Tuesday, July 27, 2010

மறக்க முடிய வில்லை

       நான் சுறுசுறுப்பாக இயங்கும் தமிழ் நாடு பாலிடெக்னிக் சாலையில் வழக்கம் போல் மெல்ல  பயணித்தேன். திருப்பரம் குன்றம் பேருந்து புகை கக்கி என்னை முந்தி சென்றாது. காலையில் உதித்த ரோஜாவை  போன்று சிவப்பாய், வெளுப்பாய், மஞ்சளாய் பலவிதங்களில் கலர் கலராய் மதுரை கல்லூரி நோக்கி பிகர்கள் பயணித்தனர். நானும் ஆனால் ரோடு கிராஷ் செய்து அவர்களுடன் பயணிக்க முடிய வில்லை.... கையில் உளியுடன் எப்படி ...?
      
    "டேய் , பிராக்கு பார்க்காம ...ரோட்ட  பாத்து நட ..." என வார்த்தைகள் வந்த திசை நோக்கி பயணித்தேன். கத்தி சென்ற சைக்கிள் காரன் ...குடை பிடித்த பெண்ணை பார்த்து சிரித்து சென்றான்.திரும்பி பார்த்தான். "கண்கள் இரண்டும் ..." பாடல் என் கண் முன்னே ..."வீட்டில சொல்லிட்டு வந்திட்டியா..."தவறுதலாக சென்ற பைக் காரனை பார்த்து ஆட்டோ காரன்.

     இவை எதையும் பொருட்படுத்தாது ,தனி உலகில் சைக்கிள் காரன் திட்டியதை கூட  காதில் வாங்காது ..."டேய், நேத்து கரண்டு போச்சா ...நம்ம மொக்கை வீட்டுக்கு வந்தானா...எங்க ஆத்தா....ஒரு சவண்டு விட்டுச்சு பார்க்கணும் ....துண்ட காணாம் துணிய காணாம் என பயந்து ஓடிட்டான்..."என ஆண்டாள் புரம் பாலத்தின் கீழே  பொதிகளுடன் கழுதைகளை போன்று,ஆனால் விருப்பத்துடன்  மெல்ல நடந்த சிறுவர்களை நோக்கி என் பயணம் தொடர்ந்தது.

  ' படிப்பு கூடினால் புத்தகம் , நோட்டு தேவை இல்லை' என பல நாட்கள் கல்லூரி செல்லும் பெண்களை பார்த்து நினைத்ததுண்டு. என் பழைய வீட்டு அருகில் வசித்த பையன் என்னை போன்று பொதி சுமைக்கு பயந்து , கொத்தனார் வேலைக்கு அன்று கல் சுமக்க என்றது நினைவுக்கு வருகிறது.

     "அக்கா, அந்தாள பார்த்தாலே பயமா இருக்கு , அதுவும் புத்தகம் கொண்டு போகலைன்னா...கைய நீட்ட சொல்லி பிரம்பா வச்சி ஓங்கி ஒரு அடி அடிப்பான் பாருங்க ...
 வலி உயிரு போயிரும்..."

"புத்தகம்  கொண்டு போகலைன்ன படிப்பு எப்படிடா சொல்லி தர முடியும்.....அடிச்சா தாண்டா..படிப்பு வரும்... வாத்தியார குறை சொல்லக்கூடாது...எல்லாம் உன் நல்லதுக்கு தான் இந்த அக்கா சொல்லுவேன் ...நாளைக்கு மண் சுமக்க வராம ..படிக்க போடா...."


"உனக்கு என்ன அக்கா தெரியும் ...அவனை கண்டாலே பிடிக்கல...அவன்கிட்ட சொல்லி தர நிறையா பேரு இருக்கானுங்க...லீடாராம்..சனியன் பிடுச்சவணுக...எப்ப பார்த்தாலும் என்ன மாட்டி தந்து அடிவாங்கி குடுக்கிறது தான் வேலை ....இவன்கிட்ட கேளுக்கா.."


"அக்கா...படிப்புக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது....எப்ப திட்டுறானுக, இல்லை அடிக்கிறானுக...இதை கூட தங்கிக்கலாம் ...அந்த மூக் கொழுகி ...சிரிக்கிறா....வீட்டுல வந்து போட்டு கொடுக்கிறா... "

"மர மண்ணடை உனக்கு எதுக்கு படிப்பு பேசாம மூடை தூக்க போன்னு அந்த வாத்தி திட்டினதுக்கு , மூக்கொழுகி சிரித்ததுக்கு, அந்த வாத்தி முன்னாடியே கல்ல தூக்கி மண்டையில்ல போட்டு வந்துட்டான்...இனி படிக்கிறது எங்க இரண்டு பேராலையும் முடியாது .."

     என் நினைவலைகள் சீறி சென்ற லாரி சத்தத்தில் கலைந்தது. அவர்கள் மிக்க மகிழ்ச்சியில்....என் காதுகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. 

"டேய் , நான் குரங்கு அட்டை ஐந்து வரேன்..."

"நான் , நேத்து பத்து அட்டை படிச்சேன்.....இந்தா இந்த பேனா....கொடுத்தாங்க ...நம்ம பாண்டியன் சாரு "

"அவரு மட்டும் இல்லைன்னா ...நம்ம பாண்டி வெல்டிங்கு பட்டறைக்கு போயிருப்பாண்டா..."

"சும்மா பள்ளிக்கூடம் வாடான்னு...நித்தம் அவனுக்கு தன் சாப்பாட்டை கொடுத்து .. . அவன் போக்கிலேயே போயி ..."

"அவனுக்கு சாப்பாடு கொடுத்து ...சாரு எத்தனை முறை வெளிய போயி சாப்பிட்டு இருக்காரு  தெரியுமா...?".

"டேய் ...அவன் முதல்ல ஒரு படி நிலை கூட  வரல இப்பா பார்த்தா நம்ம விட ரெம்ப பாஸ்ட்டா படிக்கிறாண்டா..."

" நேத்து ஒரு பெரிய கதை புத்தகம் எடுத்து படிச்சு ...கதை சொல்லுறான்..அந்த குட்டச்சியும் ....அவனுடன் சேர்ந்து அலட்டுராட...."

"அட விடுடா...இன்னைக்கு  நாம சிறுசா பத்து புத்தகம் படிச்சு பத்து கதை சொல்லுவோம்டா ..தன்னால அந்த குட்டாச்சி, பல்லி ,எலி எல்லாம் நம்ம பக்கம் வந்துரும்டா....இன்னைக்கு மதியம் படிக்கிறோம்...கலக்குறோம்..."


    அவர்கள் நிறைய விலங்குகள், பறவைகள், பூச்சிகள், விளக்குகள், வாகனங்கள் பற்றி பேசினார்கள் ....புரிய வில்லை.அட்டை வைத்து படிப்பதாக சொன்னார்கள்.அன்று பரீச்சை அட்டை கொண்டு செல்லவே வெறுப்பாக இருக்கும் , இவர்கள் இத்தனை அட்டை சொல்லுவது வியப்பாக இருக்கிறது. எது எப்படியோ என்னை போன்று படிப்புக்கு பயந்து , அடிக்கு பயந்து, செங்கல் தூக்காமல் நல்லபடியாக படித்தால் நல்லது தான்.

     பையின் சுமை தெரியாமலே ....அவர்களை கால்கள் பள்ளி நோக்கி சென்றன.நான் மட்டும் எதையோ இழந்தவன் போல உணர்ந்தவனாக மெல்ல அவர்கள் பின்னே பயணித்தேன். ஆசிரியரை பற்றி மாணவர்கள் பேசியது , என் ஆசிரியரை நினைத்து வருந்த செய்தது. ஒரு வேலை நான் சீதா டீச்சரிடம் படித்திருந்தால் என் கால்களும் கல்லூரி நோக்கி பயணித்து இருக்குமோ...!


       கிழிந்த டவுசருடன் வந்தவனுக்கு புது சட்டை , டவுசர் எடுத்து கொடுத்து , தலை வாரி, சாப்பாடு கொடுத்து ,கதை சொல்லி , அரவணைத்து பாடம் சொல்லும் சீதா டீச்சர் அவர்கள் வகுப்புக்கு எத்தனை முறை செல்ல முயன்றும் , அந்த வாத்தியார் வகுப்பில் மாட்டி , வாட்டி என்னை தொலைத்ததை இன்னும் மறக்க முடிய வில்லை.

"என்ன அண்ணே ....உங்களுக்கு தெரிந்த பையன் படிக்கிறானா....பள்ளி கூடத்தையே வெறித்து பார்க்கிறீங்க....எங்க சார் ...உங்களை  ...கூப்பிட்டார்...." என்ற மாணவன் குரல் என்னை தடுமாற வைத்தது.

"இனி வந்து என்னப்பா செய்ய போறான்..." எதையோ இழந்தவனாக கடையை நோக்கி பயணித்தேன்.    



 

2 comments:

Anonymous said...

ஹூம் ..

sakthi said...

மனம் நெகிழ வைத்த பதிவு சரவணா

Post a Comment