Thursday, June 30, 2011

விவேகானந்தர் இரயில்

  எங்கள் பள்ளியை சார்ந்த நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் நூற்று எண்பது மாணவர்கள் , இன்று காலை பத்து மணியளவில் பள்ளிப் பேருந்தில் சுவாமி விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாவது நினைவு பிறந்த தினத்தை முன்னிட்டு விடப்பட்டுள்ள சிறப்பு இரயிலைப் பார்வையிட சென்றோம். 





அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களை அழைத்து வந்ததால், இரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. துவக்கப் பள்ளியிலிருந்து நாங்கள் மட்டுமே வந்துள்ளது போல இருந்தது. எங்கள் மாணவர்களின் கைகளில் உள்ள குறிப்பேடு மற்றும் பேனா , பென்சிலை பார்த்து அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதில் ஒரு பெண் போலீஸ், தம்பி, எதற்காக நோட் கொண்டு வந்துள்ளீர்கள் என கேட்க, எம் மாணவர்கள் நாங்கள் சுவாமியின் வாழ்க்கை குறிப்புகளை எழுதிக் கொள்ள வந்துள்ளோம் என்றவுடன் , சிரித்து அருகில் இருந்த எம் பள்ளி ஆசிரியையை பாராட்டினார். 






   மடத்து நிர்வாகி எங்களைப் பார்த்தவுடன் வேகமாக வந்து , சின்ன குழந்தைகளை வெகு நேரம் காத்திருக்க செய்ய வேண்டாம் , உள்ளே வாருங்கள் என அழைத்து , தனியாக குழந்தைகளை அமரச் செய்து, பத்து நிமிடம் கழித்து எங்களை சிறப்பு இரயிலைப் பார்வையிட செய்தார். எம் மாணவர்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க முயன்ற போது , எங்களை போல உள்ள மாணவர்களை வரிசைப்ப்ப்ப்    படுத்தி கொண்டிருந்தார்.





 All power is within you; you can do anything and everything. Believes in that , do not believe that you are weak. Stand up and express the divinity within you.
என்ற சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
புகைப்படங்களை , விவேகானந்தர் கல்லூரி மாணவர்கள் விளக்க எம் பள்ளி
மாணவர்கள் அதை கேட்டு மகிழ்ந்தனர். அவரின் கம்பீரமான தோற்றம் 
எம் பள்ளி மாணவர்களை ஈர்த்தது. நூறு இளைஞர்களை கேட்ட
விவேகானந்தனுக்கு இன்று நூற்றி எண்பது மாணவர்களை
கொடுத்துள்ளோம் . அவரின் வாழ்க்கை வரலாற்றை படித்து இதில் பத்து
சதவீதம் தேறினாலும் நாட்டுக்கும் நமக்கும் நல்லது என்ற ஆசிரியரின்
கனவு நிறைவேறுமா?




     Teach yourselves, teach everyone, his real nature, call upon the sleeping soul and see how it awakes. Power will come, glory will come, goodness will come, purity will come, and everything that is excellent will come, when this sleeping soul is roused to self-conscious activity.
 என்பதை நினைவில் கொண்டு நாம் செயல் பட்டால், தமிழகம் மிளிரும்

Tuesday, June 28, 2011

கல்வியின் தோற்றம்


படிப்பு எளிமையானது
அல்லது எளிமையானதை போல தோன்றுவது
கடினமானது
அல்லது கடினமானதை போல் தோன்றுவது
புத்தகம் கருத்துக்கள்  உண்மையானவை
அல்லது கருத்துக்கள் உண்மையைப் போலத்
தோன்றுவன
என் ஆசிரியர் முன்மாதிரியானவர்
அல்லது போல தோன்றுபவர்
என் கல்வி முறை சமச்சீரானது
அல்லது போலத் தோன்றுவது
இது இது
அல்லது இது போலத் தோன்றுவது

   

Friday, June 24, 2011

கற்றுக் கொடுக்கும் சக மனிதன்


உழுது வாழும் நிலத்தை
பிள்டர்சுகளுக்கு
விலைக்கு விற்கும்
விவசாயி….

ஆபிரேசன் என்றால்
தன் பணத்தையே
அடுத்தவன் பணம்
என வட்டிக்கு கொடுக்கும்
சக பணியாளன்…

அலுவலக வேளையில்
சுய தொழில் செய்யும்
அரசு ஊழியன்…


வகுப்பு நேரத்தில்
மாணவன் ஆயுளை மறந்து
ஆயிள் காப்பீட்டுக்கு
ஆள் சேர்க்கும் ஆசிரியன்….

உற்சாகமாய் பேச்சுக் கொடுத்து
ஊளையிடும் இரயிலில்
பிஸ்கட் கொடுத்து
உள்ளதையெல்லாம்
அள்ளிச் செல்லும்
சக பயணி…

எது இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
எதையாவது சொல்லி
காசு பிடுங்கும்
டிராபிக் காண்ஸ்டபிள்…

கூட்டம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
சில்லரையை சரியாக கொடுக்காத
கவர்மெண்டு பஸ் கண்டெக்டர்….

கோப்பு எப்படி இருந்தாலும்
அதை நகர்த்த
கூச்சப்படாமல் கேட்டு
வாங்கும் அரசு ஊழியன்…

அரசு உத்தரவுகளை
செவி மடிக்காது
கூடுதல் கட்டணம் வசூலிக்கும்
பள்ளி முதலாளி….

கூடுதல் இடங்களுக்கு
விண்ணப்பித்து அனுமதி பெறாமலே
மாணவர்களை சேர்க்கும்
கல்லூரி முதலாளிகள்….

நேரடியாகவோ
செய்திகளிலோ
சந்திக்கும்  
என் தேசத்து
சக மனிதர்கள் இவர்கள்
எனக்குக்
கற்றுக் கொடுப்பது
சம்பாதிக்க மட்டுமே…!
    

Tuesday, June 21, 2011

முதல் வேலை


ஆனந்தம் இருக்காதா
பின்னே…?
கூடுதல் விடுமுறை
பள்ளி திறந்த பின்னும்
பாட புத்தகம் இல்லை
வீட்டுக்கும் பள்ளிக்குமாய்
வெறுமனே நகர்ந்த
கார்டூன் சித்திரங்கள்
முதல் வேலையாய்
தங்களின் முதல் புத்தகம் கிடைத்தவுடனே
கிழித்தன
அகர முதல எழுத்து
தந்த முனிவன்
மறைக்கப்பட்ட பச்சை லேபிலை…!

Sunday, June 19, 2011

மதுரையில் ஞாநி.



   இன்று மாலை மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் காலச்சுவடு மற்றும் கடவு இணைந்து நடத்தும் அற்றை திங்களின் சாதனையாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர் திரு ஞாநி அவர்கள் பங்கு கொண்டு பேசினார். கூட்டம் சரியாக ஆறு மணிக்கு தொடங்கியது. அரங்கம் நிறைந்து இருந்தது. சிறிய அறிமுகத்திற்கு முன் பேசத் தொடங்கினார். தந்தையர் தினமான இன்று அவரின் பேச்சு தந்தையை முன் வைத்து அமைந்தது எதார்த்தமானதாக இருந்தது. அவரின் பேச்சின் சாராம்சம் குடும்பம் சார்ந்த அறநெறியை குறித்ததாக இருந்தது.



   மனசாட்சிக்கு நேர்மையாக இருந்தால் வாழ்வு நல்ல முறையில் அமையும். அது குடும்பத்தில் தான் எனக்கு கிடைத்தது. இந்த வாழ்வு என் அப்பாவிடம் இருந்து கிடைத்தது. நான் பத்திரிக்கையாளனாக வர வேண்டும் என்பது என் அப்பாவின் விருப்பம் அல்ல. என் தந்தை எனக்கு அனுபவங்களை தந்து , அந்த அனுபவங்கள் மூலம் நல்லது எது? கெட்டது எது ? என ஆராய்வதற்கு தளம் அமைத்துக் கொடுத்தார். இன்று உள்ள பெற்றோர்களிடம் அதற்கு வாய்ப்பு இல்லை. அன்றைய பெற்றோர்கள் எதையும் தன் பிள்ளைகளிடம் திணிக்க வில்லை. அது தான் 60களில் இருந்து 2000 த்தில் வேறுபடுத்திக் காட்டுகிறது  என்றார்.

   ஒருமுறை நான் காலாண்டு தேர்வு எழுதும் போது கணக்கில் பெயிலாயி விட்டேன். ஆசிரியர் ஏண்டா படிக்க வில்லை என்று கேட்டார். நான் தான் எப்போதும் உண்மையை பேசுபவன் ஆச்சே… நோ டைம் என்றேன். (அரங்கில் அனைவரும் சிரிக்கின்றனர்)ஆசிரியர் பொறுமையாக ஏன் டைம் இல்லை? என்றார். நான் அதற்கு சினிமாவுக்கு சென்றேன் என்றேன். ஆசிரியர் அதற்கு வீட்டிற்கு தெரிந்து தான் சென்றாயா? என்றார். நான் , ஆமாம், என் அப்பாவுடன் தான் சென்றேன் என்றேன். அதற்கு அவர் நம்பாமல் அதே பள்ளியில் படிக்கு என் மூத்த அண்ணனை அழைத்து கேட்டார். அவனும் அப்பா தான் கூட்டிக்கிட்டு சென்றார் என்றான். (அரங்கம் முன்னை விட பலமாக கைதட்டி சிரிக்கிறது )இப்படி தான் என் தந்தை எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்ய சொன்னார். எதனையும் சிந்தித்து யோசித்து செய்து கொண்டு, அதன் பயனை  அறிவை பயன்படுத்தி உபயோகிக்க  கற்றுக் கொடுத்தார் என்றார்.
   என்னுடைய வீட்டில் ஒரு தாத்தா இருந்தார். அவர் பக்தி மான். அவர் திடீரென்று காசிக்கு சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டார். எனக்கு அப்போதெல்லாம் நீண்ட தாடியுடன் தாத்தா திடீரென்று வீட்டின் கதவை தட்டுவதாக கனவு வரும் . ஆனால் இது வரை அப்படி ஒரு நிகழ்வு நடக்க வில்லை என்றும் , முன்சிப் வேலையிழந்த தாத்தாவின் கதையை கூறி, தங்கள் குடும்பத்தில் பக்தி உண்டு. ஆனால், அது மேலோட்டமனாது தான். எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்திக்கு என் தந்தை என்னையே பூஜை செய்ய சொல்வார். நான் பாரதியின் விநாயகர் சதூர்த்தி நான்மணி கடிகையை பாடுவேன். அதில் பாரதி தன்னை பற்றியே கூறி இருப்பார். அதாவது தன் நண்பனிடம் பேசுவது போல் கடவுளிடம் உறவு கொண்டிருப்பார். தனக்கு வேண்டுவனவற்றை  வேண்டி அது அனைத்து நடக்க விநாயகர் செய்ய வேண்டியது , அது அப்படியே ஆகட்டும் என்று சொன்னால்  மட்டும் போதும் என்று சொல்லி யிருப்பார்.அப்படி தான் என் பக்தியும் இருந்தது என்றார். என் வீட்டில் பொங்கல் கொண்டாடுவோம் . அதுவும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் , நான் சூரியன் படம் வரைந்து அருகில் கரும்பு, பொங்கல் பானை வரைவேன். அதில் தான் பானை வைத்து பொங்கல் கொண்டாடி மகிழ்வோம் . என் அம்மா ரம்ஜான் , கிறிஸ்துமஸ் விழாக்களின் முன் வீட்டின் முன் மிகப் பெரிய கோலமிட்டு, ரம்ஜான் நல்வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் எழுதியிருப்பாள், அந்த அளவுக்கு தான் எங்கள் பக்தி யிருந்தது என்றார்.

   பி.ஏ. படித்து முடித்த வுடன் வேலைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் சேர விண்ணப்பித்திருந்தேன். அப்போது எனக்கு வேலை தர மறுத்து விட்டனர். என் அப்பா அங்கு தான் வேலை பார்த்தார். இருந்தும் வேலை கொடுக்க வில்லை. ஏன் என்றால் என் அப்பாவை பிடிக்காது. என் அப்பா மிகவும் கரார் பேர் வழி. ஒரு சமயம் அங்கு வேலைநிறுத்தப் போராட்டம்  நடைப் பெற்றது. வேலை நிறுத்த போராட்டத்தில் அப்பா கலந்து கொள்ள வில்லை. அப்பாவின் எண்ணம் ஒரு பத்திரியாளன் வேலை நிறுத்தம் செய்ய முடியாது , கூடாது, அவன் வாசகனுக்கு தினமும் நடக்கும் செய்தியை கொடுக்க கடமைப் பட்டவன். ஆகவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. அவரைப் போல உள்ள சிலரைக் கொண்டு அன்று பத்திரிக்கை வெளிவந்தது. பதினைந்து நாட்களுக்கு பின் , வேலை நிறுத்தத்தை நிர்வாகம் பேச்சு வார்த்தை மூலம் சரிசெய்து , அனைவரும் வேலைக்கு  வந்தனர். அவர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கும் சேர்த்து சம்பளம் கொடுத்தனர். ஆனால் , என் அப்பா  அந்த சம்பளத்தை வாங்க மறுத்தார். வேலை பார்த்தவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசத்தை மேற்கொண்டது, என நிர்வாகத்தையும் பகைத்தார். அப்படி பட்ட அவரிடம் இருந்து கற்றுக் கொண்டவன் என்பதால் தான் நானும் இப்படி உள்ளேன் என்று பெருமையாக தந்தையைப் பற்றி பேசினார்.  
 மதிப்பீடுகளில் நிலை குலையாமல் இருக்க வேண்டுமானால் குடும்பம் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் . என் தந்தை அன்றே வரிக்கொடுப்போர் இயக்கம் நடத்தினார். ஒரு தெருவில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் , அல்லது தெரு விளக்கு செப்பனிட வேண்டும் என்றால் ,அதற்கு எவ்வளவு செலவாகும் என்று முன்னமே திட்ட மிட்டு, அதனை அனைவரிடத்திலும் பெற்று,அக்காரியத்தை நிறைவேற்றி , அதற்கு பின் ஸீரோ பேலன்ஸில் சங்கத்தை வைத்து விடுவார்கள். அப்படி தான் கடைசி வரை இருந்தார்.
    1974ல் முயற்சி செய்து இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பர கணக்கு பிரிவில் அட்டன்டர் வேலைக் கிடைத்தது. நான் யாருக்கும் காபி, டீ வாங்கி கொடுத்ததில்லை.கேட்டாலும் மறுத்துவிடுவேன். எனக்கு வேலை பைல்களை அனைவர் டோபிளுக்கு வைத்து விடுவதும், விளம்பரதாரர்களுக்கு தபால் அனுப்புவதும் தான் . ஒரு நாளைக்கு அறநூறு தபால் மட்டுமே அனுப்ப முடியும் . ஆனால் , ஆயிரத்து ஐநூறு தபால்கள் வரும். நான் சரியாக அறநூறு தபால்கள் மட்டுமே அனுப்புவேன். ஏனெனில் அது அடுத்தவனுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும். முடிவில் என்னை ஓட்டி  பார்க்க சொன்னார்கள். ஓவர் டைம் நீங்கள் கொடுத்தாலும் அதை என்னால் பார்க்க முடியாது. நான் இலக்கிய பணிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதை  தவிர்த்தேன். பின் வேலையை விட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் ஜெர்னலிசம் படித்தேன். அங்கும் கல்லூரியில் பிரச்சனை , போராட்டம் என்று காலம் சென்றது.அன்று ஜெர்னலிசம் பாஸ் செய்ய டைப்ரைட்டிங்க் மற்றும் சார்ட்கேண்டு அவசியம் பாஸ் செய்ய வேண்டும்.. என்னை சார்டுகேண்டில் பெயில் ஆக்கினர். நான் மறு வருடம் பாஸ் செய்து , மீண்டும் இந்தியன் எக்ஸ்பிரஸில் ஜெர்னலிஸ்டாக சேர்ந்தேன்.

   1980ல் நான் என் தந்தையை விட்டு பிரிய வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் அம்மாவிற்கும் என் அப்பாவிற்கும் பிரச்சனை. நான் அவரிடம் யு ஹெவ்பின் குட் பாதர் டு மீ, பட் யு ஹவ் பின் நாட் குட் ஹஸ்பண்டு டு மை மம்மி என்று சொல்லி,என் தாய்யை தனியாக அழைத்து செல்ல விரும்புவதாக கூறி, என் தந்தையை விட்டு தனியாக பிரிந்தேன். அப்போது எனக்கு வேலையை விட்டு நீக்கினார்கள். ஏனென்றால் அன்று மட்டும் அல்ல இன்றும்  பத்திரிக்கையாளனுக்கு என்று சொந்த யுனிட்டுக்குள் அசோசியேசன் இல்லை. அதை அமைக்க முயற்சித்த போது , நான் இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்து கொண்டு கணையாழி, கல்கி , ஆன்ந்த விகடன்  போன்ற தமிழ் பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை எழுதுகின்றேன் என்று நிர்வாகம் என்னை வேலையில் இருந்து தூக்குவதாக சொன்னது. மேலும் அதற்காக மன்னிப்புக்  கேட்டுக் கொண்டால், வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும், இன்னும் இருபத்து நாலு மணி நேரம் தருகின்றேன் என்றது. நான் பரவாயில்லை நீங்கள் உங்கள் கெடு முடிந்த பின்பே என் டிஸ்மிஸ் ஆடர் கொடுக்கவும் என்றேன்.  என் அம்மாவிடம் இதை பற்றி சொன்னேன். என் அம்மா அதற்கு நீ மன்னிப்பு கேட்க வேண்டாம் நீ தான் எந்த தப்பு செய்ய வில்லையே எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அந்த கால கட்டங்களில் என் தாய் எனக்காக அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி , அரிசி பருப்பு கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழல் வந்தது. அன்று, இன்றைய நீதிமான் திரு சந்ரு அவர்கள் தான் எனக்கு டீ, காபி, வடை வாங்கி கொடுத்து என் கேஸ்ஸை லேபர் கோர்டில் நடத்தினார். அன்றைய சாப்பாடு செலவையும் அவரே செய்தார். முடிவில் எனக்கு நியாயம் கிடைத்தது. எனக்கு பேக்வேசஸ் எல்லாம் கிடைத்தது. எல்லா கடனையும் அடைத்தேன். ஆனால் என் அம்மா மட்டும் அப்போது என்னுடன் இல்லை. அவர் அதற்கு முன்பே இறந்து விட்டார் என்றார்.

   குடும்பம் தான் ஒருவனை வாழ வைக்கும் , அழிக்கவும் செய்யும் . அதற்கு கருணாநிதியின் குடும்பமே சாட்சி. அவர் குடும்பத்தின் மீது கொண்ட அதீத அக்கரை தான் இன்று அவரை ஆட்சியில் விட்டு தூக்கியது மட்டுமல்லாமல் கட்சியையும் ஆட்டுவிக்கிறது. ஆகவே, குடும்ப அற நெறி மிக்கதாக அமைய வேண்டும். மனிதனின் மதிப்பீடுகள் தான் அவனை சந்தோசமாக வைத்திருக்கும்.


     இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை ஒரு பணம் சம்பாதித்து கொடுக்கும் இயந்திரமாக தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் இன்வெஸ்மெண்டுக்கு ரிட்டன்ஸ் எதிர்ப்பார்ப்பவர்களாக இருப்பதனால் தான் அவனும் உனக்கு பணம் தானே வேண்டும் என்று , பணத்தை கொடுத்து நல்ல ஹோம்களுக்கு அனுப்புகிறான். வாழ்வு சந்தோசமாக இருக்க வேண்டும் எனில் பெற்றோர்களும் கல்வியாளர்களும் மாற வேண்டும். ஆனால் இன்று கல்வியாளர்கள் எப்படி இருக்கிறார்கள்? மூத்த கல்வியாளர் வா.கோ. குழந்தைச்சாமி கனிமொழி கைது ஏன் ? என்று கலைஞருக்கு கடிதம் எழுதுகிறார். கனிமொழி என்ன அறப்போராட்டம் செய்தா சிறை சென்றார்?  முடிவாக இரண்டு உதாரணங்களை சொல்லி என் உரையை முடிக்கிறேன்.

    இன்றைய இளைஞர்களிடம் இரண்டு முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. 1.அதிகம் சம்பளம் அதாவது குறைந்தது ரூ.45,000 சம்பளம் வேண்டும் 2வது அவர்களுக்கு அதற்கான தகுதியில்லை. இருப்பினும் காத்திருந்து அந்த வேலைக்கு செல்ல காத்திருக்கின்றனர். பெற்றோர்களும் இதை ஊக்குவிக்கின்றனர். அவர்களுக்கு பாசம் பந்தம் எல்லாம் விட மகன் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது  மட்டுமே.இப்படி பட்ட சூழலில் நெறியை நாம் எதிர்பார்க்க முடியாது.

   ஒன்று பெங்களூரில் மற்றொன்று கோயம்புத்தூரில் நடந்த சம்பவங்களை நான் சொல்ல நினைக்கிறேன். பெங்களூரை சார்ந்த தமிழ் பெண் அமெரிக்க மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்கின்றனர். அவள் கர்ப்பம் அடைகிறாள். அவன் வேண்டாம் ஐந்து வருடம் கழித்து நாம் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். அதுவரை செக்ஸ் வைத்துக் கொள்வோம் என்கிறான். ஆனால் அவள் மறுத்து இது தன் முதல் குழந்தை இதை நான் அழிக்க விரும்ப வில்லை என்று சென்னைக்கு வந்து விடுகிறாள். குழந்தை பிறக்கிறது. தகவல் அனுப்பப்படுகிறது. அவனும் வருகின்றான். குழந்தையை கொஞ்சி மகிழ்கின்றான். இரவு பன்னிரெண்டு மணிக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி விட்டு வருகின்றான். காலையில் எழுந்து குழந்தை எங்கே என்றால், அது கிணற்றில் நன்றாக தூங்குகிறது. இனி நாம் சந்தோசமாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் வா என்றானாம்.

  இரண்டாவது கதை சற்று வித்தியாசம் படும். அவனும் இவனைப் போல குழந்தை வேண்டாம் என்று இருக்கிறான். அவளும் கலைக்க மறுத்திருக்கிறாள். குழந்தை பிறக்கிறது . வருகிறான். வந்ததும் குழந்தையை கொஞ்சுகிறான். தன் பின் குழந்தையை ஓங்கி சுவற்றில் அடித்து கொன்று விடுகின்றான்.
இங்கு எங்கே  படிப்பு உதவுகிறது. அவன் கற்று கொண்டது என்ன.? அவன் பெற்றோர்கள் அவனுக்கு கொடுத்தது தான் என்ன?
ஆகவே தான் நான் சொல்கிறேன் அறிவையும் , மனதையும் தெளிவாக வைத்துக் கொண்டால் வாழ்வில் பிரச்சனைகளேயில்லை. குடும்பம் தான் இந்த அற நெறிகளை தரும். எனக்கு கொடுத்திருக்கிறது என்று முடித்தார். பின் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 









Friday, June 17, 2011

தொலைந்த மூக்கு கண்ணாடியின் தேடல்


தொலைந்த மூக்கு கண்ணாடியின்
தேடுதல்
புதைந்து மறந்திருந்த இறந்தகாலத்தை
நிகழ்காலமாக்கி
கண்முன்னே படரச்செய்தது
அலமாரியில் இருந்து
கிழே விழுந்த அழுக்கு மூட்டை
அவிழ்ந்த போது ….
தூசி பறந்து அறையேங்கும் சூழ்ந்தது
தூசி அவிழ்ந்த மூட்டையில் மட்டுமில்லை
உங்களுக்கு தெரியும்
அவன்
இவன்
என எல்லார் கைகளிலும்
தூசி …
கைகளில் மட்டுமல்ல
உடல் எங்கும்
சுவாசமாகி
மூச்சுக் குழல் வழியாக
காற்றில் விரவி
உலகமெங்கும் நிரம்பியிருக்கும்
இவ்வேளையில்
தூசிகள் நிரம்பிய
காகிதத்தின் கருப்பு எழுத்துக்கள்
பாதளத்துக்கு அப்பால்
ஏழுமலை எழுகடல் தாண்டி
மறைத்து வைக்கப்பட்ட
ரகசியத்தை சொல்வதாக இருந்தது
ரகசியம்
அவனுக்கானதாக
இவனுக்கானதாக
உனக்கானதாக  
எனக்கானதாக இருக்கலாம்   
அது
எவரையும் பற்றி
கவலைப்படாமல்
துரத்தி துரத்தி
ஓடி இளைத்து
முடிவில் …
எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
புணரும் நாய்க்கு ஒப்பானது
புணர்வுக்கு பின்னான
நாயின் கஷ்டம்
தூசியில் அப்பி
உலகமெங்கும் சுற்றி வருகிறது
தொலைத்து பாருங்கள்
உங்களுக்கும்
எதாவது அழுக்கு மூட்டை அகப்படலாம்…!

Wednesday, June 15, 2011

சொல்ல வந்ததும் சொல்லாமல் சென்றதும்


    என் கணினியின் முன்னால் என் வாசகனுக்கான கட்டுரையை எழுதும் இந்த தருணத்தில் , சாருவின் எழுத்துக்களை திருடி ,அவனும் தன் கட்டுரையில் நான் எழுத முயற்சிக்கும் வேலையில் தமிழகத்தில் எதாவது ஒரு மூலையில்  இரவில் ஒருவன் அடுத்தவன் மனைவியை புணரலாம் எனவும், இந்த இரவில் எவனாவது ஒருவன் செல்போனில் ஒருவளுடன் பேசிக் கொண்டும் , அதே நேரத்தில் மறு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருவரையும் காதல் என்ற பெயரில் ஓட்டிக் கொண்டிருக்கலாம், தாம் தான் சிறந்த இலக்கிய விமர்சகர் என்றும் , உனக்கு இன்னும் இலக்கியம் புலப்பட வில்லை, நீ வாசிப்பை அதிகப்படுத்து என எவனாவது ஒருவன் மற்றவனை மட்டம் தட்டிக் கொண்டிருக்கலாம், எஸ். ராவின் தாகூர் விருதை பெருமையுடன் விவாதித்துக் கொண்டிருக்கலாம், அடுத்த வாரம் வந்து விடுவார் எனவும் தான் பிளாக்கில் படித்ததை சொல்லிக் கொண்டிருக்கலாம், என பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்,நானும் அவனைப் போலவே, இன்று மதுரை பதிவர் சந்திப்பில் சீனா அய்யாவின் வீட்டில் டக்ளஸ், நேசமித்திரன் சந்திப்பின் சுவரசியத்தை பட்டியலிட  முயற்சிக்கும் இக்கணப்பொழுதில்  , என் மனைவி என்னை அழைத்து , வாட் இஸ் மேத்த மேடிக்ஸ்? என்று வினவி, என் கணக்கை தப்புக் கணக்காக்கி, என் எழுத்தை பாதியில் நிறுத்தப் பார்க்கும் முயற்சியில் , mathematica என்பது ஆக்ஸ்போர்டு பிரஸ் வெளியீடான ரிச்சர்டு கொரண்டு மற்றும் ஹெர்பர்ட் ராபின் எழுதிய புத்தகம் என்று பதிலளிக்கையில், அப்பா ஒரு மக்கும்மா , அவருட்டு நீ கேட்கிறதுக்கு புக்ஸ்ச ரெபர் பண்ணிடலாம் என்று என்னை முட்டாளாக்கி , உங்களிடமே மீண்டும் என்னை சிக்க வைத்து, தன் அம்மாவை அழைத்துச் செல்லும் என் செல்ல மகள் லீலாவை பார்த்து சிரிக்கும் சிரிப்பில், பதிவுலகில் அதிக வடை விற்பனை செய்யும் தமிழ்வாசியின் நினைவு என்னை மீண்டும் இன்றைய பதிவர் சந்திப்பிற்கு அழைத்து வர, உங்களுக்கு கா. பா வின் நெடும்குருதி பற்றிய கட்டுரை எஸ். ராவின் வலைத்தளத்தில் வந்துள்ளதை , அவரே சுயவிளம்பரம் செய்த செய்தியை சொல்லும் முன்னே, டக்ளஸ் பஸ்ஸில் சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கும்  கதையை பற்றி நேசன் ரசித்து கமண்டு அடித்த பதிவர் சந்திப்பின் காமடியை பற்றி எழுத எத்தனிக்க முயற்சி செய்யும் போது  என் சொல் போன் சிணுங்கை மீண்டும் , என் சிந்தனை ஓட்டத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்த, மொட்டை மாடியில் எடுத்துக் கொண்டு ஓடி ஹாலோ யார் பேசுவது? என்று முடிக்கும் முன்னே , எதிர்முனையில் , சார் , நாளைக்கு பாடப்புத்தகம் கொடுத்து விடுவீங்களா? என்று கேட்க, அதான் கோர்ட்டு …என நான் முடிக்கும் முன்னே, இல்லை,டீச்சர் நோட்டு வாங்கி வர சொல்லியிருக்காங்க அதான் என்று என் வாயை அடைக்க, நான் பேசுவது அறியாமல் முழித்து , நாளைக்கு நேரில வாங்க என முடித்து , என் வாசகர்களுக்கான தரமான கட்டுரையை தயாரிக்கலாம் என நினைத்து , மீண்டும் கணினி முன் அமர  எத்தனிக்கையில் , மொட்டைமாடியின் காற்று பலமாக என் தேகத்தில் பட்டு, என்னை வசீகரிக்க , தேகம் என்றவுடன் சாருவின் ஞாபகம் வந்து , இன்றைய பதிவுலகில் சாருவின் ராசலீலா பற்றி பாலா கா.பாவிடம் ஏதோ சொல்ல, ஸ்ரீதர் மட்டுமே அதை படித்து நல்ல படியாக சொல்லியுள்ளாரென நெகட்டிவ் கமண்டு அடித்து , என்னை உசுப்பேற்ற(சாருவின் தீவிர ரசிகன் என்பதால்) , நான் வாயை திறக்கும் முன்னே கவிஞர் நேசமித்திரன் அவரின் உழைப்பு மிகவும் கடினமானது அதை பற்றி நினைத்து பாருங்கள் எனும் போது அனைவரும் தலையாட்டிய அக்காட்சி என் கண்முன் வந்து போன போது , என் மகள் நினைவு வந்து , குகூள் ஆண்டவரிடம் கணிதம் என்றால் என்ன என தேடி நாம் புத்திசாலி என நிருபிக்க நினைத்து படி இறங்கையில், டாடி ,நாங்க் புத்கத்தை பார்த்து விடையை கண்டு பிடிச்சுட்டோம்மாதலால் , உருப்படியா எதாவது நல்ல விசயமா டைப் செய் என கட்டளையிட்டவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே,பாலாவின் டிவிட் பற்றி கா.பா அடித்த கமண்டு , அவளின் சிரிபொலியில் என்னை சீண்டிய போது, ஜெர்ரி சமச்சீர் கல்வி பற்றி புல்லட் மணியிடம் விளக்கிய போது அவர்கண்ணில் தெறித்து கிளம்பிய கோபம் இன்றைய அரசியல் வாதிகளின் அவசரகதியால் முந்தைய , பிந்தைய அரசுகளின் அரசியல் லாபத்தினை முன்வைத்து விவாதித்த அந்த நொடி, ஜெர்ரி ஒரு தலைமையாசிரியர் மட்டுமின்றி தலையாய ஆசிரியர் என்பதை நினைவூட்டினாலும், அவரை நினைத்தவுடன் மதுரை புத்தக திருவிழாவிற்கு வந்த சாரு, அகநாழிகை வாசு, மணி ஜீஆகியோருக்கு மதிய உணவு வாங்க சென்ற போது ஹோட்டலில் எழுத்தாளர்களுக்கு சாப்பாடு போகுதுங்க ,  நல்ல காய்கறி வைங்க அதுவும் அதிகமாக வைங்க என்ற சம்பவம் தான் அனைவர் மனதிலும் நினைவில் வரும் என்பதாலும் அதனை நினைவு படுத்தும் போதே, என் வீட்டில் கிடந்த கல்குதிரை கோணங்கி அண்ணனை நினைவு படுத்த , கா. பா பதிவர்களுக்கு கல்குதிரை வாங்கி படிக்க வலியுறுத்தியது நினைவு வர , கல்குதிரையின் முன் அட்டை ஓவியம் என்னை கவர்ந்து இழுக்க, நாகர்கோவிலில் லெட்சுமி மணிவண்ணன் நடத்திய நிகழ்வில் தேவேந்திர பூபதி அவர்கள் , கோணங்கியுடன் காலாய்த்த அரசியல் என் எண்ண அலைகளை வட்டமிட, என்னை என் மனைவி வட்டமிட்டு , அதிக நேரமாயிற்று தூங்க வாருங்கள் என உறும, நானும் இது வரை மதுரை பதிவர் சந்திப்பு குறித்து பேச முயற்சித்து தோல்வியடைந்தாலும், என் வாசகர் வட்டத்தினை ஏமாற்றவில்லை என்ற நம்பிக்கையுடன் முற்றுப்புள்ளியிட்டு , கணினியை தூங்க செய்து , நானும் உறங்க செல்லும் முன் மறக்காம , படித்து கருத்து சொல்ல கேட்டுக்கிறேன்….! 


    

Sunday, June 12, 2011

நழுவிய பூ


தலையிலிருந்து நழுவி
சாலையில் விழுந்திருக்கும் பூ
யாருடையதோ...?
அது
வண்டியின் வேகத்தில்
காற்றின் எதிர்ப்பில்
தலையிலிருந்து நழுவியிருக்கலாம்
சரியாக வைக்கப்படாததால்...
கவனக் குறைவால் ...
தலைமுடி அடர்த்திக் குறைவால்...
காதலின் நிராகரிப்பாக இருக்கலாம்
கணவனிடம் எதிர்ப்பைக் காட்ட
வேண்டுமென்றே நழுவ விட்டிருக்கலாம்
யோசித்துக் கொண்டிருக்கும் போதே
பூவை நசுக்கிச் செல்கிறது வண்டி...
நழுவ விட்ட மனமும் இப்படித் தான்
நசுங்கியிருக்குமோ?

Thursday, June 9, 2011

இரயில் பயணம்-2

     நான் எப்போதும் சென்னை செல்வதென்றால் முன்பதிவு செய்தே செல்வேன். சில இக்கட்டான தருணங்களில் பயிற்சி வகுப்புகள் உடனடியாக செல்ல நேரும் போது முத்து நகர் எக்ஸ்பிரசில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிப்பது உண்டு. அன்று பயணிக்கும் போது அவர்களை பார்த்தேன். கல்லூரி முடித்து அப்போது தான் வேலைக்கு சேர்ந்து இருப்பான் என்று நினைக்கிறேன். அவனுடன் வந்த அந்த பெண்ணிற்கு இருபது இருக்கும். வெளிர் சிவப்பு நிறம். நீளமான முடி. ஒல்லியான தேகம். கையில் தங்க வளையல். காலில் தங்க கொலுசு. விரல்களில் மருதாணி இட்டு , மோதிர விரலில் பாம்பு போன்ற நீண்ட தங்க சுருள் மோதிரம். அவளை பணக்கார பெண் என அடையாளம் காட்டியது.

   அவர்களை திண்டுக்கல் நெருங்கும் போது தான் பார்த்தேன். அதற்கு முன் நடந்த சுவரஸ்யமான தகவலை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு , உங்களை அந்த பெட்டியின் அறுபத்து நான்காம் இருக்கைக்கு அழைத்துச் செல்கிறேன்.

    அன்று கூட்டம் அதிகம் . இருப்பினும் நான் உள்ளே நுழைந்து இடம் அமர்வதற்கு கிடைக்கிறதா என பார்த்துக் கொண்டே சென்ற போது , வயதான ஒருவர் தம்பி இங்க உட்காருங்க என் சின்ன மகன் மேலே ஏறி படுத்துக்குவான் என சொல்ல , முதலாலாக அமர்ந்தேன். அப்போது ஜன்னல் ஓர சீட்டில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவனின் மடியில் ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை அமர்ந்து இருந்தது. அந்த பெண் அவனிடம் சில தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் சமமான வார்த்தையை கேட்டுக் கொண்டு வந்தாள். அம்மா ... மதர் . அப்பா- பாதர். தம்பி-பிரதர். பிளாக் போர்டு- அவன் முழித்தான். அது ஆங்கிலம் என்றான். அதற்கான தமிழ் சொல் என்னவென்று சொல்ல வில்லை. பின் டஸ்டர் என்றாள் அதுவும் ஆங்கிலம். அதற்கான தமிழ் சொல் தெரியவில்லை. இப்படி ஆங்கிலம் தமிழாகி இருந்தது. டீச்சர் அப்படி தான் சொல்லி கொடுத்தாங்கள் என்றாள்.  ஆங்கிலம் தமிழில் கலந்து இருப்பது மட்டும் அல்ல அது பேச்சு தமிழாக மாறியிருப்பதை பார்க்கும் போது செந்தமிழ் மாநாடு எல்லாம் பெயரளவில் தான் போல தெரிகிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் வகுப்புகளில் தனித் தமிழ் சொற்களை கற்றுத் தர வேண்டும். மேலும் தமிழில் உள்ள நடைமுறையில் பயன்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை சொல்லி த் தரவேண்டும்.

      இப்படி சொல்லும் போதே கொடை ரோடு வந்தது. காபி ,டீ என கூவிக் கொண்டு நடை மேடையில் வலம் வந்த நபரை பார்த்து என் பின் புறம் உள்ள பாட்டியிடம் கெஞ்சியது. அப்போது தான் , நான் அறிய வந்தேன். அவள் அமர்ந்துள்ள மடி என்னைப் போன்ற சக பயணியினுடையது என. அவளின் பாட்டி எதையும் கவனியாது போல முகத்தை வைத்து இருந்தார். மீண்டும் வேறு நபர் பன், வாழைப்பழம் , தண்ணி பாட்டில் எனக் கூவினான். மீண்டும் அவள் அவள் பாட்டியைப் பார்த்து , பசிக்கிறது என்றாள். அப்போதும் அந்த பாட்டி எதுவும் கண்டு கொள்ள வில்லை.  இப்போது நான் திரும்பி பார்த்தேன். அப்போது பாட்டியிடம் சைகை செய்தாள் . அவள் பார்வையில் ஏக்கம். அனைவரும் டீ வெளியில் குடிக்கின்றனர். இந்த இரவில் நாம் பருகினால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம். உண்மையிலே அவளுக்கு பசித்திருக்கலாம். சிறுவயதிற்குரிய எதையும் பார்த்த வுடனே வாங்கி திண்று விட வேண்டும் என்ற ஆசையாக இருக்கலாம். ஆனால் பாட்டியை பார்க்கும் போது அதன் ஏழ்மையும் , வெறுமையும் , இயலாமையும் தான் இருந்தது. நான் திரும்பி பார்க்கும் போது , இயலாமையின் முகம் , என்னை பார்த்தவுடன் திரும்பிக் கொண்டது. ஏழ்மையின் அடையாளமாய் பாட்டியின் இயலாமையும், பேத்தியின் ஏக்கமும் இருந்தது.

  நாம் வாங்கி தரலாம் என்றால் அதனை தவறாக நினைத்து எதையாவது நாம் வாங்கி கட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து , பாத்ரூம் கதவுக்கு அருகில் சென்றேன்.அப்போது தான் நான் அவர்களைப் பார்த்தேன்.  அவன் கையில் ஒரு கருப்பு பை வைத்து இருந்தான். பாத்ரூம் அருகில் இருந்தான். கருத்த தோல் , நல்ல உயரம். கழுத்தில் தங்க செயின் . காலில் சூ அணிந்து இருந்தான். மறு கை அவளின் கரங்களை இறுக பற்றி இருந்தன. நான் அவனை பார்த்து ஏன் இங்கு நிற்கிறீர்கள்... உள்ளே வாருங்கள் இடம் தருகிறேன் என்றேன். அவன் என்னை புறக்கணிப்பது போல வேறு எங்கோ பார்த்தான். அவள் அவனை மெல்ல பார்த்தாள். இருவர் கண்களிலும் பயம் தென்பட்டது. அவள் கழுத்தில் தாலி இல்லை.   (தொடரும்)

Tuesday, June 7, 2011

இரயில் பயணம்


   இரயில் பயணம் சிறந்த அனுபவம். முகம் தெரியாத, அறிமுகமே யில்லாத நபர்கள் , ஆண் , பெண் பேதம் இன்றி ,ஒரு சில நிமிடங்களில்  இரயில் நகர்ந்தவுடன், ஒருவருக்கொருவர் அருகில் நகர்வது இயற்கை.  அருகில் என்பது மனதளவில் பொருள் கொள்க. இதை பதிவு செய்யப்படாத பெட்டிகளில் உணரலாம். அதுவும் தென்காசி, நாகர்கோவில் வண்டிகளில் கூட்ட நெருசலில் இடம் பிடிக்க சண்டை நடந்தாலும் , இரயில் நிலையத்திலிருந்து நகர , நகர , மனிதர்கள் தன் நிலையில் இருந்து நகர்ந்து , ஒருவருக்கொருவர் விசாரிப்புகளை தொடர்ந்து , ஒரு குடும்பமாக பயணம் செய்வது இனிமை.

      ஆனால், இரயில் நிலையத்தில் பயணிகலின் காதுகளில் ஒலிக்கும் குரல் அபத்தமாக படும். முன்பின் தெரியாதவருடன் யாரும் பேசவேண்டாம் . முன் பின் தெரியாதவர் தரும் பொருட்களை வாங்காதீர்கள். சந்தேகத்திற்கு இடமளிக்கும் நபர்கள் தெரிந்தால் , அருகிலுள்ள காவலரிடம் தெரிவியுங்கள். இப்படி மனதில் நஞ்சு பரவியிருந்தாலும் ,இரயிலில் பயணிக்கும் போது  யார் உடமை எங்கு உள்ளது என்பதை பற்றி கவலைப்படாமல் , எதிர் சீட்டில் இருப்பவரின் உரையாடலை சுவரசியமாக கேட்டுக் கொண்டும். இரயிலில் கடைகளாக நடமாடும் மனிதர்களிடம் இருந்து வெள்ளரி, கடலை, காபி, டீ, முருக்கு , பன் என அனைத்துவகையான நொருக்கு அயிட்டங்களையும் வாங்கி , தான் உண்ணுவதுடன் , அந்த இருக்கையில் அமர்ந்துள்ள அனைவருக்கும் கொடுத்து , உரிமையாக பேசி , சிரித்து வரும் அனுபவம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதில் பல கதைகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. கோணங்கி அவர்கள் இப்படிப்பட்ட பதிவு செய்யப்படாத பெட்டிகளில் வருவதையே விரும்புவதாக சொன்னார்கள்.சமீபத்தில் அவருடன் நாகர்கோவில் பயணிக்கும் போது கிடைத்த அனுபவம் மறக்க முடியாதது; இப்படியும் சில சமயம் நாம் தேடிக் கொண்டிருப்பவருடன் பேசவும் பழகவும் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்து விடும்.

   சில  சமயங்களில் போலீஸ்காரர் எச்சரிப்பது போல நடப்பதும் உண்டு. மனிதர்களின் முகங்கள் எவரையும் சாதாரணமாக அடையாளம் காட்டிவிடுவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதெல்லாம் இந்த பிஸ்கட் திருடர்களிடம் பலிப்பது இல்லை. ஒருமுறை ராஜஸ்தானிலிருந்து சென்னை வரும் இரயிலில் என் மைத்துனன் வந்துள்ளார். பதிவு செய்யப்பட்ட இருக்கை. ஆனால் , யார் வேண்டுமானாலும் எந்த கோச்சிலும் வித்தியாசமின்றி ஏறிக் கொள்ளும் பழக்கம் வட இந்தியாவில் உண்டு. இதை நானே சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் வண்டியில் அனுபவித்து இருக்கின்றேன்.  வண்டி நகர்ந்த சற்று நேரத்தில் ஒரு குடும்பம் அருகில் உள்ள கம்பார்ட்-மெண்டில் பேசி கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்துள்ளனர். மேலும் சீட் விளையாடிக் கொண்டு வந்துள்ளனர். சபலப்பட்ட சிலரும் அந்த வெள்ளை தோல் பெண்களுக்காக தானும் விளையாட  வருவதாக சொல்ல அவர்களையும் சேர்த்துள்ளனர். மதியம் இரவு என கழிந்துள்ளது. குடும்பத் தலைவர் இரவு பத்து மணிக்கு அனைவரும் படுக்க வேண்டியுள்ளது என கூறி, விளையாடிய அனைவருக்கும் பிஸ்கெட், பழம் , பால் கொடுத்துள்ளார்கள். இரவு சென்று காலை விடிவதற்குள் அங்கு விளையாடிய அனைவரும் கதறினார்கள். தங்கள் உடைமை, மற்றும் கை, கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணவில்லை. மேலும் அந்த குடும்பத்தையும் காணவில்லை.  இரயிலில் இழந்தவர்களும் உண்டு. பெற்றவர்களும் உண்டு. இன்றும் என் மைத்துனருடன் தொடர்பிலுள்ள மத்திய அரசில் உயர் பதவியில் பணிபுரியும் நண்பர் , இரயிலில் அறிமுகமாகியவர் .

  என் ஆசிரிய நண்பர் பிரபாகரன் மிகவும் சீரியசாக சொல்லும் கதை என்னால் இன்றும் நம்ப முடியாது. மதுரையின் கோயில் வீதிகளில் அனாதைகளாக காணப்படும் பலரும் இரயிலில் அழைத்து வரப்பட்டு  வேண்டுமென்றே தவறவிட்டவர்கள் தான்.   அதில் பெண்கள் பாடு தான் பாவம் . பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு வீதிகளில் வயிற்று சுமைகளுடன் அலையவிடப்படுகிறார்கள் .கோவில் நகரில் பாவங்களை தொலைத்து செல்கின்றனர். பாவங்கள் மனிதனின் பிறப்பிலிருந்து பிறந்தவை என்பதால்  முடிவின்றி எங்கும் தொடருகின்றன.
    அடிக்கடி  வட இந்தியாவிலிருந்து கும்பலாக வந்து , இராமேஸ்வரம் செல்லும் நபர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக மதுரை செய்திகளில் இடம் பெறும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ஒரு திரில்லான அனுபவம். ஒரு சமயம் பழனி பாதையாத்திரை சென்று மதுரை திரும்பிக் கொண்டிருந்தேன். என் அருகில் உள்ள நாற்பது வயது நிரம்பிய , வெள்ளை பை வைத்துள்ள நபர் , பாத்ரூம் செல்வதும் வருவதுமாக இருந்தார். டிக்கெட் பரிசோதகர் வருகை புரிந்தார். என் அருகில் வந்து என்னிடம் டிக்கெட் வாங்கி சரிசெய்யும் போது என்னருகில் இருந்த  அறுபது வயது முதியவர் பாத்ரூமில் உங்களை பார்த்ததும் ஒருவன் ஒளிந்துள்ளான் என போட்டுக் கொடுக்க, அவர் பாத்ரூம் கதவை தட்ட , பாத்ரூமிலுள்ள அந்த நபர் டிக்கெட் காட்ட , வெறுத்து போன பரிசோதகர்  இவரிடம் டிக்கெட் கேட்க பல் இளித்தார். இப்படியும் நடப்பது உண்டு. ஒரு சமயம் வலுகட்டாயமாக டிக்கெட் எடுக்காத காசில்லாத ஒரு இளைஞனை அருகிலுள்ள ஸ்டேசனில் இறக்கி விட்டதும் உண்டு. ஆனாலும் பலர் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதை பலமுறை பார்த்துள்ளேன்.   

   இரயில் பயணங்களில் அருகிலுள்ள ஊர்களுக்கு சரியான தருணத்தில் சேருவோம் என சொல்ல முடியாது. எங்கு எப்படி எப்போது தாமதம் ஏற்படும் என்பதெல்லாம் சொல்ல முடியாது, ஒரு முறை என் நண்பர் முக்கியமான ஒருவரை சந்திக்க மதியம் நான்கு மணிக்கு முடிவெடுத்து திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுள்ளார். வெயில் என்பதால், இரயிலில் பயணம் செய்ய முடிவெடுத்து , மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டுள்ளார். இரயில் வாடிபட்டி அடைந்ததும் , எதிரில் குட்ஸ் கடக்க நிறுத்தியுள்ளனர். நான்கு மணிக்கு வர வேண்டிய இரயில்  ஐந்து மணி முப்பது நிமிடத்திற்கு மதுரைக்கு வந்துள்ளது. அன்று சந்திப்பு நிகழவில்லை. அதனால் ஒரு வியபார தொடர்பு முறிந்து போனது. அந்த வியபாரத்தை பெற்ற வேறொரு நபர் இன்று கோடிஸ்வரர். ஆகவே, நேரம் முக்கியம் . ஆனால், இரயிலில் நேரம் எதுவும் சொல்லமுடியாதபடி பல சம்பவங்கள் நடந்துவிடும். இரயிலில் பயணம் கொள்ளும் நடுத்தர வர்க்க குடும்பங்களும் , அவர்களின் குழந்தைகளும் வெளிப்படுத்தும் வறுமை ஒரு இலக்கிய தரமிக்க நாவலை எழுத தூண்டும் . கதைகள் இரயில் பயணத்தில் வாய்ப்பது அதிகம். சென்ற முறை சென்னைக்கு பயணித்த போது ஒரு காதல் ஜோடியை சந்திக்க நேர்ந்தது. படங்களில் தான் இது மாதிரி ஒளிந்து ஒளிந்து யார் கண்ணிலும் படாத படி ஒடும் நாயகன் நாயகியை பார்த்து இருக்கிறேன். ஆனால் நிஜத்தில் , என்னால் நம்ப முடியவில்லை… (தொடரும்)