Tuesday, September 28, 2010

பொறுப்பு உடையவர்கள்.

     ஆசிரியர் என்பவர் வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் ஒளியுண்டாக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் , உயர்வு உண்டாக்கும் பெரும் பொறுப்பு உடையவர்கள்.
    
      ஆசிரியர், ஆசான், கணக்காயர், குரு, ஈகையர், கொடைஞ்ர்,ஓதுவார், பார்ப்பார், புலவர் என பலப்பெயரால் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டாலும் ,குற்றமில்லாமை, நூல்தேர்ச்சி , செம்மை, உள்ளொளி, கொடைநலம், பயிற்றல், ஆய்தல், புலமைச்சீர் எனும் சிறப்பியல்புகள் இல்லை எனில் ஆசிரியர் என்பர் ஒரு சாதாரண மனிதரே.

       ஏட்டுக்  கல்வி கற்பிப்பவரே ஆசிரியர் என்று கற்றல் தொழிலை சுருக்கி , அதன் சிறப்பும் குறுகிவிட்டது . மருத்துவர், தச்சர், கொல்லர், துன்னர் (தையற்காரன்)என பயன் தரும் ஒன்றை அதாவது தான் கற்ற ஒன்றை பிறருக்கு கற்பிப்பவர் யாவரும் ஆசிரியரே.


      அது சரி , இன்று ஆசிரியர்கள் ஏன் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது வெறுக்கப்படுகிறார்கள்?
 
       இந்த  மாணவர்களுக்கு பாடம் எடுப்பதும் ஒன்று தான் எடுக்காமல் இருப்பதும் ஒன்றுதான் என பல ஆசிரியர்கள் வருந்த கேள்வி பட்டுள்ளேன். இவர்கள் எல்லாம் மாணவர்களா...? மாடு மேய்க்க கூட லாயக்கு இல்லாதவர்கள் ...
முதலில் தம் நிலை உணர வேண்டும் , தாம் ஆசிரியராக இல்லாத போது அவர்கள் மாணவர்களாக  மட்டுமல்ல , எதுவுமாக இருந்தாலும் என்ன பயன்..?
    
    கண்டிப்பது நம் கடமை ஆனால் அதற்கு முன் நாம் ஆசிரியராகக பரிணமிக்க வேண்டும். வள்ளுவர் தன் 562  வது    குறளில் தண்டனை கடுமையானது போல்  இருக்க வேண்டும் ஆனால் அது மென்மையானதாய் அமைய வேண்டும் என்கிறார்.

       மொராச்சி தேசாய் ஒரு முறை செய்தியாளர்கள் ஒரு மாநில முதல்வரை சுட்டிக் காட்டி நீங்கள் ஏன் அவரை கண்டிக்க வில்லை என்ற கேள்விக்கு பதில் கூறும் போது,"நான் என்ன பள்ளி ஆசிரியனா , கண்டித்து கூறுவதற்கு ? கேட்டுக் கொண்டுள்ளேன் " என்றாராம்.

   கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு உள்ளது. நாம் ஆசிரியர்களாக இருந்து கண்டிக்கும் போது எந்த மாணவனும் மனநிலை பாதிக்கப்பட்டவனாக தற்கொலைக்கு முயல மாட்டான். மாணவன் மனம் உணாரும் விதமாக நாம் தண்டிக்க வேண்டும்.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம். வளர்ந்த மாணவன், தவறு செய்துவிட்டான், அவனை துணைவேந்தர் அழைக்கிறார், ஒரு பிரம்பை எடுத்தார் , எத்தனை ஆண்டுகள் இங்கு பயில்கிறாய்? மூன்றாண்டுகள். முன்றண்டுகள் பயின்று இத்தவறு செய்கிறாயா ? இது யார் குற்றம் ? மாணவன் பதில் கூறாமல் நிற்கிறான். பிரம்பை எடுத்தார் , உன்னை கண்காணிக்காதது என் குற்றம் ..உன்னை துருத்தாது என் குற்றம் என்று தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொண்டார். பையன் அவரின் காலில் விழுந்து கதறி கண்ணீர் விட்டு இனி அத் அத்தவறை செய்ய மாட்டேனென்று உறுதி கூறுகிறான். மாணவனின் தவறை உணரச் செய்தவர் துணைவேந்தர் வெண்கல ஒலியார் சீனிவாசர் !


    நாம் நம் தகுதிகளை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவு உயர்த்திக் கொள்ள வேண்டும் .  நாம் கடைக்கு செல்கிறோம் ஏதாவது ஒரு பொருளை கடைக்காரர் கொடுத்தால் அப்படியே வாங்கி வருவோமா! அதன் தரம் , மற்றும் அது எப்போது தயாரிக்கப் பட்டது , எப்போது வரை உபோயோகிக்க முடியும் என்று சரி பார்த்து , விலையை முடிந்த வரை குறைத்துப் பேசி வாங்குகிறோம். அது போல் தான் எதிலும் என்பதை உணர்ந்து நாம் தகுதி உள்ளவராக மாற வேண்டும்.


    ஆசிரியர் தினம் கொண்டாடும் நாம் ....அவரின் (டாக்டர் ராதாகிருஷ்ணன் ) வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு முறை தம் கண்ணை ஆய்வு செய்வதற்காக கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவர்  அவரை ஒரு  இருக்கையில் அமரச் செய்து பரிசோதிக்க ஆயுத்தமானார். அப்போது மருத்துவர் ராதகிருஷ்ணானிடம் தங்கள் மடியில் உள்ள குழந்தையை கீழே இறக்கி வையுங்கள் என்றார். நம் ஆசிரியர் திகைத்தார். ஏனனெனில் அவர் மடியில் வைத்திருந்தாது தன் தலைபாகையை . தலைபாகைக்கும்,குழந்தைக்கும் வேறுபாடு தெரியாத கண்ணொளியுடைய  மருத்தவரிடம் தாம் மருத்துவம் செய்ய விரும்பாதவராய் விடை பெற்று சென்றார்.

     குறையுடைய பார்வையர் குறையுடைய பார்வையருக்கு மருத்துவம் செய்தல் குறையுடையதாகும் என்பது இராத கிருஷ்ணன் கருத்து. அது போல தெளிவு பெற வந்த மாணவர்களுக்கு தெளிவிலாத ஆசிரியர் தெளிவு காட்ட முடியாது என்பது அவர் கருத்து.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக்  கொள்ளார்
 குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழ மாறே "
                                                               -திருமூலர் (திரு மந்திரம் 1680 )      



திருவள்ளுவர் , தமக்கு தெளிவில்லாத ஒன்றில் ஒருவர் ஈடுபாடுவதே அவர்க்கு இழிவு என்பதை 464 வது குறளில் கூறுகிறார் .

"தெளிவி லதனைத் தொடங்கார் இனிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர் "
  
  ஆகவே, ஆசிரியர்களாகிய நாம் நம் தகுதிகளை வளர்த்துக் கொண்டு வகுப்பறையை இனிமையானதாக மாற்றி , நம் கடமைகளை உணர்ந்து சிறப்பாக செயல் படவேண்டும்.

ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றால் ஒரு சிறைக்கூடம் மூடப்படுகிறது என்பது பொருள் . ஆகவே , அந்த பொருள் உணர்ந்து தம் தகுதிகளை மேம்படுத்தி ஆசிரியர்கள் தம் பணியினை செய்திட வேண்டும் .

Monday, September 27, 2010

என் கணிதம்

கண்களால் கூ(ட்)டி
கைகளால் பெரு(க்)கி
கால்களால் வகுத்து
கழிந்தது கற்பு

Thursday, September 23, 2010

தோற்றுப்போனேன் ...

சொற்கள் வந்து விழ
மூளையை முடுக்கி
பொதிந்த நியூரான்
பதிவுகளை வேரோடு
பிடுங்கி பார்க்கிறேன்
குரோமோசோம் பிரதியிலும்
வெளிப்படாத இடங்களையும்
புகுந்து தேடுகிறேன்
உன்னை வருணிக்க
வரிகள் தேடி ....

கணையத்தில் இருக்குமெனக்
கனவு கண்டு
தேடினேன்....
வரிகளில் இனிமை
இன்சுலினுக்கு ஆகாதாம் ....
கட்டுப்படுத்தவே மட்டுப்பட்டு
வெளியேறினேன் வரிகள் தேடி ...

நடை பயின்ற
நாட்களில் இருந்து
நாடி நரம்பு நாளங்கள்
புகுந்து தேடினேன்
கிடைத்தது...
இரத்த அழுத்தம் !
 
நீண்ட தேடுகையில்
ஒரே இடத்தில் அமர்ந்து
உன் நினைவில் பூத்த
மதுவுக்கு அடிமையானதால்
வந்ததாம் இந்த கொதிப்பு ..

செயற்கை கருத்தரிப்பு
போல ...
பிற கவி வரிகளிலும்
புகுந்து முயற்சித்தேன்
இணைய  மறுத்து
சினையாக வில்லை
தோற்றுப்போனேன் ...

நீண்ட தேடுதலில்
நரம்புகள் செயல் இழந்து
மூளை நரம்புகள் செயல்பட
மறுக்கவே ...
வலிப்பு வந்து
முகம் கோணி
கை கால் இழுத்து கிடந்தேன்
வாரி எடுத்து
மடியில் கிடத்தினாய்
முகம் பார்த்தேன் ....

'அம்மா' என்றது வாய்
இதற்க்கு ஈடு  இணையான
வார்த்தைகள் உண்டோ ...!

Tuesday, September 21, 2010

அண்ணாவின் வழி வந்தவர்கள் ...

கடந்த ஞாயிறு அன்று மதுரையில் செனாய்நகர் மாநகராட்சி பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணிச் செல்ல தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூடு நடவடிக்கைக்குழு , ஒரு நபர் குழுவில் கைவிடப்பட்டுள்ள மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் தர ஊதியத்தினை வழங்கிடக் கோரி தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஒன்றுகூடினர்.


       அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு என்பதால் அனைத்து ஆசிரிய நண்பர்களையும் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  நண்பர்களை சந்திக்க வேண்டும் என்றால் ஒன்று திருமண விழா,காதணி விழா, புதுமனைப்புகு விழா மற்றும் ந்த மாதிரி பொது பிரச்சனைகளில் மட்டுமே முடிகிறது. ஆமாம் இலவுக்கும் ஒன்றுக்கூடுவோம் அங்கு தான் சிரித்து மிகவும் தமாசகவும் பேசமுடியும்.

    அங்கு நம் பிரபல பதிவர், ஆசிரிய நண்பர் ,எழுத்தாளர் வந்துஇருக்காங்க நிறையக் காய் வைங்க என்று தன் அன்பைப் பொழியும் , என்னைப் போன்று நம் மணி ஜிக்கு பிடித்த , யானை மலை மீட்பில் முத்துக்குமாருடன் தீவிரமாக இருக்கும் பிரபலம் , ஆசிரியர்களுக்கு முன்னோடி ( ஓவர் பில்டப் , மதுரைக்காரங்கானாலே பாசக்காரப்பயலுக தானப்பா) திரு ஜெர்ரி யை காண முடிந்தது.

சரி ...ஏன் இந்த போராட்டம் என நீங்கள் கேட்பதை விளாவாரியாக சொல்லுகிறேன். ஆசிரியர்கள் என்றால் கலைஞர் அவர்களுக்கு கொள்ளைப்பிரியமாயிற்றே பின் எப்படி எந்த அநியாயம் என குமறி , அதிகாரிகள் சரிவர கவனிக்காததை சுட்டிக்காட்டவே இந்த போராட்டம் ஆரம்பம் என சொல்லி பல்லாயிரக்கனக்கான ஆசிரியார்கள் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் திரண்டனர்.

இது கலைஞருக்கு அவருடைய அரசுக்கு எதிரான போராட்டமோ என எண்ணிவிடாதீர்கள். தமிழர் நலன், தமிழகத்தின் நலன் பாதிக்கப்படும்போதெல்லாம் எம்பத்து ஏழு வயதிலும் உணர்ச்சிப் பொங்கிட தானே தலைமை வகித்து போராடி வருகிறவர் நம் கலைஞர். அவர் நமக்கு கேட்டும் தருவார். கேட்காமலும் தருவார்.
அவரால் நேசிக்கப்பட்டு வருகிற ஆசிரியர் சமுதாயம் தமது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த போராட்டம் நடத்துகிறது. இது அவரையோ , அவரது அரசையோ காயப்படுத்த நடத்தப்படும் பேரணி இல்லை என்ற வாசகத்துடன் தாங்கள் ஒரு நபர் கமிஷனால் ஏமாற்றப் பட்டுவிட்டோம் என அணி திரண்டனர்.

    காரணம் அரசாணை எண் 271 படி லேப் அசிஸ்டெண்ட் , 303 படி போர்மேன் , 326 படி    
கிரேடிங்அசிஸ்டெண்ட், 273 படி ஹாஸ்டல் சூப்ரண்டண்ட் , 308 படி ஆடியோ விசுவல் டெக்னிசியன் என அனைத்து துறைகளிலும் 5200 -20200 +(1900 /2400 /2800 ) என்பது திருத்திய ஊதியத்தில் 9300-34800+4200 என மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் 5200 -20200 +2800 என்ற நிலையில் வெறும் 500 ரூபாய் சிறப்புப்படியாக கொடுத்து ஏமாற்றுவதுப்போல தெரிகிறது என்கின்றனர்.
  
அண்ணாவின் வழி வந்தவர்கள் ஆசிரியர்கள் தேங்கினால், நாடு தேங்கும் என்பதை அறிய மாட்டார்காளா .... ? என பொறுமைகாக்கும் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமாகும் முன் ஆசிரியர்களைக் கொண்டே அரியணை ஏறிய அரசு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றனர். பார்க்கலாம். 

Sunday, September 19, 2010

சமச்சீர் கல்வி கருத்தரங்கு ஒரு அலசல்

சமச்சீர் கல்விக் கருத்தரங்கு என தினமலர் நாளிதழில் விளம்பரம் பார்த்தவுடன் அரசு கல்வியியல் விரிவுரையாளர் சாந்தி அவர்கள் எனக்கு செல் மூலம் அழைத்து நாம் கலந்துக் கொண்டு நம் கருத்துக்களை தெரிவிக்கலாம் வாருங்கள் என்றார். நானும் , போன் செய்து விவரங்களைத் தெரிந்துக் கொண்டு , போனில் தருமி அய்யாவை அழைத்தேன். முடிந்தால் வருகின்றேன் என்றார். நல்லவேலை அவர் வரவில்லை. (வந்திருந்தால் என்னை கிழி கிழி என கிழித்து ஒரு இடுகைப் போட்டுயிருப்பார்.)

            ஆளுங்கட்சி கூட்டத்திற்கு தெரியாமல் ஒரு எதிர்க்கட்சிக் காரன் சென்றால் என்ன ஒரு உணர்வு இருக்குமோ அப்படி ஒரு உணர்வில் இருந்தேன்.அது ஒரு மெட்ரிக்பள்ளிகளின் சங்கக் கூட்டம் போன்றே இருந்தது. சமச்சீர்கல்வி கருத்தரங்கம் என்ற தலைப்பில் சமச்சீர் கல்வியை எதிர்ப்பதாக இருந்தது. நல்ல திட்டம் தான் அதை அரசு அவசர அவசரமாக கொண்டுவந்துவிட்டார்கள் என்ற உணர்வுடன் எதோ ஒன்று குறையுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.  சம் திங் இஸ் மிஸ்ஸிங் என்று சொன்னார்கள் ஆனால் அது எந்த சம்திங் என்று தெரியவில்லை என்று என் அருகிலிருந்த காளையார் கோவில் இருந்து வந்திருந்த மெட்ரிக் ஆசிரியர் சொன்னக் கமண்டு பிடித்திருந்தது. அது தான் உண்மை.

        மெட்ரிக் பள்ளிகள் ஒரு பயத்தில் உள்ளன என்பது அவர்களின் ஒருங்கிணைப்பிலே தெரிகிறது. இருந்தாலும் அவர்களின் சில ஆதாங்கங்களை ஏற்க முடியாமல் இல்லை. பாடத்திட்டம் அனைவரையும் கருத்தில் கொண்டு இருந்தாலும் , கிராமப்புற மாணவர்களை குறைத்து மதிப்பிட்டு , மெட்ரிக் தரத்தை குறைக்கும் விதத்தில் இருக்கிறது .பாடத்திட்டம் இணையத்தில் வெளியிட்டது மிகவும் வரவேற்க தக்கதாக அமைந்து இருந்தாலும் , பாடப் புத்தகத்தில் ஏமாற்ற்ப் பட்டுள்ளோம் .அதனால் எங்கள் பள்ளி மாணவர்கள் உலக தரமிக்க ஒரு கல்வியை கொடுக்க முடியவில்லை என்றும் காசு கொடுத்து எங்களிடம் வரும் பெற்றோர்களுக்கு கல்வியை நல்லத் தரத்துடன் கொடுக்க இந்த பாடப்புத்தகத்தில் வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இவர்கள் இப்பாடத்திட்டம் கொண்டு வந்துள்ள புத்தகத்தினால் ஐந்தாண்டில் மிகவும் பின் தங்கி விடுவார்கள் என்கின்றனர்.

     நிகழ்ச்சியை சுப்பலெஷ்மி லெட்சுமிபதி பவுண்டேசனின் தலைவர் டாக்டர்.ஆர்.லெட்சுமிபதி தொடங்கிவைத்து பேசினார்.அன்று ஹிந்தி படிக்காததனால் பல்ர் வேலை வாய்ப்பு இழந்தனர். தன் கல்லூரிக்கு கேட்டரிங் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வந்த கண்ணன் என்பவர் ஹிந்திப் படிக்காததால் இழந்த ஏர் இந்திய வேலை பற்றி தனக்கேயுரிய நகைச்சுவையால் விளக்கினார். ஹிந்தி இரண்டு தலைமுறை படிக்காததால் தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தான் தொடர்ந்து பயணம் செய்வதால் பல விசயங்களை கற்றுக் கொள்கிறேன் என்றார். கபில் சிபில் இன்று அனைவரும் சீனா மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். னால் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கவும் . பிரெஞ்சு , ஜெர்மன் , சீன போன்ற பல மொழிகளை நாம் கற்பிக்க வேண்டும் . மாணவர்கள் பிற மொழிகளை கற்றுக் கொள்ள சமச்சீர் திட்டத்தில் வழியில்லை. ஐந்தாண்டுகளில் நம் மாணவர்கள் பின் தங்கியிருப்பார்கள். எனவே இந்த கருத்தரங்கு அதற்கான ஆரம்பம் என்று கூறினார்.


     சமச்சீர் கல்வி பாடத்திட்டம் -பரிசீலனையும் பரிந்துரையும் என்ற தலைப்பில் திருமதி எஸ். பிரேமலதா, மகாத்மா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் அவர்கள் பேச வந்தார். ஆசிரியர்கள் கையில் தான் அனைத்தும் உள்ளது. நம் சமச்சீர் கல்வி திட்டம் அனைவருக்கும் தரமானக் கல்வி, இடைநிற்றல் இன்றி கல்வி, மனரீதியாக பாதிக்கப்படாதக் கல்வி, சரியான வயதிற்கேற்றக் கல்வி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய புத்தகத்தில் ஆறு அல்லது ஏழு யுனிட்டுகள் தான் உள்ளன. நான் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் விசிட்டிங் ஃபக்குலிட்டி , சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கல்ப் நாடுகளில் வைத்துள்ளார்கள். அதில் சமச்சீர் கல்வி உள்ளது. அனைத்து முறைகளையும் ஒன்றினைத்து ஒரு பாடத்திட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் ஏன், எதற்கு , எப்படி என சிந்திக்கும் ஆற்றல் இல்லை . மாணவர்களுக்கு கற்பனைத்திறனுக்கு இடமளிக்கவில்லை . படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. உலகத்தரத்துடன் போட்டிப்போடும் விதமாக அமையவில்லை. அரசு அவசர அவசரமாக ஒரு திட்டதை கொண்டுவந்துள்ளது அதுவும் கிராமப்புற மாணவர்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. அதனால் மெட்ரிக் பள்ளிகளின் தரம் குறைந்துள்ளது.சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் மாணவர்களை உள்ளடக்கியதாக இல்லை. ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் .முதல் வகுப்பு பாடபுத்தகம் மெட்ரிக் மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. அவை ஒரு வாரத்தில் முடித்து விடுவதைப்போல உள்ளது என்றார். எங்கள் பள்ளியில் பிரைமரி வகுப்புகளில் நாங்கள் ஒரு மாடியுல் தாயாரித்துள்ளோம் அதனடிப்படையில் தான் செயல் படுகிறேம். பட்டம் என்றால் சமச்சீர் கல்விமுறையில் ஒரு படம் மட்டும் தான் உள்ளது. எங்கள் பள்ளியில் நாங்கள் பட்டம் என்பதை செய்து காட்டி, மாணவனுக்கு தயாரிக்கச் செய்து , அதை பறக்க விட கற்றுத் தருகிறோம். அது காற்று எந்த திசையில் அடிக்கிறது என்று பார்த்து பறக்க விட வேண்டும் என்ற அறிவியலைக் கற்றுத் தருகிறது என்றார்.கணக்கு பாடம் 100.௦௦ என்பதற்குள் தான் உள்ளது. ஏறுவரிசை , இறங்கு வரிசை என்பது கிடையாது. வாசிப்பு திறன், கேட்டல் திறன் குறைவாக உள்ளது .அரசு பள்ளிகளுக்கு இது குறித்து ஒரு விழிப்புணர்வு இல்லை. அனுபவமுள்ள ஆசிரியர்களை அழைத்து பாடத்திட்டம் , பாடப்புத்தகம் தயாரிக்கவில்லை. நம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
     அடுத்ததாக திண்டுக்கல் எஸ்.எம்.பி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெயப்பிரகாஷ் மதுரையில எது நடந்தாலும் , அது தமிழ்நாட்டில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் . அதற்கு நம் லெட்சுபதி ஒரு விதை போட்டுள்ளார். நானும் மதுரைக்காரன் தான் .எனக்கு கன்னடம் தெரிந்தால், கர்நாடகாவில் வேலை கொடுத்தார்கள். இது சம்ச்சீரில் சாத்தியமா? பல மொழிகளை கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனக்கு சமச்சீர் கல்வி முறையில் உடன்பாடு இல்லை. 1966 ல் கோதாரி கமிசன் வந்தது. அதன் அடிப்படையில் என்.சி.எப்.2005   உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி குறித்து ஒரு ஆய்வு தந்தது யாஷ்பால் கமிட்டி. அதன் பின் முத்துக்குமரன் கமிட்டி என்ற ஒன்று வந்து சமச்சீர்கல்வி முறையைக் கொடுத்தது . அதை அவசர அவசரமாக அரசு கொண்டுவந்துள்ளது. கமிஷனராக இருந்த விஜயக்குமார் ரிஷி வேலி சென்று எபில் பாட முறையைக் கொண்டு வந்தார். அது ஜெ.கே. கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களை உள்ளடக்கியது. சி.பி.எஸ்.சி பாட திட்டம் சென்ரல் கவர்மெண்டு குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டது . அது நாடுமுழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது. அப்படி இருக்க ஏன் இங்கு மட்டும் இப்படி...?
       புலி வருகிறது புலி வருகிறது என வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். ஆனால், வந்தது புலியல்ல , புளி . அந்த புளியாவது பாத்திரம் தேய்க்கவாவது உதவும் . ஆனால், இந்த புளி சாப்பிட்டால் குமட்டும் , வயிற்றில் அல்சர் உண்டாகும் அப்படி மேசமானது தான் சமச்சீர் கல்வி .

       திண்டுக்கல்லில் நடந்த சமச்சீர் கல்வி கூட்டத்தில் நான் கலந்துக்கொண்டேன் , என்னுடைய ஆலோசனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இதுபோலத்தான் பல இடங்களில்நடைப்பெற்று இருக்கும். நான் ஒரு ஆசிரியரிடம் ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தை கொடுத்தேன் அவர் அதை பார்த்துவிட்டு இது ஒரு வாரத்தில் முடிக்க வேண்டுமா என்கிறார். மைட்டோக்காண்டிரியாப் பற்றி செய்தி இல்லை.  செல் வேறுபாடு இல்லை. முதல் வகுப்பில் எதுவும் சரியில்லை. ஒரு சாதாரண
விளக்குமாறு அதன் படம் கூட இடம் பெறவில்லை. (என்னக் கவலை பாருங்கள்) . கவர்மெண்டு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கே செல்வதில்லை. ஒரு அதிகாரி ஒருவரை மெமோக் கொடுக்கிறது .உடனே ஆசிரியர்கள் அவருக்கு சாதகமாக கோரோ செய்து அதை ரத்துச் செய்கின்றனர். ஆனால், மெட்ரிக் பள்ளிகளில் அது முடியுமா..? ஒரு ஐந்து நிமிடம் லேட்டாகச் சென்றால் அவ்வளவு தான். பள்ளிக் கல்வி எதில் கவனம் காட்ட வேண்டுமோ அதை விட்டு எதோ புதிய கல்வி முறையை அவசரஅவசரமாக புகுத்துகிறது.

    திண்டுக்கல் என்றால் பிரியாணி பேமஸ் .அங்கு பல பிரியாணிக் கடைகள் உள்ளன. ஆனால் காசு கூடக் கொடுத்தாலும் பரவாயில்லை என வேலு பிரியாணிக் கடைக்கு கூட்டம் செல்வது எதனால்..?அது போல எங்களை தேடி மக்கள் வருகிறார்கள் , தரமான கலவிக் கொடுக்கிறோம் . அதை அரசு நசுக்கப் பார்க்கிறது. கட்டாயப்படுத்தி திணிக்கிறது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அறுபத்து நான்கு மட்டுமே , ஆனால் நாங்கள் தொண்ணுற்று நான்கு அதற்கு மேல் தேர்ச்சி சதவீதத்தைத் தருகிறோம் .

  கத்தர் நாட்டில் அரசு பாடத்திட்டம் வரைவு கொடுக்கும் . அதனடிப்படையில் பள்ளிகளே பாடதிட்டங்களை வரைந்து , தம் மாணவனுக்கு தகுந்த பாடப்புத்தகம் தயாரித்து செயல் படுகிறது. அது போன்று சமச்சீர் கல்வி முறையில் பாடக்குறிக்கோள்களை கொடுத்து விடுங்கள் , நாங்கள் அதற்கு தகுந்த சிலபஸ் வகுத்து, அதனடிப்படையில் பாடப்புத்தகம் தயாரித்து கற்றுக் கொடுக்கிறோம். அதனை நல்ல முறையில் கண்காணித்து ,அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

    அமெரிக்காவில் நிறம் அடிப்படையில் பாகுப்பாடு கூடாது என அனைவருக்கும் ஒரே க் கல்வி . பிற மேலைநாடுகளில் சாதி, மதம் அடிப்படையில் வேறுபாடுக் கூடாது என ஒரே சமச்சீரானக் கல்வி . நாம் அதைத் தானே செய்து கொண்டிருக்கிறோம். பின் என் இந்த சம்ச்சீர் ...

முத்துக்குமரன் கமிட்டி கிண்டர் கார்டன்களை பலப்படுத்த வேண்டும் என்கிறது . அதைபலப்படுத்தி விட்டு , அரசு இந்த சமச்சீர் கல்வியை கொண்டு வந்திருக்கலாம்.அரசு மட்ரிக் பள்ளிகளுக்கு கல்லூரியைப்போல சுயாட்சி அதாவது தன்னாட்சி அந்தஸ்தை வழங்கலாம்.  

   நீராடும் கடலுடுத்தப்பாடலை மிக வேகமாக வரும் மெட்டில் பாடி கைதட்டு வாங்கி , இப்படி பாடும் காலம் விரைவில் வந்துவிடும் அதைத்தான் இந்த சமச்சீர் கல்வி முறை தர நினைக்கிறது என முடித்தார்.


அடுத்ததாக கலந்துரையாடல் , ஆசிரியர்கள் குழுவாகப் பிரிந்து, பாடப்புத்தகங்களில் நன்மை தீமைகளை விவாதம் செய்தனர். ( அச்சமயம் நான் , மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் பலரும் கம்பஸ் சுற்றிப் பார்க்கச் சென்றோம் . ஒரு கப்பலையே ஐந்து கோடிச் செலவில் கொண்டுவந்துள்ளார். ஓடாது, கப்பலைப் போன்று அனைத்து மிஷின் , அதற்கான பாதுகாப்பு ,  கடலில் செல்லும் உணர்வை ஏற்படுத்தும் சிமுலேசன் சூப்பர்.ஒரு அற்புதமான உணர்வு .மாணவர்களையும் அழைத்து வந்து காட்ட அனுமதி உண்டாம்.போனதற்கு பயனுள்ளத் தகவல்)


     தயவு செய்து சிரிக்காமல் சீரியசாக படிக்க வேண்டும் . அப்புறம் நான் முழுவதையும் சொல்ல மாட்டேன். அந்த கூட்டத்தில் ரசித்து சிரித்து கொண்டு இருந்தவன் நானாகத்தான் இருக்க முடியும்.

ஆறாம் வகுப்பு பாடம் ஆங்கிலம் மற்றும் தமிழ் குறித்து விவாதத்தின் சாரம் ஒரு ஆசிரியர் வந்தார் . சொன்னார். தங்கிலீசில்

மெரிட் என்றளவில் பள்ளி மாணவனுமாணவர்களுக்கு குழுவிவாதத்திற்கு இடமளிக்கிறது. புதிய விசயங்களை பகுத்தாராய இடம் வகுக்கிறது. யுனிட்கள் பாடல். உரைநடை, நாண்டிடெயில் என பிரிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு கிராமர் மிகவும் கடினமாக இருக்கும் . ஆசிரியர்கள் பாவம்.
  குறை என்றால் பயிற்சிகள் மிகவும் குறைவாக உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளதால், நம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல. குறைந்த கேள்விகளை உடையதால்,மதிப்பீடுவது இயலாது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

  அடுத்து ஆறாம் வகுப்பு அறிவியல்....

   நம் மாணவர்களின் ஐ.கு விற்கு தகுந்தமாதிரி யில்லை. ஏற்கனவே இதிலுள்ள விசயங்களை படித்துள்ளார்கள். தாவரங்களின் அறிவியல் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. வரையறைக் கொடுக்கப்படவில்லை. தாவரவியல் என்பதற்கு வரையறையில்லை. பாட வினாக்கள் . புரிதல்,அறிவு பெறுதல்,திறன் படுத்துதல், ஒப்பிடல் போன்றவற்றிற்கு வாய்ப்பு இல்லை. கே.ஜி. அடிப்படையில் அறிவு புகட்டி பின் புத்தகம் தாயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.அப்ஜெக்டிவ் ஓரியெண்டாக இல்லை.


ஆறாம் வகுப்பு கணிதம் பாடப்புத்தகம் குறித்து....

சிலபஸ் பொருத்தமட்டில் ஒ.கே.  பாடப்புத்தகத்தில் அளவுகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. குறைந்தளவு மாதிரி கணக்குகளே கொடுக்கப்பட்டுள்ளது .

ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகம் குறித்து ....

   வார்த்தைகள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளன. நிறைய எழுதுகிற விதமாகவே புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. பலூன் , மிட்டாய் படங்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. பொருள்களை அடையாளம் காணும் விதமாக படங்கள் கொடுக்கப் படவில்லை. உதாரன தக்காளிப் படம்.


ஒன்றாம் வகுப்பு கணிதம்

மாணவர்கள் கோடு போட்டு செய்யும் விதமாக இருப்பதால், அவர்கள் நிறைய கோடு போடுவார்கள் அது தவறான செயலை கற்றுத்தரும். உருவங்கள் செவ்வகம் , சதுரம் கொடுக்கப்பட்டுள்ளது . அவர்களுக்கு கன உருவங்களை கண்டுபிடிக்க முடியாது. டிரேச் எடுக்கும்போது குழப்பம் அடைவார்கள். பிலேஸ் வேலிவ் கொடுக்கப்படவில்லை. நோறு வரை தான் கற்றுத் தரமுடியும். கூட்டல் , கழித்தல் கணக்குகள் போதுமானதாக இல்லை.

ஒன்றாம் வகுப்பு ஆங்கிலம்

ஆங்கில டீச்சரா இல்லை அறிவியல் டீச்சரா எனஅடையாளம் தெரியவில்லை . நான் வகுப்பில் பார்ட்ஸ் ஆப் பாடி கொடுத்தேன் அதுஆங்கிலப்பாடம் என்று பெற்றோர்களுக்கு தெரியவில்லை. மாணவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பு அதில் இல்லை.  ஆங்கிலம் அறிவியல் பாடம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. லிசா என்ற பெயர் கூட இல்லை. அப்புறம் எவ்வாறு ஆங்கில அறிவு வளரும். வாக்கியத்தில அமைக்க வாய்ப்பு யில்லை.    

       இனி என் கமண்டு ...


ஆம் நீங்கள் (மெட்ரிக்)அடையாளம் இழக்கும் நேரம் வந்துவிட்டது.   சமச்சீரில் நீங்கள் எதுவும் இல்லை என்றால் நம்புவதற்கு எதுவும் இல்லை. எதுவானாலும் குறைகளை கருத்தில் கொண்டு அதனை உடனே நிவர்த்திச் செய்யும் பொருட்டு அரசு செயல் படுகிறது . அறிவியல் பாடப்புத்தகம் மீண்டும் சரிசெய்ய ஆணைபிறப்பித்து .ஏற்கனவே நடைமுறைபடுத்தியுள்ளது. சமச்சீர் அரசு வெப் சைட்டில் கமண்டு பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் , இது வரை எதுவும் தெரிவிக்காமல் எல்லா பள்ளிகளும் ஒன்றாக இணைந்து , நாம் அடையாளத்தை இழந்துவிடுவோம் என பயந்து , ஒரு திட்டத்தை எதிர்ப்பது தவறு. அதிலுள்ள குறைகளை திருத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்கலாம். அட்மிசன் குறைந்து வருவாய் இழப்பு வரும் பயம் தெரிகிறது . இதுவே இத் திட்டத்தின் சாதனை.

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளையும் இணைத்து ஒரு கருத்தரங்கம் போடுங்கள் உண்மையான கருத்து வெளிப்படும். அரசு புத்தகத் தயாரிப்புக்கு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களையும் அழைத்து தான் புத்தகம் தயாரித்துள்ளது. ஆனால், நீங்கள் பங்கு கொள்ளாமல் , எங்களை புறக்கணித்து விட்டனர் என மேடை யேரி புலப்புவது உங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களை ஏமாற்றுவது போல . விஜயக்குமார் அவர்கள் தயவால் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒருசிலர் தவறானவர்களாக இருக்கலாம் அதற்காக அனைவரையும் குறைக்கூறுவது தவறு. செயல் வழிக்கல்வி திட்டம் நீங்கள் சொல்லும் அத்துனை விசயத்தையும் உள்ளடக்கியது. மாணவனை உள்ளடக்கிய பாடம் தான் உள்ளது. ஏபிஎல் அட்டைகளை வைத்து பாடம் நடத்தி விட்டு , சொல்லுங்கள் தெரியும் இப்பாடப்புத்தகங்களின் உண்மை நிலை.  சில குறைபாடுகள் இருக்கலாம் அதை அரசு போக்கும் .அரசு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சிகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதை உங்களூக்கும் தேவை என்ற அடிப்படையில் கேட்பது தவறில்லை. ஒரு பக்கம் பாடபுத்தகம் எங்கள் தரத்திற்கு இல்லை என்று கூறிவிட்டு , அவை எம் மாணவர்களலால் ஒரே நாளில் முடிக்கப்பட்டு விடும் என சொல்லிவிட்டு, அப்புத்தகத்தினை செயல் படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சித் தேவை என கேட்பது எந்த விதத்தில் நியாயம்?

    எனக்கு ஒன்று தெளிவாக புரிகிறது. பெற்றேர்கள் அனைத்தும் ஒன்று என்று ஆகிவிட்டால், சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்திற்கு தாவி விடுவார்களோ என பயப்படுகின்றனர். போகும் காலத்தில் இண்டர்நேசனல் பள்ளிகளுக்கு தான் வாய்ப்பு அதிகமாகிவிடுமே என்று கேள்விக் குறியும் உள்ளது.

      இதை எல்லாம் முடிவில் கொண்டு அரசு மாணவர்கள் உலகத் தரமான கல்வி கொடுத்து , வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கல்வியை ,ஒரு போட்டி உலகை சந்திக்கும் வகையில் உருவாக்க அனைத்து தரப்பையும் பயன்படுத்த வேண்டும்.

Friday, September 17, 2010

எப்படி இது சாத்தியம் ..!

பைக் சத்தம் கேட்கிறது
அம்மா...! அப்பா வந்திட்டார் என்றேன்.
தெருவில போரவனையெல்லாம்
அப்பான்னு சொல்லாத என்றாள்.
சிறிது நேரத்தில் ...
டேய் அண்ணன் வந்திருக்கிறான்
கதவைத் திறந்து விடு
எந்தச் சத்தமும் கேட்காமலே
அடுப்படியிலிருந்து சொன்னாள்..
சரியாகத் தான் இருந்தது .
எப்படிம்மா...? எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
அம்மா ..கொலுசு சத்தம் கேட்குது
அக்கா வந்திருக்கா போல
திறக்கிறேன் என்றேன்.
டேய் தம்பி ....
அது அடுத்தத்தெரு அகிலா
அவள் சொல்வதை காதில் கேட்காமலே
திறந்தேன் ..
இதுவும் சரிதான்...!
ஆட்டோ சத்தம் கேட்கிறது
தம்பி ...இந்த பால் பக்கெட்டை
பக்கத்து வீட்டு மாமிகிட்ட கொடு
மாமி குடும்ப சகிதமாக இறங்கினாள்
எப்படி இது சாத்தியம் ....!
டேய் மாடியில டி.வி. பார்க்கிற
உன் அண்ணனை நிறுத்தச் சொல்லு
பரிட்சைக்கு படிக்கச் சொல்லு
எப்படி மியூட்டில் டி.வி பார்ப்பதைக் கண்டாள்
எல்லாம் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது
ஹாலில் துணிமடித்துக் கொண்டே
அப்பா வந்துட்டாரு போய் பையை வாங்கு....
பைக் சத்தமில்லாமல் வந்த அப்பாவை எப்படி கண்டுபிடித்தாள்..?
பாட்டி பாத்ரூம் லைட்ட ஆப் செய்யல
போய் ஆப் செய்துட்டு வா..
எப்படி அத்தனையும் பார்க்காமலே
என படுக்கையில் யோசித்தேன்
டேய் என்ன யோசனை
எப்படி எதையும் பார்க்காமலே சொல்லுகிறேன்னுதானே...?
பாய்ந்து போய் கட்டியணைத்து
எப்படி என கண்ணால் எறிட்ட என்னை
முத்தமிட்டே சொன்னாள்
நான் உன் அம்மாடா ....
அப்போது தான் உணர்ந்தேன்
அம்மாவின் முழு அர்த்தத்தை..!

Thursday, September 16, 2010

காகிதப்பூ மாலை

        மாணவர்களுடன் பேசும் போது புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும் . ஆனால் , நாம் மாணவர்களை பேச விடுவதேயில்லை. கல்வி முறையில் மாற்றம் கொண்டுவந்தாலும் , இன்னும் நாம் பழைய லெக்சர் முறையிலேயே நம் கை ஓங்கும் மாறு , கருத்துக்களை திணித்துக் கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரியது.  மாணவனை பேசவிடும் போது தான் அவனின் மனம் திறந்த பேச்சு வெளிப்படும் , அவனின் உளவியல் பண்புகள் அறிய முடியும்.

              நேற்று நான் ஐந்தாம் வகுப்பு மாணவனின் ஆசைகளை கேட்டேன். நீங்கள் எதுவாக மாற விரும்புகிறீர்கள்? ஏன் அப்படி ஆசைப்படுகிறீர்கள் என்பதையும் சொல்ல வேண்டும் என கேட்டேன். ஒவ்வொருவரும் நான் டாக்டராக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும் , இஞ்ஞினியர் ஆக வேண்டும் , கலெக்டராக வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கான காரணமாக தன் அம்மா அப்படி விரும்புவதாகவும் கூறினார்கள்.


       ஆசிரியர்கள் ஒருபுறம் மாணவனின் விருப்பம் இல்லாமல் அவனின் மனநிலை உணராமல் , கருத்துக்களை திணிப்பதுப் போல் , பெற்றோர்களும் அவர்கள் பங்கிற்கு தங்களின் நிறைவேறாத ஆசைகளை திணிக்கின்றனர். அது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதுவே அவனை கல்வியை விட்டு ஒதுங்கச் செய்யலாம். தயவு செய்து மாணவனின் விருப்பம் அறிந்து செயல் பட்டால், நல்ல எதிர்காலத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.


    அவர்களில் வித்தியாசமான மூன்று மாணவர்களை அறிய நேர்ந்தது. ஒருவன் பெயர் சக்தி வேல். அவனின் ஆசை நூற்றியெட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேண்டும் என்றான். ஏன் என்றதற்கு . நான்குவழிச் சாலையில் தினமும் ஒரு ஆக்ஸிடெண்டு நடக்கிறது , பார்க்க பரிதாபமாக இரத்தம் ஒழுகி , ஆபத்தான சூழலில் உயிருக்கு போராடுகின்றனர். அவர்களை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து , உயிரைக் காப்பற்றவே நான் ஆம்புலன்ஸ் டிரைவராக விரும்புகின்றேன் என்றான்.

                  ஆம்புலன்ஸ் டிரைவராக விரும்பும் மனிதநேயம் மிக்க சக்திவேல்



       அடுத்ததாக துர்க்கா தேவி ,லட்சியங்கள் என்பது வெறும் வாய் வார்த்தைகள் அல்ல , அவை நிஜம் என்று உணர்த்தியவள். அவளின் டாக்டராகும் கனவு என்பது அவளின் கிராமத்து மக்களுக்கு சேவை செய்வது என்று கூறுவதுடன் நிற்காமல் அதற்கான காரியத்தை செயல்படுத்த இப்போதே ஆய்த்தமானவள்.
          
        எங்கள் பள்ளியில் நான் தலைமையாசிரியராக பதவி உயர்ந்த பின் , ஒவ்வொரு வருடமும் அறிவியல் கண்காட்சி , புத்தகத் திருவிழா அதுவும் கிழக்கு சார்பாக பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இருதினங்கள் நடைப்பெறும். அது மட்டுமல்லாது வாசகர் வட்டம் சார்பாக மாணவர்கள் புத்தகம் வாங்க வேண்டும் .அப்புத்தகத்திலுள்ளக் கருத்துக்களை படித்து பிறருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.தற்போது மதிய இடைவேளையில் புத்தக் பூங்கொத்து மூலமாக புத்தகங்களை படித்து குழுவில் பகிர்ந்துக் கொள்வதுடன் , குழுவில் ஒருவர் சிறந்ததை அன்று மாலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் .
     இந்த சுயபுராணம் எதற்கு என்றால், நான் அவள் டாக்டராக வேண்டும் என்று சொல்லி காரணத்தை சொன்னவுடன் , வெரிகுட் என்று அடுத்த மாணவருக்கு வாய்ப்புக் கொடுத்தேன், அப்போது அவள் சார், டாக்டராவது எப்படி என்ற புத்தகம் வைத்துள்ளேன்  எனவும் புத்தகத்தை காட்டினாள். வெரிகுட் அப்புறம். பிளஸ் ஒண்ணில் அறிவியல் குரூப் எடுத்து அதிக மதிப்பெண் பெற்றால் தான் டாக்டராக முடியும் என்று சொன்னாள்.
(கிழக்குப் பதிப்பகத்திற்கு நன்றி...குறைந்தவிலையில் அழகுற அச்சடித்து புதுமைகள் புரிகிறது.பிச்சுப்பருவத்தில் படிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது.குறைந்த விலை)


                                              லெட்சியச்சிறுமி டாக்டர் தூர்கா தேவி


மூன்றாவதாக மாணவன் தினேஸ் . அவன் நீதிபதியாக வேண்டும் என்றான். ஏன் என்றேன் , குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க , தக்க தண்டனைக் கொடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றான் விஜயகாந்த் பாணியில் வசனம் பேசினான்.சார், வக்கீல் படிச்சா மட்டும் போதுமா எனவும் என்னிடம் கேள்விகளை எழுப்பி அனைவருக்கும் எது படித்தால் என்னவாகலாம் என்ற ஆவலைத் தூண்டி விட்டான்.  
      
அனைவரும் தங்கள் லட்சியங்களைக் கூறி முடித்தவுடன் ,அவர்கள் பெயருக்கு பின் தாங்கள் உருவாக நினைக்கும் படிப்பை போடச் சொன்னேன். ஆர்த்தி இ.ஆ. ப. , கீர்த்திகா, ஐ.ஏ,எஸ் .,சக்திவேல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர். பெனாசீர் டீச்சர், வாசுகி ஐ.பி.எஸ்., என போடுவதுடன் , தங்களை அவ்வாறே அழைத்துக் கொண்டனர். அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி.  மதிய உணவு இடைவேளையில் மாணவி பரிமளம் வந்து சார் , ஐ.ஏ.எஸ் ஆக எது படிக்க வேண்டும் என விரிவாகக் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள். இப்படி மாணவர்கள் தங்கள் முகங்களில் ஒருவித இனம்புரியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

  இன்று மாணவர்கள் புதுவித பொழிவுடன் வந்திருந்தனர். அவர்கள் இதற்கு முன்பு பார்த்ததைவிட அமைதியாக இருந்தனர். இன்னும் படிப்பில் தெளிவாக இருந்தனர். படைப்பாற்றல் கல்விமுறையில் மாணவர்கள் கலந்துரையாடலில் அனைவரும் பங்கு கொண்டனர். சக மாணவனைப்போல என்னிடம் அன்பாக பழகினர். அவர்கள் முன்பைவிட பயம் நீங்கி , என் கை தொட்டுப் பேசுகின்றனர். ஆனாலும் மரியாதைக் குறைவில்லாமல் நடந்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவமும், என் வழிநடத்துதலும் தேவை என்பதை முன்பை விட அதிகமாக உணர்ந்திருப்பதாகவே எண்ணத் தோண்றுகிறது.
                 பிள்ளையாருக்கு காகித மாலை தயாரிக்கும் மாணவ மாணவிகள்


இன்று காலை பிரார்த்தனை வேளையில் உலக ஓசோன் படலம் பாதுகாப்புத் தினம் பற்றி உரையாடினேன். நம் பூமிக்கு இதனால் உண்டாகும் கேடு பற்றி எடுத்துரைத்தேன். நாம் தான் இயற்கை மாற்றத்திற்கு காரணமாக விளங்குகிறோம். நான் இயற்கையை நேசிக்கவேண்டும். அதற்கு தீமைவிளையும் எதையும் செய்யக்கூடாது என்றேன்.

    மதிய இடைவேலையில் உணவு என்னுடன் அருந்திவிட்டு மாணவர்கள் விளையாடச் சென்றனர். சிலர் வகுப்பறையிலேயே முடங்கி குருப் குருப்பாக அமர்ந்திருந்தனர். நான் என் அறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தேன். மாணவர்களும் மாணவிகளும் காகித மாலை தாயாரித்துக் கொண்டு இருந்தனர். காலாண்டு தேர்வு வருகிறது எனவேஇவ்வாறு தயாரிக்கின்றனர் என நினைத்து படிச்சா தான் மார்க் வரும், சும்மா பேப்பரில்ல இப்படி மாலை செய்து போட்டா , ஒண்ணும் ஆகாது. படிக்கிற வேலையை பாருங்க என்றேன்.
கீர்த்தி மாலைப் பிண்ணிக் கொண்டே சார் இதுல ஸ்ரீ விநாயகர் நமஸ்தே என எழுதி நூற்றி ஒன்று காகித பூக்கள் செய்து நாம மனசுல நினைச்சுகிட்டு, விநாயகருக்கு சாத்தினா நாம நினைச்சது எல்லாம் நடக்கும் என்றாள். இரண்டு சாத்தபோறேன்... போய் படிக்கிற வேலையப் பாருங்கள் என்றேன். ஆர்த்திஐ.ஏ.எஸ். ஓடி வந்து சார்,காலையில் உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தினம் குறித்து ஊர்வலம் கூட்டிகிட்டு போறேன்னு சொன்னீங்கல...ஆனா கூட்டிகிட்டு போகலா... (தேர்வு நேரமாதலால் அனுமதி கிடைக்கவில்லை. நாளை முயன்று பெறுவேன்) அதனால நாங்கள் விநயாகருகிட்ட ஓசோன் படலத்தை காப்பத்து, இயற்கையை காப்பத்த புத்திக் கொடு என்று வேண்டி இந்த காகிதப் பூமாலையை போடப் போறோம் என்றாள்.

     மாணவர்களை அவர்கள் போக்கில் விட்டால், அவர்கள் நம்க்கு பாடம் கற்றுத்தருவார்கள். தயவு செய்து ஆசிரியர்கள் செயல் வழிக் கற்றலில் தன்மை உணர்ந்து , அது நல்ல முறையில் நடைப்பெற உதவினால், நாம் சிறந்த மாற்றத்தை மாணவர்களிடமும் , நம் சமுத்திடமும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மாணவனை மையப்படுத்தி செயல் படுத்துங்கள் . புதுமைகள் படைக்கலாம்.
மாணவ்ர்களிடம் இருந்து நாம் பெறுவது காகிதப் பூவாக இருந்தாலும் அது நம்க்கு விழும் நிஜப்பூக்கள் ,நிஜத்தை வெளிப்படுத்தும்.

Wednesday, September 15, 2010

நிறைவேறாத ஆசைகள்

அது அழுதால் ...
அண்ணன் , தம்பி
அக்காள், தங்கை
அம்மா, அப்பா
மாமா, மாமி
தாத்தா , பாட்டி
என குடும்பமே
சேர்ந்து அழுகிறது ...
சிரித்தாலும் அப்படித் தான்...
கீழே விழுந்து
இரத்தம் வழியும்
என்னை கேட்க
நாதியில்லை
ஒரு நாள் ....
இல்லை இல்லை
ஒரு கால் மணி நேரம்
அது தெரியவில்லை
என்றால்...
அப்பா போன் போடுகிறார்...
அண்ணன் அலறுகிறான்
அம்மா ஆட்டோவில்
தூக்கி சுமக்கிறாள்...
பாட்டி அதுக்கு என்னாச்சுன்னு
கொஞ்சம் பாரேன்
என பரிந்து பேசுகிறாள்
மச மசன்னு நிக்காம
மெக்கானிக்க கூப்பிடுங்க
என அழைக்கிறார் தாத்தா
நித்தம் அதை துடைக்கிறார்கள்
என் தங்கையும் அண்ணணும்
அதனுடன் சண்டைபோட்டு
விளையாடுகின்றனர்...
அதன் முகத்திலேயே முழித்து
அதன் ஒளியிலேயே உறங்குகின்றனர்...
நானே பொறாமைக் கொண்டு
தினமும் அதை அணைக்கிறேன்....
நான் விழுந்த இடத்தில்
புல் முளைத்து விட்டது
இருப்பினும் என்னைக் கவனிக்க
யாரும் இல்லை...
பேசாமல் என்னை
அந்த டி.வி.பெட்டியாகவே
பெற்றிருக்கலாம்....
கடவுள் எனக்கு வரம் தந்தால்
நான் டி.வி பெட்டியாகவே மாற ஆசைப்படுகிறேன்...!

Tuesday, September 14, 2010

மழை நனைத்த மதுரை

பிரிவின் வலி
உறவின் தூரத்தில்....

மழை நனைத்த மதுரை
வைகை தடம் புரண்ட வீதிகளாய்
தெருவோரப் பள்ளங்களை
மழை நிறைத்து
கம்மாயாக்கியது போன்று ...
மழைநேரத்து இரவுகள்
எங்கள் இதயக்குழிகளை
மழையில் நனைந்த நினைவுகளால் நிரப்பி ...
என்னை உசுப்பியது செல்
காற்றலைகளில் பறந்து வந்த
அவளின் முத்தம்
காதுகளில் விழுந்தாலும்
உதடுகள் இனிக்கின்றன...
அவள் குரலில் ஒசையில்
அவளின் வாசனையை
ஒரு குருடனைப்போல
உணர்கிறேன்....
இன்றைய இரவுகள்
உடல்கள் இணையா
புணர்வுகளாக்கி வெப்பத்தால்
மீண்டும் மீண்டும்
வீட்டுச் சவர்களை
மழையாக்கி நனைகின்றோம்....
அங்கே அவளும்
இங்கே நானும்....


உறவுகள் இருந்தும் 
உறவுகள் அற்றவனாய்
படிப்பு இருந்தும் 
சொந்தநாட்டில் வேலையற்றவனாய்
ஓட்டுரிமையிருந்தும் 
வாக்களிக்க தகுதியற்றவனாய்
ஆண்மையிருந்தும் 
மலடனாய்
இப்படி எல்லாமிருந்தும் 
இல்லாதவனாய்
காகித உயிர்களுக்காய்
கடல் கடந்து ..
கரைகிறேன்...
உடல் மட்டும் அந்நியமண்ணில் 
உயிர் மட்டும் பிறந்த மண்ணில்
உன்னையும் சேர்த்து
உறவுகளையும் விட்டு 
துறவியாய் வாழ்கின்றேன்..!


(அன்னிய மண்ணில் வாழும் எம் சகோதரனுக்காகவும் , சகோதரிக்காகவும் )







Monday, September 13, 2010

எவ்வகையான உணவு சமைத்துக் கொடுக்க வேண்டும் ?

      டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி என்ற ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட நூல் ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மிகவும் அற்புதமான நூல் , அனைத்து ஆசிரியரும் படிக்க வேண்டிய நூல் .ஜப்பானிய மொழியில் டெட்சுகோ குரோயாநாகி என்பவரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அந்நூலில் டோமோயி என்ற பள்ளியைப் பற்றி படிக்க படிக்க ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் உண்டு பண்ணியது. மாணவனின் மன நிலை அறிந்து செயல் படும் பள்ளி . மாணவனை முழுக்க முழுக்க மையப்படுத்தினால் கற்றல் எவ்வாறு அமையும் என்பதை நம் கண் முன் கொண்டு வரும் நூல். இந்நூல் பற்றி தனி விமர்சனம் எழுத உள்ளேன்.  

      அப்பள்ளியின் தலைமையாசிரியர் சோசாகு கோபயாஷி ,மதிய உண்வு வேளையில் மாணவர்களின் மதிய உணவு பெட்டியை திறந்து பார்த்து ,’கடலிலிருந்து கொஞ்சமும் , மலையிலிருந்து கொஞ்சமும் ’எல்லாரும் கொண்டு வந்திருக்கிறார்களா? என பார்வையிடுகிறார். கடலிலிருந்து கொஞ்சம் என்றால் கடல் உணவு .மலைகளிலிருந்து கோஞ்சம் என்றால் நாட்டு உணவு. அதாவது காய்கறிகள் , மாடு, பன்றி, கோழி இறைச்சி.
போன்றவைகள்.

      மாணவர்களிடம் இது கடலிலிருந்து வந்ததா, இல்லை மலைகளிலிருந்து வந்ததா? என்று வினாவுவதுடன் , அதற்கான விளக்கம் கூறுவது அதிசயம். பூமியின் நிறத்தை கொண்டிருப்பதால், அவ்வுணவு மலையிலிருந்து வந்ததாகவும் இருக்கலாம் என்ற விளக்கம் , மாணவர்களுடன் மதிய உணவு வேளையில் தலைமையாசிரியரின் செயல் இவை தற்போதைய சூழலில் என்னை ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.


     காமராசரின் மதிய உணவு திட்டம் பள்ளி மாணவர்களை இடைநிற்றல் இன்றி பள்ளி வர உதவியது என்பதுடன்., அது இன்று மூன்று நாட்கள் முட்டைகளுடன் இரண்டு நாள் உருளைக்கிழங்கு, ஒரு நாள் கொண்டைக்கடலை என அற்புதமாய் ஒரு தரமான சத்துள்ள உணவாக உருமாறியுள்ளது.  திட்டத்திலும் , உணவிலும் சத்து இருந்தால் போதுமா..?
அது முறையாக மாணவனுக்கு போய் சேருகிறதா...?( அய்யா நான் சொல்லும் போய்ச் சேருகிறதா..?என்பது நீங்கள் நினைக்கும் ஒன்று அல்ல)

    
      டோமோயிப் பள்ளியின் தலைமையாசிரியரைப் போன்று முறையாக மதிய உணவு கண்காணிக்கப்படுகிறதா....? மனச்சாட்சியுள்ள ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று. மதிய உணவு பெல் அடித்தவுடன் , மாணவர்கள் விரைந்து சென்று டிபன் பாக்ஸ் திறப்பார்கள்.  பாதி மாணவர்கள் ஓடிச்சென்று மதிய உணவு வாங்குவார்கள். ஆசிரியர்கள் அருகில் உள்ள ஆசிரியருடன் ஒரு பள்ளி சம்பந்தம் இல்லா ஒன்றை உரையாடி , தங்கள் டிபன் பாக்ஸை திறந்து உணவருந்த செல்வர். (பொதுவாக நான் பார்த்த மட்டும்.உங்கள் பள்ளி நாட்களை எண்ணிப் பாருங்கள் )

    
     தயவு செய்து ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மைதானத்தில், மரத்தடியில் ,வகுப்பறையில் உணவருந்தும் மாணவர்களைப் பாருங்கள். அநேகம் மாணவர்கள் முட்டைகளை வீணடித்து இருப்பார்கள். பலர் தங்கள் உணவுத் தட்டை, அல்லது உணவுப் பெட்டியை சுற்றி உணவை சிதறி உண்பதுடன் காய்கறிகளை வீணடித்து இருப்பார்கள்.  உணவுகளை அப்படியே குப்பைத் தொட்டிகளில் கொட்டியிருப்பார்கள். சிலர் உணவுப் பெட்டியை    
 திறக்காமலே வைத்திருப்பர். இவையெல்லாம் நிஜம். நான் தலைமையாசிரியராக பணிநியமனம் செய்யப்பட்ட போது கோபயாஷியைப் போன்றே உலவிய போது கண்கூடக் கண்டவை.


     பெற்றோர்களும் தங்கள் மகன்/மகள் பள்ளியில் முறையாக உணவு அருந்துகின்றனரா? என்று விசாரிக்க வேண்டும். நவீன தொலைதொடர்பு வசதிகளைக் கொண்டுள்ள நாம், நம் குழந்தைகளுக்காக தலைமையாசிரியருடனோ, வகுப்பு ஆசிரியருடனோ தொடர்புக் கொண்டு மாணவனின் உணவு முறையை அறிந்துக் கொள்வதில் தவறு இல்லை. மாலை வீட்டுக்கு வந்தவுடன் அனைத்து காய்கறிகள், முட்டைப்போன்ற உணவுகளை அவன் தான் உண்டானா? என கேட்டால் நிச்சயம் அவன் உணவை வீணடிக்க மாட்டான்.

    
    ’சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது’. ’உணவே மருந்து’.என்பதெல்லாம் ஏட்டுடனே முடிந்து விடக்கூடாது. அது முறையாக குழந்தைகளுக்கு சென்றடைய வேண்டும். சரிவிகித உணவு கிடைக்கிறதா? என்பதை ஆராய்ந்து , அவ்வுணவு மதிய உணவு திட்டம் மூலமாகவோ இல்லை பெற்றோர்கள் மூலமாகவோ கிடைத்திட ஆசிரியர்கள் உதவ வேண்டும். விட்டமின் சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து கிடைத்திட ஏற்றவகையில் டோமோயி பள்ளியைப் போன்று ஆசிரியர்கள் முனைப்புடன் செயல் பட வேண்டும்.கீரை, முட்டை, காய்கறிகள், பழங்கள், கொண்டைக்கடலை போன்றவைகள் மாணவனுக்கு தினமும் கிடைக்கச் செய்வதன் மூலம் மாணவனை ஆரோக்கியம் உள்ளவனாக இருக்கச் செய்யலாம்.


   என் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பி பிரிவைச் சார்ந்த சுமதி என்ற ஆசிரியர் எப்போதும் மாணவர்களுடனே அமர்ந்து உணவருந்துவார். அவர்களிடம் வேற்றுமை பகிர்வது கிடையாது. எந்நேரமும் அவரை சுற்றி ஈ மொய்ப்பதுப்போன்று மாணவர்கள் மொய்த்திருப்பர். அனைவரும் உணவு கொண்டு வந்த பின் , உணவை சிந்தாமல், சிதறாமல் சாப்பிடுவதைப் பார்க்கும் போது நமக்கு பொறாமை உண்டாகும். அது மட்டுமல்ல அவர் முதல் நாள் ஒருவன் ஒரு காயை சாப்பிட வில்லை என்றால் மறுநாள் அதே காய் கொண்டு வரச் செய்து அதை வற்புறுத்து உண்ணச் செய்வார். அவன்/அவள் அதை சுவைத்து உண்டவுடன் அவனை ஒரு தாயைப் போன்று அணைத்து முத்தம் கொடுப்பார். அதே சமயம் கண்டிப்புடன் செயல்படுவார்.தற்சமயம் அவரைப் போன்று பல ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர். அதற்கு அவர் ஒரு முன் உதாரணம்.  காசுக்காக , கடமைக்காக ஆசிரியர் (தொழிலுக்கு) பணிக்கு வந்தவர்களை யாராலும் மாற்ற முடியாது.


       எவ்வகையான உணவு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோரும் , அவ் உணவை மாணவர்கள் சிந்தாமல், சிதறாமல், ஒதுக்காமல் உண்பதற்கு வேண்டிய உதவிகளை பள்ளியின் தலைமையாசிரியரும் ,   உதவி ஆசிரியர்களும் செய்ய வேண்டும். அது நாளைய மாணவனின் உடல் மற்றும் உள்ள நலனைப் போணுவதாக அமையும்.


(டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி என்ற புத்தகம் புத்தகப்பூங்கொத்து திட்டத்தின் கீழ் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.)

Thursday, September 9, 2010

மதுரை உறங்குகிறது 2

வெறிச்சோடிய வீதிகள்
கூர்க்காவின் ஊதல்கள்
ஆந்தையின் அலறல்கள்
ஆமையின் வேகத்தில்
வைகையைப் போன்றே
வறண்ட இரவுகளில்
மதுரை நகர்கிறது...!

குல்பிஐஸ்காரன்
ஜிகர்தண்டாக்காரன்
ரொட்டிக்காரன்
பானிப்பூரிக்காரன்
தெருவோர
இட்டலிக் கடைக்காரன்
கடலை வண்டிக்காரன்
கைகுட்டை விற்பவன்
டிராவல்ஸ் காரன்
பெட்டிக்கடைக்காரன்
என அனைவரையும்
இழந்து....
இல்லை இல்லை ...
அழவைத்து
வயிற்றில் அடித்து
மதுரை உறங்குகிறது..!


மதுரையின் இரவுகள்
உறங்குவதால்
கொலை , கொள்ளை
தடுக்கப்பட்டு குற்றங்கள்
குறைந்துள்ளது
என கூறுகிறார்கள்
தந்தையே மகளுக்கு
விச ஊசி போடுகிறான்
ஆள் நடமாடும் பகலில்
செயின் பறிக்கப்படுகிறது
முன்விரோதமின்றி
முதியோர்கள் முடிக்கப்படுகிறார்கள்
பணத்திற்காக பகலில்
சுதந்திரம் இன்றி
கற்பை கையில் பிடித்து
மீனாட்சி பட்டினத்தில் பெண்கள் ...!
.
இரவுகளில் கண் விழித்ததால்
பகலில் தூங்குகிறார்களோ
காவலர்கள்....
எது எப்படியோ
இரவு பகலாய்
பகல் இரவாய்
மதுரை மாறிவிட்டது...!

Wednesday, September 8, 2010

மதுரை உறங்குகிறது 1

காக்கிகள் கடமையால்
மதுரை தூங்கிபோனது
இரவுத் தொழிலாளிகள்
இரவும்
பகலாய் நீண்டு போனது
ஆவிபறக்கும் இட்டலியும்
அவித்த முட்டையும்
அலைந்தாலும் கிடைக்கவில்லை
மனிதன் அலைந்த
இரவு வீதிகளில்
ஆடுகளும் , மாடுகளும்
நிர்வாணமாய்
காவலுக்குத் துணையாய்
உறுப்புக்கள் வீரியமாகவே
தெனவெடுத்த உடம்புகள்
உறவுகளுக்கு ஏங்கி
வீதிகளுக்கு இறங்கிவரப்பயந்து
விடுதிக்கட்டிலில் விரைப்புடனே
விலைமாதுவும் விலைபோகாமல்
இரவும் பகலாய்
வேதனையில்
மதுரை உறங்குகிறது ...!

Sunday, September 5, 2010

பொதுப்பாடத்திட்டத்தின் புதுமைப்போக்குகள்

”கல்வியின் முக்கியமான நோக்கம் , உலகில் அன்பும் , அமைதியும் நிலை நிறுத்தும்ப்டி செய்து , போர்களே இல்லாத உலகச் சூழ்நிலையை உருவாக்குவது தான்”

     தமிழகம் என்றும் அமைதி பூங்காவாகத் திகழ்வதற்கு நம் கல்வி முறையும் ,அதனை கற்பிக்கும் ஆசிரியர்களும் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.

     ஆசிரியர் தினப் பரிசாக நம் பாடத்திட்டத்தின் புதுமைப்போக்குகளையும் , நம் கற்பித்தலில் உள்ள புதுமைகளையும் உங்களுக்கு கட்டுரையாக தருவதில் பெருமைப்படுகிறேன்.

       அரசு முத்துக்குமரன் கமிட்டியுன் பரிந்துரைப்படி சமச்சீர் கல்வி முறையை ஏற்படுத்தி , நான்கு போர்டுகளையும் ஒருங்கிணைந்து, ஒரு பொது பாடத்திட்டத்தினை அமைத்து , அதனை நடைமுறைப்ப்டுத்தி , வெற்றிக் கண்டுள்ளது . அதனை முழுமைப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பிலும் உள்ள எதிர்பார்ப்பு விரைவில் நடைந்தேறும்.

     அன்றாட வாழ்வின் எதார்த்தங்களில் இருந்தே கல்வியின் நோக்கம் உருப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் பொதுப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது புத்தகம் உருவாக்கத்தின் செயல் கமுக்கமாக நடைப்பெறாமல், ஒரு திறந்த மேடையாக அமைந்து, அதில் ஆசிரியர் மட்டுமல்லாது , எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்,பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் என அனைவரையும் பங்குப் பெறச் செய்ததிலிருந்து அறிய வரலாம்.
  

    ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் ஆசிரியர் மையப்படுத்தாமல், மாணவனை நோக்கியதாக எளிமை வாய்ந்ததாக அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

     மாணவனைக் கவர்ந்து இழுப்பதாக வண்ணமையமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிந்த விலையில் தரமாக அச்சிடப்பட்டுள்ளது .பாடப்பொருள் மாணவனின் வாழ்வுடன் நேரடியாக தொடர்புடையதாகவுள்ளது.

     ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் ஒவ்வொரு பாடமுடிவிலும் , அ)இலக்கணமும் மொழித்திறனும் ஆ)வகுப்பறை திறன்கள் இ) வாழ்க்கைத்திறன்கள் என்ற அடிப்படையில் மதிப்பீட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

     வாழ்க்கைத் திறன்கள் பகுதியில் நம்பிக்கை , முயற்சி, உயிர்களிடத்து அன்பு காட்டுதல், பிறருக்கு உதவுதல், உடற்பயிற்சி செய்தல், மறுத்தல் திறன், தன்னம்பிக்கை , இனிமையாக பேசுதல,முன் முயற்சி, பகுத்தாயும் திறன் போன்றவைகள் இடம் பெற்று ,மாணவனை முழுமைப்படுத்தி , வாழ்வில் பரிபுரண இன்பத்தை தருவாதாக கல்வி முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

       மாணவன் தன் நண்பர்களுடன், ஆசிரியருடன் எளிதாக தொடர்புக் கொள்ளும் விதமாக ,முதல் வகுப்பு தமிழ் பாடத்தில் அவன் வாழ்வில் அறியப்படும் சொற்களை வைத்து பாடப்புத்தகம் வடிக்கப்படுள்ளது. வடமொழிச் சொற்கள் நீக்கப்படுள்ளன.

      ஆறாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமுகவியல் பாடப்புத்தகங்கள் வண்ணமிக்கதாக அமைவதுடன், மாணவன் அறிவுச் சார்ந்த கருத்துக்களை மட்டும் உட்கொள்ளாமல், அதனை செரிக்கும் விதமாக பாடத்தின் நடுவே வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் கொடுக்கப்படுள்ளன.
உ.ம். குப்பைளை நமக்கு தீங்கு விளைவிக்காத பொருளாக மாற்ற முடியுமா?

    
       சுருங்கக்கூறின் , மாணவர்கள் வீட்டிலும் , வெளியிலும் பெறக் கூடிய அனுபவங்களை பாடச் சூழலில் இணைத்து , நம் சுற்றுப்புறச்சூழல் சீர்பட சிந்தனையைத் தூண்டும் விதமாக பாடத் திட்டம் அமைக்கப்படுள்ளது .


         கற்பித்தல் முறையில் காலை வந்தவுடன் மாணவனே சுய வருகைப்பதிவேடு செய்வதுடன் , காலநிலை அட்டவணை அவனே அன்றைய வானிலையை குறிப்பது, இளமையிலேயே இயற்கையின் மீது மாணவனுக்கு ஆர்வத்தினை மறைமுகமாக ஏற்படுத்தும் புதுமையான உத்தியாக உள்ளது.

      டி.வி. டி.வி,டி. கொண்டு ஆங்கில பாடம் நடத்தப்படுவது, மாணவனை ஆங்கிலத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் , தனியார் பள்ளிகளுக்கு ஈடான ஒரு சிறந்த கல்வியை மாநகராட்சி பள்ளிகளும் எந்தவித தரமாற்றமின்றி தருவதாக உள்ளது.


     ஆரோக்கிய சக்கரம் மூலம் ஆசிரியர்கள் மாணவனுக்கு தன் சுத்தம் கற்பித்தலுடன் , மாணவனின் முற்போக்குச் சிந்தனையை கிளர்ச்சி செய்வதாக அமைந்துள்ளது.  மாணவன் வகுப்பறையின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கும் குப்பையை எடுத்து , வகுப்பில் உள்ள குப்பைத்தொட்டியில் போடுவது என்பது, உலகத்தூயமையினை மையப்படுத்து ஒரு சிறுப்புள்ளியில் இருந்து தொடங்குவதாகவே உள்ளது.


    ஆசிரியர்களுக்கு தரப்படும் யோக, தியானம் போன்றவை , மாணவனுக்குச் சென்
றடையும் போது , அது மாணவனின் கோபம் தணித்து, அவனது ஆற்றலை முறைப்படுத்தி , ஆக்கப்பூர்வமான செயலுக்கு பயன்படுத்துவதாகும்.


   செயல் வழிக்கற்றல் முறை பழையக்கற்றல் முறையில் இருந்து வேறுப்பட்டு  ஆசிரியருக்கு சிற்சில இடர்பாடுகளைத் தந்திருந்தாலும், இது மாணவனை மையப்படுத்தி
அமைந்துள்ளதால், மாணவன் ஆசிரியரின் மீது இருந்த பயம் நீக்கி , இடைநிற்றல் இன்றி , ஆவலுடன் பள்ளி வருவது தமிழகக் கல்வி முறையின் புதுமைப்போக்கிற்கு கிடைத்த வெற்றியாகும். இது நம் விஜயக்குமார் ஐ.பி.எஸ். அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். அதானால் தான் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக நம் தமிழகக் கல்வி துறை விளங்குகிறது. அதிலும் துவக்கப்பள்ளியில் மாணவர்கள் மிக ஆர்வமுடன் வாசிப்புத் திறன் மிக்கவர்களாக காணப்ப்டுகின்றனர்.

      இந்த வாசிப்பின் வெற்றி தான், நம் கல்வியாளர்களை அடுத்தக் கட்டச் சிந்தனைக்கு கொண்டுச் சென்றுள்ளது. அது தான் ”புத்தப்பூங்கொத்து” . இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கொடுத்து , பாடப்புத்தகம் தவிர்த்து நூலகம் சார்ந்த அறிவு பொறுவதற்கு வகுப்பு நேரம் தவிர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

    நூலகங்களில் உறங்கிக்கிடந்த புத்தகங்களுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. வாசிப்பின் நோக்கம் முழுமை அடையும் வகையில் புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் தவழ்வதுடன் ஆக்கப்பூர்வமாக சென்றடைய ஆசிரியர்கள் கொஞ்சம் சிரத்தைமேற்கொள்ள வேண்டும்.

   செயல் வழிக்கற்றல் வகுப்புகள், பழையக் கற்றல் முறைகளிலிருந்து மாறுப்பட்டுள்ளது. “பேசாதே, நிற்காதே, திரும்பாதே “ போன்ற அதட்டல்கள் அழிக்கப்பட்டு , வகுப்பறை சுதந்திரமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், மாணவனுக்கு அச்சம் நீக்கப்படுவதுடன், சகமாணவன் உதவி கிடைப்பதுடன் , அவனுக்கு மறைமுகமாக ஒருங்கிணைத்தல், பிரச்சனையை இடம் காணுதல் , பிரச்சனைக்கான தீர்வுக்காணுதல்,முடிவெடுத்தல், அதனை வெளிப்படுத்துதல் போன்ற குணங்கள் வளர்கின்றன அல்லது வளர்க்கப்படுகின்றன.


    இதனால், செயல் வழிக்கற்றலும், படைப்பாற்றல் கல்வி முறையும் மானப்பாடம் செய்யும் முறையை தடுக்கிறது. மனப்பாடம் செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், புரிந்துக் கற்றலை ஏற்படுத்துகிறது. அதனால், மாணவன் பாடத்தின் மையக்கருத்தினை அறிந்து, உணர்ந்தவானாக உள்ளதால், சிந்தனைச் செய்யும் திறனைப் பெற்று ,அதனை செயல் படுத்தும் திறனை அடைபவனாக உள்ளான். இதனாலே அவன் கற்பனை திறன் வளர்க்கப்படுகிறது.
  
      மாணவனுக்கு வலிந்து புகட்டுவதை விடுத்து , காரண, காரிய அறிவினையும் , அற நெறிகளையும் , அழகியல் விழுமங்களையும் வளர்ப்பதாக நம் செயல் வழிக்கற்றல் முறையில் பாடத்திட்டம் அமைந்திருப்பது பொதுப்படத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.


(ஆசிரியர் தினத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை , சுவையாக இருப்பினும் , அல்லது மாறுப்பட்டக்கருத்து இருப்பினும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தலாம்)

Saturday, September 4, 2010

அனைத்து ஆசானுக்கும்...

அ என்ற அரிச்சுவடுடன்
அகிலம் பார்க்க கற்றுக் கொடுத்தவன்...
ஆறுவது சினம் என்றே
ஆக்கம் தந்தவன்...
இனிமையாய் இருந்தே
இயல்பாய் என்னுடன் ஒட்டிக்கொண்டவன்
ஈ மொய்த்த பண்டம் சாப்பிடும் போது
ஈட்டியாய் பாய்ச்சி தீமை அகற்றியவன்
உரிமை கொண்டே உதவிகள் பல செய்து
உண்மை உணர்த்தியவன்
ஊதியத்தில் சில பகுதியை பரிசாய் தந்து
ஊக்கப்படுத்தியவன்
எறும்பாய் தேய்ந்தே எங்களுக்காக
எந்நேரமும் உழைப்பவன்
ஏணியாய் இருந்தே எங்களை
ஏற்றி மகிழ்ச்சி கொள்பவன்
ஐயம் நீக்கி
ஐம்பத்தெட்டு வரை கற்றுத்தருபவன்
ஒழுக்கம் தந்தே
ஓதியவன் ஒருநாளும் மறப்போமா
அஃதே முடியுமோ....?

என்னை பாராட்டி சீராட்டி நல்லவனாக , வல்லவனாக வளர்த்த என் முதல் வகுப்பு முதல் இன்று வரை உள்ள அனைத்து ஆசானுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

Friday, September 3, 2010

வாங்க பழகலாம்...

   நண்பர்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அவர்களை விட்டு பிரியும் தருணங்களில் தான் அறிய வருவோம்.  கல்வி கற்க தொடங்கிய நாட்களில் இருந்து வயதான இன்று வரை நட்பு என்பது விரிந்துக் கொண்டே செல்லுவதை பார்க்கிறோம்.
நட்பில் பல .. பார்த்தவுடன் பழகுவது. பார்த்து பார்த்து பழகுவது . பார்த்தும் பார்க்காமலும் பேசாமல்  ..ஒருநாள்,நான் இந்த தொருவில தான் உங்கள் அடிக்கடி பார்த்திருக்கிறேன் என அறிமுகத்துடன் தயங்கி தயங்கி தொடங்குவது.  வயது வித்தியாம் இன்றி எந்த வயதிலும் எந்து வயதினருடனும் ஒத்துப் பழகுவது . அளந்துப் பழகுவது.  வெட்டிப்பழகுவது.  பேசாமலே வெகு சில புன்னகையுடன் பழகுவது .

இப்படிச் சொல்லும் போது அவ்வப்போது வரும் நாயும் கிளியும் நட்புடன் பழகுகின்றன். புலியுடன் பூனை நட்பு, பூனையுடன் சேவல் நட்பு, பாம்புடன் நாய் நட்பு, நாய் , பூனை, எலி நட்பு என்ற புகைப்படங்கள் அவற்றிற்கான செய்திகள் ஆச்சரியத்தை எற்படுத்தினாலும்
 சிலரை நாம் புரிந்த்துக் கொள்ளவே முடிவதில்லை. யாருடனும் பேசாமல், தான் உண்டு வேலையுண்டு என்று , நேராக வீடு விட்டு வேலைக்குச் செல்வது , வேலை விட்டு வீட்டுக்கு வருவது,அது மட்டுமல்ல அத்துடன் வீட்டிலும் தன் குழந்தைகளுடன் முறைத்துக் கொண்டு உம் என இருப்பது. மனைவியுடன் கூட அளந்து பேசுவது. எப்படித்தான் இவ இந்த ஆளோட குடும்பம் நடத்தினாலோ என அனைவர் பேசும் விதம் இருப்பவர்களும் உண்டு.

      நம் ரவியும் அப்படித்தான். அலுவலகம் விட்டு வீடு வந்தவுடன் அனைவரும் அமைதியாகி விட வேண்டும் . டி.வி . பார்த்தாலும் நிறுத்தி விடவேண்டும். அவர் மட்டும் டி.வி. பார்த்தால், நாம் உடன் பார்க்கலாம், ஆனால் எதுவும் பேசக்கூடாது. அவனுடன் எதையும் சரளமாக தைரியமாக பேசும் அவனின் அம்மா ராமுத்தாயும் சென்ற பங்குனியில் உயிர் விட இப்போது எவரும் அவனுடன் பேசுவது இல்லை. குழந்தைகளும்  ரவி வந்தால் புத்தகத்தை தூக்கி கொண்டு படிக்க கிளம்பி விடுவர். படிக்கிறார்களா, அல்லது ரவியின் பார்வையை மறைக்கிறார்களா..? தெரியாது. ஆனால் , நன்றாக மதிப்பொண் எடுத்து விடுவர். ராங்க் கார்டு காட்டும் மறுநாள் மாலதிக்கு பிடித்த மல்லிகைப் பூ.. குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டம் என தூள் பறக்கும் .
      
         சொல்ல மறத்துவிட்டேனே... மாலதி அவனின் மனைவி. பாவம் . நிறைய கனவுகளுடன் வாழ்பவள். என் மனைவியுடன் ஸ்கூட்டரில் நான் செல்லும் போது , கண் எடுக்காமல் பார்ப்பாள். தன்னையும் இந்த மனுசன் அழைத்து கொண்டுச் செல்ல மாட்டேன் என்கிறானே... அப்படி என்றாவது கூட்டிக்கொண்டுச் சென்றால் ..பேசாமல் பின்னாடி அமர்ந்து எதோ பேருந்தில் முகம் தெரியாத ஆட்களுடன் முன்னேபின்னே பழகாத ஆட்களுடன் செல்வதுப்போல அமர்ந்து செல்ல வேண்டும். அவர் எப்போது சிரிப்பாரோ அப்போது நாமும் சிரிக்க வேண்டும். சிரிக்கவில்லை என்றால் ஒரு அக்கினி கக்கும் பார்வை வீசும் , ஆனால் அதற்கு முன்னமே அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்து விட வேண்டும். மிகவும் கடினம் தான்.

      
     ஏன்டி மாலதி , ரவியை எப்படி கட்டிக்கிட்ட...? கல்யாணத்திற்கு முன் இருந்தே இப்படி தானா...? இல்ல உன்னைக் கட்டிகிட்ட பின்ன இப்படி மாறிட்டானா...? என என் மனைவி அன்னம் எத்தனை முறைக் கேட்டாலும் அதற்கு பதிலாய் பிறப்பில இருந்து இப்படி தானாம். பிறந்தவுடன் பேச்சு , மூச்சுக்கானமே, சிரிக்க காணாமேன்னு நர்ஸ் கிள்ளியதற்குக் கூட அழவில்லையாம். நர்ஸைப் பார்த்து ஒரு முறை முறைத்தார் என என மாமியார் சொல்லக் கேட்டிருக்கிறேன் என்பாள். அதாவது பரவாயில்லை , பள்ளியில் வாத்தியார் கேள்வி கேட்டால் சுருக்கமாகத் தான் பதில் தருவாராம். எப்படியோ அக்கா யார் செஞ்ச பூன்னியமோ இவருக்கு கலெக்டர்  அலுவலத்தில் ஒரு உத்தியோகம் கிடைத்து , இம்மனுசனை இந்த உத்தியோகம் தான் காப்பாத்தி இருக்கு ,இல்லாட்டி யாரும் சீந்த மாட்டங்க என  அலுத்துக் கொள்வாள்.

     நானும் பலமுறை ரவியுடன் பேச முற்பட்டு இருக்கிறேன். ஆனாலும் அவன்   மழுப்பலாக கூடப்பதில் சொல்லாமல் இறுக்கத்துடன் சென்று விடுவான்.  உதாரணத்துக்கு , நீங்க கலெக்டர் ஆபிஸ்ல வேலைக் பார்கிறீர்கலாம் என நாம் கேட்டால் தலை ஆட்டலுடன் வெகு வேகமாக அடுத்து பேச்சை தொடரும் முன் சென்றுவிடுவான். என்ன ரவியை அவன் இவன் இன்று சொல்லுகிறேன் என பார்கிரீர்களா ...? அவன் என்னை விட வயதில் இளையவன் . இருந்தாலும் சிலர் வயதில் இளையவராக இருந்தாலும் நாம் அவர்களை வாங்க , போங்க என சொல்லுவது உண்டு. என எதிர் வீட்டு ரமேஷ் இளங்கலை தான் படிக்கிறான். ஆனால் இசையில் தனி ஆல்பம் வெளியிட்டு , தற்போது ஏதோ ஒரு டி. வி தொடருக்கு இசை போடுவதாக சொன்னவுடன். என்னங்க ரமேஷ் இப்பெல்லாம் கலையில வாக்கிங் பார்க்க முடிவதில்லை என்றுதான் பேச முடிகிறது. அவரும்  பதிலுக்கு சார்,சும்மா ரமேஷ் ன்னு கூப்பிடுங்க ...என்பார் .பார்த்தீர்களா பேச்சுக்கு கூட என்னால் அழைக்க முடியவில்லை. அது அவர்கள் வேலையின் மீது காட்டிய ஆர்வம் , அதானால் அவர்களுக்கு ஏற்பட்ட முழு இடுபாடு , அதன் அற்பணிப்பு அவர்கள் மீது ஒரு மதிப்பை அவர்கள் அறியாமலே ஏற்படுத்துகிறது. அம்மதிப்பை அவர்கள் தானாக தக்க வைக்க அதை விட அதிக கவனமும், மன ஒருமுகத்துடன் , இணக்கமான சமூக உறவுடன் ,நிலைக்க அதிக உழைப்பை செலுத்த வேண்டும்.


        இன்று குடும்பங்களில் ஒரு குழந்தை என்பது சகஜமாகி விட்டது. அதிலும் அவர்கள் பலருடன் பழகுவதால் கெட்டுப்  போக வாய்ப்புண்டு என்பதால் தனிமை படுத்தி வளர்க்கவே பல பெற்றோர்கள் ஆசை படுகின்றனர்.   அதுவும் பெண் குழந்தைகள் என்றால் வெளியில் விளையாட கூட விடுவதில்லை. ஆனால் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஒரு மனிதனை உருவகப்படுத்திக் கொண்டு ,விளையாடும் அழகை பார்க்கும் போது ரசிக்காமல் இருக்க முடியாது. என் வீட்டுக்கருகில் உள்ள அகல்யா ,  ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். ஆவலுடன் விளையாட ஒத்தக் குழந்தைகள் எங்கள் ஏரியாவில் யாரும் இல்லை . ஆகவே ,அவளாக போன் செய்து விளையாடுவாள். என்ன  அப்பத்தா,சௌக்கியமா ? நான் தான் அகல்யா வந்திருக்கிறேன்.கதவை திற , உனக்கு என்ன கண் தெரியாதா..? அடியே என்ன பார்த்தா நக்கலா தெரியுதா ..லெப்ட்ல விட்டேனா ரைட்டல  விழும் என பதில் பேசும் அழகு என்னை பிரமிக்க வைக்கும்.

        குழந்தைகள் எவ்வளவு அழகாக மொழியை உள் வாக்கிகொண்டு பிரதிபலிகின்றன ! பள்ளியில் ஆசிரியர் பேசிய ஒரு விஷயத்தை தன் வாழ்வுடன் பொருத்தி பார்க்கிறார்கள் பாருங்கள். தன் மொழி செழுமையில் அவர்கள் தங்களுக்குள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி தன் படைப்பாற்றலை எதார்த்தமாக வெளிப்படுத்துகிறார்கள். அக்குழந்தையின் உரையாடலை நான் கேட்கும் போது ரவியும் இந்த பருவத்தை தாண்டி தானே வந்து இருப்பான். ஆனாலும் ஏன் இன்னும் இறுக்கத்துடன் இருக்கிறான்? அவனை எந்த பருவத்திலும் யாரும் மாற்ற முயற்சிக்க வில்லையா? இதுவும் விதிமீறிய படைப்பா...? இல்லை அவன் தன்னை இறுக்கமாகவே அடியாளம் காட்டி கொள்ள முயலுகிறானா  ..?

           அடையாளம் காணுவதற்க்காகவே  சிலர் சில அடையாளங்களை தம் மீது பூசிக்கொள்வர்.  மத அடையாளங்கள்  , மொழி அடையாளங்கள்  , மத எதிர்ப்பு அடியாளங்கள், அரசியல் அடையாளங்கள் , வட்டார அடையாளங்கள்  , வேலைக்கான அடையாளங்கள்  என பல அடையாளங்கள் நம் சமூகம் சுமக்கிறது. ரவி இதிலும் எந்த அடையாளத்தையும்  கொண்டிருக்க வில்லை. ஆனாலும் பழகுவதை வைத்து அவன் உம்மணா மூஞ்சி என்ற அடையாளத்தை பெற்றிருந்தான். நானும் பல முறை கஜினியை போல படையெடுத்து தோற்றுபோனேன்.

        சிவாஜி படத்தில் ரஜினியை  வாங்க பழகாலாம் என  சாலமன் பாப்பையா அழைப்பதை போல பல முயற்ச்சிகளை மேற்கொண்டு பார்த்து  ஏமாற்றம் அடைந்துள்ளேன்.  அவன் மகள் ரம்யா பூப்பெய்திய போது நடந்த சடங்கில் கூட அவன் தன் உறவினர்களுடன் ஒரு இணக்கமாகவோ, அல்லது சிர்ப்புடனோ இருந்ததாக பார்க்க வில்லை. மாலதி இவனுக்கு எதிர் மறை எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசுவதும் . அனைவருடனும்  நட்புடன் பேசுவதும், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதும் என கல கலப்பாக இருப்பவள். ஆனால் ரவி வீட்டுக்குள் நுழைந்தான் என்றால் அத்தனையையும் மூட்டைக் கட்டி வைத்து  விடுவாள் . எனக்கும்  என் மனைவிக்கும் இது ஆச்சரியமாகத் தான் இருக்கும். நம்மால் ஒரு நிமிடம் கூட பேசாமல் இருக்க முடியவில்லை ரவிக்கு மட்டும் எப்படி சாத்தியம் . அளந்து பேசுவது என்பது முடியும். இது அதை விட கஞ்சம் .
  
        மொழியின் வளர்ச்சி அதன் பரிமாற்றம் ,  அதன் எழுத்து வடிவத்திலும் , அதன் வெளிப்பாட்டிலும் இருக்கிறது .அத்துடன்  பிற மொழிகளை தன்னுள் வாங்கிக்  கொள்ளும் தன்மையிலும் தன் தனித்துவம் கெட்டுவிடாமல் பாதுகாப்பதிலும் தான் மொழி வளர்ச்சி இருக்கிறது. மொழியே பேசாத அவன் இன்னும் ஆதி மனிதனாகவே வாழ்கிறான் என்று தான் பொருள் கொள்ள முடிகிறது. எனக்கு தெரிந்து ரவி நவீனயுகத்தில் ஆதிமனிதன் போலவே குறைந்த ஒலிகளுடன் வாழ்கிறான்.
    
      பறவைகள் ஒலிக்கும் விதத்தை வைத்து அதன் இணை இணைவதற்கு முற்படும் என படித்திருக்கிறேன்.நாய்கள் குரைப்பதை  வைத்து பிற நாய்கள் அன்னியர் வந்திருக்கிறார் என அறிந்து அடுத்த தெருவில் எச்சரிக்கை அறிவித்து குரைக்கும் . தொடர்ந்து  நாய்களின் குரைத்தல் தொடரும். பின்பு அருகில் உள்ள நாய் ஓடி வந்து சேர்ந்து அதனுடன் குரைக்கும் , இவ்வாறாக அனைத்தும் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து  , பின் தொடர்ந்து ஓடி புதிய நபரை துரத்தும். 

      இங்கு தொடர்ந்து நாங்கள் தொடர்பு கொண்டு பேசினாலும் அவன் எங்களை நாயை விட கேவலமாக துரத்துகிறான்.ஒருநாள் இப்படித் தான் மாலதிக்காக நானும் என் மனைவியும் கலெக்டர் அலுவலகம் சென்று அவனிடம் பட்டாப் பெறுவது எப்படி என கேட்ட்க சென்றோம். என்னை தெரியாதவன் போலக் கட்டிகொண்டான். மேலும் என் மனைவி நீங்க மாலதி  கணவன் தானே நாங்கள் எதிர் வீட்டு என அறிமுகம் படுத்தி பேச்சை தொடரும் முன் , அவன் பார்வையில் பயந்து போய் , அலுவலக பையன் ஓடிவந்து என்ன சார் வேணும் ,வாங்க நான் உதவுறேன் சார் வீட்டு பக்கமா இருக்கீங்க ..மாலதி அண்ணி எப்படி இருக்காங்க ..?இவரு கிடக்கிறாரு சார் யாரு கூடவும் பேச மாட்டான்.ஆனா யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டான். தான்  உண்டு தன் வேலை  உண்டு என இருப்பன். மணி ஆறு ஆனா சீட்டை விட்டு எழுந்து போய்விடுவார். பில் எதுவும் பெண்டிங்கு இருக்காது . எனக்கு பட்டா மாற்ற விபரம் தெரியும் ஆனாலும் அவனுடன் எப்படியாவது பேசி , நட்பு கொண்டு அவனின் இறுக்கத்தை மாற்றி விட நினைத்தேன் . நல்லவன் தான் இருந்தாலும் ஒரு பிடிவாதமாக யாருடனும் பேசாமல் வாழ்கிறான்.

        அன்று மலை சோவென பெய்து கொண்டிருந்தது. இடி இரண்டு முறை அருகில் விழுந்த மாதிரி இருந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எப்படா கரண்ட நிறுத்துவோம்  என்பது போல நிறுத்திவிட்டான். நான் தெரிவில் நின்று மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். பக்கத்த்  வீட்டு புனித் மழைத்  தண்ணீர் வெளியில் செல்லாமல் வீட்டினுள் வந்து விடுவது போல் உள்ளது தெரிந்து தெருவில் உள்ள சாக்கடை முடியை திறந்து விட்டான். எங்கள் வீதி பள்ளமாக இருப்பதால் அனைத்து தெரு தண்ணீரும் இங்கு தான் வந்து தேங்கும். எனவே , மழை நீர் நிரம்பி ரோடு தெரியாமல் போய்விடும் . சாதாரண மழைக்கே எங்கள் பகுதி வெள்ள பெருக்கு எடுத்து , ஆறாய் ஓடும்.

     இப்படி வேடிக்கை பார்க்கும் போது , ரவி வேகமாக தன் பைக்கில் வந்தான் . அவன் வாய்க்கால் மூடி திறந்து இருப்பது தெரியாமல் நடுவில் ஓட்டி வந்தான். என் மனம் பக்கு பக்கு என்றது. ரவி பள்ளம் பள்ளம் என கத்திக் கொண்டே மழையையும் பொருட்படுத்தாமல்  ஓடினேன்.  அதற்குள் அவன் தூக்கி எறியப்பட்டான் . பார்பதற்கு பரிதாபமாக இருந்தது. அவன் என்னை தவிர்க்க வேண்டும் என்பதர்க்கவே வேகமாக திரும்பி அடிபாட்டான். கை தாங்களாக அவனை தூக்கி , ஒரு ஆட்டோ பிடித்து , அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து ,உதவிய என் முகம் பார்க்க கஷ்டபட்டான். மெதுவாக நான்கைந்து நாட்கள் கழித்து என்னிடம் பேசினான். அன்று நீங்க மட்டும் கதாட்ட நிஜமாவே பள்ளத்தில் விழுந்து இன்னும் நிலைமை மோசமாக போயிருக்கும், பாவம் மாலதி ...ரெம்ப கஷ்ட படுறா .அட நம்ம ரவியா பேசுறது...ஆச்சரியமாக தான் இருந்தது.


        சார் நிறைய தடவ நான் நீங்க பேச வரும் போது தவிர்த்து இருக்கேன். வேண்டுமென்று இல்லை ...எனக்கு அடுத்தவருடன் பேசுவது என்பது மிகவும் கூச்சம் ...சின்ன வயதிலிருந்து என் அம்மா ...நான் நர்ஸ் முறைத்து பார்த்து பிறந்ததாக சொல்லி சொல்லி ..எனக்குள் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தினாங்க நானும் அது தான் நிஜம் என்று நம்பி வாழ்ந்தேன். அதில் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்க தொடங்கி விட்டேன். என்னை எங்கள் வீட்டில் பயந்தே அழைப்பர் . மேலும் அவனுடன் எதுவும் வம்பு வைத்துக் கொள்ளவேண்டாம் என ஒதுங்கி போய் விடுவர். இந்த மாய கவுரவம் , மாய மரியாதை பழகி விட்டது, என் பள்ளி பருவ மாணவர்களும் அவன் அவன் வேலையை பார்பான் அவனை எந்த எனவே தொந்தரவு செய்ய வேண்டாம் என ஒதுங்கி விடுவார்கள். அதுவே தொடர்ந்தது ....பின்பு கல்லூரி முதல் வருட காலடி எடுத்த் வைக்கும் போதும் என் வீட்டுக்கருகில் உள்ள ஒருவன் என்னை பற்றி என் வகுப்பில் சொல்லிவிட என்னை யாரும் தொந்தரவு செய்வது கிடையாது. அப்பா இளமையில் இறந்ததால , அவருடைய வேலையை அரசும் எனக்கு தந்தது .அதையும் என் அம்மா அவன் படிச்சான் வேலை தான வந்தது என பொய் சொல்லி என்னை பெருமை படுத்தியதால நான் பணியிலும் இறுக்கம். என் அலுவலகம் லஞ்சம் வாங்கும் துறையாக இருப்பதால் என்னுடைய இறுக்கம் என்னை முசுடன் என்று ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தியது , ஆனாலும் அது என்னை நல்லவன் காசு வாங்காத மனுஷன் என்று பெயர் எடுத்துக் கொடுத்ததால் அப்படியே அதை தொடர வேண்டியதாகிவிட்டது. இதற்காகவே நான் எல்லாரையும் ஒதுக்கி என்னுள் ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கியது என ரவி என்னிடம் பேச ஆரம்பித்தவுடன் எனக்கு ஆச்சரியம் தொற்றிக் கொண்டது.

     மனிதன் தன் இறக்கும் தருவாய் அடையும் போது தன்னுள் உள்ள எல்லா அடையாளத்தையும்  இழந்து தன் சுயத்தை அடையாளம்  காட்டி விடுகிறான். என் நட்பு ரவியுடன் மரண பயத்தில் தோன்றியது. இன்று ரவி என் குடும்பத்துடன் சகஜமாக பேசும் சக மனிதன். அது போல மாலதியுடன் சிரித்து பேசும் ஒலி பல இரவுகளில் தொடர்த்து கேட்கும் .அகல்யா தன் அப்பாவின் சிரித்த முகம் பார்த்து ஆண்டி எங்க அப்பாவுக்கு விழுந்த இடத்துல பேய் பிடிச்சு இருக்கும் போல, இப்ப என்னோட, என் அம்மாவுடன் அருமையா பேசுறார். சிரிக்கிறார். ஆனாலும் கை சரியானவுடன் மீண்டும் இறுக்கமாகி  விடுவரோ என்ற பயத்துடன் கேட்டபொழுது ,எவ்வளவு இந்த இறுக்கம் குடுமபத்தை பாதித்திருக்கிறது எனபது தெரிகிறது.

       அன்று தொடங்கிய நட்பு ..ஆல் போல் வளர்ந்து அவள் மகள் திருமணத்தில் வந்து நிற்கிறது. ஆம் பல பேசுக்கு எங்கள் நட்பு சினிமாத் தனக்காக இருக்கும் . சில சமயம் நான் நினைப்பது உண்டு .வாழக்கை தான் சினிமாவாக எடுக்கப் படுகிறதோ ...! ஆம் இன்று அகல்யா என் மருமகள். ரவி உதவி கலெக்டர். பலருடன் கல கல வென பேசி ...நட்பு பாராட்டால் அவனை இந்தளவு மாற்றி இருக்கிறது. வாங்க பழகலாம்....என சாலமன் பாப்பையா போல நானும் உங்களை அழைக்கின்றேன். .