்றது என முறுக்குகிறாள்.. ஆக்ஸ்சிலேட்டர் வயர் அறுந்துவிடும் அளவுக்கு வேகமெடுக்கின்றது வண்டி. பேருந்தில் இருந்தப்படியே காறி துப்புகின்றாள் ஒரு யுவுதி. நல்லவேளை, எச்சில் என் பின்னால் வந்து கொண்டிருந்த வெள்ளைச்சட்டை அணிந்தவர் மீது படுகின்றது. சிரித்தப்படி புட்போர்டில் இதை வேடிக்கை பார்த்தப்படி பயணிக்கின்றார்கள், கல்லூரி மாணவர்கள்.
சிக்னல் விழுகின்றது. சிவப்பு விளக்கு எரிகின்றது. எங்கிருந்தோ வந்த டூவிலர் காரன் எதிர்வரும் வாகனங்களின் ஊடே பறக்கின்றான். என் அருகில் நின்றிருந்த ஸ்கூட்டிக்கரான் பின்னால் அமர்ந்திருந்த பெண் “நீயும் தான் வண்டி ஓட்டுற ..இப்படி சீறி பாய்ந்து ஓட்ட தெரிகின்றதா..சிக்னலில் நின்று என் மானத்தை வாங்கிற..” என கூறுகின்றாள். சிவப்பு பச்சையாகின்றது..வாகனங்களின் பின்னால் அமர்ந்துள்ள ஒவ்வொருவரும் வேகமா போ.. என்கின்றனர்.
ஆட்டோக்காரன் சிக்னல் விழுந்தும் அப்படியே நின்றப்படி சவாரி ஏற்றிகொண்டு இருந்தான். ஹரன் ஒலி காதை பிளந்தது. அருகில் மருத்துவமனை போர்டு இருந்தது. யார் செத்தால் என்ன? பிழைத்தால் என்ன? அவரவர் வேலை அவரவர்க்கு... யாரையும் கண்டு கொள்ளாமல் எதையும் பற்றி யோசிக்காமல் வாகனத்தை தம் இஷ்டத்திற்கு முடுக்கி கொண்டிருந்தார்கள். இவர்கள் மீது அரசு பேருந்து அளவுக்கு அதிகமான புகையை கக்கி கொண்டு ஓட்டை உடைச்சலுடன் ஓடியது.
எல்லோரும் நின்ற்கின்றனர். ஹாரன் ஹெல்மெட்டை மீறி காதை பிளந்து கொண்டிருந்தது. நடு ரோட்டில் அரசு பேருந்து மக்கர் செய்யவே ..எல்லோரும் தள்ளிக்கொண்டிருந்தனர்.
இன்னும் நாம் தள்ளி கொண்டு செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான்...! என்ன மனநிலையில் இவர்கள் இயங்குகிறார்கள். வீதியில் சென்று வருவதற்குள் மனநிலை மாறி விடுகின்றது. என்ன மனுசங்கப்பா..?
ஒருவழியாக மனைவியை .. எல்லா தொந்தரவுகளையும் தாண்டி மனைவியுடன் சண்டை போட்டு கொண்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு கொஞ்சம் ஆசுவாசமடைந்து செய்திதாளை புரட்டுகின்றேன் . இன்று உலக மனநல தினமாம். அட பாவமே..!
மனிதனின் ஆரோக்கியம் மற்றும் நல்லெண்ணத்திற்காக உலக மன நல தினம் கொண்டாடப்படுகின்றதாம். மேலே சொன்னா எல்லாவற்றையும் ஒரு மனநோயாகவே பார்க்கின்றேன். நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய நாள் தான்..!
மதுரை சரவணன்.

குழந்தைகளை நேசிப்பது எப்படி? ( சத்தியமா இது காதல் மேட்டர் இல்லை)

டம்மி பீஸ்...!

குழந்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். குழந்தைகள் உண்மையானவர்கள். குழந்தைகளின் முகத்தில் கள்ளத்தனம் இருப்பதில்லை. குழந்தைகளுடன் அஇருந்து பாருங்கள். நீங்கள் சொர்க்கம் என்று ஒன்றை நம்புவீர்கள் என்றால் , அதனை நேரில் காண்பீர்கள்.

குழந்தைகளை நான்கு சுவற்றிற்குள் அடைத்து வைத்துள்ளோம். அதிலும் அவர்கள் விரும்புவதை நாம் செய்ய அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு வண்ணமிகு புத்தகங்களை விட , சிறிய கற்களின் மீதும் , நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் சாக்பீஸ் துண்டுகளின் மீதும், காந்த துண்டுகள் மீதும், சிறிய சதுரக்கட்டைகள் மீதும், கோலிக் குண்டுகள் மீதும் , ஏன் வகுப்பறையில் வீசப்படும் காகிதங்கள் மீதும் அலாதியான ப்ரியங்களுடன் அதனை கொண்டு விளையாடுவதில் ஈடுப்பாட்டுடன் இருப்பதை காண்கின்றேன்.

விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளிடம் வண்ணப்புத்தகங்களையும், சிறிய கற்களையும் வைத்துவிட்டு வேடிக்கை பாருங்கள். குழந்தைஅகள் கற்களை கையில் எடுத்து தூக்கி எறிந்து விளையாடுவதை காணலாம். புத்தகங்களை விட, தெளிவாக கூறினால், வழிந்து திணிக்கப்படும் கருத்துக்களை விட தானாக முனைந்து கற்று கொள்ளவே ஆசைப்படுகின்றார்கள்.


உங்கள் குழந்தைகளை பார்க் அழைத்து செல்லுங்கள். வேண்டாம் . வளர்ந்த உங்களுக்கு வேலைப்பளூ அதிகமாக இருக்க கூடும், பார்க் வேண்டாம். வீட்டிற்கு முன்னால் தெருவில் விளையாட அனுமதியுங்கள். வானில் ஒலியெழுப்பி பறந்து செல்லு பறவைகளை கண்டு ஆனந்தமடைவதை காணலாம். செடிகளின் மீது பறந்து திரியும் வண்ணத்து பூச்சிகளை கண்டு குதுகலம் அடைவதை பார்ப்பீர்கள். மண்ணில் ஊர்ந்து செல்லும் பெயர் தெரியாத பூச்சிக்கு பின்னால் செல்வதை காணலாம்.

இவை எல்லாம் விளையாட்டு அல்ல. குழந்தைகள் புதியதாக ஒன்றை கற்று கொள்கின்றார்கள் அல்லது புதியதான ஒன்றை பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்கள் .அவர்களின் கனவு உலகம் அலாதியானது. அதில் நாம் பயணிப்பதற்கு பேருந்து பயணத்தில் நடத்துனர் கொடுக்கும் பயணச்சீட்டை பத்திரப்படுத்துவதற்கு பதிலாக அதனை வைத்து விளையாட தெரிந்திருக்க வேண்டும்.

அட பைக் ஸ்டார் செய்வதில் கூட தினமும் நாம் புதுமையை காண வேண்டும். குழந்தைகளை புரிந்து கொள்ள இதுவும் ஒரு பயிற்சி தான்.

ஒவ்வொரு முறையும் பைக்கில் குழந்தைகள் ஏறும் போதும் வேறு வேறு விதமாக ஏறுவதை காண்பீர்கள். ஆம் குழந்தைகளை நாம் கவனிக்க வேண்டும். எப்போது நீங்கள் குழந்தைகளை கவனிக்கின்றீர்களோ , அப்போது நீங்கள் பேச தொடங்கும் முன்பே அவர்கள் பேச தொடங்குவதை காணலாம்.

குழந்தைகள் நம்மை கண்டு பயப்பட கூடாது. நம் செயல்கள் பயமுறுத்துவதாக இருக்க கூடாது. ஒரு முறை என்னிடம் படித்த முன்னால் மாணவி அவளது தம்பி என்னுடைய வகுப்பில் தான் பயில வேண்டும் என்று விரும்பி கேட்டு கொண்டாள். ஆனால், அவளது தம்பி என் குண்டு உருவத்தை கண்டு பயந்து பயமா இருக்கு என்று கூறி உள்ளான்.

அந்த மாணவி அவனது தம்பியை என்னிடம் அழைத்து வந்தாள். “சார், என் தம்பி உங்களை பார்த்து பயப்படுகின்றான். நீங்க பார்க்க தான் அப்படி , பழகினால் ஒரு டம்மி பீஸ் தானே .. சொன்னால் நம்ப மாட்டேன்கின்றான்.. நீங்க ஒரு டம்மி பீஸ் தானே “ என கேட்டாள்.
” டம்மி பீஸ்னாலும், உனக்கு மம்மி மாதிரியான பீஸ் ” என்றேன். அவளது தம்பி சிரித்தான். ஏண்டா பயப்படுகின்றாய் என அருகில் அமரச் செய்து அவனிடம் உனக்கு பிடிச்சதை படி , நீ விரும்பினா இங்க இரு.. பிடிக்கலை வகுப்பை விட்டு வெளியே போய் ரிலாக்ஸ் ஆகிட்டு வா.. என்றேன்

வெளியே போனால் அடிப்பீங்க என்றான். ”சாரா.. அட போடா நீ அடிச்சா தான் உண்டு. அவர் அடிக்கிற மாதிரி கூட பாவ(னை)ல்லா செய்ய லாயிக்கு இல்ல்லை..சார் கிட்ட பேசிகிட்டே இருந்தா போதும் ஐந்தாம் வகுப்பு போறதே தெரியாது.. அவ்வளவு ஜாலி.. பாரு ..நம்ம ஐஸ்வர்யா தம்பி கூட இங்க தான் படிக்கிறான்..” என்றாள்.
“ஆமாக்கா.. எங்க அக்கா கூட சார்கிட்ட தான் படிக்கணும்..சூப்பரா ஜாலியா இருக்கும்ன்னாங்க..உண்மையிலே சந்தோசமா இருக்கேன் “

அதற்குள் கையொப்பம் இட வந்த மூத்த ஆசிரியை ..”நல்லா சந்தோசமா இருக்காங்க..இந்த இவ போடாத ஆட்டமா.. அவன் தம்பி வேற உங்க கிளாசா..? நீங்க இருந்தா ஆட்டம் போட மாட்டேங்கிறாங்க.. ஆனா நீங்க மீட்டீங் கிட்டிங்ன்னு வெளியே போயிட்டீங்க ..எங்கனால உங்க பிள்ளைகளை சமாளிக்க முடியலை..கொஞ்சம் கூட பயம் இல்லை..” என்றார்.

”ஏன் டீச்சர் இப்படி சொல்றீங்க..? நல்ல பசங்க..உங்களுக்கு அவர்களை கையாள தெரியவில்லை? “ என்றேன்.
“ என்னம்மா வாய் பேசுறாங்க தெரியுமா? எல்லாம் வானரமா மாறிடுறாங்க..”

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. என்ன நீங்க எது சொன்னாலும் அதுக்கு எதுக்கு கேள்வி கேட்டு இருப்பாங்க..? உங்களுக்கு பசங்க கிட்ட கேள்வி கேட்டே பழக்கமாகிடுச்சா.. உங்களிடம் குழந்தைகள் கேள்வி கேட்பது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்? “

“வேன் பீஸ் முன்னாடியே கட்டிடாணும் என்றால், ஏன் டீச்சர் இது என்ன train னா.. முன்னாடியே டிக்கெட் எடுத்து ஏறுவதற்கு ? என்று கேட்கின்றான். “
நான் அந்த ஆசிரியரிடம் என்ன சொல்லியிருப்பேன்? கொஞ்சம் யோசியுங்கள்.

“கேள்வி கேட்பதே மாணவனுக்கு இலக்கணம்” என்று அப்துல்கலாம் கூறியுள்ளார். ஆனால் நாம் கேள்விகள் குழந்தைகள் கேட்பதை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நமக்கு அதற்கான பதில் பெரும்பாலும் தெரிவதில்லை. அல்லது குழந்தைகள் கேட்கும் கேள்வி உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவதாக அமைந்து விடுகின்றது.

குழந்தைகள் சிறியவர்கள். எடை குறைந்தவர்கள். அவர்கள் கண்களுக்கு நாம் எப்படித் தென்படுவோம் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள் நாம் பெரிசு. அவர்கள் பொடிசு. அவர்களுடன் பேசுவதற்கு ஒரே வழி தான்: அவர்கள் அளவுக்கு மண்டியிட்டு கீழே இறங்கி வருவது மட்டுமே!
(உங்களுக்கு கீழே இறங்கி வருவது என்றால் எப்படி ? என்று கூறுவீர்களானால் , தமிழக சட்டசபை வளாகத்தில் நின்று கவனியுங்கள் )

குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துள்ளேன். ஆகவே, அவர்களுக்கு விளையாட்டு முறையில் அவர்கள் விரும்பிய வண்ணம் கற்று தருகின்றேன். அதுசரி அந்த ஆசிரியரிடம் என்ன கூறினேன் ? என்று கேப்டது புரிகின்றது.

பேருந்து பயணத்தின் போது பயணச்சீட்டை பத்திரப்படுத்துவதை விட அதை வைத்து விளையாண்டு பாருங்கள். அப்புறம் நீங்கள் கேட்கும் கேள்வியின் மீதுள்ள நியாயம் புரிந்துவிடும். எளிதாக பதிலளித்தும் விடுவீர்கள் என்றேன்.


வாருங்கள் ! குழந்தைகளின் சட்டைப்பைகளில் என்ன கிடக்கின்றது என்பதை அறிவோம்.

”சின்னப்பிள்ளை மாதிரி கால்சட்டையில் முருக்கை திண்ணுட்டு மிச்சம் வச்சிருக்கீங்க.. அதென்ன சாக்லெட் காகிதத்தை பையில் வச்சு கிட்டு.. துவைக்கிற எனக்கு தானே..தெரியும் “ என மனைவியின் குரல் கேட்கின்றது.
பை நாளை சந்திக்கலாம்.
”அய்யோ ..சட்டைபையில் உள்ள கடலை மிட்டாய்க்கு என்ன சொல்வாளோ? என்ன சொன்ன காதில விழலை..அதுவா.”
மதுரை சரவணன்.

Wednesday, October 7, 2015

நீங்கள் குற்றம் செய்யாதவர் என்று நம்பினால் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை !

யார் குற்றவாளி ?
*
கல்வி குறித்து பேச சொன்னால் எவரும் உடனே சொல்லும் கூற்று இதுவாகத்தான் இருக்கும்: ஒரு பள்ளிக் கூடத்தை திறந்தால் நூறு சிறைச்சாலைகளை மூடலாம்.
இன்று அரசு 1 கிலோமீட்டர் தொலைவில் துவக்கப்பள்ளியும் 3 கிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப்பள்ளியும், 5 கிலோ மீட்டருக்குள் உயர்நிலைப்பள்ளியு 8 கிலோ மீட்டரக்குள் மேல்நிலைப்பள்ளி அமைக்க உத்தரவிட்டு அதன் படி பள்ளிகளை திறந்து உள்ளது. செய்தி தாள்களைப் புரட்டினால் தவறு செய்பவர்கள் இளம் வயது உடையவர்களாக 19 வயதுக்குள் இருப்பதை காண்கின்றோம்.
எனக்கு விவரம் தெரிந்து ஒரு சிறைச்சாலை கூட இதுவரை மூடப்பட்டதாக கேள்விப்படவில்லை. சிறைச்சாலையை விரிவுபடுத்தி தான் உள்ளார்கள். புதிதாக இடித்து கட்டியுள்ளார்கள். பல காவல் நிலையங்கள் வசதி இல்லை என்பதால் புதிதாக கட்டப்பட்டு, அப்புதிய கட்டிடங்களில் நவீன வசதியுடன் இயங்குவதை காண்கின்றேன்.
மூன்று மாதங்களில் ஏதாவது ஒரு நாள் ஏதாவது ஒரு போலீஸ்காரர் ஒரு பையனை அரஸ்ட் செய்து உள்ளோம்,. அவன் உங்கள் பள்ளியில் படித்தான் என்று வந்துவிடுகின்றார்கள். நீதிபதியிடம் கொண்டு சென்று ரிமாண்ட் பண்ண வேண்டும். ஆகவே சர்டிபிக்கேட் ஜெராக்ஸ் கிடைக்குமா? ஏஜ் சர்டிப்பிக்கேட் தர முடியுமா? என புலம்புவதை காண்கின்றேன். பாவம் அவர்கள் நிலை.இரவு முழுவதும் கண்விழித்து விவரங்களை சேகரித்து, குற்றத்தை நிருபிக்க படும் பாடுகுறித்து எழுதினால் நாவலே எழுதிவிடலாம்.
அதுவும் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் இப்படி கிரைமில் ஈடுபடுவதை நினைக்கும் போது , பள்ளிக்கூடங்கள் மீது குறை சொல்வதா? அல்லது கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் சரியில்லை என்பதா? அல்லது பாடத்திட்டம் சரியில்லையா? அல்லது கல்வி முறையில் கோளாறு உள்ளதா ? தெரியவில்லை.
சில நேரங்களில் இது நமக்கு மட்டும் தான் நேர்கின்றதா? என யோசித்தும் உள்ளேன். ஒருமுறை எனது நண்பர் பள்ளியில் அமர்ந்து சரக வேளையில் ஈடுப்படும் போது அங்கும் இதேப்போல் ஒரு மாணவனை (பழைய ) ரிமாண்ட் செய்ய சர்டிபிக்கேட் கோரி வந்ததை கண்டேன்.
இளம் குற்றவாளிகள் குறித்தும் அவர்களின் குற்றம் குறித்தும் காவலர்களிடம் விசாரித்த போது சூழ்நிலையின் வற்புறுத்தலை கரணமாகவும் (வறுமை) ஏதோ ஒரு உந்துதலின் காரணமாகவும் குற்றங்களை புரிகின்றார்கள் என்கின்றார்கள். மேலை நாடுகளை ஒப்பீடும் போது இவர்கள் குற்றங்களை தொழிலாக செய்வதில்லை என்றும் கூறுகின்றார்கள். குற்றங்களை மிக நேர்த்தியாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சிக்குவதில்லை.

இன்றும் அதே போல் எஸ்.ஐ. ஒருவர், ஒரு மாணவனின் சர்டிபிகேட் தேடி வந்தார். அவரிடம் ஏன் இப்படி நடக்கின்றது? என கேட்டேன். அவரும் குடும்ப வறுமை, குடும்பத்தின் வளர்ப்பு முறை என்று கூறினார். தாய் சரி இல்லை, தந்தை சிறுவயதிலேயே ஓடிவிட்டான். இன்னும் இரண்டு குழந்தைகள். வறுமையே இவர்களை செயின் அறுக்க செய்கின்றது. மிரட்டி பணம் பறிக்க செய்கின்றது என கூறினார்.
கற்கை நன்றே ; பிச்சை புகினும் கற்கை நன்றே என்று தானே படித்துள்ளோம். இங்கு வாழ்வதற்கு ஒருவேளை சாப்பிட பிச்சை கேட்டால் விரட்டி விடப்படுகின்றார்கள். அரை வேளை பசிக்கு கூட வழியில்லை என்கின்ற போது பணம் தராதவனிடம் பிடிங்கி தானே வாழ வேண்டியுள்ளது! என்று அவர் கூறிய போது யோசிக்க தொடங்கி விட்டேன்.
குற்றம் செய்யும் மாணவனை மட்டும் எடுத்து கொண்டு நாம் சிந்திப்போம். ஏன், ஒரு பள்ளிக்கூடம் அவனை நல்வழிப்படுத்த தவறி விட்டது அல்லது நல்வழிப்படுத்தவில்லை? ஏன், ஒரு ஆசிரியர் கூட அவன் வாழ்வில் ஒளி ஏற்றி நல்வழியில் நடக்க வழி வகை செய்யவில்லை? நல்ல முறையில் போதிக்க வில்லை? ஏன் இந்த கல்விமுறை மாணவர்களை குற்றவாளி ஆக்கி வேடிக்கை பார்க்கின்றது? இப்படி பல ஏன் ? களுக்கு விடை தெரியவில்லை.
எது குற்றம் என்பது தெரியவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆம். அதுவும் குற்றம் என்று உணராமல்!
ஒரு மரத்தை வெட்டுவது கூட குற்றம் தான் . உணவுக்காக ஆடு மாடு கோழியை அடித்து உண்கின்றோம்.
எது குற்றம் என்பது அறியாமலே , நாம் குற்றம் புரிந்து கொண்டு இருக்கின்றோம். மரம் வெட்டுதல் , மிருகங்கள், பறவைகளை கொல்லுதல் ஆகியவையுன் உயிர் கொலைகள் என்ற வகையில் இவற்றிற்கு தண்டனை தந்தால், நாமும் குற்றவாளிகள் தான். ரிமாண்ட் செய்யப்பட வேண்டியவர்கள் தான்..!
நாம் நம் மாணவர்களுக்கு நன்னெறியை போதிக்க தவறி விட்டோம். சமீபத்தில் 10 வருடங்களாக நாம் நம் குழந்தைகளிடம் நன்மை தீமை குறித்து பேச வில்லை.படிப்பு... படிப்பு...படிப்பு.. அதன் மூலம் அதிக மதிப்பெண் என்று நம் குழந்தைகளுக்கு ஒருவித அழுத்தத்தை கொடுத்து விட்டோம். குழந்தைகளை படி படி என அடி அடி என அடித்து துவைத்து அவர்களின் மகிழ்ச்சியை , சந்தோசத்தை மண்ணுக்குள் போட்டு புதைத்துவிட்டோம்.
இந்த செயலை புரிந்த அனைவரும் குற்றவாளிகள் தான். இதில் பள்ளிக்கூடம், ஆசிரியர், கல்விமுறை,0 பெற்றோர் ,கல்வியாளர் என வித்தியாசம் கிடையாது. நாம் நம் கல்வி முறையில் குற்றவாளிகள் உருவாக்குவதல் பங்கு வகித்துள்ளோம் என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
ஒருவனை அடக்கி வைப்பதால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது. ஒருவனின் மகிழ்ச்சியை பறிக்கும் முயற்சிக்கு கிடைத்த பரிசு தான், இன்று அவர்கள் குற்றவாளிகளாக உருவாகி உள்ளார்கள்.
எங்கு மகிழ்ச்சி இருக்கின்றதோ எங்கு சந்தோசம் இருக்கின்றதோ அங்கு நல்லவை நடக்கும். அற்புதங்கள் நிகழும். எங்கு சந்தோசம் குறைகின்றதோ அங்கு பிரச்சனைகள் உருவாகத்தொடங்கி விடும்.
நாம் சந்தோசம் இல்லாத போது மோசமானவர்களாக மாறி விடுகின்றோம். மோசமானவர்களாக நடக்கின்றோம்.
இனியாவது இத்தவறுகள் நடக்க கூடாது என்று நினைத்தால், நம் குழந்தைகளை மகிழ்ச்சியானவர்களாக, சந்தோசம் நிரம்பியவர்களாக உருவாக்குவோம். வளர்ப்போம். எப்போதும் படி படி படி என்று மன அழுத்தத்தை உருவக்காமல். விளையாட்டாய் அவர்களுக்கு பிடித்த வண்ணம் பிடித்த நிறங்களில் கற்றலை தருவோம். இறுக்கி பிழியாமல், சுதந்திரமான கற்றல் சூழலை உருவாக்குவோம். சந்தோசத்தை கொடுக்ககூடிய கல்வியை தருவோம். பள்ளிப்பாடங்களுடன் நன்னெறிக்கல்வியை வழங்கி மகிழ்வோம். நம் குழந்தைகளுக்கான உண்மையான சந்தோசம் விளையாட்டு முறை கல்வியில் தான் உள்ளது. குழந்தை மையக்கல்வி முறையில் மட்டுமே கற்பித்தலை செய்வோம். வகுப்பறையில் குழந்தைகளுக்கு சுதந்திரத்தையும் மகிழ்ச்சியினையும் வழங்குவோம்.
மதுரை சரவணன்.