Tuesday, June 7, 2011

இரயில் பயணம்


   இரயில் பயணம் சிறந்த அனுபவம். முகம் தெரியாத, அறிமுகமே யில்லாத நபர்கள் , ஆண் , பெண் பேதம் இன்றி ,ஒரு சில நிமிடங்களில்  இரயில் நகர்ந்தவுடன், ஒருவருக்கொருவர் அருகில் நகர்வது இயற்கை.  அருகில் என்பது மனதளவில் பொருள் கொள்க. இதை பதிவு செய்யப்படாத பெட்டிகளில் உணரலாம். அதுவும் தென்காசி, நாகர்கோவில் வண்டிகளில் கூட்ட நெருசலில் இடம் பிடிக்க சண்டை நடந்தாலும் , இரயில் நிலையத்திலிருந்து நகர , நகர , மனிதர்கள் தன் நிலையில் இருந்து நகர்ந்து , ஒருவருக்கொருவர் விசாரிப்புகளை தொடர்ந்து , ஒரு குடும்பமாக பயணம் செய்வது இனிமை.

      ஆனால், இரயில் நிலையத்தில் பயணிகலின் காதுகளில் ஒலிக்கும் குரல் அபத்தமாக படும். முன்பின் தெரியாதவருடன் யாரும் பேசவேண்டாம் . முன் பின் தெரியாதவர் தரும் பொருட்களை வாங்காதீர்கள். சந்தேகத்திற்கு இடமளிக்கும் நபர்கள் தெரிந்தால் , அருகிலுள்ள காவலரிடம் தெரிவியுங்கள். இப்படி மனதில் நஞ்சு பரவியிருந்தாலும் ,இரயிலில் பயணிக்கும் போது  யார் உடமை எங்கு உள்ளது என்பதை பற்றி கவலைப்படாமல் , எதிர் சீட்டில் இருப்பவரின் உரையாடலை சுவரசியமாக கேட்டுக் கொண்டும். இரயிலில் கடைகளாக நடமாடும் மனிதர்களிடம் இருந்து வெள்ளரி, கடலை, காபி, டீ, முருக்கு , பன் என அனைத்துவகையான நொருக்கு அயிட்டங்களையும் வாங்கி , தான் உண்ணுவதுடன் , அந்த இருக்கையில் அமர்ந்துள்ள அனைவருக்கும் கொடுத்து , உரிமையாக பேசி , சிரித்து வரும் அனுபவம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதில் பல கதைகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. கோணங்கி அவர்கள் இப்படிப்பட்ட பதிவு செய்யப்படாத பெட்டிகளில் வருவதையே விரும்புவதாக சொன்னார்கள்.சமீபத்தில் அவருடன் நாகர்கோவில் பயணிக்கும் போது கிடைத்த அனுபவம் மறக்க முடியாதது; இப்படியும் சில சமயம் நாம் தேடிக் கொண்டிருப்பவருடன் பேசவும் பழகவும் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்து விடும்.

   சில  சமயங்களில் போலீஸ்காரர் எச்சரிப்பது போல நடப்பதும் உண்டு. மனிதர்களின் முகங்கள் எவரையும் சாதாரணமாக அடையாளம் காட்டிவிடுவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதெல்லாம் இந்த பிஸ்கட் திருடர்களிடம் பலிப்பது இல்லை. ஒருமுறை ராஜஸ்தானிலிருந்து சென்னை வரும் இரயிலில் என் மைத்துனன் வந்துள்ளார். பதிவு செய்யப்பட்ட இருக்கை. ஆனால் , யார் வேண்டுமானாலும் எந்த கோச்சிலும் வித்தியாசமின்றி ஏறிக் கொள்ளும் பழக்கம் வட இந்தியாவில் உண்டு. இதை நானே சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் வண்டியில் அனுபவித்து இருக்கின்றேன்.  வண்டி நகர்ந்த சற்று நேரத்தில் ஒரு குடும்பம் அருகில் உள்ள கம்பார்ட்-மெண்டில் பேசி கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்துள்ளனர். மேலும் சீட் விளையாடிக் கொண்டு வந்துள்ளனர். சபலப்பட்ட சிலரும் அந்த வெள்ளை தோல் பெண்களுக்காக தானும் விளையாட  வருவதாக சொல்ல அவர்களையும் சேர்த்துள்ளனர். மதியம் இரவு என கழிந்துள்ளது. குடும்பத் தலைவர் இரவு பத்து மணிக்கு அனைவரும் படுக்க வேண்டியுள்ளது என கூறி, விளையாடிய அனைவருக்கும் பிஸ்கெட், பழம் , பால் கொடுத்துள்ளார்கள். இரவு சென்று காலை விடிவதற்குள் அங்கு விளையாடிய அனைவரும் கதறினார்கள். தங்கள் உடைமை, மற்றும் கை, கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணவில்லை. மேலும் அந்த குடும்பத்தையும் காணவில்லை.  இரயிலில் இழந்தவர்களும் உண்டு. பெற்றவர்களும் உண்டு. இன்றும் என் மைத்துனருடன் தொடர்பிலுள்ள மத்திய அரசில் உயர் பதவியில் பணிபுரியும் நண்பர் , இரயிலில் அறிமுகமாகியவர் .

  என் ஆசிரிய நண்பர் பிரபாகரன் மிகவும் சீரியசாக சொல்லும் கதை என்னால் இன்றும் நம்ப முடியாது. மதுரையின் கோயில் வீதிகளில் அனாதைகளாக காணப்படும் பலரும் இரயிலில் அழைத்து வரப்பட்டு  வேண்டுமென்றே தவறவிட்டவர்கள் தான்.   அதில் பெண்கள் பாடு தான் பாவம் . பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு வீதிகளில் வயிற்று சுமைகளுடன் அலையவிடப்படுகிறார்கள் .கோவில் நகரில் பாவங்களை தொலைத்து செல்கின்றனர். பாவங்கள் மனிதனின் பிறப்பிலிருந்து பிறந்தவை என்பதால்  முடிவின்றி எங்கும் தொடருகின்றன.
    அடிக்கடி  வட இந்தியாவிலிருந்து கும்பலாக வந்து , இராமேஸ்வரம் செல்லும் நபர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக மதுரை செய்திகளில் இடம் பெறும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ஒரு திரில்லான அனுபவம். ஒரு சமயம் பழனி பாதையாத்திரை சென்று மதுரை திரும்பிக் கொண்டிருந்தேன். என் அருகில் உள்ள நாற்பது வயது நிரம்பிய , வெள்ளை பை வைத்துள்ள நபர் , பாத்ரூம் செல்வதும் வருவதுமாக இருந்தார். டிக்கெட் பரிசோதகர் வருகை புரிந்தார். என் அருகில் வந்து என்னிடம் டிக்கெட் வாங்கி சரிசெய்யும் போது என்னருகில் இருந்த  அறுபது வயது முதியவர் பாத்ரூமில் உங்களை பார்த்ததும் ஒருவன் ஒளிந்துள்ளான் என போட்டுக் கொடுக்க, அவர் பாத்ரூம் கதவை தட்ட , பாத்ரூமிலுள்ள அந்த நபர் டிக்கெட் காட்ட , வெறுத்து போன பரிசோதகர்  இவரிடம் டிக்கெட் கேட்க பல் இளித்தார். இப்படியும் நடப்பது உண்டு. ஒரு சமயம் வலுகட்டாயமாக டிக்கெட் எடுக்காத காசில்லாத ஒரு இளைஞனை அருகிலுள்ள ஸ்டேசனில் இறக்கி விட்டதும் உண்டு. ஆனாலும் பலர் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதை பலமுறை பார்த்துள்ளேன்.   

   இரயில் பயணங்களில் அருகிலுள்ள ஊர்களுக்கு சரியான தருணத்தில் சேருவோம் என சொல்ல முடியாது. எங்கு எப்படி எப்போது தாமதம் ஏற்படும் என்பதெல்லாம் சொல்ல முடியாது, ஒரு முறை என் நண்பர் முக்கியமான ஒருவரை சந்திக்க மதியம் நான்கு மணிக்கு முடிவெடுத்து திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுள்ளார். வெயில் என்பதால், இரயிலில் பயணம் செய்ய முடிவெடுத்து , மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டுள்ளார். இரயில் வாடிபட்டி அடைந்ததும் , எதிரில் குட்ஸ் கடக்க நிறுத்தியுள்ளனர். நான்கு மணிக்கு வர வேண்டிய இரயில்  ஐந்து மணி முப்பது நிமிடத்திற்கு மதுரைக்கு வந்துள்ளது. அன்று சந்திப்பு நிகழவில்லை. அதனால் ஒரு வியபார தொடர்பு முறிந்து போனது. அந்த வியபாரத்தை பெற்ற வேறொரு நபர் இன்று கோடிஸ்வரர். ஆகவே, நேரம் முக்கியம் . ஆனால், இரயிலில் நேரம் எதுவும் சொல்லமுடியாதபடி பல சம்பவங்கள் நடந்துவிடும். இரயிலில் பயணம் கொள்ளும் நடுத்தர வர்க்க குடும்பங்களும் , அவர்களின் குழந்தைகளும் வெளிப்படுத்தும் வறுமை ஒரு இலக்கிய தரமிக்க நாவலை எழுத தூண்டும் . கதைகள் இரயில் பயணத்தில் வாய்ப்பது அதிகம். சென்ற முறை சென்னைக்கு பயணித்த போது ஒரு காதல் ஜோடியை சந்திக்க நேர்ந்தது. படங்களில் தான் இது மாதிரி ஒளிந்து ஒளிந்து யார் கண்ணிலும் படாத படி ஒடும் நாயகன் நாயகியை பார்த்து இருக்கிறேன். ஆனால் நிஜத்தில் , என்னால் நம்ப முடியவில்லை… (தொடரும்)

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரயில் பயணமும், அதில் கிடைக்கும் சுகங்களும், சோகங்களும், பல்வேறு அனுபவங்களும் வெகு அருமையாக விவரித்துள்ளீர்கள். உங்களுடன் இரயிலில் பயணம் செய்வது போல மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரயில் பயணம் உண்மையில் சுவாரஸயமானதுதான். மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள்...

ஏசி பெட்டியை விட முன்பதிவு செய்யப்படாத பெட்டியில்தான் அதிகமான சுவாரஸ்யங்கள் நடக்கும்...

ஏசி பெட்டியில் நாமும் ஒரு எந்திரம்போல் தான் செயல்படவேண்டும்...

அரு்மை...

Sankar Gurusamy said...

அருமையான கட்டுரை... ரயில் பயணம் நான் அதிகம் செய்வதில்லை. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது சுவாராசியமான விசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

http://anubhudhi.blogspot.com/

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நுட்பமான பார்வை

K.s.s.Rajh said...

அருமையான பதிவு நண்பரே

தூயவனின் அடிமை said...

என் ரயில் பயணத்தின் பொது ஏற்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துயுள்ளிர்கள்,
உங்கள் அனுபவத்தை தொடர்ந்து எழுதுங்கள்.

shanmugavel said...

ரயிலும்,பயணமும் அலுக்காத ஒன்று.தொடருங்கள் .அருமை.

Post a Comment