Thursday, December 31, 2009

பூத்தது புத்தாண்டு!

பூத்தது புத்தாண்டு!
புரியபோகுது பல்லாண்டு
பேசும் சாதனை !
இனி நமக்கில்லை
வேதனை !


துடித்து எழு!
அடித்து போக்கு
அழுக்கு நீக்கி
ஆடை போல் உள்ளம் !

அனைத்துக் கொள்
அன்பாய் அனைத்தையும் !
இணைத்துக் கொள்
இனக்கமாய் இதமாய் !

இதயம் ஈரமாகட்டும்
பசித்தவருக்கு புசிக்க
உணவிடுவோம்!

புனிதமாகட்டும் பூமி
பூதமாகும் வெப்பம்
புரியவைக்கட்டும்
பூமியில் மனிதன்
வாழ வழி விடட்டும்!
 

மதுரை

Wednesday, December 30, 2009

௯டா நட்பு !

சிறகு முளைக்கும்
சிந்திக்க தூண்டும்
படிப்பும் சுமையாகும்
சுவையாகும் கூடா நட்பு!

சுருதிக் கூட்டும்
குருதி கொதிக்கும்
பெற்றோர் வார்த்தை
ஒலிக்கும் போது !

வாய் வசைபாடும்
வாத்தியாரைப் பார்த்து !
வானமாய் விரிந்து
வனமாய் மாறியிருக்கும்
வம்பு செய்யும்
௯டா நட்பு !
 

   





Tuesday, December 29, 2009

பூவியை குளிரச் செய் !

இயற்கை இனிக்கும்
இணைந்து பார் !

மரத்தை நடு
நம் சந்ததியரின்
மனதைத் தொடு!

மரத்துப் போன
மனதை பொசிக்கி
பூவி வெப்பமாதலை
தடுக்க யோசி!

மரத்தை நட்டு
பூவியை குளிரச் செய் !

பூ பூக்கும்
காய் காய்க்கும்
கனி இனிக்கும்
என்பன  .....
உன் மொட்டுக்களுக்கு 
கற்பனையாகும் முன்
விழித்திடு !
விதைத்திடு!
மரம் வளர்ப்போம் !
மனித நேயம் காப்போம்!
பூவி   வெப்பமயமாதல் தடுப்போம்!     

  

     

மரணம்

மரணம்
மனு போட்டாலும் வராது !
மறுத்தாலும் விடாது !

மரணிக்கும் வரை
வாழ்வை வசமாக்கு!
மரணிக்கும் போது
வாழ்வு வரலாறு ஆகும்!

இவ்வாண்டின் மரணம் 
புத்தாண்டின் விடியலுக்கு
விட்டுச்செல்லும் வெளிச்சம் !

தனி மனித மரணம்
தன் சந்ததிக்கு
கற்றுத்தரும் பாடம்
ஒவ்வெரு நாளையும்
மரணமின்றி விடியலாக்கும்!

மரணத்தை கண்டு
மிரளாமல்
மரணத்தின் கைகளில்
முத்தமிட்டு
வாழ்வை வளமாக்குவோம்!  

Monday, December 28, 2009

சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி

      இந்த வாரம் ஆனந்த விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "எம்.ஜி .ஆரைப் பார்க்கணும்!"  கட்டுரையில் சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி மிக அருமையாக கூறியுள்ளார். அவரின் கருத்துகள் இதோ :
 
        சிறுவர்கள் ஏன் தன் வயதை மீறி நடந்து கொள்ள ஆசைபடுகிறார்கள் . 
ஆறாம் வகுப்பில் காதல் தோல்வி கண்ட சிறுவர்கள் இன்று இருக்கிறார்கள் . ஒன்பதாம் வகுப்புக்கு போவதற்குள் பாய் பிராண்ட் மற்றும் கேர்ள் பிராண்ட்
எண்ணிக்கை எத்தனை என்று கணக்கிடுகிறார்கள் .


         
         இணையத்தின் வழியே எளிதாகக் கிடைக்கும் ஆபாசப் படங்கள் அவர்கள் பாலியல் ஆசைகளைக் கொந்தளிக்கச் செய்கின்றன. ... குற்றத்தைக்  கொண்டாடும் திரைப் படங்கள் அவர்களுக்கு முன் உதாரணமாகின்றன.


         அவனைப் புரிந்துகொள்வதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இரு தரப்பும் தவிக்கிறது.  தமிழகத்தில் முன்பு வறுமையால் வீட்டை விட்டு ஓடியவர்கள் அதிகம் இருந்தார்கள் . இன்று ஓடுகிறவர்களில் பெரும்பான்மையினர் வீடு அனுமதிக்காத உல்லாசங்களைத் தேடியே வெளியேறுகிறார்கள் .                         
       
           ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பார்வையில் என் கருத்துகளை முன் வைக்கிறேன் .
              சீர்கெட்டுக் கிடக்கும் உலகச் சூழ்நிலையை நல்ல கல்வி ஒன்றினால் தான் மாற்ற முடியும் . 
              நம்முடைய உலகின் எதிர் காலம் மாணவ மாணவிகளின் கைகளில் தான் இருக்கிறது. அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வியின் தரத்தை பொறுத்துத்தான்   நம் உலகச் சூழ்நிலை அமையப் போகிறது . 
             தரமான கல்வி கொடுக்க, நம் தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டுவருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும் .

               ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒளிவு மறைவில்லாத உறவு  ஏற்படும் போதுதான் , கல்விக் ௯டங்களில் கற்றுக் கொள்ளுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஒற்றுமை , தோழமை போன்றவைகளினால் ஆசிரியர்களும் மாணவர்களும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  
  
                 செயல் வழிக் கற்றல் முறையில் ஆசிரியர், மாணவர் உறவு தோழமையுடன் ஒற்றுமை உடையதாக உள்ளது என்பதை நினைவு படுத்த கடமைப் பட்டுள்ளேன் .

                 அன்புக்காட்டுதல் , பகிர்ந்து கொள்ளுதல் , ஒளிவு மறைவின்றி கருத்துக்கள் பரிமாற்றம் செய்து  கொள்ளல் போன்றவைகள் புதிய விசயங்களை சுலபமாகவும் , ஆர்வத்துடனும் கற்றுக் கொள்ளுவதற்கு உதவும்.

                 ஒரு உண்மையான நல்ல ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருக்க மாட்டார். அவர் தன் மாணவர்களை சுயமாகச் சிந்தித்து சுதந்திரத்துடன் செயல்படுவதற்கு அனுமதித்து வருவார்.

                   புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் கல்வி முழுமை பெறுவதில்லை.
தன்னைச் சுற்றிலும் நடப்பவைகளிலிருந்து ஒருவன் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.  ஆசிரியரின் முக்கிய பணி மானவிர்களிடம் உண்மையை கண்டுக் கொள்ளும் திறமையை வளர்பதுதான்.        
                
                பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை, தங்கள் குழந்தைகளின் மூலமாக அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு , அவைகளை அதங்கள் குழந்தைகள் மீது திணித்துவருகிரர்கள்.
                 பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் செய்ய வேண்டிய முக்கியமான பணி இதுதான்.  முதலில் குழந்தைகள் என்ன செய்ய விரும்பு கிறார்கள் என்ற அவர்களுடைய விருப்பங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் . அந்த விருப்பங்களை ஊக்குவித்து அந்த விருப்பங்களை நிறைவேறுவதற்கு தங்களால் ஆனா உதவிகள் அனைத்தையும் , அவர்கள் செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தைகளிடமிருந்து ஆக்கப்பூர்வமான , முழுமையான பரிபூரணம் நிறைந்த நல்ல செய்கைகள் மலர்ந்து, கெட்டுவிட்டிருக்கும் உலகச் சூழ்நிலையை தூய்மை படுத்தும். 
                  இதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து செயல் பட்டால் , மாணவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போவது முற்றிலும் நின்றுவிடும் .              
                

வாழ்க்கை வசந்தமாகும்

 வாழ்க்கை வாழ்வதற்க்கே ! 
 வாழ்ந்து பார் ,
 வாழக் கற்றுக் கொள்வாய் !


 வாழ்க்கை வசந்தமாகும் 
 வசை பாடுவதை நிறுத்தி , 
 வாய்ப்புகளை தேடிச்செல் !
 
 வாழ்க்கை வளமாகும் 
 எண்ணங்களை வண்ணமாக்கு! 
 எண்ண வாசலை திறந்து வை 
 வாழ்வு சொர்க்க வாசலாக மாறும்! 

  கனவு காண் ! 
  கனவே வாழ்வாகி விடாமல் 
  நினைவுகளாக்கும் 
  முயற்சி மேற்கொள்!

  உறவுகளை நேசி 
  உரிமை கொடுக்கும்
  உனக்கு உயர்வு!

  வாழ் ! வாழ்வாய் !
  வானம் வசப்படும் 
  பூமியும் சொர்க்கமாகும் 
  நிலவும் சோறுட்டும்
  வீட்டு முற்றத்தில் 
  நட்சத்திரங்கள் நடனமாடும் 
  நம்பிக்கை ஒளியூட்டும் 
  வாழ்வை நேசி ! 

Sunday, December 27, 2009

கற்றல் திறன்



         "காயம்படுகிறவர்கள் வாழ்கிறார்கள். பின்னடைகிறவர்கள் மரணிக்கிறார்கள்."  என்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தி.  பட்டால் தான் புத்திவரும் என்பது பழமொழி .
                                                                                                                                                                              
      
       இன்று  குழந்தைகள் பட்டறிவு இன்றி தானாக கற்கிறார்கள் என்ற வாதம் இருக்கிறது !
செயல்வழி கற்றல் நம் மாணவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம்.

       இன்று  தினமலர் பேப்பரில் வந்துள்ள கட்டுரையில்  '  மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது'.
  
           செயல் வழி கற்றல் வந்ததில் இருந்து மாணவன்  தன் அறிவு
திறனுக்கு ஏற்றவகையில் யாருடைய வற்புறுத்தலும் பயமும் இன்றி ,தன் சக  மாணவன் துணையுடன்  கற்கிறான் மற்றும் ஆசிரியர் கற்றல் சுழலை
 ஏற்படுத்தும் நபராக செயல்பட்டு மாணவனை தன் போக்கில் காயம் பட ( தவறுகள் திருத்த)  செய்வதன் மூலம் , மாணவனை நல்ல அறிவுள்ளவனாகா  வாழச்செயகிறார்.


முந்தய    பாடமுறையில்  மாணவர்களுக்கு  மொத்தமாக
கற்றுத் தரும்போது சில  மாணவர்கள் பின்னடைய நேரலாம் .
இப்பின்னடைய்வு மாணவர்களை படிப்பை விட்டு மரணிக்கச்செயயலாம் .

ஆகவேதான்  முந்தய காலங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருந்தார்கள் ,
இன்று மிகவும் குறைவு .
              மாணவர்கள் கட்டாயப்படுத்துதல் அவனின் கற்றல் திறனை குறைக்கச் செய்யும் என்பது உண்மை . ஆனால் தற்போதைய செயல் வழி கற்றல் முறை மாணவனை கட்டாய படுத்தி அறிவை திணிக்கவில்லை . எது மாணவன் படிப்பை இனிக்கச் செய்து கற்றல் குறைப்பாட்டை நீக்குகிறது. கற்றலை இனிமை ஆக்குகிறது .

Saturday, December 26, 2009

சாலை விதி மீறல்

மதுரையில் ட்ராபிக் ஜாம் அதிகமாகி விட்டது ! அதற்கான காரணம் மதுரை வாசிகளின் சாலை விதி மீறல் தான் என்பது மிகவும் தெளிவாகிறது .
         உதாரணத்திற்கு நான் பீ பீ குளம் அருகில் வந்து கொண்டு இருந்தபோது , பிரதான சாலையில் மிகவும் கவனமாக என் முன்னாள் ஒரு கார் சென்றுகொண்டு இருந்தது.  பீ பீ குளம் அருகில் இரு புறத்திலும் கடைகள் உள்ளன , அக் கடைகளுக்கு முன்னால் அனைத்து தரப்பு வாகனகளும் பார்கிங் செய்யப்  படுகின்றன. 
         பெட்டிக்கடையில் ஒரு ஐம்பது வயது டைய பெரியவர் , கடையில் வார இதழ் , சில பொருள்கள் வாங்கி கொண்டு , பிரதான சாலையின் வாகனத்தை பார்க்காமல் தன்னுடைய வண்டியை அப்படியே பின்னால் நகர்த்தினார்.. கவனமாக வந்த கார் , ஹோர்ன் ஒலித்தும் , கவனக்குறைவால் மீண்டும் வண்டியை பின்புறம் நகர்த்த , லேசாக இடித்தது .
          அதைவிட முக்கியம் என்னவென்றால் , தடுமாறி கீழே விழ , கடைகாரர்கள் மற்றும் கடைகருகில் நின்றவர்கள் எல்லாம் கார் ஓட்டுனரை , திட்டுயதுடன் அடிக்கவும்  
சென்றனர் , பயந்த டிரைவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றான்.  உடனே கடைக்கு அருகில் இருந்த தடித்த நபர் வண்டியை எடுடா , அவனை பிடிக்க , என கூறிக் கொண்டு பைக் எடுத்து விரட்டினான் .
           அதுவரை விழுந்த அந்த நபரை யாரும் தூக்க வரவில்லை , பின்னால் வந்த நான் , வண்டியை நிறுத்தி தூக்கிய பின் வந்தது , கூட்டத்தில் இருந்த அதி புத்திசாலி ,"சார் , வண்டி நம்பர் இந்தாங்க " .  கடைசி வரை யாரும் அவர் வந்தது தவறு என எடுத்து கூறவில்லை . ஏன் என்றால் யாருக்கும் சாலை விதிகள் தெரியவில்லை, பிரதான சாலையை பார்த்து , வண்டியை அவர் எடுத்து இருந்தால் , அவ்விபத்து நிகழ்ந்து இருக்காது.
            மதுரை மத்திய மந்திரி திரு மு.க. அழகிரி அவர்களின் முயற்சியால் சாலைகள் அகலப் படுத்தப் படுகின்றன . தினமலர் முயற்சியால் போஸ்டர் இல்லா தூய்மையான நகரமாகவும் , சாலைகள் விரிவுபடுத்தியும் , சாலையின் குண்டும் , குழியும் சரி செய்யப்பட்டு வருகின்றது . மதுரை தூய்மை படுத்தப்படுகிறது. 
             இருப்பினும் , தினம் அங்காங்கே விபத்துகள் நடந்துக் கொண்டு தான் இருக் கின்றன, ஏன் எனில் , யாரும் சாலை விதிகளை மதிப்பதில்லை, கவனம் காட்டுவதில்லை . மதுரையில் காவல் துறை ஹெல்மெட் அணிய சொல்லி ஓய்ந்து போனார்கள் .  காவல் துறை தன் கடமைகள் செய்தலும் ,பொது மக்கள் திருந்தி சாலை விதிகளை மதித்தால் மட்டும் விபத்துகளை தடுக்கமுடியும் .
             தமிழக கல்வித்துறைக்கு அன்பான வேண்டுகோள் , வரும் சமச்சீர் கல்வி திட்டத்திலாவது சாலைவிதிகள் , விபத்து முதலுதவி போன்ற பாடம் , மூன்று அல்லது நான்காம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் .                  
               சாலை விதிகள் மதிப்போம் , சாவை தடுப்போம் . 

Thursday, December 24, 2009

நட்பு

நட்பு
நம்பிக்கையின் நங்கூரம்
கரை தொடும்
அலை போல்
உன் இதயம்
தொடும் !

நட்பு
தீமை நீக்கி
நன்மை தேக்கி
பண்பை பெருக்கி
பகைமை அகற்றும்!

நட்பு
ஆயில் உள்ளவரை
அசை போடச்
செய்து இதயத்துக்கு    
இனிமை ஊட்டும்!

கல்வி

கல்வி  உன்
 நிழல் போல்
 தொடரும்  கடவுள் !

கல்வி உன்
நல்லது  கெட்டது  
சொல்லும் நண்பன் !

கல்வி உன்
புகழ் பரப்பும்
செயற்கைக்கோள் இணைப்பு !

 கல்வி உன்
 கனவை நினைவாக்கும்
அற்புத சக்தி !


கல்வி உன்
ஆனந்தத்தை பெருக்கும்
அறிவு ஊற்று !

கல்வி உன்
உள் அழகை 
செதுக்கும் உளி !

இனி மேலாவது
தயவு செய்து
படித்து களி !

Friday, December 18, 2009

ஒருவேளை உணவு

கல்வி கனவாகியது
கல்வி ௯டங்கள்
காசாகின !

பசி படுத்தியது
கற்பு கரைந்தது
கால்வயிறு நிறைந்தது!

கால்வயிற்று கஞ்சிக்கு
பிளட்பர மங்கை
பணக்கார மெத்தையில் !

வசதி தேடி
வழி மாறி
சிறை கைதியான  தந்தை
சிறகு  ஓடிந்தன் மகன்!
சிதறியது கனவு
சிந்தனையெல்லாம்
ஒருவேளை உணவாகியது!
















   

கடல்

தொட்டது அலை
விட்டது கவலை!
இது இயற்கை .

மனம் பட்டென்று
பட்டது ,சுட்டது
இத்தனை நாளும்
இனிமை உணரவில்லை ?

கடல் உப்பு
கரைந்தது என்
கண்ணீர் !
கலைந்தது என்
கலக்கம் !

கடல் அழகை
நடந்து பார்
ரசித்து  பார்ப்பாய் !
கால் நனைத்து
பார் மறப்பாய்
கவலை  !

மீண்டு மீண்டெழும்
அலை கற்றுத்தரும்
கலை  முயற்சி
திரு வினையாக்கும் !

முத்தமிட்டு செல்லுமலை
சொல்லிவிட்டு  செல்லும்
 வாழ்க்கை பாடம்
வசந்தத்தை தேடித்தரும்!


கவிதை
 கடல்

Tuesday, December 1, 2009

எய்ட்ஸ் தினம்



இன்று உலக எய்ட்ஸ் தினம், டிசம்பர் 1. எய்ட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எதோ கெட்டவார்த்தைப் போல் உணர்கிறார்கள்! நானும் என் நண்பர்கள் , முதியவர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் என அனைவரிடமும் இதைப் பற்றி பேசியுள்ளேன், அனைவரும் வயது வித்தியாசம் இன்றி வெட்கப்படுகிறார்கள் அல்லது “சார் வேறு எதையாவது பேசுவோமா ? இதெல்லாம் நமக்கு எதுக்கு சார்?”  என மழுப்பலானப் பதிலைத் தருகிறார்கள்.
  
     ஏன் இந்த வெட்கம் ? ஏன் இந்த பதற்றம் ?தமிழகம் இன்று எய்ட்ஸில் முதலாவது இடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.!


நேற்று மதுரை தினமலரில் ஒரு செய்தி படித்தேன், அதில் மூன்று பெண்கள் விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடச் செய்ததாக செய்தி வந்திருந்தது. இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் புரோக்கர் பங்கு கொடுக்கவில்லை என்பதால் போலீஸ் ஸ்டேசன் வந்துள்ளனர்.


தங்களால் எய்ட்ஸ் பரவுகிறது என்றதொரு   பதற்றம்  வரவில்லை! பங்கு அதிகமாக சம்பாதிக்கிறான் தன்னை வைத்து பணக்காரனாக இருக்கிறான் என்பாதால் வந்தப் பிரச்சனை ! இவர்களால் இனி யாருக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என உதவிய தொண்டு நிறுவனத்தை இங்கு பாராட்டியே ஆக வேண்டும். சபாஷ்!


 Where to fix the sex in schools?   என்பது தமிழகத்தில் மிகப் பெரியப் பிரச்சனை !
 என்னைப் பெருத்தவரை எந்த நல்லப் பண்பாக இருந்தாலும் அது தொடக்கக் கல்வியிலே தான் கொடுக்கப் பட வேண்டும். அப்போது தான் அது பசுமரத்தாணி போல் நன்றாகப் பதியும். திருடக்கூடாது, பொய் பேசக் கூடாது, பிறர் பொருள் மீது ஆசை வைக்கக்கூடாது, கண்ட இடங்களில் குப்பை போடக்கூடாது, சக மாணவனிடம் சண்டைப் போடக்கூடாது, புத்தகங்களை கிழிக்கக்கூடாது, உடை நன்றாக துவைத்து அணிய வேண்டும், எடுத்தப் பொருளை எடுத்த இடத்திலே வைக்க வேண்டும் (இப் பண்பு செயல் வழிக் கற்றலில் அட்டையை டீரே யில் எடுத்து , குரூப்பில் அமர்ந்து , அந்த குரூப்பிற்க்கு தகுந்த மாதிரி ஆசிரியர் உதவியோ அல்லது சக மாணவன் உதவியோ பெற்று, நன்றாக படித்து , பின் எடுத்த டீரே யில் அந்தக் கார்டை மீண்டும் வைப்பதால்தன்னை அறியாமலே அப்பண்பைப்  பெறுகிறான்) போன்ற பண்புகளை கற்றுத்தருகிறோம்.
தொடக்கக்கல்வியில் ஏன் பாலியல் கல்வியை  கற்றுத்தரக்கூடாது?


கலாச்சாரம், பண்பாடு என்று கூறி நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறோம்! ஒன்றாம் வகுப்புப் படிக்கும் பையன் எத்தனை பள்ளிகளில் சக மாணவியை தன்னையறியாமலே கட்டிபிடிக்கிறான் ? மனச்சாட்சியை அடகுவைக்காமல் கூறுங்கள். எத்தனை முறை நாம் டி.வி பார்க்கும் போது காதலிக்கும் காட்சி வரும் போது “அம்மா ச்சீ அசிங்கம் எனக் கூறி ரிமோட்டை வைத்து வேறு சேனல் மாற்றுவது உண்டு. என் கேள்வியெல்லாம் பாலியல் பற்றி அறிவு அல்லாமலா இது போல் நடக்கிறது?


மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் இந்த பாலுணர்வு இயற்க்கையிலே மனதில் பொதிந்துக் கிடைக்கிறது. இதை நாம் அமுக்கப் பார்க்கிறோம், இந்த அமுக்கம் தான் பிற்காலத்தில் காமமாக வெளிப்படுகிறது . அந்தக் காமத்தையும் முறையான வழியில் செலவிடத் தெரியாமல் , கற்பழிப்பு , கொலை, கொள்ளை என வழிமாறி செல்ல துண்டும் . முடிவில் எயிட்ஸ் நோயாளியாக மாறி வாழ்க்கையை  தொலைத்து அவதிப்பட நேரிடுக்கிறது. 
இன்று தகவல் தொடர்பு சதனங்கள்,சிறுவயதிலேயே அனைத்து  விசயங்களையும் எளிய முறையில் கற்றுத்தருகிறது. பல மாணவர்களுக்கு அவர்கள் வாழிடங்களே வழிய வந்து வசதியாக பாலியல் சம்பந்தமான விசயங்களைக் மோசமான முறையில் கற்றுத்தருகிறது. இது யாவரும் மறுக்க முடியாத உண்மை . அப்படி இருக்க நாம் இன்னும் என் நம் குழ்ந்தைகளுக்கு பாலியல் கல்வியை தொடக்கக் கல்வியில் தரக் குடது? 
கல்வியாளர்கள் சிந்திக்கவும்! கட்டிப்பிடித்தல், மாணவிகளுடன் விளையாடுதல், மாணவிகளுடன் பழகுதல் , காதல் பற்றி பேசுதல் , காதலித்தல் , ஆண், பெண் பேதம் பேசுதல் , பெண்ணுடன் கைகுலுக்குதல் போன்றவற்றை நம் சமுகம்  தவறுதலாகவே சித்தரிக்கின்றது. 
ஆகவே, தான் பல பள்ளிக் ௯டங்களில் கழிப்பறை  சுவற்றில் மாணவர்கள்  ஆசிரியரைப் பற்றியும் , மாணவிகளைப் பற்றியும் தவறான முறையில் எழுதிவைக்கின்றனர்.  சிறுவயதிலேயே இது பால் வேறுபாடுதான் வேறு ஒன்றும்மில்லை, பால் உறுப்புகளை சிறுநீர் கழித்தப்பின் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், கட்டிபிடித்தல் என்பது தவறானதன்று, ஆனால் தவறான உணர்வுகளுடன் பிடித்தல் குடாது . அனைவரும் நம் சகோதர, சகோதிரிகள்  தவறானக் கண்ணோட்டம்  நம் வாழ்வை சீரழித்து விடும் என பொறுமையாகக் ௯ற வேண்டும். சற்றுக் கடினம் தான் என்ன செய்வது நம் குழந்தைகளை நாம் தானே காப்பாற்ற வேண்டும்.
என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் தம் வகுப்பில் வயதுக்கு வந்து , அதாவது பூப்பெய்தும் குழந்தைகளை என்னிடம் அழைத்து வந்து, அந்த விஷயத்தை சொல்ல (அச்சம் என்பதா? கூச்சம் என்பதா?) தயங்குகின்றனர் . அதுவும் தற்காலத்தில் நான்கு,  ஐந்தாம் வகுப்பில் பூப்பெய்துவது என்பது சகஜம் ஆகிவிட்டது .  காமுகர்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்ற , பாலியல் கல்வி மிகவும் அவசியம் . தொடக்கக்கல்வியிலே அதனைத்  தருவது சாலச்சிறந்தது. 
சிறுவயதில் சிறுவர்கள் பால் உறுப்பை அடிக்கடி தொட்டுக்கொண்டு இருப்பதை தவறு என உணர்த்த வேண்டும் . சக மாணவியின் அங்க அவையங்களை பார்ப்பதை தவறு என்று உணர்த்துவதுடன் , உனக்குப் போன்றே அவளுக்கும் உறுப்புக்கள் உள்ளன என உணர்த்தவேண்டும் .    
                                                    
எய்ட்ஸ்  பற்றிய விழிப்புணர்வுகளை தொடக்கக்கல்வியிலே தருவதுதான் மிகவும் சிறந்தது. எச்.ஐ.வி. பற்றி டாக்டர் லுக்   மாண்டேக்ணன் என்ற விஞ்ஞானி பிரான்சில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்தில் கண்டுபிடித்தார் என போதிப்பதுடன் எய்ட்ஸ் நோயாளிக்கு போதுமான நோய் எதிர்ப்புதன்மையை ஏற்படுத்துவதுடன் , சமுகம் அவர்களை ஒதுக்காமல் பாதுகாத்து , பராமரிக்க நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். எய்ட்ஸ் ஒழிப்போம்! முறையான பாலியல் கல்வியினை தொடக்கக் கல்வியிலே தந்துவிடுவோம்!          

Monday, November 30, 2009

ஆஸ்துமா


ரோட்டில் கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று பார்க்க நானும் பைக்கை நிறுத்தி இறங்கி பார்த்தேன். பள்ளி வயதுடைய பையனின் நெஞ்சு, முன்னும் பின்னும் இழுத்து மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருந்தான்.

கூட்டத்திலிருந்த பெரியவர் “அட வழியை விடுங்கப்பா .. காத்த மறைக்காதிங்கப்பா....ஆஸ்த்துமா போல இருககு... சூடா ஒரு டீக் குடுங்கப்பா... ” என்றார்.
“தம்பி ,மாத்திரை எதுவும் வைச்சிருக்கியா ?”
அவன் சட்டைப் பையைக்காண்பித்தான். சூடான டீயுடன் அவன் வைத்துள்ள மாத்திரையைக் கொடுத்தார். சிறிது நேரத்தில் எல்லாம் மறைங்சு போச்சு !
அவன் இரண்டாவது படிக்கிறான் என்பதை அவனின் கிழிந்த பைக்குள் இருந்து புத்தகம் காட்டியது. எனக்கு ஆச்சரியம்! இவ்வளவு சிறிய வயதில் ஆஸ்த்துமா வா ! எப்படி? என வியப்பில் ஆஸ்துமா பற்றிய விவரங்களை பிறரிடமும் , புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன்.
‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் மோட்டார் ரூமில் புகையால் மூச்சுத்திணறலில் இறந்த சக்தி கதாப்பாத்திரம் என் நினைவிற்க்கு வந்தது.
ஆஸ்துமா என்பது மூச்சிரைப்பு நோய் ஆகும். இதற்கு வயது வித்தியாசம் கிடையாது. சாதி, மத , நிறப் பேதம் கிடையாது . ஏழை, பணக்காரர் வித்தியாசம் கிடையாது. இது ஒருவர்க்கு தொடர்ந்தும் வாழ்க்கை முழுவதும் வரலாம். இளம் வயதில் வந்து நாளடைவில் மறையலாம் அல்லது அவ்வப்போது வந்து தொல்லைக் கொடுக்கலாம்.
உலகில் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகிறார். சுவாசிப்பை சிரமப்படுத்தி நுரையீரல் இயக்கத்தைப் பாதிக்கிறது . நுரையீரலில் இருந்துசுவாசக் குழாய் வழியாக நாம்சுவாசிக்கும் காற்று உள், வெளி சுவாசத்தை ஏற்படுத்துகிறது. சுவாசக் குழாய் அகலாமாகஇருந்தால் தான் காற்று நுரையீரலுக்கு சென்று சுவாசம் தடைப்படாமல் நடைப்பெறும்.
சுவாசக்குழாயில் வேண்டாத துகள்கள் , தூசிகள் அதாவது அன்னியப் பொருள்கள் நுரையீரலுக்குச் செல்வதை தடுக்க , இயற்க்கையாக சுவாசக் குழாயில் சளி, கபம் சுரக்கிறது. அன்னியப் பொருள்கள் இக்கபத்தில் , சளியில் ஒட்டிக் கொண்டு ,தூசு அற்ற காற்று நுரையீரலுக்கு செல்லும்.
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு சுவாசக்குழாய் சுவர் சுருங்கி , சுவாசித்தலை இந்த அன்னியப்பொருட்கள் தடுக்கும். மேலும் சளி ,கபம் வருவதும் அதிகமாகும். சுவாசககுழாய் சுருங்குவதால் இருமல் ஏற்படும். தொடர் இருமலால் சுவாசப் பாதையில் வீக்கம் , புண் ஏற்படும்.
தற்போது மழை அதிகமாகப் பொழிகின்றதே? அதனால் ஆஸ்துமா அதிகமாக இருக்குமா? அப்படியும் கூறிவிட முடியாது.சிலருக்கு குளிர்ந்த காற்றுபடுவதால் சுவாசக் குழாய் சுருங்கி ஆஸ்துமா ஏற்படலாம்.
சிலருக்கு வெயில் காலத்திலும் ஏற்படலாம் ! ஏனெனில் காற்றில் மகரந்த தூளின் அளவு அதிகமாக இருப்பதால் அவை சுவாசப்பாதையில் அலர்ஜி , ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது .
அலர்ஜியால் ஏற்படும் ஆஸ்துமா தான் அதிகம். ஒவ்வாமைப் பொருட்களினால் சுவாசிப்பு மறுப்பு ஏற்படுகிறது.
ஒருசிலருக்கு படுக்கை அறைக்குள் மட்டும் சென்றால் அலர்ஜி ஏற்படும். இருமல் வரும். மூச்சுதிணரல் வரும். அதற்கானக் காரணம், படுக்கையில் உள்ள நுண்கிருமிகள் ஆகும்.
தூசி,அழுக்கு , ஒட்டடை ஆகியவற்றின் மூலம் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். ஒருசிலருக்கு மோட்டார் புகை, சிகிரெட்புகை , பொயிண்ட் வாடை , வாசனைத்திரவிய வாடை போன்றவற்றால் அலர்ஜி ஏற்பட்டு ஆஸ்துமா உண்டாகலாம்.
ஆஸ்துமாவினைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சில் ஒர் அழுத்தம் ஏற்படுவதைப் போன்று உணர்வுடன் கூடிய மூச்சிரைப்பு ஏற்பட்டால் ஆஸ்துமா பாதிப்புள்ளது அறியலாம்.
ஒருசில பொருட்களை நுகர்ந்தால் இருமல் வரும், தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்டால் அது ஒவ்வாமைக்கான ஆஸ்துமாவிற்கான அறிகுறி.
அறிவியல் ரீதியாக நம் உடம்பின் ஊன் நீருடன் ஒவ்வாமை என மருத்துவரால் அறியப்பட்ட பொருட்களைக் கொண்டு ஆராயும் போது ஏற்படும் மாற்றங்களை கொண்டு அறியலாம்.
ஆகவே, ஒவ்வாமைப் பொருட்கள் உள்ள இடங்களில் இருந்து ஒதுங்கி யிருப்பதன் மூலம் ஆஸ்துமாவைத் தவிர்கலாம்.
மருத்துவர் ஆலோசனைப்ப்டி, பிராங்கோ டை லேட்டர் (காற்று குழாய் விரிவடைய ) , கார்டிகோ ஸ்டீராய்ட்ஸ் (தீவிர ஆஸ்துமாவுக்கு) , ஆண்டி ஹீஸ்டமீன்(பிற உறுப்புகளுக்கு புண்பரவிடாமல் தடுக்க) , சோடியம் குரோமோ கிளைகேட் (ஆஸ்துமா தாக்குதல் தொடராமல் பாதுகாக்கிறது) மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
சரியானப்படி , சுவாசப் பயிற்சி செய்வதான் மூலம் நாம் ஆஸ்துமாவை நிறுத்தலாம்.
ஆஸ்துமா ஒவ்வாமையால் தான் ஏற்படுகிற்து என்பதைப் புரிந்து செயல் படுவோம். மனம் ஒரு பொருளை விரும்பாமல் அதை நாம் கட்டாயப் படுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்தோமானால், இரத்தக் குழாய் அடைத்து உடனடி இறப்பு எற்படும். இதன் மருத்துவ பெயர் ‘அனாபைலாக்ஸிஸ்’ என்ப்படும்.
ஆம், மனசு மிகப் பொரியது, மகத்தானது , அற்புதசக்திப் படைத்தது . ஆகவே, மனசை கோணாமல் வைத்துக் கொள்ள வேண்டும். மனசு ஒடிச்சுப் போச்சுன்னா வாழ்க்கை முடிந்துப் போச்சு ன்னு அர்த்தம். தயவு செய்து நம் குழந்தைகள் மனசு கோணாமல் , அதை புரிந்து எதையும் திணிக்காமல் பக்குவமாக நடந்தால், அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். என்றும் அவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் .

Tuesday, November 24, 2009

தனிமை


தனிமை
மனிதனை மாமனிதனாக்குவது, மனிதன் தன் இனத்துடன் மணிகணக்கில் செலவிடும் நேரம் அதிகமாகும் தருணங்கள் ஆகும். சற்று எண்ணிப்பாருங்கள் , சக்கரத்தில் ஆரம்பித்த மனித முன்னேற்றம், இன்று வரை தொடருகிறது என்றால், அது அவன் மனித சந்ததிகளுடன் கொண்டுள்ள தொடர்பும், அவர்கள் மீது வைத்துள்ள பற்றுதலும் ஆகும்.
மனிதன் தன் படைப்புகளை தனிமைப்படுத்தி, தனக்குத் தானே ரசித்து பிறருடன் தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் உலகம் என்னவாயிருக்கும்? எண்ணிப் பாருங்கள். சக்கரத்துடன் முடிந்திருக்கும். ஒருவருக்குள் ஒருவர் தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதால் தான் சக்கரத்திலிருந்து சட்டிலைட் வரை சாத்தியமாயிற்று.
மனிதன் தன் இயல்பாகவே அனைவருடனும் ஒத்துவாழவே விரும்புகிறான். சிந்துசமவெளிக் காலத்தில் இருந்து அவன் கூட்டமாகவே வாழக் கற்றுக் கொண்டுள்ளான். அக்கூட்டத்துக்கு தேவையான அனைத்தும் அவன் ஒன்றாக இணைந்து பேசி முடிவெடுத்துள்ளான். சந்தோசம், துக்கம், கோபம் ஆகிய அனைத்தும் அவனால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. தனித்து என்றும் விடப்பட்டவனாக இல்லை, என்றும் கூட்டத்துடனே இருந்தான்.
மாறிவரும் உலகில் இன்று கூட்டுக் குடும்பங்களைக் காண முடிவதில்லை. குடும்பம் என்றால் தாய், தந்தை, ஒரு மகனோ அல்லது மகளோ என்ற நிலையில் , குழந்தைகள் தனிமை நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.
தனிமை என்றும் இனிமையாவது இல்லை. இனிமை என்றும் தனிமையானதில்லை. தனிமைக் கனவுகள் எப்போதும் நல்லவைகளாக இருந்ததில்லை. நல்லவைகள் என்றும் கனவுகளாக இருந்ததில்லை. நல்லக்கனவுகள் விஞ்ஞான படைப்புகளுக்கு உதவியாக இருந்துள்ளன. உ.ம். பென்சின் கண்டுபிடிப்பு .நியூட்டனின் தனிமை சிந்தனையை தூண்டி , ஆப்பிள் கீழே விழுந்தவுடன், அதற்கு காரணம் புவியிர்ப்பு விசை எனக் கூறச் செய்தது. ஆக, சில நேரங்களில் மட்டும் தனிமை சரியான சிந்தனையைத் தூண்டி , சிறந்த பயன்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதன் தனிமைப்படுவது பல நேரங்களில் அவனின் தனிப்பட்ட கவலைகளுக்காக மட்டுமே. ஆனால், எல்லாரும் ஒவ்வருவரின் கவலையில் பங்கு கொள்ளவே விரும்புகின்றனர். கவலையில் தனிமை விரும்பும் எவரும் தன் கவலையை அடுத்தவருடன் பங்கு போடுவது கிடையாது, குறைந்த பட்சம் கூற விரும்புவதும் கிடையாது. இப்படிபட்டத் தனிமை, நாளடைவில் அவனை தற்கொலைக்கு தூண்டுவதாக அமைந்துவிடும்.
புத்தரின் தனிமைப் பயணம் உலகக் கவலை நீக்கிப் புறப்பட்டதாகும். தனிமை தனக்காக இல்லாமல் , பொதுநலம் நாடுவதாக இருப்பின் , நாம் தனிமை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தனியாக சிந்தித்தல் பல நேரங்களில் பண்பு நலன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.
படைப்பாளியின் தனிமை கற்பனையைத் தூண்டி சிறந்த படைப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. படைப்புகள் அவனின் சிறந்த கற்பனைத் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்தால் , படைப்பாளி அதேப் போன்ற தனிமையை நாடுகிறான்.
இன்று குழந்தைகள் தனிமையை நாடினால் நாம் பயப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் , தனிமையில் வளர்க்கப்பட்ட நம் குழந்தைகள் எப்படி நம்மை நாடாமல் இருக்க முடியும் ? ஆக, அவனுக்கோ அல்லது அவளுக்கோ ஏதோ பிரச்சனை இருக்கப் போய் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து தனிமையை நாடுகின்றனர். உடனே அவர்களை அழைத்து பேசி , அதற்க்கானத் தீர்வை நாம் எடுக்க வேண்டும்.
செய்திதாள்களில் வரும் பாலியல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் இத் தனிமைத் தான். தனிமை மிகவும் கொடியது. தனிமை நம்மில் பலரை தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும்.
பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பல சமயங்களில் சேர்ந்து படிக்கச் செய்வதன் நோக்கம் இது தான். கூட்டாகப் படிக்கும் போது நம் சந்தேகங்களை தீர்வு காண முடியும். சக நண்பரிடம் உதவி பெற முடியும்.
இன்று கல்வியாளர்கள் பலரும் குழுக் கற்றல் முறையை கடைபிடிக்கச் சொல்வதன் நோக்கமும் இது௦தான் . செயல் வழிக்கற்றலின் அடிப்படை தன்மையும் அதுவே. மாணவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து கற்பதன் மூலம் தன் நண்பரிடம் அவனின் சந்தேகங்களை கேட்கிறான். அவன் நாளடைவில் கூச்சம் நீங்கி , ஆசிரியரிடம் தன் ஐயத்தை நீக்க தைரியமாக கேள்விகளை கேட்கும் பண்பு வளர்கிறது.
பள்ளியின் நடைமுறைப் பண்புகள் மாறிவரும் போது, பொற்றேர்கள் ஆகிய நாமும் நம் பிள்ளைகள் தனிமையை நாடுவதைக் கவனிக்க வேண்டும். தனிமை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். தனிமை மௌனம் தவறானது. தற்கொலைக்கு கூடத் தூண்டிவிடும் .ஆரம்பத்திலேயே அதை வளரவிடக்கூடாது. தனிமையில் போன் பேசுவது ,தனியாக சிரிப்பது , தனியாக நடப்பது, யாருடனும் பேசாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை கண்டுப்பிடித்து நாம் உடனே தீர்வு காண வேண்டும்.
வீட்டில் குழந்தைகளுடன் உங்கள் பொழுதுகளைச் செலவிடுங்கள். குழந்தைகளை வாரம் ஒரு முறை உறவினர் வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள். கோவிலுக்கு கூட்டிச் செல்லுங்கள். பார்க் கூட்டிச் சென்று ,அவர்களுடன் அனைத்து விசயங்களையும் பேசுங்கள். ஆலோசனைக் கூறுங்கள். குழந்தகளுடன் குழந்தைகளாக விளையாடுங்கள்.
தனிமை பாசத்துக்கு ஏங்குவதாக இருப்பின் நம் நெருக்கம் பாசத்தைக் கொடுக்கும் . தனிமை பாலுணர்வு சம்பந்தப்பட்டதாக இருப்பின் அது நம்முடன் பழகுவதால் அச்சத்தைப் போக்கி சந்தேகங்களை நீக்குவதாக அமையும். காதல் விசயமாக இருப்பின் நம் நேசம் அவர்களை பேசவும் , நம்முடன் விவாதிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
உங்கள் குழந்தையுடன் பழகுங்கள். பாசத்தைப் பொழியுங்கள் ! தனிமைப் பேயை விரட்டுங்கள்! தவறாது ஆலோசனைக் கூறுங்கள் !

Saturday, November 21, 2009

மதுரைக்காரன்



நான் என் உயிர்தோழியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தன் கணவரிடம் என் பிளாக் பற்றி கூறிய போது, அவர் இனி நான் தொடர்ந்து எழுத கிடைத்த நல்ல வாய்ப்பு எனக் கூறி, மதுரை பற்றி தெரிந்தவற்றைக் கூறவும் அறிவுரைக் கூறியுள்ளார்.


நான் சும்மா இருக்காமல் மதுரை பற்றி நிறையத் தெரியும் எதை பற்றி எழுத வேண்டும் ? என நீங்களே கூறுங்கள் என்றேன். அதற்கு அவர் நாளை சொல்லுகிறேன் என்று புறப்பட்டார்.
மறுநாள் சந்தித்த போது என் கணவர் உங்களிடம் சில கேள்விகளைக் கொடுத்துள்ளார் என கீழ்கண்ட வினாக்களை காண்பித்துள்ளார். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


1. கீழை நாடுகளின் ஏதென்ஸ் எனப்படும் இடம் எது?
2. மதுரையின் சரித்திர காலப் பெயர் என்ன?
3. தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சி எது?
4. காமராசர் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
5. மதுரை அரசு அருங்காட்சியகம் (காந்தி மீயுசியம்) எப்போது எற்படுத்தப்பட்டது?
6. மதுரை மாவட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவிதம் எவ்வளவு?
7. நான்காவது தமிழ் சங்கம் எங்கு, எப்போது உருவாக்கப்பட்டது?
8. வண்டியூர் தெப்பக்குளத்தின் நீளம்,அகலம் எவ்வளவு?
9. சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் எது?


எங்கே முடிந்தவரை விடைக் கூறுங்கள் ? என எனக்கு விடப்பட்ட சவால்களை உங்களுக்கு முன்வைக்கிறேன்.


பொது அறிவு சோதனை போல் அமைந்தாலும் தயவுசெய்து இதுபோன்ற கேள்விகளுக்கு பின் உள்ள இடங்களைப் பற்றி எழுதச் சொன்னதாகக் கணவர் கூறினார் என்றார்.
யதார்த்தமாக அவர் கூறிய ஆலேசனையாக இருந்தாலும், நம்மில் எத்தனை பேர் நம் இருப்பிடம் பற்றி தெளிவான அறிவு படைத்தவாரக இருக்கிறோம்?சிந்தித்துப் பாருங்கள் ! மதுரையிலே பிறந்து வளர்ந்து , பல முறை தெப்பக்குளத்திலே கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அனால் இது நாள் வரை நான் அதன் நீள, அகலம் தெரிந்து கொள்ள எண்ணாதது ஏன்?திருமலை நாயக்கர் காலத்து வரலாறு என அப்போது என் நண்பர்கள் கூறியக் காலத்தும் ஆசை வாரதது ஏன்?


புத்தகத்திருவிழாவில் விளக்குத்தூண் பற்றி கூறிப்பிடும் போது அது பிளாக் பெர்ன் என்ற கலெக்டர் நினைவாகக் கட்டப்பட்டதாக அறிந்தேன். காந்தி மதுரையில் என். எம்.. சுப்புராம் வீட்டில் தங்கியதாகவும் , அது இப்போது மேலமாசி வீதியில் காதி பவன் ஆக உள்ளதாகவும் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


மதுரை என்றவுடன் காந்தி ஆடைத்துறந்த வரலாறு நினைவுக்கு வரவேண்டும்.
தேசம் பற்றிய நேசிப்பு வளர வேண்டும் என்றால் நம் பிறந்த மண் பற்றிய வரலாறு நிச்சயம் தெரிந்து இருத்தல் அவசியம் . தன் மண்ணை நேசிப்பவனே , உறுதியாக தேசத்தை காப்பான். எவன் ஒருவன் தன் தேசத்தை மதிக்கிறானே , அவனே ஒவ்வொரு மனிதனையும் மதித்து மானிடச் சமுதாயம் உலகம் எங்கும் ஒரு தாய் பிள்ளையாக தழைத்திடச் செய்யுவான். இனி ஒவ்வெருவரும் தம் பிறந்த மண்ணின் மகிமை உணர்ந்து மானிடம் வளர நம் பிள்ளைகளிடம் வரலாறு கூறுவோம்.


மேலே கொடுக்கப் பட்டுள்ள வினாக்களுக்கு விடை: 1. மதுரை 2. கரம்பவனம் 3. மதுரை மாநகராட்சி 4. மதுரை 5. 1976 ௦6. 78.65% 7. 1901 8. நீளம் 1000 அடி அகலம் 950 அடி 9. மதுரை


வரலாறு தொடரும் ....

சாவித்துவாரம்



சாவித்துவாரம்

கல்வி முறையில் சாவித்துவாரம் என்பது மிகவும்முக்கியமான ஒன்று. இது கற்பனைக் குதிரையை தட்டி விட உதவும் திறவு கோல். சாவித்துவாரம் ஒன்றை சார்ட் பேப்பரில் மிகப்பெரியதாக வரைந்து, நாம் நினைக்கும் ஒன்றை கற்பனையாக , அத்தூவரத்தில் பார்த்தால் தெரிவது போன்று வரைந்து காட்ட வேண்டும்.

இது நம் கனவு எப்படிப்பட்டதாக இருக்கிறது? நம் கற்பனை எவ்வளவு உயர்ந்தது என்பதை வெளிப்படுத்த உதவும்.

கருப்பொருள் ஒன்றினை தந்து, அதனை மையமாகக் கொண்டு வரையச் சொல்லும் போது, புதுமையான கற்பனைத் தோன்றும். அது மட்டுமின்றி இந்த புதுமையை நடைமுறைப்படுத்துவதற்கு எற்படும் சிக்கல்களையும், சவால்களையும் விவரித்து பிற மாணவர்களுடன் கலந்துரையடல் நடத்தும் போதும் பல அற்புதமான நடைமுறைகளை நாம் பின்பற்றாமல் இருப்பது புல்ப்படும். நவீன மையமாதல் சாத்தியமாகும்.

நவீன கற்பித்தல் முறையில் இத் துவாரம் கற்பனை வளம் பெருக உதவுவதுடன், நம் கற்பித்தலுக்கு புது இரத்தம் ஓட்டத்தை எற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு மாணவனும் அவனுக்குள் கட்டுக்கடங்காத கற்பனை திறனுடன் பள்ளிக்கு வருகைப்புரிகிறான்.

அவன் கற்பனைக் குதிரைக்கு இத்துவாரம் ஒர் வழித்தடமாக அமைந்து புதிய உலகம் படைக்க உதவும்.
சுற்றுச்சூழல் மாசுவால் பொழிவிழந்து கிடக்கும் இச் சமுதாயத்தை மாணவர்கள் மனசு வைத்தால் சுற்றுபுறம் தூய்மையாகும்.அதற்கு இத்தூவரம் முழுமையாக பயன்படும் என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
நம் வகுப்பறையிலுள்ள மாணவர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து, குழுவிற்க்கு ஆறு முதல் எட்டு மாணவர்களாக அமைத்து, இரண்டு குழுக்களை தற்போது உள்ள வீதிகளையும் , தெருக்களையும் வரையச் சொல்லவும். மற்ற இரு குழுக்களை அவர்கள் எவ்வாறு நவீனப்படுத்த விரும்பிகிறார்களோ அவ்வாறு வரையச் சொல்லவும். பின்பு அவர்கள் வரைந்தப் படங்களை வகுப்பறையில் ஒட்டச் செய்யவும். தற்போது அனைவரையும் அந்த நான்கு படங்களையும் பார்வையிடச் செய்யவும்.

பார்வையிட்டப்பின் அனைவரையும் தங்கள் இருக்கையில் அமரச்செய்து, இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியசத்தை கூறச் சொல்லுங்கள். நிச்சியம் நீங்கள் எதிர்பார்க்கும் பொதுவான கருத்து வெளிப்படும்.
நவீனத் தெருக்கள் சுத்தமாகவும் , சாக்கடை கழிவுகள் இன்றியும் , தெரு விளக்குகள் சோலார் விளக்குகளாகவும் , ஆங்காங்கே குப்பைத்தொட்டிகளுடனும் ,தெருக்கள் அகலமாகவும் ,ரோடுகளை கடக்க பாலங்களும், அண்டர்கிரவுண்ட் வழித்தடங்களும் என புதுப்பொழிவுடன் இருக்கும்.
பழையத்தெருக்கள் வழக்கம் போல் சாக்கடையுடனும், பன்றி, ஈக்கள் மற்றும் மலத்துடனும் , தெருவிளக்குகள் உடைந்தும் , சரிந்தும் காணப்படும்.
இவற்றைப் பார்வையிடுவதுடன் சாவித்துவாரம் முடிவடைந்து போவது இல்லை. அதற்கும் மேல் சென்று, நம் கனவுகள் நிறைவேற அதை எப்படி நிறைவேற்றுவது ? அதற்கான வழிமுறைகள் என்ன ? என்பதை விவாதித்து, அதற்க்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்க்கொண்டு, செயலில் இறங்கச் செய்வது தான் முக்கியம்.

குப்பைகளை அகற்ற நாமே குப்பைத்தொட்டிகள் வாங்கி வைக்கலாம். சோலார் விளக்குகள் அமைக்க ஊராட்சி மன்றங்களை நாடுவது, தெருச் சாக்கடையை போக்க , நம் வீட்டுச் சாக்கடையை பாதளச் சாக்கடையுடன் இணைப்பது, புது லைன் அமைத்து சரி செய்வது , சிமெண்ட் சாலைகள் அமைக்க தொண்டு நிறுவனங்கள் நாடுவது என முடிவெடுத்து அதை நடைமுறை படுத்துவது ஆகும்.
சாவித்துவாரம் இது போன்று பள்ளிச் செயல்பாடுகளுக்கு மட்டும் அல்ல. நாம் எதையெல்லாம் நவீன படுத்த விரும்பிகிறோமோ அதையெல்லாம் கற்பனை படுத்திப் பார்த்து , அதை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்க்கொண்டு நடைமுறைப்படுத்த உதவும்.
சாவித்துவாரம் அடுத்தவர் வீட்டு நிகழ்வுகளை ஒட்டுக் கேட்க , அன்றாடம் வெட்டிப்பொழுதாய் நம் வாழ்க்கை பேச்சுக்கு உதவி செய்யும் காலம் போய் , இனி வரும் காலங்களில் நம் இளைய சமுதாயத்தி௦ற்௦கு நல்லது செய்வதாக அமையட்டும்.
குறுக்கு சிந்தனைக்கு உதவிய காலம் நீங்கி, இனி நாம் நினைக்கும் மாற்றத்தை எற்படுத்துவதாக சாவித்துவாரங்கள் அமையட்டும். சாவித்துவாரங்கள் சாவா வரலாற்று மாற்றங்களை எற்படுத்தும். சூம்பிக் கிடககும் கனவுகளைத் தட்டி எழுப்பட்டும். நம் கண்ணீர்களைக் கழுவி, நம்மிடம் புன்னகைகளை எற்படுத்தும் திறவுகோலாக சாவித்துவாரம் அமையட்டும். சாவித்துவாரத்தை நடைமுறை படுத்துங்கள் , மாற்றத்தினைக் கூறுங்கள். உங்களுக்காக சாவித்துவாரத்தில் கனவுகளுடன் நான்.

Sunday, November 15, 2009

குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிகள்

குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிகள் பலவற்றில் நான் கலந்து கொண்ட போது ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நேருவின் பிறந்த நாள் என்பதுடன் முடிவடையாமல், மாணவர்களின் திறமைகளின் வெளிப்பாடக அமைந்ததில் மதுரை பொருமை சேர்த்து இருந்தது.
மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுரை, கவிதை, பேச்சு, நடனம், பாட்டு என பல விதங்களில் திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களின் ஆளுமையினை வெளிக்கொணர்ந்தனர். இருப்பினும் இத்தருணம் குழந்தைகளை ஆசிரியர்கள் மகிழ்விக்க வேண்டும்.ஆகவே, இத்தினத்தில் ஆசிரியர்கள் தான் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி , மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுடன், அறிவுகண் திறந்து, தேசியம் பற்றி சிந்தனையைத் தூண்ட வேண்டும்.
அன்று உலக சக்கரை நோய் தினம் என்பதையும் நினைவுப் படுத்துவதுடன், உணவு முறை, உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். ஆரோக்கியமான மனிதனாலே மட்டும் தான் ஆரோக்கியமான உலகத்தை படைக்க முடியும்.
நேருவின் வாழ்க்கை நிகழ்வுகளை நாடகமாகவும், நடனம் மூலமாகவும்,நல்ல சுவையான பேச்சின் வாயிலாக விளக்குவதுடன்,அவரின் பண்பினால் அவர் பெற்ற பயனையும் விளக்கி , அப்பண்புகளைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.
நேருவின் வாழ்வில் நடைப்பெற்ற இரு நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து அப்பண்புகளை நம் இளைய சமுதாயம் பொற்று நாடு நலம் பெற முயற்சிப்போம்!
நேரு அவர்கள் தன் அலுவலகத்தில் இருந்து திடீரென்று காணாமல் போய்விட்டதாக செய்தி பரவ , அனைவரும் டெல்லி முழுவதும் தேடுகின்றனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் சரியாக நாற்பது நிமிடம் கழித்து கிடைக்கிறார்!
அவர் அலுவலகத்தின் லிப்ட் ஆப்பிரேட்டர், லிப்ட்டை சரி செய்து, லிப்ட் இயங்குகிறதா? என சரிப்பார்க்க வரும் போது,லிப்ட்டில் பாரத பிரதமர் மாட்டி இருப்பது தெரிய வந்தது. அனைவரும் லிப்ட் ஆப்பிரேட்டரை நேரு தண்டிக்கப் போகிறார் என நினைத்தப் போது , நேரு அவரைப் பாராட்டி , அவரின் செயலை ஊக்கப் படுத்தினார்.என்ன வியப்பாக இருக்கிறதா? அப்படி என்ன நடந்தது?
அந்தநாற்பது நிமிடமும் அந்த லிப்டில்லிப்ட் ஆப்பிரேட்டர் வைத்த புத்தகத்தை வாசித்துள்ளார். நாற்பது நிமிடத்தையும் பயனுள்ளதாக கழித்துள்ளார். அந்நிகழ்விற்கு பின் லிப்டில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கவும் கட்டளை யிட்டுள்ளார். இதன் மூலம் புத்தகத்தின் அருமையினை உணர்த்துவதுடன் , அதனால் பக்குவப்பட்ட நேருவின் மனது லிப்ட்ஆப்பிரேட்டரை தண்டிக்காமல் அவரை ஊக்கப்படுத்தியுள்ளது.
இரண்டாவது சம்பவம், பக்ரநங்கல் அணையை திறக்கும் நிகழ்வின் போது , அந்த அணையை கட்டியவர்களில் ஒருவர் தான் அந்த அணையை திறக்க வேண்டும் எனக் கூறி, அங்கு இருந்த கொத்தனாரைத் திறக்கச் செய்தார். உழைப்பாளிகளை மதித்ததால் தான் அவர் இறக்கும் வரையில் பாரதப்பிரதமாரக இருந்தார்.
இனி வரும் காலங்களில் குழந்தைகள்தினத்தன்று ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு குழந்தைகளை மகிழ்விப்போம்!

Friday, November 13, 2009

குட்டீஸ் கதைக் கேளுங்கள் !
என் ஆசிரிய நண்பர் மணியை பல நாட்களுக்குப் பின் காண நேர்ந்தது. அவரின் மனைவி இறந்துவிட்டதாக என் நண்பர்கள் கூறிய விசயம் ஞாபகத்திற்கு வரவே தயக்கத்துடன் அதைப் பற்றி விசாரித்தேன். அவரும் தயக்கத்துடன் “என்ன உனக்கு தெரியாதா ? ஊருக்கே தெரியும் ... இப்பதான் மூன்று மாதம் கழித்து வெளியே வந்து இருக்கேன்”. “ தப்பா நினைக்கக் கூடாது ... என்ன உடம்புக்கு எதுவும் முடியவில்லையா?”.
“ உனக்கு விசயமே தெரியதா ? அவள் சுசைட் செய்து கொண்டாள்”. “ஏ விளையாடதப்பா...உனக்கு போய் ... அதுக்கு வாய்ப்பேயில்லை... நீ அதிர்ந்து கூட பேசமாட்டியே...” “ ஏய் உண்மையிலே தான் ... உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டாள் ..” என்று மிகவும் கம்மியக் குரலில் பேச ஆரம்பித்தார்.
அவருக்கு ஆறுதலாக பேசினேன். என்னால் முடிந்த அளவு அவரின் மனத்திற்கு ஆலோசனைகள் கூறி, கவலையை மறக்க பல புத்தகங்கள் வாசிக்கவும், தனிமையை தவிர்க்கவும், நண்பர்கள் வட்டாரத்துடன் இருக்கவும் கட்டளையிட்டேன்.
அவர் மனைவி எம்.பில் பட்டம் பெற்றவர். கல்லூரியில் விரிவுரையாளராய் இருந்தவர். இவரின் மீது மிகவும் பாசம் கொண்டவர். பேசும் போது தற்கொலைக்கான காரணம் என்னை அதிர்ச்சிக்௦௦ குள்ளாக்கியது! கை தொலைப் பேசியில் அழைத்துள்ளார் , இவர் வேலைப் பழுவால் பின்பு பேசுகிறேன் என கூறியுள்ளார். பலமுறை அழைத்தும் இவர் கை தொலைப்பேசியை எடுக்கவில்லை. பின்பு பேசவும் என கூறி , சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இவரின் நண்பரின் தொலைப் பேசியிலும் அழைத்தும் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் இந்த மோசமான முடிவை ஒரு படித்த பலருக்கும் ஆலோசனைக்கூறும் நிலையில் உள்ள பெண் எடுத்துள்ளார்!
அவரின் வளர்ப்பு மிகவும் செல்லமாகவும் , எதையும் உடனே பெறக்கூடியதாகவும் , எளிமையனதாகவும் ,கடுமையான சொற்களை காதால் கேட்க்காதவராகவும் இருந்துள்ளதை அறிந்து கொண்டேன்.
இந்த விபத்து நம் வீட்டுக் குழந்தைகளுக்கும் நடந்து விடக்கூடாது. குழந்தைகள் மீது பாசத்தை பொழியுங்கள், ஆனால் என்றும் கண்டிக்க மறந்து விடாதீர்கள். மனதை பக்குவ படுத்த கற்றுத்தாருங்கள். பாழாய் போன நம் சமுகத்தின் நல்லது கெட்டது பற்றி எடுத்துக் கூறுங்கள். தினமும் அவரின் நிகழ்வுகளைக் கேட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஆரோக்கியமான சண்டை போட சொல்லுங்கள். உதவும் எண்ணத்தை வளர்க்கவும்.
முக்கியமாக தேசத்தலைவர்கள் கதைகளைக் கூறுங்கள். காமரசர் சிறுவயதில் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினார்கள். அனைவரிடமும் அவரின் ஆசிரியர் கால் அணா வாங்கி விழா நடத்தினார் . அனைவருக்கும் சுண்டல் பொறி வழங்கப் பட்டது. மாணவர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு சுண்டல் வாங்கினர். ஆனால் காமராசர் வரிசையில் பொறுமையாக நின்று மிகவும் குறைந்தளவு சுண்டலுடன் தன் பாட்டியிடம் சென்றான்.அதைப்பார்த்த பாட்டி நீயும் முண்டியடித்து வாங்கவேண்டியது தானே? என கூறியதற்கு வரிசையில் நின்று தராத தன் ஆசிரியாரைக் குறைக் கூறாமல் , தன்னை ஏன்? குறை கிறாய் என கடிந்துக் கொண்டார்.
இப்படி கதைக் கூறினால் குழந்தைகள் மனது பக்குவப்படும். காமரசர் இவ்வாறு பொறுமையைக் கடைப்பிடித்ததால் தான் காந்தியைப் போன்று புகழப்பட்டார். தேசத்தின் பிரதமர்களை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்வு அடைய முடிந்தது எனக் கூறி பொறுமையின் அவசியத்தை விளக்கவும் வேண்டும்.
‘இட்லியாக இருங்கள்’ என்ற புத்தகத்தில் ஆசிரியர் வள்ளியப்பன் பொறுமையின் சிறப்பை ‘மாணவர்கள் மிட்டாய் எடுப்பதில்’ இருந்து விளக்கி உள்ளார். உடனடியாக ஒரு மிட்டாய் பெறுபவர்கள் மற்றும் பொறுமையாக இருந்து இரண்டு மிட்டாய் பெறுபவர்கள் பற்றிய ஆய்வில் பொறுமையைக் கடைப்பிடித்த மாணவர்கள் பிற்காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தனர் என விளக்குகிறார்.
பொறுமையைக் கடைபிடித்திருந்தால் என் நண்பனின் மனைவி வண்ணமிக்க வாழ்க்கையை தொலைத்திருக்க மாட்டார். வார்த்தை எண்ணத்தின் வெளிப்பாடு. அதன் பிற்பாடு எதைக் கூறினாலும் மாறிவிடுவதில்லை. நிச்சியம் கூப்பாடுத்தான். வார்த்தை பயண்பாடுகளின் அவசியத்தை எடுத்துக் கூற தயங்கக்கூடாது. தீயினால் சுட்டவடு ஆறாது என்பது உண்மையாகி இங்கு தீயே சுட்டுவிட்டது.
நாம் குழந்தைகளின் மனதை திடப் படுத்தவும் கற்றுக் கொடுக்க வேண்டும். கடும் சொற்களை தாங்கிக் கொள்ளும் மனத் தைரியத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும். அவை புத்தகத்தின் வாயிலாகத்தான் முடியும். ஆகவே புத்தகம் வாசிக்க கற்றுத் தாருங்கள் . புத்தகம் வாங்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள். புத்தகம் புதிய மனிதனை உருவாக்கும். புத்தகம் புதிய சிந்தனையை உருவாக்கும். புத்தம் புதிய உலகம் படைக்க குழந்தைகள் தினத்தில் நம் குழந்தைகளுக்கு புதிய சிந்தனை ஏற்படுத்தும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம். அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

Wednesday, November 11, 2009

வலைப் பற்றிய கவலை

வலைப் பற்றிய கவலை
இன்று நான் மதுரை மத்திய பஸ்டாண்ட் அருகில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் புகழ் பெயருடையவரைப் பார்த்தேன்.அவருடன் உரையடிய பதிவுகள் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
“சமச்சீர்கல்வி பற்றி வலையில் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை.”
“வலை என்றாலே பிழை என்பது போல் சொல்றேங்களே!”.
“பேச்சுக்கு சொல்லல்ல உண்மையிலே அப்படித்தான் சார்... அம்மா ன்னு டைப் செய்தால் அம்மா மகன் பற்றி கள்ளத் தொடர்பு ... “
“சார், எல்லாம் அப்படி இருப்பதில்லை ... பத்ரி , பிகேபி , மாணிகண்டன் என பல தமிழ் பிளாக்குகள் உள்ளன”
“இப்படி சில தான் உள்ளன. வீட்டில நெட் பார்க்கவே பயமாக இருக்கு. நாம பார்த்த பின் நம் பசங்க பார்த்தா நம்மல பத்தி என்ன நினைப்பான். நாம நல்லதை தேடினாலும் மஞ்சளாத்தான் இருக்கு”.
“சார்.. இன்றைக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் இரண்டு ஐடி வைத்துள்ளான். நெட் பார்க்காத பாசங்களே இல்லை ...”.
“ சார்... யூ டியுப் வந்தது பாசங்க ரெம்பக் கெட்டுப்போய்டாங்க ... அவன் எதைப் பார்ப்பான் சொல்லுறீங்க... பாழாய் போனப் படங்களத்தான். அதுவும் இரண்டு ஐடி வைத்துள்ளவன் கவனிக்கப் படவேண்டியவன்”.
“ சார்.. அவன் தந்தை கணினி மையம் வைத்துள்ளார் . அதற்காக அவனை தவறாகச் சொல்வதா ?”
“ சார்... அவன் அப்நார்மல் பிகேவியர் .தயவு செய்து வாட்ச் செய்யுங்க .. அவன் கெடுவது மட்டுமல்லாமல் அடுத்தவனையும் கெடுத்துடுவான். ஹோமோ செக்ஸ் உள்ளவானகக் கூட இருக்கலாம்.”
“ சார் ... நல்லா படிக்கிறவன் சார் .. இருந்தாலும் கவனிக்கிறேன்”.
“சார் .. தமிழில் நான் veelithukal என்ற பெயரில் பிளாக் ஆரம்பித்துள்ளேன். படித்து கமண்ட் சொல்லுங்க சார் .. நம்மல மாதிரி நிறைய பேர் எழுதி தமிழ் பிளாக் மாற்றி அமைக்கணும் ... நம்ம பசங்களுக்கு உதவுற தகவல்களை நாம் தரணும்”.
“ ஒ.கே. சரவணன் ... மழை நிக்கிற மாதிரி தெரியுது .. நான் கிளம்புகிறேன்”.
தமிழ் பிளாக் நான் ஆரம்பிக்க என் மனைவியின் அண்ணன் மாதவன் மிகவும் முக்கியமானவர் . என் எழுத்து ஆர்வத்தைப் பார்த்து “ஏன் நீங்கள் பிளாக் ஆரம்பித்து எழுதக் கூடாது?” என கேள்வி எழுப்பியதுடன் நின்று விடாமல் எனக்கு பிளாக் ஆரம்பித்து இன்று வரை ஊக்கப் படுத்தி பல பிளாக்குகள் படிக்கவும் ஆலோசனைகளை இராஜஸ்தானில் உள்ள பில்வாடா வில் இருந்து வழங்குகிறார்.
அவரும் என்னைப் போன்று தமிழ் ஆர்வம் கொண்டவர் . தமிழ் பிளாக் தரம் உயர வோண்டும் என்ற எண்ணத்துடன் பல காமண்ட்களை அள்ளி வழங்குபவர். தமிழருவி மணியன் எழத்து பற்றி குறிப்பிடும் போது மூன்றாம் தரமான மஞ்சள் எழுத்தாளர்கள் மீது தாக்கம் இருப்பதாக இருப்பினும் அது நிலைக்காது. நாம் அதை மாற்றி காட்ட வேண்டும் என்பார்.
மாற்றம் என்பது பிறரிடம் எதிர்பார்ப்பதில்லை . அது நம்மிடம் ஏற்பட வேண்டியதாகும். ஆகவே அனைவரும் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளுவோம். தானக இவ்வுலகம் மாறும். நமக்குள்ளாக எற்படும் இரசாயண மாற்றம் தான் நிரந்தரமானது. மாறுவோம்! மாற்றுவோம்!

Sunday, November 8, 2009

பிள்ளைகளின் மனதை கவனியுங்கள்






சமிபகாலமாக மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதும் , அவர்களை ரயில்வே போலீஸ் பிடித்து ஒப்படைப்பதும் தொடர் கதையாக நடக்கும் சம்பவங்கள். ஆனால் இத்தவறுகளுக்கு பின்னால் பொற்றோர்களின் தவறுகள் ஒழிந்திருப்பதை ஒணர்ந்து மாணவர்கள் வாழ வழிவிடுங்கள்.

பொற்றோர்கள் தங்களால் முடியாதவற்றை, தாங்கள் இள்மையில் இழந்தவற்றை மீண்டும் நிறைவேற்ற அதை தங்கள் குழந்தைகள் மூலம் நிறைவேற்ற முயலும் போது, குழந்தைகள் மன அழுத்தம் பெற்று , அந்த சூழ்நிலையில் இருந்து விடுபட வீட்டை விட்டு ஒடிப்போகும் மனநிலைக்கு தள்ளப்படுகிறன்.

பிள்ளைகளுடன் அன்பாக பழகுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதர்த்தமாக உங்கள் ஆசைகளை எடுத்துக் கூறுங்கள். அதற்ககாக தங்களின் ஆசைகளை அவர்களின் மீது திணிக்காதீர்கள்.

பல நேரங்களில் படிப்பின் மீது ஆர்வம் குறைவதற்க்கு காரணம் டி.வி. பார்க்கும் பழக்கம் தான். அதுவும் ரிமோட் கையில் வைத்து பார்க்கும் பழக்கம் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை முற்றிலும் அகற்றி , அவனின் மன குவிப்பு திறனை குறைத்து , எதிலும் கவனக்குறைவை ஏற்படுத்தும்.

இன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரு சேனலைப் பார்பதில்லை . விளம்பர இடைவோளையில் அவர்களின் கை தானாகவே அடுத்தடுத்த சேனலை மாற்றுகிறது. இந்த மாற்றம் அவர்களின் மன நிலையில் மன குவிப்பு நேரத்தையும் சேர்த்து மாற்றி விடுகிறது. டி.வி பார்க்கும் போது ரிமோட் நம் கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அது நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கவும் உதவும்.

பொற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் சண்டை போடுவதை நிறுத்துங்கள்.அவர்கள் முன் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் அன்பாகவும் மரியாதையுடனும் பழகவும். நல்ல உணவுகளை தந்து ஆரோக்கியத்துடன் வளர்க்கவும். நிச்சயம் நன்றாக படிப்பார்கள்.

தங்கள் குழந்தைகள் பள்ளியில் என்ன படித்தார்கள் ? ஆசிரியர் என்ன சொல்லி கொடுத்தார் ? நண்பர்கள் இன்று என்ன பேசினார்கள் ? என்ற விபரங்களை கண்டிப்புடன் கேட்காமல் , விளையட்டாக கனிவுடன் கேளுங்கள். தங்கள் பிள்ளைகள் என்றும் தவறுகள் செய்யமாட்டார்கள்.

இன்று மனம் வெளுக்க வழியில்லையே என்று பாரதிஏங்கியது போல் குழந்தைகளின் மன அழுக்கை வெளுக்க வழியில்லை என நாமும் ஏங்குவது ஏன்?

மன அழுக்கு நீக்க புத்தகங்கள் தான் நல்லவழி. இன்று நீதி நெறி கதைகள் , நன்னெறி கதைகள் எங்கு௦ நாம் கூறுகிறோம் ?பள்ளியிலும் அப் பாடவேளையில் பிற பாடங்கள் தான் கற்றுத்தரப்படுகிறது.

எகிப்தின் பாரோ அரசன் தான் ௦படிக்கும் புத்தக வாசிப்புஇடத்தை மன மருத்துவ நிலையம் என்று பெயர் வைத்துள்ளார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காந்தி இளமையில் படித்த அரிச்சந்திர நாடகமும் , இராமாயணமும் அவரின் வாழ்க்கையை நொறிப்படுத்தியது . காந்தி வாழ்க்கையை படித்த மார்டின்லூதர்கிங் வாழ்க்கை அகிம்சையை கடைப்பிடிக்கச் செய்தது.

ஆசிரியர்களும் ,பொற்றோர்களும் தயவு செய்து மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களை வாங்கிதரவும் , வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தவும். நன்னெறி கதைகள் கூறி பிள்ளைகளின் வாழ்க்கையை நெறிப்படுத்தி வளமுள்ளதாக மாற்றுவோம். .

Saturday, November 7, 2009

என் கனவு

என் கனவு

மாற்றம் ஒன்றே நான் காணும் கனவு. ஆம்! மாற்றம் ஒன்றே மாறாமல் இருக்கும் ஒன்றாகும். அம்மிக் கல் மாறி மிக்ஸி ஆனது. ஆட்டு உரல் மாறி கிரைண்டர் ஆனது. கால்குலேட்டர் மாறி கணினி ஆனது.

ஆம்! என் கனவு மாற்றம் தான் ! அனைவரும் மாற வேண்டும். அந்த மாற்றம் 2020 யை நோக்கிய கனவு அல்ல, அதை நினைவு ஆக்குவது ஆகும். நான் நினைக்கும் மாற்றம் மிக மிக சிறியது , ஆனால் அதன் பயன் மிகமிக பெரியது.

பாலிதீன் பை வாங்குவதை நிறுத்தி... துணிப் பை , காகிதப் பை பயன்படுத்தும் எண்ணம் வளர வேண்டும்.

எச்சிலை எங்கும் துப்பலாம் என்ற எண்ணம் மாறி .... உரிய இடத்தில் துப்ப கற்றுக் கொள்ள வேண்டும்.

குப்பையை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என்ற மாற்றம் வேண்டும்.

இளமையில் கல்வி , சுமையில்லா கல்வி ... சுவையான கல்வி என்ற மாற்றம் வேண்டும்.

அனைவருக்கும் கல்வி , அது சமச்சீர்கல்வி என்று மாற வேண்டும்.

திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

மருத்துவரை தவிர்த்து நோய்க்கு நாமே மருந்து வாங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

உணவு முறையில் மாற்றம் வேண்டும். சரிவிகித உணவு உண்ண வேண்டும்.

பழங்கள் , காய்கறிகள் , கீரைகள் உண்ணும் பழக்கம் எற்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் . இயற்கையை நேசிக்க வேண்டும்.

மரம் வெட்டுவதை நிறுத்தி ,மரம் நடுதல் வேண்டும்.

இரசாயண உரம் தவிர்த்து ,இயற்கை உரம் பயன் படுத்த வேண்டும்.

கழிவு நீர் வீட்டுக்கருகில் தோங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

உடல் பருமன் பெருதலைத் தவிர்க்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இவை எல்லாம் நம்மால் முடியும் ... ஆம் ! இது என்ன பெரிய விசயமா ?ஏன் நம்மால் முடியாது ? என உங்கள் மனதில் கேள்வி எழுவது புரிகிறது . இந்த மன மாற்றம் தான் நான் விரும்பும் கனவு.

இந்த மாற்றம் வியாதியில்லாத ஆரோக்கியமான மனிதனையும் , சுற்றுச் சூழலையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை!

மாற்றம் என்ற என் கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற மன நிறைவுடன் , நான் சொல்லும் இந்த மாற்றம் உங்களுக்கு தொற்றியப் பின் மாறாது என்ற நம்பிக்கையுடனும் இக் கட்டுரையை முடிக்கிறேன்.

Friday, November 6, 2009

பாலீத்தின்பயங்கரம்








நாம மாறுனோமானால் எல்லாம் மாறும். ஆம்! நாம் மாறினதாலே தான் எல்லாம் மாறி போச்சு. பருவ காலம்மாறி போச்சு...சுவாசிக்கும் காற்றில் சுத்தம் போச்சு...காற்றும் காசாகும் காலம் வந்தாச்சு..நம் சந்ததிக்கு ஒண்ணும் மிச்சம் மில்லாமல் போயாச்சுன்னுசொல்லும்முன் நாம் மாறணும். மாறுவோம். என்னால முடியும் போதுஉங்களால் ஏன் முடியாது?
“என் மவராசா... உன்னை மாதிரி நாலுபேரு இருக்கிறதாலே தான்... மழை பெய்யுது “ இப்படி என்னை பார்த்து என் ஏரியா பழக்காரி பாராட்டுவதற்கு என் மனைவி ஏற்படுத்திய மாற்றம் தான் காரணம்.
சரியான பொண்டாட்டி தாசன் என கமண்ட் கொடுப்பதை நிறுத்தி விளக்கத்தை படிக்கவும்.
இன்று பூவி வெப்பமாதல் மிக பெரிய விசயமாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் பாலித்தீன் உபயோகம் தவிர்ப்பு மிகவும் முக்கியமானது.
இரத்தக் குழாயின் இடையே தடுப்பு ஏற்படுத்தினால் இரத்தம் ஓடிச் செல்லமுடியாமல் நாடித்துடிப்பு நின்று விடுவது போன்று...
நுரையீரல் சுவாசக் குழாயின் நடுவில் அடைப்பை ஏற்படுத்தினால் அடங்கி விடும் சுவாசத் துடிப்பை போன்று...
மண் துளையினை பிளாஸ்டிக் போட்டு மூடிவிடுவதால் .... மண் துவண்டு பாழாய் போய் ... வீணாய் போகும்..
HELLO ! HELLO! மக்கும்குப்பை ... மக்காத குப்பை .தெரியமா ? மக்கும் குப்பையில் மறுசுழற்சி ... என்றுஉண்டு தெரியுமா? என நீங்கள் கேட்ப்பது புரிகிறது.
“ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது. நானும் உங்களை மாதிரிதான் தத்துவம் பேசினேன்.இதெல்லாம் கவர்மெண்டு வேளை ஆளை வச்சு தரம் பிரிச்சு உரமாகவும் , மறு சுழற்ச்சி முறையிலே புதிய பொருளாகவும் பாதியை அவுட்டரிலும் எரிச்சுடுவாங்க ... “ என தத்துவம் பேசினவன்.
“சார்! என் மனைவியை பற்றி நான்கு வார்த்தை சொல்லுகிறேன்.please உங்க கமெண்ட கடைசியில் சொலுங்க…”
“அவ எந்த பொருள் வாங்க சென்றாலும் துணிப்பை மட்டும் கொண்டு . செல்வாள். சிறிய பொருள் வாங்க சென்றாலும் ஒரே ஒரு பாலிதீன் பை மட்டுமே கொண்டு செல்வாள், அதுவும் அந்த பையை நாலு வருடமாக பயன்படுத்துகிறாள்.எந்த கடையில் எது வாங்கினாலும் கடைக்காரர் கொடுக்கும் பிளாஸ்டிக் பையை அந்த கடையிலே திரும்ப கொடுத்துவிடுவாள். அனைத்திந்திய அளவில் நடைபெறும் பல் பொருள் கடையிலும் பாலிதீன் பை மறுத்து , பொருட்களை துணிப்பையில் எடுத்து செல்வதுடன் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை நிறுத்த சொல்லி ஆலோசனை வழங்குவாள்.
நீங்க நினைக்கிற மாதிரி தான் “ சரியான லூச பிடித்து தலையில கட்டி வைச்சுட்டாங்களோ என நினைத்தேன்.
“பொதுஇடத்திலே லூசு மாதிரி பிகேவ் பண்ணாதே ! ஊரே வாங்குது...இதுல நீ வாங்காட்டி நாடு நல்லாவா ஆயிடும் “
“ அடுத்தவங்கல பற்றி பேசும் முன் நாம் மாறணும் . நாம மாறினால் மட்டும் போதாது, அடுத்தவங்களுக்கு அமைதியாய் புரியவைக்கணும்.
“ஆமா... ஆமா...கடைக்காரன் உன்னையும் என்னையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறான்.
“சிரிக்கட்டுமே ... நாலு நாள் சிரிப்பானா , நாலு தடவை பொருள் வாங்கும் போதும் பிளாஸ்டிக் பை வேண்டாம் என சொல்லுங்க ..அடுத்து வரும் போது அம்மா தெரியும் பொருளை பேப்பரில் மடித்து தருகிறேன் என்று சொல்லுவதுடன் பிளாஸ்டிக் பை வேண்டாம் என்ற சிந்தனை ஏன் ? வராது .
இது மாதிரி எங்கெல்லாம் பிளாஸ்டிக் பை தருகிறார்களே அங்கெல்லாம் வாங்க மறுத்தாள்.ஆலோசனையும் வழங்கினாள்.என்னையும் இதேப்போல் மாற வலியுறுத்தினாள்.
“ஹாலோ ..ஹாலோ பிளாஸ்டிக் பை வாங்கினா என்ன? அதை குப்பையாய் பொறுக்கி விற்பனை செய்து பிழைப்பவர்கள் எத்தனை பேர் ... மறுசுழற்சி செய்யலாமே ... என நீங்கள்குரல் வளையை நெறிப்பதைப் போன்று நானும் கேள்விக் கேட்டேன்.
“தயவுசெய்து பைக்கை மெதுவாக ஓட்டுங்க ... வழி எங்கும் பாருங்க ... காலியிடங்களிலும் பாருங்க ...ஓடையிலும் பாருங்க ... வாய்க்காலிலும் பாருங்க ... தெருவேர மண்ணிலும்பாருங்க ... “.
“ஆமா ... எல்லா இடத்திலேயும் பாலிதீன் பை குவியல் .எல்லாம் கிழிந்து மண்ணுக்குள் புதைந்தும் புதையாமலும் ...
“ இது தான் உங்க கார்பிரேசன் தரம் பிரிக்கிறார்களா ? இந்த பிளாஸ்டிக்குப்பையை குப்பைத் தொட்டியில் கொட்டினால் தான் எடுத்து பிரிப்பாங்களா ?
வடிவேலு பாணியில் “ஆமால்ல... என்றேன்.
“ ஒவ்வொரு பாலிதீனும் மண்ணுக்குள் மண்ணாக புதைந்து ஒவ்வொரு வாய்க்காலும் மக்காத பாலீத்தின் குப்பையாலே புதைந்து போய் ..அவை மக்க பல வருடங்களாக ஆவதுடன் , மண் துளையை அடைத்து மழை நீரை மண்ணுக்குள் அனுப்பாமல் ... ஓடு காலில் குப்பையாக சேர்ந்து ... குட்டையாக தேங்கி வியாதி பரப்பும் , நிலத்தடி நீர் மட்டம் குறையும் . மண் வளம் குன்றி போச்சு... விளை நிலம் பாழாய் போச்சு.
என் மனைவியின் பேச்சு என் இதயத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல இருந்தது.நானும் மாறினேன். எங்கும் பிளாஸ்டிக் பை வாங்குவதை தவிர்த்தேன். எல்லாகடையிலும் ஆலோசனை வழங்கினேன் . என்னால் ஸாரி... என் மனைவியால் என் ஏரியாவில் மூன்று கடைகளில் பிளாஸ்டிக் பை வழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.
“ சார் உங்கள மாதிரி நாலு பேர் மாறினால் போதும் ... இந்த உலகமே சுத்தமாகிடும் .. மழை சரியா பெய்யும் ...
“சார்.. நல்லா நாலு பேர் காதுல படுகிற மாதிரி சொல்லுங்க சார் .. மண் வளம் காப்போம்... மண் துளை மறிப்பதை தடுப்போம் ..
“சார் ... பாலிதீன் பை விலை 50 பைசா ... கிடைக்கிற லாபத்தை பாதி இந்த பை வாங்கிறதுலே போயிடுது ... இப்படி எல்லாரும் வேண்டாம் என்றால் ... கூட ஒரு பழம் சேர்த்து தருவேன்... இது எங்க ஜனங்களுக்கு புரியப்போவுது நீ நல்லா இருக்கணும் ய்யா..
“மாறுங்க சார் மாறுங்க ... மாறி பாருங்க உங்களையும் நாலு பேர் வாழ்த்துவாங்க . நம் சந்ததியும் நம்மை வாழ்த்தும் ... நல்லா வாழும்.



Thursday, November 5, 2009

குருவே சரணம்

அன்பான மொழியாலே பண்பை வளர்ப்பவரே !

ஆற்றலை முறைபடுத்தி ஒழுக்க நெறி வளர்ப்பவரே !

இனிமையாய் கற்றலை இனிதாய் வளர்ப்பவரே !

ஈதலின் பண்பை வளர்த்து மனித நேயம் வளர்ப்பவரே !

உண்மையாய் பேசி சத்தியம் வளர்ப்பவரே !

ஊறு விளைவிக்கும் எண்ணம் அழித்து உதவி செய்யும் பண்பை வளர்ப்பவரே!

௦௦எண்ணங்களிலே நல்லதையே விதைப்பவரே !

ஏணிப்படியாய் இருந்து எங்களை உயர்த்திப் பார்ப்பவரே !

ஐயம் நீக்கி அறிவை வளர்ப்பவரே !

ஒளியாய் இருந்து வழி காட்டுபவரே!

ஓங்கும் வளர்ச்சிக்கு உரமாய் விளங்குபவரே!

ஒளவை மொழியில் தமிழை தவமாய் வளர்ப்பவரே!

எஃகு மனம் கெண்டு தேசியம் வளர்ப்பவரே!

எனதருமை ஆசிரியர் .