Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, October 28, 2013

இந்த தீ அணையாது...படித்து உறுதி செய்யுங்களேன்...!

         இத்தனை நாளாய் ஒருவனை இழந்துஇருக்கின்றோம் என்று நினைக்கத்தோன்றும் என்றால் அது நம்மையறியாமல் அவன் மீது நாம் கொண்டுள்ள பற்று , நட்பு, பிரியம் ஆகும் என இப்படி உங்களுக்கு பொருத்தமான , பிடித்தமான வார்த்தைகளால் இட்டு நிரப்பலாம். அவனை சந்தித்தப்பின் ஏற்படும் மனநிலை தேங்கிய நீரில் வீசி ஏறியப்பட்ட கல்லினால் ஏற்படும் சலனம். அது நீண்டது. அது ஓய்வு நிலைக்கு வருவதற்கு மணிநேரம் பிடிக்கலாம். அந்த மணி நேரத்திற்குள் மன அலைகள் எழும்பும் உயரம் ஆழிப்பேரலையை விட பெரியது.  உயர்ந்து எழுந்து அடங்கும் போது பிரபஞ்சம் அதனுள் அடங்கியிருக்கும். என்னை அப்படி அவனுள்ளே அடக்கியவன் வேறு யாராக இருக்க முடியும். அந்த தீ பரவ தொடங்கிய தருணம் நான் அதனுள் பொசுங்கிப்போனேன். மெல்ல சூடேறி, அதன் போக்கில் காற்றின் துணையுடன் பற்றி எரிந்து , அதனால், தாம் எரிவதுடன் அருகில் உள்ள அத்தனையையும் தன்னோடு சேர்த்து எரிய விடுவது எதார்த்தம். இந்த தீ அருகில் இருந்தாலே நம்மை சூடேற்று முன்பே தானாக  எரித்து விடுகிறது. அவன் பேச தொடங்கிய தருணம் , அவனாகவே மாறி விடுவது என்பது அறிவியல் முரண். இனி நான் அவனின் அடி வருடி என்று கூட அழைக்கப்படலாம். அதற்காக வெட்கப்படப்போவதில்லை. இது என்ன கூடா நட்பா. என்னோடு பேசக்கூடாது என்று சொல்லியும் என்னை தேடி வந்து பேசிய நட்பு. முரண்களில் தொடங்கிய முதிர்ச்சியான நட்பு. அவன் வார்த்தைகளில் சொல்லப்போனால் இது சுவரில் இறுகி, சுவரோடு சுவராக ஒண்றியுள்ள ஆணியை , அடித்து, ஆட்டி, வன்மையாக பிடுங்கி கொள்ளும் விசயம் அல்ல. நட்பு அது சுவரிலிருந்து தானாக ஸ்கூரு டிரைவர் கொண்டு அப்படியே சர சர சர என தானாக கழட்டிக்கொள்வது போன்றது நட்பு. அது சுவரில் இருந்து பூப்போல உருவி வருவது. தானாக கழண்டு கொள்வது போல , இறுக்கம் தளர்ந்து தன்னை ஒப்படைப்பது. இந்த நட்பு பூ போன்று மனம் பரப்பும். மாற்றம் என்பது மானுட தத்துவம். இந்த மாற்றம் இன்று நடந்தேறியுள்ளது. 
           
           இரண்டு வருடம் பார்த்தும் பார்க்காமலும் பேசியும் பேசாமலும், நட்பாய் இருந்தும் இல்லாமலும், ஒதுங்கியும் , ஒதுங்க முடியாமலும் இருந்த காய் தானாக கனிந்து  இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் புனைவில் ஆரம்பித்த இந்த நட்பு, அதன் தொடர்ச்சியாக எங்களுக்கு முரண்களை பரப்பி, எட்டியே பார்க்க செய்திருந்தது.  இலக்கிய வட்டத்தின் நீட்சி, எதிரும் புதிருமாக, முக நூலில் நட்பாக, கேலியாக, கோபமாக, எழுதிய எழுத்துக்களில் விமர்சகனாக இப்படி ஒரு சாராசரி சென்னை டூ மதுரை அரசு போருந்தைப்போல, சிக்கலாகவும், சிக்கனமாகவும், தாமதமாகவும், பாதுகாப்பாகவும் சென்று கொண்டிருந்தது எங்கள் நட்பு. சமீபத்திய சந்திப்புகளின் நீட்சி, அவசியம் அரசு தொடங்கியுள்ள மினி பஸ் போன்று இன்னும் பளப்பளப்பாக பொழிவாக இன்று வெள்ளோட்டம் கண்டது. இதன் பின்னால் பேசப்படும் அரசியல் பற்றி இருவருக்கும் கவலையில்லை. இந்த பேருந்துக்கு பின்னால் இலை இருப்பதில் இருவருக்கும் கவலையில்லை. எனவே , அதனை நீக்க சொன்னாலும் கவலைப்படுவதற்கில்லை. இல்லை இது வேறுமாதிரியான இலை என்று சொன்னாலும் மகிழ்ச்சி அளிக்கப் போவதில்லை.


         உன்னை தியாகம் செய்வதனால் மட்டுமே பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்” ஆம் அவனுக்காக என்னை தியாகம் செய்ய துணிந்து விட்டேன்.  புனைவு செந்திக்காக வருந்தினான். செந்தி பற்றி உயர்ந்த கருத்து கொண்டிருந்தான். எனக்கான இடத்தை கொடுத்தவன் செந்தி என்று மனசார சொன்னான். தன் பெயரில் தீ கொண்ட  அவனுக்காக பத்திரிக்கைகள் கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றன. அவன் யாரையும் உயர்த்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் செந்திக்கும் எனக்கும் உள்ள நட்பு அறிந்திராமலே , தன்னை உயர்த்திய கரத்தை உயர்த்தி பிடித்து பேசுவது இன்று அரிது. சந்தர்ப்பம் கிடைத்தால் சந்தில் சிந்து பாடிச் செல்பவர்கள் தான் அதிகம். இவன் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவன். செந்தி இதைப்படிக்க நேர்ந்தால், தயவு செய்து அந்த ஆத்மா வை உங்கள் கரங்களால் மீண்டும் பிணக்குகள் களைந்து ஏற்றுக்கொள்ளுங்கள். நல்லது செய்து நண்பரை பெருக்க வேண்டும். (பா 89) நான்மணிக்கடிகை கூறுகிறது. என்னால் இந்த இரு நண்பர்களும் மீண்டும் பிணக்குகள் நீக்கி , நட்பு கொள்வாராகினும் மதுரையில் இலக்கியம் இன்னும் நல்லவாறே வளர வாய்ப்பு உள்ளது. குற்றம் நீக்கும் கேள்வியார் நட்பு மருந்து போன்றது (பா 17) என்கிறது திரிகடுகம்.

         அவனை பேச விட்டுக்கோட்டுக்கொண்டே இருக்கலாம். அவனை பாடவிட்டு பல நேரங்களில் கேட்டு இருக்கின்றேன். நல்ல ரசனையுள்ளவன். அதனால் தான் அவனால் எதையும் ரசிக்க முடிகிறது. ரசித்ததை எழுத முடிகிறது. இவன் நட்பு பார்பதற்கு எந்த தகுதியும் பார்ப்பதில்லை என்பதை அவன் நடத்தும் வதனம் எடுத்துக்காட்டும். மனுசி பாரதியை அறிமுகப்படுத்தியவன் என்பதில் அவனை பெருமையாக சொல்வேன். இப்படி நிறைய மனுசிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவன். அறிமுகப்படுத்த தாயாராக இருப்பவன்.
இவன் கொண்ட நட்பு , இவன் பேச்சு எனக்கு , இராமாயண நிகழ்வை  நினைவுக்கு வர செய்கின்றது.  வேட்டுவன், குரங்கினத்தவன், அசுரன் ஆகியோரோடு இராமன் நட்புக் கொள்வதும் , நின்கிளை என்கிளை நின் சுற்றம் என் சுற்றம், நின் பகைவர், என் பகைவர் தீயரே எனினும் நின் உற்றார் என் உற்றார் என்று சுக்கீரீவனிடம் அவன் உறுதி மொழிவதும் நட்புக் கொள்வதற்குத் தகுதி பார்க்க வேண்டியதில்லை. இன்னுயிர்த் துணைவர்க்காக எச் செயலையும் செய்யலாம் என்பதைப் புலப்படுதுகின்றன.  

      இனி சரவணா , என் நட்பு வட்டம் உன் வட்டம் . உன் எழுத்து  இனி என் எழுத்து இதை கொண்டு செல்வது என் கடமை. என்று சொல்லும் போது இவனால் எதையும் செய்து விட முடியும் என்று எண்ண செய்தது. என்னடா அப்படி சொல்கின்றேன் என்று சொல்லி விடாதீர்கள். பிளாக்கில் நான் எழுதும் போது ஊரே என்னை பாராட்டும் , ஆனால் மதுரையின் பிரபலங்கள் என்னை பிளாக் செய்து விடும். உயிர்மை நடத்திய போட்டியில் என் பிளாக் மூன்றாவதாக வந்த போது அதிர்ச்சியில் என்னை புறம் தள்ளியவர்கள் நான் அறிவேன். வேண்டுமென்றே என்னை குறை கூறியவர்கள் மத்தியில் என் எழுத்தால், என் உழைப்பால் இன்று இவனை நட்பாக்கி கொண்டேன். அவனும் அதனை மிகப் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டான்.  சீனா அய்யா கூழாங்கற்களில்  என்னை தெரிகிறதா என்ற போது என்ன அய்யா என்னை அவ்வளவு பெரியா ஆளா பார்க்காதீங்க என்று சொன்ன அந்த ஆத்மா பற்றிய எளிமை தீயாக என்னுள் அப்போதே பரவ ஆரம்பித்து விட்டான். இந்த சுவாலை என்னையும் அவனையும் பிரிக்க முடியாமால், நட்பு கொண்டு சுவாலையாக சுடர் விட்டு, எனக்கே வெளிச்சமாய் உள்ளதை உணர்கின்றேன்.
    

     முதல் முறையாக என் நண்பன் செந்தி(புனைவு) என்னை கண்டு எடுத்தான். அதன் பின் காக்கை சிறகினிலே இதழ் ஆசிரியர் எட்வின் . உங்கள் படைப்பை அனுப்புங்கள் என்று சொல்லி என்னை எனக்கே அடையாளப்படுத்தியவர். இவர்களுக்கு அடுத்து இப்போது இவன். இவர்கள் எல்லாம் பெரிய புராணத்தில் நட்புக்கொண்ட இறைவனாக காட்சியளிக்கின்றனர்.  நட்புக் கொண்ட சுந்தரருக்காக இறைவன் பொன்னும் பொருளும் தருவதும் , தூது செல்வதும், முதலையுண்ட சிறுவனை உயிர்ப்பிப்பதும் நட்புக்காக எந்த உதவியையும் தன் தகுதிக்குப் பொருத்தமற்ற செயல்களைக் கூடச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்துவனவாக உள்ளன. என் தகுதியை உயர்த்துவதற்காக இவர்கள் நட்பு எனக்கு இறைவனின் நட்பு போன்றது. இவர்கள் மூவரும் இறைகொள்கையை மறுப்பவர்கள் என்பதும் அறிந்தவன் .


         அவனுடன் பேசியதில் எனக்கு ஆத்ம திருப்தி . சாதல், பொருள்கொடுத்தல், இன்சொல் கூறல் , கூடி இருப்பதில் மகிழ்தல், துன்பத்தில் நோதல், பிரியும் போது உள்ளம் கலங்குதல் உண்மை நண்பரின் இலக்கணம் என்று தொகுத்துரைக்கிறது ஏலாதி. (பா. 68). அவனுக்காகவே சாக துடிக்கிறது மனசு. அவன் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கத் தொடங்குகிறது. பேச்சை எங்கு தொடங்கி எதில் பொருத்தி, எதில் அவிழ்த்து, எதில் முடிப்பான் என்பது அவனுக்கே உரிய மொழியாக உருவெடுத்து , நம்மை அவன் காலத்தினுள் கட்டுண்டு இருக்க செய்து விடுகின்றது. இருந்தாலும் அவன் அவனாகவே, நான் நானாகவே பிரிந்து செல்கின்றோம் . விடைப்பெற்று, இது நாளைய சந்திப்பின் குறியீடாகவே படுகின்றது. அவன் மீது கொண்ட நட்பு விரியாலாம். ஏனென்றால் அவன் நட்பாட்டம் ஆடியவன். அவனின் சொல்லாடலை புதிய தலைமுறையும் ரசித்திருக்கலாம். உஙகள் எல்லோருக்கும் பிடித்தவன் . எனக்கும் எப்போதும் பிடித்தவன். இப்போது இன்னும் கூடுதாலாய் பிணைப்புகளுடன் அறுபடாத சேர்மமாய் …அவனின் எல்லா ஆற்றல் வட்டத்திலும் பூர்த்தியுற்றவனாய்… நானும் இணைகின்றேன். அந்த தீ பொசுக்குகின்றது…ஆனந்தமாய் சாம்பலாகின்றேன். ஆத்மர்த்தியுடனே….ஆத்ம திருப்தியில்.    

Friday, March 9, 2012

நைஜிரியா ராகவனுக்கும் 2ஜி அலைக்கற்றைக்கும் உள்ள தொடர்பு - புதிய தகவல் உடனே படியுங்கள்


 “சொற்கள் மூலமாக இந்த மனித குலம் முழுவதையும் வியாபித்திருப்பேன்”- சார்த்தர்.

     தன் நட்பு மூலமாக உலகம் எங்கும் தன்னை விரிவுபடுத்தியுள்ள  மனிதர்களில் ஒருவர்  நைஜிரியா ராகவன். சென்னை வந்து ஒன்பது மாதங்கள் ஆகிய நிலையில் தன் சொந்த பயணம் காரணமாக இராமேஸ்வரம் சென்று திரும்புகையில் மதுரையில் கா.பாவின் புண்ணியத்தில் மடக்கினோம்.

     கார் டிரைவர் இல்லாத சூழலில் தானே கார் ஓட்டி வந்ததாலும், ஓய்வு எடுக்கும் சூழலில் மதுரை மீனாட்சியின் அருளில் மதுரையில் அவசியம் தங்க  வேண்டியாகி விட்டதாலும் நைஜிரியா ராகவனை பார்க்கும் வாய்ப்பு சீனா, சுந்தர்(சித்திரை வீதிக்காரன்), கா.பா, தருமி மற்றும் எனக்கு கிட்டியது.
 .
     அரவிந்த் சென்ற முறை வந்த போது இருந்ததை விட மிகவும் துடிப்புடன் என்னுடன் உரையாற்றினான். ஆழமான விசயங்களை பற்றி மிகவும் அழுத்தமாக எடுத்து உரைத்தான்.

     தருமி அய்யா விலங்கியல் துறை சார்ந்த பேராசிரியர் என்று அறிந்த வுடன் , நைஜிரியாவில் காமர்ஸ் குரூப் படிப்பில் பையாலஜி சேர்த்துள்ளார்கள் ஏன் ? என கேள்வியை முன் வைத்தான். காமர்ஸ்க்கும் பையாலஜிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டான்.

     நம் கல்வி முறையில் மதிப்பெண் அடிப்படையிலே மட்டுமே +1 குரூப்பில் சையின்ஸ் மற்றும் பிற குரூப்கள் ஒதுக்கப்படுகிறது. மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு பள்ளியில் இடம் கிடையாது. இப்படி மதிப்பெண் அடிப்படையிலேயே பள்ளியின் தரத்தை உயர்த்துகிறார்கள் என குற்றம் சாட்டினான். (நல்ல சிந்தனை … தாய்யை போல பிள்ளை … மன்னிக்கவும் தந்தையை போல தான் அறிவு அமைந்திருக்கும்.)இந்தியாவின் கல்வி முறையை சாடினான்.

     அய்யா தருமிக்கு அதற்கான விடை தெரியவில்லை. சித்திரை வீதி சுந்தர் உடனே ஈ காமர்ஸ் பேப்பர் இருக்குல்ல… அதுனால ஈ யை பற்றி படிக்க பையோ சயின்ஸ் வைத்திருப்பார்கள் என கடித்தார். ( தருமி ரசித்தார்)

     மாணவர்கள் தங்களின் சுற்றுப்புறம் மற்றும் தங்கள் நாட்டில் உள்ள உயிரினங்கள் பற்றி அறிய அதனை ஒரு பாடமாக சேர்த்து இருப்பார்கள் என்றேன்.

     நம் மண்ணில் விளையும் பயிர்கள் பற்றி இன்றைய மாணவர்களுக்கு தெரியவில்லை. நாம் நம் மண்ணை மறந்து திரிகிறோம். நம் மண் வளத்தை அறிய முற்படுவதில்லை. சாதரணமாக  ஜன்னலில் வந்தமர்ந்து குரல் எழுப்பி நம் தனிமையை இனிமையாக்க தன் குரலில் இசைக்கூட்டி அறிய வைக்கும் எந்த பறவையின் பெயரும் நமக்கு தெரிவதில்லை.
தருமி அய்யா தன் பேத்திக்கு, அமெரிக்காவில் சவுத் , நார்த் அமெரிக்காவினை பற்றி கற்று தருவதை சுட்டிக் காட்டினார்.  அது கூட அந்நாட்டின் வளத்தையும் சுற்று சூழலையும் அறிந்து கொள்ள கற்று தருகிறார்களோ என்று ஐயத்துடன் பதிலளித்தார்.

     சாருவின் எக்ஸைல் பற்றி நான் நல்ல முறையில் விமர்சித்தேன். ராகவன் எனக்கு சாருவை மிகவும் நன்றாக தெரியும். நேரடி தொடர்பு உண்டு , நீங்கள் வாசகர் வட்டத்தில் இருந்தாலும் , அவரை நான் ரசித்து படித்துள்ளேன். எக்ஸைல் பற்றி தவறான கருத்து நிலவுவதை தனக்கே உண்டான நகைச்சுவை உணர்வுடன் சுட்டிக் காட்டினார். . அதற்கு நான் விளக்கம் அளிக்கும் போது கா. பா வந்து விட்டார். நான் இலக்கியம் பேசுவதை நிறுத்தி விட்டேன். (நண்பர்களுக்குள் சண்டை எதற்கு?)

     கா.பா வந்தவுடன் பின் நவீனத்துவம், போஸ்ட் மார்டனிசம் , மாஜிக்கல் ரியாலிசம் என பல்வேறு இசங்களை பற்றி விளக்கமளித்து சுந்தருடன் கலந்துரையாடினார்.

     ரம்யா அக்கா வீட்டு கிரக பிரவேசம் பற்றி பேச்சு வந்தது. சாரி போன் வந்தது . கா. பா இந்த வார ஆனந்த விகடனில் மகளிர் தினத்தை முன்னிட்டு ரம்யா அக்காவின் தன்னம்பிக்கை பற்றி அழகாக எழுதியிருப்பதை நினைவூட்டினேன். ராகவன் அண்ணன் கா.பா வின் மகளீர் தின  பக்கங்களை பி.டி.எப் பார்மெட்டில் சேகரித்து ரம்யா அக்காவிற்கு மெயில் அனுப்பினார்.

     அட இப்படி தானுங்க … மின்சாரம் அற்ற வெப்பம் உமிழும் இரவுகளில் யாரையோ பற்றி எழுத வந்து..எதையோ எழுதும் போது மௌனியின் சுந்தரி  கதை ஆரம்பம் நினைவுக்கு வருகிறது.

“கோடை மிகக் கடுமையாகக் கண்டு விட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப் பற்றி  யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டு விட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப் போல் கட்டிதட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுது கோலை எடுத்து இரண்டு தரம் வேகமாக உதறியதில் , பேனாவைப் பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்து விட்டேன். ஆனால் என் தலையை உதறிக் கொண்டால், பரிதாபம்! பல சிரமங் கொண்டு பன்றிக்கு வாரிவிட்டது போல் படிய வைத்த எனது அழகான கிராப் தலைமயிர் சிலிர்த்து நிற்குமே என்று ஒரு பயம் அடைந்தேன். எனினும், அப்படி இப்படி எழுத ஆரம்பித்து விட்டேன். இப்போது தான் எழுதுவதன் முட்டாள் தனத்தையும் கஷ்டத்தையும் உணர ஆரம்பிக்கிறேன்” – சுந்தரி கதை ( மணிக்கொடி 1936)  

     நீங்க மிரட்டின காலம் போய், பசங்க மிரட்டுர காலம் வந்து விட்டது என ராகவன் சுட்டிக் காட்டினார். ராகவன் எப்போதுமே மனதில் பட்டதை  பட்டாசாக வெடித்து தள்ளுபவர். பழக்கத்திற்கு மிகவும் அருமையான நண்பர். சமூக அவலங்களை எள்ளி நகையாடுவதில் அவருக்கு நிகர் அவரே!

     மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அதில் நானும் கொடுத்து வைத்தவன். பாருங்க, இரவு ஒரு மணிக்கு மேல் முழித்து படித்தாலும் , டைப் செய்தாலும் தொந்தரவு செய்ய மாட்டாள்..! ( தண்ணி தெளிச்சு விட்டுடாங்கப்பா…என தருமி கமண்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)
  
     ராகவனின் துணைவியார் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் அண்ணாவைப் போல பழகுகிறார். அது மட்டுமல்ல அண்ணாவுக்கு எல்லா விசயங்களுக்கும் ஒத்து போகிறார். புத்தக வாசிப்பு பழக்கம் பற்றி பேச வரும் போது , மிகவும் இனிமையாக , “நான்கு பெட்டி நிறைய புத்தகங்கள் அடுக்கி சேந்தியில் வைத்திருப்பதையும், இரண்டு பெட்டி புத்தகங்கள்  அவரின் நண்பர் வீட்டில் கொடுத்துள்ளார்” என சுட்டிக் காட்டினார். இந்த முறை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க வில்லை என்ற ஆச்சரியத் தகவலையும் கொடுத்தார்.
  
     இரவின் தனிமை என்னை வாட்டுகிறது.. இருப்பினும் ராகவனின் நினைவுகள்  நிலவு ஒளிப்போல என்னை வழிநடத்துகின்றன. அவரின் அன்பில் கரைந்து பெருகி , வெள்ளம் போல மதுரை வீதிகளில் உறக்கம் மறந்து இன்னும் வலம் வருகின்றேன் .   கா.பாவின் மூச்சுக்காற்றில் கரைந்து வெளிவரும்  இலக்கிய சிந்தனைகள் , என்னிடம் மறு சுவாசம் அடைந்து சார்த்தர் படிக்க தூண்டியுள்ளது எனக்கு வியப்பை தருகிறது.  
ஓய்வின்றி உழைக்கும் சீனா அய்யாவின் உழைப்பு , நட்பு பாராட்டும் பண்பு, என்னை நேர்த்தி மிக்கவனாக மாற்றி வருகின்றது. சீனா அய்யா, தருமி அய்யாவின் ஆழ்ந்த நட்பு  கூட ராகவன் அண்ணாவை மதுரையில் தங்க வைத்திருக்கலாம். அரவிந்த் என்னை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புத சக்தி. அவனின் நகைச்சுவை உணர்வு என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறது.

     கடைசியாக சார்த்தரின் வரிகளுடனே ராகவன் அவர்களை காண்கிறேன்.

“என் சக நண்பர்கள் , நான் புதைக்கப் பட்ட மறுநாளே என்னை மறந்தாலும் , அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. அவர்கள்  உயிரோடு இருக்கும் வரை நான் அவர்களைத் தொடர்வேன், பெயர் இன்றி யாரும் அறியாவண்ணம், எனக்கு தெரியாத மில்லியன் கணக்காய் இறந்தவர்கள், என்னில் அழியா வண்ணம் நான் பாதுகாத்து வருவது போல் நான் ஒவ்வொருவரிடத்திலும் இருப்பேன்”

     ஆம் ராகவனுடன் உரையாடுங்கள்… அவர் நம் நட்பை வருடங்கள் கடந்தாலும் சார்த்தர் சொல்வது போல் பாதுகாத்து வருவது அறிய வரும். அக நக நட்புக்கு ஒரு வாழும் உதாரணம் நம் நைஜிரியா ராகவன் மற்றும் குடும்பத்தார். 

     நட்பு வட்டத்தில் 2ஜி அலைக் கற்றை போல நைஜிரியா ராகவன் மிகவும்  பிரபலமானவர் என்று சொன்னால் மிகையாகாது. 

Monday, March 5, 2012

யாராவது எனக்கு புரிய வைப்பார்களா?


  சென்ற வாரம் குழந்தை வளர்ச்சியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பிற்கு resource person ஆக சென்றேன். காலத்தின் கட்டாயம் எதாவது சம்பவங்கள் நடந்தால் உடனடியாக ஒரு பயிற்சி தரப்படுகிறது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
    
    மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பயன் மதிப்புக்கள் (values) பற்றியும் அவைகளை உருவாக்கும் காரணிகள் பற்றியும் , பயன்மதிப்புகளை பற்றி அறியும் முறைகளான 1. பகுத்தாராயும் முறை 2. ஆராய்ச்சி முறை 3. அறிவு சார்ந்த அணுகுமுறை சொல்லி தந்தார்கள் 
  

    உடல் நலமும் சத்துணவும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உதவும் வகையில் எவ்வகை உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டினார்கள்.

     மாணவர்களின் மனவெழுச்சி வளர்ச்சி பற்றி குறிப்பிடும் போது ஆசியாவில் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு ஆசிரியை கொலை செய்யப்பட்டது என விவாதிக்க ஆரம்பித்தார்கள். அப்போது ஆசிரிய பணி அறப்பணி ஆனால் அதை நாம் முழுவதுமாக செய்ய முடியவில்லை. மாணவர்களை தண்டிக்கும் உரிமை கூட நமக்கு கிடைக்க வில்லை என மிகவும் மன வேதனைப்பட்டு விவாதம் சென்றது.

   நான் அப்போது எதை வைத்து சொல்கிறீர்கள்என்று வம்பு இழுத்ததுடன் யார் சொல்லும் விளக்கதையும் ஏற்காமல் மிகவும் கடுமையான தொணியில் மனசாட்சியுடன் பதில் தரவும் என்று கூறினேன். 

     மேலும், நான் சும்மா  இருக்காமல் ஆசிரியப் பணி இன்று அரைப்பணியாக மாறிவிட்டதால் தான் பிரச்சனை என சூடு ஏற்றினேன். என்ன புரிந்தார் என தெரியவில்லை என் அருகில் உள்ள ஆசிரியரும் சேர்ந்து கொண்டு , சார் சொல்வது உண்மை தான் அரை, முக்கால் , கால் என தேய்ந்து கொண்டு செல்கிறது என்றார்.  

    இந்த பயிற்சி எதற்கு? ஒரு மாணவன் தவறு செய்து விட்டான் என்றவுடன் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய வளர்ச்சிகள் பற்றிய பயிற்சி தரப்படுகிறது. அதற்கு ஆசிரிய சமுதாயமே வரிந்து கட்டிக் கொண்டு , அநீதி என திரண்டு வருகிறது. 

   எதற்கு இது ? 

    “ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்” என இந்நிகழ்வை சொல்லி எங்களுக்கு உரிமை வேண்டும் எங்களுக்கு அடிக்க தண்டனை வேண்டும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என வாரியடித்து பேசுகிறீர்கள்?


   ஒரு சின்ன கேள்வி அதற்கு மட்டும் விடை தாருங்கள்…(கூட்டத்தில் நான் கேட்ட கேள்வியும் அது தான்)

கடந்த சில நாட்கள் பேப்பரை பார்த்தீர்களா?
   
   செருப்பால் மிதித்த ஆசிரியர்கள்…! சாதி சொல்லி திட்டியதால் செருப்பால் மிதித்தோம். பாலியல் தொந்தரவு தரும் ஆசிரியர் (ஐந்தாம் வகுப்பு) . மாணவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்ட ஆசிரியர். மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கும் படைத்த பேராசிரியர்…
  
   இப்படி தினம் தினம் ஒரு ஆசிரியர் பெயர் அடிபடுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என யாரும் ஒட்டு மொத்த ஆசிரியருக்கு ஒரு கவுன்சிலிங் பயிற்சி தந்தார்களா…? எந்த பெற்றோரும் ஒட்டு மொத்த ஆசிரிய சமுகத்தை சாடினார்களா? யாரும் ஆசிரியரை அடிக்கும் உரிமையை கேட்டார்களா? இல்லை நீங்கள் தான் மாணவர்களை அடிக்காமல் இருக்கிறீர்களா?

     புரியவில்லை ஆசிரியர்களின் நியாயம்..? யாராவது எனக்கு புரிய வைப்பார்களா? ( அத்துடன் வாயை அடைத்து தேவையில்லா விவாதம் என மனவெழுச்சி அடைந்து மனவெழுச்சி பற்றி நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்)
  

  


Monday, February 27, 2012

மதுரைக்கார பாசமான பசங்களுக்கு ரெம்பவே நன்றி…!


சனிக்கிழமை நான் என்னுடைய வேகன் ஆர் காரில் அம்மா வீடு வரை சென்று வீடு திரும்பிக் கொண்டு இருந்தேன். 
   
    மாட்டுத்தாவணி வழியாக வந்து , புதூர் பி.டி.ஆர் டிக்கடை அருகில் அய்யார் பங்களா செல்லும் குறுகலான பாதை வழியா தபால் தந்தி நகர் நோக்கி பயணித்தேன். முன்னே வண்டிகள் வரிசையாக நிற்க, நானும் பிரேக் அடித்து நிறுத்தி காத்திருந்தேன். எதிர் வரிசையில் இருந்து வண்டிகள் நகர வழியில்லாமல் முன்னோக்கி டூவிலர் ஆசாமிகள் நகர் , எதிரே மினி பஸ் வர கஷ்டப்பட்டு கொண்டிருந்தது.(எவனுக்கும் வழிவிடாமல் முன்னோக்கி செல்வது தான் மதுரைக்கார டூவிலார்களின் விதிக்கப்படாத விதி)

    என்னை ஹார்ன் அடித்து முன்னோக்கி போக சொல்லி , என் பின்னால் இருந்த மாருதி வேன் எச்சரித்தது. அவர்களுக்கு முடிந்தால் முன் செல் என கைகாட்டி சைகை செய்தேன். ஒரு ஐந்து நிமிடப் போரட்டத்துக்கு பின் மினி பஸ் ஒரு வழியாக என்னை கடக்க, நான் மெதுவாக என் வண்டியை நகர்த்தினேன். 

    அதற்குள் என் முன்னால் இரண்டு பைக்கில் தமிழ் திரைப்பட வில்லன்களைப் போல கருத்த தடித்த உருவத்தில் என் காரை வழி மறித்தனர்.
   
    அதில் ஒருவன் ஏக வசனத்தில் காரை நிறுத்துடா… என்ற மரியாதை தேய்ந்த வார்த்தைகளால் என் வண்டியை அடிக்க வந்தான். நான் வண்டியை ஓரங்கட்டினேன். காரில் இருந்த வாரே என்ன பிரச்சனை…? என்ன வேண்டும்..? என்றேன். அதற்குள் என்னை சுற்றி ஒரே கூட்டம் கூடி விட்டது. (மதுரையில் கூட்டம் கூட காரணம் வேண்டுமா?)

   அவர்களுக்கு பின்னால் மேலும் இரண்டு பைக்குகள் என என்னை சுற்றி வளைத்தனர். ( இப்படி போலீஸ் நிஜத் திருடர்களை சுற்றி வளைத்தால் , நாம் ஏகப்பட்ட வழிப்பறி திருடர்களை பிடித்துவிடலாம்)
கூட்டம் இன்னும் ஆர்வமாக என்ன விசயம் என நான் முந்தும் முன் அவர்களிடம் கேட்டுக் கொண்டது. ( மாகா ஜனங்களே மதுரக் காரங்களுக்கு என்ன பாசம் ரோட்டில எது நடந்தாலும் வந்து ஆஜார் ஆகிவிடுறேங்களே…ஆனா சரியான நேரத்தில் சரியான விசயத்துக்கு உதவ மாட்டீங்களே)

  என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்கிறேன். அப்போது தான் ஆஜரான ஒரு பெரிசு (எல்லா தமிழ் சினிமாவிலும் ஆஜாராவதைப் போல) இந்த கார் காரங்களே இப்படி தான், எவன இடிச்சு தள்ளிட்டு வந்தான் என வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருந்தது.  

   வில்லத்தனம் அதிகமாக உள்ள ஒருவன், நீ பாட்டுக்கு எம்.ஐ.டி காரனை இடிச்சு தள்ளிட்டு வர , அவன் கால் போச்சு தெரியுமா என சொல்லிக் கொண்டு கார் கதவை திறக்க முற்பட்டான். நான் அதுவரை பொறுமைக் காத்தவன் மனதில் தைரியத்தை வரவழைத்து யார் வண்டி இடிச்சுது..? என்ன பிரச்சனை.. ?    என அடித்தொண்டையில் இருந்து கூவினேன்.

   அடுத்தவன், எங்கிருந்து வர்ர…?  

முதல்ல என்ன வண்டி இடிச்சுதுன்னு கேளு…. என நானும் ஒருமையில் பேச வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினேன்.

கூட்டத்தில் பின்னால் இருந்து முன்னோக்கி வந்தவன்,, என் வண்டியின் முன் உள்ள நெளிவை காண்பித்து , இது எப்ப இடிச்சது என்றான். இது இடித்து ஆறு மாதம் ஆகும் என்றேன். ( சோம்பேறியான நான் காரை என் வீட்டு வாசல் கதவில் இடித்து உள்நோக்கி சென்ற நெளிவை சரிசெய்யாமல் இருந்து விட்டேன்) 

இல்லை , இப்பதான் இடிச்சுட்டு , அவன் கையையும் காலையும் ஒடச்சுட்டு வர்ற… இரத்தம் சொட்ட சொட்ட சூரியா நகரில் கிடக்கிறான் என்றான்.

சரி போலீசைக் கூப்பிடு என்றான் மற்றொருவன். அதற்குள் பெரிசு.. சவுடாலா காருல.உட்கார்ந்து பதில் சொல்லுறத பாரு…என உசுப்பு ஏத்தினார்.( சினிமாவில் பஞ்சாயத்து காட்சிகள் இம்மாதிரியான சம்பவங்களை பார்த்து தான் , இம்மாதிரியான பெரிசுகளை வைத்து எடுப்பார்களோ..!)

நான் நிதானமாக என்ன வண்டின்னு கேளுங்க.. கலர் என்ன என்று சொல்ல சொல்லுங்க என்றேன்.  உடனே அதில் ஒரு வில்லன் போன் செய்து என்ன கலரு சொன்ன… ஓயிட்டா… அப்புறம் என்ன வண்டி.. சுவிப்ட்டா.. என போனை கட் செய்தான்.  
  
   நல்ல விபரம் தெரிந்து வண்டியை நிறுத்துங்கப்பா… அப்ப நீங்க அந்த ஆக்ஸிடெண்ட பார்க்கலையா என பெரியவர் எனக்கு பதிலாக வாய்ஸ் கொடுத்தார்.

    வந்தவர்கள் ஒரே வரியில் "சாரி சார்" என வண்டியை எடுத்து கிளம்பினர். 
   
   அந்த புள்ளைய இந்த மிரட்டு மிரட்டினத பார்த்த எனக்கே கொஞ்சம் பயமா தான் இருந்தது என பெரியவர் அருகில் உள்ள ஜோடி கமண்டு அடித்தது. அடுத்தவனுக்கு ஒண்ணுன்னா வருஞ்சு கட்டிகிட்டு உதவி செய்யிறதுல மதுரக்காரனுக்கு மிஞ்சினவன் யாருமில்லை. 

    ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். என் மனைவியிடம் நடந்ததை சொன்னோன் . 

    முதலில் நெளிவை எடுங்க..இல்லை எவனோ இடிச்சதுக்கு நீங்க தெண்டம் கட்டப் போறிங்க என சாடினாள்.
    
   வண்டி இடிப்பட்ட உடனே சரிசெய்ய வேண்டும் என பாடம் புகட்டிய மதுரைக்கார பாசமான பசங்களுக்கு ரெம்பவே நன்றி…!


Monday, December 19, 2011

சமூக அக்கறையில் ஈரோட்டின் பங்கு


   ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக கடந்த ஞாயிறு காலை பதிவர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. நாளைய சமூகத்தை உருவாக்குவதில் வலைப்பதிவர்களின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை பதினைந்து நபர்களை மேடையேற்றி அறிமுகம் செய்து வைத்த போது உணரச் செய்தது. 

        
         ஏதோ பொழுது போக்குக்கு எழுதுபவர்களை , இணையத்தின் முக்கியத்துவத்தை இந்த அறிமுகம் உணர்த்துவதாக இருந்தது. புதியவர்களுக்கு ஒரு அறிமுகத்தையும் , அவர்களுக்கு தேவையான உற்சாகத்தையும் , அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது. 







         சமூகப் பங்களிப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை உணர்த்துவதாக சிறப்பு அழைப்பாளர் ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு அமைந்தது. எழுத படிக்க தெரிந்த எவனும் புத்தகம் வாங்கி வாசிக்க  வேண்டும் என்ற உணர்ச்சிகரமான பேச்சு அவரின் சமூக அக்கறையை உணர்த்துவதாக அமைந்தது.  



    சமூகத்தில் சிறந்த தலைவனாக விளங்க உழைப்பும் , உண்மையும் எவ்வளவு முக்கியத்துவம் . ஆம் , பிற துறைகளில் உழைப்பும் , உண்மையும் முழுமையாக  இல்லையெனில் பாதிப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே. ஆனால், சமூக பங்களிப்பில் என்பது இச்சமூகத்தின் ஒட்டு மொத்த சீரழிவுக்கும் காரணமாகவும் , சமூகத்தின் நேர்மறையான வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துவிடும்.   கதிர் , தாமோதர் சந்துரு, ஜாபர் , லவ்டேல் ….என பெயர் சொல்லி எழுதி தள்ள ஆசை இருந்தாலும் ,ஈரோடு பதிவர்களின்  தோழமைப்பண்பு, கட்டுப்பாடு, நம்பகத்தன்மை , கவர்ச்சி , அத்துடன் போட்டிப்போடும் பண்பு என்னை வியக்க வைக்கிறது. அனைவரின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த ஒரு பரிசு தான் அரங்கம் நிரம்பி வழிந்தற்கு சாட்சியாக அமைந்திருந்தது. கல்யாண விருந்தை போன்ற பிரமிப்பு… முதல் நாள் இரவில் இருந்து ஆரம்பித்து , மறுநாள் மதியம் வரை சைவம் , அசைவம் என நிறைவான விருந்து…. இவர்களால் மட்டும் எப்படி சாத்தியம் என மதுரை பதிவர்களை மட்டுமல்ல அனைத்து பதிவர்களையும் வாய் பிளக்க செய்யும் பெருமை ஈரோடுக்கே உள்ள தனித் திறமை ….! 



    இந்த சந்திப்பு எனக்கு நிறைய நண்பர்களை தேடி தந்துள்ளது. புது உற்சாகத்தை , உத்வேகத்தை கொடுத்துள்ளது. சமூகத்தில் எனக்குள்ள பொறுப்பை உணர்த்துவதாக உள்ளது. இது வருங்காலத்தில் நல்ல மாற்றம் தரும் அரசியல் அமைப்பாகவும் மாறலாம் என மணிஜி சிரித்துக் கொண்டே வெற்றி சின்னத்தை காட்டி … இந்த நிகழ்ச்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதை பாருங்கள். 

Monday, July 11, 2011

சலூன் கடையில் சமச்சீர்

  கடந்த வாரம் முடி திருத்தம் செய்வதற்காக சலூன் கடைக்கு செல்ல முயன்றேன். மழை லேசாக தூரத் தொடங்கியது. இதமான காற்று. லேசான  சாரல். நனைந்த படி சென்றேன். வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம் சலூன் . வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது சலூனில் கூட்டம் அதிகமாக தென்படவே, என் கால்கள் நடையை தளர்த்தின. சலூனில் காத்திருப்பது என்பது ஒரு வலி தரும் அனுபவம்.  வேலை வெட்டியில்லாதவர்களுக்கு அதுவே வரப்பிரசாதம். அங்கு தான் அனைத்து விசயங்களும் பேசப்படும். சிறுவயதில் துப்பு துலக்க போலீஸ் முதலில் சலூனிலும், அயன் வண்டி தேய்ப்பவனிடமும் தான் விசாரிப்பார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். பலமுறை முடி திருத்தம் செய்யும் போது, தெரு ரகசியங்கள் முதல் உலக அரசியல் வரை பேசக் கேட்டு இருக்கிறேன். பேசிக் கொண்டே முடி வெட்டினாலும் , தொழிலில் சுத்தம் திருத்தம் செய்து  முடிந்ததும் தெரியும்.

    பலர் ஒரே கடையில் காலம் காலமாக முடி திருத்தம் செய்வது உண்டு. சிலர் என்னதான் அழகாக திருத்தம் செய்திருந்தாலும் , கடையை மாற்றிக் கொண்டே இருப்பர். அவர்களுக்கு யாரிடமும் திருத்தி ஏற்படாது. நான் என் இருப்பை தபால் தந்தி நகருக்கு மாற்றி இருந்தாலும் , என் அம்மா வீட்டு அருகில் தான் இன்றும் திருத்தம் செய்கிறேன். பழகிவிட்டது என்பதை விட தலையை வேறு யாரிடமும் கொடுக்க மனமில்லை. குடும்ப டாக்டர், வக்கில் இருப்பது போல முடி திருத்துபவர்களும் பலருக்கு இருக்கிறார்கள். அதில் என் குடும்பமும் அடங்கும். வீட்டில் யாருக்கும் முடியவில்லை, கடைக்கு வர இயலாத சூழல் வந்தால், அழைத்தவுடவே வந்து வீட்டிலேயே முடி திருத்தம் செய்வார்கள். இதில் முக்கியமானது சாதாரணமாக கொடுக்கும் தொகையையே வாங்கிக் கொள்வார்கள்.

   கடைக்கு முன் நிற்கும் கூட்டதைப் பார்த்தவுடன் ,வீட்டிற்கு திரும்பி விடலாமா என்று தோன்றியது. இருப்பினும் மழை நேரமாதலால், ஓதுங்கிய கூட்டமாவும் இருக்கலாம் எனவும் தோன்றவே, சலூன் நோக்கி எட்டு வைத்து நடந்தேன். மழையும் என் நடையின் வேகத்திற்கு தகுந்து தன் வேகத்தைக் கூட்டியது. நல்ல வேளை கடையில் முடி திருத்தம் செய்ய யாரும் இல்லை. உட்கார்ந்தேன். ஆட்டோ ஓட்டுனர் வேகமாக ஓடி வந்து , சார் டி.சி வாங்கி சேர்த்துட்டேன். இன்னும் புத்தகம் கொடுக்கலையே என்று என்னிடம் கேட்டார். ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்பிற்கும் புத்தகம் கொடுத்தாகி  விட்டதே என்றேன். நம்ம பாப்பா நான்காம் வகுப்பு படிக்கிறது என்றார். அதற்குள் முடி வெட்டுபவர், என் பாப்பா ஆறாம் வகுப்பு படிக்கிறது. அதற்கு புத்தகம் கொடுத்தார்கள் . அதில் ஓட்டியுள்ள பகுதியை பிரித்துப் பார்த்தேன். அதில் முந்தைய அரசு தன் கட்சியை , தன் குடும்பத்தை பற்றி செய்திகளை பரப்புவதாகவே செய்துள்ளதாக தோன்றுகிறது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள், சூரியனை கருப்பு சிவப்பில் உள்ள படமாகப் போட்டுள்ளனர். கனிமொழி பற்றி செய்தி சங்கமம் பற்றிய பாடத்தில்  உள்ளது என்றார். என்ன சார் உண்மையா இல்லையா? என என்னிடம் கேள்வியும் கேட்டார். எனக்கு எதுவும் தெரியாது. நான் ஓட்டிய பகுதிகளைப் பற்றி கவலைப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் புத்தகம் கிடைத்தால் போதும் அதுவே எங்களுக்கு முக்கியம் என்றேன். சார் அரசு ஊழியராம் எப்படி நழுவு கிறார் என்றார் சலூன் கடைக்காரர்.
   
    ஆட்டோகாரர் மீண்டும் என்னிடம் பேச்சுக் கொடுத்து, சார் சமச்சீர் கல்வி வருமா வராதா? என்றார். இதுவரை எந்த அரசும் , எந்த கட்சியும் சமச்சீர் கல்வி  கொண்டு வருவதில், வந்ததில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது முறையாக அனைவருக்கும் சமச்சீராக கிடைக்க வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. தற்போது உள்ள அரசு புத்தகத்தை ஆய்வு செய்ய கமிட்டி அமைத்துள்ளது என்று கூறிக் கொண்டு இருக்கும் போது, அருகில் புகைத்து கொண்டிருந்தவர், சார் இது தான் எல்லாருக்கும் தெரியுமே? அந்த கமிட்டியில யாரும் அரசு பள்ளி சார்ந்தவர்கள் இல்லையே? உங்களை ஆய்வு பண்ண சொன்னா என்ன சொல்லி யிருப்பீங்க? என எனக்கு கேள்விகளை தொடுத்தார்.

  ”சும்மா அவரையே கேள்வி கேட்காதீங்க… நான் சொல்லுகிறேன்..” என முருக்கு விற்பவர் எனக்கு பதிலாக ஆஜராகியதல்லாமல், ”சார் முருக்கு வாங்கி சாப்பிட்டுகிட்டே பேசுங்க…”என வியாபாரத்தையும் செய்து கொண்டு,”நாலு முருக்கு சாப்பிடுகிறவனுக்கு , இரண்டு முருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ஒரு முருக்கு சாப்பிடுகிறவனுக்கு இரண்டு முருக்கு  தந்தா எப்படி இருக்கும் ? அப்படி தான் சமச்சீர் கல்வி மெட்ரிக் பள்ளிக் காரனுக்கு போதாதது..அதுவே சாதா தமிழ் மீடியம் காரனுக்கு கொண்டாட்டமனாதாக உள்ளது, ஆனாலும் அது பற்றி விழிப்புணர்வு பொது மக்களிடம் கம்மியாகத் தான் உள்ளாது ” என்றார்.

   உடனே சலூன் கடைக்காரர் அடிப்படை வசதிகளையும் , ஆசிரியரின் தரத்தையும் கூட்டாமல் புத்தகத்தில் மட்டும் தரத்தை கூட்டினால் எல்லாம் சமச்சீர் ஆகிவிடுமா? என கேட்க, மழை தன் வேகத்தை கூட்டியது. சரியாக மாட்டிக் கொண்டோம் என நினைத்தேன்.

    பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது,காலாண்டு வரப் போகிறது புத்தகம் தராமல், மாகால், தெப்பக்குளம் என ஊர் சுற்றிக் கொண்டு இருந்தால் என்ன செய்வது? இதை பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள் ?என ஆட்டோகாரர் மீண்டும் ஊசுப் பேற்றினார்.

   டீச்சருக்கும் வாத்தியாருக்கும், கல்வியாளருக்கும் அரசுக்கும் அக்கறையில்லாதது போல சும்மா எதிர்மறையாகவே பேசாதப்பா? அது அதுக்கு தகுந்த படி ஆங்கிலம் , பொது அறிவு , உடல் நலக் கல்வி, சுகாதாரக் கல்வி ,  டிவியில கேசட் போட்டுக் காட்டுறாங்க? என் புள்ள இப்ப எவ்வளவு மகிழ்ச்சியா ஸ்கூலுக்கு போகுது..அருமையா ஆங்கிலம் பேசுது என முருக்கு விற்பவர் அதட்டினார். ”எல்லாருக்கும் ஒரு அதிரசம் , இரண்டு முருக்கு கொடுங்க .. காச நான் தருகிறேன்” என்றேன்.

  இதுவரை பேசாதிருந்த பெயிண்டர், ”அவரு சொல்றதும் சரிதான். இப்படி எதுவும் படிக்கலைன்னா பொது மக்கள் சும்மா விடுவாங்களா? இன்நேரம் சாலைமறியல் , பள்ளிகூடம் முன் போராட்டம், அது இதுன்னு எதாவது நடந்து இருக்கும்லா.. சமச்சீர் பத்தி ஏன் அக்கறை இல்லைன்னா… மெட்ரிக் பள்ளியில படிப்பவர்கள் தான் அதிகம். என் பிள்ளை எடுத்துக்க நர்சரியில தான் சேர்த்து இருக்கேன். உன் மக கான்வெண்டு ஸ்கூல்ல தமிழ் மீடியம் படிக்குது. இவரு குழந்தை மெட்ரிக் படிக்குது. இவரு பிள்ளை தனியார் பள்ளியில தமிழ் மீடியம் படிக்குது. இங்கேயே  எல்லாரும் தனியார் பள்ளி தான். யாரும் அரசு பள்ளிக் கிடையாது. அப்படி இருக்க இதற்கு வலுசேர்ப்பது என்பது தவறானது. எல்லாரும் தகுதியான , நல்ல கல்வி தான் தேடுறோம்.. என் பக்கத்து வீட்டுக் குழந்தை போன வருடம் எல்.கே.ஜி படிச்சது. அதுக்கு ஆயிரம் வரை எழுத படிக்க தெரியும். ஆனா இப்ப கொடுத்த ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் கணக்கில் நூறு வரைத் தான் உள்ளது. அதுக்கு ஏ,பி,சி, டி எல்லாம் தெரியும் ,சின்ன சின்ன வாக்கியம் எழுதும் , ஆனா இப்ப  அதவிட கம்மியா தான் படிக்கிறா!இப்படி எனக்கே தெரியுற குறை அம்மாவுக்கு அதிகமா தெரியாதா? அதான் புத்தகத்தை சரி செய்யாணும்ன்னு சொல்லுறாங்க… நம்ம புள்ளைகளுக்கு நல்லது தான் செய்வாங்க.., “

   திசை மாறிய கப்பலாக அம்மாவின் மதுரை பேச்சு, சமகால அரசியல், அதனை தற்போது நிறைவேற்றி வருவது என பேச்சு அரசியலாக, மழையும் தன்னை மறந்து தூங்கிப் போக, நான் மெதுவாக விடைப்பெற்றேன்.

    சலூனில் கிடைக்கப் பெறும் அனுபவம் மிகவும் சுவரசியமானது. சில சமயம் அதுவே சண்டைக்கு காரணமாகி , கத்திக் குத்து கொலையில் முடிவதும் உண்டு. அதனால், என் மூத்த தம்பி(கிரிமினல் லாயர்) சலூனுக்கு போனமா முடி வெட்டுனோமான்னு வந்திடனும் , அநாசியமாகப் பேசக் கூடாது . பின்னாடி வம்பு வந்திடும் என என்னையும் , என் தந்தையையும் எச்சரித்துக் கொண்டேயிருப்பான். இன்று அவர்களின் அரசியல் பேச்சும் அப்படி தான் கார சாரமாக இருந்தது. உங்களுக்கும் இது போன்ற அனுபவம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த அனுபவம் உங்களின் சலூன் கடையை நினைவுபடுத்தியிருக்குமானால் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.        
         

Thursday, July 7, 2011

கடைசி நிமிடம்


     இன்று மாலை மதுரையில், ஆறு மணி வாக்கில் தூர ஆரம்பித்த
மழை , சிறிது சிறிதாக பெருத்து கனமழையாக பொழியத்
துவங்கியது. பள்ளியில் இருந்து சுமார் ஐந்து மணியளவில் கிளம்பும்
போது பேருந்திலிருந்து ஒரு மாணவன் அழுகையுடன் ஓடி வந்தான்.
என்னடா என விசாரிக்க , என் தங்கை என்னுடன் காலையில்
வந்தாள். ஆனால் இப்போது பேருந்தில் காணவில்லை என
கதறினான். பேருந்தில் துணைக்குச் செல்லும் ஆசிரியரும் உடன்
வந்தார். விசாரித்து பின்பு, இரண்டாம் வகுப்பு ஆசிரியைக்கு போன்
போட்டேன். எடுக்க வில்லை. தொடர்ந்து தொடர்பு கொண்டும்
பயனில்லை. இப்படியும் பல சமயங்களில் ஆசிரியர்கள் இருப்பார்கள்.
கேட்டால், பைக்கு(bag) அடியில் இருந்தது, அதானால் கேட்க
வில்லை என்பார்கள் . அதாவது சரி செல்லை எடுக்காமவா
இருப்பார்கள் வீட்டில் போயாவது மிஸ்டு கால் பார்த்து உங்களிடம்
விசாரிப்பார்கள் இல்லையா? என நீங்கள் கேட்டால், அதை உங்களின்
முட்டாள் தனம் என்று தான் சொல்லுவேன். இப்படி பட்ட ஆசிரியர்களின்
நடவடிக்கையின் போது என் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற
மரியாதைக்கு உரிய ஜெயலெட்சுமி ஆசிரியர் தான் நினைவுக்கு
வருவார். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை, “சார் ,
தேவையில்லாமல் டென்சன் ஆகாதீங்க… அவங்க அவுங்க செய்யிற
பாவம், தொழிலுக்கு செய்கிற தூரோகத்துக்கு கடவுள் இடம் பதில் சொல்ல
வேண்டி வரும். இதே போல அவுங்க பிள்ளைகளும்
பாதிக்க படுவாங்க.. இந்த பாவமெல்லாம் சும்மா விடாது , நம்ம
கடமையை நாம் சரியா செய்யணும் .. அதுவே போதும்” என்பார்.
அடுத்ததாக மற்றொரு ஆண் ஆசிரியரிடம் போன் செய்தேன். உடனே
போன் எடுத்து சார் அந்த பெண் இன்று பள்ளிக்கு வரவில்லை
என்றார். ”சார், அவன் அண்ணன் அழைத்து வந்ததாக சொல்கிறான் ,
நல்லா யோசனைப் பண்ணி சொல்லுங்க” என்றேன். ”சார், கட்டாயம்
வரலை, சார் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அவ அண்ணன்
மட்டும் தான் வந்தான்”. “ ஏன் காலையிலேயே அவனிடம்
வாராததற்கு காரணம் கேட்கவில்லை..?” “ இல்லை சார்.. அந்த பெண்
வரவில்லை ”. ”சரி வீட்டிற்கு போய் பார்க்க சொல்லுகிறேன்.
தேவையின்னா கூப்பிடுகிறேன்” என சொல்லி , அந்த மாணவனை
சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

அடுத்த விநாடி , ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் விரைவாக வந்து , "சார்
என் செல் போனை காணாம், சார்" என்றார். எனக்கு தலை சுற்ற
ஆரம்பித்தது. சரியாக தேட சொன்னேன். அவர் அருகில் இருந்த ஆசிரியர்
”சார், ரீங் அடிக்கிறேன் சார்... சவுண்டு இங்க கேட்கலை... “
“டீச்சர் , அவசரப்படாதீங்க... பொறுமையா பேக்கிலத் தேடுங்க..”
”சார், எல்லாத்தையும் தேடிட்டேன் சார்...,பிள்ளைகள் யாரும்
எடுத்திருப்பாங்களான்னு தெரியலை..”
”டீச்சர் , அப்படியெல்லாம் இருக்காது...நல்லா யோசனைப் பண்ணுங்க..
வேனுக்கு போகும் முன் செல் போன் இருந்ததா..?”
”அதான் சார் ஞாபகம் இல்லை...ஆனா பையில காணாம்..”
”பொறுமையா இருங்க...” என சொல்லி, பிள்ளையை காணவில்லை என்ற
ஆசிரியருக்கு போன் அடித்து விசாரிக்கலாம் என முயற்சித்தால் , அவரும்
செல் போனை எடுக்க வில்லை. அடுத்ததாக மற்றொரு பேருந்தில்
செல்லும் ஆசிரியருக்கு போன் செய்தேன். அவர் போன் எடுத்தார்.
அவரிடம் அந்த பஸ்ஸில் காணவில்லை என்ற தேடிய இரண்டாம்
வகுப்புக் குழந்தை இருக்கிறதா என விசாரிக்க சொன்னேன். மேலும்
அவரிடம் காணமல் போன செல் போன் குறித்து ஐந்தாம் வகுப்பு படிக்கும்
மாணவர்களிடம் விசாரிக்க சொன்னோன். அவரும் சரி என்று சொல்லி
போனை வைத்தார். பின்பு , காணாமல் போனதாகச் சொல்லப்படும்
 அவரின் செல்லுக்கு போன் செய்தேன். அதை
அவரின் கணவர் எடுத்தார். அவரிடம் நீங்கள் டீச்சர் செல் போன்
வைத்துள்ளீரகளா? டீச்சர் செல் போன் காணாம் என தேடு கிறார்கள் என
கேட்க , "இல்லை சார் இது  என் செல் போன் "என பதிலளித்து
வைத்தார். சார் போன வாரம் தான் வாங்கி கொடுத்த புது செல் போன்
இது என பதிலளித்து , மாட்டி விட்டு விட்டீர்கள் என புலம்பினார். டீச்சர்
உங்க உழைப்புக்கும் நேர்மைக்கும் செல்போன் எங்கும் போய் இருக்காது ,
கிடைத்து விடும் என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன்.

  என் செல் போன் ஒலித்தது . எடுத்தேன்... “சார், அந்த பையன்
(தங்கையைத் தேடியவன்)பஸ்ஸை விட்டு இறங்கி ஓடுறான்... சார், நான்
வீட்டுக்கு போய் பார்த்து அந்த பொண்ணு இருக்குதாண்ணு
சொல்லுறேன்...”என்றார். இது என்னடா போதாத காலம் என நினைத்துக்
கொண்டு , என் அறையை பூட்டி விட்டு , வகுப்பறைகளில் விளக்கு
எரிகிறதா என பார்வையிட்டு வெளியே வந்தேன். கழிப்பறை சுத்தமாக
கழுவப்பட்டுள்ளதா என பார்வையிட சென்றேன். ”சார், தண்ணி யில்ல
மோட்டர் போடணும் ”என்றார். தண்ணீர் போட்டு கழுவி விட சொன்னேன். அதற்குள் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் எனக்கு போன் செய்தார்.
அதாவது தன் வகுப்பில் பயிலும் மாணவியிடம் செல் போனை பத்திரமாக
பார்த்துக் கொள்ளச் செய்து பேருந்தில் மாணவர்களை வரிசையாக
ஏற்றி விட சென்றார்கள் . அதனை மறந்து விட்டார்கள். வரிசையாக
போன் வர , டீச்சர் தான் அடிக்கிறார் என நினைத்து பேசி,
அவரின் கணவரிடம் செல் போன் தன்னிடம் தான் இருக்கிறது என
சொல்லியிருக்கிறது. இவரும் தன் கணவருக்கு போன் செய்து செல் போன்
தவறவிட்டதை சொல்ல, இல்லை உன் வகுப்பு மாணவி பத்திரமாக
வைத்துள்ளதாக சொல்லி இருக்கிறார். எப்படியோ செல் போன் கிடைத்தது.
மகிழ்ச்சி .ஆனால், மாணவர்களை சந்தேகப் பட்டது மிகப் பெரிய தவறு
என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள சொன்னேன்.  தவறுக்காக
வருந்தினார். செல் போனை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்லும் படி சொல்லி,
ஏற்கனவே போன் செய்த ஆசிரியரிடம் செல் போன் கிடைத்து விட்ட
விசயத்தை சொன்னேன். 
   மீண்டும் செல் போன் அலறியது. “சார் , அந்த பெண் காய்ச்சல் என்பதால்
வீட்டில் இருந்து விட்டாள் , நீங்க கிளம்புங்க சார் “ என்றார்.  கடைசியில்
ஆறு மணியளவில் பள்ளியை விட்டு கிளம்பினேன். ”சார், இந்த டீச்சர் வந்தா
இப்படி தான் சார் லேட் ஆகுது... போன சீக்கிரம் வர
மாட்டிங்கிறாங்க..."என்றார் என் பேருந்து ஓட்டுனர். அவரை
சமாதானப்படுத்தி பத்திரமாக மெதுவாக வண்டியை ஓட்டி செல்லுங்க
என்றேன். ”சார்... எல்லாப் பிள்ளைகளையும் இறக்கி விட்டுட்டேன் “
என்றார் மூன்றாவது வண்டியில் சென்ற ஆசிரியர்.

  வண்டியை ஸ்டாட் செய்து கிளம்பியவுடன் மற்றொரு போன்
இரண்டாவது வண்டி ஆசிரியர் மாணவர்களை பத்திரமாக இறக்கி விட்டு
விட்டதாக சொன்னார்.

எது எப்படியோ ...அனைவரும் வீடு அடைந்து விட்டனர் என்ற மன
நிறைவுடன் அருகில் உள்ள அம்மா வீட்டிற்கு பயணித்தேன்.( மாணவர்கள்
அனைவரும் வீடு செல்லும் வரை நான் வீடு செல்வது இல்லை.. )
   தொடர்ந்து முதல் வண்டி வர வில்லையென போன் வர.. டிரைவரை
தொடர்பு கொண்டேன். ”சார்.. சிந்தாமணி கண்ணன் காலனி அருகில் தீப்
பிடிச்சு இருக்காம்... கேஸ் சிலிண்டர் கம்பேனி இருக்கிறதால.. அந்த பக்கம்
யாரையும் விட மாட்டிங்கிறாங்க.. ஒரே டிராபிக்கா இருக்கு... பேசாம பள்ளி
கூத்துக்கு வண்டியை கொண்டு வந்து விடவா?” என கேட்க ,என் அம்மா
வீட்டிற்குள் நுழைந்த நான் அப்படியே பையை வைத்து விட்டு ,இதோ
வந்திடுறேன்... என கிளம்பினேன்.   

”வண்டியை எங்கு நிறுத்தியிருக்கீங்க.. ?” என்று போனில் கேட்டேன்.
”சார், மேல அனுப்பானடி வழியாக போய் பார்க்கிறேன்” என்றார் டிரைவர்.
நடனா தியேட்டரில் இருந்து மேல அனுப்பானடி கிளம்பினேன். தொடர்ந்து
பெற்றோர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அனைவருக்கும் பதில் அளித்து,
தங்கள் குழந்தைகளை பத்திரமாக ஓப்படைப்பேன். நான் பேருந்து இருக்கும்
இடத்திற்க்கு செல்கிறேன் என பொறுப்பாக பதில் கூறி விரைந்தேன். மேல
அனுப்பானடி வழியாக ஹவுசிங்க போர்டு தாண்டி சிந்தாமணி சாலையை
வந்தடைந்தால், பேருந்தைக் காணவில்லை. அதற்கிடையில் ,டீச்சர்
பேன்செய்து ,”சார் வண்டிய விட மாட்டிங்கிறாங்க சார்” என்றார். இதோ
வந்து விட்டேன் என போனைத் துண்டித்தேன்.

    விரைந்து சென்று பார்த்து, பேருந்து இல்லாததை நினைத்து
வருத்தமடைந்து ,மீண்டும் டிரைவருக்கு போன் செய்கிறேன்.
”சார், மேல அனுப்பானடி ஹவுசிங்க் போர்டு முடிவில் போலீஸ் எங்கள
விடமாட்டேன்னுட்டாங்க அதுனால நாங்க மீண்டும் கீழ அனுப்பானடி
வந்துட்டோம்.” என்றார். “ என்ன பாய்.., டீச்சர் இப்ப தான் போசினாங்க …
ஒண்ணும் சொல்லல…” என சடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்து
வருகை தரும் அழைப்புகளுக்கு பதில் அளித்து, அனைத்து
பெற்றோர்களையும் ஸ்டாப்பில் நிற்க சொல்லி விரைந்தேன்.
கீழ அனுப்பானடி வழியாக சிந்தாமணி செல்லும் பாதையில்
கொஞ்சம் கூடுதலாக டிராபிக் இருக்க… மீண்டும் போன் செய்து
வண்டி இருக்கும் இடத்தை  கேட்க ,ஒரு குறுக்கு தெருவில்
ஓரத்தில் வண்டியை பாதுகாப்பாக நிறுத்தி இருந்தார். நான்
சிந்தாமணி சென்று பெற்றோர்களை இங்கு அழைத்து வர
முயற்சிக்கிறேன். அல்லது போலீஸ் உதவியை நாடி வழி
விடசெய்கிறேன் என்றேன். சிறுது தூரம் சென்றவுடன் பார்த்தால்
எந்தவித தடையும் இல்லாமல் சாலை வெறுச்சோடியிருந்தது.
 பின்பு டிரைவரை அழைத்து மெதுவாக வரவும், எந்த வித
டிராபிக்கும் இல்லை என விளக்கி வர சொன்னேன். அதற்கு
இடையில் மழை சோ என சூடுபிடிக்க , மழையில் நனைந்த
படி முன்னோக்கி செல்ல, பேருந்து மெதுவாக வர
, சிந்தாமணி வேப்ப மரம், காளியத்தா ஸ்டாப், மேட்டுப்
புஞ்சை, கண்ணன் காலனி என அனைவரையும் மழையுடனே
இறக்கி விட, குடையுடன் தயாராக இருந்த பெற்றோர்
பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

நனைந்த படி வண்டியில் இருந்த நான் , டிரைவருக்கும்
கண்டெக்டருக்கும் , டீச்சருக்கும் டீ, வடை வாங்கி கொடுத்து
அனுப்பும் போது மணி ஏழு இருபது. பின்பு வண்டியை பள்ளியில்
நிறுத்தி , டிரைவரை அனுப்ப எட்டு மணி ஆகிவிட்டது.

தங்கையை காணவில்லை என்று ஆரம்பித்த லேட், தொடர்ந்து லேட்
ஆகி, தீப்பிடித்ததால், மீண்டும் லேட் ஆகி,மழைக் காரணமாகவும்
லேட் ஆகி ஆகி  எட்டு மணியை தொட்டது பள்ளியிலிருந்து
செல்ல.

அதுவே, பத்து நிமிடம் முந்தியிருந்தால், தீவிபத்துக்கு முன்
பிள்ளைகளை வீட்டில் சேர்த்து விட்டு ஆறு மணிக்கெல்லாம்
கிளம்பி யிருப்போம்.  

எம் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பு, பொறுமை,
பண்பு பார்க்கும் போது , எனக்கு என் பணியின் மீது 
இருக்கும் அற்பணிப்பு கூடுதல் பொறுப்பும் , பெறுமையையும் உணர
முடிகிறது. நிச்சயமாக அவர்களின் குடும்பத்துடன் நலமாக பல்லாண்டு
வாழ்வார்கள் எனநம்புகிறேன்.  ஆசிரியர்கள் தான்   முன்னோடியாக
திகழந்து பள்ளியை நல்ல படியாக கொண்டு செல்ல  முடியும் என்பது
இதுவே உதாரணம்.