Monday, October 28, 2013

இந்த தீ அணையாது...படித்து உறுதி செய்யுங்களேன்...!

         இத்தனை நாளாய் ஒருவனை இழந்துஇருக்கின்றோம் என்று நினைக்கத்தோன்றும் என்றால் அது நம்மையறியாமல் அவன் மீது நாம் கொண்டுள்ள பற்று , நட்பு, பிரியம் ஆகும் என இப்படி உங்களுக்கு பொருத்தமான , பிடித்தமான வார்த்தைகளால் இட்டு நிரப்பலாம். அவனை சந்தித்தப்பின் ஏற்படும் மனநிலை தேங்கிய நீரில் வீசி ஏறியப்பட்ட கல்லினால் ஏற்படும் சலனம். அது நீண்டது. அது ஓய்வு நிலைக்கு வருவதற்கு மணிநேரம் பிடிக்கலாம். அந்த மணி நேரத்திற்குள் மன அலைகள் எழும்பும் உயரம் ஆழிப்பேரலையை விட பெரியது.  உயர்ந்து எழுந்து அடங்கும் போது பிரபஞ்சம் அதனுள் அடங்கியிருக்கும். என்னை அப்படி அவனுள்ளே அடக்கியவன் வேறு யாராக இருக்க முடியும். அந்த தீ பரவ தொடங்கிய தருணம் நான் அதனுள் பொசுங்கிப்போனேன். மெல்ல சூடேறி, அதன் போக்கில் காற்றின் துணையுடன் பற்றி எரிந்து , அதனால், தாம் எரிவதுடன் அருகில் உள்ள அத்தனையையும் தன்னோடு சேர்த்து எரிய விடுவது எதார்த்தம். இந்த தீ அருகில் இருந்தாலே நம்மை சூடேற்று முன்பே தானாக  எரித்து விடுகிறது. அவன் பேச தொடங்கிய தருணம் , அவனாகவே மாறி விடுவது என்பது அறிவியல் முரண். இனி நான் அவனின் அடி வருடி என்று கூட அழைக்கப்படலாம். அதற்காக வெட்கப்படப்போவதில்லை. இது என்ன கூடா நட்பா. என்னோடு பேசக்கூடாது என்று சொல்லியும் என்னை தேடி வந்து பேசிய நட்பு. முரண்களில் தொடங்கிய முதிர்ச்சியான நட்பு. அவன் வார்த்தைகளில் சொல்லப்போனால் இது சுவரில் இறுகி, சுவரோடு சுவராக ஒண்றியுள்ள ஆணியை , அடித்து, ஆட்டி, வன்மையாக பிடுங்கி கொள்ளும் விசயம் அல்ல. நட்பு அது சுவரிலிருந்து தானாக ஸ்கூரு டிரைவர் கொண்டு அப்படியே சர சர சர என தானாக கழட்டிக்கொள்வது போன்றது நட்பு. அது சுவரில் இருந்து பூப்போல உருவி வருவது. தானாக கழண்டு கொள்வது போல , இறுக்கம் தளர்ந்து தன்னை ஒப்படைப்பது. இந்த நட்பு பூ போன்று மனம் பரப்பும். மாற்றம் என்பது மானுட தத்துவம். இந்த மாற்றம் இன்று நடந்தேறியுள்ளது. 
           
           இரண்டு வருடம் பார்த்தும் பார்க்காமலும் பேசியும் பேசாமலும், நட்பாய் இருந்தும் இல்லாமலும், ஒதுங்கியும் , ஒதுங்க முடியாமலும் இருந்த காய் தானாக கனிந்து  இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் புனைவில் ஆரம்பித்த இந்த நட்பு, அதன் தொடர்ச்சியாக எங்களுக்கு முரண்களை பரப்பி, எட்டியே பார்க்க செய்திருந்தது.  இலக்கிய வட்டத்தின் நீட்சி, எதிரும் புதிருமாக, முக நூலில் நட்பாக, கேலியாக, கோபமாக, எழுதிய எழுத்துக்களில் விமர்சகனாக இப்படி ஒரு சாராசரி சென்னை டூ மதுரை அரசு போருந்தைப்போல, சிக்கலாகவும், சிக்கனமாகவும், தாமதமாகவும், பாதுகாப்பாகவும் சென்று கொண்டிருந்தது எங்கள் நட்பு. சமீபத்திய சந்திப்புகளின் நீட்சி, அவசியம் அரசு தொடங்கியுள்ள மினி பஸ் போன்று இன்னும் பளப்பளப்பாக பொழிவாக இன்று வெள்ளோட்டம் கண்டது. இதன் பின்னால் பேசப்படும் அரசியல் பற்றி இருவருக்கும் கவலையில்லை. இந்த பேருந்துக்கு பின்னால் இலை இருப்பதில் இருவருக்கும் கவலையில்லை. எனவே , அதனை நீக்க சொன்னாலும் கவலைப்படுவதற்கில்லை. இல்லை இது வேறுமாதிரியான இலை என்று சொன்னாலும் மகிழ்ச்சி அளிக்கப் போவதில்லை.


         உன்னை தியாகம் செய்வதனால் மட்டுமே பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்” ஆம் அவனுக்காக என்னை தியாகம் செய்ய துணிந்து விட்டேன்.  புனைவு செந்திக்காக வருந்தினான். செந்தி பற்றி உயர்ந்த கருத்து கொண்டிருந்தான். எனக்கான இடத்தை கொடுத்தவன் செந்தி என்று மனசார சொன்னான். தன் பெயரில் தீ கொண்ட  அவனுக்காக பத்திரிக்கைகள் கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றன. அவன் யாரையும் உயர்த்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் செந்திக்கும் எனக்கும் உள்ள நட்பு அறிந்திராமலே , தன்னை உயர்த்திய கரத்தை உயர்த்தி பிடித்து பேசுவது இன்று அரிது. சந்தர்ப்பம் கிடைத்தால் சந்தில் சிந்து பாடிச் செல்பவர்கள் தான் அதிகம். இவன் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவன். செந்தி இதைப்படிக்க நேர்ந்தால், தயவு செய்து அந்த ஆத்மா வை உங்கள் கரங்களால் மீண்டும் பிணக்குகள் களைந்து ஏற்றுக்கொள்ளுங்கள். நல்லது செய்து நண்பரை பெருக்க வேண்டும். (பா 89) நான்மணிக்கடிகை கூறுகிறது. என்னால் இந்த இரு நண்பர்களும் மீண்டும் பிணக்குகள் நீக்கி , நட்பு கொள்வாராகினும் மதுரையில் இலக்கியம் இன்னும் நல்லவாறே வளர வாய்ப்பு உள்ளது. குற்றம் நீக்கும் கேள்வியார் நட்பு மருந்து போன்றது (பா 17) என்கிறது திரிகடுகம்.

         அவனை பேச விட்டுக்கோட்டுக்கொண்டே இருக்கலாம். அவனை பாடவிட்டு பல நேரங்களில் கேட்டு இருக்கின்றேன். நல்ல ரசனையுள்ளவன். அதனால் தான் அவனால் எதையும் ரசிக்க முடிகிறது. ரசித்ததை எழுத முடிகிறது. இவன் நட்பு பார்பதற்கு எந்த தகுதியும் பார்ப்பதில்லை என்பதை அவன் நடத்தும் வதனம் எடுத்துக்காட்டும். மனுசி பாரதியை அறிமுகப்படுத்தியவன் என்பதில் அவனை பெருமையாக சொல்வேன். இப்படி நிறைய மனுசிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவன். அறிமுகப்படுத்த தாயாராக இருப்பவன்.
இவன் கொண்ட நட்பு , இவன் பேச்சு எனக்கு , இராமாயண நிகழ்வை  நினைவுக்கு வர செய்கின்றது.  வேட்டுவன், குரங்கினத்தவன், அசுரன் ஆகியோரோடு இராமன் நட்புக் கொள்வதும் , நின்கிளை என்கிளை நின் சுற்றம் என் சுற்றம், நின் பகைவர், என் பகைவர் தீயரே எனினும் நின் உற்றார் என் உற்றார் என்று சுக்கீரீவனிடம் அவன் உறுதி மொழிவதும் நட்புக் கொள்வதற்குத் தகுதி பார்க்க வேண்டியதில்லை. இன்னுயிர்த் துணைவர்க்காக எச் செயலையும் செய்யலாம் என்பதைப் புலப்படுதுகின்றன.  

      இனி சரவணா , என் நட்பு வட்டம் உன் வட்டம் . உன் எழுத்து  இனி என் எழுத்து இதை கொண்டு செல்வது என் கடமை. என்று சொல்லும் போது இவனால் எதையும் செய்து விட முடியும் என்று எண்ண செய்தது. என்னடா அப்படி சொல்கின்றேன் என்று சொல்லி விடாதீர்கள். பிளாக்கில் நான் எழுதும் போது ஊரே என்னை பாராட்டும் , ஆனால் மதுரையின் பிரபலங்கள் என்னை பிளாக் செய்து விடும். உயிர்மை நடத்திய போட்டியில் என் பிளாக் மூன்றாவதாக வந்த போது அதிர்ச்சியில் என்னை புறம் தள்ளியவர்கள் நான் அறிவேன். வேண்டுமென்றே என்னை குறை கூறியவர்கள் மத்தியில் என் எழுத்தால், என் உழைப்பால் இன்று இவனை நட்பாக்கி கொண்டேன். அவனும் அதனை மிகப் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டான்.  சீனா அய்யா கூழாங்கற்களில்  என்னை தெரிகிறதா என்ற போது என்ன அய்யா என்னை அவ்வளவு பெரியா ஆளா பார்க்காதீங்க என்று சொன்ன அந்த ஆத்மா பற்றிய எளிமை தீயாக என்னுள் அப்போதே பரவ ஆரம்பித்து விட்டான். இந்த சுவாலை என்னையும் அவனையும் பிரிக்க முடியாமால், நட்பு கொண்டு சுவாலையாக சுடர் விட்டு, எனக்கே வெளிச்சமாய் உள்ளதை உணர்கின்றேன்.
    

     முதல் முறையாக என் நண்பன் செந்தி(புனைவு) என்னை கண்டு எடுத்தான். அதன் பின் காக்கை சிறகினிலே இதழ் ஆசிரியர் எட்வின் . உங்கள் படைப்பை அனுப்புங்கள் என்று சொல்லி என்னை எனக்கே அடையாளப்படுத்தியவர். இவர்களுக்கு அடுத்து இப்போது இவன். இவர்கள் எல்லாம் பெரிய புராணத்தில் நட்புக்கொண்ட இறைவனாக காட்சியளிக்கின்றனர்.  நட்புக் கொண்ட சுந்தரருக்காக இறைவன் பொன்னும் பொருளும் தருவதும் , தூது செல்வதும், முதலையுண்ட சிறுவனை உயிர்ப்பிப்பதும் நட்புக்காக எந்த உதவியையும் தன் தகுதிக்குப் பொருத்தமற்ற செயல்களைக் கூடச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்துவனவாக உள்ளன. என் தகுதியை உயர்த்துவதற்காக இவர்கள் நட்பு எனக்கு இறைவனின் நட்பு போன்றது. இவர்கள் மூவரும் இறைகொள்கையை மறுப்பவர்கள் என்பதும் அறிந்தவன் .


         அவனுடன் பேசியதில் எனக்கு ஆத்ம திருப்தி . சாதல், பொருள்கொடுத்தல், இன்சொல் கூறல் , கூடி இருப்பதில் மகிழ்தல், துன்பத்தில் நோதல், பிரியும் போது உள்ளம் கலங்குதல் உண்மை நண்பரின் இலக்கணம் என்று தொகுத்துரைக்கிறது ஏலாதி. (பா. 68). அவனுக்காகவே சாக துடிக்கிறது மனசு. அவன் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கத் தொடங்குகிறது. பேச்சை எங்கு தொடங்கி எதில் பொருத்தி, எதில் அவிழ்த்து, எதில் முடிப்பான் என்பது அவனுக்கே உரிய மொழியாக உருவெடுத்து , நம்மை அவன் காலத்தினுள் கட்டுண்டு இருக்க செய்து விடுகின்றது. இருந்தாலும் அவன் அவனாகவே, நான் நானாகவே பிரிந்து செல்கின்றோம் . விடைப்பெற்று, இது நாளைய சந்திப்பின் குறியீடாகவே படுகின்றது. அவன் மீது கொண்ட நட்பு விரியாலாம். ஏனென்றால் அவன் நட்பாட்டம் ஆடியவன். அவனின் சொல்லாடலை புதிய தலைமுறையும் ரசித்திருக்கலாம். உஙகள் எல்லோருக்கும் பிடித்தவன் . எனக்கும் எப்போதும் பிடித்தவன். இப்போது இன்னும் கூடுதாலாய் பிணைப்புகளுடன் அறுபடாத சேர்மமாய் …அவனின் எல்லா ஆற்றல் வட்டத்திலும் பூர்த்தியுற்றவனாய்… நானும் இணைகின்றேன். அந்த தீ பொசுக்குகின்றது…ஆனந்தமாய் சாம்பலாகின்றேன். ஆத்மர்த்தியுடனே….ஆத்ம திருப்தியில்.    

Wednesday, October 23, 2013

இப்படியும் நடக்க வாய்ப்பு உள்ளது...முயன்று பாருங்கள் !

”இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு அசிரியருடனே பிறந்துள்ளான். நீ அவருடைய  அறிவுரைகளை உண்மையான உறுதியுடன் பின்பற்றினால், இந்த வாழ்விலேயே கூட ( இப்பிறவியிலேயே) உன்னிடமுள்ள வரம்பற்ற முழுமையை உன்னால் உணர்ந்து கொள்ள இயலும்” - சுவாமி விவேகானந்தர். 

மாணவர்களை குழுக்களாக பிரித்து , அவர்களை ஆரம்ப சுகாதர நிலையங்களுக்கு களப்பயணம் செய்ய முடிவெடுத்து கல்மேடு மாணவர்களை நேற்று அழைத்து சென்றது போன்று இன்று நான் மேலும் சில மாணவர்களை அருகிலுள்ள சித்தா மருத்துவ நிலையங்களுக்கு அழைத்து செல்ல தயாரானேன்.   



அப்போது மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்த ஆசிரியை உங்க சாருக்கு வேறு வேலையில்லை, தினமும் இப்படி கூட்டிக்கொண்டு பொழுதை கழிக்கிறார், நீங்களும் ஜாலியா ஊர் சுத்துங்க.. நீங்க பார்க்காத ஆஸ்பத்திரிய புதுசா காட்ட போறார் என்று முணுமுணுப்பு என் காதில் விழுந்தது. நான் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவன் என்பதால் , சிரித்துக்கொண்டே .. என்னிடம் உள்ள புகைப்பட கருவியை எடுத்து நான் புகைப்படம் எடுக்க கற்றுக்கொடுத்த என் வகுப்பு மாணவன் தங்க மணியிடம் புகைப்படக்கருவியை கொடுத்து, நீ தான் இன்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னேன்.( அவன் எடுத்த புகைப்படம் தான் மேலே உள்ளது)

மாணவன் ஒருவனை மேற்கொண்டு கூறிய ஆசிரியையை அழைத்து வரச் சொன்னேன். இன்று இந்த மாணவர்களை அருகில் (அடுத்த தெரு ஆரம்பத்தில் )உள்ள சித்தா மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சித்தா மருத்துவ நிலையத்தின் செயல்பாடுகள் , நோய்கள் குறித்து அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து வர சொன்னேன். என் புகைப்பட கருவியை தங்க மணியிடம் கொடுத்துள்ளேன் . அவன் புகைப்படம் எடுப்பான். சார் போட்டு உடைச்சிடப்போறான்.. என்றார். சக மாணவர்களும் பொறாமையில் ஆமா சார் ... உடைச்சாலும் உடைச்சுடுவான். பரவாயில்லை பத்திரமாக எடுத்துச் செல் என்று சொன்னேன்.

வரிசையாக நிற்க சொல்லி சில அறிவுரைகள் சொன்னேன். அதற்குள் மணிப்பாண்டி சார் அதெல்லாம் கரெக்டா போய்டுவோம் சார் என்றான். ஆசிரியை சிரித்தப்படி சென்றார்.

மருத்துவர் அடைந்த மகிழ்ச்சியும், அவர் மாணவர்களுக்கு மழைக்காலம் என்பதால் கொசுவால் வரும் நோய் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

பள்ளிக்கு வந்த ஆசிரியரை நோக்கி என்ன நடந்தது என்று கேட்டேன். சார் சூப்பரா கவனிக்கிறாங்க... கேள்வி மேல கேள்வி கேட்கிறானுங்க.. என்றார். இருக்கட்டும் எதை பற்றி சொன்னார்கள் என்று ஆசிரியரிடம் கேட்டேன். அதற்குள் முந்திக்கொண்டு மாணவர்கள் நாங்கள் சொல்கிறோம் என்றார்கள். சார் நல்ல தண்ணியில மலேரியா கொசு வரும். சிரட்டை, கொப்பறை, டயர் , ஆட்டு உரல் போன்றவைகளில் விழுந்துள்ள மழை நீரினால் டெங்கு கொசு பரவும் என்று அடுக்கினார்கள். சிகிச்சை முறைகளையும் சேர்த்தே சொன்னார்கள். ஆசிரியர் அசந்து போய் நின்றார். நல்லா தான் கவனிச்சு இருக்காங்க.. பரவாயில்லை சார் .. கேட்டதை அப்படியே கூறுகிறார்கள் என்றார்.

’கல்லூரி முதல்வர்களோ, பேராசிரியர்களோ புத்தகங்களின் தாள்களில் இருந்து உங்களுக்கு அதைக்கிழித்துத் தர முடியாது. சுபாவம் அமவது அவரவர்களுடைய வாழ்க்கையிலிருந்துதான் உண்டாக வேண்டும். உண்மையைச் சொன்னால் அது உங்களுக்குள் இருந்து உண்டாகி வர வேண்டும்” என்று காந்தி கூறுகிறார்.

அவர் வகுப்பு மாணவர்கள் மதிய இடைவேளையில் ஆசிரியரிடம் தங்களையும் இது போன்ற களப்பயணத்திற்கு அழைத்து செல்ல வற்புறுத்திக்கொண்டு இருந்தார்கள். இது எனக்கும் அந்த வகுப்பு மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்.
  

Monday, October 21, 2013

எதை நோக்கிய பயணம் என்பது முக்கியம்

நீ ஏற்கனவே நிறைவானவனாக, முழுமையானவனாக இருக்கிறாய். நீ உண்மையாகவே எல்லாம் வல்லவன்.”  என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகளின் ஆழத்தை என் மாணவர்களிடம் பார்க்கின்றேன்.  பாடத்தையும் கற்பிக்கும் போது ,பாடக்கருத்தினை நேரடியான அனுபவம் மூலம் தரும் போது, மாணவன் தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, புதுமையை உள் வாங்கி, தான் ஏற்கனவே புதைத்து வைத்துள்ள அறிவை தூசி தட்டி எழுப்பி, தொடர்பு படுத்தி, புதிய கருத்தோடு பொருத்தி, ஆனந்தமாக , தானாகவே கற்றுக்கொள்கின்றான்.


   
   களப்பயணம் அவனுக்கு உற்று நோக்கல் பண்பை மட்டும் தரவில்லை என்பதை பல தருணங்களில் உணர்கின்றேன். புதிய இடம் , புதிய அணுகுமுறை, புதிய விசயம், புதிய களம், புதிய புதிய என அனைத்தையும் புதுமையாக காண்கின்றான். உணர்கின்றான். கூச்சம் என்பதை முற்றிலும் துறந்தவனாக தொடர்ந்து கேள்விகளை துளைத்து தனக்கு தேவையான விசயங்களை பெறுபவனாக மாறிவிடுகின்றான்.
நோய்த்தடுப்பும் சுகாதாரமும் என்ற பாடம் சம்பந்தமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அங்கு எவ்வகையில் சுகாதாரப்பணிகள், மருத்துவத்தொண்டுகள், நோய்த்தடுப்பு மற்றும் நோய் பற்றிய விழிப்புணர்வு செய்யப்படுகின்றன என்பது சார்பாக நேரடியாக அறிந்து வர சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாலை 3 மணிக்கு எட்டு மாணவர்களுடன் சென்றேன்.


    நானும் கார்த்திக் என்ற மாணவனும் முதலில் பைக்கில் சென்றோம். பிற மாணவர்கள் பள்ளி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். கார்த்தி டாக்டரை பார்த்து நாம் எதுக்காக வந்து இருக்கோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக்க, சாரை அறிமுகப்படுத்து என்றேன். சரிங்க சார் என்று  விறு விறு என்று உள்ளே சென்றான். கர்பிணிப் பெண்கள் தவிர யாரும் இல்லை. டாக்டர் டாக்டர் என்று எல்லா அறைகளையும் கூவி விட்டு வெளியே வந்து சார் யாரையும் காணாம் என்றான். வெளியிலிருந்து ஒரு (ஆயா என நினைக்கிறேன்) உள்ளே வந்து யார் வேண்டும் என்றார். நான் டாக்டர் இருக்கிறாரா என்றேன். அதற்குள் கார்த்தி முந்திக்கொண்டு, அக்கா டாக்டர் இருந்தா சொல்லுங்க.. நாங்க ஆஸ்பத்திரி எப்படி செயல்படுகிறது என கேட்க வந்துள்ளோம் என்றான். அவர் எங்கள் இடப்புறம் செல்லும் பாதையில் நுழைந்து , சிஸ்டர் யாரோ வந்திருக்காங்க என்றார். அவர் வெளியே வருவதற்குள் கார்த்தி உள்ளே நுழைந்தான். சிஸ்டர் எங்க ஹெட்மாஸ்டர் வந்திருக்கிறார். நாங்க ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய வந்துள்ளோம் என்று எந்த தயக்கமும் இல்லாமல் சொன்னான். நான் வணக்கம் தெரிவித்து , வருகையின் நோக்கத்தை சுருக்கமாக சொன்னேன். அப்போது அவர் இன்று நடைப்பெற்ற விசயங்களை , புள்ளி விபரங்களை மெயில் அனுப்ப முயற்சித்து இருந்தார். நான் பணியினை தொடர்ந்து செய்யுங்கள், மாணவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று வெளியில் பிற மாணவர்களுக்காக காத்திருந்தேன். அனைவரும் வந்தனர்.
தங்க மணி சார் , நாங்க இங்க தான் காய்சலுக்கு மருந்து வாங்க வருவோம் என்றான்.

    சஞ்சய் எனக்கு மண்டை உடஞ்சப்ப இங்க தான் சார் கட்டு போட்டேன் என்றனர். இப்படி அனைவரும் அப்பகுதி மாணவர்கள் என்பதால் எதேனும் ஒரு காரணத்துக்காக வந்திருந்தனர்.
சஞ்சய் டெங்கு காய்சல் இருக்கும் என்று சிகிச்சையை முதல் பருவ தேர்வு இறுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் வைத்தியம் மேற்கொண்டிருந்தான். நாகார்ஜீன் ஏண்ட சஞ்சய் இங்க டெங்குக்கு காட்டல … என்று கேட்டவாறு சிஸ்டரை நோக்கினான். நானும் ஏன் சிஸ்டர் இங்கு டெங்கு நோய்க்கு சிகிச்சை மேற்கொள்வது இல்லையா? என்றேன். அதற்கு அவர் நாங்கள் இங்கு டெங்கு சிகிச்சை மருந்து கொடுப்பதில்லை. அதன் அறிகுறிகள் தென்படுகிறதா என இரத்தத்தை சோதித்து உறுதி செய்வோம். மேல் சிகிச்சைக்கு இராஜாஜி அரசு பொது மருத்துவ மனைக்கு தான் அனுப்புவோம் என்றார்.

     மாணவர்கள் எத்தனை பேர் பணிபுரிகிறீர்கள்? என கேட்க, ஒரு டாக்டர், மூன்று  செவிலியர், இரண்டு ஆயா என்றார். வீடுவீடா மருந்து கொடுக்கிறாங்களே அவுங்கள விட்டுட்டாங்க என்றான் தங்க மணி. அவர் சிரித்துக் கொண்டே தன் உரையாடலை தொடர்ந்தார். சுகாதார விழிப்புணர்வுகள் பற்றி கூறும் போது டெங்கு , மலேரியா குறித்த போஸ்டர்களை காட்டி விளக்கினார். பொதுவான மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து சொன்னார். கர்பிணிப் பெண்கள் முன்னிலைப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ஆரம்ப சுக்காதார மையங்கள் என்றார். உடனே அருகில் இருந்த இப்ராஹிம் அட குழந்தை பிறக்கிற ஆஸ்பத்திரிடா நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல்ல. என்றான்.
   
    அவருடன் மாணவர்களும் நானும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். எதோ புதிய விசயங்களை கற்றுக்கொண்ட உணர்வோடும், தாம் தெரிந்து வைத்துள்ள விசயத்தை வெளிப்படுத்த கிடைத்த தளமாகவும், தான் பழகிய இடத்தில் உள்ள சங்கடங்களை புரிந்த உணர்வோடு சிலரும் மகிழ்ச்சியோடு விடைப்பெற்றோம். அப்போது நான் இதில் யாருடா டாக்டருக்கு படிச்சு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே டாக்டரா ஆகிறது என்று கேட்டேன். இப்ராஹிம் சட்டென்று சார் நம்ம கிளாஸ்ல விக்கி (விக்னேஸ்வரன்) தான் சார் டாக்டராகணும்ன்னு சொல்லியிருக்கான்… டேய் சொல்லுடா.. நான் டாக்டராகி இங்க வருவேன் என்று… விக்கி சிரித்தப்படி டேய் சும்மா இருடா.. என்றான்.


     “பள்ளிக்கூடத்தின் வெற்றியின் அளவை அல்ல பார்க்க வேண்டியது. (குழந்தையின்) வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாய் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். குருட்டுத்தனமான பயத்துடன் கூடிய பணிவோ கட்டாயப்படுத்தித் தோற்றுவித்த ஆர்வமோ அல்ல வேண்டியது. ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படத் தாயாரவதுதான் வேண்டும்” என்ற பெஸ்ட்டலோசியின் கல்விக் கண்ணோட்டத்தை மாணவர்களிடம் பொருத்திப் பார்த்து விடைபெறுகின்றேன்.    .       

      


Wednesday, October 16, 2013

இது தொடக்கம் அல்ல ...ஆரம்பம்.

மதுரையில் எதோ ஒரு மாற்றம் நிகழத்தொடங்கியுள்ளதை உணர முடிகிறது. இந்தி எதிர்ப்பு போராட்ட காலக்கட்டங்களில் மாணவர்களின் எழுச்சி ஓங்கியது போன்ற பிரமிப்பை உணர முடிகிறது. இவர்கள் எங்கு கூடிகிறார்கள்? எப்படி இது போன்ற கருத்துக்களை  முன் வைக்கிறார்கள் எல்லாம் மர்மமாக இருந்தாலும், செயல்பாடுகள் வெளிப்படையாகத்தான் இருக்கின்றன. சுற்றுசூழல் இயல் கல்வி குறித்த அறிவு தற்போதைய இளம் கல்லூரி மாணவர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதை சமீப காலமாக நீர் ஆதரங்களுக்காக மதுரை கண்மாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலிருந்து காணமுடிகிறது.

    ”உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால், அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால், நீயும் என்னைப் போல் ஆக முடியும்” என்ற சுவாமி விவேகனாந்தரின் பொன்மொழிகளை இன்று பக்ரித் பெருநாளில் உண்மையாக்கி கொண்டிருந்தார்கள். சிஇஓஏ பள்ளி அருகில் குழுமிய “ஐ லீட் மதுரை “ குழுவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அரசியல் வாதிகளுக்கும் முன் உதாரணமாக விளங்கினர். சென்ற வாரம் வண்டியூர் கண்மாய் சீரமைப்பு பணியினை மேற்கொண்ட பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள், கல்லூரிமாணவர்கள் எழுச்சி அரசியல்வாதிகள் மனதிலும் நல்விதையை விதைத்து இருப்பதை அறிய முடிந்தது.

     குலமங்கலம் சாலையில் கலெக்டரை சந்தித்த, மேயர், துணைமேயர், கவுன்சிலர்கள், போஸ் எம்.எல்.ஏ., வார்டு தலைவர்கள் குழுமிய அரசியல் தலைவர்கள் குழு, தாங்களும் இப்பணியினை மேற்கொள்ள இருப்பதாக தங்களின் கோரிக்கையை வைத்தனர். வாக்கிங் பாதையை கண்மாயை சுற்றி அமைக்க கேரிக்கையை வைத்து கலெக்டரின் உதவியை நாடினர். திரளாக திரண்டு இருந்த இந்த கூட்டமே , மாணவர்களின் எழுச்சியின் வெற்றி.
    யார் இந்த ஐ லீட் மதுரை அமைப்பினர் ? டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கல்லூரி மாணவர்களைக் கொண்டு , மதுரை , கோயம்புத்தூர் , சென்னை ஆகிய பகுதியில் கண்மாய் பகுதிகளை சீர்செய்து நீர் ஆதாரத்தை பெருக்க திட்டம் தீட்டியுள்ளது. மாணவர்கள் என்று சும்மா சொல்லிவிட முடியாது.  அட நாம எல்லாரும் தாங்க. இன்று இதை எடுத்து நடத்தியவர்கள் தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள், பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர்கள், மதுரை சமூகவியல் கல்லூரி மாணவர்கள், மாணவர் தலைவனான அண்ணாமலை, விஸ்வநாதன் , அருண் பிரசாத், யோகேஷ் கார்த்திக், பிரசாத், ஜெயஸ்ரீ தங்கம், ப்ரீத்தி (சாப்ட்வேர் இஞினியர்) சமூக ஆர்வலர்கள் ஸ்ரீதர் , இளைய பாரி, செல்வம் ராமசாமி, சொப்னா கார்த்திக், முகம் தெரிந்த பெயர் தெரியாத பல நண்பர்கள், ரோட்டரி கிளப் செண்டரல் மெம்பர்கள், பொது மக்கள்,அஇஅதிமுக பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும்  நான் (மதுரை சரவணன்) இணைந்து இன்று இப்பணியினை மேற்கொண்டோம்.

     ஐ லீட் மதுரை நோக்கம்? நீர் நிலைகளை காப்பது. நீர் ஆதாரத்தை பெருக்குவது, அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது. பாலைவனமாக மாறும் மதுரையை அதன் அழிவிலிருந்து காப்பது.
மாணவன் அண்ணாமலை சொல்லும் போது, நாங்கள் திரட்டிய தகவலின் படி இந்த செல்லூர், குலமங்களம், மீனாட்சிபுரம் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் 1500 அடிக்கும் மேல் குறைந்து விட்டது. நாம் மேற்கொள்ளும் இப்பணி, கலெக்டர் அவர்களின் உதவியால், பொக்கிலின் கொண்டு முட்கள் வெட்டப்பட்டு, அவை அகற்றப்பட்டு, சுத்தமாக்கப்படுவதன் மூலம் , மழைக்கால தொடக்கமான இப்பருவத்தில், நமக்கு 50 அடிகளில் நீர் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றான்.


       எம்.எல்.ஏ அவர்கள் பேசும் போது, மாநகர தந்தை இருக்கிறார் , மாணவர்கள் முன்னெடுத்து செய்யும் இப்பணியினை நீங்கள் தொடர்ந்து அரசு இயந்திரத்தைக் கொண்டு சீர்படுத்தி நீர் ஆதரத்தை திரட்ட உதவிட வேண்டும் என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் இப்பணியினை துவங்கி வைக்க, முள்களை சட சட என வெட்டி தள்ளினர் மாணவர்களும்,பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் முட்கள் கைகளை கிழித்தாலும் பரவாயில்லை என இரத்தம் சிந்தியும் வேர்வைகளை கண்மாயில் நிரப்பியும் சுத்தம் செய்து , நீர்நிலை உயர உதவினர். இக்கட்டுரையை எழுதி முடிக்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. நிச்சயம் முட்கள் அற்ற , மாணவர்கள் சுத்தமாக்கிய பகுதிகளில் மழை நீர் முத்தமிட்டு தேங்கி யிருக்கும் என்ற நம்பிக்கை இச்செயல்பாட்டினை ஊக்குவிப்பதாக இருக்கிறது. அதை விட மாணவர்கள் எழுச்சி அரசியல் தலைவர்களால் உற்று நோக்கப்படுவது சமூக மாற்றத்திற்கான எழுச்சியாக கருதுகிறேன். இதனை எடுத்து நடத்தும், வந்து இணைந்து நடத்தும், தொடர்ந்து சமூக செயல்பாடுகளில் இணைந்து செயல்படும், அனைத்து நண்பர்களுக்கும் நன்றி… வாழ்த்துக்கள்.    

Thursday, October 10, 2013

எப்போதும் விழித்து இருத்தல்

தாலாட்டு
-------------
குழந்தை கதை சொல்ல ஆரம்பித்தது
தூங்கிப்போனேன்
எழுந்து பார்த்தப்போது
குழந்தை தூங்கியிருந்தது
கதை சொல்லியப்படியே 
அம்மா சரியா.... 
என தூக்கத்தில் கேட்க
குழந்தை சொல்லாத
கதைக்கு தலையாட்டியப்படியே
மீண்டும்
தூங்கிப் போனேன்....!


---------------------------------------
உன்னோடு பேசும்
நேரங்களை விட
உன்னோடு பேசா
நேரங்களே
வேகமாக நகருகின்றன
உன்னோடு பேசுவதற்காக...!


----------------------------
ஆசை
-----------
எனக்காக
வாழ ஆசைப்பட்டதை விட
உனக்காக வாழவே
அதிகம் ஆசைப்பட்டேன்....!



----------------------------------------------
அற்புதம்
-------------
இதழ்கள் பொருத்தி
நீ
அழுத்திக் கொடுக்கும்
முத்தத்தில்
அத்தனை மன அழுத்தங்களும்
அமுங்கிப் போகின்றன



____________________________



உன் அருகாமை
எனக்கு பாதுகாப்பு

---------------------------------


எல்லா போதுகளிலும்
_______________________
ஓடும் போது
உண்ணும் போது
நண்பர்களுடன் பேசும் போது
அம்மாவுடன் உரையாடும் போது
தந்தையுடன் ஊர் சுற்றும் போது
பள்ளியில் இருக்கும் போது
பாடம் கவனிக்கும் போது
என எல்லா போதுகளிலும்
கனவுகளுடனே
குழந்தைகள் வாழ்கின்றன....!
 


Wednesday, October 9, 2013

அப்பா


நான் படித்த முதல் புத்தகம்
நான் விரும்பிய முதல் புத்தகம்
நான் முத்தமிட்ட முதல் புத்தகம்
நான் கட்டித்தழுவிய முதல் புத்தகம்
நான் அனுபவித்து படித்த முதல் புத்தகம்
நான் ரசித்துப்படித்த முதல் புத்தகம்
நான் நானாக உதவிய முதல் புத்தகம்
நான் கற்றுக் கொண்டவை அதிகமாக இருக்கும் முதல் புத்தகம்
நான் வாழ்வை தேடிய போது உதவிய புத்தகம்
நான் புரட்டிய போதெல்லாம் புதுப்புது செய்திகளை கொடுத்த முதல் புத்தகம்
நான் என்னோடு வைத்திருக்க விரும்பிய முதல் புத்தகம்
நான் உணர முடியாத முதல் புத்தகம்
நான் படித்து முடித்திராத முதல் புத்தகம்
நான் எப்போதும் விரும்பும் இப்புத்தகம்
இப்போது இல்லை
எந்த நூலகத்தில் தேடுவேன்...!

Tuesday, October 8, 2013

பேய்கள் ஜாக்கிரதை

வயல்களில்
வெள்ளைப் பேய்கள்
கால் ஊன்றி ......
இவைகளுக்கு வழிகாட்டியப்படி
மேலும் சில கலர் பேய்கள்
மஞ்சள் சிவப்பு நிறங்களில்
பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது
இரவு பகல் பாராமல்
நகரமையமாதலில்
பேராசை மனிதர்களை..
வயல்கள் மட்டும் அழியவில்லை
நம் சந்ததிக்கான
உணவு உற்பத்தியும் சேர்ந்தே…..
உணவுக்காக மண்ணை
அள்ளித் தீண்ணும் காலம் வெகுவிரைவில்….! 



Saturday, October 5, 2013

சொல்ல மறந்த கவிதைகள்...

நானும் அவளும்
-------------------------
நீ உறங்கிய வேளையில்
நான் உறங்காமல்
உன்னுடன்...
நீ பேசிய பொழுதுகளில்
அமைதியாய் இருந்து விட்டு
இப்போது
பேசித்தீர்க்கின்றேன்...
நீ அடித்த ஜோக்குகளை 
உதட்டு புன்னகையில் ரசித்த நான்
உன்னுடனே இப்போது
அறைகள் அதிர்ந்திட சிரிக்கின்றேன்...
ஓசைக்கேட்டு அனைவரும் எழுந்திடவே
உன்னை மறைக்கின்றேன்
போர்வைக்குள்
என்னுடனே...!
 

காதல் மரம்
-----------------
நீயும் நானும்
சுற்றி சுற்றி விளையாடிய
மரம்
நீயற்ற பொழுதுகளில்
இலைகளை உதிர்க்கிறது
நீ வந்த பொழுது
தளிர்க்கிறது
உனக்கு கல்யாணம் என்ற போது
ஈபிக்காரன்
வளர்ந்த கொப்புகளை
முறிக்கின்றான்
என் மனமும் சேர்ந்தே ஒடிந்து விழுகிறது.....
 


காற்றாய்....
-----------------
சிறகு விரித்து பறக்கின்றேன்
இறங்கியப்படியே
தோணியாகி மிதக்கிறேன்
டால்பின் போல துள்ளிக்குதிக்கின்றேன்
ஆகாயத்தில் குதித்தப்படியே
காற்றாய் உருமாறி
கடல் தாண்டி வருகின்றேன்
இரவில் கண் மூடி
உன்னை உறங்க வைக்க
உறங்கிப்போனாய்
இப்போதும்
சிறகு விரித்து பறக்கின்றேன்
உன் கனவில்...!
 



ஆச்சரியம்
----------------
கல்யாணவீட்டில்
செருப்பா என்று கேட்டார்
ஆம் என்று சொன்னேன்
நானும் அணிந்து கொள்ளவில்லை
அவரும் அணிந்து செல்லவில்லை
செருப்பு அப்படியே கிடக்கிறது
ஆச்சரியம் தான்....!
 


கள்ளக்காதலி
-------------------
எவ்வளவு முயன்றும்
என்னால்
உன்னை பிரிந்து இருக்க முடியவில்லை...
ஆகவே
மீண்டும் மீண்டும்
சரணடைகிறேன்...
உன் பெயர்
பேஸ்புக் என்பதை மறக்காமல் 
அனைவரிடமும் சொல்லி விடு
இல்லையென்றால்
அடுத்த சண்டைக்கு
தயாராகி விடுவாள்
பாதகி....!
 


மழை நாளில் ...
-----------------------
நேரம் காலம் தெரியாமல்
பெய்கிறது மழை
திட்டிதீர்க்கும்
நகரவாசியின் மத்தியில்
நான்
நனைகிறேன்
காமம் கொண்டு
ஆசைகள் பெருகிடவே
நனைக்கிறது மழை....
என் உடம்பினை அப்படியே
சமர்பித்து
கூடுகிறேன் கூச்சமற்று
நானும் மழையும்
பிரபஞ்சத்தில்
விரிகிறோம்
என்னைப் போல் மழையும்
மழையைப் போல் நானும்
 ..!


அகராதி
-------------
மொழிகள் அற்ற 
பிரதேசத்திலும்
உன் விழி சொல்லும்
மொழியை 
நான் அறிவேன்..!



இவை அனைத்தும் நான் முகநூலில் வெளியிட்ட கவிதைகள்.. நண்பர்களின் வேண்டுதலின் பேரில் இங்கு பதிவு செய்கிறேன். மறுபதிப்பு;

Tuesday, October 1, 2013

காதலிப்பவனின் மரண வாக்கு மூலம்...


நீங்கள் பிணங்கள் எரிவதைப் பார்த்ததுண்டா
பார்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்
உயிருக்குயிராய் காதலித்தவள்
கைவிட்ட பின் அழுததுண்டா
இருப்பின்...
எரி மூட்டியவுடன்
உடல் எழும்பும் போது
நெஞ்சு பிளக்கும் சத்தமும்
அதனை அமுக்க விழும் அடிகளையும்
உணர்ந்திருப்பீர்கள்....
கொள்ளி வைத்தபின் திரும்பி
பார்க்காமல் வீடு திரும்பும்
நீங்கள் இதை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்....
இரத்தம் சூடேறி கொதிப்பு அடைந்து
நாடி நரம்புகள் வழியாக
வெளியேற முடியாமல் கொப்பளித்து
அங்கேயே எரிந்து சாம்பலாவதை ....
கோப்பைக்குள் காதலியை புதைத்து
தினமும் இரத்தம் சூடேறி
கல்லீரல் கணையம்
என எல்லாவற்றையும்
செயல் இழக்கசெய்யும் வாதையை
உணர்ந்திருப்பீர்களானால்
பிணங்கள் எரிவதை ரசித்து பார்த்திருப்பீர்கள்
காதலித்தவர்களும்
காதலில் தோற்றவர்களும்
மரணத்தை கொண்டாடுகிறார்கள்
காதலித்துக்கொண்டோ
அல்லது
காதலில் தோற்றுக்கொண்டோ...!

Thursday, September 26, 2013

நகரங்களின் குப்பையிலிருந்து மீண்டு எழும் முயற்சி.


    இவ்வுலகில் வாழ்வதற்கு பயமாக இருக்கிறது. செய்திதாள்கள் சுமந்து வரும் செய்திகள் மனத்தின் ஆழத்தில் கிடக்கும் பயத்தை உடனடியாக பிறசவிக்கின்றன. நண்பனே நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல நண்பர்களுடன் முயற்சிக்கின்றான். நம் வாழ்வின் மீதான நம்பிக்கை இச்செய்திகளால் நாம் இழக்க வேண்டியிருக்கிறது. பாதுகாப்பின் அவசியத்தை தேட வேண்டியுள்ளது. இதை எழுதும் இத்தருவாயில் என் நினைவுக்கு வரும் நிகழ்வு பாதுகாப்பு வரி ஆலயத்தில் விதித்த பாதிரியார் குறித்த என் நண்பர் சேவியர் சொன்ன செய்தியாகும்.  தம் மக்களை காப்பாற்ற பாதுகாப்பு வரி விதித்த பாதிரியார் உண்மையில் தீர்க்க தரிசியாக காட்சியளிக்கிறார்.

    சேவியருடன் உரையாடலில் ஊழலில் ஈடுபடும் பாதிரியார்கள் பற்றி சக பாதிரியார் எழுதிய புகார் கடிதம் குறித்து வாசகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதுவும் பொது சொத்து பாதுக்காப்பிற்காக எழுதப்பட்டது தான். அக்கடிதத்தின் வாசகம் இது தான்.
   
   “நீங்கள் யாரும் யோக்கியர்கள் அல்ல. உங்களின் தவறுகளை நீங்களே அறிவீர்கள். உங்களைப் பற்றி சொல்லும் படியாக ஒன்றுமில்லை. இதை உணர்ந்து நீங்களே இடத்தை காலிசெய்து விடுங்கள்”

    இதை எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கிறேன். அரசியலாகட்டும்,அரசு அலுவலகமாகட்டும், தனி நபர் நிறுவனமாகட்டும், தொண்டு நிறுவனமாகட்டும், அரசு சாரா நிறுவனமாகட்டும் இப்படி எல்லா இடங்களிலும் இதை பொருத்திப்பார்க்கிறேன்.
விளைவு என்னவாக இருக்கும்?

உங்களின் பதில் கட்டாயம் இப்படிதான் இருக்கும்.
இக்கடிதத்தை எழுதியவர் தண்டிக்கப்பட்டு இருப்பார்.
ஆனால் இக்கடிதம் எழுதியவர் அதன் பின் அமைதியாகி விட்டதாக அறிந்தேன். (மிரட்டப்பட்டிருப்பார்).

நம்முடைய பொருளாதரமே குடியை ஆதாரமாக கொண்டு செயல்படும் நிலையில் , சமீபத்திய குடிக்கான சர்வேயில் நாம் முதலிடம் பிடிக்கவில்லையே என ஆதங்கப்படும் சமூகவலைத்தள ஆர்வலர்களின் ஸ்டேட்டஸ் ஏகப் பட்ட லைக் வாங்கியிருந்தது. அதில் நானும் லைக்கி விட்டேன். ஏனென்றால் இந்த ஸ்டெட்டஸ் நம் மக்கள் குடியினால் கெட்டு குட்டிச்சுவராகிப் போன வாழ்வின் ஆவணமாக கருதுகிறேன். குழந்தைகளுடன் குழந்தைகளாக தெரிவதால் குடி எவ்வாறு குடியை பாதித்துள்ளது என்பதை நான் அறிவேன்.

ஆங்கில பரீட்சை நன்றாக எழுதாத நன்றாக படிக்கும் மாணவனைப் பார்த்து ஏண்டா உடம்பு எதுவும் சரியில்லையா? தேர்வு மீண்டும் வைக்கட்டுமா?  நாளைக்கு எழுதிக் கொள்ளலாம் என கனிவுடன் கேட்டேன்.
“இல்ல சார் பரவாயில்லை. மனசுக்கு சரியில்லை. ( ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்)”
”என்னடா? பெரிய மனுசனாட்டம் பேசுற?”
”எங்க அத்தை நேத்து தூக்குமாட்டிகிட்டு செத்து போச்சு சார்”
”ஏண்டா? எதுவும் குடும்ப பிரச்சனையா?”
”அட இல்லைங்க சார்… எல்லாம் எங்க மாமாவால தான்..!”
”என்னடா உங்க மாமா எதுவும் திட்டி விட்டாரா?”
”இல்லை சார்.. தினமும் குடிச்சுட்டு வந்திருக்கு… காசு கேட்ட கொடுக்கல…குழுவில வாங்கின கடனை கூட அடைக்க முடியல… வீட்டுக்கு எதுவும் தரதில்லை..டெய்லி தண்ணிப் போட்டு சலம்பியிருக்கு…. அதான் தூக்கு போட்டுகிட்டாங்க…”
”என்னடா கோழையாட்டம் …. உங்க அம்மா அப்பா கண்டிக்கலையா….?”
”எங்க மாமாவா  எதுவும் கேக்காது சார்… எங்க அத்தை மவன்கள் தான் பாவம் சார் ஒருத்தன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இன்னொருத்தனுக்கு ஒன்றரை வயதாகிறது.”
”யாருடா பார்த்துக்கிற… எங்க அம்மா தான் சார் …. அது என்னையும் ஊருக்கு (வரிச்சியூர்) கூட்டிகிட்டு போயிடுச்சா… அதான் ரிவிசன் விடாம வந்துட்டேன்… யோசிச்சு யோசிச்சு எழுத வேண்டியதாய் இருக்கு…”
அதற்குள் பக்கத்திலிருந்த மற்றொரு மாணவி,
“சார்..இப்படிதான் சார்… எங்க அம்மா ஒருதடவ தூக்கு மாட்டிக்க போனாங்க.. நானும் எங்க அண்ணணும் ஒரே அழுகை …அப்புறம் சேலையை அவுத்துகிட்டு அழுதுச்சு….இந்நேரம் நாங்களும் அனாதையாகி இருப்போம்.. ஆனா இன்னும் எங்க அப்பா திருந்தல சார்…”
”எனக்காக குடிக்காத அப்பா.. ன்னு சொல்லு..”
”அட போங்க சார்…. சொன்னா என்ன அடிக்க வரும்.. .
அருகிலிருந்த மாணவன்,
”எங்க அம்மா… வாங்கி வந்த வார சம்பள காச… தூக்கிட்டுப் போயிட்டாரு சார்…எங்க அப்பா குடிக்க…. எங்க அம்மா ஒரே சண்டை … நாங்க ஞாயிற்று கிழமை மூழுவதும் பட்டினியா கிடந்தோம்… ”

      வீடுகளில் குடியினால் அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டுவருவதை யாரும் உணர வாய்ப்பில்லை. குழந்தைகளின் உள்மன வலியின் கொடூரம் சமூகத்தில் எப்படி வெளிப்படும் என்பதை கண்டு பயப்படுகிறேன். குடியினால் இவர்கள் மரணத்தை தேடிக்கொள்வதுடன் , குடும்பங்களிலும் மரணத்தை விதைப்பதை உணர்வதில்லை. இதனை உணர்த்துவதற்கான சந்தர்பங்களையும் அரசு ஏற்படுத்தி தரவில்லை. குடி குடியைக்கெடுக்கும் என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள வாசகங்கள் போதையேறி வீழ்ந்து கிடக்கின்றன. போதை தலைக்கு ஏறி , குமட்டி, பித்து களைந்து , அவர்கள் எடுக்கும் வாந்திகளில் உருண்டு , சித்தம் கலங்கி, வேதனையின் சீல்கள் அப்பிய கண்களுடன் வரும் குழுந்தையின் அழுகுரல்களை கேளுங்கள் ஆட்சியாளர்களே , ஒருவேளை நீங்கள் மதுகடைகளை முடுவதற்கான சாத்தியங்கள் நிகழக்கூடும்.

    கடந்த வாரம் நடந்த விநாயகர் திருவிழா ஊர்வலங்களினால் மதுரை மாநகராட்சியில் 500 டன் குப்பைகள் அள்ளமுடியாமல் தேங்கியுள்ளன. 1600 டன் குப்பைகள் விழாவை ஒட்டி அள்ளப்பட்டிருக்கிறது. தேங்கியுள்ள குப்பைகளை  அப்புறப்படுத்த கமிஷனர் 90டிப்பர் லாரிகள் ,11 டம்பர் பிளேசர்கள்,5 காம்பேக்டர்கள்,37 டிராக்டர்கள், 37 ஆட்டோக்க்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     நம் மனக்குப்பைகளையும் அள்ள இப்படிப்பட்ட வாய்ப்பு இருக்குமானால் எவ்வளவு சிறப்பானதாக வாழ்வு அமைந்திருக்கும். நான் இப்படி கிறுக்கி என் மனக்குப்பைகளை அகற்றுவதுண்டு. யோகா, தியானம் தராத ஒரு மன அமைதி ஏற்படுகிறது. நீங்களும் முயற்சியுங்களேன்.

மதுரை சரவணன்.
9344124572

Wednesday, September 18, 2013

பிழையின்றி தொடங்கும் பகல்

தென்றல் தழுவி
என்னை காமுறுகையில்
கதிரவன் சூட்டை மூட்டி
காமத்தை பெருக்கினான்

எங்கிருந்தோ வந்த மணம்
அவளின் நினைவை கிள்ளி
அள்ளிச் சென்றது
திடுக்கிட்டு எழுந்த போது
எப்போதும் போல் கோப்புக்கள்
தேங்கியிருந்தன
அவளின் நினைவுகளை போன்று
என்னை சுற்றி

எப்போதும் போல்
கடந்து சென்றது பகல்

கனவுகளின் களைப்பில்
கண்கள் மூடிய
என்னை மீண்டும் தழுவியது
அவள் குரல்
அலைக்கற்றையின் உதவியுடனே

இரவில்
என் படுக்கையறையில்
உருவாக்கிய தோட்டங்கள்
விடியலில் காணாமல் போகின்றன
ஆப்பிள் மரஙகள்
ஆப்பிள்கள்
உண்ணப்படாமல்.....

எந்த பிழையுமின்றி
தொடங்குகிறது பகல்


  

Tuesday, September 17, 2013

தி இந்து தமிழ்நாளிதழ் யாருக்கானது....!


எது இலக்கியம்? இந்த கேள்வி என்னை அடிக்கடி வாட்டி எடுக்கும் சாத்தனின் குரலாகவே கருதுகிறேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம். இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கும் வரமுடியவில்லை. இதற்காக,  நான் சமகாலத்தில் பழகி, எழுத்துலகில் சிறந்தவர் என சொல்லிக் கொள்ளும் பலரால்,  என்னையே ஆய்வுக்கு உட்படுத்தி தோற்றதும் உண்டு. தோற்றது என்பதை விட உனக்கு இலக்கியம் வராது என விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் உண்டு. ஆனால் ஆறுவிரல் கொண்ட என் நண்பன் சொல்வதும் பல சமயம் சரியெனப் படுவதுண்டு.(அப்படி என்ன சொன்னான்? கடைசியில் சொல்கிறேன்)

    இலக்கிய வட்டத்துக்குள் வர வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும் என்கிறார்கள். நான் எம்.பில் வரை படித்திருக்கிறேன் என்றேன். அவர்கள் என்னை பார்த்து நகைத்து , இவன் ஆட்டைக்கு லாயிக்கில்லை என பல இடங்களில் புறக்கணித்ததும், மட்டம் தட்டியதும் உண்டு. ஒருவேளை இது தான் இலக்கியமோ. உனக்கு ஜெமோ வைத் தெரியுமா? எஸ் ரா வை தெரியுமா? சாருவை தெரியுமா? என்று குறுகிய வட்டத்துக்குள் சமகால எழுத்தாளுமைகளை உள்ளடக்கி அவர்கள் சார்பாக இயங்கி , அவர்களின் புத்தகங்களை படிக்க ஆலோசனைகள் கொடுத்தார்கள். நான் ஆழ்ந்து படிப்பவன் அல்ல. ஏதோ தெரிந்தவற்றை படித்து , என் குழந்தைகளுக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் சாதாரண துவக்கப்பள்ளி ஆசிரிய மனநிலையிலேயே இயங்குகிறேன்.

    மேஜிக்கல் ரியாலிசம் சாருவின் மேஜிக் . அதை அனுபவித்தாயா? என்னால் எந்த இசத்துக்குள்ளும் ரசவாதம் ஆக முடியவில்லை. குழந்தையின் மனநிலை என்னை தடுத்தது. ஒரு வேளை அவர்கள் எல்லாம் கல்லூரியில் பணியாற்றுவதால் சாத்தியமோ. லிபியை பார் அவனும் ஆசிரியர் தானே. அவனால் எப்படி சாத்தியம் ? அவனும் மேல்நிலைப் பள்ளிக்கு வாத்தியான். அவனும் நம்மை காட்டிலும் மேல் நிலை தான் . அது கூட லிபியை இலக்கிய வாதியாக சாத்தியப் படுத்தியிருக்கலாம்.  புத்தக கண்காட்சியில் லிபியுடன் செல்லும் போது , நான் நாவல்களையும் , கதைகளையும் படிப்பதில்லை என்றான். அவனுக்கு மட்டும் இலக்கியம் எப்படி சாத்தியமாயிற்று. என்னை மட்டும் படி படி என்கின்றனர். நான் படித்தது சரியில்லையோ….!

    இலக்கியம் தெரிய வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பு நூலை வாங்கி படியுங்கள் என்றார்கள். எனக்கு பிரச்சனையில்லை. படித்தேன். அங்கும் பிரச்சனை.  கதா பாத்திரத்தின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. பாடத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை பல இடங்களில் பொருத்திப் பார்க்கும் சாதாரண ஆசிரியர் , அதுவும் அறிவியல் மேல் ஆர்வம் உள்ளவன் எனபதால், எவ்வளவு முயன்றும் பெயர்களை நினைவில் கொள்வதில் தோற்றுப் போகிறேன்.
சமீபத்தில் பட்டு, அப்பாவின் கை துப்பாக்கி போன்ற நூல்களை படித்தேன். தெரியாமல் இலக்கிய கூட்டத்தில் சிக்கிக் கொண்டேன். சீட்டா சரியாக மொழி பெயர்க்கவில்லை. அதன் மூலத்தை படியுங்கள். அதை படமாக எடுக்க போகிறார்கள். அதில் உள்ள சீசனல் வேரியேசனை எப்படி கொண்டு வந்துள்ளான். என்பதில் தான் கதை உள்ளது என விவாதித்து என் மண்டையை காய வைத்து விட்டார்கள். இவர்கள் பட்டு பட்டு என பேசுவது நாம் படித்த பட்டு  தானா?  இல்லை, வேறு எதுவுமோ?  இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பட்டு போய்விட்டோமா ? என நொடியில் நினைக்க செய்த  சாத்தான் அன்று என்னை இலக்கிய வட்டத்தில் மரிக்க செய்தான்.   

    கற்பழிப்பு, வழிப்பறி, கள்ளக்காதல், காதல் கொலை, தற்கொலை, சிறுமி பாலியல் வன்புணர்வு போன்ற விசயங்களை அன்றாட செய்தி தாளில் வாசித்து விட்டு கடந்து போவது போல என்னால் இதை கடக்கவும் முடியவில்லை.  அதே சமயம் ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி என செய்தியை படிக்கும் போது கொதித்து எழுவது போல எழவும் முடியவில்லை. இதை டைப் அடித்த நேரத்தில் தமிழாசிரியர் செல்போனில் புகைப்படம் எடுத்து பாலியல் தொந்தரவு, அடி உதை என்ற செய்தி டிவியில் அலறிக் கொண்டு இருந்தது. இவர்களுக்கு எல்லாம் எதற்கு ஆசிரியர் பணி. நம் கல்வி முறையில் எதோ குறை இருக்கிறது. எத்தனை தகுதி தேர்வுகள் வைத்தாலும் அடிப்படை ஒழுக்க நெறியை தகுதியாக எடுத்துக் கொள்ள தவறியதேன்?

    அன்னிய நாடுகளை பார்த்து, கற்பித்தலும், அவர்களுக்குரிய நடத்தையும் வேறு. நாங்களும் சாதரண மனிதர்கள் தான் என்று நாய்களுக்கு இணையான பிறவிகள் என்ற மனபோக்கு உண்டா? என தெரியவில்லை.  நாக்கை தொங்கப் போட்டு அலைபவர்கள் தான் என்று கூறுபவர்கள் அந்நாட்டில் போய் கல்வி  தொழில் புரியுங்கள். இந்தியாவில் கல்வி சேவை மட்டும் தான் தேவை. முன் மாதிரியான ஆசிரியர்கள் தான் தேவை. என் குறைந்த பட்ச எதிர்பார்ப்பெல்லாம், தயவு செய்து பள்ளி காம்பவுண்டிலாவது மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள். காலமும் சட்டமும் நம்மை குற்றவாளிகளாகவே சித்தரிக்கின்றன. அந்த அதிகபட்ச வாய்ப்பு மாணவனுக்கு வழங்கப்பட்ட சூழலில் கண்டிப்பு நம் நடத்தை மூலமாக பயிலட்டும். இப்போதொல்லாம் என் மாணவர்கள் தவறு செய்தால் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன். அப்படியாவது மாணவர்கள் நம் வலியையும் வேதனையையும் உணரட்டுமே.

    தமில் இலக்கியம் வளர்க்க வேண்டும். எப்படி ? செய்தி தாள் புரட்டிய போது புரட்டி எடுத்தது. செம்மொழி மாநாட்டில் மோசடி. கோடிகள் இல்லா லஞ்ச ஊழல்களுக்கு மதிப்பில்லை போலும். அதனாலோ என்னவோ , கீழ்மட்ட அலுவல்களில் லஞ்சம் தண்ணீர் பட்ட பாடாய் இருக்கிறது.  தண்ணீர் என்றவுடன் அம்மாவின் மினரல் வாட்டர் திட்டம் நினைவுக்கு வருகிறது. நீண்ட பயணங்களின் போது நானும் நா வறட்சியால் தண்ணீர் இன்றி அவதிப்பட்டதுண்டு. அதை விட பேருந்து நிற்கும் இடத்தில் ஒரு லிட்டர் பாட்டில் இல்லை இரண்டு லிட்டர் தான் இருக்கிறது. விலையை விசாரித்தால் எச்சில் தானாகவே ஊறி நா வறட்சியை போக்கி விடும். மறு நாள் பள்ளிக்கு செல்லும் போது சூடு பிடித்து கொள்வது உண்மை. அம்மாவின் ஆசிர் வாதத்தில் தண்ணீர் கிடைத்து விட்டது. பத்து ரூபாயில் . தண்ணீர். சபாஷ். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். (தூரத்தில் இருந்து அதை ஓட்டாக பாராளுமன்ற தேர்தலில் காட்டுங்கள் )அது இருக்கட்டும் .  கலப்படம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ( அட மிக்ஸிங் க்கு சரியா இருக்குதுல்ல….).
  
    ஒருவேளை தி இந்து ஆங்கில நாளிதழ் தமிழில் வெளிந்துள்ளது என் இலக்கிய சந்தேகத்தை நீக்கவா? இல்லை இலக்கியம் என்பது எந்த வட்டத்தில் அடங்கும் என்று சொல்லவா? ஆனால் , தி இந்து வெற்றி பெறும் என்பது அதன் லே அவுட்டிலேயே தெரிகிறது. எனக்கு வந்து சேர வேண்டிய முதல் நாள் பேப்பர் வரவில்லை. ஆனால், இரண்டாம் நாள் பேப்பர் தாமதாமாக வந்தது.  இருப்பினும் மாலைப் படித்த போது மனநிறைவடைந்தேன். நாம் கட்டிய காசு வீண் போகவில்லை. இருந்தாலும் தமிழின் முன்னனி நாளிதழ் போன்று இல்லை என என் மனைவி சொன்ன போது சிரித்தேன். மனச கவர்கிற மாதிரி செய்தி போடணும் என்றாள். இந்த கவர்ச்சி தான் இலக்கியமோ. அட போங்கப்பா… என் ஆசான் தோ.பா பேசிய புத்தக கண்காட்சி பேச்சு நினைவுக்கு வந்தது. எது எக்காலத்திலும் மனதில் நிலைத்துள்ளதோ அதுவே இலக்கியம். எது மக்களுக்கு எக்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கிறதோ அதுவே இலக்கியம். இதைதான் என் ஆறு விரல் நண்பன் அயல் நாட்டு பயணம் போகிறேன் என்றவன் சொன்னான், நீ எழுதுவதெல்லாம் இலக்கியம். ஆனால் அது அனைவரையும் சென்றடைய வேண்டும். அதை பிறர் செய்கின்றனர். நீ உன் எழுத்து மார்கெட்டிங் ஆகும்போது நீயும் இலக்கியவாதி ஆவாய். உன் எழுத்தும் இலக்கியம் ஆகும்.

   அதுசரி நான் இலக்கியவாதியா? இல்லை இது இலக்கிய வியாதியா? எது  

எப்படியோ இதை நல்லா மார்கெட்டிங் பண்ணுங்க… ஒரு முடிவுக்கு வரச் 

செய்யுங்க. 

Saturday, September 14, 2013

பள்ளிக் கல்வியில் அரசின் அக்கறை தேவை.- எஸ். முத்துக்குமரன்(முன்னாள் துணை வேந்தர்)

   ஆசிரியர் பணி என்பது புனிதமானது. ஆனால் இன்று கொச்சைப்படுத்திப் பேசப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி படிக்க வைக்க வேண்டும்? வகுப்பறையில் மாணவர்களை கண்டித்து , தண்டனை கொடுப்பது மாணவர்களின் நலனுக்கு என்பது உங்கள் உரிமை. இதை மாணவர்களும் புரிந்து கொள்ளவில்லை. இதற்காக சட்டங்கள் இயற்றி இருப்பதை நான் ஒப்புக் கொள்ளவது அல்ல. இப்போதுள்ள அரசு இதற்கு ஒத்து போகிறது. இதற்கு பள்ளிக் கல்வியை காரணமாக சொல்லக்கூடாது.

    கற்பிக்கும் முறைகள் பல உண்டு. ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பல கற்பிக்கும் முறைகளை படித்திருப்பீர்கள். எந்த முறை சிறந்தது, உங்கள் மாணவர்களுக்கு எது சிறந்ததோ, அதை பயன்படுத்துங்கள். எங்கள் கிராமத்தில் ஒரு சொல்லாடை உண்டு. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும் . பாடுகிற மாட்டை பாடிக்கறக்கணும். அது போல மாணவனுக்கு எது உகந்தது என்பதை உணர்ந்து கற்றுக் கொடுங்கள்.


”கொள்வான் கொள்கை அறிந்து அவன் உள கற்று கொள்ள செய்ய வேண்டும்”. அறுபது முதல் நாற்பது மாணவர்கள் உள்ள வகுப்பறையில் , ஒவ்வொரு மாணவனும் அவனுக்கு தான் சொல்கிறீர்கள் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். நீங்கள் சொல்லும் கருத்து அனைவருக்கும் பொருந்தும் விதமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனையும் தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டும். 

   குழந்தை வீட்டில் ஓடும், எதையாவது பொருளை எடுத்து விளையாடும். தெரிந்து கொள்ள வேண்டும் ஆவலில் தான் எடுக்கும், தடுத்து நிறுத்தாமல்,  அதனை தெரிந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அதை தான் பள்ளிகளிலே செய்ய வேண்டும். மட்டம்  தட்டி பேசக்கூடாது. மாணவன் உங்களுக்கு தெரியாத கருத்துக்களை கேட்டால், அதனை புறக்கணிக்கும் விதமாக மாணவனை குறை சொல்ல கூடாது. தெரிந்து பின் கூறுங்கள் . விடையளியுங்கள். உங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளுங்கள். அதனை போக்க முயற்சி எடுங்கள். ஆசிரியர்கள் பதில் தெரிந்தவர்களாக , நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.

    ஆவலை தூண்ட வேண்டும். மாணவர்களிடம் பேசுகின்ற நேரத்தில் முகமலர்ந்து இருந்தால், பயம் இன்றி கேட்பார்கள். நீங்கள் எப்பொழுதும் ஒரு உதாரண மனிதராக இருக்க வேண்டும். மாணவர்கள் முழுவதுமாக ஆசிரியரை தான் நம்புவார்கள். குழந்தையிடம், அப்பா ’தப்பு’ என்று சொன்னாலும், ’இல்லை’ , ’இல்லை’ எங்கள் ஆசிரியர் சொல்லி கொடுத்தது தான் சரி என்பார்கள். அவர் யுனிவர்சிட்டியில் கணித பேராசிரியராக இருப்பார், ஆனால் அவரை குழந்தை நம்பாது. ஆசிரியரை குழந்தைகள் முழுமையாக நம்புகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் , நேர்மையானவர்களாவும், உதாரண புருசர்களாகவும் வாழ்ந்தால் தான் குழந்தைகள் நம்மை மதிக்கும்.

   எங்கிருந்தாலும் ஆசிரியரை மாணவர்கள் ஆசிரியராக தான் பார்க்கிறார்கள். பெரிய பதவியில் இருந்தாலும் , எத்தனை ஆண்டுகளானாலும், என்னுடைய ஆசிரியர் என்று தான் சொல்வார்கள். ஒரு கிளார்க் மேனேஜரான பின் , அவர் கிளர்காக இருந்த காலத்தில் இருந்த மேனேஜரை இவர் என் மேனேஜர் என்று கூறுவதில்லை. இதேப்போல பல துறைகளை சொல்லலாம். என்னுடைய ஆசிரியரை மட்டும் எந்த காலத்திலும் தன்னுடைய ஆசிரியர் என்று தான் சொல்வான். இப்படி பட்ட துறையில் பணியாற்றும் உங்களை பாராட்டுகிறேன்.
மனம் நிறைவாக செயல்பட வேண்டும். இந்த உன்னத பணியை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்பட வேண்டும். மாணவர் மனம் குளிர வேண்டும் . அப்படி செய்வதற்கு உங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். சிறப்பாக செய்தால், உங்களை மாணவர்கள் நல்ல நிலமையில் இருக்கும் நேரத்தில் எண்ணிப் பார்த்து பாராட்டுவார்கள். அந்த விதத்தில் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

     நானும் , என்னுடைய உயர் கல்வி துறை டைரக்டரும் ஒரு சமயத்தில் தெருவில் நடந்து சென்றோம். எதிர் திசையில் இருந்து ஒருவர் கை அசைத்து என்னை கூப்பிட்டார். நானும் கை அசைத்து நிற்க சொல்லி ரோட்டை கிராஸ் செய்து பேசிவிட்டு திரும்பி வந்தேன். ”யாரது உங்க மகனா?” என்று கேட்டார் டைரக்டர். ”இல்லை, இவன் என் ஸ்டுடண்டு”, என்றேன். நீங்களும் உங்கள் மாணவர்களை மாணவனா ? மகனா? என தெரியாத அளவிற்கு பழக வேண்டும்.

   டெல்லியிலிருந்து சென்னைக்கு குடியேறிய சமயம் நடந்த நிகழ்வு . தமிழகத்தின் சீப் செகரட்ரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை பார்க்க வேண்டும் என்று அவரை போனில் அழைத்து அட்ரஸ் பெற்றுக் கொண்டேன். 4 லேக் தெரு என்று கூறினார். நானும் சரியாக அந்த ஏரியாவில் வந்து 4 லேக் தெருவில் நின்று கேட்கிறேன். அப்படி யாரும் இல்லையே என்கின்றனர். அப்போது செல்போன் கிடையாது. இவ்வளவுக்கும் அவர் கடந்த மாதம் தான் சீப் செகரட்ரியாகி ரிடையர்டு ஆனவர். அடுத்த வீட்டில் விசாரிக்கிறேன். அதற்கு அடுத்த வீட்டில் விசாரிக்கிறேன். யாருக்கும் தெரியவில்லை. அதற்கு அடுத்த வீட்டில் இருப்பவரிடம் அனுமதிப் பெற்று, அவர் வீட்டிலிருந்த போன் மூலம் , அவரிடம் பேசினேன். நான் முதலில் சென்று விசாரித்த இடத்திற்கு அருகில் சந்து மாதிரி போகிறது . அதில் நாலாவது வீடு தான் அவர் வீடு. அருகில் இருப்பவர்களுக்கே அவரை அடையாளம் தெரியவில்லை.

  நான் ஒருமுறை சிங்கப்பூர் சென்றிருந்தேன். அனைவருக்கும் தெரிந்த சாப்பிங்க் செண்டரில் சாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு குரல், “அய்யா வணக்கங்கய்யா…” யாருப்பா தெரியலையே என்றேன். அவன் என்னை சரியாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறான். அய்யா நான் 66ல் உஙக் கிட்ட மாணவனா இருந்தேன். எங்க இங்க?என்று கேட்டேன்.  நான் ஆப்பிரிக்காவில வேலை செய்யுறேன். போற வழியில சிங்கப்பூரில் பொருட்கள் வாங்கி செல்லலாம் என்று வந்தேன். நீங்க டெல்லியில இருக்கீங்கன்னு சொன்னாங்க.. நீங்க இப்ப சிங்கப்பூர்ல்ல இருக்கீங்களா? 12 ஆண்டுகளுக்கு முன் கிண்டி காலேஜில் என்னிடம் படித்த ஒருவன் டெல்லியில் நான் இருந்த விபரத்தை தெரிந்து வைத்துள்ளான். இரண்டு மாணவர்கள் சந்தித்தால் என்ன நிகழும். ஆப்பரிக்க காட்டில் வாழும் ஒருவன் டெல்லியில் நான் இருந்த விபரத்தை அறிந்து வைத்துள்ளான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆசிரியர்களாகிய உங்களை ஆயுளுக்கும் நினைத்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதுவும் மோசமாக இருந்தால் இன்னும் கூடுதலாகதான் பேசுவார்கள்.

மதிப்பீடு செய்வது எதற்கு? தேர்வுக்கு மாணவன் எவ்வாறு படிச்சுருக்கான் என்பது தெரியவா?  தேர்வு மதிபெண்கள் அதை மட்டும் காண்பிக்கவில்லை. எத்தனை மதிப்பெண் பெற்றுள்ளார்கள்?  மாணவர்கள் அனைவரும் சராசரியாக 50 க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் . நீங்கள் சரியாக சொல்லிக் கொடுத்திருந்தால்  அனைவரும் 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பார்கள். மதிப்பீடு செய்வது, தேர்வு என்பது
1.   நீங்கள் கற்று கொடுப்பது சரிதானா என அறிந்து கொள்ள.
2.   நீங்கள் சரியாக கற்றுக் கொடுக்க பயிற்சிகளின் தேவையை அறிய, பூர்த்தி 
  செய்ய மதிப்பீடு உதவுகிறது. 

3.               அரசு கல்விக்கு செலவு செய்வது பயனுள்ளதா என தெரிந்து கொள்ள
மதிப்பீடு உதவுகிறது. ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால் பயிற்சியை முறையாக தந்திருப்பார்கள். ஆசிரியர்களிடம் குறை இருக்கிறதா? மாணவர்களிடம் குறை இருக்கிறதா? என்பதை அறிந்து அசம்பிளியில் விவாதித்து இருப்பார்கள். இப்போது இந்த ஆட்சியில் இவை செய்யப்படுவதில்லை.

    தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்தால், நாம் கற்பிக்கும் முறை சரிதானா? என அறிய முடியும். நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி , மாணவர்களுக்கு குறையின்றி கற்பிக்க வேண்டும். நமக்கு மனநிறைவு ஏற்படும். நாம் காரியத்தை சரியாக செய்தோம் என்றால் மகிழ்ச்சியாக இருப்போம். நாம் மகிழ்ச்சியாக இருந்தால் மென்மேலும் வளர்வோம். நாடு செழிக்கும்.

ஆசிரியர்களுக்கு சிசிஇ சார்பான பயிற்சியை வழங்கும் வேதா நிறுவனத்தின் ஸ்ரீதரை இந்த சமயத்தில் பாராட்டுகிறேன். அவருடன் உதவியாக உள்ள அத்தனை நண்பர்களையும் பாராட்டுகிறேன். இந்த பயிற்சியை பெற்று சிறந்த ஆசிரியராக விளங்க இருக்கும் உங்களையும் பாராட்டுகிறேன்.


இது வேதா அகாடமி சார்பில் மதுரையில் திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சிசிஇ பயிற்சி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்ரீதர் வழங்கி, அவர் எழுதிய சிசி இ சார்பாக தெளிவான புத்தகங்கள் (2 வால்யூம்) வெளிடீட்டு விழாவில் முன்னாள் வயிஸ் சான்ஸ்சலர்,  (பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்)  எஸ். முத்துக்குமரன் பேசிய உரை.

விழாவில் இரண்டாவது பாகம் மட்டும் தான் இருந்தது. விரைவில் முதல்,இரண்டாம் பாக புத்தகங்களை படித்து , அதற்கான மதிப்பீட்டை விரைவில் எழுதுகிறேன். 




Friday, September 13, 2013

வைகை ஆற்றை விற்கிறார்கள்...ஜாக்கிரதை...!

என் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு வைகை ஆற்றின் சீர்கேட்டை ஆராய்வதற்கு நேற்று காலை 11 மணி அளவில் கள பயணம் மேற்கொண்டோம். மாணவர்கள் உற்சாகத்துடன் களத்தில் இறங்கினர். 

 களப்பயணம் உற்று நோக்கலில் தொடங்கியது. வைகை ஆற்றை அதன் கரையோரம் நின்று ஆய்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து, ஆறு எவ்வாறு மாசுப்பட்டுள்ளது என்பதை உற்று நோக்கி, தங்கள் நோட்டுகளில் பதிய செய்ய , அறிவுரைகள் வழங்கப்பட்டது.

     ஆய்வை குருவிக்காரன் சாலையின் தொடக்கத்தில் ஆரம்பித்தோம். அருகிலுள்ள குடியிருப்புகள் , அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் குழாய் மூலம் ஆற்றில் கலப்பதை பார்த்த மாணவர்கள் நிச்சயம் நம் ஆங்கிலப்பாடத்தில் கடவுள் பூமிக்கு வருகைபுரிந்து ஆற்றின் அழுகையை விசாரிப்பது போல விசாரித்தால், அய்யோ நம் நெஞ்சு தாங்காது என்று சொல்லி ஆதங்கப்பட்டார்கள் மாணவர்கள்.

  “சார் ... ஒரே நாத்தமா இருக்கு சார்... ” என்று ஐயப்பன் சொல்ல, “அடே இந்த நாத்தமெடுத்த தண்ணியிலும் எருமைமாடு எப்படி படுத்து புரளுது... பாரு” என்றாள் திவ்யா. 
“சார்...கீழே பார்த்து நடங்க சார்.. ஆத்துக்குள்ளேயும் ஆயி.. ஆத்து ஓரத்திலு ஆய்..” என்றாள் த்ரிக்‌ஷா ப்ரியதர்ஷினி. “அங்க பாருங்க சார் ஒரு நாய்.. ஆய் பேலுது..” என்று கார்த்திக் சுட்டிக்காட்டிய இடத்தில் மனித நாயும் அச்செயலை செய்தது. அனைவரும் சிரித்தனர். 

“ஆறு எல்லாம் ஒரே குப்பை  சார்... இந்த ஏரியா மக்கள் ஆத்தில தான் குப்பையை எறியுறாங்க போல “என்றான் சஞ்சய். 
“அட போங்க சார்...வண்டியூர் பக்கம் வாங்க... எங்க ஏரியாவுல...பூ , மாலை அப்புறம் வாழை மட்டை என எல்லாத்தையும் ஆத்தில கரைக்கிறேன்னு போட்டு ஒரே வீச்சம்... இப்ப சாமி கும்பிட்டாங்க....சொல்ல வேண்டியதில்லை...எல்லா குப்பையும் ஆத்துக்குள்ள தான் சார்...” என்று ஆதங்கப் பட்டுக் கொண்டனர் கார்த்திக்கும், மணிப்பாண்டியும்.  



 “சார் ... ஆத்தோரத்தில மரம் நட்டாங்கல்ல.. ஒரு மரம் கூட வளர காணாம்... அடுத்து நாம ஆத்தோரம் மரம் வளர்க்க...மரம் நடுவோம் சார்...” என்று ஆலோசனைகள் வழங்கினாள் பாண்டி மீனா. எங்க வீடு பக்கம் தான், நான் தண்ணீர் ஊற்றுகிறேன் என்று உறுதியளித்தான் உதயக்குமார்.


 சிறுது தூரம் நகர்ந்திருப்போம்.அனைவ்ரும் ஒத்தக் கூரலில் , “சார், அங்க பாருங்க...ஆத்துக்குள்ள... சாயம் போடுறாங்க... என சாயம் ஏற்றி காய வைத்துள்ள சேலைகளையும், அதன் அருகில் புகையை கக்கிக் கொண்டு எரியும் அடுப்பையும் காட்டினார்கள். நானும் சுட்டிக்காட்டி , ஆதங்கப்பட்டேன்.

எங்கு பார்த்தாலும் குப்பை ,இருநூறு அடிக்கொரு சாக்கடை தண்ணீரை ஆத்துக்குள்ள ஓட விடுகிற குழாய், காலைக்கடன் முடித்த தடம்,விலங்குகளின் கழிவுகள், ஆற்றுக்குள் முளைத்துள்ள தொழுவங்கள், ஆற்றின் கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரச்சாமான்கள் , குப்பை தொட்டிகள் இருக்க அதன் அருகிலே ஆற்றில் வீசியெறியப்பட்ட பலத்தரப்பட்ட கழிவுப் பொருடகள், நெகிழி பொருட்கள் என தாம் பார்த்தை பதிவு செய்தார்கள்.  


“சார் ,ஆத்துக்குள்ள மாட குளிப்பாட்டுறாங்க சார் ..” என்ற தேவதர்ஷினிக்கு, “ அட போப்பா...அந்த தண்ணியிலே கெமிக்கல் சாக்க அலசுறாங்க... அந்த தண்ணியிலேயே .. துணிய தோய்ச்சு போடுறாங்க...”என அலறி பேசினாள் செல்வ ராணி.

“சார்... ஆத்த மாடுமில்ல.. நம்ம காத்தையும் இவனுங்க.. பாழ் படுத்துறாங்க... இவனுகளையெல்லாம் கட்டிப்போட்டு உதைக்கணும் சார்...” என்றான் விக்னேஷ்வரன்.
அதற்குள் இப்ராகிம் “சார்... யாரும் இத கண்டுக்காம இருக்காங்களே.. அப்புறம் எப்படி சார் ... தண்ணீர் மதுரைக்கு கிடைக்கும்.. ” என்றான்.

“சார்... காய்கறி கழுவுகள் .. ஆத்துக்குள்ள தொழுவம் கட்டி கொடுக்குறானுங்க... ” என்றான் தினேஷ். “கார்ப்ரேசன் இதுக்கு வரி போட்டு கடை வாடகை வாங்குற மாதிரி எதாவது வசூல் பண்ணும்டா...” என்றான் தங்கமணி.



 “சார் ஆட்டு இறைச்சி , கோழி இறக்கை இன்னும் பல கழிவுகள் இந்த ஓப்புளப்படி பாலத்தை தாண்டினா இருக்கும் சார்...எனக்கு குடலை புரட்டும் நாம திரும்புவோம் ”என்று கூறி தேவதர்ஷினி எங்களின் ஆய்வுக்கு முற்றுப்புள்ளைவைத்தாள்.


யுவராஜ், “சார்...போற வண்டிகளை  பாருங்க.. எவ்வளவு புகையை  கக்குது.. நுரையீரல் அப்படியே அவுஞ்சு போக போகுது சார்...” என்றான்.



கள ஆய்வுகளை வகுப்பறையில் விவாதித்தனர். நல்லதொரு ஆய்வு கட்டுரை தயார் செய்து வருகிறோம் . திங்கள்  தருவதாக உறுதியளித்தார்கள். நான் அவர்களிடம் வைத்துள்ள கோரிக்கை...நம் ஆற்றை காக்க .. நம் வைகையை காக்க என்ன செயல்திட்டம் உருவாக்க வேண்டும் “ என்பதை யோசிக்க சொன்னேன்.

இவ்வளவு தூரம் பயணப்பட்ட நீங்களூம் யோசனைகளை அள்ளித்தரலாம். உங்கள் ஆலோசனைகளையும் கமண்டாக போடவும். காப்போம் மதுரையின் வைகையை..!