அரசு பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கும்
ஆங்கில வழிக்கல்வி.
செயல்வழிக்
கற்றல், சமச்சீர் கல்வி, பொதுப்பாடத்திட்டம் , தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ,
கலர் பென்சில் முதல் காலில் அணியும் செருப்பு வரை 16 வகையான இலவசங்கள் என தமிழக கல்வித்
துறை அடுத்தடுத்து மாற்றங்களை நிகழ்த்தி பெற்றோர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது.
பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு எட்டாக்கனியாகவும், நடுத்தர மக்களை
அதிக கட்டணங்களால் வாட்டி வதக்கிய ஆங்கிலவழிக் கல்வியை அரசுபள்ளிகளிலும் 2013-14 கல்வி
ஆண்டு முதல் தொடங்க உத்தரவு வெளிட்டு, அதனை
நடைமுறைப்படுத்தியிருப்பது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், கல்வியாளர்கள்,
எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழக கல்வித்துறையில் சுதந்திரத்திற்கு பின் திட்டங்களும்
மாற்றங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் முதல்வர் கருப்பு காந்தி காமராசர்
கொண்டு வந்த மதிய உணவு திட்டம் ,ஏழைக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உதவியது. மிகவும்
பின் தங்கிய மக்கள் மதிய உணவுக்காவே பள்ளிக்கு அனுப்பினார்கள். மதிய உணவுத்திட்டத்தை
மக்கள் திலகம் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் சத்துணவு திட்டமாக விரிவுப்படுத்தியதன்
விளைவு, இன்றளவும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதன் வரிசையில்
இன்றைய முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ள 16 வகையான இலவசங்கள்
இடைநிற்றல் சதவீதத்தை குறைத்து, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை வீதத்தை உயர்த்தியுள்ளது.
இந்த வரிசையில் ஆங்கில வழிக்கல்வி அறிவிப்பு பொதுமக்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்று
அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி அவசியமா? நடைமுறை சாத்தியமா?
ஒருபுறம்
அரசு பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையில் இயங்கும் நிலையில் இத்திட்டம் வெற்றிப் பெறுமா?
100 மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு
மாணவர் ஆசிரியர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. ஆங்கில வழிக்கல்விக்கு என்று தனியாக
ஆசிரியர்கள் நியமிக்காத நிலையில் கற்பித்தல் தனியார் பள்ளிகளுக்கு இணையான ஒன்றாக இருக்குமா
? என்ற ஐயங்கள் பொது மக்களிடம் எழுந்துள்ளன.
தொடங்கப்பட்ட
ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கவில்லை என
ஆசிரியர்கள் புலம்பித்தள்ளும் நிலையுள்ளது. இருப்பினும் பத்திரிக்கை செய்தி, பெற்றோர்களின்
தொடர் படையெடுப்பால், போர்கால அடிப்படையில் ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டதாக
அறிய நேர்வது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.
தமிழ் வழிக்கல்விக்கு செயல்வழிக்கற்றல் முறையில்
பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஆனால், செயல்வழிக்கற்றல் முறையில் பாடம் நடத்திட ஆங்கில
வழியில் கற்றல் அட்டைகள் , லேடர்கள் , குழு அட்டைகள் இன்னும் கொடுக்கப்படவில்லை. எம்முறையில்
பாடம் கற்பிப்பது , என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில்
ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ்வழிக்கல்வி கூடங்களில் அம்மாணவர்களுடன்
சேர்ந்தே அமர்ந்து பாடம் கற்கும் சூழல் நிலவுகிறது. ஆங்கில வழிக் கல்வி என்று பெயர்
பலகை மட்டும் இருந்து எல்லாம் செயல்பாடுகளும் தமிழ் வழியில் நடைப்பெற்றால், இத்திட்டம்
தொடர்ந்து நிலைக்குமா ? அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். தனியார் பள்ளிக்களுக்கு ஈடாக
இதனை நடைமுறைப்படுத்த குறைகளை களைந்து , முதல்வர் கொண்டு வந்த இத்திட்டம் வெற்றிப்
பெற முனைப்புடன் செயல்பட வேண்டும். அதற்கான ஆயுத்த வேலையாக அதில் உள்ள குறைகளை உடனடியாக நீக்கி , தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளுக்கு
இணையாக செயல்திட்டங்களை தீட்ட வேண்டும். அப்போது தான் வரும் கல்வியாண்டில் பெற்றோர்கள்
தனியார் ஆங்கில வழிக்கல்வி கூடங்களுக்கு டாட்டா சொல்ல முடியும். இக்குறைப்பாடுகளுக்காக
ஆங்கில வழிக்கல்வியை அரசு பள்ளிகளில் புறக்கணிப்பதா? ஆங்கில வழிக்கல்வி அரசு பள்ளிகளில்
சரியான முடிவா?
கட்டாய இலவசக்கல்வி சட்டம் அனுமதிக்கும் தனியார்
பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு பல பள்ளிகளில் அமல்படுத்தாத நிலையில் , ஆங்கில வழிக்கல்வி
பயில தங்கள் குழுந்தைகளுக்கு வாய்ப்பு இல்லையே என ஏங்கிக் கொண்டு இருந்த , தமிழக பெற்றோர்களின்
நாடித்துடிப்பை தமிழக அரசு சரியாக புரிந்து வைத்ததனால் , அரசு பள்ளிகளிலும் ஆங்கில
வழிக் கல்வி அறிவிப்பை வெளியிட்டுள்ளது சரியானதாகத் தான் தெரிகிறது.
2012 -2013 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 36.5
% மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் குறைந்துள்ளது. ஆனால்,. தனியார் பள்ளிகளில் மாணவர்
சேர்க்கை 45% அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த ஆங்கில வழிக்
கல்வி சரியான மாற்று ஏற்பாடாகத் தான் தெரிகிறது. இந்த கல்வியாண்டில் மூடும் முடிவில்
இருந்த சில மாநகராட்சிப் பள்ளிகள் ஆங்கில வழிக்கற்பித்தல் வகுப்புகள் தொடங்கியதால்
உயிர் பெற்றிருப்பதை கண்கூடக் காண முடிகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
கூடியுள்ளது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. நான்கு சுவர்களுக்கு
மத்தியில் நடைப்பெறும் நர்சரிப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிப்பதாக இந்த அறிவிப்பு உள்ளது
என்கின்றனர் பொதுமக்கள்.
பொறியியல்
,மருத்துவம், நுண்ணுயிரி தொழில் நுட்பவியல், கணினி தொழில் நுட்பம் போன்ற உயர்கல்விகள்
ஆங்கில வழி மூலம் மட்டுமே படிக்க முடியும். ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்கே சமூகத்தில்
முன்னுரிமை அளிக்கப் படுகிறது. ஆங்கிலத்தில் பேசும் குழந்தைகளையே இச்சமூகம் பாராட்டுகிறது.
ஏதாவது விழாக்களுக்கு செல்லும் போது , ஆங்கிலத்தில் உரையாற்றுபவரே (அரை குறையாக பேசினாலும்
)சிறந்த முறையில் கவனிக்கப்படுகிறார் மற்றும் மதிக்கப்படுகிறார். உறவினர்கள் மத்தியிலும்
மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத்தருவதாகவும் , உயர்த்துவதாகவும் ஆங்கிலம் உள்ளது . ஒட்டு மொத்தப் பெற்றோர்களும் ஆங்கிலவழிக்கல்வியை
எதிர்நோக்கியிருந்த தருணத்தில் , அரசின் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான அறிவிப்பு
சமூக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவே உள்ளது.
சமூக
ஆர்வலர்கள் , கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் இப்பார்வையிலிருந்து சற்று விலகி நிற்கிறார்கள்.
இதுவரை அமைக்கப்பட்ட அனைத்து கல்விக்குழுக்களும் (கோத்தாரி கமிட்டி, ஏ.எல் முதலியார்
கமிட்டி, வி.சி. குழந்தைச்சாமி கமிட்டி போன்ற பல) தாய் மொழி வழிக்கல்வியின் அவசியத்தை
வலியுறுத்துகின்றன. கட்டாய இலவச கல்விச்சட்டமும் விதி 29ல் 2(எஃப்) தாய்வழிக்கல்விக்கு ஆதரவாக உள்ளது. ஏனெனில் தாய்
வழிக்கல்வி மட்டுமே மாணவனின் புரிதல் தன்மையை அதிகரித்து கற்றல் அடைவை முழுமையாக பூர்த்தி
செய்ய உதவுவதுடன் அவனின் தனித்தன்மையை வெளிப்படுத்த காரணமாகிறது. தாய்மொழி வழிச் சிந்தனை
அவனுக்கு வளமான வாழ்வை தொழிலை ஏற்படுத்திக்கொடுக்கும் . முன்னோறிய நாடுகளான ஜப்பான்,
சீனா போன்றவை தாய்மொழிக் கல்வியை பின்பற்றுபவை. ஆங்கிலம் என்ற மொழியை பயன்பாட்டுத்
தேவைக்காக கற்கலாம். மொழிவழிக் கல்வி என்பதை அனைத்து கல்வியாளர்களும் ஒட்டுமொத்தமாக
எதிர்க்கின்றனர்.
தாய்
மொழி வழிக்கல்வி ஒரு புறம் இருக்கட்டும், உலகமையமாக்கலில் எதிர்நீச்சல் போடவும் , வருங்காலத்தில்
ஏற்பட உள்ள போட்டிகளை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் ஆங்கிலம் அவசியமானதாகி விட்டதால்,
ஆங்கிலவழிக்கல்வியை எதிர்ப்பது நியாயமில்லை. என்றாலும் நம் குழந்தைகளுக்கு தமிழ் மொழி
கல்வியில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் பயின்ற டி.இ.டி ( டிப்ளமோ இன் டீச்சர் எஜீகேஷன்
) தமிழ் வழியில் கற்றுத்தரப்பட்டது. தமிழ்வழியில் பயின்ற மொழிப்புலமை இல்லாத அவர்களால்
எப்படி ஆங்கிலவழியில் கற்றுத்தர முடியும்? அவர்களிடம் பெற்றோர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கும்
ஆங்கில மொழிப்புலமை இருக்குமா ? இப்படி இருக்க அரசின் இந்த திட்டம் வெற்றிப்பெறுமா?
நாளடைவில் பெற்றோர்கள் மொழிப்புலமையை வெளிப்படுத்தும், மொழிப்புரிதலை ஏற்படுத்தும்
தனியார் பள்ளிகளையே நாடிச்செல்லும் சூழல் உருவாகுமல்லவா?! .
இக்குறையை
போக்க அரசு ஒன்று முதல் பன்னிரெண்டு வரை ஆங்கில வழிக்கல்விமுறையில் பயின்று
டி.இ.டி முடித்தவர்களை தற்போது தொடங்கும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் நியமிக்க
வேண்டும். தற்போது பணியில் அவ்வாறான ஆசிரியர்கள் இருப்பின் அவர்களை
ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளில் ஆசிரியர்களாக, தலைமையாசிரியராக அவர்களை நியமிக்கலாம்.
தனியார் பள்ளிக்களுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மூலம் தற்போது
தொடங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி அரசு பள்ளிகளில் அழிந்து போகாமல்
பாதுக்காக்கலாம்.
அசர்
அறிக்கை தெரிவிக்கும், மோசமான நிலையான ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன் 5ம் வகுப்பு
மணவர்களில் தமிழ்நாட்டில் 19 சதவீதம் என்ற நிலை மாறி அரசு பள்ளிகளில் வாசிப்பு
திறனை மேம்படுத்துதல் மூலம், அரசு பள்ளிகள் பெற்றோரின் நம்பிக்கையை பெறலாம்.
அதுமட்டுமல்ல கற்பித்தல் முறையில் முழுமையான மாற்றத்தை கொண்டு வருதல் வேண்டும்..
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயல்வழிக்கற்றல் முறையை தீவிரமாக நடை முறைப்படுத்துதல்
மூலமாக அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி பொது மக்களிடம் நற்பெயர் சம்பாதிப்பதன்
மூலம் அரசு நடத்தும் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளில் எதிர்காலத்தில் கூட்டம்
நிரம்பலாம்.
பல
இலட்சக்கனக்கான கிராமப்புற மாணவர்களுக்கும், பொருளாதர சூழலில் பின்தங்கிய மாணவர்களுக்கும்
ஏக்கங்களை உருவாக்கியிருந்த ஆங்கில வழிக்கல்வி எல்லா காலங்களிலும் சிறப்பாக
நடைப்பெறவும் கிடைக்கவும் கல்வியாளர்கள்,
சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் நம் ஆலோசனைகளை அரசுக்கு தெரிவிப்போம். காலத்தின்
கட்டாயமாம் ஆங்கிலவழிக் கல்விக்கு ஆதரவு தெரிவிப்போம்.
( இந்த கட்டுரை ஹுமன் ரைட்ஸ் டூடே யில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்துள்ளது)