Saturday, January 22, 2011

எஸ்.ராவின் ஒசில் பூனையும் சாருவின் தேகமும்

   எனக்கு விலங்குகளைக் கண்டாலே பயம் . சிறுவனாக இருக்கும் போது ஒடி பிடித்து மறைந்து விளையாடும் போது , முருகன் காம்பவுண்டு வாசல் கதவை தெரியாமல் திறந்து மறைவதற்கு ஓட, எப்போதும் சாதுவாக இருக்கும் ஜிம்மி ,கதவைத் தொட்டவுடன் தாவி சட்டையை பிடிக்க , அன்று அரண்டவன் தான், இன்று வரை நாய், பூனை , பறவை என எதைக்கண்டாலும் பயம் . என்ன பறவையையுமா? என கேட்டால் அதற்கும் ஒரு கதை இருக்கிறது.
      
           பால்பாண்டி வீட்டில் கோழி வளர்ப்பார்கள். அவனை பார்க்க சொல்லும் போதெல்லாம் கோழிக்கு இரை மற்றும் தண்ணீர் வைத்துக் கொண்டு இருப்பான். எனக்கு கிரிக்கெட் விளையாட போக வேண்டிய அவசரம் என்பதால் , அவனை உடனே கையுடன் அழைத்து சென்று விடுவேன். அவனுக்கு சேவல் சண்டை செய்வது பிடிக்கும் . ஆடுகளம் படம் பார்க்கும் போது அவன் ஞாபகம் வந்தது. அன்று வீட்டிற்கு வீடு எதாவது ஒரு செல்லப்பிராணி வளர்ப்பது வழக்கமாக இருந்தது.

     எதிர் வீட்டு ரேகா வீட்டில் பூனை வளர்ப்பார்கள் . அது என்னை பார்க்கும் போதெல்லாம் ஜிம்மி கடித்தது ஞாபகத்தில் வர , பூனை அருகில் வந்தாலே பயப்படுவேன். ”சரோ , பாண்டி ஒண்ணும் கடிக்க மாட்டான்” என ரேகா சொல்லும் போதெல்லாம் அவளை கடிந்து விழுவேன். ”ஆமா, அது என்னை கடிக்கிற மாதிரியே இருக்கு..ஊசி போட்டவனுக்கு தான் தெரியும் எது கடிக்கும் எது கடிக்காதுன்னு...அது தூக்கிட்டு ஓடு போயிடு .. இல்ல கல்ல விட்டு எறிஞ்சுப்பிடுவேன்...” என நான் கத்தும் போது , ரேகா ,”டோய், இது கடிக்காதுடா... பயப்படாத ..”என சொல்லிக் கொண்டு என் அருகில் வருவாள் . நான் அலறி அடித்து ஓடுப்போவேன். அவளுக்கு சிரிப்பாக இருக்கும். “அடியே.. உன்னை நாய் வளர்க்கிறவன் வீட்டிலக் கட்டிக் கொடுத்து உன் பூனையை சாவடிக்கல... என் பெயரை மாத்திக்கிறேன் ..” என்று நான் சபித்தது போலவே ஒரு அல்சேசன் நாய் வளர்க்கும் வீட்டில் தான் கட்டிக் கொடுத்தார்கள். ஆனால் அவளிடம் பூனை இல்லை. அது நேய்வாய்ப்பட்டு இரண்டு வருடங்களில் இறந்து இருந்தது.

      
      ஒருநாள் பால் பாண்டியைப் பார்க்க வீட்டிற்கு சென்றேன். அவன் வீட்டில் இல்லை. அவனின் தாய் பார்வதி , ”பாண்டி, கடைக்கு சென்றிருக்கிறான் .திண்ணையில் இரு வந்திருவான்” என சொல்ல ,திண்ணையில் அமர்ந்து கோழிகளை வேடிக்கை பார்க்க தொடங்கினேன். கோழி குஞ்சுகள் மட்டும் திண்ணைக்கு அருகில் சிதறிக் கிடந்த அரிசிகளை பொறுக்கி திண்ண, பெரிய கோழியைக் காணாமே என தேடினேன். எனக்கு வெகு அருகில் கொக் , கொக் என ஒலி வர , கூர்ந்து கவனித்தேன். அருகில் உள்ள கூடைக்குள் கோழி இருந்தது தெரிந்ததும் , கூடையை எடுத்தது தான் தாமதம் , அது பறந்து வந்து என்னை கொத்தியது. அன்றிலிருந்து இந்த வளர்ப்பு பிராணிகளைக் கண்டாலே பிடிப்பதில்லை.


         இன்று முப்பத்தெட்டு வயதாகிறது . இன்றும் எனக்கு விலங்குகளிடம் நட்பு கொள்ள முடியவில்லை. என் மகள் லீலா நாய் வளர்க்க ஆசைப்பட்டு என்னிடம் கேட்க ,”வீட்டில மிருகமெல்லாம் வளர்க்கக்கூடாது, வியாதிவரும். அத கவனிக்கவே நேரம் போதாது, அப்புறம் படிப்பு கெட்டுப்போகும் ..உனக்கு வேணும்மின்னா ஒரு நாய் பொம்மை வாங்கித்தருகிறேன் .”என்றேன். ”பொம்மை நாய்க்கு என்ன சோறு வைக்க முடியுமா..? அது என்ன குரைக்குமா...? யாரும் வந்த எச்சரிக்குமா...? நீ ஒரு சரியான பயந்தாங்கோலி ..” என கேலி செய்வாள்.


    எஸ். ராவின் எழுத்துக்களில் ஒசில் பூனை, புலனி பறவை,ஜப்பானிய தவளை வந்து பேசுகின்றன. இவர் எப்படி நட்புக் கொண்டு போசுகிறார்?. இவரும் என்னைப் போல பாதிக்கப்பட்டு , புனைவுகளிலாவது இவைகளுடன் நட்புக் கொள்வோம் என முடிவெடுத்து , இப்படி புனைவுகளில் போசுகிறாரோ !என்ற ஐயமும் உண்டு. இப்படி சிந்தனைகளில் முழ்கி இருந்த போது , என் தோழியிடம் இருந்து ஒரு குறுந்செய்தி வந்தது. ”சுந்தர் ராம சாமியின் ,’ஒரு புளியமரத்தின் கதை படித்து விட்டேன் ‘ சாருவின்,’ தேகம்’ கொண்டு வா” என்று வந்தது. சாருவின் தேகம் வலைகளின் மூலம் மோகம் எற்படுத்தியதன் விளைவு ’,என்னை உடனே கொண்டு வா ’என்றாள்.


     நானும் சாருவின் தேகத்தை தூக்கிக் கொண்டு பயணிக்கத் தொடங்கினேன். அப்போது கா. பா சொன்னது நினைவுக்கு வர சிரித்தேன். சாரு ஒரு வெகு ஜன எழுத்தாளன் என்றதும் , அவருக்கு வந்த கோபம் எனக்கு மீண்டும் சிரிப்பு மூட்டியது.  சி.டி. டான் பைக் நாற்பது மைல் வேகத்தில் சாருவின் தேகத்தையும் என்னுடன் சுமந்தது. ”சரவணா அண்ணே, நீங்க நிறைய படிக்கணும்ன்னே , ஜிரோ டிகிரி, இப்படி ஒருசிலதை மட்டும் வாசிச்சுகிட்டு ,விகடன்ல வரத வச்சுகிட்டு எதையாவது சொல்லக்கூடாது .அவனை பற்றியே சுய புராணம் பாடிகிட்டு இருக்கிறது ஒரு எழுத்தா...?” .”எது எப்படியோ எங்கெல்லாம் இலக்கிய சர்ச்சை எழுகிறதோ அங்கெல்லாம் சாரு வந்து போகிறார் அல்லவா, அந்தமாட்டில் அவர் ஒரு வெற்றி கரமான எழுத்தாளன் தான்...”என்ற நேசனை முறைத்தார். ”கமர்சியல எழுதுகிறதெல்லாம் ஒரு எழுத்தா..”என்ற கா. பா வின் அனல் போச்சை நினைத்துக் கொண்டு வர , என் தோழியின் வீடு வந்தது.


        வீடு மாடி என்பதால் மெதுவாக ஏறினேன்.வீடு வந்த அவசரத்தில் சாருவின் தேகத்தை பைக்கிலே வைத்து விட்டு மாடி ஏறிவிட்டேன். என் பைக் சத்தம் கேட்டு , என் தோழியின் பெண் குழந்தை ,”அங்கிள் , சத்தம் போடாமல் மெதுவா வாங்க ”என்றாள்.  ”பைக்கில புத்தகம் வச்சுட்டேன் ..எடுத்துட்டு வந்திரேன்..”என்ற என்னை , ஒரு விரலை வாயில் வைத்து , “ஸ்ஸ்ஸ்... அப்புறம் எடுத்துக்கலாம் ..வாங்க” என அழைத்தாள். மெதுவாக கதவை திறந்தாள். உள்ளே சென்ற எனக்கு ஆச்சரியம்.

      அங்கு என் தோழி சமையல் அறை அருகில் தனியாக பேசிக் கொண்டு இருந்தாள். ”என்னடா.. . திருட வந்திருக்கியா..?” .”என்னடா, பேச மாட்டீங்கிற...நேத்தே உன்னை சொல்லி இருக்கேன்ல .. உனக்கு பால் வேணுமின்னா ... என் கிட்ட வந்து கேட்கணும்ன்னு...?” அதற்கும் எதுவும் உள்ளே பதிலைக் காணாம். பவானி என்னிடம் ,”அம்மா, ஒரு கால் மணி நேரமா இப்படி தான் பேசிகிட்டு இருக்காங்க..அங்கிள்’’என்றாள். ’ உள்ள யாருல இருக்கா...?”. ”அந்த கூத்த நீங்களே பாருங்க... ” என சொல்லி, மெதுவாக அழைத்துச் சென்றாள்.அங்கு என் தோழியின் மிக அருகில் ஒரு பூனை இருந்தது. நான் இதுவரை அவர் வீட்டில் இந்த பூனையை பார்த்ததே இல்லை. “என்னல.. பூனை வளர்க்கிறியா .?”என்றேன் . “சரி, என் பிரண்டு வந்திட்டான்... நீ போ ”என்றாள். அப்போது தான் அது மியாவ் என்றது. அவள் பூனையுடன் பேசியதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. ”என்ன பால் வேணுமா.. ? இனிமே என்கிட்ட வந்து பால் வேண்ம்ன்னு கேட்டாத்தான் நான் பால் தருவனாம்.புரியுதா...?(என கூறீக் கொண்டே கிண்ணத்தில் பால் வைத்தாள்) நீ எஸ்.ரா வின் ஒசில் மாதிரி நம்ம ஏரியா லைப்பிரரி போயி படிச்சுகிட்டு வந்து கதை சொல்லுவியாம்.”என்றாள்.அதுவும் வாலை தூக்கி கொண்டு வந்து மியாவ் என்று சொல்லிக் குடித்தது.

       ”என்ன இது புதுசா..? புத்தகம் படிச்சு கெட்டு போயிட்ட...”    
“நானும் சொல்லணும் சொல்லனும்ன்னு இருந்தேன் மறந்திட்டேன்.. இது மூணு நாள எங்க வீட்டு க்கு வருது. இரண்டாவது நாள் எதொ என் அருகில் வந்து பேசுவது போல இருந்தது. முதலில் என்னை ப் பார்த்ததும் சற்று பின் நோக்கி சென்றது . ஆனால் , என்ன வேண்டும் ? நீ யார் ?என நான் கேட்டதும் இது நின்னு என்னை பார்க்கும் அதுக்கு பதி ல் சொல்லுகிறமாதிரி ஒரு சவுண்டு கொடுக்கும் யாராவது வந்தால் தெரியாமல் மெதுவாக சென்று விடும். ரெம்ப நேரமா பேசிகிட்டு இருக்கேன். ”

“இது உனக்கு ஓவரா தெரியல...? தேகம் கொண்டு வந்திட்டேன் . ஆனா கீழே பைக்கில இருக்கு .. போகும் போது எடுத்து தரேன்”என்றேன்.

“சரவணா , பிளீஸ்..எனக்கு சாருவும் வேணாம் , ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்... நான் பூனையுடன் பேச வேண்டும் ... நாளைக்கு காலையில கொடு.. பிளீஸ் நாளைக்கு வா... நான் பூனைக்கிட்ட நிறைய பேசணும்...” என சொல்லிக் கொண்டே கிச்சனில் பூனையுடன் பேச தொடங்கினாள்.


  நான் வரும் போது எப்படி சாருவின் தேகத்தை பைக்கில் வைத்து கொண்டு வந்தேனோ அது போலவே , திரும்பினேன். இம்முறை திரும்புகையில் எஸ்.ராவின் ஒசில் பூனை யும் என்னுடன் வந்தது. என் தோழி எப்படி பூனையுடன் பேச ஆசைப்படுகிறாள் . இப்படி தான் எஸ்.ரா. பேசுகிறாரோ ..?என்ற ஐயப்பாட்டுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

9 comments:

Thekkikattan|தெகா said...

:-) ம்ம்ம்.

Rathnavel Natarajan said...

Yes Saravanan. Animals & pets are very much attached to us. We were having a parrot. When I am from Office it will come near & will be in my side for 3 hours. If we are out of town, when we are returning it will come near to us & will raise objection for our absence. The parrot died some 4 months back we are much worried.

geethappriyan said...

நண்பரே நலமா?
எஸ்ராவின் புத்தகம் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

சாருவின் புத்தகம் நீங்கள் படித்துவிட்டீர்களா?
தேகம் புத்தகம் இலைமறைவு காய்மறைவாய் பேசும்,படிக்கும்,எழுதும் வெகுஜன வாசகர்களுக்கானது அல்ல,வீட்டில் வெளியில் கூட வைக்க முடியாதது,படித்தபின்னர் கூட யாராவது ஒத்த சிந்தனை உடைய நண்பருக்கு பரிசளித்துவிடவேண்டியது, இதில் எதுவுமே ஒளிவு மறைவில்லை.இதைவலிய கொண்டுபோய் வெகுஜன வாசகர்களுக்கு அதுவும் பெண்களுக்கு கொடுக்கையில் எதிர்பாராத விளைவுகள் நேரும்.சாருவே அதைத்தான் சொல்கிறார். நீங்கள் முதலில் அதை வாசித்துவிடுங்கள்.பின்னர் முடிவு செய்யுங்கள்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அடடா.. அருமையான பகிர்வு.

குட்டிப்பையா|Kutipaiya said...

:) :)mmm..

MANO நாஞ்சில் மனோ said...

nalla jolly'yaana pathivu....poonaiya kettathaa sollunga ha ha ha ha...

G.M Balasubramaniam said...

Saravanan, I want to share an information with you, just in case you do not already know it.You know dogs are faithful to the masters; but the cats are attached to the places.It is really sad if the pets die when you are attached to them.

Thenammai Lakshmanan said...

அஹா நமக்கும் வளர்ப்புப் பிராணின்னா அலர்ஜிதான்.. ஆனா ஜன்னல் வழியா காக்காக்கு சோறு., பிஸ்கட்., சப்பாத்தி ., சிப்ஸ் எல்லாம் வைச்சா கையில இருக்குறத பிடுங்குற மாதிரி சாப்பிடும்.. என் கணவர் சொன்னபடி ஒரு நாள் அதுக ஜன்னல் வழியா வந்து சாப்பாடு எல்லாத்திலயும் வாயை வச்சவுடன் ஜன்னல் கொக்கியை பர்மணண்டா போட்டு சாத்தி வைச்சிட்டோம்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

எங்க வீட்டுக்கு சாப்பிடுற நேரத்துக்கு ஒரு காக்கா வரும். அதுக்கு நாம சாப்பிடுற எல்லாத்தையும் வைக்கணும். ஒன்ன வச்சிட்டு, ஒன்ன வைகலேனாலும் அந்த காக்கா சாப்பிடாது.

Post a Comment