Thursday, January 20, 2011

பெங்களூர் தந்த தந்தை...





"செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறோம் வயோதிகம் என்ற பெயரில்"
என்ற வரிகளை இதயத்தில் தாங்கினாலும் , என்னிடம் இருந்து இளமை இன்னும் குறைய வில்லை என்று எனக்கு சவாலாக பெங்களூரில் என்னைத் தேடி ஜனவரி மூன்றாம் தேதி காலை பதினோரு மணிக்கு ஆர். ஐ.இ. வாசலில் காத்திருந்து, எனக்கு போன் செய்து ,என்னை அழைத்து சந்திக்க வந்த அந்த பிளாக்கர் யாராக இருக்கும் என நீங்கள் யூகிக்கும் இந்த வேலையில் , என்னை அசரவைத்தவர் எழுபத்து இரண்டு வயதேயான இளைஞர் திரு ஜி.எம்.பால சுப்பிரமணியன் ஆவார்கள். அவர் இருப்பிடம் நான் தங்கியிருந்த பெங்களூர் யுனிவர் சிட்டியில் இருந்து வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும்.

      தன் பேரன் ஆரம்பித்து கொடுத்தான் பிளாக் . எனக்கு முதலில் கமண்டு போட்டவர் உங்கள் மதுரைக்காரர் சீனா என பெருமையாக சொன்னார். பேரனிடம் இருந்து கற்றுக் கொள்வதில் தவறில்லை என அவருக்கு கமண்டு போட்ட சீன அய்யாவிற்கு போன் போட்டேன் , போன் எடுக்க வில்லை. பின் மலை போனில் கிடைத்தார். சென்னையிலிருந்து வைகை மூலம் வருவதாக சொன்னார். இரவு ஜி.எம்.பி.உடன் அதாங்க நம்ம நாயகனுடன் பேசினார்.

      தலை முடி தான் நரைத்துள்ளது , அவரின் இளமையும் துடுக்கான பேச்சும் அப்படியே பதினெட்டு வயது வாலிபனைப் (தருமி) போல இன்றும் இருக்கிறது. ஏதோ பக்கத்து வீட்டு நண்பனைப் போல பேசினார். உங்கள் எழுத்தும் , உங்களுக்கு ஆசிரியர் பணியில் இருக்கும் ஈடுப்பாடுமே என்னை உங்களிடம் ஈர்த்து வந்தது என அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை. இருப்பினும் நீண்ட நாள் நண்பர்கள் போல பழகினோம். சக ஆசிரியர்கள் என்னையும் , அவரையும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இவனை பார்க்க இவ்வளவு பெரியவரா என்று அசந்து பார்த்தனர். இணையம் இணைத்த நட்பு எனக்கு புதிய தந்தையையும் , அவருக்கு ஒரு இளைய மகனையும் தந்துள்ளது.


      ஆர்.ஐ.இ யில் இருவரும் உணவு அருந்தினோம். மிகவும் மகிழ்ந்தார். தனக்காக காத்திருக்கும் தன் மனைவிக்கு போன் செய்து , எனக்காக காத்திருக்க வேண்டாம். நான் இங்கு உணவு அருந்திவிட்டேன் , நீ சாப்பிடவும் என சொல்லி , இன்று நம் வீட்டிற்கு புதிய விருந்தினர் வருவார் என என்னை அன்பால் தன்னுடன் வரவேண்டும் என உணர்த்தினார்.

     ஆர்.ஐ.இ. மூத்த பேராசிரியர் வெங்கடேசன் அவர்களிடம் என் இனிய நண்பரை பற்றி அறிமுகம் செயதேன். அவர் ஆச்சரியத்துடன் இருவருக்கும் இது தான் முதல் சந்திப்பா என கேட்டு உளம் மகிழ்ச்சிக் கொண்டார்.எனக்கு மதியம் அவரை சந்திக்க , அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கொடுத்தார்.

    இருவரும் அவரின் இல்லம் நோக்கி பயணித்தோம். அவர் ரோட்டை ஓடியே கடந்தார். எனக்கு தான் முதுமை தொற்றியுள்ளது என்பதை உணர்ந்தேன். காரைக் குடி மதுரை தொலைவு உள்ள இடம் அவ்ரின் வீடு. இனிமையாக பேசிக்கொண்டே வந்தார். உங்களின் எழுத்து, புகைப்படம் ஆகியவை நீங்கள் வயதானவர் என்று நினைக்க வைத்தது .ஆனால் இவ்வளவு இளமையாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை, என இளைய மகனை விட இளமையாக உள்ளீர்கள் என ஆச்சரியப்பட்டார். தன் எழுத்து , தன் ஆதங்கம் , தன் பயணம், தான் வந்த பாதை என அத்தனையையும் இனிமையாக எடுத்து சொன்னார். அவரின் வீட்டுக்கு பேருந்தில் பயணிக்கும் போது எனக்கு அவரின் மீது பொறாமையை ஏற்படுத்தியது. இந்த வயதில் நாம் இப்படி முகம் தெரியாத ஒருவரை தேடி செல்வோமா என்பது சாத்தியமே இல்லை.
                                                                 

வீட்டில் அவரின் மனைவி அவரை விட எளிமை , தன் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார்.இருவரும் எதோ ஒரு பதினெட்டு வயது வாலிபர்கள் போல உரையாடிக்கொண்டனர். வயது அதிகம் ஆகும் போது அன்பும் அதிகமாகும் என்பதனை நான் பார்த்தேன். தனியாக பஸ் ஏற்றி விட்டேனே எப்படி சென்று திரும்பினாய் என இவர் அவரின் மீது அன்பு பொழிய, அவர் நான் நீங்கள் சாப்பிட்டீங்களோ இல்லீயோ என பயந்தேன் ... இடம் கண்டுபிடித்து இவரை பார்த்துவிட்டு வருவீங்களோ இல்லையோ ...பாவம் அவ்வளவு தூரம் போய் வீணாகி விடக்கூடாது என பயந்தேன் என இருவரும் பகிர்ந்து கொண்டவிதம் என்னை என் மனைவியை ஒரு கணம் நினைக்கத் தூண்டியது.இதுவரை நான் அவளை இப்படி அணுசரனையாக எதையும் கேட்டதில்லையே... என்று குற்றப்படுத்தி பார்க்கச் செய்தது.இவர்கள் தான் இப்படி என்றால் அவரின் மகன் அவருக்கு போன் செய்து ந்ல்லப்படியா அவரை பார்த்துவிட்டு வந்தீர்களா என விசாரித்தார். இது மேலும் அவரின் குடும்பத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது. நாமாக இருந்தால் , ”சாப்பிட்டையா ஏதோ கம்ப்பியூட்டரை தட்டினைய்யா , பொழுதக் கழிச்சிய்யா ... அங்கபோரேன் இங்க போரன்னு உசிரை எடுக்காம படு ..”என திட்டி தீர்த்து இருப்போம் , எனவே இதுவும் என்னை அதிர்ச்சியூட்டியது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைஉணர்த்தியது.


 என் பாட்டியின் முகச்சாயல் அம்மாவுக்கு இருந்தது. என் பாட்டியைப்போலவே மிகவும் ருசியாக சமைத்துக் கொடுத்தார்கள்.





மேலே உள்ள பெயிண்டிங்க் அவர் செய்தது . அவரின் கைவண்ணத்தில் சாமிப்படங்கள் ஆயில் பெயிண்டிங்கில் உயிர் பெற்றிருந்தன. அதுவும் அறுபது வயதிற்கு மேல் தான் இத்தனையையும் கற்று கொண்டு , தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் . மேலே உள்ள பெயிண்டிங்கில் உருவங்கள் நிறைய உள்ளன. கூர்ந்து கவனித்தால் அது புலப்படும். அவருடன் மாலை உணவு அருந்தினேன். அவரின் நினைவாக அவரின் ஓவியங்களில் ஒன்றை எனக்குப் பரிசளித்தார்.அவரின் அன்பில் மயங்கிய நான் அவருடன் அன்று தங்க முடியவில்லை , ஏனெனில் மறுநாள் எனக்கு பரிட்சை இருந்தது எனவே நான் அவரிடம் பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.   என்னை பஸ் ஸ்டாப் வரை வந்து வழி அனுப்பிவைத்தார்.

                       அவர் என்னுடன் உரையாடும் போது எனக்கு பொங்களூர் பிடித்து இருந்தது என்பதை உணர்ந்து , இவ்வூரின் சிரமங்களை எடுத்துரைத்தார். அவரின் சந்திப்பு எனக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது. என் எழுத்து வேகத்தை குறைத்து இன்னும் பயனுள்ள செய்திகளை மட்டும் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியது. எனக்கு பெங்களூரில் ஒரு தந்தை இருக்கிறார் என்பதை நினைத்து பூரிப்படைகிறேன். புகைப்படம் டவுன்லோடு செய்ய இயலவில்லை , ஆகவே நான் இடுகை இட நாட்கள் கடந்துவிட்டன. இருப்பினும் நினைத்துப்பார்த்து எழுதும் போது உள்ள சுகம் தனிதான். அந்த சுகத்தை தந்த பால சுப்பிரமணியம் அவகளுக்கு மீண்டும் அன்புகலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிகள்

பத்மா said...

arumaiyana pakirvu

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அருமை - சந்திப்பு பற்றிய இடுகை அருமை - நான் அவரிடம் அலைபேசியில் பேசிய போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சந்திக்க முயல்கிறேன். நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா

Post a Comment