Tuesday, June 7, 2011

இரயில் பயணம்


   இரயில் பயணம் சிறந்த அனுபவம். முகம் தெரியாத, அறிமுகமே யில்லாத நபர்கள் , ஆண் , பெண் பேதம் இன்றி ,ஒரு சில நிமிடங்களில்  இரயில் நகர்ந்தவுடன், ஒருவருக்கொருவர் அருகில் நகர்வது இயற்கை.  அருகில் என்பது மனதளவில் பொருள் கொள்க. இதை பதிவு செய்யப்படாத பெட்டிகளில் உணரலாம். அதுவும் தென்காசி, நாகர்கோவில் வண்டிகளில் கூட்ட நெருசலில் இடம் பிடிக்க சண்டை நடந்தாலும் , இரயில் நிலையத்திலிருந்து நகர , நகர , மனிதர்கள் தன் நிலையில் இருந்து நகர்ந்து , ஒருவருக்கொருவர் விசாரிப்புகளை தொடர்ந்து , ஒரு குடும்பமாக பயணம் செய்வது இனிமை.

      ஆனால், இரயில் நிலையத்தில் பயணிகலின் காதுகளில் ஒலிக்கும் குரல் அபத்தமாக படும். முன்பின் தெரியாதவருடன் யாரும் பேசவேண்டாம் . முன் பின் தெரியாதவர் தரும் பொருட்களை வாங்காதீர்கள். சந்தேகத்திற்கு இடமளிக்கும் நபர்கள் தெரிந்தால் , அருகிலுள்ள காவலரிடம் தெரிவியுங்கள். இப்படி மனதில் நஞ்சு பரவியிருந்தாலும் ,இரயிலில் பயணிக்கும் போது  யார் உடமை எங்கு உள்ளது என்பதை பற்றி கவலைப்படாமல் , எதிர் சீட்டில் இருப்பவரின் உரையாடலை சுவரசியமாக கேட்டுக் கொண்டும். இரயிலில் கடைகளாக நடமாடும் மனிதர்களிடம் இருந்து வெள்ளரி, கடலை, காபி, டீ, முருக்கு , பன் என அனைத்துவகையான நொருக்கு அயிட்டங்களையும் வாங்கி , தான் உண்ணுவதுடன் , அந்த இருக்கையில் அமர்ந்துள்ள அனைவருக்கும் கொடுத்து , உரிமையாக பேசி , சிரித்து வரும் அனுபவம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதில் பல கதைகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. கோணங்கி அவர்கள் இப்படிப்பட்ட பதிவு செய்யப்படாத பெட்டிகளில் வருவதையே விரும்புவதாக சொன்னார்கள்.சமீபத்தில் அவருடன் நாகர்கோவில் பயணிக்கும் போது கிடைத்த அனுபவம் மறக்க முடியாதது; இப்படியும் சில சமயம் நாம் தேடிக் கொண்டிருப்பவருடன் பேசவும் பழகவும் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்து விடும்.

   சில  சமயங்களில் போலீஸ்காரர் எச்சரிப்பது போல நடப்பதும் உண்டு. மனிதர்களின் முகங்கள் எவரையும் சாதாரணமாக அடையாளம் காட்டிவிடுவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதெல்லாம் இந்த பிஸ்கட் திருடர்களிடம் பலிப்பது இல்லை. ஒருமுறை ராஜஸ்தானிலிருந்து சென்னை வரும் இரயிலில் என் மைத்துனன் வந்துள்ளார். பதிவு செய்யப்பட்ட இருக்கை. ஆனால் , யார் வேண்டுமானாலும் எந்த கோச்சிலும் வித்தியாசமின்றி ஏறிக் கொள்ளும் பழக்கம் வட இந்தியாவில் உண்டு. இதை நானே சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் வண்டியில் அனுபவித்து இருக்கின்றேன்.  வண்டி நகர்ந்த சற்று நேரத்தில் ஒரு குடும்பம் அருகில் உள்ள கம்பார்ட்-மெண்டில் பேசி கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்துள்ளனர். மேலும் சீட் விளையாடிக் கொண்டு வந்துள்ளனர். சபலப்பட்ட சிலரும் அந்த வெள்ளை தோல் பெண்களுக்காக தானும் விளையாட  வருவதாக சொல்ல அவர்களையும் சேர்த்துள்ளனர். மதியம் இரவு என கழிந்துள்ளது. குடும்பத் தலைவர் இரவு பத்து மணிக்கு அனைவரும் படுக்க வேண்டியுள்ளது என கூறி, விளையாடிய அனைவருக்கும் பிஸ்கெட், பழம் , பால் கொடுத்துள்ளார்கள். இரவு சென்று காலை விடிவதற்குள் அங்கு விளையாடிய அனைவரும் கதறினார்கள். தங்கள் உடைமை, மற்றும் கை, கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணவில்லை. மேலும் அந்த குடும்பத்தையும் காணவில்லை.  இரயிலில் இழந்தவர்களும் உண்டு. பெற்றவர்களும் உண்டு. இன்றும் என் மைத்துனருடன் தொடர்பிலுள்ள மத்திய அரசில் உயர் பதவியில் பணிபுரியும் நண்பர் , இரயிலில் அறிமுகமாகியவர் .

  என் ஆசிரிய நண்பர் பிரபாகரன் மிகவும் சீரியசாக சொல்லும் கதை என்னால் இன்றும் நம்ப முடியாது. மதுரையின் கோயில் வீதிகளில் அனாதைகளாக காணப்படும் பலரும் இரயிலில் அழைத்து வரப்பட்டு  வேண்டுமென்றே தவறவிட்டவர்கள் தான்.   அதில் பெண்கள் பாடு தான் பாவம் . பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு வீதிகளில் வயிற்று சுமைகளுடன் அலையவிடப்படுகிறார்கள் .கோவில் நகரில் பாவங்களை தொலைத்து செல்கின்றனர். பாவங்கள் மனிதனின் பிறப்பிலிருந்து பிறந்தவை என்பதால்  முடிவின்றி எங்கும் தொடருகின்றன.
    அடிக்கடி  வட இந்தியாவிலிருந்து கும்பலாக வந்து , இராமேஸ்வரம் செல்லும் நபர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக மதுரை செய்திகளில் இடம் பெறும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ஒரு திரில்லான அனுபவம். ஒரு சமயம் பழனி பாதையாத்திரை சென்று மதுரை திரும்பிக் கொண்டிருந்தேன். என் அருகில் உள்ள நாற்பது வயது நிரம்பிய , வெள்ளை பை வைத்துள்ள நபர் , பாத்ரூம் செல்வதும் வருவதுமாக இருந்தார். டிக்கெட் பரிசோதகர் வருகை புரிந்தார். என் அருகில் வந்து என்னிடம் டிக்கெட் வாங்கி சரிசெய்யும் போது என்னருகில் இருந்த  அறுபது வயது முதியவர் பாத்ரூமில் உங்களை பார்த்ததும் ஒருவன் ஒளிந்துள்ளான் என போட்டுக் கொடுக்க, அவர் பாத்ரூம் கதவை தட்ட , பாத்ரூமிலுள்ள அந்த நபர் டிக்கெட் காட்ட , வெறுத்து போன பரிசோதகர்  இவரிடம் டிக்கெட் கேட்க பல் இளித்தார். இப்படியும் நடப்பது உண்டு. ஒரு சமயம் வலுகட்டாயமாக டிக்கெட் எடுக்காத காசில்லாத ஒரு இளைஞனை அருகிலுள்ள ஸ்டேசனில் இறக்கி விட்டதும் உண்டு. ஆனாலும் பலர் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதை பலமுறை பார்த்துள்ளேன்.   

   இரயில் பயணங்களில் அருகிலுள்ள ஊர்களுக்கு சரியான தருணத்தில் சேருவோம் என சொல்ல முடியாது. எங்கு எப்படி எப்போது தாமதம் ஏற்படும் என்பதெல்லாம் சொல்ல முடியாது, ஒரு முறை என் நண்பர் முக்கியமான ஒருவரை சந்திக்க மதியம் நான்கு மணிக்கு முடிவெடுத்து திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுள்ளார். வெயில் என்பதால், இரயிலில் பயணம் செய்ய முடிவெடுத்து , மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டுள்ளார். இரயில் வாடிபட்டி அடைந்ததும் , எதிரில் குட்ஸ் கடக்க நிறுத்தியுள்ளனர். நான்கு மணிக்கு வர வேண்டிய இரயில்  ஐந்து மணி முப்பது நிமிடத்திற்கு மதுரைக்கு வந்துள்ளது. அன்று சந்திப்பு நிகழவில்லை. அதனால் ஒரு வியபார தொடர்பு முறிந்து போனது. அந்த வியபாரத்தை பெற்ற வேறொரு நபர் இன்று கோடிஸ்வரர். ஆகவே, நேரம் முக்கியம் . ஆனால், இரயிலில் நேரம் எதுவும் சொல்லமுடியாதபடி பல சம்பவங்கள் நடந்துவிடும். இரயிலில் பயணம் கொள்ளும் நடுத்தர வர்க்க குடும்பங்களும் , அவர்களின் குழந்தைகளும் வெளிப்படுத்தும் வறுமை ஒரு இலக்கிய தரமிக்க நாவலை எழுத தூண்டும் . கதைகள் இரயில் பயணத்தில் வாய்ப்பது அதிகம். சென்ற முறை சென்னைக்கு பயணித்த போது ஒரு காதல் ஜோடியை சந்திக்க நேர்ந்தது. படங்களில் தான் இது மாதிரி ஒளிந்து ஒளிந்து யார் கண்ணிலும் படாத படி ஒடும் நாயகன் நாயகியை பார்த்து இருக்கிறேன். ஆனால் நிஜத்தில் , என்னால் நம்ப முடியவில்லை… (தொடரும்)

Monday, June 6, 2011

பெற்ற மனம்

பள்ளி சேர்த்த நாள்முதலே
கேட்டதை வாங்கி கொடுக்கிறேன்
கிழித்து பாழாக்கினாலும்
புது நோட்டு தந்து மகிழ்ந்தேன்
பாட்டியிடம் கதைக் கேட்டு
பரிசு பெற்றதைப் பலரிடம்
காட்டி மகிழ்ந்தேன்
இசை பள்ளியில் சேர்ந்து
பாடிய முதல் பாட்டு
பதிந்து வைத்து இன்றும்
கேட்டு மிகிழ்கிறேன்
கபடி விளையாட
கால் சட்டை எடுத்து கொடுத்து
கால் கடுக்க பார்த்து மகிழ்ந்தேன்
விளையாட்டாய் நாள் கடக்க
இப்போது
வளர்ந்து விட்டான்
தற்காப்பு கலை பயில
தானாக சென்றான்
இன்று
ஆண்டு விழாவாம்
சென்றேன்....
ஓடு உடைத்தான்
ஒவ்வொரு முறை
ஓடு உடையும் போதும்
என் மனமும் உடைந்தது
கை என்னவாகி விடுமோவென்று.....!


Saturday, June 4, 2011

அரைத்தல்

கிரைண்டரில்
மாவு போடும் போது
கத்த ஆரம்பிக்கிறாள்
ஒன்று மட்டும் புரிகிறது
மாவோடு என்னையும்
சேர்த்து அரைக்கிறாள்..!

Friday, June 3, 2011

கனவிலும்...

நிலவை எட்டி பிடிக்கிறேன்
நட்சத்திரங்களை
எண்ணி அள்ளிக் கொள்கிறேன்
மேகங்களை வாகனமாக்கி
விரைகிறேன்...
காற்றோடு
போட்டிப் போட்டு
பறக்கிறேன்...
வண்ணத்துப்பூச்சிக்கு
வண்ணம் தொளிக்க முடிகிறது
கடன் காரன் கனவில் வராதவரை...!


Wednesday, June 1, 2011

அறுவடைக்கான கல்

இருள் அப்பிய வீடுகள்
இரவில் தூங்குகின்றன.
மேகங்களின் நகர்தலில்
நிலா ....
பயந்து ஒளிந்து
வெளிப்பட்டது
வயல்வெளியில்
எண்ணற்ற வெள்ளை பேய்களின்
நடமாட்டம் கண்டு...
நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டேயிருந்தன
இருளில் உறங்கும் மனிதனுக்கு
வீதிகள் எங்கும்
நாய்கள் தொடர்ந்து
குரைத்து எச்சரித்தன...
விதைக்கப்பட்ட கற்கள்
உன்னை அறுவடை செய்பவை.

Sunday, May 22, 2011

மனிதாபிமானம்


தெருவில் கிரிக்கெட்
சரியாக பதினொரு நபர்கள்
காய்கறி விற்பவள்
சலவை துணி அயன் செய்பவன்
சைக்கிள் காரன்
ரிக்‌ஷாகாரன்
இவர்களுடன்
ஆட்டத்தின் நடுவே
ஆட்டோ, கார் , லாரி
என கடந்து செல்ல ...
அளவாக வீசப்பட்ட பந்து
சரியாக அடிக்க
சற்றே பயந்து நடுங்கி வந்த
கிழவியின் மண்டையை
பதம் பார்க்க ...
சிதறியது இரத்தம் மட்டுமல்ல
அனைவரும் தான்... 

Friday, May 20, 2011

இயல்பு



எந்த வொரு மாற்றமும் இல்லை
தெருக்கள் எப்போதும் போலிருந்தது
தெருமுனையின் டீக்கடையில்
கூட்டம் குறைந்த பாடில்லை
பூக்கடைக்காரன்
பேரம் பேசி விற்றுக் கொண்டிருந்தான்
ஆட்டோக்காரன் சவாரி
படியாமல் முனங்கி கொண்டிருந்தான்
புதிதாய் முளைத்த கொட்டுச் சத்தமும்
சங்கு சத்தமும்
எந்த சலனத்தையும்
ஏற்படுத்தவில்லை
கால் நீட்டி படுக்க வைக்கப்பட்ட
பிணம்
நனைகிறது ...
சுற்றி இருப்பவரின்
உப்பு நீரில்...
அவர் அலைந்து திரிந்த தெருக்களில்
அடையாளமாய்
 மயானம் வரை
உதிர்ந்த
ரோசா மலர்கள்
இயந்திரத் தனமான மனிதர்களின்
நடமாட்டங்களுக்கு மத்தியில்

Thursday, May 19, 2011

வெளிச்சம்



இரவு சாலையில்
முந்திச் சென்ற பைக்
டிம் பிரைட் அடித்து
சீறி பாய்ந்தது...
பின் இருக்கையில்
சதை மடிப்பில் அடித்த
வெளிச்சம்....
அடித்த அவனை
வெளிச்சம் போட்டுக் காட்டியது

Wednesday, May 18, 2011

அவள்


இரவின்
இரயில் சத்தங்கள்
நினைவூட்டுகின்றன
பெயர் தெரியாத அவளின்
முகத்தை ...
எதிர் எதிர் இருக்கையில்
தண்டவாளங்கள் போல்
நானும் அவளும்...
மேல் இருக்கையில்
படுக்கும் முன் ...
அவள் குடித்த நீரின்
ஒரு சொட்டு
என் மீது பட்டு
பருகத்தூண்டியது... 
அவள் புரண்டு படுக்கும் போது
மேலிருந்து உதிர்ந்த பூ
என்னையும் புரட்டி எடுத்தது
நானும் இரயிலைப்போலக்
கூவிக் கொண்டு இருந்தேன்
இரவு  முழுவதும்....

Tuesday, May 17, 2011

ஓட்டம்



என் இருப்பிடத்திற்கான
பேருந்து இன்னும்
வரவில்லை...
எங்கிருந்தோ வந்தான்
சற்றும் யோசிக்கவில்லை
தாமதிக்கவில்லை
அதே தடம் தான்...
 வந்த பேருந்தில் ஏறினான்
சென்று கொண்டே இருந்தான்
ஏறி இறங்கி
இறங்கி ஏறி
இருப்பிடத்தை அடையும் வரை...
தேங்கி நிற்பதை இருப்பதை விட
ஓடுவது தான் உத்தமம்

Saturday, May 14, 2011

சோலையம்மாள்


   மதுரை என்றாலே கடுமையான வெயில்.  செங்கதிர்கள் ஊசியாய் தசைகளில் குத்தி ஏற்படுத்திய வலி , எலும்பை ஊடுருவி, உயிரை பறிக்கும் வேதனையைத் தந்தது. கருப்புச் சாலைகளின் தார், வெயிலின் வெப்புத் தாங்காமல் உருகி, கார்களின் சக்கரங்களில் ஒட்ட இடம் தேடுகின்றன. வாகனங்களின் ஓட்டங்களில் சாலைகளிலிருந்து வெளிப்படும் வெப்பக் காற்று , வீதியோரக் கடைகளில் எரிச்சலை உண்டாக்கி, ’ஏன் மதுரையில் பிறந்தோம்?’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.  மின்சாரம் அற்ற  மதியம், வெப்பத்தால் மனிதனை வாட்டுகின்றது. மனம் பதற்றமடைகிறது. .மின்விசிறிகளின் காற்றைப் பழகிப்போன உடல்கள் காற்றில்லாமல் வெக்கைத் தாங்காமல், புழுகி வெந்து சாகின்றன.

     கீழவாசல் என்றால் உயரமான அந்த சர்ச் தான் நினைவிற்கு வரும். செங்காவி நிறத்தில் அக்கட்டிடம் புனிதத் தன்மைக்கான அடையாளங்களுடன் கம்பீரமாக இருக்கும். மனிதர்கள் அழுக்கு மூட்டைகளுடன் வந்து , மனக் குப்பைகளை மண்டியிட்டு கொட்டிச் செல்வர். சர்ச் வருடா வருடம் வெள்ளையடிக்கப்பட்டாலும் , அதன் உட்புறம் மனித பாவங்களின் மொத்த உருவங்கள் பூதாகரமாகப் பெருகி இருள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறது. இரட்சகரின் உடலிலிருந்து பெருகி வரும் குருதி ,சிலைகளில் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது, மனித பாவங்களின் பெருக்கத்தால்.

    ஒவ்வொரு பூசைக்குப் பின்னும் சர்ச்சைக் கூட்டிப்பெருக்கினாலும், உண்மையானக் குப்பைகள் இன்னும் நிரம்பி வழிகின்றன. சுவர்களில் பொதித்து வைக்கப்பட்ட சுண்ணக் கோப்பைகளில் உப்புத்தண்ணீர் எதற்கானது என்பதை அறியாமலே பள்ளிச் சிறார்கள் தலையில் அள்ளித் தெளித்து கண்களில் ஒற்றிக் கொண்டு , படிக்காத பாடத்திற்கு நூறு மதிப்பெண்களை வேண்டி ,ஏசுவின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றனர். இந்த மூடர்களின் செய்கையை எண்ணி, இன்னும் இரட்சகரின் கண்களில் வடியும் கண்ணீராக இருக்குமோ , இந்த கோப்பைகளின் உப்பு நீர்.

     சோலையம்மாள் காலை ஏழு மணிக்கே தன் கடையை விரிக்கத் தொடங்கினாள். அவளின் காவி நிறப்பற்கள் இன்னும் முந்தைய நாளின் வீச்சத்தை சுமந்து கொண்டு இருந்தன. அவளின் கணவன் ஜோசப் டீத்தண்ணி வாங்கி தூக்குவாளியில் கொண்டு வந்தான். ”வாய அலம்பிட்டு சாப்பிடு” என்றவனின் கரங்களில் இருந்த அப்பம் அவள் வாய் நாற்றத்தில் கரைந்து வயிற்றை நிரப்பியது. மதுரையின் விடியல் அப்பத்தை புசிப்பதற்கானதாக இருப்பது அதிசயமில்லை. டீக்கடைகள் காலைவேளையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அனேகமான கூலித் தொழிலாளிகளின் காலை உணவே ஒரு டம்ளர் டீயும் , அப்பமுமாகத் தான் இருக்கும். அப்பம் சோடா உப்பால் உப்பிப் போய் திருமலைநாயக்கர் வயிறு போல புடைத்திருக்கும். சிறுவர்கள் தங்களின் தந்தையின் கைகளைப்பிடித்துக் கொண்டே தெருவின் முனைக்கு வந்து வடைக்கடை, அதனை ஒட்டியுள்ள புட்டுக் கடை ஆகியவற்றில் புட்டையும் அப்பத்தையும் உண்பதால், மதுரையில் பல மருத்துவர்கள் லாபம் அடைகின்றனர்.

     சர்ச்சினை ஒட்டிய பள்ளியின் வாசலில் தான் சோலையம்மாள் கடைவிரித்து, மாங்காய், நெல்லிக்காய், மிட்டாய் என விற்றுக் கொண்டிருந்தாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு போட்டியேயில்லை. இப்போது அங்கு அவளுக்குப் போட்டியாக நான்கு கடைகள் முளைத்து இருந்தன. ஓவ்வொரு முறையும் யாராவது புதிதாகக் கடைப்போட்டால், காதுகளில் கேட்க முடியாத நாற வசவுகளை அள்ளி வீசி , விரட்டத் துடிப்பாள். அப்படி அவளின் வசவு தங்காமல் ஓடியவள் தான் தங்கம். மூன்று வருடங்கள் முன் கடன் தொல்லையால் ஓடிப் போன கணவனின் தரம் கெட்டத் தனத்தால், தன் பிள்ளைகளின் வயிற்றுப்பசியாற்ற , இரட்சகரை நம்பிக் கடை விரித்தாள். கடன்காரன்களை
விட சோலையம்மாளின் மோசமான வசவால் மனம் பாதிக்கப்பட்ட தங்கம், அழுகையுடன் வாங்கிய சாமான்களை அப்படியே சோலையம்மாளின் மூஞ்சியில் வீசியெறிந்து சென்றாள். சிங்கம் அடித்து சாப்பிட்ட மீதியைச் சாப்பிடும் நரியைப்போல எந்தவித அனுதாபமும் படாமல், வீசிய பொருள்களை விற்று காசு பார்த்தாள். அவளிடம் உள்ள அழுகியபழங்களும் காசாகின. காய்ந்த ரொட்டித்துண்டுகளும் இரக்கமற்று விற்கப்பட்டு பலரின் வயிற்றைப் பதம் பார்த்தன. இப்போது சர்பத் கடை, ஜிகர்தண்டாக் கடை என முளைத்திருந்தாலும், தன் கடைக்கு வரும் பசங்களுக்கு கடன் கொடுத்து வாடிக்கை பிடித்து வைத்திருந்தாள்.
   கடன் வாங்குதல் என்பது வகுப்பறைகளின் கூட்டல் கழித்தல் கணக்குகளையும் தாண்டி ஏமாற்று வித்தையாக இருக்கும். இவளும் ஒன்றும் பெறாதப் பொருள்களை ஒன்றிற்கு இரண்டு மடங்காக விற்பாள். கொள்ளை லாபம் என்பதால் கடன் வாங்கும் சிறுவரும் பொய் கணக்குக் காட்டி மோசடியில் இறங்குவர். ”நேத்து கொடுத்தது மறந்துச்சாக்கா..நான் போய் பொய் சொல்லுவேனாக்கா…”என்ற டயலாக் நிரந்தரமாகி கடைகளின் முன்னால் உலாவரும். இவளின் வசவுகளும் அந்த திண்பண்டங்களில் வாயிலாக , அவர்களின் உடலில் ஊடுருவி, மாணவர்களுக்குள் நடைபெறும் மோதலில் வெளிப்படும் . மோசமான வார்த்தைகள் சர்ச்சின் மணல் பரப்பில் சிதறிக்கிடக்கும். ஒவ்வொரு அடி எடுத்து நடக்கும் போதும்  அவர்களின் பாதங்களில் ஒட்டிக் கொள்ளும் மணல் துகள்களில் , அசுத்த வார்த்தைகளும்  நாடாப்புழுக்கள் போல ஒட்டி உடலில் புகுந்து, இரத்தத்தில் கலந்து அழியாத உறவை ஏற்படுத்திக் கொள்ளும்.” ங்கோத்தா ….மவனே இவன கழுத்த அறுத்தா சரியாப்போயிடும்ண்டா..”என்ற வார்த்தைகளை சாதாரணமாக நாம் கேட்கலாம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை  ,அசிங்கம் பேசி வளர்கிறது.
    கால் ஊனமான சரஸ்வதி, கடை வைத்த போது , தன் மாராப்பு தெரிய உட்கார ஆரம்பித்தாள், சோலையம்மாள் .பெரிய பசங்களை தன் பக்கம் ஈர்க்க ,கழுத்து இறக்கி ஜாக்கெட் தைக்கத் தொடங்கினாள். சரஸ்வதியின் எடுப்பான மார்பு , அவளின் ஊனத்தையும் பொருட்டாக நினைக்காமல் , அந்த ஏரியா டீக்கடை வாலிபர்களை வளைத்துப் போட்டது. சோலையம்மாளின் வார்த்தைத் தோட்டாக்களை  , அவளின் நிமிர்ந்த பருத்த மார்பு கவசமாக்கி ,ஆண்களைத் துணைக்கு வரவழைத்து அழித்தன. சரஸ்வதியிடம் சோலையம்மாளின் பருப்பு எடுப்படவில்லை. அவளின்  தகாத வார்த்தைகள் தார்ச்சாலைகளில் வெப்புத் தாங்காமல் ஆவியாகி பறந்துப் போகின. இப்போது நயந்து பேசி விற்க ஆரம்பித்தாள். இருப்பினும் காவிக் கறைப்படிந்த பற்களின் நடுவில் வெளிவரும் அசுத்த  காற்றைப் போலவே ,வார்த்தைகளும் கறைகளுடனே வந்து விழுந்தன. தொட்டில் பழக்கம் மாற்ற முடியாது என அனைவரும் கேட்டுக் கேட்டு மோசமான வார்த்தைகள் சாதாரண வார்த்தைகளாகிப் போயின. .

    ஜோசப் வாயில்லாப் பூச்சி. கருத்து வளர்ந்த நெடுக்கான உடலாகயிருந்தாலும் , சோலையம்மாளின் கைக்குள் அடக்கமாகிப் போயிருந்தான். அவளின் வார்த்தைகளுக்கு மறுத்துப் பேச மாட்டான். அவன் சர்ச்சில் கூட்டிப் பெருக்கும் வேலையை செய்து வந்தான். அவனால்  பெருக்கித் தள்ளப்படும் மணல் தூசிகளைப் போல  பல மடங்கு குவியும் சோலையம்மாளின் அசுத்த வார்தைகளை அவனால் அள்ளி எறிய முடியவில்லை. தள்ளிப்போகவும் முடியவில்லை. குழந்தைபாக்கியம் இல்லாததால், இவளின் வார்த்தைகளுக்குப் பயந்து , உச்சிவெயிலின் நிழல் போல அவளின் காலடியிலே கிடந்தான். ஜிகர்தாண்டாக்காரன் கடைவைத்ததிலிருந்து சோலையம்மாளுக்கு காலை பதினோரு மணிக்கும் ,மதியம் மூன்று மணிக்கும் தவறாது இரண்டு டம்ளர் ஸ்பெசல் ஜிகர்தண்டா தருவதால், அவனை இவளுக்கு பிடிக்கும் . அவனுக்கு கிறிஸ்துமஸ்க்கு பணம் தருவதுடன் , சட்டை, பேண்ட் எடுத்துத் தருவாள். காலம் சோலையம்மாளை மாற்றும் என்று ஏமாந்தவர்கள் அதிகம்.
    
    பேயாய் வந்த லாரி ,கட்டுப்பாட்டை இழந்து , சாலையின் தடத்தில்  இருந்து விலகி, எமனாக மாறி சோலையம்மாளை நோக்கி வர, எங்கிருந்தோ வந்த அம்பாசிடர் மகால் சாலையிலிருந்து குயவர் சாலை நோக்கி விரைய , லாரி அம்பாசிடரில் மோதி நின்றது. பாவம் சரஸ்வதி, லாரி மோதிய வேகத்தில் அம்பாசிடரின் டயர் வெடித்து , அதிர்ச்சியில் தார்சாலை பிளந்து , அருகில் இருந்த கருங்கல் , பறந்து, அவளின் பொட்டைப் பதம் பார்க்க  மூர்ச்சையாகி இறந்தாள். ஒருநிமிடம் என்ன என்று அறிவதற்குள் , எல்லாம் முடிந்தாகி விட்டது. சாலையோர வியாபாரிகள் சோலையம்மாளையும் தாண்டி , எமனையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. சரஸ்வதியின் சாவைத் தூரத்தில் இருந்து பார்த்த எவரும் இரண்டு நாள் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், இவள் எதையும் பொருட்படுத்தாமல், கடையை நடத்தி, பெங்களூரு அய்யங்கார் பேக்கரியில் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டாள். தரையில் சிந்திய இரத்தம் கூட ஈரம் காயவில்லை.

  அரைமணி நேரத்துக்குள் , சர்ச் வாசல் சரஸ்வதி இறந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல், மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பியிருந்தது. பிறப்பும் , இறப்பும் சகஜமாகி விட்ட , மதுரையில் ஒருவர் வாழ்ந்த அடையாளங்கள் அவன் வாழ்ந்து முடிந்த சில நிமிடங்களிலே அழிக்கப்படுவது சர்வ சாதாரணம். அவள் சிந்திய இரத்தம் மண்ணோடு மண்ணாகி அவளைப்போலவே காணாமல் போயிருந்தது. மனிதர்கள் மனதளவில் ஊனப்பட்டவர்கள் என்பதை உணராமலே, ஊனமான சரஸ்வதி செத்துப்போனாள்.
   சோலையம்மாள் எதையும் பொருட்படுத்தாமல் , தன் வேலையைப் பார்த்தாள். ஜோசப் கோபம் பீறிட்டு, ”நீ.. யெல்லாம்…மனுசியா… கண் எதிரில சாவு நடந்து இருக்கு..கொஞ்சம் கூட ஈவு இரக்கம் பார்க்காம,, கடையைத் திறந்து வியாபாரம் பண்ணுறே…”   
”நான் செத்தாலும் இப்படித் தான் எவளாவுது பொழப்பு பார்ப்பாள்.. போடா.. பெரிசா பேச வந்திட்ட… லாரி இந்நேரம் எம்மேல மோத வேண்டியது.. எதோ உயிரோட இருக்கேனேன்னு சந்தோசப்படு..பெரிசா..வந்திட்டே.. மாராப்பப் பார்த்து  வரிஞ்சுக் கட்டிக்கிட்டு, என்னோட சண்டைக்கு வந்த விபச்சாரி.. பசங்க… அவ செத்தவுடனே தன்ன சாட்சிக்கு போலிஸ் கூப்பிடுவான்னு ஓடி ஒளிஞ்சுக்கிட்டாங்க….கடையை இழுத்து மூடிகிட்டானுங்க, அவ செத்த இடம் இது .. அதில அவளுக்கு மரியாத செலுத்தும் விதமா.. இன்னும் போட்டியாதான்யா வித்துக்கிட்டு இருக்கேன்.. அவ செத்ததுக்கு நான் தான் சாட்சி …எவன் சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் கூண்டு ஏறி சாட்சி சொல்லப்போறேன்..அவ குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தருவேன்… நாம தத்து எடுத்து வளர்ப்போம்ய்யா ”என்று கண்ணீர் விட்டாள். வெப்புத் தாங்காமல் வெடிக்கும் கோடைக்கால பருத்திப்போல, இவனின் வார்த்தைகள் பொறுக்காமல் அவள் வெடித்து சிதறினாள். கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக ஊற்றியது. ஜோசப் கூட்டித்தள்ளிய குப்பைகளுக்கு நடுவில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.  
     சோலையம்மாள் கடை முன் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. அவளின் குரல் சர்ச் வாசலில் அமர்ந்திருக்கும் ஜோசப்க்கு கேட்டது. “ உங்கள உங்க ஆத்தா நல்ல நேரத்தில தாண்டா பெத்துப்போட்டுயிருக்கா…. கொஞ்சம் முன்னாடி பள்ளிக் கூடம் விட்டுருந்தா.. நீங்களும் சேர்ந்து எமலோகம் போயிருப்பீங்கடா. . பாவம் சரஸ்வதி ….அவ வாங்கியாந்த வரம் அவ்வளவு தான் … எந்த (பெண் உறுப்பின் பெயர் சொல்லி திட்டினாள்)மவனும்  அவள தூக்க வரலை… பொட்டுன்னு போயிட்டா..”     

அழகர் சாமியின் குதிரை-திரை விமர்சனம்

 கோவில் மரக் குதிரை திருட்டு போக , அதனை தொடர்ந்து கிராம மக்கள் போலீஸ்க்கு போய் புகார் கொடுக்க, இடைப்பட்ட தருவாயில் நிஜமானக் குதிரை கிடைக்க , ஊர் மக்களுக்கு அதனால் நன்மை கிடைப்பதாய் உணர்ந்து , நிஜக் குதிரையை வைத்தே ஊர் திருவிழா நடத்த முடிவெடுத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய , குதிரைக்கு சொந்தக் காரன் வந்து குதிரையை கண்டு பிடிக்கிறான்.ஊர் மக்கள் அவனுக்கு குதிரையை தந்தனாரா ?    குதிரை கிடைத்ததா? திருவிழா நடந்ததா? என்பது தான் அழகர் சாமியின் குதிரை.

   கிராமத்து மணம் படம் முழுவதும் வீசுகிறது.   கிராமத்து நக்கல், அதுவும் மதுரையை ஓட்டிய பகுதி என்பதால் கேட்கவா வேண்டும். பாஸ்கர் சக்தியின் எழுத்து(கதையே அவருடையது தான் என்பதாலும்) கதைக்கு வலு சேர்க்கிறது.வசனத்தில் நாத்திக தன்மை அதிகம் வீசினாலும் அவை எதார்த்தமாக கிராமத்து நக்கலாக வந்திருப்பதால் சபாஷ் பெறுகிறது. தேனியின் மலை அழகு கேமராவில் அப்படியே வந்துள்ளது படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆகும்.  ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் நம்மை மலை கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார். பாராட்ட வேண்டியவர்.

சுசீந்திரன் மூலக் கதையிலிருந்து நழுவாமல் கதையை அப்படியே கொடுத்துள்ளது சாபாஷ். கிராமத்து காதலுடன் , அழகர் சாமியின் காதலை இணைத்து சுவரசியமாக தந்துள்ளது அருமை. கிராமத்து நாட்டாண்மையும், வாத்தியாரும் இயல்பாக நடித்து படத்தில் கிராமத்து இயல்பை அப்படியே பிரதிபலிக்கின்றனர். “நான் மாகான் அல்ல “ தொடர்ந்து சுசீந்திரன் கொடுக்கும் அருமையான படம் இதுவாகும். முற்றிலும் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து படத்தை இயக்கி இருப்பதும், டைட்டில் கார்டில் புதிய மாற்றம் செய்திருப்பதாலும் சுசீந்திரன் பாராட்டுப் பெறுகிறார்.

    இளையராஜாவின் இசை பார்வையாளர்களை கிராமத்துக்குள் கொண்டு செல்வதுடன் , கதையோடு ஒன்றிணைந்து மெருகூட்டுகிறது. ஆங்காங்கே மேற்கத்திய இசை வாடை யடித்தாலும் அது பொதுவாக வெளியில் தெரியாமல் , கதைக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே உள்ளது. குதிக்கிர குதிக்கிர குதிரை... பாடல் அருமை.

  அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த திரைப்படம் -அழகர் சாமியின் குதிரை.
     
    

Thursday, May 12, 2011

தேர்தல் முடிவு தெரியும் முன்னே கலங்கடிக்கும் தேர்வு முடிவுகள்...!



     காலை ஒன்பது மணி என் நண்பர் கல்யாண் ஜி யிடம் இருந்து அழைப்பு,” முதன்மை கல்வி அலுவலகம் உடனே வாருங்கள் ”. ஏதாவது விசயம் இல்லாமல் அழைக்கமாட்டார் என்பது எனக்கு தெரியும்.  உடனடியாக கிளம்பினேன்.  கடல் அலைப் போல மக்கள் கூட்டம். எதற்கு ?என்று புரிய வில்லை. அலுவலக நுழைவாயிலில் வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் தடுக்க , என்னை பற்றிய அறிமுகம் செய்யும் முன்பே, வண்டியை உள்ளே விடுப்பா என்று தெரிந்த முகம் குரல் கொடுக்க , ஜனத் திரளின் நடுவே வாகனத்தை உருட்டிச் சென்றேன்.  
      
     “ உங்களிடம் நேற்றே ஒரு போஸ்ட் , இது சம்பந்தமாக எதிர்பார்த்தேன். பிளாக்கில் எதுவும் இல்லை என்பதால் அழைத்தேன் ”என்றார். படத்தைப் பார்த்தால் கூட்டம் எவ்வளவு என்பது தெரியும். நேற்று மதுரையில் மட்டும் நான்காயிரம் படிவங்கள் விற்று தீர்ந்து விட்டன. ஆம். தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ள நிலமையில் , தங்களின் விடைத்தாளை திருத்திய பின் எடுத்த மதிப்பெண் சரியா என பார்ப்பதற்கு , விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க , விண்ணப்பம் வாங்க வரிசையில் காத்திருப்போரின் கூட்டம் தான் என விளக்கம் அளித்தவுடன் எனக்கு விபரம் புரிந்தது. விண்ணப்ப படிவ விலைரூ300.   



விடைத்தாள் நகல் பெற ஆர்வமுடன் முதன்மை கல்வி அலுவலரின் வாகனத்தின் மீது வைத்து படிவம் நிரப்பும் மாணவர்கள்.


                                                   கூட்டத்தின் ஒரு பகுதி.

 தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் வெகுஜனங்களுக்கு , தேர்வு முடிவுகள் மீது ஒரு அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதுடன் , தன் குழந்தைகளின் எதிர் காலத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பிரதிபலிப்பு தான் , இப்படி பட்ட கூட்டத்திற்கு காரணம்.

   ஒரு வருடம் இரவு பகலாக முழித்து படித்த மாணவர்களுக்கு தன் ஆசிரியரின் விடை திருத்தல் பணியின் மீது சந்தேகம் என்பதை தான் விண்ணப்பிப்பவரின் அதிகப்படியான எண்ணிக்கை உறுதி செய்வதாக உள்ளது.


     தேர்வுத் துறை , சென்ற வருடமே , இது போன்ற , நகல் பெற்றவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து , அதிகப் படியான மதிப்பெண் பெற்றதால், பல ஆசிரியர்களை கடுமையாக கண்டித்ததுடன் , சஸ்பெண்டு செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. இப்படி இருக்கையில் மீண்டும் இந்த கூட்டம் , ஆசிரியர்கள் மீது அளவுக்காதிகமான அவ நம்பிக்கை கொண்டுள்ளதையே  நிருபிப்பதாக உள்ளது.

  ஏன்? நகல் பெறுகின்றனர்.  கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கவே. மருத்துவத்தை விட , இன்ஞினியரிங் சீட் கட்ஆப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் என்பதாலும் கட் ஆப் அதிக வித்தியாசத்தில் உயரலாம் என்பதாலும் கணிதம், மற்றும் இயற்பியல் , வேதியல் படங்களில் நகல் பெறவே அதிகம் மாணவர்கள்  விண்ணப்பிக்கின்றனர். கணிதத்தில் இரண்டு மதிப்பெண் என்பது ஒரு கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்க செய்யும்.


என்னுடைய கேள்வி...
1. திருத்திய விடை தாளில் ஆசிரியர் நன்றாக திருத்தி யிருக்க வாய்ப்பு இல்லை. மேலும் பிழை இருக்கும் என்று நம்பிக்கை இருக்க போகவே தானே இந்த நகல் பெறும் நடவடிக்கை.  அப்படி என்றால் மதிப்பீடு என்பதே தவறு தானே?

2. தாங்கள் எழுதிய விடைகளுக்கு இந்த மதிப்பெண் தானே கிடைக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த பின்பும் எதற்காக மாணவர்கள் விடைத்தாளின் நகல்
பெற்று , அதை சரி பார்க்க வேண்டும்.  ஏனெனில், நம் தேர்வு முறையே தவறாகும். நாம் மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி எடுக்கும் முறையை கொண்டுள்ளோம். அல்லது மீண்டும் மீண்டும் எழுதி அதை அப்படியே குறிப்பிட்ட நேரத்தில் பிழையின்றி எழுத பயிற்சி கொடுத்துள்ளோம். இப்படி இருக்க வகுப்பறையில் திறமை வாய்ந்த மாணவர், சுமாரான மாணவர் தன்னை விட மதிப்பெண் அதிகம் பெற்றதால், ஏன் நாமும் மதிப்பெண் பெற நகல் பெற்று பார்ப்போம் என விண்ணப்பிக்கிறான்.

3. மருத்துவம் , பொறியியல் சீட்கள் திறமையில் அடிப்படையில் மாணவனை சோதித்து கொடுப்பதில்லை. கடந்த நான்கு வருடங்களாக , பொது தேர்வு முறை நீக்கி, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் பெறுவதால், மாணவன் பெற்றுள்ள தகுதி (அதாவது மதிப்பெண் ) அடிப்படையில் தேர்வு பெறுகிறான். இண்டலெக்சுவல் திறன் கொண்ட மாணவர் இதில் எதாவது ஒரு இடத்தில் சோர்ந்து , மூளைக்கு வேலை கொடுத்து , தகுதி இழக்க வாய்ப்பு அதிக மென்பதாலும் , நான் இந்த தேர்வு முறையினையும், அதன் மதிப்பீடு தன்மையையும் வெறுக்கிறேன். அதுவும் நகல் பெற காரணமாகும்.

4.  பெற்றோர்களுக்கு தன் குழந்தைகளின் படிப்பு மீது சந்தேகம் அல்லது தங்களின் கனவு நசுங்கி விடக்கூடாது என்பதன் ஆதங்கம் , எவ்வளவு ரூபாய் செலவானாலும் கொடுக்க தயார். குழந்தைகளின் விருப்பம் யார் கையில்?

5. மறு கூட்டலில் மதிப்பெண் அதிகம் பெறுகிறான் என கொள்வோம். அப்படியானல் , ஆசிரியர்களுக்கு தன் பணியின் மீது ஆர்வம் இல்லையா ? இல்லை அரசு இந்த ஆசிரியர்களுக்கு தேவையான போதுமான வசதிகள் விடைத்தாள் திருத்த ஏற்படுத்தி தரவில்லையா? கொடுக்கப்படும் பணம் தான் பத்த வில்லையா? இதில் கோடை விடுமுறை ஈடுசெய்ய கூடுதல் விடுமுறை ஏன் ?


இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தவர்கள் பதில் கூறுங்களேன்.


Thursday, May 5, 2011

வெளிச்சத்திற்கு பின் ...

  எதை எழுதுவது என்று தெரியாமலே எழுதுகிறேன். நீண்ட நாட்கள் எழுத மறந்ததால் ஏற்பட்ட விளைவா? இல்லை எழுத்து என்பது  கருத்துகளுக்குள் அடைப்பட்ட ஒன்று என்ற சிந்தனையால் வந்ததா? பொருள் அற்று எழுதுதல் சுவரசியம் அற்றதாக அமைந்து விடுமோ? ஆனால் ,இன்று எதையாவது எழுதவேண்டும் என்று முடிவுக்கு வந்து   அமர்ந்த போது தான், நடுத்தர வர்க்கத்தினர் வயிற்று பசிக்கு எதையாவது அடுக்களையில் தேடி ,பசியை போக்க போராடும் உணர்வு ஏற்பட்டு ,எழுத தேடி அவதிப் படுகின்றேன்.

      தினமும் காலை எட்டு மணிக்கு எழுந்து ,தன் இயந்திர வாழ்வைத் தொடரும் ஒருவன் , திடீரென அதிகாலை  ஐந்து மணிக்கு எழுந்து , சூரிய உதயத்தின் முன் அமைதியாக இருக்கும் தெருவில் , அந்த ஊசியாய் துளைக்காத வெது பனியில், மெல்ல நடந்து , அதன் இதமான குளிரில் , வீதியின் அழகை ரசிக்கும் போதே, குளித்த தலையுடன் துண்டை தலையில் கட்டி, கையில் மாவெடுத்து கோலமிடும் மகளிரை  ரசித்துக் கொண்டே விதிகளை விட்டு வெளிவந்து , வயல் பரப்புகளின் ஓரங்களின் நடக்கும் போது , கண்களுக்கு கிடைக்கும் பசுமையும் , அதன் குளுமையும், அதனையும் மீறி நம் பார்வையை கவரும் நாரை, காடை , குருவி , காகம் ஆகியவற்றின் குரல் இனிமை , பறவைகளுடன் நம்மையும் பறக்க செய்யும் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றவனாக , நான் கருத்தின்றி இதை எழுதும் போது , ஆனந்தம் கிடைக்கிறது என்படை உணர்ந்தேன்.
     
        கதையை எழுதுவதா? கதைக்குள் அடைப்பட்ட கருத்தை எழுதுவதா? கதை சொல்லும் சமூக விழிப்புணர்வை எழுதுவதா? சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கும் போலியான ஓட்டு முறையையும் , நட்பு என்ற முறையில் போடப்படும் போலியான விமர்சனத்தையும் , ஆஜர் அய்யாவையும் பற்றி எழுதுவதா? எல்லாவற்றையும் எல்லோரும்  எழுதி விட்டார்கள் ! எழுதாத ஒன்று எது ? என் நண்பன் ஸ்ரீ சொல்வான், ”எல்லாவற்றையும் எல்லாரும் எழுதிவிட்டார்கள் , ஆனால் , நீ எதை எழுத வேண்டும் என நினைத்தாலும் ,அதை எழுதும் முன் அதை வேறு யாரும் எழுதி விட்டார்களா ? என பார்த்துவிடு ,நிச்சயம் அது எழுதப்பட்டு இருக்கும் , ஆனால் , அதை வேறு ஆங்கிலில் யோசித்துப் பார், சொல்லும் முறையை , நடையை , உத்தியை , சொல்ல முயலும் தன்மையை .... அப்போது தான் நீ இலக்கிய உலகில் அறியப்படுவாய்”.  

    ஒன்று மட்டும் தெரிந்துக் கொண்டேன். நிறைய படிக்க வேண்டும். நிறைய படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நம்  மனம் கவரும் வகையில் எழுத முடியும். ஆம். ஒருவனுக்கு தன்னையே பிடிக்க வில்லையென்றால் , எப்படி பிறருக்கு பிடிக்கும் .  முதலில் எழுதும் எனக்கு பிடிக்க வேண்டும். அதற்கான முயற்சி தான்  சாருவையும், ராமகிருஷ்ணனையும் படித்துக் கொண்டு இருக்கிறேன். அவர்களின் இருள் நிரம்பிய பக்கங்களை பார்த்து வியப்படைந்துள்ளேன் .  இருள் சிலருக்கு பழகிய ஒன்று . சிலர் இருள் என்ற வார்த்தையை கேட்டாலே ஓடி ஒளிந்து விடுவர். இருளில் சர்பம் பார்த்து பயந்து ஓடிய எதிர்வீட்டுக் காரனால் , இன்றும் இருள் என்றால் பாம்பின் ஞாபகம் வந்து விடும்.  சாருவின் ஸீரோ டிகிரி படித்த பின் சர்ப்பம் வேறு அர்த்தம் பட்டது. அதற்காக மட்டமாக சிந்திக்க வேண்டாம். சாருவின் அழுத்தமான உணர்வு ரீதியான எழுத்தில் பாலியல் வன்மத்தை புதிய கட்டமைப்புடன் தந்திருக்கும் புதுமை வியக்க வைத்தது. அதே போல் எஸ். ரா. வின் உறுபசி வேகமான நடை, உணர்வு பூர்வமான பகிர்வாக அமைந்துள்ளது.   

     என் மனம் எதையாவது எழுதியே தீர்த்து விட வேண்டும் என துடித்து , துடித்து , இன்றைய வெகுஜன வார இதழ்களைப் போல இலங்கை உத்த களம் சார்பான கதைகளை , ஐ. நா . சபை இலங்கை ராணுவத்தின் கொடுமைகளை அம்பலப் படுத்தியதால் , பர பரப்புக்காக எழுதி தள்ளுவதா ? இருப்பினும் என் மனம் இவ் விசயத்தில் இருள் அடைந்ததால் , மீண்டும் இருள் மீதே என் பார்வையை திருப்புகிறேன். கால் கேட் விளம்பரம் போல பூதத்தை கண்டு பயப்படாத  மனிதன் உண்டா? என் மூத்த மகள் இருளில் மெழுகு வர்த்தி ஏற்றி , இருளில் நிழல் உருவத்தை ஏற்படுத்தி விளையாடும் பொது எனக்கு இருள் பிடிக்கும். இருளில் கொடிய மிருகங்கள் செய்து அதற்குரிய குரல் கொடுக்கும் போது , அவைகள் நமக்கு பிடித்துப் போகின்றன. ஆம், நிஜத்தில் பயப்படும் சில வியங்கள் நிழலாக தெரியும் போது பயமின்றி பிடித்து தான் போகின்றது.

    நண்பா எதையாவது எழுத வேண்டும் என்று எழுதி விட்டேன். தயவு செய்து ஏன் இது நாள் வரை எழுத வில்லை என்று மட்டும் கேட்டு விடாதே , நீ கேட்கவும் மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் இதை கூறுகின்றேன் . . சொல்லுவதா ? வேண்டாமா என்ற குழப்பமெல்லாம் இல்லை . நீ எனக்காக வருந்துவதை தவிர்க்கவும் விரும்ப வில்லை. இருப்பினும் நடந்து முடிந்த ஒன்றை பேசி பிரோஜனமில்லை.   நீயும் என்னைப் போல மனம் படைத்து என்னிடம் கேட்காமலும் இருந்திருக்கலாம். நல்லது . இது வரை எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் .  நம்பிக்கையில் தான் நாளை கடத்த முடியும் . நான் இப்போதெல்லாம் இருளில் நம்பிக்கையுடன் , அதன் உட்புகுந்து ஆந்தை கண்களால் , எழுதுவதற்கான இரை கிடைக்கிறதா என கூர்ந்து கவனிக்கிறேன்.  நண்பா , இருளில் நடக்க பழகிக் கொள் . வெளிச்சத்திற்கு பின் ஒளிந்துள்ள பல விசயங்கள் நமக்கு புலப்படும்.  

Saturday, April 23, 2011

கடைசி பயணம்


                                       நான் ,கபிலன் வீட்டிற்கு வந்த அந்த நாள் தீபாவளி என்று நினைவிருக்கிறது.அந்த நாளை என்னால் என்றும் மறக்க முடியாது. என்னை புகழ் பெற்ற ஜவுளிக்கடையில் இருந்து கண்டெடுத்து வந்தார் ,கபிலனின் மாமா ராகவன். என்னை முதலில் கபிலனின் அண்ணனுக்குத் தான் அறிமுகம் செய்து வைத்தார் மாமா.ஆனால் , இன்று நான்,அவன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவன். தேவைப்படும் போது எல்லாம் என்னை அனைவரும் பயன்படுத்துவார்கள்.    கபிலனின் அண்ணன் முருகன் ஒரு டிரைசைக்கிள் ஓட்டுனர். முருகன் முதன் முதலில் என்னைப் பார்த்த போது ஆனந்தத்தில் குதித்து மாமாவைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டான். என்னை அப்படியே அள்ளிக் கொண்டு கண்ணாடியில் அழகுப்பார்த்தான். எனக்கும் தான் அத்தனை மகிழ்ச்சி.
 
    அன்று முதல் ஒருவருடம் அவனுடன் வாழ்ந்தேன். என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டான். தூங்கும் போது கூட என்னை அணைத்துத்தான் படுப்பான். சொல்ல மறந்து விட்டேன் . தீபாவளி அன்று சாமி கும்பிட்டு விட்டு, இருவரும் பயணித்தோம். முதலில் அவன் நண்பன் முத்து வீட்டிற்கு தான் சென்றோம். அனைவரிடமும் என்னை அறிமுகப்படுத்தி ஆனந்தப்பட்டுக் கொண்டான். அனைவரும் என்னை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டனர். நான் நன்றாக எடுப்பாக இருப்பதாக கூறிக் கொண்டனர். பின்பு என்னை ரஜினி படத்திற்கு அழைத்துச் சென்றான். கசங்காமல் இருக்க என்னை அவனின் அக்கிளுக்குள் பிடித்துக் கொண்டான். அவனின் வியர்வை என்னை நனைத்தது . எனக்கு அது ஒரு புது மயக்கத்தை தந்தது. அவனின் உழைப்பின் சுவையை உணரமுடிந்தது. தியேட்டரில் மின்விசிறிக்கு கீழ் காற்று வரும் இடம் பார்த்து அமர்ந்தோம். அன்று தான் நானும் சினிமா கொட்டகைப் பற்றி தெரிந்து கொண்டேன். நிழல் உருவங்களில் மனிதர்கள் வாழும் வாழ்க்கை நிஜ மனிதனை எவ்வளவு கட்டிப்போட்டுள்ளது என்பதனை உணரமுடிந்தது. மாலை வீடு திரும்பினோம். பலகாரங்களை கொரித்து விட்டு மீண்டும் கிளம்பினோம். அவனின் பெண் நண்பர்களைப் பார்க்கச் சென்றோம். அவர்களுக்கும் என்னைக் காட்டி மகிழ்ந்தான்.  
    
     காலை ஐந்து மணிக்கெல்லாம் குளித்து வேலைக்கு கிளம்பினோம். கரும் இருட்டு , காக்கைகளின் சத்தம் . சாலைகள் இரவின் வெறுமையில் எங்களை அதன் துணைக்கு அழைத்துக் கொண்டன. கஷ்டமில்லாமல், இஷ்டப்பட்டு எங்களைப் பயணிக்க அனுமதித்தன. முருகன் தன் தனிமையை விரட்ட , தன்னிடம் உள்ள ரேடியோவை பாட விட்டான். நாங்கள் பயணிக்கப் பயணிக்க இருள் விலகி ஒளி படர ஆரம்பித்தது. விடியலின் ஆரம்பத்தில் , மதுரை ஓபுளாப்படித்துரையில் இருந்து வாழைத்தார்களை டிரைசைக்கிளில் அடுக்கி வைத்துப் பறந்தோம். அவன் இழுக்க இழுக்க சக்கரம் நகர மறுத்தது. தன் மொத்தப் பலத்தையும் திரட்டி ஓங்கி இழுத்து, பெடல் போட்டு அமுக்கி ஓட்டத் தொடங்கினான். நானும் வாழைப்பழங்களுடன், டிரைசைக்கிள் ஓரத்தில் கரைப்படாத இடமாகப்பார்த்து அமர்ந்துக் கொண்டேன். மேடு வரும் போதெல்லாம் , அவனின் புஜங்களின் புடைப்பு , அவனின் உழைப்பின் ஆழத்தை உணர்த்தின. கோரிப்பாளையம் தாண்டி வந்ததும் , மக்கள் கூட்டம் மிகுந்த காபிக் கடையில் நிறுத்தினான். ”யேய் , இது ஆட்டோ நிறுத்துமிடம் ”என ஆட்டோக்காரன் குரலுக்கு பதிலளித்து, என்னையும் அழைத்துக் கொண்டு காபி குடிக்கச் சென்றான்.  
     வெயிலின் தாக்கம் , அவனின் தோல்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. சித்திரை வெயில் இன்னும் எத்தனைக் கொடுமையாக இருக்கப்போதுன்னு தெரியலை , இந்த டிரைசைக்கிளைப் தூக்கிப்போட்டு ,  என்னைக்கு மோட்டார் வண்டி வாங்கிற காலம் வருமோன்னு தெரியலை என்று புலம்பிக் கொண்டே.. வியர்வைத் துளிகள் தார் சாலையில் ஆவியாகி பறக்க பறக்க , விர் விர் என்று இழுத்தான். காலை எட்டு மணிக்கு புதூர் மார்க்கெட் வந்தோம். எல்லா பழங்களையும் மூட்டம் போட எடுத்துச் சென்றனர். பழுத்த பழங்களை புடா போட்டு , விற்பனைக்கு வைத்திருந்தனர். என்னை அவனின் முதலாளியிடம் காட்டி மகிழ்ந்தான். மீண்டும் அங்கிருந்து, வாழைத்தார்களை எடுத்து வர பயணித்தோம். இந்த முறை வெயில் எங்களை வாட்டியது. எதற்காக சூரியன் கோபம் கொண்டான் என்று தெரியவில்லை , மதுரையின் சாலைகளில் செல்லும் அனைவரையும் சுட்டு வீழ்த்துவது போல  தன் கரங்களை தோட்டாவாக்கி அனைவர் உடம்பையும் துளைத்தது. அன்றாடக் காட்சிகளில் பலர் வெயிலுக்கு மாண்டு போவார்கள் போலும்... வியாதியை விலைகொடுத்து வாங்குவது போல அங்காங்கே உள்ள டீக் கடைகளில் தண்ணீர் அண்டாக்களில் தண்ணீர் நன்றாக இருக்கிறதா என்று கூட பார்க்காமல் மொண்டு குடித்துத் தாகம் தணித்துக் கொண்டனர்.
    ஒரு மணிக்கெல்லாம் வேலை முடிந்தது. வீடு திரும்பியவுடன் , தன் அம்மாவிடம் நூறு ரூபாய் கொடுத்தான். மீதி நூற்று ஐம்பது அப்படியே பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். தலையில் தண்ணீரை ஊற்றி தன் சூட்டைத் தணித்துக் கொண்டான். இருப்பினும் அவனின் உழைப்பில் இருந்த வியர்வை மணம் இன்னும் அவனுடன் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது. முதல் நாளிலே அவன் மீது ஒரு காதல் பிறந்தது. மாலை ஐந்து மணி.... என்னை அழைத்துக் கொண்டு செல்லூர் கம்மாய் அருகே உள்ள வண்டிப்பாதைக்கு அழைத்துச் சென்றான். ஒரு சட்டி நிறைய ’கள் என்றுதான் நினைக்கிறேன்’ வாங்கிக் குடித்தான். ஐம்பது ரூபாய் செலவு செய்திருப்பான். ஒரு வித மயக்கத்துடன் அப்படியே தள்ளாடியப்படி , கூடல் நகர் நோக்கி சைக்கிளை மிதித்தான். கம்மாக் கரையோரம் இருந்த குடிசையை பார்த்து ,அதன் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தினான். பின் குடிசைக்குள் சென்றான். என்னை அந்த குடிசையின் ஒரு மூலையில் கடாசிவிட்டு , வெறி கொண்டவனைப்போல அங்கிருந்தவளைப் புணர்ந்தான். அவளும் அவனுக்காகவே காத்திருந்தவளைப் போல எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவனின் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுத்தாள். கால் மணி நேர புணர்தலில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. எங்கிருந்தோ வந்த விசில் சத்தம் , அவனை பதட்டமடையச் செய்யவே.. “ அட சும்மா பயப்படமா இரு ,நித்தம் மாமூல் கொடுக்கிறேன் .. ஓசியல நக்கி திண்ணுற பயலுக ... நீ காச எடு ... சரி நாளைக்கு வா..” என அனுப்பி வைத்தாள். அவனின் இந்த வியர்வை நாற்றம் என்னை குமட்டச் செய்தது. இவனைப் போய் காதலிக்கிறோமே என்று பயந்தேன். இப்படியாக இவன் வாழ்க்கை  நித்தம் தொடர்ந்தது.

   ஒரு நாள் ... முருகன் வீட்டிற்கு நான் வந்து சரியாக ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். முருகனின் தம்பி ,கல்லூரியில் படிக்கும் கந்தன்  என்னை அள்ளிக் கொண்டு . ”அண்ணன் வந்தா சொல்லுமா.. இன்னைக்கு எங்க காலேஜ் பங்சன் என .. ”சொல்லி விட்டுப் பறந்தான். அவன் படிப்பது மாலைக் கல்லூரியாக இருந்தாலும் , அந்த லேடி டோக் பஸ் ஸ்டாப் அருகில் நின்று நண்பர்களுடன் .. டாவு அடிப்பது தான் அவனின் முதல் படிப்பு. சுசிலா... அவன் விரும்பும் பெண் என்பதை அவனுடன் சென்ற முதல் சந்திப்பிலேயே தெரிந்து கொண்டேன்.  என்னுடைய ராசி என்று அவனின் நண்பர்கள் பினாத்திக் கொண்டார்கள். ”மச்சி.... அசத்தலா...இருக்கடா... இன்னைக்கு உன்னைப்பார்த்து சிரிச்சாடா....” என பிதற்ற .. இவனும் ...”அதாண்டா என் அண்ணன்   ....” அட புரியலையா .. இவன் அண்ணன் என்னை விடாமல் அழைத்துச் செல்லும் ரகசியம் என சொல்லிக் கொண்டான். அன்று முதல் கந்தனுடன்  பழக்கம் ஏற்பட்டது .கந்தனும் கந்தனின் நண்பர்களும் சதா பெண்களைப் பற்றியே பேசிப் பேசி பொழுதைக் கழித்தனர். பெண்களைப் பற்றியும் அவர்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதைப் பற்றியும் இவர்களாக ஒரு பட்டியலிட்டு , தங்கள் அன்னையின் கடுகு டப்பாவிலிருந்து காசைக் களவாண்டு , அவர்களுக்கு வாங்கி கொடுப்பார்கள் . அதனைப்பெற்றுக் கொண்ட பெண்களும் உன்னை யார் இதெல்லாம் எனக்கு வாங்கித் தரச் சென்னார்கள் எனப் பொரிந்து தள்ளுவார்கள். இவர்களும் ஏமாந்து ஏக்கங்களுடன் பெண்கள் பின்னால் எலியைத் துரத்தும் பூனை போலத் துரத்தி செல்வது வாடிக்கையானது. இதுவரை யாரும் உண்மையாக காதலித்த பாடுமில்லை...

     அட பார்த்தீங்களா என்னைப்பற்றி சொல்லவேயில்லை. நான் குஜராத் மாநிலத்தில் கமல் நாத் வீட்டில் உள்ள பருத்தி தோட்டத்தில் வளர்ந்தவன். ஒரு கோடையில் வெடித்து சிதறவே.. என்னை அள்ளிக் கொண்டு .......மும்பையில்  உள்ள ஒரு பருத்தி ஆலையில் விற்றார் கமல் நாத். பின்பு அங்கு என்னை நூலாக்கி , பின் ஆடையாக நெய்தனர். துணி பண்டிலாக மாறிய நான் தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள ஆனந்தன் கார்மண்ட்ஸ் கம்பெனியில் நாற்பது  சைஸ் சட்டையாக மாற்றப்பட்டு , மதுரை கா. பா கடைக்கு விற்பனைக்கு வந்தேன். அங்கு தான் முதல் முதலாக மாமாவை சந்தித்தேன்.  

    அடுக்கி வைக்கப்பட்ட ராக்கில் என்னைப்போன்று பலரும் இருந்தனர். கூட்டம் அலைமோதியது. அனைவரும் என்னை  எடுப்பார்கள், கண்ணாடி அருகில் செல்வார்கள் . எடுப்பவனுக்கு பிடித்திருந்தாலும் , அருகில் உள்ளவர்கள் ,”டேய், இந்தக் கலரு உனக்கு மேட்ச் ஆகாதுடா...”என சொல்ல என்னைத் தூக்கி ஏறிந்து விடுவார்கள். என்னுடன் இருந்த , எண்பது பேர் அன்று விடை பெற்ற போதும் , என்னை மட்டும் யாரும் சீந்தவில்லை என்ற கவலை இருக்கவே...அருகில் உள்ள டில்லியில் இருந்து வந்திருந்த காக்கி கலர் டி சர்ட்டிடம் “ நான் வந்து பத்து நாளாகுது .. நேத்து வந்த சின்ன பசங்க கூட வெளிய போயிட்டாங்க.. நான் என்ன குறைச்சலாகவா இருக்கிறேன்?மஞ்சள் நிறத்தில் நடு நடுவே பச்சைக் கோடு போட்டு எடுப்பாகத்தானே இருக்கிறேன் ... மனிதப் பசங்களுக்கு டேஸ்டே... தெரியலை... “ என சொல்லிக் கொண்டு இருக்கும் போது ஒரு பெரியவர் என்னை எடுத்து கடைக்காரனிடம் இந்த சட்டை எனக்கு பொருத்தமாக இருக்குமா என கேட்க, அவனும் ஒரு இளிச்சவாயன் கிடைத்தான் என்று மனதில் சொல்லிக் கொண்டே....... இரண்டு வருடமாக இங்கு இருக்கிறேன் என்று மனம் வருந்திய அரக்கு சட்டை யை எடுத்து காண்பித்து ..”லேட்டஸ்ட் மாடல் .. இந்த தீபாவளிக்கு இது தான் ரொம்ப வேகமாக மூவ் ஆகுது”ன்னு ஏமாற்றித் தள்ளினான். எனக்கு சேல்ஸ் மேன் மீது கோபம் வந்தது. இருப்பினும் இரண்டு வருடம் பாவம் அவன் என மனதைத் தேற்றிக் கொண்ட போது தான், ராகவன் மாமா என்னை எடுத்து தன் உடம்புடன் ஒற்றிக் கொண்டு கண்ணாடியில் பார்த்து , மனம் மகிழ்ந்து எடுத்துச் சென்றார். அங்கு போன போது தான் தெரிந்த்தது . நான்  முருகனுக்கு என்பது.

        அட கபிலனைப் பற்றி சொல்லவேயில்லையே... அவன் முருகனின் இரண்டாவது தம்பி. கந்தன் என்னை உபயோகித்த பின் முருகன் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. கந்தனும் அவர்கள் நண்பர்கள் ”புதுசா எதாவது வாங்குடா ..”என சொல்லிய பின் என்னையும் என் ராசியையும் மறந்தான். எனவே, கபிலன் என்னை பயன்படுத்த ஆரம்பித்தான். நான் மூன்று வருடம் அவர்களுடன் பழகிவிட்டேன். கபிலன் என்னை அணிந்து செல்லும் போது மட்டுமே கிரிக்கெட் மேட்சில் வெற்றி பெறுவதாக நினைத்தான். ஞாயிற்றுக் கிழமையில் நானும் கபிலனும் மெடிக்கல் கல்லூரி கிரவுண்டில் விளையாடும் போது புழுதி மேலில் பறக்க விளையாடுவோம். அவனின் நண்பர்களும் உனக்கு இந்த சட்டை ராசிடா என சொல்ல அவனும் பேட்டிங் பிடிக்க என்னை தேடிப்பிடித்து எடுத்து அணிந்து செல்வான். அவன் நூறு ரன் எடுத்து போது என்னை தன் கைகளில் சுற்றி தன் தலைக்கு மேலே சுற்றிக் காட்டி , என்னை முத்தமிட்டு மகிழ்ந்து கொண்டாடுவான், இதை  என் வாழ்வில் என்றும் மறக்க முடியாது. அவன் சிறந்த ஆட்டக் காரனாக இருந்தாலும் , அவன் என் ராசிதான் அவனை ஐம்பதுக்கு மேற்பட்ட ரன்களை குவிக்கச் செய்கிறது என நம்பினான். அவனின் குடிசைவீட்டில் வெற்றிக் கோப்பைகளுடன் என்னையும் வைத்து அழகுப்பார்ப்பான். மனிதன் ராசிபலன் பார்த்து தன் உழைப்பில் நம்பிக்கை இழக்கிறான் என்பதை உணராமல் வாழ்வதைப் பார்த்தால் எனக்கு வியப்பாகவும், சிரிப்பாகவும் இருக்கும். இப்படியாவது ராசி என்று சொல்லிக் கொண்டு தன் மீது நம்பிக்கை வைத்துள்ளானே எனும்போது மனம் ஆறுதல் அடையும்.
    
             அன்று எப்போதும் போல சுவற்றில் தொங்கிய என்னை வாரி  கொண்டு , கிரவுண்டு நோக்கி விளையாடக் கிளம்பினான். இன்று தெப்பக் குளம் என்று சொல்லவே... முருகனின் சைக்கிளை எடுத்து கொண்டு சென்றான். மதுரையின் சாலைகள் குண்டும் குழியுமாகப் பல் இளித்தாலும் , மக்கள் எந்த வித சிரமமும் இன்றி நகர்ந்தனர். அவர்கள் மதுரை சாலைகளை தங்களுக்குள் சாமதானப்படுத்திக் கொண்டனர். வேகமாக வந்த லாரி ... சாலையோர சாக்கடை நீரை இவர்கள் மீது அள்ளித் தெளித்துச் சென்றது. ”கோத்தா...கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுறான் பாரு என...” கந்தனின் நண்பன் மணி ஊரே திரும்பிப் பார்க்கும் வண்ணம் கத்த , அவன் பின்னால் வந்த அனைவரும் சிரித்துக் கொண்டு வந்தனர். சாக்கடை என் மீது தான் பட்டது, நான் தான் கோபம் பட வேண்டும் . ஆனால் , எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக மனிதர்கள் இருப்பதை பார்க்கும் போது பல சமயங்களில் என் மனம் பதை பதைக்கும். இப்படித் தான் கபிலனுடன் விளையாடும் ரவி , ஒரு வைடு பால் காட்டாததற்கு எல்லாம் எதிர் டீம் அம்பயராக நிற்கும் எவர் மீதும் கோபப்பட்டு ஸ்டெம்ப் எடுத்து அடிக்கச் செல்வான். அதற்காக ரவி ஆடும் போது எவரும் அம்பயரிங் செய்யப் பயப்படுவார்கள். இன்று ரவி ஆடுவதற்கு வந்திருந்தான். என்ன நடக்க போகுதோ..... என சொல்லிக் கொண்டுத்தான் மணி விளையாட வந்தான். ”டேய்..அனுப்பானடி பசங்க..மோசமானவனுக,  உன் கையைக் கால பொத்திக்கிட்டு வா.. அவனுக காண்டாயிட்டானுகன்னு வச்சுக்க ...அவ்வளவு தான் என “ எச்சரிக்கை விட்டான் டீம் கேப்டன் விஜய்.  
 
        பூம் .. பூம் என சங்கு ஊத நான் பாடையில் அமர்த்தப்பட்டு கிடந்தேன்... என் பின்னால் ஊரே திரண்டு வந்தது.. அழகு பெத்த பையன வளர்த்து இப்படி காவு கொடுத்திட்டீய்யே ம்மா...” என கூக் குரல் ஒலிக்க ஒரு நானூற்றூக்கும் மேற்பட்டவர்கள் முருகன் வீட்டிற்கு முன் திரண்டிருந்தனர். என் மீது ரோஜா மாலைகள் மணம் வீசி ... துக்கம் விசாரித்தன. என்னால் பேச முடியாமல் அவனுடனே அமரத்துவமாய் கிடந்து இருந்தேன். ஒரு நிமிடக் கோபம் ஒரு அப்பாவி திறமைசாலியின் உயிரை பறித்து விட்டது. அன்று ரவி என்னவோ அமைதியாகத் தான் இருந்தான். இந்த மணி லாரிக் காரன் மீது இருந்த கடுப்பில் .. பந்து வீசிய எதிராளியை ...”கோத்தா.. தேவடியா மவனே... பந்த எறியாம போடுடா..” என சொல்ல... .அவன் ஸ்டெம்பை எடுத்து அடிக்க ஓங்க .. கபிலன் அவனை தடுக்க போக.. ”ஏண்டா... செல்லூர் காரங்கன்னா... பயந்து ஒதுங்கிப் போவோம்ன்னு நினைப்பா....” என மல்லுக்கட்ட..எங்கோ இருந்து வீசப்பட்ட கல் கபிலன் பொட்டில் பட ... அந்த இடத்திலே உயிர் நீத்தான்.
    
   ”கை, கால் , இடுப்பில எல்லாம் தங்கம் இருக்கான்னு .. பார்த்துக்கங்க... சட்டைப் பையில எதுவும் இருக்கான்னு செக் பண்ணிக்கங்க... என அவனின் கை, கால்களை காடாத் துணியை வைத்துக் கட்டினான் வெட்டியான். அடங்கிப்போனவனை ஏன் கை கால்களைக் கட்டி வைத்து எரிக்கின்றனர் என்று புரியாமல் நானும் அவனுடனே விறகு கட்டைகளுக்கு நடுவில் புதைந்து போனேன். ”பார்கிறவங்க...எல்லாம் மூஞ்சிய பார்த்துக்கங்க.. அய்யா.. மூஞ்சி ..மூடப்போறேன்.. ” என்றான். அதற்கு அடுத்து மனிதக் குரல்கள் அற்றுப் போனது. அழு குரல்களும் ஒடுங்கிப்போகின. மனித வாடையே இல்லாத ஒரு புதிய இடத்திற்கு, எந்த வித அடையாளமும் இல்லாமல்  நானும் அவனுடனே எரிந்து பயணித்தேன்.

Friday, April 1, 2011

தனிமை

குளிர் சாதனப் பெட்டியில் 
அடைக்கப்பட்ட மலர் 
காத்திருக்கிறது ....

மேகம் மறைத்த நிலவு 
வெளிப்பட துடிக்கிறது 

திரை கொண்ட 
மின் சாதனப் பெட்டியில்
முனங்கல்   சத்தங்கள் 

அந்த இரவில் அவனை 
அடையாளம் காட்டுகிறது  

மெல்ல அந்த முனங்கல்  
அவனைத் தொற்றி
தனிமையை வெல்கிறது ...