Tuesday, February 22, 2011

வீதியில் திரியும் சிறுவன் .. !

   இன்று என் நண்பர் கல்யாண் ஜி பள்ளி முடிந்து ஊமச்சிக் குளம் அருகில் உள்ள டீக்கடையில் தன் நண்பருடன் தேநீர் அருந்துவதற்கு பைக்கை நிறுத்தி இருக்கிறார்.  அவர்கள் வரும் பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றிப் பெறுவது சம்பந்தமாக சூடாக விவாதம் செய்தனர். மாணவர்கள் அன்றாடம் பாடங்களை வீட்டில் தினம் எழுதிப் பார்த்தால் போதும் , அதுவே அவர்களை நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற செய்து விடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது , பள்ளி வயது சிறுவன் ஒருவன் , தலையில் தண்ணீர் குடமும், இடுப்பில் ஒரு குடமும் வைத்து தண்ணீர் எடுத்துச் சென்றுள்ளான்.அவனுடன் மற்றொரு சிறுவனும் சைக்கிளில் தண்ணீர் எடுத்து சென்றுள்ளான். அவர் இவர்கள் நம் பள்ளி மாணவர்களாக தெரிய வில்லையே என யோசிக்கும் போதே சைக்கிளில் உள்ள தண்ணீர் குடம் நழுவுவதுப்போல இருக்க , ”டேய் , தம்பி தண்ணீக் குடம் விழப்போகுதுன்னு ...”சொல்லிக் கொண்டே அவரின் நண்பர் சைக்கிளை நோக்கி ஓட ... இருவரும் உதவிச் செய்துள்ளனர்.


    ”என்னடா...இன்னிக்கு பள்ளிக் கூடம் லீவா... “ என கல்யான் ஜி வழக்கம் போல தன் உரையாடலை ஆரம்பித்தார்.

“அண்ணே . நாங்க மதுரையில டவுன்ல படிச்சோம்.. “

“என்ன படிச்சியா .. அப்ப ...இப்ப படிக்கலைய்யா..பார்த்த ஃபப்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்கிற பையன் மாதிரி தெரியுற”

“ஆமாண்ணே , எங்க கிராமத்தில.. நான் தான் ஐந்தாவது படிக்கும் போது ஃப்பஸ்ட் மார்க் வாங்குவேன்.. எங்க ஊரில மதுரையில .....(பள்ளியின் பெயர்) பள்ளிக்கூடத்திலிருந்து வந்தாங்க .. பஸ் இலவசமா விடுறோம் .. உங்க பிள்ளைய சேருங்க .. அங்கேயே பன்னிரண்டு வரை இருக்குன்னு எங்க அய்யாவும் சேர்த்து விட்டாங்க....”

“அப்புறம் என்னடா.. படிக்க வேண்டியது தானே.. ஏன் படிக்கலை..?”

“அட போங்கண்ணே டவுனுக்காரப்பயபுள்ளைங்க மோசமானவன்னு இப்பத்தானே தெரியுது..?” என தலையில் குடம் வைத்தவன் பேசினான்.

“டேய் , நானும் மதுரை டவுனுத்தான்.. பார்த்துப் பேசு .. அப்படி என்னடா நடந்துச்சு....?”

“வண்டிய ஒரு மாசம் ஓசியா விட்டானுங்க.. ”
அடுத்தவன் மறித்து “டி.சி. வாங்கி எங்க கிராமத்தில இருந்து ஐம்பதுக்கும் மேல சேர்ந்தாங்க.. அப்புறம் பஸ் பீஸ் கட்டினாத்தான் வேனில எத்துவாங்கன்னு சொல்லிப்புட்டாங்க..”

“அப்ப எப்ப இருந்துடா பள்ளிக் கூடம் போகல..?.”

“இரண்டு மாசம் மட்டும் தான் நான் ஆறாவது போனேன்.... எட்டாவது மாசம் இருந்து என்ன அந்த பள்ளிக் கூடத்தில இருந்து யாரும் கூப்பிடவும் வரலை.. எங்க அப்பா டி.சி கேட்டாலும் தர மாட்டீங்கிறாங்க... “

“ஏண்டா .. நீ பள்ளிக் கூடம் போகலைன்னு யாரும் கணக்கு எடுக்க வரலைய்யா...? “

” கணக்கா... நீங்க என்ன வாத்தியாரா...?”

“ஏன்டா .. வாத்தியாருன்னா பிடிக்காதா...?”

“சார் எங்கப்பாவே கஷ்டப்பட்டு கடன வாங்கி ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த ஸ்கூல்ல சேர்த்துச்சு... ஆனா .. பஸ் பீஸ் கட்ட முடியாததால என்னால படிக்க முடியல .. டி.சிக்கு நாலு நாள் அலைஞ்சு .. வேலைக்கு போகாதது தான் மிச்சம்.. அதனால வேறக் கடன் .. அதான் நாங்க வீடு வீ டா தண்ணிப்பிடிச்சுத் தாறோம்...அப்பாவுக்கு உதவியா இருக்கோம்”

”டேய் .. அனைவருக்கும் கல்வி திட்டம் இருக்குடா.... அதுல கணக்கு எடுப்பாங்க.. நீ படிக்கலைன்னு சொன்னா.. உனக்கு பள்ளியில சேர்க்க ஏற்பாடுச் செய்வாங்க.. உனக்கு டி.சி கொடுத்து படிக்க வைப்பாங்க.. “ என அட்ரஸ் கொடுத்து , அட்வைஸ் கொடுத்து வந்துள்ளார்.


    என்னிடம் இவ்விசயத்தை உடனே போன் செய்து தெரிவித்தார். மேலும் உங்கள் பிளாக்கில் இச்செய்தியை போடவும் . தமிழக ஆசிரியர்கள் உங்கள் பிளாக் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி திட்டமா ..? அல்வா திட்டமா..? என எல்லாருக்கும் தெரியட்டும் என காட்டமாக பேசினார்.
 அவர் மொபலில் அம்மாணவர்களைப் புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அதனை என் ஈ.மெயிலுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

     ஊமச்சிக் குளம் மதுரை பெரியாரில் இருந்து குறைந்தது இருபது கிலோமீட்டர் இருக்கும். அதற்கு அருகில் உள்ள கிராமத்திற்கு , பெரியார் நிலையம் அருகில் உள்ள வீரமான பெயர் கொண்ட பள்ளியில் இருந்து மாணவர் சேர்க்கைக்கு வேன் மூலம் ஆசிரியர்கள் சென்று மாணவர்களைச் சேர்த்துள்ளனர்.
         மாணவர்கள் நல்லக் கல்விப் பெற வேண்டும் என்று கிராமப்புற மாணவனும் டவுன் மாணவர்களைப்போன்று திறன் பெற வேண்டும் என்று கிராமப் புறத்தில் உள்ள குழந்தைகளை சேர்க்க செல்லும் ஆசிரியர்களின் இப்பண்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அதே சமயம் , இவர்கள் ஏரியா சென்சஸ் பகுதியை விட்டு , ஏன் முப்பது கிலோ மீட்டர் தள்ளி உள்ள மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். மாணவர் சேர்க்கை விசயத்தில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சிப் பள்ளிகளைப்போல் அல்லாமல் , மே மாதம் முழுவதும் அக்கினி நட்சத்திர வெயிலிலும் இந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக நம் அரசியல்வாதிகள் கூடத் தோற்கும் அளவிற்கு பொய்களை (மன்னிக்கவும்) வாக்குறுதிகளை அள்ளி வீசி , எங்கள் பள்ளித்தான் உலக்கத்திலேயே சிறந்தது என சான்று கொடுத்து , அமெரிக்க அதிபர் ஓபாம இங்கு தான் படிக்க விரும்புவதாக சான்று கொடுத்துள்ளார்.இ.மெயில் அனுப்பியுள்ளார் என்றெல்லாம் கூட சொல்லி சேர்ப்பதற்கான காரணத்தை ஆராய்ந்தோமென்றால் இதன் பின்புலம் புரியும்.


      அரசுப் பள்ளிகளைப் போல டிரான்ஸ்பரோ, பிற பணி மூலம் மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களால் செல்ல முடியாது. அவர்கள் நாற்பது மாணவர் சேர்த்தால் தான் , அடுத்த ஆண்டு அவர்கள் அதேப் பள்ளியில் பணித் தொடர முடியும். மேலும் ,அப்படி இவர்கள் மாணவர்கள் சேர்க்காத போது அல்லது சேராத போது , வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் செல்லலாம். ஆனால், அங்கு நிலமை இதைவிட மோசம் என்றால் இருக்கும் இடத்தைவிட மோசமாகிவிடும். புதிய சூழல் , புதிய நிர்வாகம் ஒத்து போகவில்லை என்றால், பணி நீக்கம் கூட செய்ய நேரலாம். மதுரையில் பல பள்ளிகளில் நிர்வாக நடவடிக்கையால் பலர் பதவி இழந்த கதைகள் ஏராளம். ஆகவே , பயந்து , எப்படியாவது மாணவர்களை சேர்க்க நிர்வாகமும் ,தனியார் பள்ளி ஆசிரியர்களும் போட்டிபோடுவார்கள். மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் உண்டு.


     அதுதான் பணி நிரவல் மூலம் அவர்களுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கிறதே...? பின்பு ஏன் இந்த மோதல் ,,, கிராமம் கிராமமாக டவுனில் இருந்து படையேடுப்பு... ? இதற்கும் பின்னனி உண்டு. ஒவ்வொரு பள்ளிக்கும் ஸ்டாப் பிக்சேசன் எட்டாவது மாதம் இறுதியில் உள்ள மாணவர்களின் வருகையைக் கொண்டு கணக்கிடுவது உண்டு. இக் கணக்கெடுப்பிற்கு உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள் கொண்ட குழுவை , மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி அமைத்து , அவர்கள் பார்வையிட செல்லும் நாளில் உள்ள மாணவர்கள் வருகையின் அடிப்படையில், மூன்று பார்வைகளின் சாராசரியின் அடிப்படையில் , ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவார்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அது தான் அந்த பள்ளி நல்ல முறையில் நடைப்பெறுவதற்கு சாட்சி.

       அப்ப நல்ல முறையில் நடைப்பெறுவதென்றால்... நல்லா சொல்லிக் கொடுத்தால் தானே பிள்ளைகள் சேரும். ஆமாம்... அப்புறம் ஏன் மாணவர்களைத் தேடி அலைகின்றனர்? ஆசிரியர் நிர்ணயம் சரியாக இருக்கும் பட்சத்தில் , ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பணியிடத்தில் ,புதிய ஆசிரியர்களை பணி நியமணம் செய்யலாம். இது தமிழக முதல்வருக்கே இல்லாத அதிகாரம். அவர் நினைத்தால் கூட யாருக்கும் தன் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி
எவருக்கும் அரசு ஊதிய வேலைக் கொடுக்க இயலாது. நிர்வாகிகள் இந்த அதிகாரத்தை இழக்க விரும்புவதில்லை. இன்று எதுவும் ஓசியில் கிடைப்பதில்லை என்பது தனிப்பட்டக் கதை. இப்பணியிடத்தின் விலையை நான் நாளிதழ்கள் வாயிலாக தெரிந்துக் கொண்டதுப்போல நீங்களும் தெரிந்துக் கொள்ளலாம். தினமலர் இப்படிப்பட்ட புள்ளி விபரங்களைக் கொடுக்கும் என்பதால் கடந்த மே மாத இதழை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் இப்பணியிடத்தின் மார்க்கெட் விலைத் தெரிய வரும். போட்டிக்கான காரணமும் புரிய வரும்.

    அது சரி இரண்டு மாசம் இலவசம் அப்புறம் ஏன் ... வண்டிக்கு காசு... ? அட எட்டாவது மாதம் முடிந்த பின் தான் பிள்ளைகள் தேவையில்லை. யாரும் எண்ண வரமாட்டார்கள் . ஆசிரியர் பணி நிர்ணயம் முடிந்தபின் மாணவன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? இது தான் உண்மை நிலவரம்.


       தனியார் பள்ளி நிர்வாகம் பற்றி நமக்கு என்னக் கவலை.? அந்த பள்ளி மாணவர்கள் தெருவில் பள்ளி செல்லாமல் அலையும் போது ,அம்மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டியக் கடமை யாருக்கு இருக்கு...? பெற்றோருக்கா...? அல்லது வேறு யாருக்குமா?

அது தான் பெற்றோர்கள் தங்கள் வறுமையையும் மீறி படிக்க வைக்க , கடனைப் பெற்று சேர்த்துள்ளார்கள். நிலமை மோசமாகவே , டி.சி. கேட்டு அலைந்துள்ளார்கள். பின்பு ஓய்ந்து தன் மகனின் விதியை நொந்து , பள்ளிக்கு செல்லாமல், வீட்டு வேலைப் பார்க்க செய்துள்ளார்கள். ஆகவே, பெற்றோரை குறைச் சொல்லக்கூடாது. பின்பு?


    அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் கோடிக் கணக்கில் பணம் ஓதுக்கப்பட்டு , ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எஸ்.எஸ்.ஏ.க்கு தனி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அவருக்கு உதவியாக ஏ.டி.பி.சி. அவர்களுக்கு துணையாக ஒவ்வொரு காம்பனட்டாக பார்க்க ஆசிரியப் பயிற்றுநர்கள், அவர்களுக்கு துணையாக அலுவல உதவியாளர்கள், மற்றும் இதன் கட்டுப்பாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள சரகங்களுக்கு மேற்பார்வையாளர். அவர்களுக்கு த் துணையாக அதிக பட்சமாக ஐந்து பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியப் பயிற்றுநர் . இவர்களுக்கு உதவிகள் செய்யவும் , கண்காணிக்கவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் என அனைவரும் சேர்ந்து பள்ளி செல்லாக் குழந்தைகளே 2010ல் இருக்கக் கூடாது என்று சூழுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் , வீதி வீதியாக , கடைக் கடையாகத் தேடிப் பிடித்து , சர்வே எடுத்து அவர்களை பள்ளியில் சேர்க்க கடமைப்பட்டுள்ளார்கள். இவர்கள் எப்படி விடுப்பட்டுப்போனார்கள்?
  
      இவர்கள் விடுபடாமல் போக காரணம் சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பாரம் கொடுத்து நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர் பற்றிய புள்ளி விபரங்களை எஸ். எஸ். ஏ மூலம் கணக் கெடுக்கப்படுகிறது. அப்படி கொடுக்கப்பட்டப் புள்ளி விபரத்தில் அப்பள்ளி ஆசிரியர் தெரிவித்து இருந்தார் என்றால், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டு படிப்பின் அவசியத்தை ஆசிரியரும், ஆசிரியப் பயிற்றுநரும் எடுத்துச் சொல்லி , பள்ளியில் அவசியம் சேர்த்து இருப்பர்.

      அதே சமயம் அந்த பகுதியில் அதாவது ஒவ்வொரு ப்பள்ளிக்கும் ஒரு சென்சஸ் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது . அப்படிவத்தில் , ஏரியா சென்செஸ்சில் படிக்காத , அல்லது பள்ளிச் செல்லாக் குழந்தைகள் இருப்பின் , அப்பள்ளி தெரிவிக்க வேண்டும். அப்படி பார்க்கும் பட்சத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளியின் தலைமை யாசிரியர் தன் ஆசிரியர் மூலம் கணக்கெடுத்து தகவலை கொடுத்திருக்க வேண்டும் . அங்கேயும் கோட்டை விட்டாச்சு.

           இதனை மேற்பார்வை செய்யும் அத்தனை அதிகாரிகளில் யாராவது கேட்டு இருந்தால், உண்மை வெளி வந்து இருக்கும். மேல்மட்ட அதிகாரிகள்  மட்டும் கிராமம் தோறும் விசிட் அடித்து ஏ.பி.எல் செயல்பாடுகளை பார்த்தால் போதுமா..?படிக்க மாணவர்கள் வேண்டாமா..?அதிகாரிகளின் கனவு , பள்ளிச் செல்லக் குழந்தைகளே இல்லாமை என்ற நிலை ஏற்பட உண்மையான உழைப்பு வேண்டாமா..? அதற்கு அடிமட்டம் சரியாக செயல் பட வேண்டாமா..?  மதுரை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அதிகாரி பம்பரமாக சுழன்று வேலை வாங்கும் போது இப்படி டிமிக்கி என்றால்.. ? என ஆதங்கத்துடன் கல்யாண் ஜி கேட்பது புரிகிறது.

      தனியார் , அரசு பள்ளி என்ற பேதம் நீங்கி அனைத்து ஆசிரியர்களும் உண்மையான உழைப்பை க் காட்டி ., தமிழகத்தில் பள்ளி ச்செல்லாக் குழந்தைகளே இல்லா நிலை ஏற்பட ... அனைத்துப்பள்ளிகளையும் அரசுடமையாக்குவதே சிறந்த வழி.


    இன்று மதுரை பெரியார் அருகில் உள்ள பள்ளி சிவகங்கை மாவட்ட எல்லை வரை மாணவர்களை அலைத்து வருகிறது. திண்டுக்கல் எல்லை வரை முயற்சியில் உள்ளது. இந்த புரம் உசிலம்பட்டி வரை தொடலாம். அடுத்து தேனி எல்லைத் தான் . நிலமை இப்படி இருக்க .. அரசு இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்கள் தன்நிலை உணர்ந்து செயல்பட அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். 

8 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்துட்டோம்ல! எப்புடி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

நீங்க மட்டும் ஆதங்கப் பட்டா எப்படிண்ணே? அரசும் மனச வக்கனுமுள்ள..

இதையும் படிங்க: கடி..கடி...கடி.. இது செம காமெடி...

Yowan1977 said...

தரமான பதிவு.............

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி.

வேலன். said...

நல்ல நீண்ட பதிவு...திருந்துபவர்கள் இனியாவது திருந்தினால் சரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown said...

தரமான சமூக அக்கறை கொண்ட பதிவு! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் said...

ஆதங்கமான... பதிவு....
கல்வித்துறையில் இவ்வளவு நடைமுறைகள் உள்ளது இப்போதுதான் தெரிய வருகிறது....

இளங்கோ said...

நல்ல பகிர்வு.
கொஞ்சம் அரசும், சுற்றி இருப்பவர்களும் மனது வைத்தால் கிராமப்புற மாணவர்கள் மிகுந்த வெற்றி பெறுவார்கள்.

Post a Comment