Sunday, July 11, 2010

பழகிய தெரு

        நாங்கள் குடி இருந்த  பழைய வீட்டிற்கு சென்றேன். இருபது வருடம் குடி இருந்த  வீடு,இன்று அதை விட்டு சென்று ஆறு வருடம் இருக்கும் .  சொந்த வீடு அல்ல , இருந்தாலும் அப்பகுதியின் அனைத்து வீடுகளும் மாறி இருந்தன. ஆட்களும் ஒரு சிலரை தவிர அனைவரும் மாறி இருந்தனர். சொந்த வீட்டு நபர்களும் , வீட்டை விற்று குடி பெயர்ந்து இருந்தனர்.
      
           பழகிய தெரு , முகங்கள் புதிது. மொழி தெரியாத ஊரில் வழி தவறி வந்தவன் போல் , அறிமுகமான ஆள் தேடி அலைந்தேன். மாகாதேவன் தென்பட்டவுடன் , பெரு முச்சு விட்டேன் . "வா சரவணா, பழைய ஆள் யாரும் இல்லை , நானும் காலி பண்ணிட்டு போயிட்ட , நம்ம பாஸ்கர் வீடு மட்டும் தான்..." என பழமையை நினைவு ஊட்டினார்.

      மதுரை மாநகராட்சி தெருக்களை அருமையாக சிமிண்டு கற்கள் கொண்டு அழகு படுத்தி உள்ளது. நான் படிக்கும் காலங்களில் தெருக்கள் மணல் மற்றும் கற்களால் ஆனவை. . சாக்கடை வாரத்தில் ஒருநாள் வெளியேறி விடும். நான் என் நண்பர்களுடன் தெருக்களில் தான் தெரு விளக்கின்  கீழே படிப்போம். படித்த பின் அதன் அடியிலே படுத்து உறங்குவோம்.

      மதுரை தூங்க நகரம் என்பதற்கு ஏற்ப நாங்கள் படிக்கும் நாட்களில் தெரு விளக்கின் அருகில் உள்ள அடி குழாயில் , பத்து மணிக்கு ஆரம்பித்து இரண்டு  மணி வரை தண்ணீர் எடுத்து கொண்டு இருப்பார்கள்.ஆண்களும், பெண்களும் உலக விசயங்களை   பேசிக்கொண்டும் ,அரட்டை அடித்து கொண்டும் தண்ணீர் பிடிப்பது ஒரு பொழுது போக்கு .சில சமயங்களில் பக்கத்து தெருவில் இருந்தது வரும் போது சண்டையும்  நடக்கும். தமிழ் அகராதியில் அர்த்தம் தேடும் வார்த்தைகள் தான் அதிகமாக பேசப்படும்.

    தண்ணீர் பற்றாக்குறை என்பது இல்லை. பகலில்  மணலூர் தண்ணீர் வரும், அது மண்  வாடை அடித்து இருக்கும் என்பதால் குடிக்க விரும்ப மாட்டார்கள். இரவில் கோச்சடை தண்ணீர் வரும் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் . எங்கள் பகுதியில் ஜார்ஜ் பூங்காவில் புதிதாக குடி நீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்ததால் , அதற்கு இரண்டு பட்குதியில் இருந்தும் தண்ணீர் நிரப்ப பட்டு வந்தது.
    
    சி. எம். ஆர். ரோட்டில் உள்ள அந்த பூங்கா தான் எங்களின் பகல் படிப்புக்கு ஒரு புகலிடம். தண்ணீர் தொட்டி கட்டும் போது , பூங்காவின் பாதி இடம் சுருங்கி விட்டது. காலை , மாலை ரேடியோ கேட்டு இருக்கிறோம். பெரியவர்களுக்கு தங்களின் கதைகளை பேசுவதற்கு தனி இடங்களாக இருந்தது. நான் பேச்ச்சு போட்டுகளில் கலந்து கொள்ளும் போது அந்த பார்க்கில் தனிமையில் பேசி இருக்கிறேன். யாரும் நம்மை பார்பதாக உணரப்பட்டால் காக்கை விரட்டி சமாளித்தும் இருக்கிறேன். பல மாணவர்கள் சத்தமாக படிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தாலும் அவர்கள் யாரும் பேச்சு போட்டியில் கலந்து     
கொள்வதில்லை என்பது ஆச்சரியம் .

      பேச்சு மிகவும் முக்கியமான ஒன்று. பேச்சு மிகவும் சக்தி வாய்ந்தது. கவர்ச்சியான பேச்சு ஆட்சியையே   மாற்றி விடும். "என் இரத்தத்தின் இரத்தங்களே .." "என் உடன் பிறப்பே ..."என்ற கவர்ச்சி அழைப்புகள் தமிழகத்தில் எத்தனை மாற்றங்களை  ஏற்படுத்தி உள்ளன.   
  
      சாக்ரடீஸ் பேச்சு கிரேக்க மனிதனை சுய சிந்தனைக்கும் , பகுத்தறிவுக்கும் அழைத்து சென்றது. இங்கர்சால் பேச்சு மக்களை மதத்திலிருந்து மாறுபட்டு சிந்திக்க தூண்டியது. வல்டோர் பேச்சு பிரஞ்சு புரட்ச்சிக்கு வித்திட்டது. சீன மக்களின் விடுதலைக்கு சன்யாட் சென்னின் சமத்துவ பேச்சு உதவியது. துருக்கியின் புத்தெழுச்சிக்கு கமால் பாட்ஷா வின் பேச்சு . இந்தியாவில் சமுக புரட்சிக்கு பெரியார்.பெரியார் கொள்கைகளை மேடைகளில் முழங்கி எழுச்சி ஏற்படுத்தினார்.

    இன்று தெரு விளக்கின் கீழே யாரும் படிப்பதில்லை.தெரு விளக்கும் கண்ணீர் விட்டு தன் ஒளிக்கதிர்க்களை பாய்ச்சுகிறது.   பேச்சு துணைக்க ஏங்குகிறது. தெருவும் வெறிச்சோடி இருக்கிறது. தெருவில் ஓரத்தில் எங்கோ ஒரு மூளையில் ஒரு பெண் தன் கண்களால்  எனக்கு பின்னல் நின்றிருக்கும் பெயர் தெரியாத கல்லூரி மாணவனிடம் பேசுவதை மட்டும் அறிய முடிந்தது. "உள்ளே போடா.." என கனத்த குரல் கேட்டு அதிர்ந்தது விசாரித்தேன் . "இன்று பசங்க யாரும் முன்ன மாதிரி தன் தெருவில் உள்ளவர்களிடம் சகோதர  உணர்வுடன் பழகுவதில்லை , பெண்களும் பசங்களை கவுத்திவிடுகிறார்கள் ,வெட்டியாக பெரியவங்க தான் சண்டை போடா வேண்டிஉள்ளது.இப்ப போன பையன் , அதோ வெளிய நின்று கொண்டு ஏக்க பார்வை பார்க்கும் பெண் வீட்டிற்கும் பெரிய தாகறாரு ...."என கதை சொல்லி முடித்தார்.

அதற்காக காதலிக்க கூடாது என்று அர்த்தமில்லை.   என் காலங்களில் யாரும் காதலிக்க வில்லை என்று சொல்ல வில்லை,என் வீட்டி ஓனரின் மகளும் பின் வீட்டு கிருத்துவ பையனும் மொட்டை மாடியில் காதலித்தனர் . வீட்டில் பிரச்சனை வரும் என்றவுடன் நாசுக்காக ஒதுங்கி கொண்டனர். இது தான் காதலுக்கு மரியாதை.       

    இன்று பேப்பரில் வரும் செய்திகளை பார்க்கும் போது காதல் கொலைகள் பெருத்து விட்டன. சங்க இலக்கியங்களில் காதல் பேசும் நாம் இன்று இலக்கணம் தவறி பெற்ற மகனையோ , மகளையோ கொலை செய்யும் அளவிற்க்கு கோபம் வெளி படுத்துபவர்களாக உள்ளோம்.

     "பூத்த பொங்கர் துணையோடு வதிந்த
      தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
      மணிநா ஆர்த்த மாண் வினைத் தேரன் "
என்ற அகநாநூற்று   தலைவன் பெரு வேட்கையோடு தலைவியை காணும் போது சாலை மருங்கே இன்பம் துய்க்கும்  வண்டுகளுக்கு தன் தேர் மணிகள் துன்பம் கொடுக்கும் எனபது அறிந்து அதை அறுத்து எரிந்தது செல்லும் தலைவன் தான் தமிழன் . ஆனால் இன்று தன் பெண்டு பிள்ளைகளின் இன்பம் பொறுக்காமல் தலை கொய்தி விடும் அவலம்  .
      பெற்றோர்கள் காதலிக்கும் முன் காதலை தடுங்கள் . பிறப்பின் மகிமை உணர்த்துங்கள். மீறி காதலித்தால் தயவு செய்து  காதல் கொலைகள் செய்யாதீர்கள்.

     பழைய நினைவுகளுடன் நான் புதிய சாலையில் பயணிக்கிறேன். பயணம் தொடரும். 

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

///பழைய நினைவுகளுடன் நான் புதிய சாலையில் பயணிக்கிறேன்/// - கடசியா முடிச்சது அருமை..........

a said...

பழய தெருவின் பழய நினைவுகள் அருமை....

Anonymous said...

"பழைய நினைவுகளுடன் நான் புதிய சாலையில் பயணிக்கிறேன். பயணம் தொடரும்."

நினைவுகள் நல்லா இருந்தது ,காதலே பத்தி சொன்னதெல்லாம் மிகவும் சரி ...படிக்கற சமயத்தில் படிப்புக்கு தான் முதலிடம் தர வேண்டும் ..உங்க கருத்தெல்லாம் ரொம்ப அருமையா இருக்கு சரவணன் சார் ..

ராம்ஜி_யாஹூ said...

memories are good

Post a Comment