எங்கள் பள்ளியில் சர்வ சிக்க்ஷா அபியான் சார்பாக நான்கு மாணவர்களுக்கு காது கேட்கும் கருவி கொடுக்கப்பட்டது. முறையாக ஆசிரிய பயிற்றுனர்களான திரு கண்ணன் மற்றும் சகாய ராணி அந்த வகுப்பு ஆசிரியர்களிடம் அதை செயல் படுத்தும் விதத்தை எடுத்து கூறி , மாணவர்களுக்கு வகுப்பிலேயே ஒரு வாரத்திற்கு அதன் பயன்பாட்டை எடுத்துக் கூறி , நன்கு அக் கருவியை பயன்படுத்த தெரிந்த பின் அவனின் பெற்றோர்களை அழைத்து கொடுக்க வலிறுத்தி சென்றனர். நன்கு வேலைசெய்யும் மாற்றுதிறன் மாணவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் கல்வி வழங்கும் ஆசிரியரக்ளுக்கு அரசு பணி நிரந்தரம் செய்யாது இருப்பது வருந்ததக்கது. காலை எழு மணிக்கு அரசு ராஜாஜி மருத்துவமனை சென்று , மாணவர்களுக்காக காத்து இருந்து , அவர்களுக்கு உரிய அடையாள அட்டை வாங்கி கொடுக்க , கால் கடுக்க நிற்பதை பார்க்கும் போது அவர்கள் பணியை கை எடுத்து கும்பிட வேண்டும் போல் இருக்கிறது. அரசு கருணையுடன் அவர்களை பார்க்க வேண்டும். (எட்டு மணிக்கு நான் அனுப்பிய பெற்றோரும் , என் பள்ளி ஆசிரியரும் செக்கப் முடிந்து பள்ளிக்கு ஒரு மணிக்கு தான் வந்தனர்.அது வரை இருவரும் குறைந்த ஊதியத்திற்காக ஏனோ தானோ என்று இருக்காமல் வேலை பார்க்காமல் , சேவையாக செய்வதை பார்க்கும் போது , என் போன்ற ஆசிரியர்களின் கடமை இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்)
அனைத்து ஆசிரியருக்கும் அக்கருவி கொடுக்கப்பட்டது.அனைவரும் அனைத்து மாணவர்களுக்கும் கொடுத்தனர்.அனைவரும் பயன் படுத்தினர். மீண்டும் தலைப்புக்கு வருகிறேன். ஆசிரியர்கள் தான் மாணவனின் தலை எழுத்தை நிர்ணயிக்கிறார்கள்.
"எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்குமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கச் செய்யுமோ, அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மனிதனுள் புதைந்து கிடக்கும் பூரணத்துவத்தை வெளிபடுத்துவதே கல்வி. " என்றார் விவேகானந்தர்.
கருவி வாங்கிய ஆசிரியர்களுள் ஒன்றாம் வகுப்பு அ பிரிவு ஆசிரியர் மட்டும் என் அறிவு கண்களை திறந்து விட்டார்.
நான் ஆசிரிய பயிற்றுனர்கள் தான் விளக்கமாக சொல்லிவிட்டனரே ,என்று காலையில் வந்தவுடன் கடந்த வாரம் முழுவதும் ஆசிரியர்களிடம் கருவியை கொடுங்கள் என்று சொனதுடன் நிறுத்தி கொண்டேன். யாரும் அதை பற்றி எதுவும் சொல்ல வில்லை. ஆனால் மேற் குறிப்பிட்ட ஆசிரியர் மறு தினம் வந்து ,"சார், உண்மையிலேயே நல்ல பயனுள்ள கருவி சார்,பழைய கருவி மாதிரி இல்லாம ,இது கையாடக்கமா இருக்கு சார்" . "அப்படியா, ரெம்ப சந்தோசம் ...மாணவர் வருகை சாராசரி முடிக்க சொல்லுங்க..." என மழுப்பலாக முக்கியத்துவம் தராமல் பேச்சை மாற்றி விடுவேன். இதுவரை பிற மாணவர்களின் ஆசிரியர்கள் அதை பத்தி பேசியதில்லை, நானும் கருவி கொடுங்கள் என்பதுடன் நிறுத்திக் கொள்வேன்.
இரண்டாவது நாள் அந்த ஆசிரியர் வந்து, "சார், இந்த எஸ். எஸ். ஏ வந்து மற்று திறன் உள்ள மாணவர்களுக்கு ரெம்ப பயனா இருக்கு சார், என் கிளாஸ் பயன் இப்ப 'ப ' ன்னு சொன்னா வாய் அசைத்து 'ப' சொல்லுறான் சார் ...." என மகிழ்ந்து சொன்னார்.
மூன்றாம் நாள், " சார், இப்ப நான் கூப்பிட்டா திரும்பி பார்க்கிறான் , சார், ...கொஞ்சம் இந்த கருவியை காது அருகில் வைத்து கேளுங்க நல்லா மைக்கில பேசின மாதிரி இருக்கும் ..." என அக் கருவியின் மகத்துவத்தை பற்றி சொன்னார். மெதுவாக சற்று தொலைவில் நின்று ஹெலோ என்றார் என் காதுகளில் ஒலி பெருக்கி கேட்பது ..."பாருங்க சார், எவ்வளவு அந்த பையன் செவிடா இருந்திருப்பான்.....சார் அடுத்த வாரம் நானே அவங்க வீட்டுக்கு போய் இந்த கருவியின் பயன் , எப்போதும் அணிந்து இருக்க வலியுறுத்தி வருகிறேன்..." என அனுமதி கேட்டார்.
ஐந்தாம் நாள் அவரின் வகுப்பறையில் ..."சார், பேர் சொல்லி கூப்பிடுங்க்களேன் ...எப்படி பார்க்கிறான்,,,இதுக்கு முன்னாடி இப்படி திரும்ப மாட்டான், இப்ப நல்ல கவனிக்கிறான்...படம், பட்டம், பம்பரம் நல்ல சொல்லறான் சார், முன்னாடி நான் எது சொன்னாலும் கவனிக்க மாட்டான்..நான் எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான், இப்ப நல்ல பேசுறான்....என் பக்கத்திலேயே வைத்து பார்த்துக்கிறேன்...."
இந்த வாரம் முதல் நாள் ..." சார், சாதாரண பையன் மாதிரி பேச முயற்சி செய்ய வைத்திருக்கிறேன் ....கூட படிக்கிற பசங்க கிட்ட அவனுடன் பேச சொல்லிருக்கேன்....நீங்களும் என் வகுப்பில் வரும் போது பேசுங்க சார்...."
இந்த வாரம் இரண்டாம் நாள் " சார், நான் மட்டும் அல்ல , பிற பசங்களும் பேசினா பேசுறான் ...நிறைய சொல்லித் தர சொல்லுகிறான்..... அவன பாருங்க சார் குறையே தெரியாத அளவு பயிற்சி தருகிறேன் பாருங்க...."
புதன் காலை ...." சார், தப்ப நினைக்கலைன்ன...அந்த பிற பையன்களையும் என்னிடம் தாருங்கள் அனைத்து மாணவர்களையும் நானே பார்த்துக் கொள்கிறேன்...அனைவரயும் பேச வைக்கிறேன்...மத்த பசங்க எப்படி பேசுறாங்க இந்த மிஷின் அவங்களுக்கு பயண இருக்கன்னு பாக்கவா...சார்..."
என் செவுல்களில் அறைந்த மாதிரி இருந்தது. பிற ஆசிரியர்களிடம் ஏன் இந்த ஒரு துடிப்பு இல்லை. பிற ஆசிரியர்களை நான் ஏன் தூண்ட வில்லை ....பிற வகுப்புகளுக்கு சென்றேன் ...கருவி பயன்படுத்தப் படுகிறாதா என்று பார்த்தேன் ...ஆனால் அதன் பயன்பாட்டை கேட்க முடிய வில்லை,உணர முடியவில்லை. தாயுள்ளத்துடன் பார்க்கும் ஒரு சில ஆசிரியர்களால் தான் நம் இந்தியா நற்பண்புகளுடன் ,வளர்ச்சி அடைந்து வருகிறது.
மாணவனின் தேவைகளை நிறைவேற்றும் ஆசிரியர்கள் மட்டுமே என்றும் நம் மனதில் இடம் பெறுவார்கள். மாணவனின் தேவைகளை அறியாது, தம் அதிகாரத்தால் மாணவனை அடக்கி வைக்கும் ஆசிரியர்களை மாணவன் பிற்காலத்தில் ஒரு ஜெயில் வார்டனைப் போன்றே பார்க்கிறான்.
சுதந்திரமாக கற்றல் நடைபெற வேண்டும். ஒரு கட்டுக்குள் மாணவனை அடக்கி வெறும் தகவல்களை அள்ளித் தரும் ஒரு கூடமாக இருக்குமானால் , மாணவன் பள்ளியை ஒரு சிறை சாலையாகவே எண்ணி புறக்கணிக்க ஆரம்பிப்பான்.
"சுதந்திரமான சிந்தனைக்கும் , அறிவாற்றலுக்கும் தடையாக இருப்பது இன்றைய கல்வி முறை" -என்ற ரஸ்ஸல் கருத்து என்றும் உண்மையாகி விடாது , அனைத்து ஆசிரியர்களும் மாணவனின் தேவைகள் உணர்ந்து , சுதந்திரமான கற்றலை உருவாக்கவேண்டும்.
நான் உணர்ந்த மாதிரி என்று பிறர் உணர்வார்கள்...? கல்வியில் , கல்வி கற்று தரும் முறையில் மாற்றம் வர வேண்டும். கல்வி மதிப்பெண் உத்திகளை மறந்து உண்மையான மதிப்பிடல்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.