Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, October 10, 2013

எப்போதும் விழித்து இருத்தல்

தாலாட்டு
-------------
குழந்தை கதை சொல்ல ஆரம்பித்தது
தூங்கிப்போனேன்
எழுந்து பார்த்தப்போது
குழந்தை தூங்கியிருந்தது
கதை சொல்லியப்படியே 
அம்மா சரியா.... 
என தூக்கத்தில் கேட்க
குழந்தை சொல்லாத
கதைக்கு தலையாட்டியப்படியே
மீண்டும்
தூங்கிப் போனேன்....!


---------------------------------------
உன்னோடு பேசும்
நேரங்களை விட
உன்னோடு பேசா
நேரங்களே
வேகமாக நகருகின்றன
உன்னோடு பேசுவதற்காக...!


----------------------------
ஆசை
-----------
எனக்காக
வாழ ஆசைப்பட்டதை விட
உனக்காக வாழவே
அதிகம் ஆசைப்பட்டேன்....!



----------------------------------------------
அற்புதம்
-------------
இதழ்கள் பொருத்தி
நீ
அழுத்திக் கொடுக்கும்
முத்தத்தில்
அத்தனை மன அழுத்தங்களும்
அமுங்கிப் போகின்றன



____________________________



உன் அருகாமை
எனக்கு பாதுகாப்பு

---------------------------------


எல்லா போதுகளிலும்
_______________________
ஓடும் போது
உண்ணும் போது
நண்பர்களுடன் பேசும் போது
அம்மாவுடன் உரையாடும் போது
தந்தையுடன் ஊர் சுற்றும் போது
பள்ளியில் இருக்கும் போது
பாடம் கவனிக்கும் போது
என எல்லா போதுகளிலும்
கனவுகளுடனே
குழந்தைகள் வாழ்கின்றன....!
 


Tuesday, October 8, 2013

பேய்கள் ஜாக்கிரதை

வயல்களில்
வெள்ளைப் பேய்கள்
கால் ஊன்றி ......
இவைகளுக்கு வழிகாட்டியப்படி
மேலும் சில கலர் பேய்கள்
மஞ்சள் சிவப்பு நிறங்களில்
பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது
இரவு பகல் பாராமல்
நகரமையமாதலில்
பேராசை மனிதர்களை..
வயல்கள் மட்டும் அழியவில்லை
நம் சந்ததிக்கான
உணவு உற்பத்தியும் சேர்ந்தே…..
உணவுக்காக மண்ணை
அள்ளித் தீண்ணும் காலம் வெகுவிரைவில்….! 



Wednesday, September 18, 2013

பிழையின்றி தொடங்கும் பகல்

தென்றல் தழுவி
என்னை காமுறுகையில்
கதிரவன் சூட்டை மூட்டி
காமத்தை பெருக்கினான்

எங்கிருந்தோ வந்த மணம்
அவளின் நினைவை கிள்ளி
அள்ளிச் சென்றது
திடுக்கிட்டு எழுந்த போது
எப்போதும் போல் கோப்புக்கள்
தேங்கியிருந்தன
அவளின் நினைவுகளை போன்று
என்னை சுற்றி

எப்போதும் போல்
கடந்து சென்றது பகல்

கனவுகளின் களைப்பில்
கண்கள் மூடிய
என்னை மீண்டும் தழுவியது
அவள் குரல்
அலைக்கற்றையின் உதவியுடனே

இரவில்
என் படுக்கையறையில்
உருவாக்கிய தோட்டங்கள்
விடியலில் காணாமல் போகின்றன
ஆப்பிள் மரஙகள்
ஆப்பிள்கள்
உண்ணப்படாமல்.....

எந்த பிழையுமின்றி
தொடங்குகிறது பகல்


  

Wednesday, August 28, 2013

நினைவுகளின் குளிர்காலம்

நினைவுகளின் குளிர்காலம்

இன்று இரவு எப்போதையும் விட
அதிக குளிராக யிருந்தது

உன் நினைவுகள் நிரம்பிய
போர்வையால் முடிக்கொண்டேன்.

அனல் காக்கும் வார்த்தைகள்
உஷ்ணத்தை ஏற்படுத்திடவே
போர்வை நீக்கி
உறங்க முற்படுகிறேன்

சுழலும் மின்விசிறி
உருவாக்கும் காற்று
உடலை தீண்டுகிறது உன்னைப்போல்
இப்போது
குளிரவுமில்லை
வேர்க்கவுமில்லை

ஆனால்
மின்விசிறியின்
சத்தம் மட்டும்
தொடர்ந்து கேட்கிறது
இந்த குளிர்கால இரவில்
உன் நினைவுகளில்
உறைந்து

விழித்திருக்கின்றேன்.

Monday, August 26, 2013

இது காதலப்பா..!

கண்ணில் கலந்து
கருத்தில் கலந்து
கவிதையில் கலந்து
எண்ணில் கலந்து
கருணையின்றி
விலகியதால்
அவள்
காதலியானாள்!
  

Thursday, January 17, 2013

ந(க)ரமையமாதல்


ந(க)ரமையமாதல்
இருள் அப்பிய வீதிகள்
தீபாவளியை நினைவூட்டும்
பொட்டுல் வெடிகளின் சத்தம்
தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறது
கைகளில் பேட்டுகள்
வண்ண வண்ண கலர்களில்
அனைவரும்
லியாண்டர் பயஸ் சானிய மிர்சாவாக
பந்துகளாய் சீரிப்பாய்கின்றன கொசுக்கள்
மலேரியா, சிக்குன் குன்யா , டெங்கு
என்று பரப்பிச் செல்கின்றன
விடிந்தும் விடியாமலும்
அங்காங்கே அலறல் சத்தம்
நகரமயமாதல் தந்த அன்பு பரிசு

Monday, June 4, 2012

மழை இரவு




மழை தூர ஆரம்பித்த
இரவொன்றில்
நான் கரைந்து கொண்டிருந்தேன்
உன் கை பட்டு.

தீ மூட்டாமல்
நீயும் நானும்
சூடாகிப் போனோம்
நம் மூச்சுக் காற்றில்
இருள் முனங்கிக் கொண்டிருந்தது.

உன் கரங்களை
தூரிகையாக்கி
என் முதுகில்
ஓவியம் வரைந்தாய்
வியர்வை அழித்த
அவ் ஓவியம்
இன்னும் என் நினைவலையில்
அழியாமல்.

மழை இரவு
இன்னும் எரித்துக் கொண்டிருக்கிறது
உன்னையும் என்னையும்.

Monday, April 16, 2012

எரிகற்கள்…


சுமந்து வரும்
புத்தகப் பை
சுட்டிக்காட்டுவது
அவனின் மனச்சுமையையும் தான்…!

எத்தனையோ அடக்கு முறைகளையும்
அதன் விளைவுகளையும்
கற்றுத் தரும் ஆசிரியருக்கு
ஏன் புரியவில்லை
அவர்களின் அடக்கு முறை…!
வகுப்பறைகளில்
ஆசிரியர்களின் சூரிய வட்டத்தில்
நட்சத்திரங்களாய் ஜொலிக்கும்
மாணவர்கள்…
வெளியில் வந்தவுடன்
எரிகற்களாய்
இலக்கை அடையும் முன்
எரிந்து சாம்பலாவது ஏன்..?


புரியாத குறியீடுகள்


வகுப்புகள் தொடங்கின
வழக்கமாக கத்தும் காக்காயும்
சரியான நேரத்திற்கு கத்த துவங்கியது….
காக்காயை பார்க்கும் போதெல்லாம்
ஏமாந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது
நரித்தனம் இல்லாத மனிதர்கள் யார் ?
இன்னும் பாடம் நடத்தி முடியவில்லை…
எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி
கவருடன் வந்த தலைமையாரிசியை
பைன் வாங்குவது நல்ல விசயம் தான்
நீங்கள் திருந்த கொடுக்கும் வாய்ப்பு
யாரோ தவறாக தகவல் கொடுத்துள்ளார்கள்
நீங்கள் யாரும் விசாரித்தால்
பைன் வாங்குவதில்லை என கூறுங்கள் என்றார்
காகம் இன்னும் கரைந்து கொண்டிருந்தது
கணித குறியீடுகள் புரியாத மாணவர்கள்
மேலும் குழம்பிப் போய் இருந்தனர்
காந்தி மட்டும் இன்னும் சிரித்துக் கொண்டிருந்தார்
சத்தியமேவ ஜெய
எந்த மாணவனும் சுயசரிதையை வாசிக்க பயப்படுகிறான்
உண்மைகள் மறைந்த உலகில் …! 

Thursday, March 8, 2012

முன்னோடி




இருள் பகலை வெல்ல
தொடங்கிய மாலை பொழுது…
பயந்து உடல் சிவந்து
கடலுக்குள் மறைய தொடங்கினான்
சூரியன்…
வீட்டினுள் நட்சத்திரங்கள்
மின்னத் தொடங்கின
மின்சாரம் அறுந்த
இருள் கவ்விய நேரங்களில்
சலித்த மனிதர்களிடம்
நட்சத்திர சிரிப்பில் வானம்
பல் இளித்து சொன்னது
பவர் கட்டில் உங்களுக்கு முன்னோடி
நிலவு என்று..! 

Friday, March 2, 2012

நிறங்கள் இன்னும் மாற்றமடையவில்லை


ஆரஞ்சு நிற வாழைப்பழம்
மஞ்சள் நிற தேங்காய்
சிவப்பு நிற கொய்யாப்பழம்
கருப்பு நிற ஆப்பிள்
வெள்ளை நிற பீட்ரூட்  
  
இவை சாத்தியமாகின
என் மகளின் வர்ணஜாலத்தில் ….

இன்னும்
மரபு மாறாத ஆசிரியர்கள்

பயத்தால்
நிறமாற்றிக் கொண்டிருக்கிறாள்….!

Monday, February 20, 2012

பிப்ரவரி 14 ...



வெகு நாட்களாக
அழகான கவிதை எழுத ஆசை…
அது தான்
உன் பெயரை எழுதிப் பார்த்தேன்
 ------------------------------------------

கொடுத்தும் குறையவில்லை
குறைத்தும் கொடுக்கவில்லை
ஏனெனில்
நான் காதலிக்கிறேன்

 -------------------------------------------------------------
விழுந்து சிதறிய
கண்ணாடித் துண்டாய் …
எங்கு நோக்கிலும்
உன் முகம் மட்டுமே தெரிகிறது….!



Wednesday, February 15, 2012

தவிப்பு



முகம் கழுவி
அமர்ந்து
புத்தகம் விரித்து
அறிவியல், கணக்கு
தமிழ் , வரலாறு
ஆங்கிலம் என எல்லாம்
முடித்து ….
காத்திருக்கிறாள்
தந்தையின் வருகைக்காக
நாட்குறிப்பில் கையொப்பம் பெற…!

Tuesday, February 14, 2012

காதல் கவிதைகள்


அனல் கக்கும் இறுக்கம்
மூச்சு கூட விட முடியாத
நெருசலான பேருந்து பயணத்திலும்
உன் புன்முறுவல்
பெருமூச்சுவிடச் செய்கிறது…
-----------------------------------------------
மெல்லிய சிரிப்பு
பார்த்தும் பார்க்காததுமாக
செல்லும் சுடிதார்
நினைவு படுத்துகிறாள்
பறி கொடுத்த காதலையும்
காதலியையும்…


----------------------------------------------------
பகலில் பெய்யும் மழையை
பிடிக்காததற்கு
பலருக்கு
பல காரணம் இருக்கலாம்
எனக்கு ஒரே காரணம் தான்
உன்னை பார்க்க முடியாமல் போதும்
ஆதலால்….
 ----------------------------------------------------
ஹாரன் அடித்து செல்லும் ஆட்டோ
தடுமாறி செல்லும் ஆம்னி கார்
முந்தி செல்லும் மோட்டர் சைக்கிள்
மெதுவாக முன்னேறும் மிதி வண்டி
ஒழுங்குப்படுத்தும் காவலர்
என எதுவும் தெரியவில்லை
நீ வரும் வரை…!


Saturday, February 11, 2012

கிறுக்கல்கள்


கதவுகள் அற்ற கழிப்பறை சுவர்களில்
கிறுக்கல்கள்
எதோ உளறல்கள் என
அவ்வளவு எளிதாக
எடுத்துக் கொள்ளக் கூடாது

பெயர்களுக்கு பின்னால்
சூட்டப்படும் 9 என்ற இலக்கம்
வகுப்பறைகளில்
ஆசிரியரின் இயலாமையை குறிக்கிறது…!

பெயர்களுக்கு பின்னால் வரும்
மூன்று இலக்க கெட்ட வார்த்தை
குறி சொற்கள்…
குறிக்கோள் இன்றி செயல்படும்
ஆசிரியரின் செயலுக்கு கிடைத்த வெகுமதியாகும்…!

ஆண் பெண்
பெயர்களின் இணைப்பு
மாணவர்களுடன் இணைப்பி
இன்றி செயலாற்றிய
ஆசிரியருக்கு கிடைக்கும் சான்றிதழ் ...!

பெயருக்குள் ஆர்டின்
துளைக்கும் அம்பு …
மாணவன் மனதை அம்பாய்
துளைக்கும் ஆசிரியருக்கு கிடைக்கும் வெகுமதி…!

கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
இன்னும் மாறாமல் அதே விதம்..

எத்தனை முறை வெள்ளையடித்தாலும்
கழிப்பறை சுவர்கள்
ஏதோ ஒரு மாணவனின்
மனக்குமுறலுக்கான
கிறுக்கலுக்காக
காத்துக்கிடக்கின்றன….
   


Thursday, January 19, 2012

மருந்திடப்பட்ட மரக்குச்சிகள்


பள்ளி தோட்டத்தின் பலகையில்
பூக்களை பறிக்காதீர்கள்
கையில் குச்சியுடன் ஆசிரியர்
வகுப்பறையில்…!
 -----------------------------
தெருவோர குப்பைதொட்டி
சிரிக்கிறது…
வகுப்பறையில் மாணவர்கள்…!
 -----------------------------------
வகுப்பறையில்
மரப்பாட்சி பொம்மைகள்
ஆசிரியரின் தோதுக்கு ஏற்ப
ஆட்டுவிக்கப்படுகின்றன…
மரக்குச்சிகளின் தலையில்
மருந்திடப்பட்டாலும் …
அது உராய்சும் இடத்தின்
பதத்தை பொருத்தே
பற்றி எரிகிறது….!


Friday, January 13, 2012

விடியல்



சேவல் கூவி அழைக்க
சூரியன் தன் கைகளை
மெல்ல விரித்து
இருளின் முகத்தை துடைக்க….
வீட்டு மேற்கூரை வழியாக
ஊடுருவி வெளிச்சம் ….
வெளிச்சமாக்குகிறது
இருளின் உச்சத்தில்
நீண்ட புணர்தலுக்கு பின்
கவ்வி பிடித்து தூங்குபவர்களின்
நிர்வாணத்தை …
அழுகையும் சிரிப்புமாய் இருக்கும்
கனவுலகின் கதவுகளை உடைத்து
குழந்தைகளுக்கு நிஜத்தினை…
வீடுகளற்று
மூத்திர வீதிகளின் முடுக்குளில்
நடுங்கும் பனியில்
பயந்துறங்கும் பிச்சைக்காரியின்
முலையினை….
தெருநாயின் அதிகாலை புணர்தலை
விரைத்தகுறியுடன் ஏக்கமாய்
பார்க்கும் தெருவோர அனாதைகளை…
இப்படியாக எங்கும் பரவிய வெளிச்சம்
தன்  
அகண்ட கைகளைக் கொண்டு
அனைவரையும் தட்டி எழுப்புகிறது…
உறங்கிக் கொண்டிருந்த அனைத்தும்
விழிக்கின்றன..
விழித்துக் கொண்டிருந்த அனைத்தும்
உறங்கிப் போகின்றன…
உண்மையும் பொய்யாய்
பொய்யும் உண்மையாய்
கைகள் முழுவதும் விரிந்த நிலையில்
எல்லாம் நிகழ்கிறது…
சேவல் மீண்டும் கூவுகிறது…
மெல்ல கைகளை சுருக்கி
வீட்டின் மையப்பகுதியிலிருந்து ….
புறக்கடை வழியாக வெளியேறி
வீதிகளின் தெரித்து ஓடி
இருளுக்கு வழிவிடுகிறது
சேவலின் கூவல் நின்றபாடில்லை…!

Tuesday, January 3, 2012

மரம் வளர்கிறது..


மரங்கள் வேர்விட்டு
ஓங்கி நிற்கின்றன..
மரத்தை சுற்றி ஓடியாடி திரியும்
சிறுவன் விழும் போது ….
உதிர்கின்ற இலைகள்
தளிர்க்கின்றன
ஒவ்வொரு முறையும்
விழுந்த சிறுவன் நம்பிக்கை பெறுகிறான்…
 மரம் வளர்கிறது..
இவனும்…
ஆனால்… வளர்ந்த பின்
வெட்டுவதேன்..!

Tuesday, November 29, 2011

சாவியே இல்லாத கதவு


பூட்டப்பட்ட கதவுக்கு
கனவுகள் திறவுகோல்கள்
இரவுகளின் உறக்கங்களில் திறப்பவை
பகலின் வேதனைகளுக்கான கதவின் கைபிடிகள்
தட்டாமலே திறந்து கொள்கின்றன….
புறக்கண்கள் மூடும் போது
வெளிச்சத்தை புறக்கணித்து
இருளில் திறந்து கொள்கின்றன…
அலைக்கற்றை ஜாமீன் போல்
எதிப்பார்ப்புகள்….
பரபரப்புகள்..
பதற்றங்கள்….
பீதிகள்… என எதுவும் அற்ற
சந்தோசத்தை தரும் கனவுகளுக்கான
சாவிகளை தேடிக் கொண்டு….
பூட்டிய அறைக்குள்
இருபதாம் நூற்றாண்டின் பெண்கள்….
”சாவியே இல்லாத கதவு என ஒன்றும் கிடையாது”
என்ற நம்பிக்கையுடன்…!
  

Saturday, October 15, 2011

இரவு


இரவு எல்லாருக்கும் ஒன்றாயிருப்பதில்லை
எனக்கு எல்லா இரவுகளும்
ஒரே மாதிரியாக இருந்ததில்லை..
சில இரவுகள் இனிமையானவை
பல இரவுகள் வாழ்வை புரட்டி போடும்
நாடகத்தை நடத்தியவை…
புத்தகதினுள் முகம் புதைத்த இரவுகள்
மாய உலகில் சஞ்சரிக்க செய்பவை….
இருள் அப்பிய அந்த இரவு
என் தந்தையை முழுங்கி
என்னை அனாதையாக்கியது…..
இரவில் பெண்ணின் அரற்றல்
தெளிவாக கேட்டும்
அதற்கு
பகலில் பல கதைகளை உருவாகும்..
பொளர்ணமி இரவின் பாடல்
மனதில் ஒளி பாய்ச்சுபவை…
இரவுகளில் புணர்தல் அதிகம்
வெளிப்படுத்தும் வெப்பம்
பெண்களின் வெறுப்பை உணர்த்துவை…
இரவுகள் இருள் அப்பியே காணப்படுகின்றன…!