Thursday, February 24, 2011

எதுவுமே வேஸ்ட் இல்லை....!

      நேற்று காலை பள்ளியிலிருந்து சுமார் எண்பது ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலாவாக மதுரை பாலமேடு அருகிலுள்ள சக்கரையாலைக்கு சென்றோம். மாணவர்கள் படிப்பு கவலையை மறந்து பிற நாட்களைவிட உற்சாகமாக வந்தனர். முகத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் போட்டியாக வானமும் தன் அழகை வெயில் மறைத்து,மேகங்கள் சூழ ,இதமான காற்றைத் தந்தது, மாணவர்களை விட ஓட்டுனர் உற்சாகமடைந்து நிதானமாக இயற்கை காற்றை சுவாசித்து, தூசிகள் நிறைந்த நகரை விட்டு இயற்கையைத் தேடி பறந்தோம்.
        பசுமைகள் தார் சாலையின் இருபுறமும் எங்கள் கண்களுக்கு விருந்தாக , எங்களின் மகிழ்ச்சி மேகங்களுக்கும் ஓட்டிக் கொள்ளவே அவைகளும் எங்களுடன் இருட்டிக் கொண்டு வந்தன. குற்றாலச் சாரலை உணர்ந்தோம். குளிர்ந்த காற்றுடன் சக்கரையாலையை அடைந்தோம். வரிசையாக எம் மாணவர்கள் கரும்பு எப்படி சக்கரையாக மாற்றமடைகிறது என்பதை பார்த்து வியந்தனர்.
   

      இதோ மேலே உள்ளப்படம் லாரிகளிலிருந்து டன் கணக்கில் கரும்புகள் கிரேன் மூலம் சாறு பிழிவதற்கு அனுப்பப்படுகின்றன.ஒரு நாளுக்கு 2400 டன் கரும்புகள் அரைக்கப்படுகின்றன. இந்த கிரேன் அப்படியே லாரியிலுள்ள கரும்பைத் தூக்கி,  அரைக்க அனுப்புகிறது. அதனால் லாரிகள் வரிசையில் வெகு நேரம் நிற்பது குறைகிறது .
     இது மில் ஹவுஸ் எனப்படும் அரைக்கும் பகுதி. கரும்பு சக்கையாக பிழிந்து சாறு தனியாகவும் சக்கைத் தனியாகவும் அனுப்பப்படுகிறது. இச்சக்கைகள் மீண்டும் மீண்டும் அரைக்கப்படுகின்றன.

   பாருங்கள் மேலேயுள்ளப்படத்தில் எப்படி கரும்பு சக்கையாகப் பிழிந்து எடுக்கப்படுகிறது. நன்கு சாறுப் பிழியப்பட்ட இச்சக்கைகள் , காகித ஆலைகளுக்கு காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சக்கரையாலையின் மிசின்களை இயக்க பாயிலர் பயன்படுகிறது. இந்த ஆலைக்குத் தேவையான மின்சாரம் தாயாரிக்கவும் இந்த பாய்லர் பயன்படுகிறது. பாயிலர்கள் மூலம் ஸ்டீரீம் பாய்ச்சப்பட்டு , ஜெனிரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ,இம் மிசின்களை இயக்குகிறார்கள். இவ்வாறு பிழியப்படும் கரும்புச்சாறு பாகு ஆகும் வரை கொள்கலன்களில் வெவ்வேறு வெப்ப நிலைகளில் கொதிக்கவைக்கப்படுகின்றன.

    இவ்வாறு பிழிந்து எடுக்கப்படும் சாற்றிலுள்ள மாசுக்கள் நீக்க ஒரு கட்டத்தில் இச்சாறுடன் சுண்ணாம்புக்கல்லும் சல்பர் வாயுவும் செலுத்தப்படுகிறது. அதனால் இச்சாற்றிலுள்ள அசுத்தங்கள் வடிக்கட்டப்பட்டு சுத்தமான சாறு மட்டும் அதற்கு அடுத்துள்ள கொள்கலன்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. மேலேயுள்ளப்படம் கொதித்து வரும் சாற்றுடன் சுண்ணாம்பும் , சல்பரும் சேரும் இடமாகும்.

    சுண்ணாம்பு நீர் இந்த கலைன் வழியாக பைப்புகளில் கலக்கப்பட்டு , சல்பர் வாயுவுடன் , கொதிக்கும் சாற்றில் கலக்கப்பட்டு , தூசுக்கள் வடிக்கட்டுதல் முறையில் நீக்கப்படுகின்றன. அடுத்த நிலையில் சாறு கொஞ்சம் பாகு நிலைக்கு தள்ளப்பட்டு , அதிலுள்ள இனிப்பு முழுவதும் பாகு தன்மையாடையும் வரை காய்ச்சப்படுகிறது. அதற்கு என பிரசர் அளவுகள் குறிக்கப்படுகின்றன. கண்ணாடியில் வைத்து அதன் தன்மையை சரிப்பார்க்கின்றனர். 



சல்பர் கலந்த பின் பாகு தன்மையுடன் வெளிவரும் கரும்பு ச்சாறு...

   பின்பு இச்சாறு மிகப்பெரிய சுழலும் டிரம்மில் செலுத்தப்படுகிறது. அந்த டிரம்மில் மிகச்சிறிய துளைகள் உள்ளன. அவைகள் மூலம் சாறு பாயும் போது சக்கைகள் , கல், மண் மற்றும் பிற கழிவுகள் டிரம்மின் மேற்பரப்பில் ஓட்டிக் கொள்கின்றன. மேலேயுள்ள படத்தில் அந்த கழிவுகள் ஓட்டியுள்ளதைப்பார்க்கலாம்.அவைகள் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. அப்பகுதி விவசாயிகள் இதனை கிலோ நூறுவுக்கு வாங்கி இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர்.




   மேலேயுள்ள படத்தில் பாகு சக்கரை தன்மைக்கு பின் ,மொலாஸ் எனப்படும் நிலைக்கு மாற்றப்படும் போது உள்ள தன்மை சோதிக்கப்படுகிறது. இந்த மொலாஸ் சாராயத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு நல்ல காசுக்கு விற்க்கப்படுகின்றன. சக்கரையாலையில் எதுவுமே வேஸ்ட் இல்லை . இதற்கு என தனி மின்சாரம் தேவையில்லை. அனைத்தும் பாய்லர் மூலம் ஜெனரேட்டரை இயங்கச் செய்வதன் மூலம் பெறப்படுகிறது. 




 பாகு சீனியாக மாற்றப்பட்டு அரைக்கப்படு வருகிறது. அவைகள் தரம் பிரிக்கப்பட்டு , மிகவும் பொடியாக உள்ள சீனி மட்டும் மூடை மூடையாக கிலோ கணக்கில் சாக்கில் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கீழேயுள்ள படம் தான் சீனி யாகி வரும் கடைசிக் கலன் ஆகும் 


    அங்கிருந்து விடைப்பெற்று , பாலமேட்டிற்கு அருகிலுள்ள சாத்தியார் அணைக்கட்டிற்கு மாணவர்கள் ஆனந்தமாக பயனித்தோம். இயற்கை எங்களுக்கு மேலும் ஆனந்தம் அளிக்கும் விதமாக மழையைப் பொழிந்தது. பேருந்தில் இருந்த வண்ணம் மாணவர்கள் மழையினை ரசித்தனர். பத்து நிமிடம் கணத்த மழை . பூமி குளிர்ந்து எங்களுக்கு வழிவிட்டது. மழையினை ரசித்த மாணவர்கள் சாலையின் இருபுறம் உள்ள மலையையும் ரசித்து வந்தனர்.” டேய் எங்கடா மழை.. பெய்யுது.. ” “டேய் , நான் அந்த மழையை சொல்லலடா.. இந்த மலையை சொன்னேண்டா... என கமண்டு அடிந்த்து வந்தனர்.

வரிசையாக அமர்ந்து சாப்பிட்டோம். அணைக்கட்டையும் , அதன் சுற்றுப்புறம் , இயற்கையை ரசித்தோம்.அணைக்கட்டின் அருகில் சென்று இயற்கை அரண்களாக மலைகள் அமைந்து எப்படி நீர் தேக்கப்படுகிறது என்பதை ஆசிரியயை விளக்க மாணவர்கள் வியப்போடு பார்த்தனர். நான் அவர்களுடம் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.


பயணம் இனிமையாக முடிந்தது. மாலை சரியாக மூன்று நாற்பது பள்ளியை அடைந்தோம். தங்களின் அனுபவத்தை இளம் மாணவர்களிடம் என்னைப்போன்றே பகிர்ந்துக் கொண்டனர்.

Tuesday, February 22, 2011

வீதியில் திரியும் சிறுவன் .. !

   இன்று என் நண்பர் கல்யாண் ஜி பள்ளி முடிந்து ஊமச்சிக் குளம் அருகில் உள்ள டீக்கடையில் தன் நண்பருடன் தேநீர் அருந்துவதற்கு பைக்கை நிறுத்தி இருக்கிறார்.  அவர்கள் வரும் பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றிப் பெறுவது சம்பந்தமாக சூடாக விவாதம் செய்தனர். மாணவர்கள் அன்றாடம் பாடங்களை வீட்டில் தினம் எழுதிப் பார்த்தால் போதும் , அதுவே அவர்களை நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற செய்து விடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது , பள்ளி வயது சிறுவன் ஒருவன் , தலையில் தண்ணீர் குடமும், இடுப்பில் ஒரு குடமும் வைத்து தண்ணீர் எடுத்துச் சென்றுள்ளான்.அவனுடன் மற்றொரு சிறுவனும் சைக்கிளில் தண்ணீர் எடுத்து சென்றுள்ளான். அவர் இவர்கள் நம் பள்ளி மாணவர்களாக தெரிய வில்லையே என யோசிக்கும் போதே சைக்கிளில் உள்ள தண்ணீர் குடம் நழுவுவதுப்போல இருக்க , ”டேய் , தம்பி தண்ணீக் குடம் விழப்போகுதுன்னு ...”சொல்லிக் கொண்டே அவரின் நண்பர் சைக்கிளை நோக்கி ஓட ... இருவரும் உதவிச் செய்துள்ளனர்.


    ”என்னடா...இன்னிக்கு பள்ளிக் கூடம் லீவா... “ என கல்யான் ஜி வழக்கம் போல தன் உரையாடலை ஆரம்பித்தார்.

“அண்ணே . நாங்க மதுரையில டவுன்ல படிச்சோம்.. “

“என்ன படிச்சியா .. அப்ப ...இப்ப படிக்கலைய்யா..பார்த்த ஃபப்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்கிற பையன் மாதிரி தெரியுற”

“ஆமாண்ணே , எங்க கிராமத்தில.. நான் தான் ஐந்தாவது படிக்கும் போது ஃப்பஸ்ட் மார்க் வாங்குவேன்.. எங்க ஊரில மதுரையில .....(பள்ளியின் பெயர்) பள்ளிக்கூடத்திலிருந்து வந்தாங்க .. பஸ் இலவசமா விடுறோம் .. உங்க பிள்ளைய சேருங்க .. அங்கேயே பன்னிரண்டு வரை இருக்குன்னு எங்க அய்யாவும் சேர்த்து விட்டாங்க....”

“அப்புறம் என்னடா.. படிக்க வேண்டியது தானே.. ஏன் படிக்கலை..?”

“அட போங்கண்ணே டவுனுக்காரப்பயபுள்ளைங்க மோசமானவன்னு இப்பத்தானே தெரியுது..?” என தலையில் குடம் வைத்தவன் பேசினான்.

“டேய் , நானும் மதுரை டவுனுத்தான்.. பார்த்துப் பேசு .. அப்படி என்னடா நடந்துச்சு....?”

“வண்டிய ஒரு மாசம் ஓசியா விட்டானுங்க.. ”
அடுத்தவன் மறித்து “டி.சி. வாங்கி எங்க கிராமத்தில இருந்து ஐம்பதுக்கும் மேல சேர்ந்தாங்க.. அப்புறம் பஸ் பீஸ் கட்டினாத்தான் வேனில எத்துவாங்கன்னு சொல்லிப்புட்டாங்க..”

“அப்ப எப்ப இருந்துடா பள்ளிக் கூடம் போகல..?.”

“இரண்டு மாசம் மட்டும் தான் நான் ஆறாவது போனேன்.... எட்டாவது மாசம் இருந்து என்ன அந்த பள்ளிக் கூடத்தில இருந்து யாரும் கூப்பிடவும் வரலை.. எங்க அப்பா டி.சி கேட்டாலும் தர மாட்டீங்கிறாங்க... “

“ஏண்டா .. நீ பள்ளிக் கூடம் போகலைன்னு யாரும் கணக்கு எடுக்க வரலைய்யா...? “

” கணக்கா... நீங்க என்ன வாத்தியாரா...?”

“ஏன்டா .. வாத்தியாருன்னா பிடிக்காதா...?”

“சார் எங்கப்பாவே கஷ்டப்பட்டு கடன வாங்கி ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த ஸ்கூல்ல சேர்த்துச்சு... ஆனா .. பஸ் பீஸ் கட்ட முடியாததால என்னால படிக்க முடியல .. டி.சிக்கு நாலு நாள் அலைஞ்சு .. வேலைக்கு போகாதது தான் மிச்சம்.. அதனால வேறக் கடன் .. அதான் நாங்க வீடு வீ டா தண்ணிப்பிடிச்சுத் தாறோம்...அப்பாவுக்கு உதவியா இருக்கோம்”

”டேய் .. அனைவருக்கும் கல்வி திட்டம் இருக்குடா.... அதுல கணக்கு எடுப்பாங்க.. நீ படிக்கலைன்னு சொன்னா.. உனக்கு பள்ளியில சேர்க்க ஏற்பாடுச் செய்வாங்க.. உனக்கு டி.சி கொடுத்து படிக்க வைப்பாங்க.. “ என அட்ரஸ் கொடுத்து , அட்வைஸ் கொடுத்து வந்துள்ளார்.


    என்னிடம் இவ்விசயத்தை உடனே போன் செய்து தெரிவித்தார். மேலும் உங்கள் பிளாக்கில் இச்செய்தியை போடவும் . தமிழக ஆசிரியர்கள் உங்கள் பிளாக் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி திட்டமா ..? அல்வா திட்டமா..? என எல்லாருக்கும் தெரியட்டும் என காட்டமாக பேசினார்.
 அவர் மொபலில் அம்மாணவர்களைப் புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அதனை என் ஈ.மெயிலுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

     ஊமச்சிக் குளம் மதுரை பெரியாரில் இருந்து குறைந்தது இருபது கிலோமீட்டர் இருக்கும். அதற்கு அருகில் உள்ள கிராமத்திற்கு , பெரியார் நிலையம் அருகில் உள்ள வீரமான பெயர் கொண்ட பள்ளியில் இருந்து மாணவர் சேர்க்கைக்கு வேன் மூலம் ஆசிரியர்கள் சென்று மாணவர்களைச் சேர்த்துள்ளனர்.
         மாணவர்கள் நல்லக் கல்விப் பெற வேண்டும் என்று கிராமப்புற மாணவனும் டவுன் மாணவர்களைப்போன்று திறன் பெற வேண்டும் என்று கிராமப் புறத்தில் உள்ள குழந்தைகளை சேர்க்க செல்லும் ஆசிரியர்களின் இப்பண்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அதே சமயம் , இவர்கள் ஏரியா சென்சஸ் பகுதியை விட்டு , ஏன் முப்பது கிலோ மீட்டர் தள்ளி உள்ள மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். மாணவர் சேர்க்கை விசயத்தில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சிப் பள்ளிகளைப்போல் அல்லாமல் , மே மாதம் முழுவதும் அக்கினி நட்சத்திர வெயிலிலும் இந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக நம் அரசியல்வாதிகள் கூடத் தோற்கும் அளவிற்கு பொய்களை (மன்னிக்கவும்) வாக்குறுதிகளை அள்ளி வீசி , எங்கள் பள்ளித்தான் உலக்கத்திலேயே சிறந்தது என சான்று கொடுத்து , அமெரிக்க அதிபர் ஓபாம இங்கு தான் படிக்க விரும்புவதாக சான்று கொடுத்துள்ளார்.இ.மெயில் அனுப்பியுள்ளார் என்றெல்லாம் கூட சொல்லி சேர்ப்பதற்கான காரணத்தை ஆராய்ந்தோமென்றால் இதன் பின்புலம் புரியும்.


      அரசுப் பள்ளிகளைப் போல டிரான்ஸ்பரோ, பிற பணி மூலம் மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களால் செல்ல முடியாது. அவர்கள் நாற்பது மாணவர் சேர்த்தால் தான் , அடுத்த ஆண்டு அவர்கள் அதேப் பள்ளியில் பணித் தொடர முடியும். மேலும் ,அப்படி இவர்கள் மாணவர்கள் சேர்க்காத போது அல்லது சேராத போது , வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் செல்லலாம். ஆனால், அங்கு நிலமை இதைவிட மோசம் என்றால் இருக்கும் இடத்தைவிட மோசமாகிவிடும். புதிய சூழல் , புதிய நிர்வாகம் ஒத்து போகவில்லை என்றால், பணி நீக்கம் கூட செய்ய நேரலாம். மதுரையில் பல பள்ளிகளில் நிர்வாக நடவடிக்கையால் பலர் பதவி இழந்த கதைகள் ஏராளம். ஆகவே , பயந்து , எப்படியாவது மாணவர்களை சேர்க்க நிர்வாகமும் ,தனியார் பள்ளி ஆசிரியர்களும் போட்டிபோடுவார்கள். மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் உண்டு.


     அதுதான் பணி நிரவல் மூலம் அவர்களுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கிறதே...? பின்பு ஏன் இந்த மோதல் ,,, கிராமம் கிராமமாக டவுனில் இருந்து படையேடுப்பு... ? இதற்கும் பின்னனி உண்டு. ஒவ்வொரு பள்ளிக்கும் ஸ்டாப் பிக்சேசன் எட்டாவது மாதம் இறுதியில் உள்ள மாணவர்களின் வருகையைக் கொண்டு கணக்கிடுவது உண்டு. இக் கணக்கெடுப்பிற்கு உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள் கொண்ட குழுவை , மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி அமைத்து , அவர்கள் பார்வையிட செல்லும் நாளில் உள்ள மாணவர்கள் வருகையின் அடிப்படையில், மூன்று பார்வைகளின் சாராசரியின் அடிப்படையில் , ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவார்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அது தான் அந்த பள்ளி நல்ல முறையில் நடைப்பெறுவதற்கு சாட்சி.

       அப்ப நல்ல முறையில் நடைப்பெறுவதென்றால்... நல்லா சொல்லிக் கொடுத்தால் தானே பிள்ளைகள் சேரும். ஆமாம்... அப்புறம் ஏன் மாணவர்களைத் தேடி அலைகின்றனர்? ஆசிரியர் நிர்ணயம் சரியாக இருக்கும் பட்சத்தில் , ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பணியிடத்தில் ,புதிய ஆசிரியர்களை பணி நியமணம் செய்யலாம். இது தமிழக முதல்வருக்கே இல்லாத அதிகாரம். அவர் நினைத்தால் கூட யாருக்கும் தன் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி
எவருக்கும் அரசு ஊதிய வேலைக் கொடுக்க இயலாது. நிர்வாகிகள் இந்த அதிகாரத்தை இழக்க விரும்புவதில்லை. இன்று எதுவும் ஓசியில் கிடைப்பதில்லை என்பது தனிப்பட்டக் கதை. இப்பணியிடத்தின் விலையை நான் நாளிதழ்கள் வாயிலாக தெரிந்துக் கொண்டதுப்போல நீங்களும் தெரிந்துக் கொள்ளலாம். தினமலர் இப்படிப்பட்ட புள்ளி விபரங்களைக் கொடுக்கும் என்பதால் கடந்த மே மாத இதழை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் இப்பணியிடத்தின் மார்க்கெட் விலைத் தெரிய வரும். போட்டிக்கான காரணமும் புரிய வரும்.

    அது சரி இரண்டு மாசம் இலவசம் அப்புறம் ஏன் ... வண்டிக்கு காசு... ? அட எட்டாவது மாதம் முடிந்த பின் தான் பிள்ளைகள் தேவையில்லை. யாரும் எண்ண வரமாட்டார்கள் . ஆசிரியர் பணி நிர்ணயம் முடிந்தபின் மாணவன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? இது தான் உண்மை நிலவரம்.


       தனியார் பள்ளி நிர்வாகம் பற்றி நமக்கு என்னக் கவலை.? அந்த பள்ளி மாணவர்கள் தெருவில் பள்ளி செல்லாமல் அலையும் போது ,அம்மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டியக் கடமை யாருக்கு இருக்கு...? பெற்றோருக்கா...? அல்லது வேறு யாருக்குமா?

அது தான் பெற்றோர்கள் தங்கள் வறுமையையும் மீறி படிக்க வைக்க , கடனைப் பெற்று சேர்த்துள்ளார்கள். நிலமை மோசமாகவே , டி.சி. கேட்டு அலைந்துள்ளார்கள். பின்பு ஓய்ந்து தன் மகனின் விதியை நொந்து , பள்ளிக்கு செல்லாமல், வீட்டு வேலைப் பார்க்க செய்துள்ளார்கள். ஆகவே, பெற்றோரை குறைச் சொல்லக்கூடாது. பின்பு?


    அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் கோடிக் கணக்கில் பணம் ஓதுக்கப்பட்டு , ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எஸ்.எஸ்.ஏ.க்கு தனி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அவருக்கு உதவியாக ஏ.டி.பி.சி. அவர்களுக்கு துணையாக ஒவ்வொரு காம்பனட்டாக பார்க்க ஆசிரியப் பயிற்றுநர்கள், அவர்களுக்கு துணையாக அலுவல உதவியாளர்கள், மற்றும் இதன் கட்டுப்பாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள சரகங்களுக்கு மேற்பார்வையாளர். அவர்களுக்கு த் துணையாக அதிக பட்சமாக ஐந்து பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியப் பயிற்றுநர் . இவர்களுக்கு உதவிகள் செய்யவும் , கண்காணிக்கவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் என அனைவரும் சேர்ந்து பள்ளி செல்லாக் குழந்தைகளே 2010ல் இருக்கக் கூடாது என்று சூழுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் , வீதி வீதியாக , கடைக் கடையாகத் தேடிப் பிடித்து , சர்வே எடுத்து அவர்களை பள்ளியில் சேர்க்க கடமைப்பட்டுள்ளார்கள். இவர்கள் எப்படி விடுப்பட்டுப்போனார்கள்?
  
      இவர்கள் விடுபடாமல் போக காரணம் சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பாரம் கொடுத்து நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர் பற்றிய புள்ளி விபரங்களை எஸ். எஸ். ஏ மூலம் கணக் கெடுக்கப்படுகிறது. அப்படி கொடுக்கப்பட்டப் புள்ளி விபரத்தில் அப்பள்ளி ஆசிரியர் தெரிவித்து இருந்தார் என்றால், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டு படிப்பின் அவசியத்தை ஆசிரியரும், ஆசிரியப் பயிற்றுநரும் எடுத்துச் சொல்லி , பள்ளியில் அவசியம் சேர்த்து இருப்பர்.

      அதே சமயம் அந்த பகுதியில் அதாவது ஒவ்வொரு ப்பள்ளிக்கும் ஒரு சென்சஸ் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது . அப்படிவத்தில் , ஏரியா சென்செஸ்சில் படிக்காத , அல்லது பள்ளிச் செல்லாக் குழந்தைகள் இருப்பின் , அப்பள்ளி தெரிவிக்க வேண்டும். அப்படி பார்க்கும் பட்சத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளியின் தலைமை யாசிரியர் தன் ஆசிரியர் மூலம் கணக்கெடுத்து தகவலை கொடுத்திருக்க வேண்டும் . அங்கேயும் கோட்டை விட்டாச்சு.

           இதனை மேற்பார்வை செய்யும் அத்தனை அதிகாரிகளில் யாராவது கேட்டு இருந்தால், உண்மை வெளி வந்து இருக்கும். மேல்மட்ட அதிகாரிகள்  மட்டும் கிராமம் தோறும் விசிட் அடித்து ஏ.பி.எல் செயல்பாடுகளை பார்த்தால் போதுமா..?படிக்க மாணவர்கள் வேண்டாமா..?அதிகாரிகளின் கனவு , பள்ளிச் செல்லக் குழந்தைகளே இல்லாமை என்ற நிலை ஏற்பட உண்மையான உழைப்பு வேண்டாமா..? அதற்கு அடிமட்டம் சரியாக செயல் பட வேண்டாமா..?  மதுரை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அதிகாரி பம்பரமாக சுழன்று வேலை வாங்கும் போது இப்படி டிமிக்கி என்றால்.. ? என ஆதங்கத்துடன் கல்யாண் ஜி கேட்பது புரிகிறது.

      தனியார் , அரசு பள்ளி என்ற பேதம் நீங்கி அனைத்து ஆசிரியர்களும் உண்மையான உழைப்பை க் காட்டி ., தமிழகத்தில் பள்ளி ச்செல்லாக் குழந்தைகளே இல்லா நிலை ஏற்பட ... அனைத்துப்பள்ளிகளையும் அரசுடமையாக்குவதே சிறந்த வழி.


    இன்று மதுரை பெரியார் அருகில் உள்ள பள்ளி சிவகங்கை மாவட்ட எல்லை வரை மாணவர்களை அலைத்து வருகிறது. திண்டுக்கல் எல்லை வரை முயற்சியில் உள்ளது. இந்த புரம் உசிலம்பட்டி வரை தொடலாம். அடுத்து தேனி எல்லைத் தான் . நிலமை இப்படி இருக்க .. அரசு இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்கள் தன்நிலை உணர்ந்து செயல்பட அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். 

Monday, February 21, 2011

மழை

    காசி தன் பைக்கை உதைத்தான். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் சித்தி பையனின் உடல் நலம் விசாரிக்க ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டுக் கிளம்பினான். இதுவரை இரவில் குளிரும் , பகலில் வெயிலும் வாட்டிய மதுரை இன்று ஒரு வித மப்புடன் மேகங்கள் சூழ மழைவருவதற்கான அறிகுறியைக் காட்டியது.

    நாம வெளியக் கிளம்பினாத்தான் இந்த மழை எழவு வரும்.. என முணங்கிக் கொண்டே பைக்கை உறுமிக் கிளம்பினான். காசி சிம்மக்கல் அருகில் உள்ள தனியார் செல்போன் விற்பனைக்கடையில் வேலைப்பார்த்து வந்தான். அவன் அங்கு வேலைக்கு வந்து ஒரு வருடமாகும். அதற்குள் அவனுடன் வேலைப்பார்த்த நான்கு நபர்கள் பணி மாறுதல் ஆகி , அதே நிறுவனத்தின் வெவ்வேறுக் கிளைகளுக்கு சென்று விட்டனர். தற்சமயம் இவனுடன் சேர்த்து நான்கு ஆண்களும் , ஆறு பெண்களும் பணிப்புரிகின்றனர். அவர்களுக்கு இப்போது மேனேஜராக ரதி வந்துள்ளாள். வெகுளி , எதற்கெடுத்தாலும் காசியையே அழைத்து வேலை வாங்குவாள்.  அங்கு இருக்கும் பாலா, வடிவேலு, குமார் என இவர்களை எந்த வேலையும் ஏவுவது இல்லை. வெளியில் சென்று கஷ்டமரை பார்க்க , பால்ட் பார்க்க காசியைத் தான் அனுப்புவாள். அவனும் எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டிக் கொண்டு பார்ப்பான். காசி அவர்களில் இளையவன் என்பதாலும் தற்போது தான் பணியில் சேர்ந்தவன் என்பாத்லும் அவனை வேலை வாங்குவது அவளுக்கு மிகவும் எளிது. மற்றவர்கள் அனைவரும் மூன்று வருடம் அனுபவம் வாய்ந்தவர்கள்.

      மழை பிடிக்க ஆரம்பித்தது. இரண்டு மாதங்களாக மழைப் பார்த்திராத பூமி ஆன்ந்தமாக அதன் துளிகளை உள் வாங்கிக் கொண்டது. சனியன் பிடிச்ச மழை வேலையைக் கெடுக்க வந்திருச்சு ... என திட்டிக் கொண்டே ,தன் செல்போன் நனையாதப்படி , தன் பைக்கில் வைத்திருந்த கேரி பேக் எடுத்து சுற்றி வைத்துக் கொண்டு , கோரிப்பாளையம் போஸ்டாப் அருகில் உள்ள வசந்தம் ஹோட்டல் முன் போடப்பட்டுள்ள பந்தலில் நின்றான். எதிரில் உள்ள சிக்னலை வேடிக்கைப்பார்க்க ஆரம்பித்தான். மழை வலுத்தது. மழைத்துளிகள் பெரிது பெரிதாக பெய்யத் துவங்கின.  சிக்னல் நான்கு பக்கமும் சிவப்பு விளக்கு எரிய , டிராபிக் போலீஸ் போஸ்ட் ஆபிஸ்க்குள் மழைக்கு ஒதுங்கினார்.

     பைக்குகள் பறந்தன. இருபுறமும் பஸ்கள்,கார்கள் , ஆட்டோ ரிக் ஷாக்கள் தண்ணீரை வாறி இறைத்துப் பறந்தன. வேகமாக வந்த பல்சர் சர் என்று பிரேக் அடித்து , வட்டமிட்டு ஹோட்டல் முன் நின்றது. இறங்கியவன் தொப் தொப் என  நனைந்திருந்தான். முகத்தை துடைத்தப்போது தான் தெரிந்தது. “டேய், அசோக் எப்படிடா இருக்கே?” எனக் காசி நலம் விசாரிக்கத் தொடங்கினான்.” சிம்மக்கல் வரை மழையில்லடா.... பாலம் தாண்டி வந்த பின்னாடித் தான் மழை சோ வெனக் கொட்டுது.. ”என புலம்பினான் அசோக்.” சரி வா உள்ளேப் போய் ஒரு காபி சாப்பிடுவேம் ”என காசி அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.

   ” டேய் ...நம்ம குமார் எப்படிடா இருக்கான்..எப்படிடா ஆபிஸ் இருக்கு ... “
“அத எண்டா கேட்கிற .. குமார் எப்பவும் போல ராஜியோட பேசிகிட்டேத் தான் இருப்பான்... ஆபிஸ் முடிஞ்சது இரண்டு பேரும் ...யூகோ பார்க் போய் லூட்டி அடிச்சுட்டு தான் வீட்டுக்கு ...”

“டேய் ... ஏண்டா தப்பாவே நினைக்கிற... அவளுக்கு திருமணமாகிட்டது..அவள போய் தப்பா ..”

“ நிறுத்து.. அவ புருசன் தான் சிவகாசியில வேலைப்பார்க்கிறான் ...வாரம் ஒரு முறைத்தான் வருவானாம்.. இவன் பைக்கில ஏத்திப்போறதும்,அவள வீட்டில விடுறதும்., காலையில சேர்ந்து வரதும்..”

“இங்க இருந்து நீ தப்பிச்சுப்போயிட்ட .. நீ இருக்கும் போது நம்மல சாப்பிட அனுப்பிட்டு கல்லால ஒக்காந்து கடலைப்போடலை... அப்புறமா... இரண்டு பேரும் .. தோளில தட்டி விளையாடலை... “

” வேலை பார்க்கிற இடத்தில. .. இதெல்லாம் சகஜம்டா.. காசி நீ அவங்க மாதிரி பேச பிடிக்கலைன்னா .. விட்டிடு...அத விட்டு இப்படி சொல்லாதடா..”

“போன வாரம் .... குமார் அந்த ஒல்லி பாச்சா சுஜாவை பைக்கில உட்கார வச்சு .. அவ வீட்டுக்கு கூட்டிப் போயிருக்கான்.. அன்னைக்கு நைட் புல்லா அவ வீட்டிலையே படுத்திருக்கான்.. விசயம் ராஜிக்கு தெரிய.. இருவரும் பேசுவது கிடையாது... அப்பாடா இவங்க சண்டை ஓய்ந்தது.....இனி நல்ல வேலைப் பார்ப்பாங்க சேல்ஸ் அதிகமாகும் என நினைச்சேன் ”

“நம்ப முடியலைடா.. அவளுக்கு தான் புருசன் டைவர்ஸ் ஆயிடுச்சுல்ல...”

“ ஆமா... இதக் கேளு .. மதியம் பார்த்தா.. ராஜி மடியில .படுத்து .. இந்த சுஜா ஒப்பாரி வச்சு அழுதுகிட்டு .. அக்கா இனி குமாரக் கூட்டிட்டுப்போகல... அப்படித் தேவைன்னா என் கிட்ட பெர்மிசன் வாங்கி கூட்டிகிட்டு போன்னு டீல் பண்ணிக் கிட்டாங்க... இப்ப இந்த சுஜா.. வடிவேலுகிட்ட லுக் விட்டு , அவனோட தினம் பைக்கில சுத்துது..”

“......ம்ம்ம்ம்”

“ அத விடக் கொடுமை.. ஒரு நாள் மதியம் ...மழை இதே மாதிரி திடீர்ன்னு பெய்ய... இருவரும் குடையை பிடித்து சாப்பாட்டுக்கு வடை வாங்கச் சென்றனர். இரண்டு நிமிடத்தில் மழை நிற்க.. இவர்கள் இருவர் மட்டும் குடையைப் பிடித்து நடந்து சென்றதை அதுவும் அதுவும் உரச நடந்து சென்றதை நம்ம புது மேனேஜர் அம்மா பார்த்து என்னிடம் சொல்லி சிரிக்குது தெரியுமா..”

இன்னும் சிக்னல் .. சிவப்பு விளக்கிலே இருக்க.மழை முன்பை விட வேகமாகப் பெய்யத் தொடங்கியது. இப்போது மழைக்கு வாகனங்கள் மிகவும் நிதானமாக சென்றன. இருப்பினும் சாலையில் ஓடும் மழைநீரை ,வாகனங்கள் மழைக்கு ஒதுங்கியுள்ள அனைவர் மீதும்தெறிக்கத் தான் செய்தது. 

Sunday, February 20, 2011

காசுக் கொடுத்து தனக்கு தானே பில்லி சூனியம் ....

    மதுரையில் தந்தையை மீறிக் காதல் செய்தப் பெண்ணை அப்பெண்ணின் தகப்பன் அடியாள்களை வைத்து ஊசி மூலம் கொலை செய்த சம்பவம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏற்கனவே திருமணமான ஒருவர் , காதலித்ததால்,அவனைப் பிரிய மனமின்றி, அவரின் மகனை தூண்டுத் தூண்டாக வெட்டிய சென்னைப்பெண்ணைப்பற்றி செய்திகளில் கேள்விப்பட்டுள்ளோம். தன் மனைவியின் காதல் வெளியில் தெரிய , அவளை காட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து புதைத்த கணவனைப் பற்றிய செய்தியைப் படித்து இருப்பீர்கள். கள்ள காதலால், நடக்கும் மிக மோசமான கொலைகளைப் பார்த்து இருப்பீர்கள். படித்து இருப்பீர்கள். இவைகளுக்கு எல்லாம் பின்னால் ஒரு மனநிலை பாதிப்பு அல்லது மனம் பித்து அடைந்து இக் கொலைகள் நடந்திருக்கலாம். அதுசரி இப்போது அதை யெல்லாம் ஏன் கூறுகிறேன் என்று நினைக்கிறீர்களா...?காரணம் இருக்கு என்னைப்போல நீங்களும் ஏமாந்து விடக்கூடாது என்று ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தத்தான்.

      தமிழ் திரையுலகின் முதன்மையான இயக்குநர் என்பதை மறந்து அல்லது தமிழர்கள் நாம் எதை எடுத்துப் போட்டாலும் பார்ப்பார்கள் என்ற தைரியத்தில் இப்படி ஒரு படம் எடுத்து விட்டார் போலும்.பலவீனமானவர்களுக்கு அல்ல என்ற அடித்தலைப்பிட்டு , தமிழர்களின் பலகீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ள கொளதம் ,”தமிழர்களை நாயே இனி திரில்லர் படம் கேட்பாய் என்பது போல ஒரு மோசமானப் படம்” எடுத்துள்ளார்.  இவரைத் தவிர யாரும் இப்படி எடுக்க முடியாது என்பதும் உண்மை.

      கதை என்னவென்றால், தாயை இழந்து, செக்ஸ் வெறிபிடித்து கார்ப்பரேட் கலவித்தனத்தில் ஈடுப்படும் தகப்பனால் வளர்க்கப்படும் மகனின் மனநிலைப்பாதிப்பு ,அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்லும் படம் .மனநிலைப்பாதிப்பை வன்மம் புகுத்தி, நடுநிசியில் நாய்கள் மத்தியில் கிளைமேக்ஸ் வைத்து கொடுக்கப்பட்ட கதைத் தான் இந்த நடுநிசி நாய்கள். திரில்லர் என்ற ரீதியில் என்ன சொல்ல வருகிறார் என்பதையே மறந்து , கடைசியில் ஒரு மருத்துவர் மூலம் மனநிலைப்பாதிப்பு இந்தியாவில் பெண் குழந்தைகளை இளமையிலே பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதால் தான் என்று சொல்லி , அதற்கு ஒரு டுவிஸ்ட் கொடுத்து முடிப்பது , ஆங்கிலப்பட ரேஞ்சுக்கு இவர் அடுத்து ஒரு பாகம் எடுப்பார் என்பதுபோல முடித்து இருப்பது அதைவிடக் கொடுமை சார்...

    கொளதம் படத்தில் செக்ஸ் எதிர்பார்க்கலாம்.. ரொமான்ஸ் எதிர்ப்பார்க்கலாம். காதல் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்தப்படத்தில் செக்ஸ் மட்டுமே எதிர்பார்க்கலாம் . அருகில் உள்ள பெண்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கும் போது எனக்கு அருவெறுப்பாக இருந்தது. எனக்கு எங்க அண்ணன் சாருநிவேதிதா இப்படத்தைப்பற்றி என்னச் சொல்லுவார்ன்னு ஒரு எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

      கொளதம் இப்படத்தின் மூலம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், இளம் வயதில் குழந்தைகள் பாலியல் வன்மத்திற்கு உட்படும் போது, அவர்கள் ஒரு சைக்கோ மனநிலைக்கு உட்பட்டு , கொலைகள் செய்ய நேரிடும் அல்லது தவறிய பாலியல் உறவுக்கு உட்பட நேரிடும்.   இப்படத்தில் வரும் ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தை தன் தந்தையால் பாலியல் வன்மைக்கு உட்பட்டு , மனநிலைப்பாதிப்புக்கு உள்ளாகி , தன்னை தத்து எடுத்து வளர்க்கும் தாயையே , தாயாக ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்கு ஆட்பட்டவனாக மாறி , தாயையே கற்பழிக்கும் அவலத்திற்கு ஆட்படுகிறான்.

       கதைக்கரு நன்றாகத் தான் எடுத்துள்ளார் .அதை திரில்லர் என்ற ரீதியில் எடுத்து , சொல்ல வந்தக் கருத்தை மறந்து ,  வன்மத்தை மட்டுமே காட்டி , ஏற்கனவே தழிழ் சினிமாக்களில் இருக்கும் அவலத்தையேக் காட்டி , ஏமாற்றி இருப்பது மன்னிக்க முடியாது . கொளதம் அடுத்தப்படம் தான் அவரைக் காப்பாற்றி , அவரைப் பழைய நிலைக்கு பார்க்க வைக்கும் என நம்புகிறேன். காசுக் கொடுத்து தனக்கு தானே பில்லி சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம். 

Friday, February 18, 2011

காந்தி -மாறுபட்டக் கண்ணோட்டம்.

    எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் சுமார் நூற்று ஐம்பது மாணவர்கள் சென்ற வாரம் காந்தி மியூசியம் மற்றும் இராஜாஜி பூங்காவிற்கு இன்பச் சுற்றுலா சென்றனர்.

எங்கள் பள்ளிப்பேருந்தில் எழு ஆசிரியர்கள் , இரு ஆயாக்கள் மாணவர்களுக்கு துணையாய் ஆனந்தமாய் உணவு கூடைகளுடன் பயணம் மேற்கொண்டனர். முதலில் காந்தி மியூசியம் அடைந்தனர்.

   காந்தியின் அகிம்சை , நாம் சுதந்திரம் பெற்ற வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் அதற்கான தமிழ் விளக்கங்களை ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல குழந்தைகள் கேட்டு மகிழ்ந்தனர். மாணவர்கள் சுதந்திர உணர்வுகள் பெற்று , உணர்ச்சியுடன் காந்தியின் இரத்தக் கறை படிந்த ஆடைகளைப் பார்த்து துடித்துப் போனார்கள். அவர் அணிந்த செருப்புக்களையும் பார்த்து அவரின் எளிமையை உணர்ந்தனர்.  




   காந்தியின் நல்ல விசயங்களை நாம் குழந்தைகளுக்கு காட்டினாலும் , வளர்ந்த பின் மாகத்மா பற்றிய தவறானக் கருத்துக்கள் அல்லது எதிர்மறையான கருத்துக்களை முன் வைக்கக் கற்றுக் கொள்கிறார்கள். இதை நான் மதுரையில் மிலாடி நபி அன்று புத்தக அறிமுகம் பற்றிய மதுரை பிளாக்கர்கள் சந்திப்பில் காந்தியைப் பற்றி படித்த விபரங்களை அனிமல் ஜெயா முன் வைக்கும் போது காந்தியின் எதிர்மறையானத் தோற்றங்கள் பற்றி முன் வைத்தார்.இதைப் பார்க்கும் போது , வயதிற்கு ஏற்ப பார்வைகள் மாறுபடுகிறது என உணர்ந்தேன்.
     காந்தி தன் மூத்த மகனை அவரின் துணைவியாருடன் வாழ விட வில்லை. அவர் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். காந்தி அவ்வளவு கொடுமையானவர் என்றும் . நீண்ட காலத்திற்கு பின் ஒரு இரயில்வே நிலையத்தில் அவரின் மகன் கஸ்தூரி பாய் மற்றும் காந்தியை சந்தித்த போது, அவரின் தாய்க்கு மட்டும் வணக்கம் செலுத்தி, பழம் தந்ததாகவும், அதை அவர் மட்டுமே உண்ண வலியுறுத்தியாதகாவும், காந்தியுடன் பேச மறுத்ததாகவும் சொன்னார்.ஸ்ரீதர் குளிக்கும் கல்லை எடுத்துவர நள்ளிரவில் பெண்ணை அனுப்பி நாற்பது மைல் கடந்து கல்லை எடுத்துவரச் செய்த கதையை எடுத்துரைத்தார். அது ஒரு காலில் அழுக்குத் தேய்க்கப்பயன் படுத்திய கல் அது கிடைக்காதா ?எனவும்ஆதங்கப்பட்டுக் கொண்டார். பின் அச்சம்பவம் பற்றி காந்தி வருத்தம் தெரிவித்ததாக ஜெயா சொன்னார். நிஜ வாழ்வில் காந்தி கடுமையானவராக காணப்பட்டார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. கா. பா அம்போத்கார் படத்தை வைத்து , காந்தி அம்பேத்தாகாரின் வர்ணத்தைக் கேட்டதாகவும், இத்தைனை நாள் இவர் ராவ் வகையறா என்று நினைத்தேன் என்ற வசனம் வருவதாகவும். அம்பேத்தாரிடம் காந்தி வர்ணாசிரமத்தை வலியுறுத்தியதாகவும் சொன்னார். அதனாலே இப்படம் திரையிடப்படாமல் ஒதுக்கப்படுகிறது. நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் வலியுறுத்தினார். அடுத்த மாதம் இத்திரைப்படம் பார்த்து , கருத்துக்கள் பகிர்வது என முடிவெடுக்கப்பட்டது. சீனா அய்யா தமிழருவி மணியனின் அன்பில் ....என்ற புத்தகத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார்.  
அக்காலத்தில் குடும்பங்கள் எவ்வாறு தோன்றின என்பதனை சங்க காலப் பாடல்களை உதாரணமாக கொடுத்துள்ளார் என்று சொன்ன சீனாஅவர்கள் புத்தகத்தின் முக்கியமான வரிகளை வாசித்துக் காட்டினார்.


    காந்தி அருங்காட்சியகம் சென்ற எம் குழந்தைகள் அருகில் உள்ள இராஜாஜி பூங்கா சென்று ஆனந்தமாய் விளையாடினர். டிரையினில் (ரயிலில்) ஏறி சுற்றினர். வாத்தில் அமர்ந்து சுற்றி மகிழ்ந்தனர்.

     செவ்வாய் அன்று மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பைச் சார்ந்த நூற்றி இருபது மாணவர்கள் அழகர் மலைக்கு சுற்றுலா சென்று இயற்கையை ரசித்தனர். கள் அழகரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துக் கொண்டனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையை கண்டுக் களித்தனர். குரங்குகளையும் அவற்றின் சேட்டைகளையும் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

    மாணவ பருவத்தில் சுற்றுலா செல்வது எவ்வளவு ஆனந்தம் என்பதை அவர்களுடன் செல்லும் போது தான் உணர முடியும் . அதேத் தருணத்தில் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று நல்ல முறையில் கொண்டு வர ஆசிரியர்கள் எவ்வளவு பாடுப்பட வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ள உணர்வு ஆகும். பல சிரமங்களுக்கு நடுவில் ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் சென்று மாணவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தமைக்கு என் ஆசிரியர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.  

Thursday, February 17, 2011

ART FROM WASTE

ART FROM WASTE
குப்பைகளில் இருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் கண்காட்சி எம் பள்ளி ஆசிரியர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. இம் முறை பல இலக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் ,என் கல்லூரி ஆசான் திரு. தருமி
அவர்களை சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். அவருடன் எங்கள் அன்பிற்குரிய சீனா அய்யா அவர்களையும் , அவரது துணைவியாரையும் அழைத்திருந்தோம். அனைவரும் அன்று காலை பத்து மணிக்கு சரியான நேரத்தில் வருகைப்புரிந்தனர். அதேப்போல , கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி திரு எஸ். பிச்சைக்கனி அவர்களும் , சர்வ சிக் ஷாஅபியான் திட்டத்தின் தென் சரக மேற்பார்வையாளர் திரு பால்தாஸ் அவர்களும் விழா ஆரம்பிக்கும் முன்னே சொன்ன நேரத்திற்கு வந்தார்கள்.



கண்காட்சியை எழுத்தாளர் தருமி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி திரு.எஸ். பிச்சைக்கனி அவர்களும் பார்வையிடும் போது எடுத்தப்படம்.




கண்காட்சியில் கரும்பு சக்கையில் ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் எழுதிய படம்.


கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சாக்பீஸ் உருவங்களை பார்வையிட்ட போது எடுத்தப்படம்

எழுத்தாளர் தருமி அவர்கள் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகியோர் கண்காட்சி பார்த்து மகிழ்ந்த போது எடுத்தப்படம். (உண்மையிலேயே உடைந்த வளையலில் செய்தகலைப்பொருளா? இல்லை உடைக்கப்பட்ட வளையலில் செய்த உருவமா? என சிர்க்க வைக்கும் தருமி)
எம் பள்ளிச் செயலர் திரு சொளந்திரபாண்டியன் அவர்களுடன் மேற்பார்வையாளர் திரு பால் தாஸ் .


அனைவரும் நின்று ஒரு புகைப்பட பதிவு செய்துக் கொண்ட போது எடுத்தப்படம். 

தூர எறியும் டீக் கப்புகளை வைத்து ஒரு லைட் லேம்ப் ... விதவிதமாய் தொங்கும் காட்சி.


கண்காட்சியை வலைச்சரத்தின் ஆசிரியர் திரு சீனா அவர்கள் துணைவியாருடன் கண்டு களிக்கும் காட்சி...

             தின்று தூக்கி எறியும் சோளத்தட்டையில் கலை நயம்

                                   ஆர்வத்துடன் கண்டுக் களிக்கும் மாணவர்கள்..


தருமி அய்யா கண்காட்சியைப் பார்வையிட்ட பின் வாழ்த்திப்பேசும் போது , நான் படித்த பள்ளியில் இப்படி அசம்பிளி கிடையாது. உங்களுக்கு அது கிடைத்துள்ளது. எங்கள் காலத்தில் இது போன்ற விழாக்கள் கிடையாது, அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது. நீங்கள் படிக்கும் இந்த பள்ளியை நேசிக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆசிரியர்களை மறக்க கூடாது. உங்கள் வாழ்நாளில் உங்கள் பள்ளியையும் ஆசிரியரையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இக் கண்காட்சி உங்களுக்கு கலை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் . அனைவரும் வாழ்வில் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன் என சுருக்கமாகவும் ஸ்வீட்டாகவும் முடித்தார்.

              கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி திரு பிச்சைக்கனி அவர்கள் பேசும் போது இந்த சரவணன் எதையாவது செய்துக் கொண்டே இருப்பார் .எப்படியாவது மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வமுடன் செயல் புரிகிறார். அவருக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த நிர்வாகமும் துணைபுரிகிறது. அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், வாழ்வில் வெற்றிப் பெறுவீர்கள் என வாழ்த்தினார்.

   இவ்வாறு அனைவரும் வாழ்த்த இனிமையாக நடந்து முடிந்தது. எது எப்படியோ இக் கண்காட்சி எம் பள்ளி மாணவர்களின் பாடம் சார்ந்த அறிவையும் தாண்டி , தங்களுக்குள் புதைந்துள்ள கலை தாகத்தை வெளிப்படுத்த உதவி இருக்கும் என்று நம்புகிறேன்.  

Tuesday, February 15, 2011

STD- ரூபாய் இருபதுக்கும் , ஐம்பதுக்கும்

  பிப்ரவரி 7ம் தேதி டெக்கான் கிரானிக்கல் பக்கம் இரண்டில் மதுரையை பற்றிய பயமுறுத்தும் செய்தி வெளியாகி இருந்தது. மதுரை சமூகவியல் கல்லூரி நடத்திய  ஆய்வின் ஆதாரமாக நடைபெற்ற(workshop ) பட்டறையில் விவாதிக்கப்பட்ட கருத்துப்பற்றி அந்த கல்லூரியின் பேராசிரியர் கூடலிங்கம் அவர்கள் அளித்த பேட்டியே அச்செய்தியாகும்.  அநேகமான இளைஞர்கள் பாலியல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்-ஆய்வு என்ற தலைப்பில் வெளியான அச்செய்தியின் சாரம் இதோ ....
     தொழில் முறை விபச்சாரிகளிடன் இருந்து இளம் மாணவர்களுக்கு பாலியல் தொற்று நோய்கள் பரவுகின்றன .
                     மதுரையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், மருத்துவரிடம் (genitalia infection ) பாலியல் நோய் சம்பந்தமான சிகிச்சைக்கு வந்தான். அவனைப்போல உள்ள பிற மாணவர்களையும் அழைத்து வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறி , அவனைப் பற்றி தனி நபர் ஆய்வு (case study )  மேற்கொண்டதில் , ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு என்ற முறையில் மாணவன் ஒருவன் மூலமாக அவனுடைய வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் வயதான விபச்சாரியுடன் அடிக்கடித் தொடர்பு கொண்டு  உறவில் ஈடுபட்டதால் இந்த நோய்(STD ) பரவியுள்ளது தெரிய வருகிறது. மேலும் ரெகுலர் வாடிக்கையாளர் கைவிட்டதால், இந்த வயதான தொழில் முறையிலான விபச்சாரிகள் , மாணவர்களிடம் உறவு வைத்துள்ளனர். மாணவர்கள் ரூபாய் இருபதுக்கும் , ஐம்பதுக்கும் விபச்சாசரிகளிடம் உறவு வைத்துள்ளனர். பின்பு அந்த மாணவர்கள் நோயில் இருந்து குணப்படுத்தப் பட்டனர். நாம் குழந்தைகளுடன் நட்பாக பழகும் முறையை பிரபலப்படுத்த வேண்டும் என்கிறது அந்த செய்தி .

ஜூனியர் விகடனில் பனிரண்டு வயது சிறுமியை , பதினான்கு வயது சிறுவன் கட்டித் தழுவுவதற்கு  உரிமை உண்டு .ஆனால் அதற்கு மீறி செயல் பட்டால் , கற்பழிப்பு குற்றம்.
என விரியும் செய்தி...

      எங்கே செல்கிறது நம் தமிழகம் .... ?அதுவும் மதுரை மிகவும் பயமாக உள்ளது. மெட்ரோ பாலிட்டன் நகரங்களை விட மிக வேகமாக குட்டிச்சுவராகிக் கொண்டு வருகிறது. இரண்டாம் வகுப்பில் சகமாணவியிடம் காதல் கொள்ளும் சிறுவன். காதலை வெளிப்படையாக வெகுளித்தனமாக படம் வரைந்து சொல்லும் ஏழுவயது  பாலகன் . அதை சிரித்து ரசித்து ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் உள்ள மாணவி. ஆசிரியர் முன்னிலையில் எதார்த்தமாக பார்வைகளை பரிமாறிக் கொள்ளும் அசுர வளர்ச்சி... இதன் விளைவு இன்று பாலியல் உறவு .... அதுவும் தொழில் முறையிலான  விபச்சாரியரிடம்...!

       இதில் எட்டாம் வகுப்பில் மாணவ மாணவியர் தவறான பாதைகளுக்கு ஆட்பட்டு , தவறு செய்யாமல் இருக்க வேண்டுமென , தழுவிக் கொள்வதில்  தவறில்லை , அதனை   மீறி தவறு செய்தால் மட்டுமே , அவர்கள் மீது கற்பழிப்பு குற்றம் பதிவு செய்யலாம் என சட்டம் இயற்ற முயற்சி. இதை மாணவர்களா கேட்டார்கள் ?என ஜு. வி யில் உள்ள கேள்விக்கு அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பதிலாகவே உள்ளார்கள் .

   இவர்கள் ஒருபுறம் இருக்க கோவி. கண்ணன் ஆதங்கம் போல சில ஆசிரியர்கள் மாணவர்களையே பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தும் அவலமும் நம் தமிழ் நாட்டில் தான்!  பணி பாதுகாப்பு சட்டம் என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே உடைய ஒன்று. அதனால் , இவர்கள் எந்த தவறு செய்தாலும் , சஸ்பெண்ட் ஆகி , சில நாட்களில் இந்த சட்டத்தின் வாயிலாக பணிக்கு மீண்டும் திரும்பும் அவலமும் நம் தமிழ் நாட்டில் தான். வேலியே பயிரை மேயும் போது இவர்களுக்கு எங்கே கவலை  இருக்க போகிறது....? என்று இப்பிரச்சனையை சும்மா விடமுடியுமா..?

      பொதுவாக எந்த ஆசிரியரும் மாணவர்களிடம் பாலியல் தொந்தரவுகளை செய்வதில்லை. பெரும்பாலும் கிராமப்புறம் சார்ந்தே இப்பிரச்சனைகள் வெடிக்கின்றன. அதற்கு காரணம் சக ஆசிரியர்கள் மீது உள்ள காட்டம், பொறாமை , இயலாமை ஆகியவற்றின் வெளிப்பாடு , அப்பாவி மாணவர்களை தங்கள் சுய வஞ்சனைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்தி ,  பிற ஆசிரியர்கள் மீது பழி சுமத்துதலே நடக்கிறது.  அதனால் தான் பல செய்திகள் , சுடு குறைந்தவுடனே மறந்தும், மறைத்தும் போகின்றன.   உண்மையில் தவறு செய்யும் ஆசிரியர்கள் , தகுதி இழப்புக்கு உள்ளாக்கி , சிறையில் தள்ள வேண்டும் .

     அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது , இந்த படிக்கும் வயதில் பாலியல் தொழிலாயிடம்  உ றவு கொள்வதற்கு..?வயது வித்தியாசம் தெரியாமல் ஒரு காட்டு மிராண்டித் தனமான உறவு ? கல்வி முறையில் குற்றமா... ? வளர்ப்பு முறையில் குற்றமா..? ஆசிரியர்கள் கற்ப்பிக்கும் முறையில் குற்றமா..? இல்லை அவன் வளரும் சூழல் முறையில் குற்றமா?


    சமூக சூழலில் செக்ஸ் ஒரு பகட்டாகக்  காணப்படுகிறது. செக்ஸ் ஒரு பெரிய விசயமாக பேசப்பட்டாலும் , செக்ஸ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தவறாகவே உணர்த்தப்படுகிறது. சினிமாவிலும் அது பாடல்களில் வெளிச்சமாக காட்டப்பட்டாலும் , பொது  வெளியில் அக்காட்சிகளை நாம் பகிரங்கமாக அனைவர் முகத்தின் முன்னாலும் பார்க்கவும் மூடிய வில்லை, பேசவும் முடியவில்லை.நம் சமூகம் , வெட்ட வெளியில் பாத்ரும் கழித்தாலும் , ரயில் கடக்கும் போது முகத்தை முடிக்கொண்டு , மறைக்க வேண்டியதை மறைக்க தவறும் நபர்களாக இருப்பதால் , செக்ஸ் என்பது ஒரு கமுக்க நடவடிக்கையாக மாறிவிட்டது.  குழந்தைகள் அதனை அறிய வேண்டும் என முற்படுகின்றனர்.  செக்ஸ் கொள்வதில் ஒரு ஆனந்தம் இருப்பதாக உணரப்பட்டு, அதனை பகிர்வதில் கர்வம் கொண்டு , தன்னை ஒரு ஆண்மையின் அடையாளமாக வெளிப்படுத்த முயன்றதன் விளைவே , விபச்சாரிகளிடம் செக்ஸ் கொள்ள தூண்டி இருக்கிறது.

      சென்ற இடுகையை பற்றி தருமி அவர்களிடம் உரையாடிய போது , தாவரங்களின் பாலியல் பற்றியே கற்றுத்தராத தனக்குத் தெரிந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் இருக்கும் போது , மனித உடல் உறவு பற்றி எங்கே பேசப்போகிறார்கள் ? என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்  .  செக்ஸ் பற்றிய தவறான உணர்த்தல் மற்றும் புரிதல் , மாணவர்களை சிறுவயதிலே மாறுபட்டப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. மாணவர்களை நாம் செக்ஸ் சம்பந்த பட்ட விசயங்கள்  பேசும் போது விரட்டுகிறோம். "கல்யாணம் முடித்து ஏன் தனியாக ரூம்மில் செல்கிறார்கள் ?"என்று கேட்கும் குழந்தைகளுக்கு நாம் முறையான பதில் தருவதில்லை. நீ கல்யாணம் பண்ணும் போது தெரியும் போ நாம் விரட்டி அடிக்கிறோம்.  "மாமா அத்தைகிட்ட தனியா பேசிகிட்டு இருக்கும் போது நீ அவுங்க ரூம்முக்கு போகக் கூடாது" என கட்டுப்பாடு விதிக்கிறோம். இவைகள் தேக்கி வைக்கப்பட்ட அணை நிறைப் போல எங்காவது ஓட்டை இருக்காதா பாய்ந்து ஓட  என அலைபாய்வதால் ,பல இளம் வயதினர் பருவத்தை எட்டும் முன்னே பாவங்களை செய்யக் கற்றுக் கொள்கின்றனர்.

        முறையான செக்ஸ் கல்வியினை துவக்கப் பள்ளி முதலே கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு குட் டச் பேட் டச் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.மாணவர்களுக்கு மூத்த மாணவர்களால் உருவாகும் கசப்பான அனுபவங்களை கட்டுப்படுத்த வேண்டும் . மாணவர்களுக்கு நம் மீது நண்பனை போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் .அவர்களிடம் இயல்பாக பேசக் கற்றுக் கொள்ளவேண்டும். செக்ஸ் விசயத்தில் இருவேறுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. மர்ம உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை பேச வேண்டும் .வயிற்று வலிக்  குறித்து  பெண்களிடம் விரிவான உரையாற்ற வேண்டும்.பல பெண்கள் வயதுக்கு வந்துக் கூடத் தெரியாமல் இருப்பது வருத்தமடையச் செய்கிறது. தற்போது மூன்றாம் வகுப்பிலே பருவமடைக் கின்றனர்.
 
       செக்ஸ் என்பது உடல் உறவு சார்ந்த விஷயம் என்றே அனைவரும் பார்க்கின்றனர்.
அது ஒரு பகுதியே என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள் . செக்ஸ் என்பது சமூகத்துடன்  மாணவனுக்கான உறவு ,ஒழுக்க நிலையில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை உணர்த்துவதாக இருக்க வேண்டும் .செக்ஸ் எப்போதும் ஆண், பெண் குறிகளைப்  பற்றி பேசுவதாகவும் அமைந்து விடக் கூடாது .பருவ மாற்றங்களில் மாணவனுக்கு ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பேச வேண்டும் . அதனால் அவனுக்கு ஏற்படும் அச்சங்களை அகற்ற முற்பட வேண்டும்.

       பகிரங்கமாக பள்ளிகளிலும் , வீடுகளிலும் செக்ஸ் பேசப்படாத வரை , நம் மாணவர்கள் ஐந்துக்கும் , பத்துக்கும் கூட உறவு கொள்ளும் நிலை ஏற்படலாம்...? செக்ஸ் கல்வியை ஆரம்பக் கல்வி முதலே வலியுறுத்துவோம். செக்ஸ் மீது உள்ள தவறான கருத்தை அகற்றுவோம். செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை மாணவனுக்கு ஏற்படுத்தி அவனின் எதிர் காலத்தினை செம்மையாக்குவோம். 

Thursday, February 10, 2011

முத்தம்

டிங் ... டிங் .. டிங்.. டிங்.. டிங் என சுவற்றுக் கடிகாரம் அடித்தது.. முனியம்மாளின் தலையில் அடித்தது போல இருந்தது. மனம் பதறி ,சாமி மாடத்தின் கீழே நோக்கின கண்கள் .சுரேஷின் புத்தகப் பையை காணவில்லை. மாவு அரைக்கும்  அவசரத்தில் ,மணி ஐந்து ஆனதை கவனிக்கவில்லை.  தவம் இருந்து பெற்ற ஒரே மகனை காணவில்லை எனில் யாருக்குத் தான் பதற்றம் ஒட்டிக்கொள்ளாது. தன் கை அலை பேசியை எடுத்து பள்ளி என்று பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு அழைத்தால்  . வயதான குரல் பள்ளிக் கூடம் முடிஞ்சு போட்சுமா .... இங்கே யாருமில்ல .. வேணுமின்னா பெரிய டீச்சருக்கு கூப்பிட்டுப் பாருங்க என்றது.இந்த கூறு  கெட்ட மனுஷன் வந்திருவானே .. என பதறி ... "மகேஷு கொஞ்சம் மாவ பாத்துக்க .. தம்பி இன்னும் பள்ளி விட்டு வரைலை" என பக்கத்து வீட்டு மகேஸ்வரியிடம் சொல்லிச் சென்றாள். கிரைண்டர் இவளை விட வேகமாக சுற்றியது.

       தெருவை கடக்கும் போது  ...அடுத்தத்  தெரு ராகவன் நினைவில் வரவே ... அடுத்தத்  தெருவான நடுத் தெருவுக்கு நடந்தாள். அவளுக்கு அந்த தெருவென்றாலே பிடிக்காது. தெருவில் நுழைந்ததும் நாலு வீடு தள்ளி திறந்த வெளி கழிப்பறை வந்து விடும் .இது ஆண்களுக்கான பகுதி.அப்புறம் சிறுது தொலைவில் ஒரு மாவு மில். அதற்கு அடுத்து ஐந்தாறு வீடுகள். பின்பு முள் காடு . அதற்கு அடுத்து ஒரு அரசு கழிப்பறை. ஆனால் எப்போதும் பூட்யே  இருக்கும் .  அதன் பின் புறம் பெண்களுக்கான சுதந்திரக் கழிப்பிடம் . மாவு மில் அடுத்தக்  காரை வீடு தான் ராகவனின் வீடு. மூக்கைப் பொத்திக்  கொண்டு நடந்தாள். ஒரு பெண் வருகிறாள் என்று கூட எழுந்திராமல்..தன் மறைவிடத்தை நன்றாகத்  திறந்து காமித்துக்  கொண்டு ஒரு இருபது வயது வாலிபம் நிற்க . முணகிக் கொண்டே நடந்தாள். "  அக்கா , நான் தனிய எங்க அப்பாவோட வந்துட்டேன். அவன் ரயில்வே கேட் அடுத்த தெருவில் உள்ள முருகேசனோட விளையாடிகிட்டு இருந்தான் .."என்ற பதில் முடியும் முன்னே ... மீண்டும் தெரு முனைக்கு நடந்தாள்.

    முனியம்மாள் .... மதுரை விராட்டிபத்திலிருந்து அனுப்பானடி வீரனுக்கு வாக்குப் பட்டு வந்தவள். இவளின் சிவத்த மேனிக்கு ஆசைப்பட்டு .. எந்த பவுனும் பேசாமல் கட்டிக் கொண்டு வந்தவன். ஐந்து வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது. அது வரை வீரனுக்கு குறை இருக்கு அது நாளா தான் பவுனு வேணாம்ன்னு கட்டிக்கிட்டான் என ஒரு சாடைப் பேச்சு முனியம்மாள் பக்கம்  இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தீவிர முயற்சியில் பிறந்தவன் தான் சுரேஷ். வீரன் அப்பளக் கம்பெனி நடத்துபவன் .அவனிடம் ஐந்து பெண்களும் . ஆறு ஆண்களும் வேலை பார்கிறார்கள்.கண்ணியம் தவறாதவன். அனைவரிடத்திலும் மரியாதையாக நடந்துக் கொள்வான். ஆனால் சுரேஷை யாரும் அடித்தல் , திட்டினால் மிருகமாகி அடித்து விடுவான்.
        கால்கள் ரயில்வே கேட்டைத்  தாண்டிக்  கடந்தன. எதிரில் தென்பட்ட மீன்காரி சுசி "...என்ன முனியம்மா .. இவ்வளவு வேகமா போற ? "என்றதும் ," எம் மவன் சுரேச வழியில பார்த்தியா அக்கா ...." என கேட்க , "ஒத்த பிள்ளைய பெத்துருக்க , இவ்வளவு அசால்ட இருக்க... போய் தேடுடி... நானும் போற வழியில பார்த்த சொல்லுறேன் .உன் புருஷன் கொள்ளப் போறான் "என்ற சுசியின் பேச்சை காதில் வாங்கியவுடன், கண்கள் கண்ணீரை சுரக்க ..  எதிரில் வந்த பையனை பார்த்து .. டேய் நீ எந்த பள்ளிக்கூடம் படிக்கிற ..? . "நானா ஓம் சரவணா "என அவன் சொல்ல .. "டேய் சௌராஷ்டிரா ஸ்கூல் uniform போட்ட பையன பார்த்தியா ?என கேட்டாள்.  " தெரியல அக்கா  ." என சொல்லி நகர்ந்தான். எதிரே வரும் காக்கி டவுசர் , வெள்ளை சட்டை போட்டவன் எல்லாம்  தன் மகனாகவே தென்பட .. இதயம் கனத்து நடந்தாள்.

   எப்போதும் அவள் மீது ஒரு கண் வைத்து , அவள் கணவன் வீட்டில் இல்லாத சமயமாக வலம் வரும் ரங்க சாமி , இவள் தனியாக வருவதை பார்த்து , தன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, "என்ன  முனியம்மா ..இப்படி பதறிப் போயி நடக்கிற ..? வண்டியில உட்காரு  .. " என்றான்.  முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு ... "இல்ல என் பையனை காணாம்... அதான் பள்ளிக் கூடம் தேடிப்  போறேன்.. நீ போ எங்கையாவது பார்த்த சொல்லு ..." என அவனின் காமப் பார்வைக்கும் பதிலளித்து சென்றாள் ."நான் போய் பாக்கிறேன்... நீங்க சந்தில தேடிகிட்டு வாங்க "என்று சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டான்.

       சின்னக் கண்மாய் இறக்கத்தில் .. நான்கு சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து .. அவர்களில் தன் பையன் இருக்கக் கூடாதா ...?எனக்  கால்களை எட்ட  வைத்து நடந்தாள். அவர்கள் இல்லை என்பதை அருகில் நெருங்கும் போதே தெரிந்து  கொண்டு , மெய்ன் ரோட்டை நோக்கி நடந்தாள். எதிரில் உள்ள டீக் கடையில் சிறுவர்கள்  கூட்டமாக தண்ணீர்க் குடிப்பதை பார்த்து , டீக் கடையை நோக்கி விரைந்தாள். மனதினுள் இது நம்ம சுரேசா  இருக்கக் கூடாதா..?ஏன் இப்படி செய்யிறான்.. ? யாருடன் சேர்ந்து போயிருப்பான்...? பள்ளியில டீச்சர் யாரும் அடிச்சிருப்பாங்களா ..?இல்ல மார்க் கார்டு எதுவும் கொடுத்து குறைஞ்ச  மார்க் வாங்கினதால பயந்து எங்கேயும் போயிட்டானா...? என கற்பனைகளுடன் மனதை குழப்பிக் கொண்டு நடந்தாள். டீக் கடை கண்கள் இவளின் அழகிய இடுப்பை மேய்ந்தன. சிறுவர்கள் " ..என்னக்கா தண்ணீ வேணுமா ?"என கேட்க, பேசாமல் நடந்தாள்.

    அவனை  பெறுவதற்கு எந்த எந்த சாமிகளை எல்லாம் அழைத்தாலோ அத்தனை சாமிகளையும் அழைத்தால்.. அவர்களுக்கு நேர்த்திக் கடன் தருவதாகவும் வேண்டிக் கொண்டாள். எதிரில் தென்பட்ட ரோட்டுக் காளியம்மனை வேண்டிக் கொண்டாள். ஆத்தக் காலி என்பிள்ள கிடச்சுடனும்பா...உனக்கு நாளைக்கு ரோஜா மாலை சாத்துறேன்..என வேண்டிக் கொண்டாள். ஒரு சைக்கிள் காரின் மீது மோதுவதுப் போல செல்ல...அவளுக்கு பகிர் என்றது . ஒரு வேலை ரோட்டை கடக்கும் போது வண்டி மோதி இருக்குமோ.. ச்சீ அப்படி எல்லாம் நடக்காது.. எம் பிள்ளை அமைதியானவன்.. என தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டு நடந்தாள்.

 அவள்  ரோட்டை கடக்க முயலுகையில் ... ஹீரோ ஹோண்டா பைக் அவள் முன் நின்றது. 
"ஏய். முனியாம்மா .. என்னடி ...இப்படி பேய் அறைஞ்சதுப் போல நிக்கிற..?நம்ம சுரேச  நான் தாண்டி பால் பான் சாப்பிட கூட்டி போனேன் ...அதுக்குள்ளே நீ பதறிப் போய் ஸ்லுக்கு தேடி போயிட்டேன்னு நம்ம மகேசு சொன்னா.. அதான் வந்துட்டேன்..."என்றவனின் பேச்சை கவனிக்காமல் பைக்கில் இருந்த சுரேசை வாரி அணித்து முத்தம் கொடுக்க கொடுக்க , அவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. "அட லூசு...இதுக்கு போய் அழுவாங்களா.. என்கிட்ட ஒரு போன போட்டிருந்தா ....என் கூடத்தான் இருக்கான்னு சொல்லியிருப்பேன்.."என்று வீரன் சொன்னாலும் , அவளின் பசத்திற்கு  ஈடு இணை எதுவம் இல்லை.
    

Wednesday, February 9, 2011

அடையாளம்

மனிதனின் முகத்தில்
முகமுடிகள்
நிரந்தரமாகிப் போனது ..
வேடதாரிகளாய்
யுகங்களில்
ஒப்பனைகளை கச்சிதமாய்
மாற்றிக் கொண்டே ...
சமூக மேடுப் பள்ளங்களில்
தன்னை மறைத்தும்  வெளிப்படுத்தியும் ....
புதையுண்ட படிமங்களின் அடையாளமாயும்
வீதிகளில் தன்னை எரித்தும் புதைத்தும்
எகிப்திய மம்மிக்களாய்
சமூக அடையாளத்துக்காக         
முகமுடிகளைத் தேடித்தேடி
மாட்டிக் கொள்ளும் இவ்வுலகில்
முகம் பார்க்கும் கண்ணாடியிலும்
என் அடையாளத்தை  இழந்து நிற்கின்றேன்
மூடிய  அறைக்குள்ளும்
என் இதயம் பேச மறுக்கிறது
அந்த அறையும்
மற்றொருவனின் முகமுடியாக இருக்கலாம் ....!

Tuesday, February 8, 2011

செக்ஸ் -சமூக முரண்கள்

 
   நான்கு நாட்களுக்கு முன் டெக்கான் கிரானிக்கில் நாளிதழில் ஒரு மருத்துவரின்  பேட்டி  என்னை மிகவும் பாதித்தது. இச் செய்தியை படித்த என் மனைவி, பெற்றோர்களின் அஜாக்கிரதையும்  , நம் மாணவிகளின் சமூக நட்பும் இப்படியொரு  மோசமான சமூகச் சூழலை உருவாக்குகிறது. இதில் ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே நம் மாணவ சமுகத்தை நல்வழிப்படுத்த முடியும் என்றாள் .
 
       செய்திக்கு வருகிறேன். தன் மருத்துவமனைக்கு ,பத்து நாட்களுக்கு ஒரு முறை இரத்த போக்கு ஏற்படுவதாக, ஒரு பதினான்கு வயது சிறுமியை அம்மாணவியின் பெற்றோர் அழைத்து வந்தனர். சோதித்து பார்க்கையில் , அம்மாணவி தன் ஆண் நண்பனுடன் அடிக்கடி செக்ஸ் வைத்துள்ளது அறிய வந்தது. மேலும் கர்ப்பம் தரிக்காமல் இருக்க , தானாகவே மாத்திரைகள் எடுத்துக் கொண்டுள்ளாள்.இதனால் உடம்பு பலவீனப்பட்டு   , அடிக்கடி இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது  . இவ்வாறு மருத்துவரின்  ஆலோசனை  இல்லாமல் கர்பத்தடை மருந்துக்கள் எடுத்துக் கொள்வது உடலுக்கும் மனநலத்துக்கும் நல்லதல்ல. உடலுறவுக்கு பின் எழுபத்திரண்டு மணிநேரத்துக்குள் இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் . அதை விட மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் தடுக்கும் முறைகளை மேற்கொள்வது நல்லது... என தொடர்கிறது செய்தி.

   இன்று ஆசிரியர்கள் மதிப்பெண் அடிப்படையில் செயல்படுவதாலும்  , மாணவர்களின் மனதை புரிந்துக் கொள்ளாமல் அல்லது மறந்து , அவர்களை ஒரு இயந்திரத்தனமான உலகவியல் இயக்கத்தை ஏற்படுத்தி , அறிவை திணிப்பதன் விளைவு , மாணவர்களை நெறிப்படுத்துவதில் தவறுகின்றனர். ஆண் , பெண் பேதமற்ற சமூக அமைப்பை ஏற்படுத்தி , அதன் மூலம் ஒரு சமநிலையை ஏற்படுத்தி விடலாம் என்று செயல்படும் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட  நாம் , மாணவர்களின் மனதை பக்குவப்படுத்தி , உடல் கூறுகள் சம்பந்தமாக பேசத் தவறியதன் விளைவு அல்லது கூச்சத்தின் விளைவு , இன்று முறை தவறிய செக்ஸ் கொண்டுள்ளனர்.

     ஒரு திறந்த வெளியில் செக்ஸ் பற்றி பேச அச்சப்படும் சமூக அமைப்பை நாம் சார்ந்திருந்தாலும் , ஒரு கமுக்கமாக செக்ஸ் பற்றி பேசவும் நம்மால் முடியாமல் போனதற்கு காரணம் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பமாக ஆக்கப்பட்டதன் விளைவு ஆகும். பாட்டியின்  கூக்குரல், கண்டிப்பு, நையாண்டித் தனமாய் பேசும் பேச்சில் சிறுமியர்  அவர்களை அறியாமலே பல விசயங்களை உணர்ந்து , ஆண்களுடன் கொள்ளும் நட்பின் எல்லையை வரையறுத்து விடுவர். 

     அடிக்கடி செய்திகளில்  வரும் மாணவர்கள் செக்ஸ் பற்றிய விபரம் நமக்கு எரிச்சலுட்டுவதாக இருப்பினும் , பெற்றோர்களிடமும் , ஆசிரியர்களிடமும் எந்த விதமான  விழிப்புணர்வும் ஏற்பட்டதாக தெரியவில்லை . பாலி டெக்னிக்  பாத்ரூமில் மாணவர்கள் உல்லாசம் வீடியோ, பிரவுசிங் சென்டரில் மாணவிகள் சல்சாபம் என விரியும் செய்திகள் அடிவயிற்றில் நெருப்பை கொட்டுவதாக இருந்தாலும் , யாரும் கண்டுக் கொள்வதாக இல்லை. நித்தம் செய்திகள் பெட்டிகளை நிரப்புகின்றன.நாமும் தேநீர் கோப்பை தீரும் வரை எங்கோ ஒரு இடத்தில் செய்தியை வாசித்து விட்டு , தேநீர் கோப்பையை குப்பையில் விட்டு எறிவது போல தூக்கி வீசி வருகிறோம். எர்ணாகுளத்தில் ஒரு சகோதரி செக்ஸ்க்காக ஓடும் இரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு இருக்கிறார். எதனால் ?

    செக்ஸ் மனிதனுக்குள் பூட்டி வைக்கப்படும் உணர்வு. அதை முறைபடுத்த கற்றுக் கொள்ள வேண்டும். மனிதன் செக்ஸ் ஒரு குற்றம் என்பது போன்ற உணர்வுடன் , அதை பொத்தி பொத்தி வைப்பதனால் ,அதனை அடக்க தவறி ,வெளிப்படுத்துதலில்  வழி தவறி ,முறை தவறி , சமூக முரண்களுக்கு உள்ளாகி ,தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.

     செக்ஸ் கல்வி ஆரம்ப கல்வி முதலே அனைவருக்கும் கற்றுக்  கொடுக்க வேண்டும். வீடுகளில் பெற்றோர்கள் பருவமடைந்த குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றி அறிவை வளர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண்களின் நல்ல மற்றும் கெட்ட தொடுதலை உணர்த்த வேண்டும். ஆண்களுடன் ஒரு எல்லை வரையறுத்து பழக வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். பகிரங்கமாக நம் குழந்தைகளுடன் செக்ஸ் கல்வி பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும். பிரச்சனை வந்தவுடன் பேசுவது என்பது தவறு. பிரச்சனைகள் ஏற்படும் முன்னே அதனை  பேசுதல் நலம். கூட்டுக் குடும்பமாக வாழ்தலில் உள்ள நன்மையை உணர்தல் வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை முறைபடுத்தி , நன்னெறியுடன் செக்ஸ் அறிவையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆண் பெண் நட்பின் எல்லையை வரையறுக்க கற்றுக் கொடுக்க வேண்டும் . காதல் என்ற மாயை செக்ஸ் நோக்கி செல்லாது தடுக்க பாடம் எடுக்க வேண்டும்.

    பெற்றோர்களுடன் ஆசிரியர்கள் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டு , மாணவனின் நட்பு வட்டாரம் பற்றி பகிர்ந்து கொள்ள செய்ய வேண்டும். குறித்த நேரத்தில் வீட்டுக்கு வருகை தருதல், பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லுதல், வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது மாணவனின் அவசியத்தை அறிந்து அனுமதித்தல், அளவுக்கு அதிகமான பாசம் , பணம் கொடுத்தலை தவிர்த்தல்  போன்றவை மாணவனை முறைபடுத்துவதற்கு  உதாரணங்கள். அதற்காக இவைகள் அவனின் தனிப்பட்ட  சுதந்திரத்தை பாதிக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக அழுத்தமும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்.


Monday, February 7, 2011

எல்லாம் ஒரே விலைதான்

விழிப்  பிதுங்கி
நடு ரோட்டில் நின்றே யோசிக்கிறான்
இந்தியனாகியத்  தமிழன் ....
மனைவி வாங்கி வரச் சொன்ன
வெங்காயம் வாங்குவதா ?
எரிப்பொருள் காலியாகிப்
பாதியில் நிற்கும் வண்டிக்கு பெட்ரோல் போடுவதா?
யோசித்தே வண்டியை நகர்த்துகையில்
டாஸ் மார்க் கடை அழைக்க ....
எல்லாம் ஒரே விலைதான் என்று முடிவெடுத்து
பீர் வாங்கி குடித்தே
கவலையில் நடந்தான்
விலை வாசிக்குதான் கிக்கு இறங்காதா
என கிக்குடனே ..! 

Sunday, February 6, 2011

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ...

     தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். தேர்வு நெருங்கும் இந்த நாளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.டாக்டர் , இன்ஞ்சினியர் கனவுடன் , புத்தகமும் கையுமாக உள்ள , உங்களுக்கு இது ஒரு பொன் முட்டையிடும் வாத்து போன்றதொரு காலம் . இதை ஒரேடியாக  அறுத்து , உங்கள் கனவுகளை தகர்த்து விடாதீர்கள்.
        விரல் நுனியில் விபரங்களை வைத்து , கேள்விகளை தொடுக்கும் முன்னே பதிலை அள்ளித்தெளித்து அதிக மதிப்பெண் எடுத்து, தம் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்க காத்துக் கொண்டிருக்கும் கண்மணிகளே , உங்கள் உடல் நலத்தில் முன்பை விட அதிக கவனம் செலுத்த வேண்டும்.

      கணித பார்முலாக்களை கண்முன் நிறுத்தும் நீங்கள் , இனி கண்ணிற்க்கு அதிக நேரம் விழிப்பை தரக்கூடாது . இரவு அதிக நேரம் விழித்து படிப்பதை தவிர்க்கவும். விரைவில் தூங்கி  அதிகாலை விரைவில் எழுந்து படியுங்கள்.அதிக விழிப்பு உடலுக்கு சோர்வை ஏற்படுத்துவதுடன், மூளையை அதிகமாக சோர்வாக்கி , மெமரி லாஸ்  உருவாக்கும் .அதிக நேரம் விழிப்பு உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும், மேலும் உடல் செரிமானத்தை குறைக்கும் . இதனால் தேர்வுக்கு செல்லும் நாளில் வயிற்றுப் போக்கு  ஏற்பட்டு , மருத்துவமனையில் அனுமதிக்க  நேரிடும். ஆகவே , இரவில் அதிக நேரம் விழித்துப் படிப்பதை தவிர்க்கவும்.

       இடைவிடாத படிப்பிற்கு இடையிடையே ஓய்வு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓய்வு இன்றி படிப்பு  மன அழுத்தத்தைக்  கொடுக்கலாம். மன அழுத்தம் உங்கள் லட்சியத்திற்கு தடையாக அமையலாம் .  ஆசிரியர்களும் , பெற்றோர்களும் உங்களின் மதிப்பெண்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இவ் வேளையில் , படிப்பிற்கு இடையே ஓய்வு என்பது ஒரு உற்சாக டானிக்காக அமைந்து உங்களின் இலக்கை சரியானப் பாதையில் எடுத்துச் செல்ல உதவும். 

   கனவிலும் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறன் படைத்த மாணவர்களே , தண்ணீர் விசயத்தில் கவனமாக இருக்கவும். கண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். எப்போதும் வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லவும். முடிந்த மட்டும் சுட வைத்து ஆறவைத்த நீரைப் பருகவும் . படிப்பில் ஆர்வம் காட்டும் நீங்கள் தண்ணீர் குடிப்பதை மறந்து விடக் கூடாது.

    இரவு படித்து விட்டு புரோட்டா சாப்பிடுவதை தவிர்க்கவும் . சாப்பாடு விசயத்தில் கவனமாக இருக்கவும் .எளிதில் செரிக்கும் உணவு வகைகளை உண்ணவும். இரவு எட்டு மணிக்கு அல்லது அதற்கு முன் சாப்பிடுவது நலம். பொதுவாக திட ஆகாரத்தை தவிர்க்கவும். அதற்காக சாப்பிடாமல் படிப்பதும் கூடாது. காலையில் உணவு நன்றாக எடுத்துக் கொள்ளவும்.

  ஒரு மார்க் விடைகளை ஒரு நிமிடத்தில் எழுதுவதற்கு கற்றுக் கொள்ளவும். முதலில் ஒரு மதிப்பெண் விடைகளையும் , பின்பு இரண்டு மார்க் விடைகளையும், பின்பு ஐந்து  மதிப்பெண் அல்லது பத்து மதிப்பெண் விடைகளையும் செய்யவும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கி விடை அழைக்க இப்போது இருந்தே மாதிரி தேர்வுகளில் பழகிக் கொள்ளவும். முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு பதிலளிக்கவும். பின்பு யோசனை செய்து பிற வினாக்களுக்கு பதிலளிக்கவும். கணிதத்தில் நிருப்பிக்கவும் போன்ற கேள்விகளை தேர்ந்தெடுக்கவும்.  கணிதத்தில் விதிகள் , தத்துவங்கள் , நிரூபி  போன்ற வினாக்கள் தேர்ந்தெடுத்தல் முழு மதிப்பெண்களை பெற்றுத்தரும்.

    மாணவர்களே கவனமாக உங்கள் உடல் நலத்தை பேணவும் , மன நலம் அதை விட முக்கியம் என்பதால் அதிக விழிப்பு , மற்றும் அதிக நேரம் மனப்பாடம் செய்தல் போன்றவற்றை தவிர்த்து ஓய்வு கொடுத்து படிக்கவும். அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Friday, February 4, 2011

அறுபது என்பது ஆகாது !

     அரசு ஊழியரின் வயது அறுபது என்ற அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் . ஆனால் என்னைப் போன்ற இளம் ஆசிரியர்களுக்கு , அது ஒரு ஆபத்தானதாகவே படுகிறது. உனக்கும் வயசாகும் , அப்ப வேலையை விட்டுப் போ என்று கழுத்தைப்பிடித்து தள்ளும் போது தான் அதன் அருமை புரியும் என்று நீங்கள் சாடுவது புரிகிறது.
                     இன்று தலைமைப் பதவி வகிக்கும் அனைவரும் ஏறக்குறைய ஓய்வுப்பெறுவதற்கு ஒரு சில வருடங்களே உள்ளவர்களாக உள்ளனர். மேலும் அவர்களை அடுத்து பதவிக்கு வரும் ஆசிரியர்களும் அதேப்போல அதே வயதில் ஒத்துவுள்ளதால், அவர்களும் சில வருடங்களிலே பணி ஓய்வு பெறும் நிலை உள்ளது.

       அதுசரி , வயதுக்கும் வயதை அதிகப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் ? என்றும், அதனால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்றும் கேட்பது புரிகிறது. இன்று தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில், அனைத்து புள்ளி விபரங்களும் சி.டி போட்டுத் தர வேண்டியுள்ளது. மாணவர்களும் நவீன தொழில் நுட்பங்களை தங்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர். ஆனால், வயதின் முதுமைக்காரணமாக பணி ஓய்வு நிலையில் உள்ள இவர்களின் மனது, இந்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள முன்வரவில்லைஅல்லது ஒத்துழைக்க வில்லை. மேலும், அவர்கள் அந்த தொழில் நுட்பத்தின் நுணுக்கங்களை தெரிந்துக் கொள்வதில் அல்லது புரிதலில் தடுமாற்றங்கள் உள்ளதால், அவர்கள் அரசுக்கு புள்ளி விபரங்கள் கொடுப்பதற்கு ஒரு இளம் ஆசிரியரின் உதவியையே நாடியுள்ளனர். இதனால், அந்த ஆசிரியரின் வகுப்பு பாதிக்கப்படுவதாக உள்ளது. ஒரு இளம் நிலை உதவியாளர் இருந்தாலும், திடீரெனக் கோரப்படும் , தகவல் உரிமைச் சட்டம் சார்ந்த புள்ளி விபரங்களை ஒரு ஆசிரியரைக் கொண்டு , அதுவும் தொழில் நுட்பம் தெரிந்த ஆசிரியரைச் சார்ந்தே தயாரித்துப் தலைமையாசிரியர் பெற வேண்டியுள்ளது.

       தலைமைப்பொறுப்பில் உள்ள இவர்கள் , அவர்களைச் சார்ந்தே உள்ளதால், அவர்களும் இவர்களை மிரட்டவும் செய்கின்றனர். சில ரகசியங்களை , அல்லது கமுக்க நடவடிக்கைகளை தெரிந்து கொண்டு , வேலையை ஏமாற்றும் ஏமாளிகளாக இருக்கின்றனர். அதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு வகுப்பு மட்டுமே யுள்ளதால், அவ்வகுப்புகளில் பிற இளம் ஆசிரியர்கள் நடத்துவது போல தொழில் நுட்பங்களை பயன்படுத்த முடிவதில்லை. அதனால், மாணவர்கள் மத்தியில் இளம் ஆசிரியர்களின் மதிப்பு அதிகரிப்பதால், தலைமைப் பொறுப்பில் உள்ள மூத்த ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் மதிக்கப்படாமல் போகவும் சந்தர்ப்பம் உள்ளது.

       அப்படியே சில விபரங்களை தெரிந்து வைத்திருந்தாலும் , பள்ளியில் அவ் வேலைகளைச் செய்வதில்லை. ஏனெனில் , மாதச் சம்பளம் போன்ற புள்ளி விபரங்களை அக்கணினி கொண்டுள்ளதால், அதனை ஆப்பரேட்டு செய்து ஏதாவது கோளாறானல் , தன்னை சக ஆசிரியர்கள் அவமானம் பார்ப்பார்கள் என்று நினைத்தும், அதனால் ஏற்படும் செலவுகளை எந்த ஹெட்டில் இருந்து எடுப்பது என்று குழப்பம் நேரிடும் என்பதாலும், எப்படியும் அச்செலவினங்களை தான் தன் சொந்தச் செலவில் பார்க்க நேருவதாலும், தன் வீட்டில் உள்ள கணினியில் இயக்க செல்கின்றனர். இதனால் , பள்ளிக்கு பிற பணி ஆகிவிடும். இதனால், அப்பள்ளி அதற்கடுத்த ஆசிரியரை வைத்து இயங்குவதால், தலைமையில்லாமல் தள்ளாடுகிறது.அதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு, பள்ளியின் தேர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, அறுபது ஆகவே ஆகாது . அனேகமான அரசு பள்ளித் தலைமையாசிரியர்களின் நிலமை இதுவே.

   அப்படியே அவர்களின் பணி அனுபவம் முக்கியம் எனக் கருதுவேமேயானால், அவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் சார்ந்து இளம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க தனியாக நியமனம் செய்து ,விருப்பம் உள்ளவர்களைப் பணியமர்த்தலாம். வங்கிகளில் பணி ஓய்வு பெறும் அதிகாரிகளின் சர்வீஸைப் பயன்படுத்திக் கொள்வதற்கு , பணி நிறைவு பெற்றவர்கள் மேலும் உழைக்கத் தயாரானல்,பணி நீட்டிப்புக்கு  விண்ணப்பித்தால், அவர்கள் புதிய அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அளிக்க வகுப்புகள் எடுக்க அமர்த்தப்படுவார்கள்.அதே போன்று முறையை நாமும் கைப்பற்றலாமே... அதற்காக பள்ளியிலேயே மீண்டும் பணி அமர்வது என்பது மாணவர்களின் நலனைக் கெடுப்பதாகும்.

       ஒரு குறிப்பிட்ட ஆசிரியருக்கு மட்டுமே சலுகைகள் தருவதாலும், சில சமயங்களில் தமக்குரிய சில சலுகைகளையும் அனுபவிக்க முடியாமல் , சிக்கலில் தவிக்க ஆளாக நேரிடும். இப்படித்தான் , ஒரு அரசு  மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தகவல்களை தயாரிக்க ஒரு சிலரை மட்டுமே நம்பவேண்டியுள்ளதால் , அவர்களுக்கு சில சலுகைகள் தர, இளம் ஆசிரியர்களில் ஒரு பிரிவினரும், அடுத்து பதவிக்கு காத்திருக்கும் சில ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரின் மீது கோபம் கொண்டுள்ளனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த ஆசிரியர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தது, அதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.


       ஒரு  சனி கிழமை  பள்ளி வைத்துள்ளார். விடுப்பு கடிதத்தைப் பள்ளி வாட்ச்மேனிடம் கொடுத்து அனுப்ப , அவரும் உதவி தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கையொப்பம் இடும் இடத்தில் த. வி. (தற்செயல் விடுப்பு) குறிக்க வில்லை. மறுநாள் , வேலை மும்மரத்தில் தலைமையாசிரியர், திங்கள் அன்று கையெப்பம் இட்டுள்ளார். சனிக்கிழயைப் பார்க்க வில்லை. மறு நாளும் அப்படியே சனி கிழமை பிளாங்காக இருக்க ,வில்லங்க ஆசிரியர்கள் அதனை செல்போனில் பதிவு செய்து , வைத்து விட்டு , அந்த இடத்தில் ஒரு கேள்விக் குறியினை இட்டு வந்துள்ளனர். இதனைப் பார்த்த தலைமை யாசிரியர்கள் ஆசிரியர்கள் பிரச்சனையை எடுக்கின்றனர் எனத் தெரிந்து , அதில் த. வி. குறிக்க, அதையும் அந்த ஆசிரியர் செல்லில் பதிவு செய்து பிரச்சனை மாவட்ட தலைமை அதிகாரிக்கு செல்லப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அதிகாரி வரை பிரச்சனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.

      நல்ல ஆசிரியர் தகவல் தொழில் நுட்பம் தெரியாததால், முறையாக பள்ளிக்கு வந்து , கடமையாற்றும் ஆசிரியர், பிரச்சனையில் மாட்டி விடப்பட்டுள்ளார். ஒரு த. வி யை முறைப்படி இடாததால், அதுவும் அவர் விடுப்பு எடுத்த நாளில் உதவி ஆசிரியர் குறிக்காமல், வேண்டுமென்றே மாட்டி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம். இப்போதாவது புரிகிறதா அறுபது என்பது ஆகாது !  

Thursday, February 3, 2011

கவனம். நிகழ் காலமும் நம் கையில் தான்...!

     திங்கள் காலை பத்து மணியளவில் ஒன்றாம் வகுப்பு அ பிரிவில் இருந்து ஒரு மாணவி என் அறைக்கு வந்தாள். சார் பால்பண்ணைப்பகுதியில் இருந்து வரும் ரவிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முடியவில்லையாம் , நீங்க அவுங்க அப்பாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லுவீங்களாம் என டீச்சர் சொன்னார்கள் எனறாள். போன் நம்பரும் தந்தாள். என்ன செய்யுதாம் அவனுக்கு என்று அவள் பேசும் கொஞ்சு தமிழில் நானும் கேட்டேன். அவன் வாந்தி வாந்தியா எடுக்கிறான் சார்... என்றாள். சரி போன் செய்கிறேன் என்று போன் செய்தேன் . அவரின் தந்தை போன் எடுத்தார். விசயத்தை கூறினேன். உடனே வந்து அழைத்துச் சென்றார்.

மறுநாள் தெரிய வந்த விபரம்:
        அவர் அழைத்துச் செல்லும் வழியெங்கும் வாந்தி எடுக்கவே பால் பண்ணை அருகில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு அருகிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.டாக்டர் அவனின் பல்ஸ் மிகவும் மோசமாக உள்ளதைப்பார்த்து , பதட்டமடைந்து அதற்கான சிகிச்சை தந்து , அவனை பிழைக்கச் செய்திருக்கிறார்.

இன்னும் அந்தப் பையனுக்கு ஆஸ்பத்திரியில் தான் டீரிப் ஏற்றிக் கொண்டுள்ளார்கள்.

     “யேவ் , இவ்வளவு நேரம் இவனை எப்படியா வச்சிருந்த.. இன்னும் பத்து நிமிசம் கழிச்சு கொண்டாந்து இருந்தா ... நிச்சயம் உன் மகனைப் பார்த்திருக்க மாட்டே...”என டாக்டர் கேட்க.

“அய்யா... பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டேன்..... “

” அப்புறம் எப்படியா கூட்டியாந்தே...”

”அவுங்க டீச்சர் முடியலைன்னு சொன்ன வுடனே ... தலைமை ஆசிரியர் போன் செய்சாரு.. அதான் கூட்டி வந்தேன்... “

”முதல்ல போயி டீச்சருக்கு நன்றி சொல்லுய்யா... இன்னைக்கு உன் பிள்ளை உயிரோடு இருக்குதுன்னா ... அதுக்கு அவுங்க தான் காரணம் ...”


    சாதாரணமாக வாந்தி எடுத்தால் , வாயை கொப்பளிக்கச் சொல்லி , நாங்கள் வகுப்பிலேயே படுக்கச் செய்து விடுவோம். சில ஆசிரியர்கள் தகவல் தருவார்கள் . சிலர் வாந்தி தானே என்று என்னிடம் கூறுவது கூட இல்லை. நான் ரவுண்ட்ஸ் போகும் போது பார்த்துக் கேட்கும் போது , தெரிய வந்தால் தான் உண்டு.
      
         ஆனால், இந்த ஆசிரியர் எதையும் உடனே , தலைமை ஆசிரியர் என்ற முறையில்,உடனேதெரிவித்துவிடுவார். மிகவும்பொருப்பானாவர்.குழந்தைகளைத் தன் பிள்ளைகளைப் போல பார்த்துக் கொள்வார். அவரின் வகுப்பு மாணவர்கள் படிப்பிலும் முதலாவதாக இருப்பர். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் , அவர்களின் பெற்றோர் வசதி குறைவாக இருந்தால், அதை அவரே அவரின் செலவில் வாங்கித் தந்திடுவார். அதிகாரிகள் முதல் ஆசிரியர் பயிற்றுநர்கள் வரை அனைவரும் அவரின் வகுப்பை பாராட்டுவார்கள். பெற்றோர்கள் முதல் வகுப்பில் அவரின் வகுப்பில் சேர்ப்பதற்கு போட்டிப் போடுவார்கள். அதனாலேயே அவரின் வகுப்பில் சராசரி வருகை என்பது நூறு சதவீதமாக இருக்கும். நோ அப்சண்டீஸ்.


   அப்படித்தான் அன்று அம்மாணவனை அந்த பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  எங்கள் பள்ளியில் மூன்று பள்ளிப் பேருந்துகள் உள்ளதால், காலையிலேயே ஆசிரியர்கள் மாணவர் வசிக்கும் பகுதிக்கு சென்று , முதல் நாள் வராத மாணவர்களின் பெற்றோர்களிடம் லீவ் போடக்கூடாது என்று சொல்லி அவனை அழைத்து வருவர். அப்படி அந்த ஆசிரியர் செல்லும் போது,பையனுக்கு முடியவில்லை என்பதைப் பார்த்து வீட்டில் இருந்து பையன கவனிங்க என சொல்லி இருக்கிறார். இவன் திங்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றாலே அப்படித்தான் டீச்சர் சொல்லுவான் என பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார் அவனின் பெற்றோர்.


      மீண்டும் இதற்கான காரணம் உணவு ஒவ்வாமையே. முதல் நாள் கோழிக் குழம்பை சுட வைக்காமல், பள்ளிச்செல்லும் அவசரத்தில் அவனுக்கு சாதத்தை பிசைந்து , குழம்பை ஊற்றி கொடுப்பது தான் வினை.
சனிக்கிழமை பாண்டிகோயிலில் ஆடு வெட்டுக்கு போக வேண்டியது. அங்கு மீதி இருப்பதை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பதால் பக்கத்து வீட்டுக் காரங்களுக்கு கொடுக்க வேண்டியது. அவர்கள் அதை அப்படியே வைத்து இரு நாட்கள் உபயோகிக்க வேண்டியது. பின் இப்படி பட்ட உணவு ஒவ்வாமையை கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழுக வேண்டியுள்ளது. அய்யா தயவு செய்து குழந்தைகளின் சாப்பாட்டு விசயத்தில் கவனம் எடுத்துக்கங்க...இல்லையினா உங்க பிள்ளைகளை உயிரோட பார்க்க முடியாம போயிடும்.. !

       ஆசிரியர் பணியில் கவனம் இல்லையேல் ஒரு விலை மதிப்பில்லா உயிரை இழக்க நேரிடும் . ஆம்.. மாணவர்களின் எதிர்காலம் மட்டும் அல்ல நிகழ் காலமும் நம் கையில் தான் உள்ளது. ஆசிரியர்கள் தங்களை முழுமனதோடு அற்பணித்து செயல் பட்டால் மட்டுமே , மாணவர்களை காக்க முடியும். 

ஆசைப்படாதே ...!


கல்லாவை மூடி வைங்கப்பா
கொட்டப்போகுது பணமழை
ஜாக்கிரதை
திறந்தா போயிடும் சுதந்திரம்...!
வேலைவெட்டியில்லாப் பயலுகளுக்கு
வேலைத் தேடி வருகுது
சாராயக் கடையும்
ரேசன் கடையைப்போல
அடிப்பிடிச் சண்டைக்கு தயாராகுது
காலைப் பிடித்து கெஞ்சினாலும்
கண்டுக்காத கருமாந்திரப்பசங்க
கையெடுத்து கும்பிட்டுவாங்க
காலில் விழுந்து கெஞ்சுவாங்க
கலர் கலரா சட்டைபோட்டு
வேசம் காட்டவானுக...
பார்த்து கவனமா இரு
அசந்தா ஏமாந்து போயிடுவ
ஏற்கனவே ஏமாந்த மாதிரி..!

கூட்டுப்போட்டு கும்மியடிக்க வாரானுக
ஆடு மாடு வெட்டுவானுக
பிரியாணிச் சோத்த போடுவானுக
ஓட்டுப்போட்ட பின்ன ..
நம்மல நிக்க வைச்சு நித்தம்
கொல்லுவானுக
கவனமா போடு
காசுப்பணத்துக்கு ஆசப்பட்ட
கஷ்டப்படுவே...!