Monday, October 21, 2013

எதை நோக்கிய பயணம் என்பது முக்கியம்

நீ ஏற்கனவே நிறைவானவனாக, முழுமையானவனாக இருக்கிறாய். நீ உண்மையாகவே எல்லாம் வல்லவன்.”  என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகளின் ஆழத்தை என் மாணவர்களிடம் பார்க்கின்றேன்.  பாடத்தையும் கற்பிக்கும் போது ,பாடக்கருத்தினை நேரடியான அனுபவம் மூலம் தரும் போது, மாணவன் தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, புதுமையை உள் வாங்கி, தான் ஏற்கனவே புதைத்து வைத்துள்ள அறிவை தூசி தட்டி எழுப்பி, தொடர்பு படுத்தி, புதிய கருத்தோடு பொருத்தி, ஆனந்தமாக , தானாகவே கற்றுக்கொள்கின்றான்.


   
   களப்பயணம் அவனுக்கு உற்று நோக்கல் பண்பை மட்டும் தரவில்லை என்பதை பல தருணங்களில் உணர்கின்றேன். புதிய இடம் , புதிய அணுகுமுறை, புதிய விசயம், புதிய களம், புதிய புதிய என அனைத்தையும் புதுமையாக காண்கின்றான். உணர்கின்றான். கூச்சம் என்பதை முற்றிலும் துறந்தவனாக தொடர்ந்து கேள்விகளை துளைத்து தனக்கு தேவையான விசயங்களை பெறுபவனாக மாறிவிடுகின்றான்.
நோய்த்தடுப்பும் சுகாதாரமும் என்ற பாடம் சம்பந்தமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அங்கு எவ்வகையில் சுகாதாரப்பணிகள், மருத்துவத்தொண்டுகள், நோய்த்தடுப்பு மற்றும் நோய் பற்றிய விழிப்புணர்வு செய்யப்படுகின்றன என்பது சார்பாக நேரடியாக அறிந்து வர சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாலை 3 மணிக்கு எட்டு மாணவர்களுடன் சென்றேன்.


    நானும் கார்த்திக் என்ற மாணவனும் முதலில் பைக்கில் சென்றோம். பிற மாணவர்கள் பள்ளி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். கார்த்தி டாக்டரை பார்த்து நாம் எதுக்காக வந்து இருக்கோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக்க, சாரை அறிமுகப்படுத்து என்றேன். சரிங்க சார் என்று  விறு விறு என்று உள்ளே சென்றான். கர்பிணிப் பெண்கள் தவிர யாரும் இல்லை. டாக்டர் டாக்டர் என்று எல்லா அறைகளையும் கூவி விட்டு வெளியே வந்து சார் யாரையும் காணாம் என்றான். வெளியிலிருந்து ஒரு (ஆயா என நினைக்கிறேன்) உள்ளே வந்து யார் வேண்டும் என்றார். நான் டாக்டர் இருக்கிறாரா என்றேன். அதற்குள் கார்த்தி முந்திக்கொண்டு, அக்கா டாக்டர் இருந்தா சொல்லுங்க.. நாங்க ஆஸ்பத்திரி எப்படி செயல்படுகிறது என கேட்க வந்துள்ளோம் என்றான். அவர் எங்கள் இடப்புறம் செல்லும் பாதையில் நுழைந்து , சிஸ்டர் யாரோ வந்திருக்காங்க என்றார். அவர் வெளியே வருவதற்குள் கார்த்தி உள்ளே நுழைந்தான். சிஸ்டர் எங்க ஹெட்மாஸ்டர் வந்திருக்கிறார். நாங்க ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய வந்துள்ளோம் என்று எந்த தயக்கமும் இல்லாமல் சொன்னான். நான் வணக்கம் தெரிவித்து , வருகையின் நோக்கத்தை சுருக்கமாக சொன்னேன். அப்போது அவர் இன்று நடைப்பெற்ற விசயங்களை , புள்ளி விபரங்களை மெயில் அனுப்ப முயற்சித்து இருந்தார். நான் பணியினை தொடர்ந்து செய்யுங்கள், மாணவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று வெளியில் பிற மாணவர்களுக்காக காத்திருந்தேன். அனைவரும் வந்தனர்.
தங்க மணி சார் , நாங்க இங்க தான் காய்சலுக்கு மருந்து வாங்க வருவோம் என்றான்.

    சஞ்சய் எனக்கு மண்டை உடஞ்சப்ப இங்க தான் சார் கட்டு போட்டேன் என்றனர். இப்படி அனைவரும் அப்பகுதி மாணவர்கள் என்பதால் எதேனும் ஒரு காரணத்துக்காக வந்திருந்தனர்.
சஞ்சய் டெங்கு காய்சல் இருக்கும் என்று சிகிச்சையை முதல் பருவ தேர்வு இறுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் வைத்தியம் மேற்கொண்டிருந்தான். நாகார்ஜீன் ஏண்ட சஞ்சய் இங்க டெங்குக்கு காட்டல … என்று கேட்டவாறு சிஸ்டரை நோக்கினான். நானும் ஏன் சிஸ்டர் இங்கு டெங்கு நோய்க்கு சிகிச்சை மேற்கொள்வது இல்லையா? என்றேன். அதற்கு அவர் நாங்கள் இங்கு டெங்கு சிகிச்சை மருந்து கொடுப்பதில்லை. அதன் அறிகுறிகள் தென்படுகிறதா என இரத்தத்தை சோதித்து உறுதி செய்வோம். மேல் சிகிச்சைக்கு இராஜாஜி அரசு பொது மருத்துவ மனைக்கு தான் அனுப்புவோம் என்றார்.

     மாணவர்கள் எத்தனை பேர் பணிபுரிகிறீர்கள்? என கேட்க, ஒரு டாக்டர், மூன்று  செவிலியர், இரண்டு ஆயா என்றார். வீடுவீடா மருந்து கொடுக்கிறாங்களே அவுங்கள விட்டுட்டாங்க என்றான் தங்க மணி. அவர் சிரித்துக் கொண்டே தன் உரையாடலை தொடர்ந்தார். சுகாதார விழிப்புணர்வுகள் பற்றி கூறும் போது டெங்கு , மலேரியா குறித்த போஸ்டர்களை காட்டி விளக்கினார். பொதுவான மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து சொன்னார். கர்பிணிப் பெண்கள் முன்னிலைப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ஆரம்ப சுக்காதார மையங்கள் என்றார். உடனே அருகில் இருந்த இப்ராஹிம் அட குழந்தை பிறக்கிற ஆஸ்பத்திரிடா நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல்ல. என்றான்.
   
    அவருடன் மாணவர்களும் நானும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். எதோ புதிய விசயங்களை கற்றுக்கொண்ட உணர்வோடும், தாம் தெரிந்து வைத்துள்ள விசயத்தை வெளிப்படுத்த கிடைத்த தளமாகவும், தான் பழகிய இடத்தில் உள்ள சங்கடங்களை புரிந்த உணர்வோடு சிலரும் மகிழ்ச்சியோடு விடைப்பெற்றோம். அப்போது நான் இதில் யாருடா டாக்டருக்கு படிச்சு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே டாக்டரா ஆகிறது என்று கேட்டேன். இப்ராஹிம் சட்டென்று சார் நம்ம கிளாஸ்ல விக்கி (விக்னேஸ்வரன்) தான் சார் டாக்டராகணும்ன்னு சொல்லியிருக்கான்… டேய் சொல்லுடா.. நான் டாக்டராகி இங்க வருவேன் என்று… விக்கி சிரித்தப்படி டேய் சும்மா இருடா.. என்றான்.


     “பள்ளிக்கூடத்தின் வெற்றியின் அளவை அல்ல பார்க்க வேண்டியது. (குழந்தையின்) வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாய் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். குருட்டுத்தனமான பயத்துடன் கூடிய பணிவோ கட்டாயப்படுத்தித் தோற்றுவித்த ஆர்வமோ அல்ல வேண்டியது. ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படத் தாயாரவதுதான் வேண்டும்” என்ற பெஸ்ட்டலோசியின் கல்விக் கண்ணோட்டத்தை மாணவர்களிடம் பொருத்திப் பார்த்து விடைபெறுகின்றேன்.    .       

      


10 comments:

மகேந்திரன் said...

அருமையான பதிவு நண்பரே...
இன்றைய குழந்தைகளுக்கு தேவையான ஒன்று...
ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுதல்..
அந்த மருத்துவமனைப் பயணம் நிச்சயம்
மாணவர்களுக்கு நல்லதொரு தாக்கத்தை கொடுத்திருக்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு ஆசிரியர் என்ற முறையில் தங்களின் பணியினை மனமாரப் பாராட்டுகின்றேன் ஐயா. வகுப்பறைக் கல்வியை விட, நேரில் காணுகின்ற காட்சிகள், ஆயிரம் மடங்கு பாடத்தை நொடியில் போதிக்கும் வல்லமை பெற்றவை.
இராமேசுவரத்திலே பணியாற்றிய ஆசிரியர், தன் மாணவ்ர்களை கடற் கரைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று நமக்கு அப்துல் கலாம் கிடைத்திருப்பாரா
தங்களின் சேவை மிகவும் மகத்தானது. தொடருங்கள் நண்பரே

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அருமையான நற்செயல் - எவ்வளவு தான் ஏட்டுக்கல்வி படித்தாலும் - நேரில் சென்று பார்த்து உள்வாங்கி - தேவைப்படும் போது செயலாற்றச் செய்யும் இச்செயல்கள் மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பணி சரவணன், நீங்கள் செய்யும் இந்த காரியம் மாணவர்களுக்கு புதியதொரு உந்து சக்தியை கொடுக்கும் என்பதே உண்மை...!

திண்டுக்கல் தனபாலன் said...

// வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாய் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்... //

உங்களைப் போல் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்... பாராட்டுக்கள்... பல...

வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam said...

அந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற மாணவர்களுக்கு அதன் செயல்பாடு குறித்த விளக்கங்கள் கிடைத்திருக்கும்.எப்போதுமே hands on experience அதிக பலன் தரும். வாழ்த்துக்கள்.

Geetha said...

மாணவர்கள் உங்களைப் போன்ற ஆசிரியரையே விரும்புவார்கள்.நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் கேள்விகேட்கும் மனப்பான்மையையும் வளர்த்து விட்டால் போதும் .சிறந்த மாணவர்களாக வருவார்கள் .தொடருங்கள் .வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு சகோதரரே...
வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

அருமையான பகிர்வும் நல்ல வழிகாட்டலும் சார்!

சித்திரவீதிக்காரன் said...

உண்மையிலே அருமையான தலைமையாசிரியர் நீங்கள். உங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

Post a Comment