Wednesday, March 24, 2010

மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் தேவைதானா?

மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் தேவைதானா?

மதுரை மாவட்டத்தில் அனைத்து சரகத்திலும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்  , தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ,பள்ளி தலைமை ஆசிரியர்களால் மற்றும் பள்ளி ஆசிரியர்களால் மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முதன்மை கல்வி அலுவலரின் சீரிய தலைமையில் ,அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தொடக்கக் கல்வி அலுவலர்களின் முயற்ச்சியில் , ஆசிரிய பயிற்றுனர்கள் உதவியோடு பல இடைநிற்றல் (drop out student )மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு , மாற்று பள்ளிகள் மற்றும் இணைப்பு மையத்தில் சேர்த்து மீண்டும் நல்ல கல்வியை தந்து , அவர்களின் படிப்பு தொடரவும் , பிற மாணவர்களை போன்று , நடைமுறை பள்ளி கூடங்களில் சேர்ந்து படிக்க உதவி செய்கிறார்கள்.

             இப்படிப்பட்ட மாணவர்களுக்கு 19 .03 .2010 அன்று  மதுரை தென்சரகத்தில் , என்.எம் .எஸ் .எம் மாநகராட்சி பள்ளியில் வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது . அந்த வகுப்பு மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் வகுப்பு நடத்த சென்றேன். அங்கு சென்றபிறகு தான் ஏன் நடைமுறையில் உள்ள(ரெகுலர் )  பள்ளிகளில் இந்த வாழ்வியல் திறன் தரக்கூடாது ?   என்ற சிந்தனை தோன்றியது .
  
          மாணவர்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கையும் , தங்களின் வாழ்வின் மீது பற்று ஏற்படுத்தி , தன் காலில் தானே சுயமாக நிற்க கற்று தர இப்படிப்பட்ட வாழ்வியல் திறன்கள் அவசியம் . மூத்த ஆசிரிய பயிற்றுனர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள் பல சமயங்களில் கல்வி முறை ,கற்றல் மற்றும் கற்பித்தல் இடர்பாடுகள் ,இன்றைய கல்வி தேவைகள் குறித்து ஆலோசனை மற்றும் விவாதங்கள் என்னுடன் செய்வதுண்டு.  நானும் அவரும் முதல் நாள் ஆலோசனையில் ஈடுபட்ட போது ," மாணவன் தன் சுய தேவைகளை அடுத்தவர் உதவி இல்லாமல் , தானே தன் தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற வாழ்வியல் திறன்களை மாணவர்கள் பெறவேண்டும் , அதன் அடிப்படையில் நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டும் "என்றார்.

               வாழ்வியல் திறன் என்பது மாணவர்கள் குறித்த நேரத்தில் வருகை புரிய வேண்டும், வரிசையில் செல்லவேண்டும் , எடுத்த முடிவில் தோல்வி கண்டாலும் துவளக்கூடாது, எங்கும் எதிலும் ஒழுக்கம் தவறாமை , பொய் பேசாமை , கோபம் தவிர்த்தல் இவற்றின் அவசியத்தை நிச்சயம் கூற வேண்டும்  , அதனுடன் இன்று போஸ்ட் கார்டு , ரயில் டிக்கெட் எடுப்பது, மணி ஆடர் பாரம் பூர்த்தி செய்தல் போன்றவைகள் நல்லது. மிக பெரியவர்கள் என்றால் சோப்பு தயாரித்தல் , சாம்புராணி , பத்தி ,சூடம் தயாரித்தல் போன்றவைகளை கொடுக்கலாம் என்றேன்.

               இரண்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் வருகை தருகிறார்கள் சுமார் நூற்று நாற்பது மாணவர்களுக்கு மேல் வருகை தருவார்கள் , அவர்களுக்கு இப்பயிற்சி முக்கியமானதாக இருக்க வேண்டும் , மேலும் அது அவர்களின் வாழ்வாதாரத்தை தேடி தருகிறதோ  இல்லையோ ,அவசியம் அவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

      பின்பு அவரே பயிற்ச்சிகளை தேர்வு செய்தார் .  சட்டையில் பட்டன் தைக்க கற்று தருதல், சைக்கிள் ரிப்பேர் சரி செய்தல் , புத்தக பைண்டிங் செய்ய கற்றுத் தருதல் போன்ற பயிற்ச்சிகள் ஆகும் . அனைத்திற்கும் ஏற்பாடுகளை செய்தாயிற்று. இனி பயிற்சிக்கு வருவோம்.

         காலை பத்து மணிக்கு தொடங்கியது . மாணவர்கள் சுறு சுறுப்பாக காணப்பட்டனர். கனவுகளுடன் காட்சியளித்தனர். அவர்களின் முகத்தில் நம் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயம்  செய்யும் சக்தி தெரிந்தது. குடும்பச்சுழல் , தவறான சகவாசம் , இடமாற்றம் ,  பள்ளி சுழல் சரியில்லாமை, ஆசிரியர் பிடிக்காமை போன்ற பல காரணங்களுக்காக பள்ளி படிப்பை நிறுத்தி,இன்று இணைப்பு மையத்தில் சேர்ந்து, உறைவிட பள்ளியில் படித்து , சாதாரண மாணவர்களை போல் பள்ளி செல்லும் இவர்களுக்கு இது போன்ற ஒரு வாழ்வியல் திறன் வகுப்பு தேவை என்பது புரிந்தது.
இந்த தருணத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் ஒரு தெய்வ திட்டம் என்பதை உணர்த்த கடமைப்பட்டுள்ளேன்.  தமிழக கல்வி துறையின்  செயல்பாடு ' ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு  பதம்' என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்  பள்ளி செல்லாக் குழந்தைகளின் மீது கொண்டுள்ள அக்கறை ,அவசியம் புரிந்தது.   செயல் வழி கல்வி திட்டத்தின் முன்னோடி என   என்போன்றோர்களால்  அழைக்கப்படும்  'திரு.எம்.பி. விஜயக் குமார்  அவர்கள் நிச்சயம் நம் தமிழக மாணவர்களின் சீரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பது மிகையாகாது.

          பயிற்சியில் மாணவர்களுக்கு கீழ் கண்ட கேள்விகள் கொடுக்கப்பட்டு ஆம் இல்லை பதில்கள் பெறப்பட்டு அவர்களுக்கு தன் மீது நம்பிக்கை பிறக்கச் செய்தேன்.

1. எனக்கு சுத்தமாக இருப்பது பிடிக்கும். என் சுற்று புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வேன்.
2. என்னை எனக்கு பிடிக்கும்.
3. எனக்கு கோபம் வாராது.
4. நான் பொறுமையை எப்பொழுதும் கடைபிடிப்பேன்.
5. அடுத்தவர் செய்யும் நல்ல காரியத்தை பாராட்டுவேன். என்னையும் நான் பாராட்டி கொள்வேன் .
6. சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவேன்.
7. மதிப்பெண் குறைவாய் எடுத்ததற்கு வருந்த மாட்டேன். அதற்காக என்னை வருத்திக் கொள்ள மாட்டேன்.
8. பிறருக்கு உதவி செய்வேன். அருகில் உள்ள மாணவனுக்கு புத்தகம் , பென்சில் , பேனா கொடுத்து உதவுவேன்.
9.போட்டி போட்டு படிக்க விரும்புகிறேன்.
10௦. நான் சந்தோசமாக இருக்க விரும்புகிறேன்.

அனைத்திற்கும் ஆம் என்றால் மாணவன் தன் நம்பிக்கை கொண்டுள்ளான் என்று அர்த்தம். எந்த வினாவிற்கு மதிப்பெண் கொடுக்க வில்லையோ , அதற்க்கான விளக்கம் தந்து கதை மூலம் மாணவனுக்கு அப்பண்பு உணர்த்தப்பட்டது.

       மாணவனுக்கு சோம்பேறி தனம் உண்டு என்று கண்டுபிடிக்க கீழ் கண்ட வினாக்கள் கேட்கப்பட்டு அவற்றை போக்க விளக்கம் கொடுக்கப்பட்டது.
1. நான் காலை இதுவரை எழுந்து சூரிய உதயத்தை பார்த்ததே கிடையாது.
2.நான் வகுப்பில் பாட புத்தகத்தை எடுத்து படித்த பின் மீண்டும் பையில் வைக்க மாட்டேன். மாணவனோ, ஆசிரியரோ தான் எடுத்துக் கொடுப்பார்கள்.
3.தினமும் குளிக்க கஷ்டப்படுவேன். பள்ளிக்கு சீருடையில் வருவது கடினம்.
4.மதிய உணவு தட்டை சாப்பிட்ட இடத்திலேயே போட்டு விடுவேன்.
5.தலை வாரி பள்ளிக்கு வர கஷ்டமாக இருக்கும்.
அனைத்திற்கும் ஆம் என்றால் அட்டு சோம்பேறி என்று அர்த்தம். சோம்பலை மாற்ற கதைகள் கூறப்பட்டன.

தனி திறமைகள் வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டது. தனி திறமைகள் எவை என்பதற்கு கீழ் கண்ட வினாக்கள் கேட்கப்   பட்டன.
-என் கையெழுத்து அழக்காக இருக்கும்.
-நான் வேகமாக ஓடுவேன்.
-புத்தகத்தை தலைகீழாக பிடித்து படிப்பேன்.
-எனக்கு சுவையாக சமைக்க தெரியும்.
-தலைகீழாக நடப்பேன்.
அவைகள் மேம்பட்ட நாம் முயற்சி எடுத்திட வேண்டும். இன்று சாதனையாளர்கள் எல்லாம் தம் தனி திறமைகள் அறிந்து அதில் கவனம் செலுத்தியவர்கள் தான் என்பது மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.
   பயிற்சியின் போது மாணவர்கள் சிலர் பித்தான் இல்லாமல் சட்டை அணிந்தது தெரிந்தது. அப்போது தன் அவர்களுக்கு பித்தான் தைக்க கற்று தருவதன் அவசியம் புரிந்தது. அன்றே அனைவரும் பித்தான் தைக்க கற்று தரப்பட்டது .
    மாணவர் பலரும் தன் புத்தகத்தை கிழித்து , அட்டைகள் போயி இருந்தது. ஆகவே நாம் மாணவருக்கு புத்தக பயிண்டிங் கற்று தருவது பிடித்தது.

   மாணவர்கள் அனைவர் வீட்டிலும் சைக்கிள் வைத்துள்ளனர் . அரசும் இலவச சைக்கிள் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.ஆகவே சைக்கிள் ரிப்பேர் கற்று தருவதும் அவர்கள் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவே அமைந்துள்ளது. அன்று அவர்களுக்கு பயனுள்ள வாழ்வியல் திறன்கள் பெற்றனர் என்பது மட்டும் உண்மை.
     பயிற்சியின் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில அகராதி கொடுக்கப் பட்டது .மேலும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதும் கற்று தரப்பட்டது. ஆங்கில மொழி வளர்ச்சியின்  துவக்கமாக இருந்தது.


     இன்று நடைமுறை பள்ளிகளில் வாழ்வியல் திறன்கள் கற்று தரப்படுகிறாதா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது. அரசும் , ஏன் அனைவர்க்கும் கல்வி திட்டமும் இப்படிப்பட்ட வாழ்வியல் திறன்களை அனைத்து மாணவர்களுக்கும் கற்று தரக் கூடாது ?
மாணவர்களின் அன்றாடத் தேவைகளான கிழிந்த சட்டை தைக்க கற்று தருதல் , புத்தகத்தை அட்டைபோட்டு பாதுகாக்க கற்று தருதல், உடல் நலம் பேணுதல், சடை அலங்காரம், மேக்கப் செய்தல், புத்தகம் பைண்டிங்க் ,சைக்கிள் ரிப்பேர், போஸ்ட் கவர் தயாரித்தல்,செடி வளர்த்தல்,தோட்டம் பராமரித்தல் போன்ற திறன்களை நாம் கற்று தரலாமே?அரசு முயற்சி எடுக்குமா...?
         பள்ளி செல்லா குழந்தைகளின்  பள்ளி படிப்பை தொடர முயற்சி எடுத்துள்ள நம் அரசுக்கு பாராட்டுக்கள்.இந்தியாவில் தமிழகம் பள்ளிகல்வியில் பிற மாநிலங்களுக்கு முநோடியாக திகழ்கிறது என்பதற்கு இதுவே சான்று.

10 comments:

Ramesh said...

நல்லதொரு பதிவு பகிர்வுக்கு நன்றி சரவணண். வாழ்வியல்ததிறன் அனைவருக்கும் தேவை.

புலவன் புலிகேசி said...

தேவையான பதிவு

dheva said...

உண்மையில் சொல்லணும்னா....வாழ்வியல் திறன் கிராமப்புர மாணவர்களுக்கு...போதிக்கப்படுவதே இல்லை...அது பற்றி நானும் பலதடவை சிந்தித்து வருத்தப்பட்டுள்ளேன்...சரவணண்! உங்கள் பதிவினை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது...இது போல எல்லா இடங்களிலும் வாழ்வியல் திறன் வகுப்புகள் நடந்தால் மிக்க மகிழ்ச்சிதான்! வாழ்த்துக்கள் சரவணன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சரவணன், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு, நன்றி சரவணன்

Radhakrishnan said...

மிகவும் அருமையான பதிவு. வாழ்வியல் திறன் பற்றிய அழகிய இடுகை.

மதுரை சரவணன் said...

றமேஷ்,புலவன் புலிகேசி,வி.ராதாகிருஷ்ணன்,ஸ்டார்ஜன்,தேவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வருகை புரிந்துள்ள அனைவருக்கும் நன்றி.

எவனோ ஒருவன் said...

மதுரை சரவணன் அவர்களுக்கு
இந்த வாழ்வியல் திறன் இந்த பிள்ளைகளுக்கு மட்டுமின்றி பள்ளிகள் பயில்வோருக்கும் கூட கற்றுகொடுக்கலாம்

எவனோ ஒருவன் said...

மதுரை சரவணன் அவர்களுக்கு
ஆனால் இந்த பஞ்சர் ஒட்டுவதுமல்லாமல் இன்னும் பல வாழ்வியல் திறன்களை கற்றுக் கொடுக்கலாமே.
"Think Big" என்று சொல்வார்களே அது போல் இன்னும் பலவற்றை அவர்களை சிந்திக்க வைக்கலாமே...
இந்த முயற்சியில் என்னால் முயன்ற எந்த உதவி ஆயினும் செய்ய காத்திருக்கிறேன். என்னை தயவு செய்து அணுகுவதில் தயக்கம் காட்ட வேண்டாம்.

குலவுசனப்பிரியன் said...

இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான செய்திகளைக் காண்பது அரிதாகிவிட்டது. பகிர்வுக்கு நன்றி.

Post a Comment