Tuesday, March 22, 2011

எங்கள் வீட்டுக் கிழவி


நீண்டு வளர்ந்து
தொங்கும் காது
அனுபவங்களை
சுருக்கமாக
கொண்ட முகம்
நிற்க மறுக்கும் தலை
நடுங்கிய படி
வெத்திலை
இடிக்கும் கரங்கள்
சிவந்து
தடித்த நாக்கு
பற்களற்ற வாயுடனே
எங்கள் வீட்டுக் கிழவி
இடித்து இடித்து
எங்கள் நகரத்தின்
கதைகளை
வாயில் குதப்பி
துப்புகிறாள்..!

Saturday, March 19, 2011

நேசமித்திரனின் பத்து கட்டளைகள்

      மதுரைக்கு நேசன் மிகவும் நேசமாகிவிட்ட ஒருவர்.  நேசன் வருகையென்றாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். ”மதுரையில் இருக்கிறேன், மூட்டா ஹால் எங்கு இருக்கிறது?” என்ற அவரின் அழைப்பு ,என்னை ஆகாயத்தில் பறக்க வைத்தது. என் நண்பன் ஸ்ரீ யை அழைத்தேன். தாங்கள் அவருடன் இருக்கவும், நான் வந்து சேர்ந்துக் கொள்கிறேன் என்றார். கவிதை விமர்சனத்தை விட கூடுதல் இலக்கிய விருந்தாகவே அமைந்தது.    நேசனின் கவிதைகள் எனக்கு ஒரு வித வியப்பையும் , ஈப்பையும் ஏற்படுத்தியதற்கு காரணம் , அவரின் கனிவான பேச்சும், அன்பான நட்பும், அவரின் வாசிப்பும் , அதனை நண்பர்களிடம் பகிரும் முறையுமாகும்.

    அவரிடம் எழுத்து வயப்பட்டு ,கட்டுப்பட்டு இருந்தாலும் காட்டாற்று வெள்ளம் போல கவிதைகளில் பெருகிவருவது வியப்பையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த இலக்கிய அரசியலுக்குள்ளும் சிக்காத ஒருவர்.எழுத்தில் அல்லது கவிதையில் நாம் செய்யும் தவறுகளை  தைரியாமாக சுட்டிக்காட்டி திருத்தச் சொல்லுபவர். அவரின் கவிதைகள் எளிய புரிதலை அற்று , கடினமாக இருப்பதும் , புதிய வார்த்தைகளின் சேர்ப்பும் தங்களை கவிதையில் இருந்து தள்ளி நிற்கச் செய்கிறது என்றாலும் , கோபப்படாமல், ஒரு தாயின் பரிவோடு , தன் பிள்ளையின் பெருமையை எடுத்துச் சொல்லும் இயல்பு , அவரை கவிஞர்கள் பலரில் இருந்து மாறுபட்டு ஒரு வித நட்புணர்வை அவரிடம் கொள்ளச் செய்யும்.




தனக்கு ஒரு கவிதை தொகுப்பு வந்து விட்டது என்ற எந்த வித பந்தாவும் இல்லாத மனப்பான்மை, தன்னை இன்னும் செழுமைப்படுத்த வாசிப்பு தேவை என்னும் பணிவும் , தன் இலக்கிய நண்பர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமும், இலக்கிய சந்தேகங்களை போக்கும் விதமும் என அனைத்திலும் அவரின் கவிதைகளைப் போலவே மென்மையாக காணப்படுகிறார். சமீபகாலமாக என் கவிதைகள் தரமானதாக மாறி உயர்தரமான இலக்கிய இதழ்களில் வெளியிட என்ன செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் முயற்சி செய்து வரும் எனக்கு அவரின் சந்திப்பு , என்னை செதுக்க ஒரு பட்டறையாக பயன்பட்டது.




நவீன அல்லது மரபு அற்றக் கவிதைக்கு அவர் வகுக்கும் இலக்கணம்

1. கவிதை படித்து முடித்தவுடன் ஒரு வித உணர்வை ஏற்படுத்த வேண்டும்

2.கவிதை செய்தி சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை

3.கவிதையை கடினமான சொற்கள் கொண்டு தான் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.உங்களுக்கு தெரிந்த,பழகியச் சொற்களைக் கொண்டு எழுதுங்கள்.

4. முதலில் நீங்கள் சொல்ல வரும் விசயத்தை வாக்கியமாக எழுதுங்கள். பின்பு அந்த வாக்கியத்தில் தேவையில்லா இணைப்புச் சொற்களை அகற்றி விடுங்கள். எந்த ஒரு சொல்லை அல்லது வாக்கியத்தை எடுத்தாலும் அதன் அர்த்தம் மாறவில்லை என்று எண்ணிணால் அந்த சொல்லையோ அல்லது வாக்கியத்தையோ அகற்றி விடுங்கள்.

5. கவிதை எதை பற்றியதாகவும் இருக்கலாம். அது காதல், காமம் என இருக்க வேண்டிய கட்டாயமில்லை;

6. கவிதை பன்முகத் தன்மையுடன் அமைந்தால் சாலச் சிறந்தது.

7.கவிதைகளில் நீதி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

8.கவிதையை பிரசுரிக்கும் முன் அதனை பலமுறை படித்து உங்களுக்குள் ஊறப்போட்டு , அதனை மொருகேற்றி , ஒரு தாய் தன் குழந்தையை சுமப்பது போல உங்களுக்குள்ளே சுமக்கப் பழகிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு வித பீல் கிடைத்தவுடன் வெளியிடுங்கள்

9.பலரின் கவிதைகளை படியுங்கள் . அதில் கையாளப்படும் உத்திகளை மனதில் கொள்ளவும் . எக் காரணம் கொண்டும் காப்பி அடிக்க கூடாது.மாறுபட்ட கோணத்தில் சிந்தியுங்கள். ஒரு விசயத்தை அவர் ஒன்றால் வகுத்தால் , நீங்கள்  அதில் இருந்து விலகி காரணங்களை வரிசைபடுத்தி , வேறு ஒரு எண்ணால் வகுக்க பழகுங்கள்

10.நீங்கள் எழுதுவது தான் சரியென நினைத்து , எவரையும் பற்றி கவலைப்படாமல் எழுதுங்கள். கவிதை வசப்படும் .


தாகம் சந்திப்பில் உணவு இடைவேளையில் என்னுடன் பகிர்ந்து கொண்ட விசயம் . என் மரத்தடி பாடம் கவிதையை பார்த்து விட்டு உங்களின் எழுத்து மேன்மைப்பட்டுள்ளது , ஆனால் இன்னும் கவிதை தன்மை பெறவில்லை. அதற்கான பீல் -லை உருவாக்குங்கள். நீங்களும் விரைவில் ஒரு கவிதை தொகுப்பு போடலாம். அதற்கான உழைப்புக்கு தயாராகுங்கள் விரைவில் கவிதை வசப்படும் என்று சொன்னதுடன் அல்லாமல் மரத்தடிப்பாடம் என்ற தலைப்பில் உடனே ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்தக் கவிதை இதோ ...


மரத்தடி நிழலில்
கார்டூன் சித்திரமாய்
நீள்கிறது வயது குறைந்து
சேர்க்கப்பட்ட் சிறுமியின்
சிறுநீர்குடை.
அண்டைச் சிறுவனுக்கு
இடிக்காமல் சிலேட்டை
பிடித்தெழுதக் கூடவில்லை
பார்த்தப்படி நகரும்
பியூன் தாத்தா நீர் பெய்ய
போகிறார் புதிய
கட்டிடத்திற்கு...
இருமருங்கும் பார்த்தப்படி

இது நேசன் கவிதை மேல் கொண்டிருக்கும் அளவில்லா காதலால் ஏற்பட்ட விளைவு என்பதை விட அவரின் வாசிப்பின் ஆழத்தில் அளவாகவே எடுத்துக் கொள்கிறேன். வாசிங்க மக்கா..சுவாசிங்க வாசிப்பை.. எல்லாம் உங்கள் வசப்படும். நன்றியுடன் நேசனை வாழ்த்துவோம். 

Friday, March 18, 2011

கார்டூன் சித்திரங்கள்


வயது குறைந்த
சிறுமியின் கற்றல்
கூண்டுக்குள்
சிறகுகள் வெட்டப்பட்ட
பறவையாய்
பற்ற இயலா விரல்களில்
சுண்ணக் கட்டிகள்
உதடுகளை வண்ணமாக்குகின்றன
வகுப்பறைச் சுவற்றில்
வரையப்பட்ட கார்டூன் சித்திரங்கள்
நிஜங்களாய்
வகுப்பறை முழுவதும் சிதறிக்கிடக்கின்றன
சிறுநீர் கழித்து அழுகிறது
வடிவமுறக் காத்திருக்கும்
களிமண் பொம்மை ....
பள்ளியின்
பிரதான வாயிலில்
காத்திருக்கிறாள் அம்மா..!

Thursday, March 17, 2011

புதிர்

பொம்மைகளின் உலகம்
தனியானது
அவைகளிடம்
மிருக இயல்புகள் இல்லை
அதனாலே அவைகள்
குழந்தைகளால் விரும்பப்படுகின்றன.

முடுக்கிய விசையால்
துரத்தும் கரடி
உறுமாத புலி
கர்ஜனையற்ற சிங்கம்
கடிக்க தெரியாத
குரைக்கும் நாய்
வலைப்பின்ன தெரியாத
சிலந்தி
கொட்ட இயலா தேள்
விஷம் கக்கா பாம்பு
புகை கக்காமல்
ஒலித்து செல்லும் இரயில்
சிரிக்க மட்டுமே
தெரிந்த டோரா
புட்டி எடுத்தால்
அழும் குழந்தை
இன்னும் எராளம்....

பொம்மைகளுடனே
பொம்மையாய்
படுக்கையில்....

புரியாத புதிர் ...?

ஒவ்வொரு விடியலும்
பொம்மைகளின்
இயல்புகள் அகற்றி
மனித தன்மையை
உள் வாங்கிய மிருகமாய்..!




Wednesday, March 16, 2011

சைக்கிள்

இறுகப் பற்றிய 
கரங்களில் 
ஹேன்ட்பார்...  
சாய்கிறது 
சரியாகத் தான் 
பிடித்திருந்தாள்  
இருப்பினும் சாய்கிறது...
சைக்கிள் வாங்கிக்
கொடுத்த தாத்தாவின் 
கரங்களில் பைபிள் 
சாய்கிறது 
நிமிர்கிறது 
பாதையிலிருந்து 
விலகியும் விலகாமலும் 
வளைந்தும் நெளிந்தும்
பைபிளின் பக்கங்களை 
புரட்டியவாறு 
தாத்தா நிமிர்ந்து பார்கிறார் 
பயம் விலகி 
கொஞ்சம் கொஞ்சமாய் 
அழுத்திய பெடல் 
பறக்கிறது 
காற்றை கிழித்து 
ஆகாயம் தாண்டி...
மேடு பள்ளங்களில் 
மணல் வீதிகளில் 
செம்மண் சாலைகளில் 
தார் ரோடுகளில் ...
சைக்கிள் விடுமுறைகளை 
தனதாக்கிக் கொண்டது 
தாத்தாவின் சர்ச்சை போல்... 
சைக்கிள் சுமக்கிறது 
பள்ளி செல்லும் 
அவளின் பையை 
புல்லுக் கட்டை 
தண்ணீர்க் குடத்தை 
தங்கச்சி பாப்பாவை ...

நினைவுகளிலிருந்து 
விலகி 
மகளின் ஸ்கூட்டியை 
துடைத்துக் கொண்டிருக்கிறாள் 
அம்மா ...

Tuesday, March 15, 2011

கவிதை - தாகம்

வாரங்கள் உருள்கின்றன.. கனவுகள் கரைகின்றன...விடியல் மட்டும் தொடர்கிறது .

நண்பர்கள் சந்திப்பு மட்டும் என்றும் குறைவதில்லை  .அதில் குறையுமில்லை . சமீபகாலமாக  வாரக் கடைசி நாட்கள் இலக்கிய அமர்வாக அமைந்த காரணத்தால் கட்டுரைகளை மறந்து , கவிதை எழுதும் முயற்ச்சியில் உள்ளேன். கவிதை என்பது நம் அனுபவத்தில் இருந்து வரும் ஒரு வித வெளிப்பாடகவே அமைகிறது. நம் நிலம்  தந்த விசயமாகவே படுகிறது. என் நண்பர் ஸ்ரீ யின் தொடர்ந்த கவனிப்பும் , அன்பும் , திருத்தலும் ,கூடிய விரைவில் நீ ஒரு இலக்கிய வாதியாக வருவாய் என்ற உற்சாகப்  பேச்சும், பல கவிதை புத்தகங்களை தந்து படிக்க உதவிய விதமும் என் இலக்கை நோக்கி பயணிக்க வைத்தது .  


      13 -03 -2011 காலை பத்து மணிக்கு தாகம் தயவில் அன்றைய   நாள்  முழுவதும் இலக்கிய விருந்தாகவே அமைந்தது. தெரிந்த, தெரியாத, பழகிய, பழகாத பல நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் ,    புதிய நண்பர்களின் அறிமுகங்களையும் உருவாக்கி தந்தது தாகம். அதற்காக செந்திலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.    அன்று மூட்டா அரங்கம் நிறைந்து விட்டது. செல்மா நல்லதொரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவே தான் அவர் செல்மா பிரியதர்ஷன் -னோ .யவனிகா ஸ்ரீ ராம் தலைமை ஏற்க சமயவேல் அவர்களின் ”மின்னிப் புற்களும் முதுக்கம் பழங்களும்” கவிதை தொகுப்புக்கு தலைவரே விமர்சனம் வைத்தார். யவனிகா கூறும்  போது தற்கால கவியர்களுக்கு ஒரு போட்டியாக திகழ்கிறார் . நகரத்தின் மறுபக்கத்தை பிரதிபலிக்கிறது  என்றார்.

அடுத்ததாக சக்தி ஜோதி எழுதிய "எனக்கான ஆகாயம்" என்ற கவிதை தொகுப்புக்கு சுகுமாரன் அய்யா அவர்கள் விமர்சனம் வைத்தார்கள். அருமையாகவும் , எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. சக்தி ஜோதி கவிதைகள் காதலை முன்னிலை படுத்துகின்றன. அவர் ஆண்களுக்கான கவிதைகளை தந்துள்ளார் என்பது போன்ற நிறையும் குறையும் எடுத்துரைக்கப் பட்டன. 


லீனா அவர்கள் சக்தி ஜோதியிடம் அவரின் கவிதைகளின் பாதுகாப்பு தன்மையை பற்றிக் கேட்டார். அதற்க்கு லீனா என்பதால் அப்படி ஒரு பதிலை தந்துள்ளார் என்றே தெரிகிறது. உடல் உறுப்புகளை நான் மையாப்படுத்தி எழுதுவதில்லை என்று கேள்வியின் தன்மை புரியாமல் பதிலளித்து ஒரு எதார்த்த கவிஞராக    இருந்தார். மேலும் அவர் நான் நேசிக்கும் ஆண் பற்றிய காதலை எழுதுகிறேன் , நான் காமத்தையும் எழுதியிருக்கிறேன் என்றும், பைபிளில் ஒரு கதையும் சொல்லி பதிலளித்தார். 


ஹவியின் "இசைக் குமிழி" க்கு ந.ஐய பாஸ்கரன் விமர்சனம் வைத்தார். அவர் "ஆத்மா நாமின் கச்சிதம், பிரமிளின் தீவிரம் , நகுலனின் விடுபடல் போன்றவையே இனியான ஆட்ட முறைக்கான  தற்காலிக விதிகளாக இருக்கக் கூடும் என்றும் , இம் மூவரின்  வழியிலேயே நவீன கவிதா உலகம் வழிந்து கொண்டிருக்கிறது என்றும் ஹவி அபிப்பிராயப்படுகிறார். "என்றார்.  

மதியம் அருமையான சிற்றுண்டி வந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்பு மீண்டும் கவிதை மழை கொட்ட ஆரம்பித்தது.    
எஸ் . செந்தில் குமாரின்  "முன் சென்ற காலத்தின் சுவை " பற்றி ஸ்கூட்டிக்  கவிஞன் ’இசை’ விமர்சனம் வைத்தார்கள்.  

தேவேந்திர பூபதியின் "முடிவற்ற நண்பகல் " கரிகாலனால் விமர்சிக்கப்பட்டது. தன் கவிதையில் காதல் கவிதைகள் தான் நிரம்பியுள்ளன என்ற கூற்றை தேவேந்திர பூபதி மறுத்தார் , தன் தந்தை இறப்பில் எழுதிய கவிதைகள் ஏராளமாக உள்ளன என்று கூறினார்  .  


லிபி ஆரண்யா வின் (அட நம்ம மாகால் வாத்தி சரவணன் ) "தப்புகிறவன் குறித்த பாடல் " என்ற கவிதை தொகுப்புக்கு லீனா மணிமேகலை விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது. நகுலனின் கவிதையை லிபி பகடி செய்துள்ள கவிதையை வாசித்து காட்டினார். (ஆதிமுலம் குறித்த கவிதையில் உள் மூலம் ,  வெளி மூலம் மூலம் அவர் புரிந்த பகடி)லீனா அனைவரும் பாராட்டும் விதமாக விமர்சனம் வைத்தார்.
     

  இவ்வளவுக்கும் மத்தியில் என் நண்பர் நேசனுடன் ஒரு பெரிய கவிதை பாடம் நடந்தது...அதனை பற்றி விரிவாக அடுத்த இடுகையில்..செந்தில் நன்றி கூறும்   போது அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்த விநாயகம் இறந்த நிகழ்வை கூற தாகம் சோகமாக முடிந்தது. உண்மையில் தாகம் கவிதை மீது தீரா தாகத்தை தந்தது என்பது தான் உண்மை. மீண்டும் நன்றி செந்தில்...

Monday, March 14, 2011

தேடல்

மெய் ஞானம் பெற 
பரவிக்கிடக்கும்
புத்தகக் குவியல்களில் 
தேடினேன் ...
இருளின் இருப்பிடம் விட்டு 
வெளிச்சத்தை நோக்கி 
ஊர்ந்தது கரப்பான் பூச்சி 
அருவெறுப்பு தட்டவே 
தூக்கி எறிந்தேன் 
கொன்றது 
புத்தனின் போதனைகள் 
அடங்கியப் புத்தகம்
    



Friday, March 11, 2011

மரத்தடி வகுப்பறை

வானத்தையே கூரைகளாக்கி
ஆல மரக் கிளையிலாடும்
குரங்குகளை துணையாக்கி
தாவி ஓடும் மனம்
ஆசான் கையில் குச்சி  
ஒடுக்கியது  
இலைகளின் ஊடே பரவி
சுடும் வெயில் 
உரைத்தது 
மரத்தடிப்  பாடம் ...

எலும்புக் கூடாய் 
நினைவுகளை தாங்கி 
பராமரிப்பு அற்று 
பெற்றோரை போல  
பழைய வகுப்பறை    
ஏக்கங்களுடன் 
மாணவர்கள் ...
  
அணில்கள் ஓடி விளையாண்டு
மரத்திலிருந்து    
தொப் என்று விழுந்தன 
அனைவர் கவனமும்
சிதறாமல் 
அப்போது தான்
வகுப்பறை உயிரோட்டமாய்....

மரம் அசைந்தது
கரும்பலகை கணக்கும்
கண்கள் சொருகின
குறிப்பேடுகள்
மை கொண்டு
நிறமாகின
குறியீடுகள்  
முக்கியத்துவம் 
உணர்ந்த மாணவர்கள் 
உதிந்த இலைகளை 
உருவமாக்கி 
மண் துகள் படிந்த
கரங்களுடன்
இப்படித்தான் 
நடக்கிறது 
மரத்தடிப்  பாடம்  





Thursday, March 10, 2011

அலுவலகம் இயங்கியது...!


ஜன்னல் இடுக்குகளில் 
புகுந்து 
இருள் விரட்ட 
கைகளை நீட்டினான் 
கதிரவன்  
அலுவலகத்தில் இருள்
அப்படியே இருந்தது
நீட்டிய கரங்களினால் ...


குவிக்கப்பட்ட கோப்புகள் 
நீட்டப்பட்ட கைகள் 
கவர்கள் 
நகர்ந்தின பைல்கள் 
அலுவலகம் இயங்கியது ..!

பிரசவம் 
சுகமாகத்தான் 
முடிந்திருக்கும்...
கவர்கள் 
கிழிக்கப்படாததால்
கிழிக்கப்பட்டு 
வந்தது சிசு ...

வெட்டப்பட்ட மரம் 
வறண்ட கண்மாய் 
வாட்டும் வெயில்            
இடம்  பெயருகிறான்   
நகரமாதலில் 
வெட்டப்படுகிறது 
தொடர்ந்து மரம் ....!




Monday, March 7, 2011

என் வீதி

மரம் வளர்ப்போம் 
மழை பெறுவோம் என்றார்கள் 
வளர்த்தேன் ....  
ஒன்றே போதும் என்றார்கள் 
அப்படியே
வளர்ந்த பின் தான் தெரிகிறது ...
வம்பு வளர்த்தான் அயலான் 
இலை உதிர்ந்து குப்பையாகிறதென்று...
வெட்டு வெட்டு என்றான்
எதிர்வீட்டுக்காரன் கத்தினான் 
வயர் தட்டுகிறதென்று....  
வெட்டு வெட்டு என்றான்  
எச்சமிட்ட பறவையை 
எறிந்தான் கல்லால்  
பாதாசாரி  
ஜன்னல் கண்ணாடி   
நொறுங்கியது  
என்னோடு ....
எட்டிப்பார்த்தேன்
தெருவை 
வெறிச்சோடி இருந்தது
மரங்கள் அற்ற வீடுகளை போல ...
ஆடுகளும் மாடுகளும் 
மரநிழலில் 
காற்றில் அசைந்து 
கிளைத்தாவி கிசுகிசுக்கும் 
இலைகளின் மொழியில் மயங்கி...
சனியன் பிடிச்ச மரத்தை வெட்டுங்க
தெருவின் கடைசி வீட்டுக் காரன் 
ஹரன் காது சவ்வு கிழிய    
மாடு நகர்ந்து தொலைய மாட்டேங்கிது...
நித்தம் பிரச்சனைகள்
அத்தனையும் இருந்தும் 
மரம் 
இலை உதிர்த்தது 
இலை தளிர்த்தது 
பூ பூத்தது 
காய் காய்த்தது 
பழம் பழுத்தது 
கிளை ஒடிந்தது 
கிளை விட்டது 
ஆனால் 
என் வீதி மட்டும்
அப்படியே....  


Saturday, March 5, 2011

காதல் கவிதைகள்

இருசக்கர  வாகனத்தை 
பின்தொடர்ந்தேன்
கருப்பு புகை துப்பிச் செல்கிறது 
உன்னை போல் ...

வண்டியை பார்க் செய்து 
பார்க்கில் பார்த்தேன் 
அழகு.... 
மனம் பறக்கிறது  
உயரே உயரே 
ஊஞ்சலில் நீ...

பார்க்கும் இடங்களில் எல்லாம் 
நீ ...
செடியிலும் கொடியிலும் 
மலர்ந்த மலரிலும் 
மலரா மொட்டிலும் 
காய்யிலும் கனியிலும்  
அயர்ந்து அமர்ந்தேன் 
மரத்திலிருந்து உதிர்ந்த இலை 
என் மடியில் 
நீ....     

மரம் 
காயம் பட்ட 
மரப்பட்டையிலிருந்து
வடிக்கிறது 
என்னை போல 
கண்ணீர் ....

  
வருடங்கள் கடக்கின்றன 
நான் நீ 
எழுதிய பெயர்கள் 
மரங்களில் அழியாமல் 
என் இதயம் போல் .....
நான் அமர்ந்திருந்த இடத்தில் 
புதிதாய் செடி முளைத்திருந்தது ...



Friday, March 4, 2011

நம்பிக்கை

அறிவிலியானேன்
புனைவுகளின் வாழ்வில் 
கண் திறந்த கனவுகளில் 
மார்கழி கோலமாய்
வண்ணமிட்டு வந்தாய் 
இதயத்தில் நீ(ர்) தெளித்து 
குப்பைக் கூடைகள் நிரம்பின 
வார்த்தைகள் வந்து விழாமல் 
வார்த்தைகள் கை கூடும் போது 
பாதை மறந்த வழிப்போக்கனாய் 
அம்மாவசை இரவுகள் 
உன்னை காணாத நாட்கள் 
நீ நின்று சென்ற இடங்களில் 
வசிக்கிறேன் நம்பிக்கையுடன் 
உயிர்பெறுகிறது ஒரு துளி 
பெரு மழைக்காக ...

  


Thursday, March 3, 2011

வாழ்க்கை ..!

நம் மனங்கள் 
புல்லி இதழாய் 
பிறர் மீதான கருத்துக்கள்
அல்லி இதழாய் 
சூரியனின் கோடை வெப்பம் 
கார்மேகமாகத் திரண்டது 
மெல்லிய  உன் இதழ் புன்னகையில் 
உறவுகள் வசப்படும்
சூழக அறையில்
தன் மகரந்த சேர்க்கையில்   
இடியுடன் கூடிய மழை....
ஈரம் பட்ட பூமியின்     
சருகுகளுக்கு மத்தியில் 
புதைந்த விதை 
வேர் விடத் தொடங்கியது... 
நீ தந்த முத்தங்கள் 
நான் தந்த முத்தங்கள் 
காமமின்றி பகிரப்படுகிறது 
மெண்டலின் விதிப்படி 
என் முகச் சாயலும் 
உன் புன்னகையையும் ....
இப்படித்தான் எல்லாரும் 
பிறக்கிறார்கள்...!

காமம் அற்ற இரவுகள் 
நட்சத்திரங்கலற்ற வானமாய் 
பொர்ணமி நிலவாய் 
உறங்குகிறது குழந்தை  
நமக்கு நடுவில்..! 
மாமாங்கமாய் பிரிந்த உறவுகள் 
கூடு நோக்கிய பறவைகளாய் 
ஆகாயத்தில் நகரும் மேகங்களாய் 
வாழ்க்கை ..!



Wednesday, March 2, 2011

திருட்டு

முன்னோக்கி அணுகும் போது
விலகிச்  செல்லும்  சாலையாய்  
மரங்கள் உதிர்க்கும் இலைகளாய் 
நீ ....
துளிர்விடும் இலைகளை போல் 
உன் புன்னகை அமையும் என 
வேர்களின் வழியாக ஊடுருவி 
உன்னை அணுகும் போது 
ஆவியாகி அனுப்புகிறாய்   
பாவியாய் காத்திருக்கிறேன் ....
இருந்தும் இல்லாமலும் இருக்கிறேன் 
கோடையின் பகலில் வீசும் காற்றாய் 
உன் பார்வை  
இரவினில் மூட மறுக்கும் இமைகளுக்கு 
வானத்தின் நட்ச்சத்திரங்களாய் ஜொலிக்கிறாய் 
மூட மறந்த கதவுகள் 
திருட கொடுத்தது பொருளை மட்டுமல்ல 
வாழ்வையும் சேர்த்தே...         

Tuesday, March 1, 2011

பூத்தலின் பூவமை நன்று

பூத்தலின்  
     குழந்தைகள் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும்.  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பெருகிவரும் இவ்வுலகில் ,இத் தொழில் நுட்பங்கள்  பாலியல் சார்ந்த தவறான கருத்துக்களை  கொஞ்சம் கொஞ்சமாக முதல் வகுப்பில் காலடி வைக்கும் போதே தொலைக்காட்சிகள் அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. ஆசிரியர்களின் தொடர்ந்த கவனிப்பும் , அன்பும் , கனிவான பேச்சும் மட்டுமே அவர்களை ஒழுக்க நிலைக்கு மாற்றக் கற்றுத்தருகிறது. 

        இன்று 'ஐ லவ் யு செல்லம்' என்பது காதலை குறிக்கும் தவறான வார்த்தை என்றாகி விட்டது. ஒன்றாவது குழந்தை டீச்சர் இவன் என்னைப் பார்த்து ஐ லவ் யு சொல்கிறான் என்று தவறான உணர்வுடன் தவறான கண்ணோட்டத்தில் குறை கூறும் போது மனம் பதை பதைக்கிறது. ஆங்கில வழிக் கல்வி முறையில் இது எப்படியோ தெரியவில்லை,  இருப்பினும் வீட்டுக்கருகில் வளரும் குழந்தைகளை காணும் போது அவர்களுக்கும் அப்படியே லவ் என்ற வார்த்தையை காதலை குறிக்கும் சொல்லாகவே உணர்வதாக உணருகிறேன். 

         திரைப் படங்கள் தொலைகாட்சி வழியாக வந்து நித்தம் குழந்தைகளை சீரழிக்கின்றன.திரைப் பாடல்கள் அனைத்தும் காட்சி படுத்தும் போது காமம் கலந்த காதலாக வருவதால் ஆணும் , பெண்ணும் சேர்ந்து பேசுவதும் காதலாகவே படுகிறது. இளம் வயதில் அவர்கள் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் சிக்குண்டு மீளமுடியாமல் தவிக்கின்றனர். தன்னுடன் பயிலும் மாணவிகளை தன்னை அறியாமல் கனவுலக மாயையினால் சிரித்துப் பேசுவது என்பதும் காதலாகத்  தான்  படுகிறது. மேலும் பல மாணவர்கள் "சார், அவன் பெம்பாலப் பசங்க கூட பேசுறான், அவன கண்டிச்சு வையுங்க சார்",என்று சொல்லும் போது நமக்கு பயமாகத்தான் இருக்கிறது.  ஆசிரியர்கள் இவர்களை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் பாத்ரூம் செல்ல வெளியில் நகரும் சமயத்தில் நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்ல மாளாது. 

      பெற்றோர்களும் தங்கள் பங்கிற்கு "டேய் , டீச்சர் கிட்ட மட்டும் உட்கார்ந்துக்க .. எந்த பொம்பள பிள்ளை கிட்டையும் சேரக்கூடாது" என்று அச்சுறுத்துவது அவர்களுக்கு எதையோ தூண்டுவதுப் போலாகிவிடுகிறது.பத்துக்கு பத்து அறைகளையே வீடுகாளாக கொண்டுள்ள பல குடும்பங்களின் குழந்தைகள் , ஆசிரியர் அல்லாத சமயங்களில் தங்கள் பிறப்பு உறுப்புக்களை பிடித்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். அதனை பார்க்கும் பலரும் கெட்டுப்போக சந்தர்ப்பம் உள்ளது. 
  
    இன்று வகுப்பறைகள் மாணவர்களை சார்ந்து அவர்களுக்கு பிடிக்கும் விதமாக உள்ளதால், நான் மேலே குறிப்பிட்டுள்ள சேட்டைகள் குறைந்து உள்ளன. மாணவர்களுக்கு பிடித்த படம் வரைதல், பொம்மைகள் செய்தல், காகிதத்தில் கலைப்பொருட்கள் செய்தல் , பொம்மலாட்டம் , கதை புத்தகம் படித்தல் ,உள் விளையாட்டு, வெளி விளையாட்டு என மாற்றப் பட்டுள்ளதால் , பால் உணர்வு சார்ந்த எண்ணங்கள் எழாமல் , நன்முறையில் பாடங்களை படிக்கின்றனர். இருப்பினும் ஆசிரியர் கவனம் சிதறும் பட்சத்தில் அல்லது செயல் வழிக் கற்றல்   முறையிலிருந்து மாறி பழைய முறைகளில் பாடம் கற்பிக்கும் போது இத்தவறுகள் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. 

      இன்று மூன்றாம் வகுப்பிலேயே பெண் குழந்தைகள் பூப் பெய்துகின்றனர். எங்கள் பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் வயதிற்கு வந்துள்ளனர்.  இவர்கள் ஆண் , பெண் உறவுகளை உணரும் முன்னே ஒரு வித கனவுலகில், பாலியல் குறித்த விழிப்புணர்வு பெறாமலே பெரிய மனுஷிகளாக உலாவருவதால், பல சந்தர்பங்களில் தவறான முறையில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதை விட வளர்ந்து விடுகிறார்கள் என்பதே உண்மை. இவர்களை ஆசிரியர்கள் மட்டமே திருத்த முடியும்.  

      எங்கள் பள்ளியில் பயிலும் மாணவியை,அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் வயதுக்கு வந்த பெண் (பள்ளியில் அல்ல, அவர்கள் வீட்டுப்பக்கத்தில் ) அவளது பிறப்புறுப்பில் கை வைத்து தவறாக நடக்க சொல்லியிருக்கிறாள். இது எப்படியோ மாணவிகள் மூலமாக ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு தெரிய வர , அம் மாணவி அவரால் எச்சரிக்கப் பட்டு , தவறை திருத்தியுள்ளார். மேலும் அவர்கள் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை படுத்தியுள்ளார். ஆனால் , அவர்களின் பெற்றோர்கள் இதை நம்பாமல் ஆசிரியரை, "என் பிள்ளையை  அப்படி தப்பா சொல்லாதீங்க டீச்சர் , மத்த பிள்ளைக மாதிரி என் பிள்ளை கிடையாது ... வேறு எந்த பிள்ளையாவது செய்து இருக்கும் என்று சண்டைக்கு வர ..." விஷயம் என் காதுகளுக்கு கசிந்தது.    

      இவை எப்படி சாத்தியம்... குழந்தைகளுக்கு அதுவும் மூன்றாம் வகுப்பிலே செக்ஸ் பம்பந்தாமாக அதாவது தாம்பத்தியம் சந்தமாக தவறான புரிதலை ஏற்படுத்தி வைத்து , தங்கள் இளமையை சீரழிக்க வாய்ப்பு உள்ளது . அரசு இதனை கவனத்தில் கொண்டு துவக்க பள்ளியளவில் பாலியல் கல்வி கொண்டு வர வேண்டும் . துவக்க பள்ளியில் கட்டாயம் ஒரு மன நல மருத்துவரை நியமிக்க வேண்டும் . வாரம் ஒரு முறை அனைத்து மாணவர்களையும் அழைத்து பேச வேண்டும். மேலும் இது போன்ற சேட்டை செய்யும் மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் தரவேண்டும். பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் தர வேண்டும்.  

      தகவல் தொழில் நுட்பம் தொலைக்காட்சி , சினிமா அளவில் இவ்வளவு பாதிப்பு என்றால் இன்டர் நெட் பார்க்கும் குழந்தைகளை பற்றி சொல்ல வேண்டுமா... ? கனத்த மனதுடன் இதை முடிக்கிறேன்.ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன. இத் தொழில் புரட்சி பூத்தலின் பூவமை நன்று என்றே படுகிறது. 

Thursday, February 24, 2011

எதுவுமே வேஸ்ட் இல்லை....!

      நேற்று காலை பள்ளியிலிருந்து சுமார் எண்பது ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலாவாக மதுரை பாலமேடு அருகிலுள்ள சக்கரையாலைக்கு சென்றோம். மாணவர்கள் படிப்பு கவலையை மறந்து பிற நாட்களைவிட உற்சாகமாக வந்தனர். முகத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் போட்டியாக வானமும் தன் அழகை வெயில் மறைத்து,மேகங்கள் சூழ ,இதமான காற்றைத் தந்தது, மாணவர்களை விட ஓட்டுனர் உற்சாகமடைந்து நிதானமாக இயற்கை காற்றை சுவாசித்து, தூசிகள் நிறைந்த நகரை விட்டு இயற்கையைத் தேடி பறந்தோம்.
        பசுமைகள் தார் சாலையின் இருபுறமும் எங்கள் கண்களுக்கு விருந்தாக , எங்களின் மகிழ்ச்சி மேகங்களுக்கும் ஓட்டிக் கொள்ளவே அவைகளும் எங்களுடன் இருட்டிக் கொண்டு வந்தன. குற்றாலச் சாரலை உணர்ந்தோம். குளிர்ந்த காற்றுடன் சக்கரையாலையை அடைந்தோம். வரிசையாக எம் மாணவர்கள் கரும்பு எப்படி சக்கரையாக மாற்றமடைகிறது என்பதை பார்த்து வியந்தனர்.
   

      இதோ மேலே உள்ளப்படம் லாரிகளிலிருந்து டன் கணக்கில் கரும்புகள் கிரேன் மூலம் சாறு பிழிவதற்கு அனுப்பப்படுகின்றன.ஒரு நாளுக்கு 2400 டன் கரும்புகள் அரைக்கப்படுகின்றன. இந்த கிரேன் அப்படியே லாரியிலுள்ள கரும்பைத் தூக்கி,  அரைக்க அனுப்புகிறது. அதனால் லாரிகள் வரிசையில் வெகு நேரம் நிற்பது குறைகிறது .
     இது மில் ஹவுஸ் எனப்படும் அரைக்கும் பகுதி. கரும்பு சக்கையாக பிழிந்து சாறு தனியாகவும் சக்கைத் தனியாகவும் அனுப்பப்படுகிறது. இச்சக்கைகள் மீண்டும் மீண்டும் அரைக்கப்படுகின்றன.

   பாருங்கள் மேலேயுள்ளப்படத்தில் எப்படி கரும்பு சக்கையாகப் பிழிந்து எடுக்கப்படுகிறது. நன்கு சாறுப் பிழியப்பட்ட இச்சக்கைகள் , காகித ஆலைகளுக்கு காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சக்கரையாலையின் மிசின்களை இயக்க பாயிலர் பயன்படுகிறது. இந்த ஆலைக்குத் தேவையான மின்சாரம் தாயாரிக்கவும் இந்த பாய்லர் பயன்படுகிறது. பாயிலர்கள் மூலம் ஸ்டீரீம் பாய்ச்சப்பட்டு , ஜெனிரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ,இம் மிசின்களை இயக்குகிறார்கள். இவ்வாறு பிழியப்படும் கரும்புச்சாறு பாகு ஆகும் வரை கொள்கலன்களில் வெவ்வேறு வெப்ப நிலைகளில் கொதிக்கவைக்கப்படுகின்றன.

    இவ்வாறு பிழிந்து எடுக்கப்படும் சாற்றிலுள்ள மாசுக்கள் நீக்க ஒரு கட்டத்தில் இச்சாறுடன் சுண்ணாம்புக்கல்லும் சல்பர் வாயுவும் செலுத்தப்படுகிறது. அதனால் இச்சாற்றிலுள்ள அசுத்தங்கள் வடிக்கட்டப்பட்டு சுத்தமான சாறு மட்டும் அதற்கு அடுத்துள்ள கொள்கலன்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. மேலேயுள்ளப்படம் கொதித்து வரும் சாற்றுடன் சுண்ணாம்பும் , சல்பரும் சேரும் இடமாகும்.

    சுண்ணாம்பு நீர் இந்த கலைன் வழியாக பைப்புகளில் கலக்கப்பட்டு , சல்பர் வாயுவுடன் , கொதிக்கும் சாற்றில் கலக்கப்பட்டு , தூசுக்கள் வடிக்கட்டுதல் முறையில் நீக்கப்படுகின்றன. அடுத்த நிலையில் சாறு கொஞ்சம் பாகு நிலைக்கு தள்ளப்பட்டு , அதிலுள்ள இனிப்பு முழுவதும் பாகு தன்மையாடையும் வரை காய்ச்சப்படுகிறது. அதற்கு என பிரசர் அளவுகள் குறிக்கப்படுகின்றன. கண்ணாடியில் வைத்து அதன் தன்மையை சரிப்பார்க்கின்றனர். 



சல்பர் கலந்த பின் பாகு தன்மையுடன் வெளிவரும் கரும்பு ச்சாறு...

   பின்பு இச்சாறு மிகப்பெரிய சுழலும் டிரம்மில் செலுத்தப்படுகிறது. அந்த டிரம்மில் மிகச்சிறிய துளைகள் உள்ளன. அவைகள் மூலம் சாறு பாயும் போது சக்கைகள் , கல், மண் மற்றும் பிற கழிவுகள் டிரம்மின் மேற்பரப்பில் ஓட்டிக் கொள்கின்றன. மேலேயுள்ள படத்தில் அந்த கழிவுகள் ஓட்டியுள்ளதைப்பார்க்கலாம்.அவைகள் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. அப்பகுதி விவசாயிகள் இதனை கிலோ நூறுவுக்கு வாங்கி இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர்.




   மேலேயுள்ள படத்தில் பாகு சக்கரை தன்மைக்கு பின் ,மொலாஸ் எனப்படும் நிலைக்கு மாற்றப்படும் போது உள்ள தன்மை சோதிக்கப்படுகிறது. இந்த மொலாஸ் சாராயத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு நல்ல காசுக்கு விற்க்கப்படுகின்றன. சக்கரையாலையில் எதுவுமே வேஸ்ட் இல்லை . இதற்கு என தனி மின்சாரம் தேவையில்லை. அனைத்தும் பாய்லர் மூலம் ஜெனரேட்டரை இயங்கச் செய்வதன் மூலம் பெறப்படுகிறது. 




 பாகு சீனியாக மாற்றப்பட்டு அரைக்கப்படு வருகிறது. அவைகள் தரம் பிரிக்கப்பட்டு , மிகவும் பொடியாக உள்ள சீனி மட்டும் மூடை மூடையாக கிலோ கணக்கில் சாக்கில் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கீழேயுள்ள படம் தான் சீனி யாகி வரும் கடைசிக் கலன் ஆகும் 


    அங்கிருந்து விடைப்பெற்று , பாலமேட்டிற்கு அருகிலுள்ள சாத்தியார் அணைக்கட்டிற்கு மாணவர்கள் ஆனந்தமாக பயனித்தோம். இயற்கை எங்களுக்கு மேலும் ஆனந்தம் அளிக்கும் விதமாக மழையைப் பொழிந்தது. பேருந்தில் இருந்த வண்ணம் மாணவர்கள் மழையினை ரசித்தனர். பத்து நிமிடம் கணத்த மழை . பூமி குளிர்ந்து எங்களுக்கு வழிவிட்டது. மழையினை ரசித்த மாணவர்கள் சாலையின் இருபுறம் உள்ள மலையையும் ரசித்து வந்தனர்.” டேய் எங்கடா மழை.. பெய்யுது.. ” “டேய் , நான் அந்த மழையை சொல்லலடா.. இந்த மலையை சொன்னேண்டா... என கமண்டு அடிந்த்து வந்தனர்.

வரிசையாக அமர்ந்து சாப்பிட்டோம். அணைக்கட்டையும் , அதன் சுற்றுப்புறம் , இயற்கையை ரசித்தோம்.அணைக்கட்டின் அருகில் சென்று இயற்கை அரண்களாக மலைகள் அமைந்து எப்படி நீர் தேக்கப்படுகிறது என்பதை ஆசிரியயை விளக்க மாணவர்கள் வியப்போடு பார்த்தனர். நான் அவர்களுடம் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.


பயணம் இனிமையாக முடிந்தது. மாலை சரியாக மூன்று நாற்பது பள்ளியை அடைந்தோம். தங்களின் அனுபவத்தை இளம் மாணவர்களிடம் என்னைப்போன்றே பகிர்ந்துக் கொண்டனர்.

Tuesday, February 22, 2011

வீதியில் திரியும் சிறுவன் .. !

   இன்று என் நண்பர் கல்யாண் ஜி பள்ளி முடிந்து ஊமச்சிக் குளம் அருகில் உள்ள டீக்கடையில் தன் நண்பருடன் தேநீர் அருந்துவதற்கு பைக்கை நிறுத்தி இருக்கிறார்.  அவர்கள் வரும் பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றிப் பெறுவது சம்பந்தமாக சூடாக விவாதம் செய்தனர். மாணவர்கள் அன்றாடம் பாடங்களை வீட்டில் தினம் எழுதிப் பார்த்தால் போதும் , அதுவே அவர்களை நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற செய்து விடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது , பள்ளி வயது சிறுவன் ஒருவன் , தலையில் தண்ணீர் குடமும், இடுப்பில் ஒரு குடமும் வைத்து தண்ணீர் எடுத்துச் சென்றுள்ளான்.அவனுடன் மற்றொரு சிறுவனும் சைக்கிளில் தண்ணீர் எடுத்து சென்றுள்ளான். அவர் இவர்கள் நம் பள்ளி மாணவர்களாக தெரிய வில்லையே என யோசிக்கும் போதே சைக்கிளில் உள்ள தண்ணீர் குடம் நழுவுவதுப்போல இருக்க , ”டேய் , தம்பி தண்ணீக் குடம் விழப்போகுதுன்னு ...”சொல்லிக் கொண்டே அவரின் நண்பர் சைக்கிளை நோக்கி ஓட ... இருவரும் உதவிச் செய்துள்ளனர்.


    ”என்னடா...இன்னிக்கு பள்ளிக் கூடம் லீவா... “ என கல்யான் ஜி வழக்கம் போல தன் உரையாடலை ஆரம்பித்தார்.

“அண்ணே . நாங்க மதுரையில டவுன்ல படிச்சோம்.. “

“என்ன படிச்சியா .. அப்ப ...இப்ப படிக்கலைய்யா..பார்த்த ஃபப்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்கிற பையன் மாதிரி தெரியுற”

“ஆமாண்ணே , எங்க கிராமத்தில.. நான் தான் ஐந்தாவது படிக்கும் போது ஃப்பஸ்ட் மார்க் வாங்குவேன்.. எங்க ஊரில மதுரையில .....(பள்ளியின் பெயர்) பள்ளிக்கூடத்திலிருந்து வந்தாங்க .. பஸ் இலவசமா விடுறோம் .. உங்க பிள்ளைய சேருங்க .. அங்கேயே பன்னிரண்டு வரை இருக்குன்னு எங்க அய்யாவும் சேர்த்து விட்டாங்க....”

“அப்புறம் என்னடா.. படிக்க வேண்டியது தானே.. ஏன் படிக்கலை..?”

“அட போங்கண்ணே டவுனுக்காரப்பயபுள்ளைங்க மோசமானவன்னு இப்பத்தானே தெரியுது..?” என தலையில் குடம் வைத்தவன் பேசினான்.

“டேய் , நானும் மதுரை டவுனுத்தான்.. பார்த்துப் பேசு .. அப்படி என்னடா நடந்துச்சு....?”

“வண்டிய ஒரு மாசம் ஓசியா விட்டானுங்க.. ”
அடுத்தவன் மறித்து “டி.சி. வாங்கி எங்க கிராமத்தில இருந்து ஐம்பதுக்கும் மேல சேர்ந்தாங்க.. அப்புறம் பஸ் பீஸ் கட்டினாத்தான் வேனில எத்துவாங்கன்னு சொல்லிப்புட்டாங்க..”

“அப்ப எப்ப இருந்துடா பள்ளிக் கூடம் போகல..?.”

“இரண்டு மாசம் மட்டும் தான் நான் ஆறாவது போனேன்.... எட்டாவது மாசம் இருந்து என்ன அந்த பள்ளிக் கூடத்தில இருந்து யாரும் கூப்பிடவும் வரலை.. எங்க அப்பா டி.சி கேட்டாலும் தர மாட்டீங்கிறாங்க... “

“ஏண்டா .. நீ பள்ளிக் கூடம் போகலைன்னு யாரும் கணக்கு எடுக்க வரலைய்யா...? “

” கணக்கா... நீங்க என்ன வாத்தியாரா...?”

“ஏன்டா .. வாத்தியாருன்னா பிடிக்காதா...?”

“சார் எங்கப்பாவே கஷ்டப்பட்டு கடன வாங்கி ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த ஸ்கூல்ல சேர்த்துச்சு... ஆனா .. பஸ் பீஸ் கட்ட முடியாததால என்னால படிக்க முடியல .. டி.சிக்கு நாலு நாள் அலைஞ்சு .. வேலைக்கு போகாதது தான் மிச்சம்.. அதனால வேறக் கடன் .. அதான் நாங்க வீடு வீ டா தண்ணிப்பிடிச்சுத் தாறோம்...அப்பாவுக்கு உதவியா இருக்கோம்”

”டேய் .. அனைவருக்கும் கல்வி திட்டம் இருக்குடா.... அதுல கணக்கு எடுப்பாங்க.. நீ படிக்கலைன்னு சொன்னா.. உனக்கு பள்ளியில சேர்க்க ஏற்பாடுச் செய்வாங்க.. உனக்கு டி.சி கொடுத்து படிக்க வைப்பாங்க.. “ என அட்ரஸ் கொடுத்து , அட்வைஸ் கொடுத்து வந்துள்ளார்.


    என்னிடம் இவ்விசயத்தை உடனே போன் செய்து தெரிவித்தார். மேலும் உங்கள் பிளாக்கில் இச்செய்தியை போடவும் . தமிழக ஆசிரியர்கள் உங்கள் பிளாக் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி திட்டமா ..? அல்வா திட்டமா..? என எல்லாருக்கும் தெரியட்டும் என காட்டமாக பேசினார்.
 அவர் மொபலில் அம்மாணவர்களைப் புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அதனை என் ஈ.மெயிலுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

     ஊமச்சிக் குளம் மதுரை பெரியாரில் இருந்து குறைந்தது இருபது கிலோமீட்டர் இருக்கும். அதற்கு அருகில் உள்ள கிராமத்திற்கு , பெரியார் நிலையம் அருகில் உள்ள வீரமான பெயர் கொண்ட பள்ளியில் இருந்து மாணவர் சேர்க்கைக்கு வேன் மூலம் ஆசிரியர்கள் சென்று மாணவர்களைச் சேர்த்துள்ளனர்.
         மாணவர்கள் நல்லக் கல்விப் பெற வேண்டும் என்று கிராமப்புற மாணவனும் டவுன் மாணவர்களைப்போன்று திறன் பெற வேண்டும் என்று கிராமப் புறத்தில் உள்ள குழந்தைகளை சேர்க்க செல்லும் ஆசிரியர்களின் இப்பண்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அதே சமயம் , இவர்கள் ஏரியா சென்சஸ் பகுதியை விட்டு , ஏன் முப்பது கிலோ மீட்டர் தள்ளி உள்ள மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். மாணவர் சேர்க்கை விசயத்தில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சிப் பள்ளிகளைப்போல் அல்லாமல் , மே மாதம் முழுவதும் அக்கினி நட்சத்திர வெயிலிலும் இந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக நம் அரசியல்வாதிகள் கூடத் தோற்கும் அளவிற்கு பொய்களை (மன்னிக்கவும்) வாக்குறுதிகளை அள்ளி வீசி , எங்கள் பள்ளித்தான் உலக்கத்திலேயே சிறந்தது என சான்று கொடுத்து , அமெரிக்க அதிபர் ஓபாம இங்கு தான் படிக்க விரும்புவதாக சான்று கொடுத்துள்ளார்.இ.மெயில் அனுப்பியுள்ளார் என்றெல்லாம் கூட சொல்லி சேர்ப்பதற்கான காரணத்தை ஆராய்ந்தோமென்றால் இதன் பின்புலம் புரியும்.


      அரசுப் பள்ளிகளைப் போல டிரான்ஸ்பரோ, பிற பணி மூலம் மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களால் செல்ல முடியாது. அவர்கள் நாற்பது மாணவர் சேர்த்தால் தான் , அடுத்த ஆண்டு அவர்கள் அதேப் பள்ளியில் பணித் தொடர முடியும். மேலும் ,அப்படி இவர்கள் மாணவர்கள் சேர்க்காத போது அல்லது சேராத போது , வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் செல்லலாம். ஆனால், அங்கு நிலமை இதைவிட மோசம் என்றால் இருக்கும் இடத்தைவிட மோசமாகிவிடும். புதிய சூழல் , புதிய நிர்வாகம் ஒத்து போகவில்லை என்றால், பணி நீக்கம் கூட செய்ய நேரலாம். மதுரையில் பல பள்ளிகளில் நிர்வாக நடவடிக்கையால் பலர் பதவி இழந்த கதைகள் ஏராளம். ஆகவே , பயந்து , எப்படியாவது மாணவர்களை சேர்க்க நிர்வாகமும் ,தனியார் பள்ளி ஆசிரியர்களும் போட்டிபோடுவார்கள். மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் உண்டு.


     அதுதான் பணி நிரவல் மூலம் அவர்களுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கிறதே...? பின்பு ஏன் இந்த மோதல் ,,, கிராமம் கிராமமாக டவுனில் இருந்து படையேடுப்பு... ? இதற்கும் பின்னனி உண்டு. ஒவ்வொரு பள்ளிக்கும் ஸ்டாப் பிக்சேசன் எட்டாவது மாதம் இறுதியில் உள்ள மாணவர்களின் வருகையைக் கொண்டு கணக்கிடுவது உண்டு. இக் கணக்கெடுப்பிற்கு உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள் கொண்ட குழுவை , மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி அமைத்து , அவர்கள் பார்வையிட செல்லும் நாளில் உள்ள மாணவர்கள் வருகையின் அடிப்படையில், மூன்று பார்வைகளின் சாராசரியின் அடிப்படையில் , ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவார்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அது தான் அந்த பள்ளி நல்ல முறையில் நடைப்பெறுவதற்கு சாட்சி.

       அப்ப நல்ல முறையில் நடைப்பெறுவதென்றால்... நல்லா சொல்லிக் கொடுத்தால் தானே பிள்ளைகள் சேரும். ஆமாம்... அப்புறம் ஏன் மாணவர்களைத் தேடி அலைகின்றனர்? ஆசிரியர் நிர்ணயம் சரியாக இருக்கும் பட்சத்தில் , ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பணியிடத்தில் ,புதிய ஆசிரியர்களை பணி நியமணம் செய்யலாம். இது தமிழக முதல்வருக்கே இல்லாத அதிகாரம். அவர் நினைத்தால் கூட யாருக்கும் தன் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி
எவருக்கும் அரசு ஊதிய வேலைக் கொடுக்க இயலாது. நிர்வாகிகள் இந்த அதிகாரத்தை இழக்க விரும்புவதில்லை. இன்று எதுவும் ஓசியில் கிடைப்பதில்லை என்பது தனிப்பட்டக் கதை. இப்பணியிடத்தின் விலையை நான் நாளிதழ்கள் வாயிலாக தெரிந்துக் கொண்டதுப்போல நீங்களும் தெரிந்துக் கொள்ளலாம். தினமலர் இப்படிப்பட்ட புள்ளி விபரங்களைக் கொடுக்கும் என்பதால் கடந்த மே மாத இதழை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் இப்பணியிடத்தின் மார்க்கெட் விலைத் தெரிய வரும். போட்டிக்கான காரணமும் புரிய வரும்.

    அது சரி இரண்டு மாசம் இலவசம் அப்புறம் ஏன் ... வண்டிக்கு காசு... ? அட எட்டாவது மாதம் முடிந்த பின் தான் பிள்ளைகள் தேவையில்லை. யாரும் எண்ண வரமாட்டார்கள் . ஆசிரியர் பணி நிர்ணயம் முடிந்தபின் மாணவன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? இது தான் உண்மை நிலவரம்.


       தனியார் பள்ளி நிர்வாகம் பற்றி நமக்கு என்னக் கவலை.? அந்த பள்ளி மாணவர்கள் தெருவில் பள்ளி செல்லாமல் அலையும் போது ,அம்மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டியக் கடமை யாருக்கு இருக்கு...? பெற்றோருக்கா...? அல்லது வேறு யாருக்குமா?

அது தான் பெற்றோர்கள் தங்கள் வறுமையையும் மீறி படிக்க வைக்க , கடனைப் பெற்று சேர்த்துள்ளார்கள். நிலமை மோசமாகவே , டி.சி. கேட்டு அலைந்துள்ளார்கள். பின்பு ஓய்ந்து தன் மகனின் விதியை நொந்து , பள்ளிக்கு செல்லாமல், வீட்டு வேலைப் பார்க்க செய்துள்ளார்கள். ஆகவே, பெற்றோரை குறைச் சொல்லக்கூடாது. பின்பு?


    அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் கோடிக் கணக்கில் பணம் ஓதுக்கப்பட்டு , ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எஸ்.எஸ்.ஏ.க்கு தனி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அவருக்கு உதவியாக ஏ.டி.பி.சி. அவர்களுக்கு துணையாக ஒவ்வொரு காம்பனட்டாக பார்க்க ஆசிரியப் பயிற்றுநர்கள், அவர்களுக்கு துணையாக அலுவல உதவியாளர்கள், மற்றும் இதன் கட்டுப்பாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள சரகங்களுக்கு மேற்பார்வையாளர். அவர்களுக்கு த் துணையாக அதிக பட்சமாக ஐந்து பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியப் பயிற்றுநர் . இவர்களுக்கு உதவிகள் செய்யவும் , கண்காணிக்கவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் என அனைவரும் சேர்ந்து பள்ளி செல்லாக் குழந்தைகளே 2010ல் இருக்கக் கூடாது என்று சூழுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் , வீதி வீதியாக , கடைக் கடையாகத் தேடிப் பிடித்து , சர்வே எடுத்து அவர்களை பள்ளியில் சேர்க்க கடமைப்பட்டுள்ளார்கள். இவர்கள் எப்படி விடுப்பட்டுப்போனார்கள்?
  
      இவர்கள் விடுபடாமல் போக காரணம் சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பாரம் கொடுத்து நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர் பற்றிய புள்ளி விபரங்களை எஸ். எஸ். ஏ மூலம் கணக் கெடுக்கப்படுகிறது. அப்படி கொடுக்கப்பட்டப் புள்ளி விபரத்தில் அப்பள்ளி ஆசிரியர் தெரிவித்து இருந்தார் என்றால், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டு படிப்பின் அவசியத்தை ஆசிரியரும், ஆசிரியப் பயிற்றுநரும் எடுத்துச் சொல்லி , பள்ளியில் அவசியம் சேர்த்து இருப்பர்.

      அதே சமயம் அந்த பகுதியில் அதாவது ஒவ்வொரு ப்பள்ளிக்கும் ஒரு சென்சஸ் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது . அப்படிவத்தில் , ஏரியா சென்செஸ்சில் படிக்காத , அல்லது பள்ளிச் செல்லாக் குழந்தைகள் இருப்பின் , அப்பள்ளி தெரிவிக்க வேண்டும். அப்படி பார்க்கும் பட்சத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளியின் தலைமை யாசிரியர் தன் ஆசிரியர் மூலம் கணக்கெடுத்து தகவலை கொடுத்திருக்க வேண்டும் . அங்கேயும் கோட்டை விட்டாச்சு.

           இதனை மேற்பார்வை செய்யும் அத்தனை அதிகாரிகளில் யாராவது கேட்டு இருந்தால், உண்மை வெளி வந்து இருக்கும். மேல்மட்ட அதிகாரிகள்  மட்டும் கிராமம் தோறும் விசிட் அடித்து ஏ.பி.எல் செயல்பாடுகளை பார்த்தால் போதுமா..?படிக்க மாணவர்கள் வேண்டாமா..?அதிகாரிகளின் கனவு , பள்ளிச் செல்லக் குழந்தைகளே இல்லாமை என்ற நிலை ஏற்பட உண்மையான உழைப்பு வேண்டாமா..? அதற்கு அடிமட்டம் சரியாக செயல் பட வேண்டாமா..?  மதுரை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அதிகாரி பம்பரமாக சுழன்று வேலை வாங்கும் போது இப்படி டிமிக்கி என்றால்.. ? என ஆதங்கத்துடன் கல்யாண் ஜி கேட்பது புரிகிறது.

      தனியார் , அரசு பள்ளி என்ற பேதம் நீங்கி அனைத்து ஆசிரியர்களும் உண்மையான உழைப்பை க் காட்டி ., தமிழகத்தில் பள்ளி ச்செல்லாக் குழந்தைகளே இல்லா நிலை ஏற்பட ... அனைத்துப்பள்ளிகளையும் அரசுடமையாக்குவதே சிறந்த வழி.


    இன்று மதுரை பெரியார் அருகில் உள்ள பள்ளி சிவகங்கை மாவட்ட எல்லை வரை மாணவர்களை அலைத்து வருகிறது. திண்டுக்கல் எல்லை வரை முயற்சியில் உள்ளது. இந்த புரம் உசிலம்பட்டி வரை தொடலாம். அடுத்து தேனி எல்லைத் தான் . நிலமை இப்படி இருக்க .. அரசு இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்கள் தன்நிலை உணர்ந்து செயல்பட அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். 

Monday, February 21, 2011

மழை

    காசி தன் பைக்கை உதைத்தான். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் சித்தி பையனின் உடல் நலம் விசாரிக்க ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டுக் கிளம்பினான். இதுவரை இரவில் குளிரும் , பகலில் வெயிலும் வாட்டிய மதுரை இன்று ஒரு வித மப்புடன் மேகங்கள் சூழ மழைவருவதற்கான அறிகுறியைக் காட்டியது.

    நாம வெளியக் கிளம்பினாத்தான் இந்த மழை எழவு வரும்.. என முணங்கிக் கொண்டே பைக்கை உறுமிக் கிளம்பினான். காசி சிம்மக்கல் அருகில் உள்ள தனியார் செல்போன் விற்பனைக்கடையில் வேலைப்பார்த்து வந்தான். அவன் அங்கு வேலைக்கு வந்து ஒரு வருடமாகும். அதற்குள் அவனுடன் வேலைப்பார்த்த நான்கு நபர்கள் பணி மாறுதல் ஆகி , அதே நிறுவனத்தின் வெவ்வேறுக் கிளைகளுக்கு சென்று விட்டனர். தற்சமயம் இவனுடன் சேர்த்து நான்கு ஆண்களும் , ஆறு பெண்களும் பணிப்புரிகின்றனர். அவர்களுக்கு இப்போது மேனேஜராக ரதி வந்துள்ளாள். வெகுளி , எதற்கெடுத்தாலும் காசியையே அழைத்து வேலை வாங்குவாள்.  அங்கு இருக்கும் பாலா, வடிவேலு, குமார் என இவர்களை எந்த வேலையும் ஏவுவது இல்லை. வெளியில் சென்று கஷ்டமரை பார்க்க , பால்ட் பார்க்க காசியைத் தான் அனுப்புவாள். அவனும் எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டிக் கொண்டு பார்ப்பான். காசி அவர்களில் இளையவன் என்பதாலும் தற்போது தான் பணியில் சேர்ந்தவன் என்பாத்லும் அவனை வேலை வாங்குவது அவளுக்கு மிகவும் எளிது. மற்றவர்கள் அனைவரும் மூன்று வருடம் அனுபவம் வாய்ந்தவர்கள்.

      மழை பிடிக்க ஆரம்பித்தது. இரண்டு மாதங்களாக மழைப் பார்த்திராத பூமி ஆன்ந்தமாக அதன் துளிகளை உள் வாங்கிக் கொண்டது. சனியன் பிடிச்ச மழை வேலையைக் கெடுக்க வந்திருச்சு ... என திட்டிக் கொண்டே ,தன் செல்போன் நனையாதப்படி , தன் பைக்கில் வைத்திருந்த கேரி பேக் எடுத்து சுற்றி வைத்துக் கொண்டு , கோரிப்பாளையம் போஸ்டாப் அருகில் உள்ள வசந்தம் ஹோட்டல் முன் போடப்பட்டுள்ள பந்தலில் நின்றான். எதிரில் உள்ள சிக்னலை வேடிக்கைப்பார்க்க ஆரம்பித்தான். மழை வலுத்தது. மழைத்துளிகள் பெரிது பெரிதாக பெய்யத் துவங்கின.  சிக்னல் நான்கு பக்கமும் சிவப்பு விளக்கு எரிய , டிராபிக் போலீஸ் போஸ்ட் ஆபிஸ்க்குள் மழைக்கு ஒதுங்கினார்.

     பைக்குகள் பறந்தன. இருபுறமும் பஸ்கள்,கார்கள் , ஆட்டோ ரிக் ஷாக்கள் தண்ணீரை வாறி இறைத்துப் பறந்தன. வேகமாக வந்த பல்சர் சர் என்று பிரேக் அடித்து , வட்டமிட்டு ஹோட்டல் முன் நின்றது. இறங்கியவன் தொப் தொப் என  நனைந்திருந்தான். முகத்தை துடைத்தப்போது தான் தெரிந்தது. “டேய், அசோக் எப்படிடா இருக்கே?” எனக் காசி நலம் விசாரிக்கத் தொடங்கினான்.” சிம்மக்கல் வரை மழையில்லடா.... பாலம் தாண்டி வந்த பின்னாடித் தான் மழை சோ வெனக் கொட்டுது.. ”என புலம்பினான் அசோக்.” சரி வா உள்ளேப் போய் ஒரு காபி சாப்பிடுவேம் ”என காசி அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.

   ” டேய் ...நம்ம குமார் எப்படிடா இருக்கான்..எப்படிடா ஆபிஸ் இருக்கு ... “
“அத எண்டா கேட்கிற .. குமார் எப்பவும் போல ராஜியோட பேசிகிட்டேத் தான் இருப்பான்... ஆபிஸ் முடிஞ்சது இரண்டு பேரும் ...யூகோ பார்க் போய் லூட்டி அடிச்சுட்டு தான் வீட்டுக்கு ...”

“டேய் ... ஏண்டா தப்பாவே நினைக்கிற... அவளுக்கு திருமணமாகிட்டது..அவள போய் தப்பா ..”

“ நிறுத்து.. அவ புருசன் தான் சிவகாசியில வேலைப்பார்க்கிறான் ...வாரம் ஒரு முறைத்தான் வருவானாம்.. இவன் பைக்கில ஏத்திப்போறதும்,அவள வீட்டில விடுறதும்., காலையில சேர்ந்து வரதும்..”

“இங்க இருந்து நீ தப்பிச்சுப்போயிட்ட .. நீ இருக்கும் போது நம்மல சாப்பிட அனுப்பிட்டு கல்லால ஒக்காந்து கடலைப்போடலை... அப்புறமா... இரண்டு பேரும் .. தோளில தட்டி விளையாடலை... “

” வேலை பார்க்கிற இடத்தில. .. இதெல்லாம் சகஜம்டா.. காசி நீ அவங்க மாதிரி பேச பிடிக்கலைன்னா .. விட்டிடு...அத விட்டு இப்படி சொல்லாதடா..”

“போன வாரம் .... குமார் அந்த ஒல்லி பாச்சா சுஜாவை பைக்கில உட்கார வச்சு .. அவ வீட்டுக்கு கூட்டிப் போயிருக்கான்.. அன்னைக்கு நைட் புல்லா அவ வீட்டிலையே படுத்திருக்கான்.. விசயம் ராஜிக்கு தெரிய.. இருவரும் பேசுவது கிடையாது... அப்பாடா இவங்க சண்டை ஓய்ந்தது.....இனி நல்ல வேலைப் பார்ப்பாங்க சேல்ஸ் அதிகமாகும் என நினைச்சேன் ”

“நம்ப முடியலைடா.. அவளுக்கு தான் புருசன் டைவர்ஸ் ஆயிடுச்சுல்ல...”

“ ஆமா... இதக் கேளு .. மதியம் பார்த்தா.. ராஜி மடியில .படுத்து .. இந்த சுஜா ஒப்பாரி வச்சு அழுதுகிட்டு .. அக்கா இனி குமாரக் கூட்டிட்டுப்போகல... அப்படித் தேவைன்னா என் கிட்ட பெர்மிசன் வாங்கி கூட்டிகிட்டு போன்னு டீல் பண்ணிக் கிட்டாங்க... இப்ப இந்த சுஜா.. வடிவேலுகிட்ட லுக் விட்டு , அவனோட தினம் பைக்கில சுத்துது..”

“......ம்ம்ம்ம்”

“ அத விடக் கொடுமை.. ஒரு நாள் மதியம் ...மழை இதே மாதிரி திடீர்ன்னு பெய்ய... இருவரும் குடையை பிடித்து சாப்பாட்டுக்கு வடை வாங்கச் சென்றனர். இரண்டு நிமிடத்தில் மழை நிற்க.. இவர்கள் இருவர் மட்டும் குடையைப் பிடித்து நடந்து சென்றதை அதுவும் அதுவும் உரச நடந்து சென்றதை நம்ம புது மேனேஜர் அம்மா பார்த்து என்னிடம் சொல்லி சிரிக்குது தெரியுமா..”

இன்னும் சிக்னல் .. சிவப்பு விளக்கிலே இருக்க.மழை முன்பை விட வேகமாகப் பெய்யத் தொடங்கியது. இப்போது மழைக்கு வாகனங்கள் மிகவும் நிதானமாக சென்றன. இருப்பினும் சாலையில் ஓடும் மழைநீரை ,வாகனங்கள் மழைக்கு ஒதுங்கியுள்ள அனைவர் மீதும்தெறிக்கத் தான் செய்தது. 

Sunday, February 20, 2011

காசுக் கொடுத்து தனக்கு தானே பில்லி சூனியம் ....

    மதுரையில் தந்தையை மீறிக் காதல் செய்தப் பெண்ணை அப்பெண்ணின் தகப்பன் அடியாள்களை வைத்து ஊசி மூலம் கொலை செய்த சம்பவம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏற்கனவே திருமணமான ஒருவர் , காதலித்ததால்,அவனைப் பிரிய மனமின்றி, அவரின் மகனை தூண்டுத் தூண்டாக வெட்டிய சென்னைப்பெண்ணைப்பற்றி செய்திகளில் கேள்விப்பட்டுள்ளோம். தன் மனைவியின் காதல் வெளியில் தெரிய , அவளை காட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து புதைத்த கணவனைப் பற்றிய செய்தியைப் படித்து இருப்பீர்கள். கள்ள காதலால், நடக்கும் மிக மோசமான கொலைகளைப் பார்த்து இருப்பீர்கள். படித்து இருப்பீர்கள். இவைகளுக்கு எல்லாம் பின்னால் ஒரு மனநிலை பாதிப்பு அல்லது மனம் பித்து அடைந்து இக் கொலைகள் நடந்திருக்கலாம். அதுசரி இப்போது அதை யெல்லாம் ஏன் கூறுகிறேன் என்று நினைக்கிறீர்களா...?காரணம் இருக்கு என்னைப்போல நீங்களும் ஏமாந்து விடக்கூடாது என்று ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தத்தான்.

      தமிழ் திரையுலகின் முதன்மையான இயக்குநர் என்பதை மறந்து அல்லது தமிழர்கள் நாம் எதை எடுத்துப் போட்டாலும் பார்ப்பார்கள் என்ற தைரியத்தில் இப்படி ஒரு படம் எடுத்து விட்டார் போலும்.பலவீனமானவர்களுக்கு அல்ல என்ற அடித்தலைப்பிட்டு , தமிழர்களின் பலகீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ள கொளதம் ,”தமிழர்களை நாயே இனி திரில்லர் படம் கேட்பாய் என்பது போல ஒரு மோசமானப் படம்” எடுத்துள்ளார்.  இவரைத் தவிர யாரும் இப்படி எடுக்க முடியாது என்பதும் உண்மை.

      கதை என்னவென்றால், தாயை இழந்து, செக்ஸ் வெறிபிடித்து கார்ப்பரேட் கலவித்தனத்தில் ஈடுப்படும் தகப்பனால் வளர்க்கப்படும் மகனின் மனநிலைப்பாதிப்பு ,அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்லும் படம் .மனநிலைப்பாதிப்பை வன்மம் புகுத்தி, நடுநிசியில் நாய்கள் மத்தியில் கிளைமேக்ஸ் வைத்து கொடுக்கப்பட்ட கதைத் தான் இந்த நடுநிசி நாய்கள். திரில்லர் என்ற ரீதியில் என்ன சொல்ல வருகிறார் என்பதையே மறந்து , கடைசியில் ஒரு மருத்துவர் மூலம் மனநிலைப்பாதிப்பு இந்தியாவில் பெண் குழந்தைகளை இளமையிலே பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதால் தான் என்று சொல்லி , அதற்கு ஒரு டுவிஸ்ட் கொடுத்து முடிப்பது , ஆங்கிலப்பட ரேஞ்சுக்கு இவர் அடுத்து ஒரு பாகம் எடுப்பார் என்பதுபோல முடித்து இருப்பது அதைவிடக் கொடுமை சார்...

    கொளதம் படத்தில் செக்ஸ் எதிர்பார்க்கலாம்.. ரொமான்ஸ் எதிர்ப்பார்க்கலாம். காதல் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்தப்படத்தில் செக்ஸ் மட்டுமே எதிர்பார்க்கலாம் . அருகில் உள்ள பெண்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கும் போது எனக்கு அருவெறுப்பாக இருந்தது. எனக்கு எங்க அண்ணன் சாருநிவேதிதா இப்படத்தைப்பற்றி என்னச் சொல்லுவார்ன்னு ஒரு எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

      கொளதம் இப்படத்தின் மூலம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், இளம் வயதில் குழந்தைகள் பாலியல் வன்மத்திற்கு உட்படும் போது, அவர்கள் ஒரு சைக்கோ மனநிலைக்கு உட்பட்டு , கொலைகள் செய்ய நேரிடும் அல்லது தவறிய பாலியல் உறவுக்கு உட்பட நேரிடும்.   இப்படத்தில் வரும் ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தை தன் தந்தையால் பாலியல் வன்மைக்கு உட்பட்டு , மனநிலைப்பாதிப்புக்கு உள்ளாகி , தன்னை தத்து எடுத்து வளர்க்கும் தாயையே , தாயாக ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்கு ஆட்பட்டவனாக மாறி , தாயையே கற்பழிக்கும் அவலத்திற்கு ஆட்படுகிறான்.

       கதைக்கரு நன்றாகத் தான் எடுத்துள்ளார் .அதை திரில்லர் என்ற ரீதியில் எடுத்து , சொல்ல வந்தக் கருத்தை மறந்து ,  வன்மத்தை மட்டுமே காட்டி , ஏற்கனவே தழிழ் சினிமாக்களில் இருக்கும் அவலத்தையேக் காட்டி , ஏமாற்றி இருப்பது மன்னிக்க முடியாது . கொளதம் அடுத்தப்படம் தான் அவரைக் காப்பாற்றி , அவரைப் பழைய நிலைக்கு பார்க்க வைக்கும் என நம்புகிறேன். காசுக் கொடுத்து தனக்கு தானே பில்லி சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம். 

Friday, February 18, 2011

காந்தி -மாறுபட்டக் கண்ணோட்டம்.

    எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் சுமார் நூற்று ஐம்பது மாணவர்கள் சென்ற வாரம் காந்தி மியூசியம் மற்றும் இராஜாஜி பூங்காவிற்கு இன்பச் சுற்றுலா சென்றனர்.

எங்கள் பள்ளிப்பேருந்தில் எழு ஆசிரியர்கள் , இரு ஆயாக்கள் மாணவர்களுக்கு துணையாய் ஆனந்தமாய் உணவு கூடைகளுடன் பயணம் மேற்கொண்டனர். முதலில் காந்தி மியூசியம் அடைந்தனர்.

   காந்தியின் அகிம்சை , நாம் சுதந்திரம் பெற்ற வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் அதற்கான தமிழ் விளக்கங்களை ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல குழந்தைகள் கேட்டு மகிழ்ந்தனர். மாணவர்கள் சுதந்திர உணர்வுகள் பெற்று , உணர்ச்சியுடன் காந்தியின் இரத்தக் கறை படிந்த ஆடைகளைப் பார்த்து துடித்துப் போனார்கள். அவர் அணிந்த செருப்புக்களையும் பார்த்து அவரின் எளிமையை உணர்ந்தனர்.  




   காந்தியின் நல்ல விசயங்களை நாம் குழந்தைகளுக்கு காட்டினாலும் , வளர்ந்த பின் மாகத்மா பற்றிய தவறானக் கருத்துக்கள் அல்லது எதிர்மறையான கருத்துக்களை முன் வைக்கக் கற்றுக் கொள்கிறார்கள். இதை நான் மதுரையில் மிலாடி நபி அன்று புத்தக அறிமுகம் பற்றிய மதுரை பிளாக்கர்கள் சந்திப்பில் காந்தியைப் பற்றி படித்த விபரங்களை அனிமல் ஜெயா முன் வைக்கும் போது காந்தியின் எதிர்மறையானத் தோற்றங்கள் பற்றி முன் வைத்தார்.இதைப் பார்க்கும் போது , வயதிற்கு ஏற்ப பார்வைகள் மாறுபடுகிறது என உணர்ந்தேன்.
     காந்தி தன் மூத்த மகனை அவரின் துணைவியாருடன் வாழ விட வில்லை. அவர் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். காந்தி அவ்வளவு கொடுமையானவர் என்றும் . நீண்ட காலத்திற்கு பின் ஒரு இரயில்வே நிலையத்தில் அவரின் மகன் கஸ்தூரி பாய் மற்றும் காந்தியை சந்தித்த போது, அவரின் தாய்க்கு மட்டும் வணக்கம் செலுத்தி, பழம் தந்ததாகவும், அதை அவர் மட்டுமே உண்ண வலியுறுத்தியாதகாவும், காந்தியுடன் பேச மறுத்ததாகவும் சொன்னார்.ஸ்ரீதர் குளிக்கும் கல்லை எடுத்துவர நள்ளிரவில் பெண்ணை அனுப்பி நாற்பது மைல் கடந்து கல்லை எடுத்துவரச் செய்த கதையை எடுத்துரைத்தார். அது ஒரு காலில் அழுக்குத் தேய்க்கப்பயன் படுத்திய கல் அது கிடைக்காதா ?எனவும்ஆதங்கப்பட்டுக் கொண்டார். பின் அச்சம்பவம் பற்றி காந்தி வருத்தம் தெரிவித்ததாக ஜெயா சொன்னார். நிஜ வாழ்வில் காந்தி கடுமையானவராக காணப்பட்டார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. கா. பா அம்போத்கார் படத்தை வைத்து , காந்தி அம்பேத்தாகாரின் வர்ணத்தைக் கேட்டதாகவும், இத்தைனை நாள் இவர் ராவ் வகையறா என்று நினைத்தேன் என்ற வசனம் வருவதாகவும். அம்பேத்தாரிடம் காந்தி வர்ணாசிரமத்தை வலியுறுத்தியதாகவும் சொன்னார். அதனாலே இப்படம் திரையிடப்படாமல் ஒதுக்கப்படுகிறது. நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் வலியுறுத்தினார். அடுத்த மாதம் இத்திரைப்படம் பார்த்து , கருத்துக்கள் பகிர்வது என முடிவெடுக்கப்பட்டது. சீனா அய்யா தமிழருவி மணியனின் அன்பில் ....என்ற புத்தகத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார்.  
அக்காலத்தில் குடும்பங்கள் எவ்வாறு தோன்றின என்பதனை சங்க காலப் பாடல்களை உதாரணமாக கொடுத்துள்ளார் என்று சொன்ன சீனாஅவர்கள் புத்தகத்தின் முக்கியமான வரிகளை வாசித்துக் காட்டினார்.


    காந்தி அருங்காட்சியகம் சென்ற எம் குழந்தைகள் அருகில் உள்ள இராஜாஜி பூங்கா சென்று ஆனந்தமாய் விளையாடினர். டிரையினில் (ரயிலில்) ஏறி சுற்றினர். வாத்தில் அமர்ந்து சுற்றி மகிழ்ந்தனர்.

     செவ்வாய் அன்று மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பைச் சார்ந்த நூற்றி இருபது மாணவர்கள் அழகர் மலைக்கு சுற்றுலா சென்று இயற்கையை ரசித்தனர். கள் அழகரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துக் கொண்டனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையை கண்டுக் களித்தனர். குரங்குகளையும் அவற்றின் சேட்டைகளையும் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

    மாணவ பருவத்தில் சுற்றுலா செல்வது எவ்வளவு ஆனந்தம் என்பதை அவர்களுடன் செல்லும் போது தான் உணர முடியும் . அதேத் தருணத்தில் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று நல்ல முறையில் கொண்டு வர ஆசிரியர்கள் எவ்வளவு பாடுப்பட வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ள உணர்வு ஆகும். பல சிரமங்களுக்கு நடுவில் ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் சென்று மாணவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தமைக்கு என் ஆசிரியர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.