உண்மை என்பது
எப்போதும்
அறியப்படவேண்டியது
சில போது
வாய்விட்டு உரக்கச்
சொல்லப்பட வேண்டியதாகும் !
-கலீல் ஜிப்ரான்
இன்று இதை வாய்விட்டு உரக்க சொல்லப்பட வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது.
ஒருபுறம் அரசு கல்வி சாலைகளுக்கு குறைந்த பட்சம் கட்டணம் நிர்ணயத்திற்கு பாராட்டும் , மறுபுறம் "கல்வி தந்தையர்" களின் எதிர்ப்பும் நிரம்பி வலியும் காலம் இது.
எதுவாயினும் காசு கொட்டிப் படிக்க வைக்க தாயாராக இருக்கும் பெற்றோர் !என்ன அவலம் இது !
ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு இலவச கட்டாயக் கல்விக்கான சட்டம் பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு , இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்தும் வரலாற்று சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்வேளையில் சில விஷயங்களை நாம் வாய் விட்டு பேசித்தான் ஆக வேண்டும்.
1. ஒன்று முதல் எட்டு வரை பெயில் ஆக்காத இலவசக் கட்டாயக் கல்வி எதற்கு?
ஐந்து முதல் பதினான்கு வயது நிரம்பிய அனைத்து மழலைச் செல்வங்களுக்கும் கட்டாய இலவச கல்வி கொடுப்பதனால், "மாணவன் மொழி வளமை " பெற்று , நன்கு எழுத படிக்க தெரிந்தவனாகி விடுகிறான்.
அத்தோடு கல்வியின் கடமை முடிந்து விட்டதா? இல்லை. ஆசிரியர்கள் மாணவனுக்கு "நற்பண்புகள்" வழங்கி இந்த பருவத்தில் தான் நல்ல குடிமகனாக வளர்ந்து விடுகின்றனர்.
நவீன அறிவியல் யுகத்தில் மாணவனுக்கு "ஆய்வு மனப்பான்மை"ஏற்படுத்தி, அவனின் எதிகால திட்டத்தினை அவனே தேர்ந்தெடுக்க உதவுகின்றனர் .
இவை யாவும் யாரும் மறுக்க முடியாத உண்மை. உண்மை நிலைமை நீங்கள் தான் கூற வேண்டும் ?
2. அரசு தரும் அனைத்து இலவச திட்டங்களையும் வரிந்து கட்டி வரிசையில் நின்று வாங்கி செல்லும் பொது ஜனங்கள் , இலவச கல்வியை மட்டும் வாங்க மறுப்பதேன்...?
இருப்பவன் , இல்லாதவன் என அனைவரும் இலவச டி.வி. , இலவச அரிசி, இலவச கேஸ் ஸ்டவ் , இலவச காப்பீடு திட்டம் என அனைத்து இலவசங்களையும் பெற சண்டையிட்டு , முட்டி மோதி வாங்குவதில் முனைப்பு காட்டுவதுடன், சாலை மறியல், வெளி நடப்பு , முற்றுகை போராட்டம் என பல வழிகளில் அரசின் கவனைத்தை தன் பக்கம் திருப்பி, இலவச சலுகைகளை பெறும் மக்கள்,இலவச கல்வியை மட்டும் பெற ஆர்வம் காட்டாமல் இருப்பதேன்...?
அது மட்டுமா, வட்டிக்கு கடனை வாங்கி , படிக்க வைப்பது ஏன்...?
தன் மகன் படித்து நல்ல உயர் கல்வியினை பெற்று கை நிறைய சம்பாதிக்க வேண்டும் , வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று சுயநலமாக சிந்திப்பதன் விளைவு தான் வட்டிக்கு கடன் வாங்கி படிக்கச் செய்கிறது.
3. காசு கொட்டி படித்து கைநிறைய பணம் சம்பாதிக்கும் மகனால் என்ன பலன்..?
"எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்"
"காசு கொட்டி படிக்க வைச்சுருகேண்டா.."
"யாரு , யாரு கைய காலை பிடிச்சு சீட்டு வாங்கி கடன் வாங்கி படிக்க வைக்கிறேண்டா...கடனை அடைக்க உன்னை தான் நம்பி இருக்கோம்டா..."
"உன்னை படிக்க வைக்க காச தண்ணியா செலவழிச்சுருகேண்டா ...."
என சாதா காசு பற்றி பேசி மாணவன் மனதில் விதைப்பது எல்லாம் காசின் அறுவடையை மட்டுமே.
காசு வாங்கிய நிறுவனமும் வாங்கிய காசுக்கு துரோகம் செய்யாமல் , தன் கவுரவத்துக்கும் தன் நிறுவனத்தின் தரத்திற்கும் குறைவில்லாமல், மாணவனை நிறைய மதிப்பெண் பெறும் இயந்திரமாக்கி , அவன் பெற்றோர் நினைத்தை விட அதிக மதிப்பெண்களை பெற்றுத் தருகின்றனர்.
மாணவனும் மதிப்பெண் முக்கியத்துவ கல்விக்கு அடிமையாகி , அயராத முயற்ச்சியால் இயந்திர தன்மையான உழைப்பால், படித்து , படித்ததை வாந்தி எடுத்து , நிறைய மதிப்பெண் பெற்றதால் அரசு உத்தியோகத்தில் சேருகிறான்.
வேலைக்கு சென்றவுடன் தான் செலவழித்த பணத்தை எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற அடிமன உந்துதலில் , அரசு பணியினை செவ்வனே செய்ய , கையூட்டு பெறும் ,அதாவது "மூலதனத்திற்கு வட்டி தேடும் இயந்திரமாக " மாறி விடுகிறான்.
" லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் " லஞ்சம் கொடுப்பதை தடுத்தால் அவன் அரசு இயந்திரத்தை முறையாக பயன்படுத்துவான் என என்னை குறை கூறும் முன் ஒன்றை நினைவு படுத்துகிறேன்.
நாம் அனைவரும் காசு கொடுத்து கல்வியினை பெற்றவர்கள் . ஆரம்ப கல்வியிலேயே காசு கொடுத்து பழகிய நமக்கு (எல்.கே.ஜி .முதலே )...எப்படி அய்யா கொடுப்பதை நிறுத்த மனது வரும் ...? நாம் தான் தானியங்கி பணம் தரும் இயந்திரமாக (டெல்லர் மிஷின்) கொடுக்க பழகி விட்டோமே , பின் நாம் கொடுப்பதை நிறுத்துவோமா...?
அரசே குறைந்த பட்சக் கட்டணம் என்று மறைமுகமாக எதை திணிக்கிறது ....?
என நீங்கள் தான் கூற வேண்டும்.
4. காசு கொட்டி படிக்க வைத்த பெற்றோருக்கு பயன் உண்டா...?
இதற்க்கான பதில் கொஞ்சம் கற்பனை கலந்த மாதிரி இருந்தாலும் . நிஜம் அதுவே.
என் மகன் எல்.கே.ஜி .லிருந்து காசு கொட்டி படிச்சவன், இன்னைக்கு வேலைக்கு காசு கொடுத்து இந்த இடத்தை பிடிச்சு இருக்கான்.அதுனால நல்ல கழுத்து நிறைய நகையும் ,பெட்டி நிறைய பணமும் கொண்டு வருகிற மருமகளா பாருங்க என அடுத்த படலமும் காசிலேயே ஆரம்பிக்கிறது.
மறைமுகமாக காசு கொடுத்து பெற்ற கல்வி வரதட்சனையை ஊக்குவிக்கிறது. காசு கொடுத்து பெற்ற கல்வி ஒரு சமூக கரை. இது அக்கறை இல்லை.
காசு கொட்டி வாழ்வு பெற்ற மருமகளும் , காசை காரணம் காட்டியே , மாமியாரை விரட்டுகிறாள். இன்று பெற்றோர்கள் வீதியில் நின்று முதியோர் இல்லங்களை தேடுவது இதனாலே. கற்பனை என்று மட்டும் இதை சொல்லி தட்டிகழிப்பதால் உண்மை மாறிவிடாது.
5. தனியார் கல்வி சாலைகள் பெருகி வருவதன் காரணம் என்ன....?
இன்று தொழிற்சாலைகள் நிறுவனங்கள் பல, பல கல்வி சாலைகள் ஆரம்பிப்பதன் நோக்கம் தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட, அல்லது லாபம் தரும் தொழிலாக கல்வி மாறியதால் வந்த விளைவு ஆகும்.
அன்று தொழிலில் கிடைத்த வருமானத்தை செலவிட கல்வி ஆலயங்கள் நிறுவப் பட்டன. இன்று அவை பணம் கொழிக்கும் கூடங்களாக மாறி வருகின்றன. கல்வி கூடங்களில் , தரமான கல்வி என்பது மாணவர் வாங்கி வரும் மதிபெண்ணில் தான் என்ற நோக்கத்தில் செயல் படுகின்றன. மதிப்பெண் கல்வியை பெற்றோர்கள் ஆதாரித்து பூஜிக்கின்றனர்.
6. இதுவரை நாம் பேசியதில் எங்காவது நற்பண்புகளை பற்றி பேசி இருக்கிறோமா...?நற்பண்புகள் பற்றி எந்த கல்வி கூடங்களாவது முக்கியத்துவம் தந்து விளம்பரம் கொடுக்கிறதா...?
மதிப்பு கொடுக்கும் நற் பண்புகளை ஒதுக்கிவிட்டு , அதிக மதிப்பெண் பெற்று தரும் உத்திகளை மட்டும் கொண்டு கல்விசாலைகள் பெருகுவது தான் அத்தனை சமுக அவலங்களுக்கும் ஆரம்ப புள்ளி.
இதை ஆசிரியர்களும். பெற்றோர்களும் ஆதரிப்பது அதைவிட வெட்கக் கேடு.
ஆரம்ப கல்வியையாவது (அது எந்த வழிக்கல்வி முறை யாக இருக்கட்டும் ) அரசு இலவசமாக கொடுத்தால் , அனைத்து மாணவனுக்கும் மதிப்பெண் தவிர்த்து நற்பண்புகள் நிரம்ப சென்றடையும். மாணவனும் நல்ல குடி மகனாக உயர்வான்.
இனி நற்பண்புகளுக்கு மட்டும் தேர்வு வைத்து அதில் நூறு சதவித மதிப்பெண் பெறும் மாணவனே உயர் கல்விக்கு தகுதியாவன் என்றும், கருத்து பாடங்களுக்கு ,அறிவு விரிவு செய்யும் வகையில் தேர்வும் , கற்றதை பயன்படுத்தும் வகையில் தேர்வும் வைத்து கிரேடு முறை மதிப்பிடல் அமுலாக்கட்டும்.
7. அரசு நல்லெண்ணத்துடன் கொண்டு வந்துள்ள குறைந்த பட்ச கட்டண முறை வரவேற்கத் தக்கதாக இருப்பினும், முற்றிலும் கல்வி நிறுவனக்கள் அரசுடைமையாக்கப்பட்ட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யாதது ஏன்..?
எதிலெதிலோ இலவசங்களை அறிமுகம் செய்யும் தமிழக அரசு கல்வியினை ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை இலவசமாக அறிவிக்கலாமே ?ஆரம்ப கல்வியையாவது அரசுடமை ஆக்கலாமே..?
8. மாணவர்களுக்கு எளிமையை போதிக்காமல் , பகட்டை காட்டி கார், பங்களா, ஏசி அறைகளில் வளம் வரும் கல்வி தந்தையர்கள் , மாணவர் நலன் கருதி , கல்வி மேல் உள்ள அக்கறை வெளிப்பட ,மாணவர் தரம் உயர்த்தி காட்ட தரை இறங்கி வந்து இலவச கல்வி தந்து தம் தரத்தை உயர்த்தி கொள்வார்களா..?
9. மெட்ரிக் , ஆங்கில வழியில் காசு கொட்டி படித்தால் மட்டும் மருத்துவம், பொறியியல் மற்றும் வேண்டிய உயர் கல்வியை பெற முடியும் என்ற முதலீட்டாளர்களான பெற்றோர்கள் சிந்திப்பார்களா....?நற்பண்பு பற்றி பாங்குடன் நோக்குவார்களா..?
10. அரசு பள்ளிகளில் படித்தால் தான் அரசு உத்தியோகம் என்ற சூழலை உருவாக்கினால் மட்டும் தான் இலவச கல்வி வெற்றியடையுமா....?
எது எப்படியோ ...?பெருகி வரும் கொலை, கொள்ளை ,திருட்டு, பணமோசடி, நவீன சூதாட்டம் அத்தனையும் குறைய வேண்டுமானால் அதிக மதிப்பெண் மட்டுமின்றி , அதிகமாக்கப்பட வேண்டியது மாணவனுக்கு நல்ல நற்பண்புகளும் தான் என்பதை உணர வேண்டும் என்பது மட்டும் உண்மை.
அனைத்து ஆசிரியர்களும் உண்மையாய் உணர்ந்து, தம் நிலை உயர்த்தி, உணமையான ஆசிரியராய் உயர் நற்பண்புகளை போதித்தால் மட்டுமே சமுக சீர்கேடுகளை மாற்ற முடியும்.
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னையின் வளர்ப்பினிலே ...ஆனால்
அது கிடைப்பது இப்ப ஆரம்பக் கல்வியில் மட்டுமே...!"
என்பதை உண்மையாய் உணர்ந்து பெற்றோரும் , ஆசிரியரும் இலவச கல்வியினை வரவேற்று , நற்பண்புகளுடன் கூடிய நல்ல கல்வியினை இலவசமாக கிடைக்க பாடு படுவோம். இதற்க்கு கல்வி தந்தைகள் முன் வரட்டும். !
நமது சரியான செயல்களுக்கு
ஆதரவாயிருப்பதை விட
மிக அதிகச் சக்தியுடன்
நமது தவறானவற்றுக்கு
ஆதரவாயிருக்கிறோம்
என்பதே விந்தை!
-கலீல் ஜிப்ரான் வரிகளுடன் கத்துவதை நிறுத்திக் கொள்கிறேன்.
10 comments:
தெளிவான பார்வை சரவணன்.. வெளிநாடுகளில் ( அமெரிக்க போன்ற நாடுகள் தவிர்த்து) மந்திரிகள், மற்றும் பணக்காரர்கள் பிள்ளைகள், சாதாரண வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகள் அனைவரும் ஒரே பள்ளியில்தான் படிப்பார்கள்...இப்போதுதான் சமசீர் கல்வியை கொண்டு வந்த அரசு நிச்சயம் ஆவன செய்யும் என நம்புவோம்..
/////தெளிவான பார்வை சரவணன்.. வெளிநாடுகளில் ( அமெரிக்க போன்ற நாடுகள் தவிர்த்து)///
.... இங்கு private schools உண்டு ...... அது option தான்.... பொதுவாக mayor வீட்டு பிள்ளைகள் கூட அரசாங்க பள்ளியில் இலவச கல்விதான்....
//மதிப்பு கொடுக்கும் நற் பண்புகளை ஒதுக்கிவிட்டு , அதிக மதிப்பெண் பெற்று தரும் உத்திகளை மட்டும் கொண்டு கல்விசாலைகள் பெருகுவது தான் அத்தனை சமுக அவலங்களுக்கும் ஆரம்ப புள்ளி.//
சத்தியமான வரிகள். கல்விச் சாலைகளில் நற்பண்பை ஊட்டுதல் மிக அவசியம். ஆனால்
//இனி நற்பண்புகளுக்கு மட்டும் தேர்வு வைத்து அதில் நூறு சதவித மதிப்பெண் பெறும் மாணவனே உயர் கல்விக்கு தகுதியாவன் என்றும்.//
வெறும் நல்லவனாய் மட்டும் இருந்தால் போதுமா, திறமைகள் எதுவும் வேண்டாமா?
கல்வி என்பது பிழைக்கும் வழியா அல்லது அறிவும்,ஒழுக்கமும் பெற்று வாழ்வில் சிறக்க வழியா என்பதுதான் முக்கியமான கேள்வி.
அன்பின் சரவணன்
நல்லதொரு சிந்தனை - நாட்டு நடப்பையும் மனக்குமுறலையும் ஒருங்கே கூறிய விதம் நன்று. என்ன செய்வது .... இக்காலத்தில் அனைத்துமே காசு காசுதான். கல்வியும் வியாபாரமாகி விட்டது. ஆரம்பக் கல்வி தான் சிறந்த மாணவனை உருவாக்கும். அங்கு போடப்பட்டும் விதை தான் அவனுள் அவனை வளர்க்கும்.
நல்ல சிந்தனை - நல்ல இடுகை
நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா
சங்கிலித்தொடர்போல ஒன்றைச் செய்வதால், இதன் பலன்கள் தொடர்ந்து எவ்விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். காலம் ஒருநாள் மாறும் நம் கனவுகள் யாவும் தீரும்... காத்திருப்போம்... எழுத்துப் பிழைகளை தவிருங்கள். இன்னும் மேம்படும்.
கல்வியை இலவசமா கொடுக்கும் அரசு அதை தரமாகவும் கொடுக்க வேண்டும் இல்லையா?
மாநகராட்சி பள்ளிகளின் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டால் தானே அங்கே சேர்க்க முடியும். நான் ஏன் பிள்ளையை சேர்க்க விசாரித் போது அங்கு நிலவும் சூழ்நிலை, பயத்தையே ஏற்படுத்தியது. அரசு மாநகராட்சி பள்ளியின் தரத்தை உயர்த்தி ( பாட புத்தகத்தை சொல்ல வில்லை ) ஒரு awareness create செய்தால் பெற்றோர்கள் விரும்பி சேர்ப்பார்கள்.
virutcham சொல்வதும் சரி தான். இன்று மாநகராட்சி பள்ளிகள் பொழிவிழந்து காணப்பட பெற்றோர்களாகிய நாமும் காரணம் .நம் மோகம் காரணமாக ஆசிரியரும் மெத்தனமாக இருந்து ,நிலமை மோசமாகி இருக்கலாம். என் நோக்கம் ஆசிரியர் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும். இப்போது சமச்சீர் கல்வியில் பாடத்திட்டம் பொது , ஆகவே கல்வி தரம் அதிகமாக அனைவரும் பாடு பட வேண்டும். இல்லையேல் மீண்டும் மக்கள் ..வேறு சிறந்த பாடத்திட்டம் அல்லது கல்வி முறையையே தேடுவர். வாழ்த்துக்கள்
அருமை பதிவு....கலீல் ஜிப்ரான் வரிகள் மிகவும் அருமை...
Good posting.
But let the government makes a rule that the children of all elected members from Parliment to Panchayat and then all the government staffs to put their children only in govt or govt aided schools. Then the system will become alright.
Once a MLA son and a Collector's daughter study in a govt school naturally the standard will increase. All other advices are only a frace
Post a Comment