இத்தனை நாளாய்
ஒருவனை இழந்துஇருக்கின்றோம் என்று நினைக்கத்தோன்றும் என்றால் அது நம்மையறியாமல் அவன்
மீது நாம் கொண்டுள்ள பற்று , நட்பு, பிரியம் ஆகும் என இப்படி உங்களுக்கு பொருத்தமான
, பிடித்தமான வார்த்தைகளால் இட்டு நிரப்பலாம். அவனை சந்தித்தப்பின் ஏற்படும் மனநிலை
தேங்கிய நீரில் வீசி ஏறியப்பட்ட கல்லினால் ஏற்படும் சலனம். அது நீண்டது. அது ஓய்வு
நிலைக்கு வருவதற்கு மணிநேரம் பிடிக்கலாம். அந்த மணி நேரத்திற்குள் மன அலைகள் எழும்பும்
உயரம் ஆழிப்பேரலையை விட பெரியது. உயர்ந்து
எழுந்து அடங்கும் போது பிரபஞ்சம் அதனுள் அடங்கியிருக்கும். என்னை அப்படி அவனுள்ளே அடக்கியவன்
வேறு யாராக இருக்க முடியும். அந்த தீ பரவ தொடங்கிய தருணம் நான் அதனுள் பொசுங்கிப்போனேன்.
மெல்ல சூடேறி, அதன் போக்கில் காற்றின் துணையுடன் பற்றி எரிந்து , அதனால், தாம் எரிவதுடன்
அருகில் உள்ள அத்தனையையும் தன்னோடு சேர்த்து எரிய விடுவது எதார்த்தம். இந்த தீ அருகில்
இருந்தாலே நம்மை சூடேற்று முன்பே தானாக எரித்து
விடுகிறது. அவன் பேச தொடங்கிய தருணம் , அவனாகவே மாறி விடுவது என்பது அறிவியல் முரண்.
இனி நான் அவனின் அடி வருடி என்று கூட அழைக்கப்படலாம். அதற்காக வெட்கப்படப்போவதில்லை.
இது என்ன கூடா நட்பா. என்னோடு பேசக்கூடாது என்று சொல்லியும் என்னை தேடி வந்து பேசிய
நட்பு. முரண்களில் தொடங்கிய முதிர்ச்சியான நட்பு. அவன் வார்த்தைகளில் சொல்லப்போனால்
இது சுவரில் இறுகி, சுவரோடு சுவராக ஒண்றியுள்ள ஆணியை , அடித்து, ஆட்டி, வன்மையாக பிடுங்கி
கொள்ளும் விசயம் அல்ல. நட்பு அது சுவரிலிருந்து தானாக ஸ்கூரு டிரைவர் கொண்டு அப்படியே
சர சர சர என தானாக கழட்டிக்கொள்வது போன்றது நட்பு. அது சுவரில் இருந்து பூப்போல உருவி
வருவது. தானாக கழண்டு கொள்வது போல , இறுக்கம் தளர்ந்து தன்னை ஒப்படைப்பது. இந்த நட்பு
பூ போன்று மனம் பரப்பும். மாற்றம் என்பது மானுட தத்துவம். இந்த மாற்றம் இன்று நடந்தேறியுள்ளது.
இரண்டு வருடம் பார்த்தும் பார்க்காமலும் பேசியும் பேசாமலும், நட்பாய் இருந்தும் இல்லாமலும்,
ஒதுங்கியும் , ஒதுங்க முடியாமலும் இருந்த காய் தானாக கனிந்து இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் புனைவில்
ஆரம்பித்த இந்த நட்பு, அதன் தொடர்ச்சியாக எங்களுக்கு முரண்களை பரப்பி, எட்டியே பார்க்க
செய்திருந்தது. இலக்கிய வட்டத்தின் நீட்சி,
எதிரும் புதிருமாக, முக நூலில் நட்பாக, கேலியாக, கோபமாக, எழுதிய எழுத்துக்களில் விமர்சகனாக
இப்படி ஒரு சாராசரி சென்னை டூ மதுரை அரசு போருந்தைப்போல, சிக்கலாகவும், சிக்கனமாகவும்,
தாமதமாகவும், பாதுகாப்பாகவும் சென்று கொண்டிருந்தது எங்கள் நட்பு. சமீபத்திய சந்திப்புகளின்
நீட்சி, அவசியம் அரசு தொடங்கியுள்ள மினி பஸ் போன்று இன்னும் பளப்பளப்பாக பொழிவாக இன்று
வெள்ளோட்டம் கண்டது. இதன் பின்னால் பேசப்படும் அரசியல் பற்றி இருவருக்கும் கவலையில்லை.
இந்த பேருந்துக்கு பின்னால் இலை இருப்பதில் இருவருக்கும் கவலையில்லை. எனவே , அதனை நீக்க
சொன்னாலும் கவலைப்படுவதற்கில்லை. இல்லை இது வேறுமாதிரியான இலை என்று சொன்னாலும் மகிழ்ச்சி
அளிக்கப் போவதில்லை.
உன்னை தியாகம் செய்வதனால் மட்டுமே பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்” ஆம் அவனுக்காக
என்னை தியாகம் செய்ய துணிந்து விட்டேன். புனைவு
செந்திக்காக வருந்தினான். செந்தி பற்றி உயர்ந்த கருத்து கொண்டிருந்தான். எனக்கான இடத்தை
கொடுத்தவன் செந்தி என்று மனசார சொன்னான். தன் பெயரில் தீ கொண்ட அவனுக்காக பத்திரிக்கைகள் கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றன.
அவன் யாரையும் உயர்த்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் செந்திக்கும் எனக்கும்
உள்ள நட்பு அறிந்திராமலே , தன்னை உயர்த்திய கரத்தை உயர்த்தி பிடித்து பேசுவது இன்று
அரிது. சந்தர்ப்பம் கிடைத்தால் சந்தில் சிந்து பாடிச் செல்பவர்கள் தான் அதிகம். இவன்
அவர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவன். செந்தி இதைப்படிக்க நேர்ந்தால், தயவு
செய்து அந்த ஆத்மா வை உங்கள் கரங்களால் மீண்டும் பிணக்குகள் களைந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
நல்லது செய்து நண்பரை பெருக்க வேண்டும். (பா 89) நான்மணிக்கடிகை கூறுகிறது. என்னால்
இந்த இரு நண்பர்களும் மீண்டும் பிணக்குகள் நீக்கி , நட்பு கொள்வாராகினும் மதுரையில்
இலக்கியம் இன்னும் நல்லவாறே வளர வாய்ப்பு உள்ளது. குற்றம் நீக்கும் கேள்வியார் நட்பு
மருந்து போன்றது (பா 17) என்கிறது திரிகடுகம்.
அவனை பேச விட்டுக்கோட்டுக்கொண்டே
இருக்கலாம். அவனை பாடவிட்டு பல நேரங்களில் கேட்டு இருக்கின்றேன். நல்ல ரசனையுள்ளவன்.
அதனால் தான் அவனால் எதையும் ரசிக்க முடிகிறது. ரசித்ததை எழுத முடிகிறது. இவன் நட்பு
பார்பதற்கு எந்த தகுதியும் பார்ப்பதில்லை என்பதை அவன் நடத்தும் வதனம் எடுத்துக்காட்டும்.
மனுசி பாரதியை அறிமுகப்படுத்தியவன் என்பதில் அவனை பெருமையாக சொல்வேன். இப்படி நிறைய
மனுசிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவன். அறிமுகப்படுத்த தாயாராக இருப்பவன்.
இவன் கொண்ட நட்பு
, இவன் பேச்சு எனக்கு , இராமாயண நிகழ்வை நினைவுக்கு
வர செய்கின்றது. வேட்டுவன், குரங்கினத்தவன்,
அசுரன் ஆகியோரோடு இராமன் நட்புக் கொள்வதும் , நின்கிளை என்கிளை நின் சுற்றம் என் சுற்றம்,
நின் பகைவர், என் பகைவர் தீயரே எனினும் நின் உற்றார் என் உற்றார் என்று சுக்கீரீவனிடம்
அவன் உறுதி மொழிவதும் நட்புக் கொள்வதற்குத் தகுதி பார்க்க வேண்டியதில்லை. இன்னுயிர்த்
துணைவர்க்காக எச் செயலையும் செய்யலாம் என்பதைப் புலப்படுதுகின்றன.
இனி சரவணா , என்
நட்பு வட்டம் உன் வட்டம் . உன் எழுத்து இனி
என் எழுத்து இதை கொண்டு செல்வது என் கடமை. என்று சொல்லும் போது இவனால் எதையும் செய்து
விட முடியும் என்று எண்ண செய்தது. என்னடா அப்படி சொல்கின்றேன் என்று சொல்லி விடாதீர்கள்.
பிளாக்கில் நான் எழுதும் போது ஊரே என்னை பாராட்டும் , ஆனால் மதுரையின் பிரபலங்கள் என்னை
பிளாக் செய்து விடும். உயிர்மை நடத்திய போட்டியில் என் பிளாக் மூன்றாவதாக வந்த போது
அதிர்ச்சியில் என்னை புறம் தள்ளியவர்கள் நான் அறிவேன். வேண்டுமென்றே என்னை குறை கூறியவர்கள்
மத்தியில் என் எழுத்தால், என் உழைப்பால் இன்று இவனை நட்பாக்கி கொண்டேன். அவனும் அதனை
மிகப் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டான். சீனா
அய்யா கூழாங்கற்களில் என்னை தெரிகிறதா என்ற
போது என்ன அய்யா என்னை அவ்வளவு பெரியா ஆளா பார்க்காதீங்க என்று சொன்ன அந்த ஆத்மா பற்றிய
எளிமை தீயாக என்னுள் அப்போதே பரவ ஆரம்பித்து விட்டான். இந்த சுவாலை என்னையும் அவனையும்
பிரிக்க முடியாமால், நட்பு கொண்டு சுவாலையாக சுடர் விட்டு, எனக்கே வெளிச்சமாய் உள்ளதை
உணர்கின்றேன்.
முதல் முறையாக என் நண்பன் செந்தி(புனைவு) என்னை
கண்டு எடுத்தான். அதன் பின் காக்கை சிறகினிலே இதழ் ஆசிரியர் எட்வின் . உங்கள் படைப்பை
அனுப்புங்கள் என்று சொல்லி என்னை எனக்கே அடையாளப்படுத்தியவர். இவர்களுக்கு அடுத்து
இப்போது இவன். இவர்கள் எல்லாம் பெரிய புராணத்தில் நட்புக்கொண்ட இறைவனாக காட்சியளிக்கின்றனர்.
நட்புக் கொண்ட சுந்தரருக்காக இறைவன் பொன்னும்
பொருளும் தருவதும் , தூது செல்வதும், முதலையுண்ட சிறுவனை உயிர்ப்பிப்பதும் நட்புக்காக
எந்த உதவியையும் தன் தகுதிக்குப் பொருத்தமற்ற செயல்களைக் கூடச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்துவனவாக
உள்ளன. என் தகுதியை உயர்த்துவதற்காக இவர்கள் நட்பு எனக்கு இறைவனின் நட்பு போன்றது.
இவர்கள் மூவரும் இறைகொள்கையை மறுப்பவர்கள் என்பதும் அறிந்தவன் .
அவனுடன் பேசியதில்
எனக்கு ஆத்ம திருப்தி . சாதல், பொருள்கொடுத்தல், இன்சொல் கூறல் , கூடி இருப்பதில் மகிழ்தல்,
துன்பத்தில் நோதல், பிரியும் போது உள்ளம் கலங்குதல் உண்மை நண்பரின் இலக்கணம் என்று
தொகுத்துரைக்கிறது ஏலாதி. (பா. 68). அவனுக்காகவே சாக துடிக்கிறது மனசு. அவன் பேச்சு
கேட்டுக் கொண்டே இருக்கத் தொடங்குகிறது. பேச்சை எங்கு தொடங்கி எதில் பொருத்தி, எதில்
அவிழ்த்து, எதில் முடிப்பான் என்பது அவனுக்கே உரிய மொழியாக உருவெடுத்து , நம்மை அவன்
காலத்தினுள் கட்டுண்டு இருக்க செய்து விடுகின்றது. இருந்தாலும் அவன் அவனாகவே, நான்
நானாகவே பிரிந்து செல்கின்றோம் . விடைப்பெற்று, இது நாளைய சந்திப்பின் குறியீடாகவே
படுகின்றது. அவன் மீது கொண்ட நட்பு விரியாலாம். ஏனென்றால் அவன் நட்பாட்டம் ஆடியவன்.
அவனின் சொல்லாடலை புதிய தலைமுறையும் ரசித்திருக்கலாம். உஙகள் எல்லோருக்கும் பிடித்தவன்
. எனக்கும் எப்போதும் பிடித்தவன். இப்போது இன்னும் கூடுதாலாய் பிணைப்புகளுடன் அறுபடாத
சேர்மமாய் …அவனின் எல்லா ஆற்றல் வட்டத்திலும் பூர்த்தியுற்றவனாய்… நானும் இணைகின்றேன்.
அந்த தீ பொசுக்குகின்றது…ஆனந்தமாய் சாம்பலாகின்றேன். ஆத்மர்த்தியுடனே….ஆத்ம திருப்தியில்.
6 comments:
பூடகமான பதிவு. தீ அணையாது ஒளிரட்டும்
// உன்னை தியாகம் செய்வதனால் மட்டுமே பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்... //
உண்மை...
///இப்போது இன்னும் கூடுதாலாய் பிணைப்புகளுடன் அறுபடாத சேர்மமாய் …அவனின் எல்லா ஆற்றல் வட்டத்திலும் பூர்த்தியுற்றவனாய்… நானும் இணைகின்றேன்.///
வாழ்த்துக்கள் நண்பரே
உண்மை தான்!
தமிழ்மணம் பிளஸ் வோட்டு + 1 போட்டு விட்டேன். இந்த நல்ல பதிவு பலரை சென்று அடைய வேண்டும் என்று + 1 வோட்டு!
வாழ்த்துகள். எனக்கு புரியவில்லை.
யாரை குறிப்பிடுகிறீர்கள்
Post a Comment