Tuesday, February 8, 2011

செக்ஸ் -சமூக முரண்கள்

 
   நான்கு நாட்களுக்கு முன் டெக்கான் கிரானிக்கில் நாளிதழில் ஒரு மருத்துவரின்  பேட்டி  என்னை மிகவும் பாதித்தது. இச் செய்தியை படித்த என் மனைவி, பெற்றோர்களின் அஜாக்கிரதையும்  , நம் மாணவிகளின் சமூக நட்பும் இப்படியொரு  மோசமான சமூகச் சூழலை உருவாக்குகிறது. இதில் ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே நம் மாணவ சமுகத்தை நல்வழிப்படுத்த முடியும் என்றாள் .
 
       செய்திக்கு வருகிறேன். தன் மருத்துவமனைக்கு ,பத்து நாட்களுக்கு ஒரு முறை இரத்த போக்கு ஏற்படுவதாக, ஒரு பதினான்கு வயது சிறுமியை அம்மாணவியின் பெற்றோர் அழைத்து வந்தனர். சோதித்து பார்க்கையில் , அம்மாணவி தன் ஆண் நண்பனுடன் அடிக்கடி செக்ஸ் வைத்துள்ளது அறிய வந்தது. மேலும் கர்ப்பம் தரிக்காமல் இருக்க , தானாகவே மாத்திரைகள் எடுத்துக் கொண்டுள்ளாள்.இதனால் உடம்பு பலவீனப்பட்டு   , அடிக்கடி இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது  . இவ்வாறு மருத்துவரின்  ஆலோசனை  இல்லாமல் கர்பத்தடை மருந்துக்கள் எடுத்துக் கொள்வது உடலுக்கும் மனநலத்துக்கும் நல்லதல்ல. உடலுறவுக்கு பின் எழுபத்திரண்டு மணிநேரத்துக்குள் இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் . அதை விட மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் தடுக்கும் முறைகளை மேற்கொள்வது நல்லது... என தொடர்கிறது செய்தி.

   இன்று ஆசிரியர்கள் மதிப்பெண் அடிப்படையில் செயல்படுவதாலும்  , மாணவர்களின் மனதை புரிந்துக் கொள்ளாமல் அல்லது மறந்து , அவர்களை ஒரு இயந்திரத்தனமான உலகவியல் இயக்கத்தை ஏற்படுத்தி , அறிவை திணிப்பதன் விளைவு , மாணவர்களை நெறிப்படுத்துவதில் தவறுகின்றனர். ஆண் , பெண் பேதமற்ற சமூக அமைப்பை ஏற்படுத்தி , அதன் மூலம் ஒரு சமநிலையை ஏற்படுத்தி விடலாம் என்று செயல்படும் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட  நாம் , மாணவர்களின் மனதை பக்குவப்படுத்தி , உடல் கூறுகள் சம்பந்தமாக பேசத் தவறியதன் விளைவு அல்லது கூச்சத்தின் விளைவு , இன்று முறை தவறிய செக்ஸ் கொண்டுள்ளனர்.

     ஒரு திறந்த வெளியில் செக்ஸ் பற்றி பேச அச்சப்படும் சமூக அமைப்பை நாம் சார்ந்திருந்தாலும் , ஒரு கமுக்கமாக செக்ஸ் பற்றி பேசவும் நம்மால் முடியாமல் போனதற்கு காரணம் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பமாக ஆக்கப்பட்டதன் விளைவு ஆகும். பாட்டியின்  கூக்குரல், கண்டிப்பு, நையாண்டித் தனமாய் பேசும் பேச்சில் சிறுமியர்  அவர்களை அறியாமலே பல விசயங்களை உணர்ந்து , ஆண்களுடன் கொள்ளும் நட்பின் எல்லையை வரையறுத்து விடுவர். 

     அடிக்கடி செய்திகளில்  வரும் மாணவர்கள் செக்ஸ் பற்றிய விபரம் நமக்கு எரிச்சலுட்டுவதாக இருப்பினும் , பெற்றோர்களிடமும் , ஆசிரியர்களிடமும் எந்த விதமான  விழிப்புணர்வும் ஏற்பட்டதாக தெரியவில்லை . பாலி டெக்னிக்  பாத்ரூமில் மாணவர்கள் உல்லாசம் வீடியோ, பிரவுசிங் சென்டரில் மாணவிகள் சல்சாபம் என விரியும் செய்திகள் அடிவயிற்றில் நெருப்பை கொட்டுவதாக இருந்தாலும் , யாரும் கண்டுக் கொள்வதாக இல்லை. நித்தம் செய்திகள் பெட்டிகளை நிரப்புகின்றன.நாமும் தேநீர் கோப்பை தீரும் வரை எங்கோ ஒரு இடத்தில் செய்தியை வாசித்து விட்டு , தேநீர் கோப்பையை குப்பையில் விட்டு எறிவது போல தூக்கி வீசி வருகிறோம். எர்ணாகுளத்தில் ஒரு சகோதரி செக்ஸ்க்காக ஓடும் இரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு இருக்கிறார். எதனால் ?

    செக்ஸ் மனிதனுக்குள் பூட்டி வைக்கப்படும் உணர்வு. அதை முறைபடுத்த கற்றுக் கொள்ள வேண்டும். மனிதன் செக்ஸ் ஒரு குற்றம் என்பது போன்ற உணர்வுடன் , அதை பொத்தி பொத்தி வைப்பதனால் ,அதனை அடக்க தவறி ,வெளிப்படுத்துதலில்  வழி தவறி ,முறை தவறி , சமூக முரண்களுக்கு உள்ளாகி ,தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.

     செக்ஸ் கல்வி ஆரம்ப கல்வி முதலே அனைவருக்கும் கற்றுக்  கொடுக்க வேண்டும். வீடுகளில் பெற்றோர்கள் பருவமடைந்த குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றி அறிவை வளர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண்களின் நல்ல மற்றும் கெட்ட தொடுதலை உணர்த்த வேண்டும். ஆண்களுடன் ஒரு எல்லை வரையறுத்து பழக வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். பகிரங்கமாக நம் குழந்தைகளுடன் செக்ஸ் கல்வி பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும். பிரச்சனை வந்தவுடன் பேசுவது என்பது தவறு. பிரச்சனைகள் ஏற்படும் முன்னே அதனை  பேசுதல் நலம். கூட்டுக் குடும்பமாக வாழ்தலில் உள்ள நன்மையை உணர்தல் வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை முறைபடுத்தி , நன்னெறியுடன் செக்ஸ் அறிவையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆண் பெண் நட்பின் எல்லையை வரையறுக்க கற்றுக் கொடுக்க வேண்டும் . காதல் என்ற மாயை செக்ஸ் நோக்கி செல்லாது தடுக்க பாடம் எடுக்க வேண்டும்.

    பெற்றோர்களுடன் ஆசிரியர்கள் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டு , மாணவனின் நட்பு வட்டாரம் பற்றி பகிர்ந்து கொள்ள செய்ய வேண்டும். குறித்த நேரத்தில் வீட்டுக்கு வருகை தருதல், பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லுதல், வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது மாணவனின் அவசியத்தை அறிந்து அனுமதித்தல், அளவுக்கு அதிகமான பாசம் , பணம் கொடுத்தலை தவிர்த்தல்  போன்றவை மாணவனை முறைபடுத்துவதற்கு  உதாரணங்கள். அதற்காக இவைகள் அவனின் தனிப்பட்ட  சுதந்திரத்தை பாதிக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக அழுத்தமும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்.


15 comments:

Chitra said...

பாட்டியின் கூக்குரல், கண்டிப்பு, நையாண்டித் தனமாய் பேசும் பேச்சில் சிறுமியர் அவர்களை அறியாமலே பல விசயங்களை உணர்ந்து , ஆண்களுடன் கொள்ளும் நட்பின் எல்லையை வரையறுத்து விடுவர்.


.....புதிய செய்தி எனக்கு.... நல்ல விஷயங்களை எப்படியெல்லாம் பெரியவர்கள் உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள்.


பகட்டுக்கு மயங்கி - போலியான கௌரவத்திலேயே நம் சமூகம், சுயநலத்துடன் சென்று கொண்டு இருக்கிறது. Self-Denial நிறைய உண்டு. உண்மையான நிலவரத்தை புரிந்து கொண்டு, ஆவன செய்தால் மட்டுமே நிலைமை மாறும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

சரியான வழி காட்டுதலை பெற்றோர்கள் கொடுப்பது இல்லை. இதனாலேயே பிள்ளைகள் வழி தவறுகிறார்கள்.
**********

ஹேமா said...

நாகரீகம் என்கிற போர்வையில் கலாசார அழிவுகள்.செக்ஸ் தவறல்ல.உரிய வேளை,அதை உணரும் பருவமும் தேவை.வர வர நமது நாடுகளும் ஐரோப்பிய வாழ்க்கைக்கு அடிமைப்படுகிறது !

Avargal Unmaigal said...

படிப்பில் நல்ல கவனம் செலுத்தும் நாம் இது போன்ற வாழ்க்கை பாடங்களில் இந்தியர்களாகிய நாம் கோட்டை விடுகிறோம். இதில் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.இங்கே அமெரிக்காவில் ஆறாம் வகுப்புகளில் செக்ஸ் பற்றி க்ளாஸ் எடுக்கிறாரகள். ஆனால் குழ்ந்தைகள் அதற்கு முன்பாகவே கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறார்கள்

Avargal Unmaigal said...

இந்திய பெற்றோர்களூக்கு நான் மிகவும் ரெகமண்ட் பண்ணும் நல்ல புக் How to say it to your kids.. மிகவும் நல்ல புக் கூட.This.book will give adults solid advice and preparation for how to handle the difficult situations that come up daily. Rather than answering children in anger, or responding with silence, this book gives excellent, concrete suggestions, as well as reminders of "how not to say it." It is written in easy to understand language, but provides depth and sound professional reasoning The many sections called "What Not to Say" were an eye-opener. its cover the all topic.

Philosophy Prabhakaran said...

// இந்திய பெற்றோர்களூக்கு நான் மிகவும் ரெகமண்ட் பண்ணும் நல்ல புக் How to say it to your kids.. மிகவும் நல்ல புக் கூட... //

சூப்பர்ப் சார்... நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்...

இளங்கோ said...

பாலியல் பற்றிய புரிதல் இங்கே மாணவரிடமோ, ஆசிரியரிடமோ இல்லை. பன்னிரெண்டாம் வகுப்பில், இனப் பெருக்கம் பற்றிய பாடங்களை எடுக்க ஆசிரியர்கள் முன் வருவதில்லை. அப்படியே எடுத்தாலும் மாணவர்களிடம் சிரிப்புதான் வருகிறது.
மாணவர்களுக்கு மட்டுமில்லை, வளர்ந்து பெரியவர்கள் ஆகியும் கூட நிறையப் பேருக்கு, நிறையக் கேள்விகள் இருக்கின்றன. மூட நம்பிக்கை கேள்விகள் உட்பட.
நல்ல பதிவு.

ஹுஸைனம்மா said...

சிறுவயதில் பெற்றோர்கள், பெரியவர்கள் கண்டித்து எடுத்துச் சொல்வார்கள், நீங்கள் சொன்னதுபோல. தற்காலத்திலோ, சுதந்திரம், சம உரிமை, என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டு, தேவையானதை விட்டுவிட்டு, தேவையற்றவைகளுக்கு முன்னுரிமை தருகிறோம்.

முதலில், இந்தத் தமிழ் சினிமாக்களைத் தடை செய்தால் நல்லது. அவைதான் பெரும்பாலும் மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த தவறான எண்ணங்களை விளைவிப்பது!!

shanmugavel said...

நான் சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம்.சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்

Unknown said...

பெற்றோர்கள் பிள்ளைகள் குறித்து சிந்திக்க வேண்டும் ,தலைமுறை தடுமாற்றம் ?

G.M Balasubramaniam said...

சரவணன், உங்கள் கவலையை உங்களால் முடிந்தவரை போக்க முயலுங்கள். நீங்கள் இருக்கும் இடம் அதற்கு உதவும். சிந்திப்பதை செயல்படுத்த துவங்குங்கள். வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

நல்லப் பதிவு.

*****

மாணவர்களுக்கு பாலியல் அறிவு ஊட்டுவது பற்றி எழுதி இருக்கிறீர்கள். அந்த அறிவு இல்லாததால் கெட்டுப் போகும் மாணவர்கள் விழுக்காட்டு அளவில் குறைவு தான். அதே விழுக்காட்டு அளவில் குறைவான செயலாக ஆசிரியர்களே மாணவர்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதும் நடந்தே வருகிறது. இப்படியான ஆசிரியர்களுக்கு பாலியல் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா ? ஒரு ஆசிரியராக இருக்கும் நீங்கள் இதைப் பற்றியும் இங்கே எழுதி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

Dinesh said...

நல்லப் பதிவு!

Muruganandan M.K. said...

"செக்ஸ் மனிதனுக்குள் பூட்டி வைக்கப்படும் உணர்வு. அதை முறைபடுத்த கற்றுக் கொள்ள வேண்டும்..."
இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான கட்டுரையைத் தந்திருக்கிறீர்கள்.

geethappriyan said...

அடடா பயங்கரமா இருக்கு நாட்டில் நடப்பவை

Post a Comment