Wednesday, December 30, 2015

இரவின் தேவதைகள்...!

இந்த இரவின் சாட்சியாக இருப்பதில் பெருமை கொள்கின்றேன்..!
பரிசுத்த ஆவியின் பெயராலே , இந்த ஆண்டின் இறுதி நாள் இப்படி ஆரம்பிக்கும் என்று எதிர்பாக்கவில்லை.
கடுமையான காய்ச்சல், அசதி, உடம்பு வலி, மனவலிமை குன்றி மிகவும் நெந்து நூலாகி போய் இருந்த எனக்கு திடீரென்று புத்துணர்ச்சி ஏற்பட்டது.
ஓடி சென்று சென்ற ஆண்டின் நினைவுகள் குறித்து பதிவு ஒன்றை எழுதினேன். அதன் பின் நண்பர்களுக்குள் பிரச்சனை வேண்டாம் என்று பதிவு போட்டு, மூடிவைத்து , சாப்பிட்டு அமர்ந்த எனக்குள் ஒரு வேகம் உண்டானது.
புதிய தொடக்கமாக இருக்கட்டு என்று இரவு 9 மணி வாக்கில் வாக் ஒன்று போகலாம் என்று மெல்ல நடந்தேன். துணைவியாரும் வருகின்றேன் என்றார். எப்போதும் வாக் என்றால் போன் பேசும் தொலைவு தான் என்று அறிந்திருந்தார். வா..ஏன் இம்புட்டு சந்தேகம். கொஞ்சம் திணமணி தியேட்டரை சுற்றி வருவோம் என்று கிளம்பினோம்.
மனைவியுடன் வாக்கிங் போவதை அனேகமான கணவர்கள் ஏன் தவிர்க்கின்றார்கள் என்ற ரகசியத்தை முதன் முறையாக கண்டு கொண்டேன்.
அட நீங்க யோசிக்கிறது தப்பு! நாங்க ரெம்ப ஜாலி டைப். ஆனந்த விகடன் வாங்கவில்லை வாங்கி கொள்கின்றேன் என்ற போது வேண்டாம் என்றார். ஓகே நடைக்கு வந்து நிற்க வேண்டாம் என்று தலையாட்டி நடந்தேன். கொஞ்சம் தூரம் சென்றதும் ஒரு பேன்சி ஸ்டோர் ஒன்றை கண்டார். ஹேர் பேண்டு வாங்கி கொள்கின்றேன். இப்படி வரும் போது வாங்கினால் தான் உண்டு என்று புகுந்தார். ஹேர்பாண்ட், பொட்டு, கிளிப், என குறைந்த பட்சம் தொகைக்கு வாங்கி கொண்டார். பர்ஸ் எடுத்துட்டு வரலை.. நீங்களே கொடுத்திடுங்க என்றார். வாங்கியது என்னவோ 100 ரூபாய்க்கும் குறைவாக தான் ! தினமும் இப்படி வாக்கிங்க் போனால் என்னாவது!
ரமணா விஜய காந்த் போல் கணக்கு போட்டது மனசு! காலை மாலை இரண்டு முறை வாக்கிங் வந்தால், ஒரு மாதத்திற்கு ஆறாயிரம் ரூபாய்... ஒருவருடத்திற்கு அப்பா முக்கால் லட்சம். இதுவே, இருநூறு ரூபாய் என்றால் லட்சத்தை தாண்டும் போல் இருக்கின்றதே...!
அட , நிஜங்க.. நான் அநேகமான ஆண்கள், மனைவியுடன் செல்லும் போது காய்கறி, சமையல் சாமான்கள் வாங்கி வருவதை கண்டு இருக்கின்றேன். அடுத்த சில நாட்களில் தனி தனியாக வாக்கிங் செல்வதையும் கண்டிருக்கின்றேன். அதற்கான ரகசியத்தை முதல்நாளிலேயே கற்று கொடுத்த துணைவியார் வாழக பல்லாண்டு!
வாக்கிங் முடித்து இன்னும் சுறுசுறுப்பானேன். மூளை எப்போதும் போல் சுறு சுறுப்படைந்தது. கணினியை எடுத்தேன். இனி லேப்டாப் தொடக்கூடாது டாடி என்று கண்டித்த மகன் சத்யாவுக்கு தலைவணங்கி, புத்தகம் வாசிக்கலாம் என்றால் மனசு கேட்க வில்லை.
ஏதாவது ஒரு படத்துக்கு போகலாம் என்று தூண்டியது. ஓகே நல்ல விசயம். ஆனால், அம்மா அடிபட்டு கிடக்கின்றார். தங்கை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கொஞ்சம் உடல் நலம் தேறிய நிலையில் , புத்தாண்டில் வீட்டிலிருக்க வேண்டும் என்று இன்றே டிச்சார் ஆகி வந்திருந்தார். எப்படி என்ற போது என் மனைவியிடம் சிபாரிசு கோரினேன். சரி.. போங்க என அனைவரின் அனுமதியுடன் சினிமா சென்றேன்.
பாஜ்ஜிராவ் முடிவு செய்து சென்றால், இன்று இரவு காட்சி இரத்து.. பசங்க 2 அல்லது ஸ்டார்வார்ஸ் போங்க என்றார்கள். சரி ஸ்டார் வார்ஸ் தான் இப்போதைக்கு நமக்கு வாய்த்தது என்று முடிவெடுத்து சென்றேன். நாம் எதிர்ப்பார்ப்பது என்றுமே இராது. ஸ்டார்ஸ் என்னைக்கு சண்டை போட்டது! சாரி போட்டார்கள்.! படத்தை விட முக்கியம் ஒன்று இருக்குங்க. அதுக்கு தான் இந்த பதிவை இந்த நேரத்தில் எழுத தூண்டியது.
படம் சரியாக 12. 45 க்கு முடிந்தது. ஓடி சென்று வண்டியை எடுத்து ஸ்டார் செய்து வேகமாக ஓட்டினேன். யாருமற்ற பனி இரவில் சீறிப்பாயும் என் வண்டியின் வேகம் 40 கிமீ தான்..! இருந்தாலும் அது என்னை அச்சுறுத்தியது. வழி நெடுகிலும் நாய்கள் அலைந்து கொண்டிருந்தன. தனது வாய்ப்பை பறிகொடுத்த ஒரு நாய் என் முன்னே சீறிபாய்ந்து சென்ற வாகனத்தை ஏதோ ஒரு பாசையில் திட்டுவது போன்றே எனக்கு தோன்ற செய்தது.
குருவிக்காரன் சாலை ஒயின்சாப் வாசல் முன்பு ஒரு கும்பல் நின்று கைதட்ட என் முன்னால் சென்றவன் பிரேக் அடித்தான். அய்யோ ! மேதி விட்டேன் என்று நினைத்தேன். ஆனால், பிரேக் அடித்து நின்றேன். இன்னும் கூடுதல் வேகத்தில் வந்திருப்பேனால் போய்யே போய் இருப்பேன். இன்னேரம் எல்லாம் முடிந்திருக்கும். இப்படி ஒரு நல்ல காரியம் ஒன்றை பார்த்திருக்க மாட்டேன்.
சாலையை கடந்து மேட்டில் ஏறினேன். நாய்களின் கூட்டம் இந்த பக்கம் அந்த பக்கம் என 30 நாய்கள் . நம்ப மாட்டீர்கள். ஆனாலும் நம்பி தான் ஆக வேண்டும். எதுவும் குரைக்க வில்லை. இவை தங்களின் வெற்றியை கொண்டாடுகின்றனவா..! அல்லது இப்புத்தாண்டில் இருந்து என்னை போன்று வாய் திறக்க கூடாது என்று சபதம் போட்டுள்ளனா என்று தெரியவில்லை.! இப்போது என் வேகம் 30 கிமீ. வேகம் குறைய குறைய நிதானம் அதிகரித்து கொண்டே இருந்தது.
பைக்கை கணேஷ் தியேட்டர் தாண்டி திருப்பினேன். போலீஸ் கண்ட்ரோல் வேன் நின்றிருந்தது. கையில் தண்ணீர் பாட்டிலுடன் கான்ஸ்டபில் ஓடி கொண்டிருந்தார். யாரும் அடிபட்டு கிடக்கின்றார்களா என்று நோக்கினேன். எப்போதும் போல் மேல் அதிகாரிக்கு சேவை செய்து கொண்டிருந்தார். சாரி எப்போதும் போல் கடமையை செய்து கொண்டிருந்தார்.
என் முன்னால் ஆணும் பெண்ணுமாக உடலில் பேர்வையை சுற்றிகொண்டு பைக்கில் தெருவின் இரு மருங்கிலும் எதையோ தேடி கொண்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள். நான் கடமை யாற்றி கொண்டிருந்தவரை கவனித்ததால் அவர்களை மிஸ் செய்திருந்தேன். இப்போது மைனர் ஜெயில் வாசலில் இரு நாய்கள் மிக கோரமாக சாரி வேகமாக புணர்ந்து கொண்டிருந்தன. இது எதன் குறியீடு என்று யோசித்து நகர்ந்தேன். என்ன இலக்கிய பின் நவீனத்துவம்..! நீ நல்லா வருவடா சரவணா..! என்றவாரே கொஞ்சம் பைக்கை முடுக்கினேன்.
சற்று தொலைவில் சாலையின் எதிர் திசையில் ஒரு பைக்குக்கு அருகில் கும்பலாக நின்றிருந்தார்கள். நானும் பிரேக் அடித்து நின்றேன். ஆக்ஸ்சிடண்டா என்று கேட்டேன். எனக்கு முன்னால் நின்றவர் எனக்கும் தெரியலை..நானும் உங்களை போன்று தான் என்றார். சரியாக சி.எஸ்.ஐ. துவக்கப்பள்ளியின் எதிர்புற திண்ணையில் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரின் அருகில் நின்ற ஒருவர் அவர் அருகில் அவரின் மூக்கிற்கு அருகில் சென்று எதையோ நுகர்ந்து கொண்டிருந்தார்.
நான் பதறி போய் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்கப்பா என்றேன். ஆனால் என் குரல் எவர் காதிலும் விழவில்லை. டேய் தண்ணி அடிக்கலை .. உண்மையிலே தெருவில் தூங்கிறவர் தான் என்றார். அடுத்த நொடியில் அவருடன் இருந்த அந்த பெண் (இளம் வயது ) படுத்து உறங்கியவரின் மீது போர்வையை போர்த்தி விட்டார். அதனை உடன் இருந்த இரு இளைஞர்கள் சரியாக போர்த்த உதவினார்கள். அப்போது அவர் எழுந்திருந்து, (முழுவதும் எழுந்திருக்காமல் , படுத்த நிலையில் அண்ணாந்து பார்த்து, ஆனந்தமாக) அந்த போர்வையை வாங்கி மகிழ்ச்சியில் போர்த்தி கொண்டார். இப்போது அவர்களை என் நிஜக் கண் கொண்டு கவனித்தேன். அங்கு மனித நேயம் பூத்திருந்தது. இரவில் ஒரு ஒளி விளக்கு சுடர் விட்டு பிரகாசித்தது. அந்த நிலவுக்கும் சூரியனுக்கும் போட்டியாக..!
ஐந்து பைக்குள்( மூன்று ஸ்பிள்ண்டர் வகை பைக், இரண்டு ஆக்டிவா ) ஒவ்வொருவர் கையிலும் போர்வை, பைக்கின் முன்னால் பைகளில் குறைந்தது 100 போர்வைகள் இருக்கும். இப்போது நன்கு உற்று கவனிக்கின்றேன். பின்னால் உட்கார்ந்திருந்த அனைத்து பெண்கள் தலையிலும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் குல்லா.
யார் கொடுத்தார்கள் என்பது பெற்றவரும் அறிய வாய்ப்பில்லை. எவருக்கு கொடுத்தோம் என்பதையும் கொடுத்தவர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்கள் பாத்திரம் அறிந்தே பிச்சை இட்டனர் என்பதை புரிந்து கொண்டேன்.
அவன் போதையில் மதி மயங்கி படுத்து கிடக்கின்றானா என்பதை செக் செய்த பின்பே தந்தனர். அதற்கு தான் அவன் அருகில் சென்றது என்று உணர முடிந்தது. ஏனெனில் அவனை சுற்றி பிளாஸ்டிக் டம்பளர்கள். அவர்கள் அறிந்திருக்க வாய்பில்லை. அருகில் டீக்கடை இருக்கின்றது என்பதை!
ஒன்று மட்டும் நிச்சயம். இந்த குளிர் வீட்டிற்குள் பாதுகாப்பாக உறங்கும் பலரின் உடலை பதம் பார்த்து காய்ச்சலை உருவாக்கி , சாவை கூட வரவழைத்துவிடும். தெருவில் எந்த வித போர்வையும் இன்றி , குளிரால் இறப்பவர் எத்தனை பேர்..!மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு குளிர் அதிகம் தான்..!
இவர்களுக்காக யோசித்து இவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்த இந்த ஆண்களும் பெண்களும் எப்போதும் கலாச்சார இழுக்கானவர்கள் அல்ல.! ஆணும் பெண்ணும் இணைந்தால் தவறு என்ற எண்ணங்களை சுக்கு நூறாக்கி தூர எறியுங்கள். நாளைய எதிர்காலம் சிறப்பானதாக அமைவதற்கு இந்த இரவு சாட்சியாக எனக்கிருக்கின்றது.
நம்மை சுற்றி பல நி்கழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் பல நன்மை தருவதாகவும் உள்ளன. சில தீமை தருவதாக உள்ளன. ஆனாலும் , நம்மை கவர்வன தீமை தருவனவாகவே இருக்கின்றன. நாம் பல நல்ல விசயங்களை ஏதோ ஒரு சாதரண நிகழ்வுப்போல் கடந்து சென்று விடுகின்றோம். தீமை தருவன வற்றை பற்றி கொண்டு அதில் ஏதாவது நன்மை கிடைத்துவிடாதா என தொங்கி கொண்டிருக்கின்றோம். விசாலப்பார்வையால் இனி விழுங்குவோம்!
இந்த வருடத்தின் கடைசி நாளின் தொடக்கம் , நல்ல நிகழ்வை அடையாளப்படுத்தி அடுத்த வருடத்தின் சிறப்பை பறைசாற்றிவிட்டது. நண்பர்களே! இனி நாம் நல்லவற்றை மட்டும் காண்போம். நல்லவற்றை மட்டும் பேசுவோம். எல்லாம் நல்லவையாக மாறிட பாடுபடுவோம்.
தீமைகள் நோக்கோம். தீமைக்கு துணை போகாமால், சாரி தீமையை கண்டு உற்றால் தானே துணை போக..!
ஊர் பேர் தெரியாத, ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாவின் குல்லா எனக்கான அடையாளத்தை காட்டியது போல், உங்களுக்கான ஆன்மாவை திறக்க ஏதாவது ஒரு தாத்தாவோ, பாட்டியோ வருவார்கள்! நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன். எனக்கான பயணம் இனி பாசிடிவ்வான விசயங்களை நோக்கியதாக அமையும். எல்லாம் நன்மைக்கே.!
மதுரை சரவணன்.

Monday, December 28, 2015

பள்ளிக்கூடம் தொடர்..கட்டுரை 2ன் தொடர்ச்சி.

பேருந்தை துரத்தும் குழந்தைகள் !


முதல் வருடத்தில் அனுப்பானடி, மேல அனுப்பானடி, பால்பண்ணை, அண்ணாநகர்,  வண்டியூர் வரை பள்ளிப்பேருந்து அனுப்பப்பட்டது. அடுத்த வருடத்தில் ஆற்றங்கரையில் இருந்து சென்றவர்கள் களஞ்சியம் பகுதிக்கு குடி போய் உள்ளார்கள் என்றவுடன் வண்டி கல்மேடு சென்றது. அதன் பின் எல்.கே.பி நகர் சத்யா நகர் குடியிருப்பு வரை சென்றது. சத்யாநகர் செல்லும் போது அதன் ஆரம்ப பகுதியில் குடியிருப்பவர்கள் நரிக்குறவர்கள் ஆவர்கள். நரிகுறவர் குடியிருப்பு பகுதியில் பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தார்கள்.  அக்குழந்தைகள்  மூக்கு ஒழுகியும், அழுக்குபடிந்த தலையுடன் , வித்தியாசமான உடைகள் அணிந்தும் இருந்தார்கள்.  பள்ளியின் பேருந்தை வேடிக்கை பார்த்த வண்ணம் இருப்பார்கள். இவர்களையும் சேர்க்கலாமே என என்னை போன்ற இளவட்டங்கள் கூறுவோம். 
 எங்கள் பள்ளியில் பணிபுரியும் சீதா ஆசிரியர், “போதும்ப்பா….நீங்க பிள்ளைகளை சேர்க்கிற லட்சணத்தில் இது வேறவா..! உங்களால் அதெல்லாம் முடியாது. இது மாதிரி குழந்தைகளை தான் 1965 வாக்கில் நாங்கள் எஸ்.எம்.பி காலணியில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து,  குளிப்பாட்டி, புது ட்ரஸ் கொடுத்து படிக்க வைத்தோம். இப்ப எல்லாம் யார் செய்கிறாங்க..” என ஆதங்க படுவார். அப்போது எங்கள் பள்ளி வாகனத்தில் ஏறி பள்ளிக்கு வருவதற்கு குழந்தைகளிடம் எந்த கட்டணமும் வாங்குவதில்லை. ஏனெனில் இந்த மாணவர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு புலம்பெயர்ந்ததாலும் எங்கள் உறவின்முறை சார்ந்த அரிசி ஆலைகளில் வேலைப்பார்த்ததாலும்,  குழந்தைகள் படிப்பு கெடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவும் நிர்வாகத்தினர் பணம் செலவழித்தார்கள்.

நரிக்குறவக் குழந்தைகள் எங்கள் பள்ளி வாகனம் வரும் போது பின்னால் துரத்தி வருவார்கள். ஏனெனில், அடுத்தடுத்து 50 அல்லது 100 மீட்டர் தொலைவுகளில் நிறுத்தங்களில் மாணவர்களை ஏற்றி கொள்வோம். பிற குழந்தைகள் ஏறுவதை ஏக்கத்துடன் வேடிக்கைப் பார்ப்பார்கள். ”சாமி.. ப்ரீய்யா தானே.. எங்க குழந்தைகளும் படிக்கலாமா? ”என்று அதன் தலைவர் சௌந்திரப்பாண்டியன் கேட்பார்.  ”படிக்கலாம். ஆனா குளிச்சு நீட்டா வரணும்” என்பார் அப்போதைய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர். (1998ல் எங்கள் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது)
ஆனால் தலைவர் வழியில் மக்கள் இல்லை. ஆம்! தலைவர் சரியாக இருந்தால் அவரை பின்பற்றுபவர்கள் சரியாக இல்லை. மக்கள் சரியாக இருக்க நினைத்தால் அவர்களை வழி நடத்தும் தலைவர்கள் சரியாக இருப்பதில்லை! அந்த நரிக்குறவ ஜனங்கள் தலைவரின் குரலுக்கு செவிமடிப்பதில்லை. அதையும் மீறி குழந்தைகளை சேர்க்க சென்றால்,  “சார்..அவருக்கு வேலையில்லை உங்களுக்குமா …என்னமோ கலெக்ட்ராக்க போறமாதிரி பேசுவார்…அடுத்தவாரம் வந்திட்டா திருவிழா வந்திடும்..( கார்த்திகை தாண்டி ஐப்ப , முருகன் சீசன்) நாங்க ஊருக்கு பாசி விக்க கிளம்பிடும் சாமி.. குழந்தைகளை யார் பார்ப்பா? ஹாஸ்டல் வச்சிருக்கீய்யா?”  என்பார்கள். ஆனால் குழந்தைகள் வேனில் போக வேண்டும் என்பதற்காக ஆசையில் நான் வர்றேன் என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் குளிக்காமல் இருப்பார்கள் என்பதால் சேர்ப்பதற்கு எந்த பள்ளியும் சேர்ப்பதற்கு தாயாராயில்லை.

எஸ்.எஸ்.ஏ திட்டம் வந்தவுடன் நரிக்குறவர் குழந்தைகளுக்காக உண்டு உறைவிடப்பள்ளி ஏற்படுத்தப்பட்டது. என்.ஜி.ஓ உதவியுடன் அக்குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்துக்கள் கற்றுதர ஏற்பாடு செய்யப்பட்டன. அத்திட்டப்படி, இக்குழந்தைகள் ஓராண்டு அல்லது இராண்டுக்கு பின் மெயின் ஸ்ட்ரீமில் அதாவது சாதாரண பள்ளியில் பிற மாணவர்களுடன் சேர்க்கப்பட வேண்டும் . ஆனால், திட்டமாக தான் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு சிலரே இந்த உண்டு உறைவிடப்பள்ளியில் இருந்து எல்லோரையும் போல் தினமும் பள்ளிக்கு சென்றனர். ஒரு சிலரே அருகிலுள்ள இளமனூர் துவக்கப்பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் எப்போதும் அந்த உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்தனர்.
நான் தலைமையாசிரியரான பின்பு மீண்டும் நரிக்குறவர் சங்க தலைவர் சௌந்திரப்பாண்டியன் வந்தார். 2006 ஜீன் மாதம் பள்ளியின் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும், நரிக்குறவர் குழந்தைகளையும் ஏன் படிக்க வைக்க முயற்சிக்க கூடாது என்ற எண்ணத்துடன் எம் பள்ளியில் உள்ள எல்லா ஆசிரியர்களுடன் கலந்து விவாதித்து,  முடிவெடுத்து, நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அக்குழந்தைகளை சேர்க்க முன் வந்தோம்.  “காலை மூச்சி கழுவி அனுப்பி விடுங்கள். நாங்கள் அங்கு குளிக்க வைத்து கொள்கின்றோம்” என்றவாறு சேர்த்தோம். எங்கள் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களின் வயதுக்கு தகுந்த வகுப்பில் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் படி பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு சேர்க்கை திட்டத்தின் படி சேர்க்கப்பட்டனர்.

அக்குழந்தைகளின் பெயர்கள் எனக்கு சிரிப்பை வரவழைத்தன. அட்மிசன் போடும் ஆசிரியர் வேகமாக ஓடி வந்து, “ சார்.. எல்லா குழந்தைகளும் சினிமா நடிகர்களின் பெயர்களை கூறுகின்றார்கள். தயவு செய்து நாளை பார்ம் பூர்த்தி செய்து கொள்வோம்” என்றார். அவர்களின் பெயர்கள் நக்மா, நதியா, குஷ்பு, அமலா, பிரபு, கார்த்திக், எம்.ஜி.ஆர்., அசோகன் என்று இருந்தன. அவர்களில் பீமன் வளர்ந்தவன் அவனை அழைத்து இவை தானே பெயர் என்றேன்.  “சார் , எங்க தாய்மார்கள் எல்லாம் இப்படி தான் பெயர் வைப்பாங்க “ என்றான்.


அக்குழந்தைகளை சேர்த்த ஒரு வாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து போன் பேசுகின்றோம் என்று பிஆர்டி ஒருவர் பேசினார்.  “சார் அந்த மாணவர்களுக்கு என்று உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகின்றது. நீங்கள் எப்படி அவர்களை உங்கள் பள்ளியில் சேர்க்கலாம்?” . “அவர்களுக்கு உண்டு உறைவிடப்பள்ளி எத்தனை வருடங்களுக்கு ? என்று கேட்டேன்.  “அதுவந்து சார்…அங்க படிக்கிற குழந்தைகளை நீங்க அள்ளிக்கிட்டு போறதா.. என்.ஜீ.ஓ கம்ப்ளெயிண்ட் அதான்..?” “சார்..அந்த அம்மாவை பேச சொல்லுங்க.. அந்த குழந்தைகளை நரிக்குறவர் சங்க தலைவர் சௌந்திர பாண்டியன் தான் சேர்த்துள்ளார். முடிந்தால் அவரிடம் பேச சொல்லுங்க என்று போனை கட் செய்தேன். பின்பு நேரில் அந்த என்.ஜி.ஓ வந்தார். எல்லா குழந்தைகளும் 3,4,5ம் வகுப்புகளில் பயில்வதை உறுதி செய்து, சேர்க்கை படிவத்தில் அவர்களின் பெற்றோரே கையெழுத்தும், ரேகையையும் வைத்திருப்பதை சரிசெய்துவிட்டு சென்றார். இன்று நானும் அந்த பி.ஆர்.டியும் நல்ல நண்பர்கள். அவரே திட்டம் திட்டமாக தான் செயல்படுகின்றது. கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும் கல்விமுன்னேற்றம் தேவை குறித்து உங்களை மாதிரி வெகுசிலரே யோசிக்கின்றனர் என்றும் கூறி சென்றார்.

நரிக்குறவர்கள் மராட்டிய வம்சத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் சிவாஜி படையில் பணிபுரிந்தவர்கள் ஆவார்கள். முகலாயர்களுடனான சண்டையில் தோற்றவுடன், முகலாயர்களின் அடிமையாக்கப்பட்டனர். அதன்பின் முகலாயகர்களிடம் இருந்து தப்பி, நகர வாழ்வை மறந்து,  காடுகளில் பதுங்கி வாழ்ந்தவர்கள். இவர்கள் காட்டில் நரிகளை வேட்டையாடி விரும்பி உண்டதால் இவர்களுக்கு நரிகுறவர்கள் என்று பெயர் வந்தது என்ற வரலாறும் உண்டு. இவர்கள் பேசும் மொழி வாக்ரிபோலி ஆகும். இதற்கு எழுத்துவடிவம் இல்லை. இவர்கள் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையினை கொண்டவர்கள். ஆனால் , தமிழ்நாடு அரசு இவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் கொடுத்தேன். அதற்குள் அவர்களின் தலைவர், “சார் , மனு கொண்டு வந்திருக்கேன். எங்களை மலைசாதி வகுப்பில் சேர்க்க வேண்டும். கையெழுத்து போடுங்கள் என்றார். மேலும் எங்க குழந்தைகள் இங்க படிக்கின்றார்கள் என்று சான்று வேண்டும்” என்று கேட்டார். இது நடந்த போது வருடம் 2009 ஆகும். மனுவினால் எதுவும் நிகழுமா? அதுவும் பட்டியல் மாற்ற முடியுமா? எனா எனக்குள் எண்ணம் ஓடிய போதும் வாய் தானாக கேட்க தொடங்கியது, “ஏங்க..எப்படி இது சாத்தியம்?”.  “சார்.. மனு போட்டுள்ளோம். எம்.ஜி.ஆர் மட்டும் இருந்திருந்தால் நாங்க எப்பவோ முன்னேறி இருப்போம். ” என்று கூறியப்படி படிவங்களில் என் முத்திரையுடன் கையொப்பம் போட்டார்.  “சார்.. தரலைன்னா எங்களுக்கு கொடுத்த ரேசன் கார்டை ஒப்படைக்க போறோம்” என்றார். (எல்லாம் சினிமா பார்த்து வளர்ந்த உலகம்)
 . 
அதன் பின் 2013ல் செய்தி தாளில் வந்த செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது. அரசியலைப்பு சட்டத் திருத்த மசோதாவில் நரிகுறவர் ஜாதியை சேர்க்க கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆக்ஸ்ட் 27 , 2013ல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய செய்தி வந்தது. நரிக்குறவர் அல்லது குருவிக்காரன் என அழைக்கப்படும் இவர்களை நாடோடி பழங்குடி பட்டியலில் சேர்த்து, ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு அரசியலைப்புச் சட்டப் பிரிவு 342 (1), 342 (2)ன் கீழ் அனைத்து உத்திரவாதங்களை வழங்குவது அவசர தேவையாகும் என்று முதல்வர் ஜெயலலிதா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் 36 ஜாதிகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.அப்போது அது புரட்டாசி மாசம் ஆகும். 4ம் வகுப்பு படிக்கும் அமலா வேகமாக ஓடி வந்தாள். என் வகுப்பில் படிக்கும் பீமா வை பார்த்து, “ இவன் நேத்து மாட்டு இரத்தத்தை பச்சையா குடிச்சான் சார்” என்றார். ”சார்.. நாங்க எருது வெட்டி , அதன் இரத்தத்தை பச்சையா குடிச்சு , காளிக்கு கொடுப்போம். பொம்பள பிள்ளைக அங்க வரக்கூடாது, சார்.”
“சார்.. வாயை கழுவாம அப்படியே வாய் முழுசும் இரத்தம் வடிஞ்சு வந்தான், சார்”
நரிக்குறவர்கள் வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்டவர்கள். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து கடைசி வெள்ளிக்கிழமை தங்கள் பெட்டியில் வைத்திருக்கும் தெய்வத்தை எடுத்து மஞ்சள், குங்குமம் பூசி , வணங்கி ,  அரிசி மாவு, தேங்காய் படையலாய் வைத்து வெல்லத்துடன் பிணைந்து சாப்பிட்டு, இரவு முழுவதும் பாட்டு பாடி நடனம் ஆடுவார்கள். அப்போது ஆண்களும் பெண்களும் சாராயம் குடித்து தன்னை மறந்து ஆடுவது வழக்கம். ஆட்ட முடிவில் தெய்வத்திற்கு மாட்டை பலிக்கொடுப்பார்கள். மாட்டின் தலையை வெட்டியவுடன் அதில் இருந்து பீய்ச்சி வரும் இரத்தத்தை ஆண்கள் , வளர்ந்த சிறுவர்கள் பச்சையாக குடித்து நேர்த்தி கடன் செலுத்தி கொள்வார்கள். இந்த பலி கொடுக்கும் நிகழ்வில் பெண்களுக்கு இடம் இல்லை. ஆனால், பலி கொடுத்த மாட்டின் கறியை சமைத்து சாப்பிட அனுமதி உண்டு.

”சார்..என் பையில் இருந்த 1000 ரூபாயை காணவில்லை.” ஓடி வந்தார் 4ம் வகுப்பு ஆசிரியர்.      
நீங்கள் நினைப்பது சரிதான் எல்லோர் பார்வையும் கோணலாகவே இருந்தது. ஆனால் நான் தெளிவுடன் இருந்தேன். அதற்கு காரணங்கள் உண்டு. தினமும் இந்த குழந்தைகள் பள்ளி கேண்டினில் 500 ரூபாய் தாள்களை அல்லது 100 ரூபாய் தாள்களை கொடுத்து வேண்டிய திண்பண்டங்களை வாங்குவது வழக்கம். கொடுத்தவுடன் அங்குள்ள பொறுப்பாளர் வந்து ”சார், இந்த வகுப்பில் படிக்கும்.. இந்த பையன் ரூபாய் 500 கொடுத்துள்ளான். நான் வேண்டிய பண்டங்களை கொடுத்துவிட்டேன். ஆனால், சில்லறை கொடுக்க வில்லை. விசாரிங்க..யார் காசாவது இருக்க போகுது..”“இருக்காதும்மா.. அந்த பசங்க.. திருடுற பசங்க இல்லை. உண்மையை பேசுறாங்க.. சூது தெரியாத பசங்க..உங்களுக்கு தான் வித்தியாசமா தெரியுது..” என்பேன்.
அவ்வாறு நிகழும் சிறிது நேரத்தில் அந்த பையனுடைய தந்தை மேல் ஆடை அணியாமல் தோலில் டப்பாவை போட்டு கொண்டு என் அறைக்கு முன்பு நிற்பார்.  “சார் …வேலைக்கு போகணும்.. என் மகன் பிரபு..காசை எடுத்துட்டு வந்துட்டான்.“ “எவ்வளவு? “ “முழுசா..500 ரூபா சாமி..” “ஏங்க 500 கேண்டீனில் கொடுத்தவுடன் திருடிட்டு …வந்துட்டான்னு நினைச்சுட்டாங்க..”
”சாமிய்யோ..எங்க சாதி ஜனம் திருடாது சாமி.... ஊசி பாசி வித்து உழைச்சு திங்கிற ஜாதி…இப்ப ஊர் திருவிழா நேரமில்லை..கையில் காசு பொளங்கும் ..அதான் கேட்காம எடுத்து வந்துட்டான்..மன்னிச்சிடுங்க..சாமி.. அவன் வாங்கின பொருளுக்கு காச நான் தர்றேன்..” என்றார்.
எப்போதும் நரிக்குறவர் குழந்தைகள் தவறு செய்யாதவர்கள் அல்லது செய்ய தெரியாதவர்கள் என்பது குறித்தே என் நினைவலைகள் இருந்தன.  இதுமாதிரியான நிகழ்வுகளை அவர்கள் இன்னும் பழகவில்லை. அல்லது கற்று கொள்ளவில்லை.

ஆசிரியர் குற்றம் சுமத்திய பையனை தனியாக அழைத்து பேசினேன். அவன் விசயத்தை கூறிவிட்டான். மேலும் அவன் பேரம் பேசப்பட்டதையும் ஒத்து கொண்டான். ஆம. நீ காட்டி கொடுக்காவிட்டால் உனக்கு 100 ரூபாய் தருகின்றேன் என்று அப்பணத்தை எடுத்த பையன் கூறியுள்ளான். இவன் மறுத்துள்ளதுடன் கட்டாயம் பெரிய சார் கிட்ட சொல்லுவேன் என்றும் கூறியுள்ளான். அனைவரும் திட்டமிட்டு இவன் மீது பலி சுமத்தி உள்ளனர்.
“சார்.. இந்த நரிக்குறவப் பசங்க எடுக்க மாட்டாங்கன்னு தெரியும்.. இருந்தாலும் மத்த பசங்களோட சேர்ந்து கெட்டு போயிட்டாங்களோன்னு நினைச்சுட்டேன்..”இயற்கையோடு இணைந்து வாழும் இவர்கள் இயற்கைக்கு முரணாக செயல்படுவதில்லை. இவர்களிடம் உள்ள இயற்கை சார்ந்த பலவிசயங்களை நாம் கற்று கொள்ள வேண்டும். இந்த குழந்தைகள் சில பூச்சிகளை பார்த்து இன்று மழை வரும் என்று கணித்துவிடுவார்கள். இக்குழந்தைகள் செடி, கொடிகள், மரங்கள் மீது பற்று உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நரிக்குறவர்கள் குழந்தைகளுக்கு முறையான கல்வியை கொடுத்து , அவர்கள் கொண்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை நாம் காத்து கொண்டால், இயற்கையாக பல நோய்களை நாம் குணப்படுத்தி கொள்ள முடியும். ஆங்காங்கு உள்ள ஆசிரியர்கள் உண்மையான கல்வியை தர நினைப்பவர்கள் இக்குழந்தைகளை திரட்டி பெற்றோர்கள் உதவியுடன் கல்வி கொடுத்தால் நலமே! அதில் உண்டாகும் நடைமுறை சிக்கலை அரசு முன்னெடுத்து களைய வேண்டும். நடமாடும் வகுப்பறைகள் இவர்கள் கல்வி தொடர உதவும். எங்கோ பணிபுரியும் அரசு ஊழியர் எலக்சன் நேரத்தில், தகுந்த சான்றை பெற்று வாக்களிக்க முடியும் என்றால், இக்குழந்தைகள் பெற்றோருடன் ஊர் திருவிழாவிற்கு இடம்பெயரும் போது ஏன் ஒரு மொபைல் வகுப்பறையை உருவாக்க கூடாது?!

2013, டிசம்பரில் 19ல் நரிக்குறவர் ஜாதியை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிஷோர்சந்திர தேவ் அறிமுகம் செய்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவில் பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தில் இருந்து “நரிக்குறவர்” சாதியும் சத்தீஸ்கரில் ”தனுஹர், தனுவார்” ஆகிய இரு சாதிகளும் சேர்க்க வலியுறுத்தப்பட்டது.இப்போது சக்கிமங்கலம் சத்யாநகர் பகுதிக்கு மதுரையில் இருந்து எல்லா பள்ளிகளின் பேருந்துகளும் செல்கின்றன. ஆனால், இந்த இனத்தின் குழந்தைகள் இன்னும் பள்ளி பேருந்துகளை வேடிக்கை பார்த்தப்படியே உள்ளார்கள். அவர்களின் பெற்றோர்களும் இந்த குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முன் வர வேண்டும்! 

மதுரை சரவணன்.

தொடரும்.. பள்ளிக்கூடம்( அடுத்த கட்டுரையில் வித்தியாசமன பிரச்சனை குறித்து பேசுவோம்!) 

பள்ளிக்கூடம் - தொடர் (கட்டுரை 2)

2.  பேருந்தை துரத்தும் குழந்தைகள்                                                              (பள்ளிக்கூடம் தொடர் )

 “இயற்கையில் குழந்தைகளில் கெட்டவர் என்று யாருமில்லை“- புரோபல்.பள்ளிக்கூடம் குழந்தைகள் இல்லாமல் சாத்தியமில்லை. குழந்தைகளே பள்ளிகளின் ஆதாரம்! குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரும் காப்பியமாக எழுதலாம்! பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடிமை பகுதிகளில் உள்ள 5+ குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி 1கிமீ தூரத்தில் துவக்கப்பள்ளிகளும், 3கிமீ தூரத்திற்குள் நடுநிலைப்பள்ளிகளும் இருக்கும் படி அரசு, பள்ளிகளை அமைத்து தர வேண்டும். இது அண்மைக்கல்வியை உறுதி செய்வதாக இருக்கின்றது ! ஆனால் நடைமுறையில் பெற்றோர்கள் பல கிமீ கடந்து சென்று குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புகின்றனர்!

சட்டங்களும் திட்டங்களும் நன்மைக்காக கொண்டுவந்தாலும், அதனை பயன்படுத்தும் மக்கள், தங்களுக்கு எது மிகவும் பயனுள்ளதாக அல்லது உகந்ததாக படுகின்றதோ அதனையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த வித்தியாசங்களை போக்க வேண்டுமானால் நாம் பொது பள்ளி திட்டத்தை கொண்டு வர வேண்டும்! மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ, இன்ஞ்னியரிங் கல்லூரிகளில் இடங்கள் நிரப்ப படுவதாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நாமக்கல் கோழிப்பண்னைகளிலே சேர்க்கின்றனர்.   திறமையின் அடிப்படையில் மதிப்பீடுகளை மாற்றும் வரையில் இந்த நிலை மாறாது! எல்லோரும் பொதுபள்ளிக்கு குரல் எழுப்ப வேண்டும்.


கடல் கடந்து வியாபாரம் செய்வது போன்று எல்லை தாண்டி குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் டிசம்பர் மாதம் முதலே அலைய தொடங்கிவிடுகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஐந்து வயது பூர்த்தியாகும் குழந்தைகளை தாய் பறவை முட்டையை அடைகாப்பது போன்று டிசம்பர் முதலே காக்க தொடங்கி விடுவார்கள், கவர்ச்சி திட்டங்களால் அதனை பிற பள்ளி ஆசிரியர்கள் கவர்வதும், அதற்காக குழாயடி சண்டை போன்று அடித்து கொள்வது வேடிக்கையாகவும் அதே சமயம் ஆதங்கமாகவும் இருக்கும். குழந்தைகளை சேர்ப்பதில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் திருமங்கலம் பார்முலா தோற்று போகும்  அளவுக்கு உன்னதமானவை!  பாவம், உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்! மாணவர் சேர்க்கைக்காக அரசு தரும் இலவசங்களுடன் தங்கள்  மே மாத சம்பளத்தில் கனிசமான தொகையை ஒதுக்கி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கவும் வேண்டியுள்ளது ! எனக்கு தெரிந்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் வாகனங்கள் மதுரையில் இருந்து சிவகங்கை பார்டர் வரை சென்று வருகின்றன ! இதற்கும் தீர்வு பொது பள்ளிக்கு குரல் கொடுப்பது தான்! ஆனால், ஆசிரியர்கள் கூட்டணி பொது பள்ளிக்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றது.


மாணவர் சேர்க்கையில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நர்சரி பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சி, 1000க்கும் மேல்….. என்ற உறுதி மொழிகளுடன் மெட்ரிக் பள்ளிகளும் வலம் வருவதில் ஆச்சரியம் இல்லை என்றாலும் சமூகத்தில் யாரும் கண்டு கொள்ளாத, மாணவர்களும் இருக்க தான் செய்கின்றார்கள்! அவர்களின் கல்வி குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. இவர்களை சேர்ப்பதற்கு யாரும் போட்டி போடுவதில்லை. திட்டங்களின் அடிப்படையில் தான் அவர்களின் கல்வி உள்ளது! அதற்காக அவர்களில் படிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லிவிடுவதற்கில்லை!


நான் பணிபுரியும் பள்ளியில் மாணவர் சேர்க்கை என்பது குறித்த கவலை 1996 வரை ஏற்பட்டதே இல்லை. முதன் முதலில் அக்கவலை ஏற்பட்ட போது வைகை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டிருந்தன. கூண்டோடு 3000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதால் அகற்றப்பட்டன. அக்குழந்தைகள்  படித்து வந்த பள்ளிகளின் ஆசிரியர்களும் சர்ப்ளஸ் அடிப்படையில் மாற்றப்பட்டனர். பல அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆட்டம் கண்டன. அதனை சரி செய்ய மெட்ரிக் பள்ளிகளை போன்று இந்த உதவி பெறும் பள்ளிகள் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் சரி செய்ய தங்கள் பள்ளிகளுக்கு  பேருந்துகளை வாங்க வேண்டி இருந்தது. அனைவரும் பி.ஆர்.சி டிப்போவை நாடினார்கள். எங்கள் பள்ளியின் தாளாளர் திரு ஏ.வி.எஸ்.எஸ்.கண்ணன் அவர்கள் முயற்சியில் பேருந்து வாங்கினோம். 

தொடரும்... பேருந்தை துரத்தும் குழந்தைகள்...!

Thursday, December 24, 2015

பள்ளிக்கூடம் தொடர்- கட்டுரை 1 (சீக்கிரம் போ ! சீக்கிரம் !)


1.   சீக்கிரம் போங்க…! சீக்கிரம் …!

“The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.”
                                      - Robert Frost

பள்ளிக்கூடம் குழந்தைக்கு பிடித்திருக்கின்றதோ,  இல்லையோ 5 வயது பூர்த்தியானால் பள்ளியில் சேர்த்தே ஆக வேண்டிய கட்டாயமாக்கப்பட்டு விட்டது ! சட்டப்படி 5 வயது தான்! ஆனால்,  2½ வயதிலேயே பெற்றோர்கள் விரும்பி பள்ளிக்கு அனுப்பி விடுகின்றார்கள்!

     கட்டுப்பாடுகள், விதிகள் நிரம்பி வழியும் பள்ளியில் நேரத்திற்கு இருப்பது அவசியம். பள்ளிக்கூடம் என்பது ஒரு வீடு போல் இருக்க வேண்டும் என்று காந்தி கூறுகின்றார். வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமே? பள்ளிக்கு ஏன் கால வரையறை? காலை 8.30 க்குள் இருக்க வேண்டும். தவறினால் தண்டனை! இல்லை என்றால் அபராத கட்டணம்! (மெட்ரிக் பள்ளிகளில்) அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டும் அல்லது மண்டி போட வேண்டும். அட ! கட்டாய இலவச கல்வி சட்டம் இருக்கே! ஆம் ! காகிதங்களில்!  மாணவர்களுக்கே இந்த கட்டுப்பாடு என்றால் ஆசிரியர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை..!( இது மெட்ரிக் பள்ளிகளில் மட்டும்)குழந்தைகளின் கல்வி பருவம் என்பது கோபர்நிக்கஸ்சின் சூரிய கோட்பாடினை போன்று பள்ளியை மையமாக கொண்டு குழந்தைகளுக்காக, பெற்றோரும், உற்றாரும், உறவினர்களும், நண்பர்களும், அயலாரும் சுற்றிவர ஆரம்பிக்கும் கோட்பாடாகும் !  
நிலா, பூமியை முழுவதும் சுற்றிவர 29 1/2 நாள்கள் எடுத்து கொள்கின்றது.  பூமியின் சுழற்சியையும் நிலாவின் சுழற்சியையும் வைத்து நாள்கள், மாதங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் கணக்கிட்டார்கள். அது போல, குழந்தைகளை மாதம் தவறாமல், பருவம் தவறாமல் ஆசிரியர்கள் வழங்கும் ராங்க் கார்டு கண்டும்,  பரீட்சை தாள்களை கண்டும் பெற்றோர்கள் குழந்தைகளை மதிப்பிட (சிரமப்படுத்த) ஆரம்பிப்பார்கள்! ஆசிரியர்களுக்கு மதிப்பீடு என்றால் எதற்கு என்பதே தெரியாது! மதிப்பீடு மாணவனை சார்ந்த விசயம் என தவறான கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்! சமீபத்தில் நடந்த லிட்டில் டிரஸ்ட் நடத்திய கூட்டத்தில் கூட அதை காண முடிந்தது.  

10ம் வகுப்பு , +2ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் நிலமை மிகவும்  மோசமாக உள்ளது.  இம்மாணவர்களுக்கு பள்ளியில் மட்டும் கால அட்டவணை இல்லை. வீட்டிலும் படிக்க தனி கால அட்டவணை இருக்கும். எனக்கு தெரிந்து, பெற்றோர்கள்  இக்குழந்தைகளை தூங்வே விடுவதில்லை. எல்லா பொழுதுகளிலும் படி! படி! படி! என குரலை உயர்த்தி கொண்டே இருப்பதை காண்கின்றேன்.(பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமல்ல எல்லோரும் தான்!)யார் வீட்டிற்கு வந்தாலும் “என்ன பாப்பா .. இந்த வருசம் +2வா என்ன டாக்டர் ஆகிடுவீய்யா? ” என குழந்தையின் ஆம்பிசன் என்ன என்பதை அறியாமலே கேள்வி கேட்கின்றனர்.
பொழுது என்றவுடன் தான் தமிழர்கள் காலத்தினை இலக்கணத்திற்குள் வகைப்படுத்தியது நினைவுக்கு வருகின்றது.

காலத்திற்குப் பெயரிட்டு அதனை இலக்கணத்துள் வகைப்படுத்திய ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது தமிழினமாகத்தான் இருக்க முடியும். சமுதாயத்தில் வேறு யாரும் செய்யாத வகைப்பாடுகளைத் தமிழரே செய்தனர். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த மக்களினம் தமிழினமே ஆகும் என்பதை நாம் பெருமிதத்துடன் கூறிக்கொள்ளலாம். காலத்தைப் பொழுது என்று பெயரிட்டு நமது மூதாதையர் வழங்கினர். . ஒரு நாள் என்பது ‘சிறு பொழுது’ ஆகும். வைகறை, விடியல், நண்பகல், மாலை, எற்பாடு, யாமம் என்று ஆறு கூறாக ஒரு நாளைப் பகுத்துரைத்தனர். ஓராண்டைப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டு, கார் காலம், கூதிர்(குளிர்) காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என்று ஆண்டினை ஆறு வகைக் காலமாகப் பகுத்துரைத்தனர். இக்காலத்தை முதற்பொருளில் அடக்கி விளக்குவார் தொல்காப்பியர்.

ஆரம்ப காலத்தில் ஒரு கண்டிப்பான ஆசிரியராக இருந்திருக்கின்றேன்! கையில் பிரம்பு குச்சியை பிடிப்பதை பெருமையாக கொண்ட காலம் அது!  காலை பிரார்த்தனை கூட்டத்திற்கு மாணவர்கள் சரியாக வந்து விட வேண்டும். ஆனால், வெகுசில மாணவர்கள்  நேரம் தவறியே வருகை புரிவார்கள்.  தலைமை ஆசிரியர் அப்படி காலதமதமாக வருகைபுரியும்  அனைவரையும் கேட்டிற்கு வெளியே நிறுத்த செய்வார். தாமதமாக வரும் மாணவர்களை வெளியில் நிறுத்தி, வகுப்பறைக்கு
உள்ளே செல்லாமல் பார்த்து கொள்வது என் பணி! என்ன பெருமைடா சரவணா உனக்கு! ( இப்ப மைண்டு வாய் கொடுத்து என்ன பயன்!)

பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் தலைமையாசிரியை வருகை தருவார்! தாமதமாக வருகை புரிந்த எல்லா மாணவர்களையும் மண்டியிட பணிவார். அம்மாணவர்களை நான் கவனிக்க வேண்டும். மண்டியிடாமல் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது! அதன்பின் ரவுண்ட்ஸ் சென்றுவிடுவார். எல்லா வகுப்பறைகளையும் பார்வையிட்ட பின் வருகை புரிந்து பிரம்பு கொண்டு தாமதமாக வந்த அனைவரயும் கை நீட்ட சொல்லி விளாசுவார்! அவருக்கு கை வலித்தால்,  “இரண்டு சாத்து போட்டு அனுப்புங்க, சார்”  என்று என்னிடம் பிரம்பை கொடுத்து விட்டு சென்றுவிடுவார். அப்புறம் என்ன  கடமையை செய்ய வேண்டியது தான்!

தாமதமாக பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் அவசர அவசரமாக, “சார், என்னால தான் சார் லேட்..கொஞ்சம் கிளாசுக்கு போகட்டும். நாளைக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவான்” என கெஞ்சுவார்கள். வேறுவழியின்றி, பெற்றோருடன் வருகை புரியும் மாணவர்களை வகுப்பறைக்கு உள்ளே செல்ல அனுமதிப்பதுண்டு. பெற்றோருடன் வருபவர்கள் தண்டனையில் இருந்து விலக்கு பெற்றவர்கள்! ஆனால், தலைமையாசிரியர் தொடர்ந்து வருகை தரும் அவர்களையும் விட்டு வைப்பதில்லை.   “இப்படி அடிச்சா தான் நாளைக்கு நம்ம பிள்ளை அடிவாங்க கூடாதுன்னு அக்கறை வரும் ” என்று கூறி கொண்டே அவர்கள் முன் குழந்தைகளை அடிப்பார். புலம்பியப்படி பெற்றோர் சென்றுவிடுவர். அது தான் அதிக பட்ச எதிர்ப்பாக இருக்கும் அன்று! (இது நடந்தது 1994 வாக்கில். இன்று அப்படி முடியுமா? பையனே போலீஸ் ஸ்டேசன் போயிடுவேன்னு மிரட்டுறான்! பாவம் ஆசிரியர்கள் நிலை!)

தண்டனையில் இருந்து தப்பிக்க சில மாணவர்கள் தந்திரம் செய்வது உண்டு! கொஞ்சம் சுதாரித்த 6,7,8ம் வகுப்பு மாணவர்கள், கேட் வெளியில் நின்று கொண்டு யாராவது தெரிந்தவர்கள் வரும்வரை காத்திருப்பார்கள்.  “அங்கிள், நானும் உங்களுடன் தான் வந்தேன்னு சொல்லுங்க அங்கிள்” என காக்கா பிடித்து வந்துவிடுவார்கள். அந்த பெற்றோர்களும்  “ சார்! இந்த பையனும் எங்க கூடத்தான் சைக்கிள்ள வந்தான் “ என்று தப்பிக்க வைப்பதும் உண்டு. பாவம் பசங்கன்னு நினைக்க தோணும். ஆனாலும் , பருவத்தே பயிர் செய்ய வேண்டுமே! கால காலத்தில் விதை விதைத்து பயிரிட்டு, அறுவடை செய்ய வேண்டுமே!  அது தான் விவசாயத்திற்கு நல்லது. வாழ்க்கையின் எதிர்காலம் பள்ளியில் தானே நிர்ணயிக்கப்படுகின்றது! சரியான நேரத்திற்கு வர வேண்டுமே!   
எறும்புகள் கூட, மழைக்காலத்தை  மனத்திற்கொண்டு, கோடை காலத்தில் உணவுகளைச் சேமிக்கின்றன. பல நிலைகளில் உயிர்வாழ்வன, காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப, செயல்பட்டுப் பயன்பெறுகின்றன. இதனையே 

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 
கருதி இடத்தால் செயின் (குறள் 484) என்று கூறுகின்றார் திருவள்ளுவர்.              
                                                                                                                                                                                                                                                                                                                   
தான் செய்யவேண்டிய வினையைத் தகுந்த காலம் அறிந்து செய்யவேண்டும். அவ்வாறு செய்தால், உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் என்பது இதன் பொருள் ஆகும். 

மாணவர்களை நேரத்திற்கு வர செய்ய வேண்டும். அதற்கு பள்ளிகள் பிடித்த மாதிரி அல்லவா! இருக்க வேண்டும். எவரும் அது பற்றி சிந்திப்பதில்லை. அது சரி பள்ளியை விடுங்கள் மாணவனுக்கு பிடித்த மாதிரி ஆசிரியர்களில் ஒருவர் கூட இருப்பதில்லை என்பது தான் வருத்தம். தப்பி தவறி ஒருவர் இருந்தாலும், அவரும் நிர்வாகத்திற்கு அல்லது தலைமைக்கு கட்டுப்பட்டு ,மாணவர்களை சாடுபவர்களாகவே இருக்கின்றார்கள்! காலம் தவறினால் என்னவாகிவிடும் என்று கேட்டால் எல்லோரும் கூறுவது இந்த நெப்போலியன் கதையை தான்!

உலகம் முழுவதையும் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவர விரும்பினான் மாவீரன் நெப்போலியன். ஆனால் அவன் உருசியாமீது படையெடுத்தபொழுது, காலத்தைக் கருத்தில் கொள்ளவில்லை, முழுமையான குளிர்காலத்தில் படையெடுத்துச் சென்றான். குளிரின் துன்பம் தாங்கிக்கொள்ள இயலாமல் பல படை வீரர்கள் இறந்தனர். நெப்போலியனால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. உருசிய நாட்டைக் கைப்பற்ற இயலவில்லை. நெப்போலியன் காலம் கருதிச் செயல்பட்டிருப்பானேயானால் உருசிய நாட்டை எளிதில் கைப்பற்றி மேலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்றிருக்கலாம். எனவே, காலம் என்பது, மிகவும் இன்றியமையாதது; ஒருவனது வெற்றியும் தோல்வியும், அவன் காலம் கருதிச் செயல்படுவதைப் பொறுத்து அமையும் என்பது வள்ளுவரில் தொடங்கி அனைவரும் கூறும் கருத்தாகும். இன்றைய நடைமுறை வாழ்க்கையிலும், பிறவற்றிலும், காலம் அறிந்து செயல்படுவோரின் வெற்றியையும், காலம்கருதாது செயல்படுவோரின் தோல்வியையும், நாள்தோறும் பார்த்து வருகிறோம்.

பள்ளிகளில் ‘காலம் தவறாமை’ என்பதை தவறான வழிகாட்டுதலில் புரிய வைப்பதாக உணர்கின்றேன். 

இப்போது என் பள்ளியில் குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் வருகை தரலாம். அவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது. தண்டனை வழங்க கூடாது. ஆனால், தாமதமாக வருவதற்கான காரணத்தை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். காலத்தின் அவசியத்தை உணர செய்ய வேண்டும்.
என் வகுப்பில் படிக்கும் பிரேமலதா இராஜாங்கூர் பகுதியில் இருந்து வருகின்றார். அந்த ஊருக்கு வருகை தரும் 8.15 பேருந்து வருகை புரிய தவறினால் அடுத்த பேருந்து 9 மணிக்கு தான் ! 9 மணி பஸ்ஸை பிடித்தால் 10 மணிக்கு தான் பள்ளிக்கு வர முடியும்! நான் திட்டுவேன் என்றோ அல்லது லேட்டா செல்வது தவறு என நினைத்து சில சமயங்கள் அவள் பள்ளிக்கு வருவதில்லை. விவரம் அறிந்த உடனே , அக்குழந்தையை அழைத்து, “லேட்டானாலும் வந்துவிடு. லீவு போட்டு இருந்துவிடாதே என்று கூறிவிட்டேன்!“ இப்போது தினமும் பள்ளிக்கு வருகின்றார். மேலும் 7.30 பேருந்தை பிடித்து குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றார்.  

குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் விசயத்தில் கால தாமதத்தை கணக்கில் கொண்டு தண்டிப்பதில் உடன் பாடு இல்லாமைக்கு வேறு ஒரு காரணம் உண்டு. அது ஒரு சம்பவம்!

குழந்தைகள் நேரத்திற்கு பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பதை நாம் தண்டனைகள் மூலம் கொண்டு வருவதை விட , காலம் தவறாமை என்பது வாழ்வில் முக்கியமான ஒன்று என்பதை உணர்த்துவதன் மூலம் கொண்டு வேண்டும். அது குழந்தை பருவத்தில் இருந்து கொண்டுவந்தால் தான் வளர்ந்த பின்பும் காலம் தவறமை தொடரும். பல மாணவர்கள் காலம் தவறி பள்ளிக்கு வருவதற்கு அவர்களின் பெற்றோர்களே காரணம்!
அப்போது எனக்கு திருமணம் ஆயிருக்க வில்லை. ஸ்கூட்டி வாங்கி இருந்த சமயம். காலை மீனாம்பாள்புரம் சென்று +2 வகுப்புக்கு டியூசன் எடுத்து விட்டு, பள்ளிக்கு  பயணிப்பேன். நரிமேடு, ஓசிபிஎம் பள்ளி, காந்திமியூசியம், கலெக்டர் ஆபிஸ், அரவிந்த் ஆஸ்பத்ரி, குருவி காரன் சாலை வழியாக பள்ளிக்கு வருவேன். தினமும் 8.25 மணிக்கு பள்ளிக்கு கிளம்புவேன்.
8.30 மணி வாக்கில் தினமும்  நரி மேடு ரோட்டில் ஒரு குடும்பம் பைக்கில் செல்வதை காண்பேன்.  பைக்கின் முன்னால் 2ம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தை,. வண்டி ஓட்டி கொண்டிருக்கும் (40 வயது)  அவருக்கு பின்னால் 5வகுப்பு படிக்கும் பெண் குழந்தை , அதற்கு பின்னால் அவரது மனைவி(30) அமர்ந்திருப்பார். பைகள் சைடில் தொங்கி கொண்டு இருக்கும். அது போக மீதி பொதிகளை அந்த பெண்மணி சுமந்து வருவார்.  லேடி டோக் கல்லூரியில் இருந்து நரிமேடு வரை தான் அவர்கள் என்னுடன் பயணிப்பார்கள். அதற்குள் அந்த பெண்மணி’ “சீக்கிரமா ! போங்க.. லேட் ஆகிடுச்சு. வேகமா போங்க..! அந்த லாரி காரனை முந்துங்க ! உருட்டிகிட்டு இருக்கான். “
 “டாடி! பயமா இருக்கு..!”
“வாயை மூடு.! “ பின்னால் இருந்து குரல் ஒலிக்கும்!
“சீக்கிரமா! முந்துங்க..! இவுங்களை விட்டுட்டு நான் ஸ்கூலுக்கு போறதுக்குள்ள பெரும்பாடா இருக்கு…! டெய்லி லேட்!  என்னை எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க..!”
அவர் வண்டியை முடுக்குவார். கொஞ்சம் பயமாக இருக்கும். நான் ஒதுங்கி வழி கொடுத்து செல்வதுண்டு.
வாரத்தில் இரண்டு முறை அவர்களை பார்த்துவிடுவேன். எப்போதும் பின்னால் இருந்து அந்த பெண்மணி,  “சீக்கிரம் போங்க..சீக்கிரம்” என விரட்டி கொண்டே இருப்பார்.

1994 முதல் இன்று வரை நான் காலை பைக்கில் பயணிக்கின்றேன். 90 % சதவீதம் வண்டியில் செல்பவர்கள் வண்டியை விரட்டியப்படியே அலுவலகம் செல்கின்றனர். அதுவும் குடும்பத்துடன் செல்பவர்கள் அதி வேகத்திலேயே செல்கின்றனர். அரசு பஸ்கள் பயணிகளை திணித்து கொண்டு செல்கின்றன. பலசமயங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பிதுங்கி வழிந்தபடி செல்வதை காண்கின்றேன். கல்லூரி மாணவர்கள் பைக்கில் சக மாணவனை அழைத்து கொண்டு சீறி பாய்ந்து செல்வதை காண்கின்றேன். ஆட்டோக்கள் குழந்தைகளை அள்ளிப் போட்டு கொண்டு செல்கின்றன. எல்லோருக்கும் அவசரம். பள்ளி வாகனங்களும் அதிவேகத்திலே செல்கின்றன.

அப்போது உடல்நலனில் அக்கறை கொண்டு ஒரு வருடம் காலை ஜிம்முக்கு சென்றதால் மீனாம்பாள்புரம் செல்லவில்லை. சரியாக இரண்டு வருடம் கழித்து ஒருநாள் மீண்டும் அவர்களை பார்த்தேன். அப்போதும் அந்த அம்மா சீக்கிரம் என விரட்டி கொண்டு தான் சென்றார்.  எனக்கு சிரிப்பு வந்தது. காலம் காலமாக இவர்கள் லேட்டாகவே வருகை புரிகின்றனர். எந்த விதத்திலும் தங்களை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை. ஒருவிசயம் மட்டும் மாறி இருந்தது. முன்பை விட அப்பெண்மணியின் குரல் கொஞ்சம் சத்தமாகவே இருந்தது. அதில் அதட்டல் தொணி இருந்தது!  

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவர்களைப் பார்த்தேன். நேரில் அல்ல. காலை செய்திதாளில் புகைப்படத்தில்! அவர்கள் அனைவர் புகைப்படமும் ஒரு அரசு பேருந்தின் சக்கரத்தின் அடியில் ! அந்த அம்மையாரை தவிர அனைவரும் அந்த ஸ்பாட்டிலேயே இறந்திருந்தனர். அவர் பிழைத்து கொண்டார் என்றே நினைக்கின்றேன்.

இப்போது கூட அந்த இடத்தை கடக்கும் போது அவர்கள் நினைவுக்கு வந்து செல்கின்றார்கள். அவர்களை நினைத்துவிட்டால், பைக் தானாக வேகம் குறைத்து , மிகவும் மெதுவாக செல்லும். நினைவுகள் காலத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என தனக்குதானே கட்டளை இட்டு கொள்ளும். நிஜத்தில் என்னால் காலத்தினை என் கைகளுக்குள் வைத்து கொள்ள முடிவதில்லை!  5 நிமிடம் தாமதம். 10 நிமிடம் தாமதம் ஆகி கொண்டே இருக்கின்றது!
இன்று காலை 8.10க்குதான் வீட்டை விட்டு கிளம்ப வேண்டியதாகி விட்டது. என் மனைவி வேலைபார்க்கும் பள்ளிக்கு 8.30க்குள் இருக்க வேண்டும். என் மகனை அவன் படிக்கும் லிசாட்லியர் பள்ளியில் இறக்கி விடும் போது மணி 8.20. என் மனைவி பணிபுரியும் பள்ளி தெப்பகுளம் அருகில் உள்ளது. பத்து நிமிடத்திற்குள் இறக்கி விட வேண்டும். பின்னால் இருந்து என் மனைவி விரட்டுகின்றாள், “சீக்கிரம் போங்க …! சீக்கிரம் போங்க..!”

                                                               பள்ளிக்கூடம் தொடரும்..   
மதுரை சரவணன்.