Saturday, October 2, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -1
        கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சமணர்களின் வரலாற்றை தாங்கி கம்பிரமாக நிற்கும் கீழக் குயில்குடி சமண மலை தன்னுள் புதைத்துள்ள வரலாறு நம்மை பிரமிக்க வைக்கிறது. நான்கு வழிச்சாலை வழியாக  நுழையும் போதே மிடுக்கான தோற்றத்துடன் வெளிப்பட்டு நம்மை ஆர்வமூட்டுக்கிறது. மதுரையிலிருந்து நாகமலை புதுக்கோட்டை செல்லும் வழியில் கீழக்குயில் குடி உள்ளது .மெயின் ரோட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அய்யனார் கோவிலை அடிவாரத்தில் கொண்டு சமண மலை நம்மை வரவேற்கிறது.

        கடம்ப மரம், மருத மரம் , வில்வ மரம் , நாவல் மரம் , ஆல மரம், கருங்கால வேங்கை என அத்தனை புனித மரங்களும் (தல விருட்ச்சங்களும் )  இந்த சமண மலையில் இருந்ததாக, அங்கு வசிக்கும் எழுபத்தைந்து வயதான தங்கச்சாமி சொன்னாலும், தற்போது மருத மரம் , வில்வ மரம்  மட்டமே உள்ளதாக ஆதங்கப் பட்டு கூறுகிறார்.   "அப்பாவி ஜனங்க பிழைப்புக்காக மரங்களின் அருமையும் புனிதமும் தெரியாமலே விறகுக்கு வெட்டி எறிஞ்சுட்டாங்கப்பா .."என்று சொல்லும் போது நமக்கும் கஷ்டமாகத் தான் இருக்கிறது .

     இந்த சமண மலை புராணங்களை  தன்னுள் பொதிந்து வைத்துள்ளதாகச்  சொல்லும் செய்தி இம் மலையின் தொன்மையை எடுத்துரைப்பதாகவே உள்ளது. கைலாயத்திலிருந்து முருகன் தன் காலடியை இம் மலையில் தான் முதன் முதலில் எடுத்து வைத்ததாகவும் ,இம்மலை அவரை தாங்க மறுத்து அதிரவே , அருகில் உள்ள திருப்பரம் குன்றம் மலையில் குடி கொண்டதாகவும் சொல்லும், இவர்கள் மலை உச்சியில் முருகன் பாதம் படித்த இடம் உள்ளதாக நம்பவும் செய்கிறார்கள்.

    இக்கிராமத்தில் உள்ள பாசி ஊரணியில் அர்ஜுனன் ஒற்றை காலில் சிவனை நோக்கி தவமிருந்ததாகவும் கதை சொல்லுகிறார்கள். அதனால் தான் அந்த ஊரணி இன்னும் கோடையிலும் வற்றாமல் உள்ளது என அதிர்ச்சி ஊட்டுகின்றனர்.

       அய்யனார் கோவிலிருந்து வலப்புறமாக செல்லும் சாலையில் கால் கிலோ மீட்டர் சென்றோமானால், இரு சமணர் படுக்கை உள்ளது. சமணர் படுக்கைக்கு செல்ல அழகாக படி வெட்டியுள்ளனர். படி வழியாக சென்றால் அழைத்து செல்லும் குகையில் சுனை இருக்கிறது . மேலும் வவ்வால்கள் கூட்டமாக உள்ளது . அதன் வாடை நம்மை அங்கிருத்து விரட்டிகிறது. குகையின் பாறையில் சமணர் கால சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன. புத்தர் உருவம் மிகவும் பெரியதாக வரைய பட்டுள்ளது. அதன் கீழ் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை எந்த மொழியில் எழுதப் பட்டுள்ளன என்பது தெரிய வில்லை. அதனை விளக்கும் எந்த போர்டும் இல்லை. தொல்லியல் துறையின் இப்பகுதி தொல்லியல் துறைக்கு சொந்தமானது இதை சேதப்படுத்தக் கூடாது என்ற போர்டும் எழுத்துக்களை இழந்து , துருப்பிடித்து உள்ளது. அதன் அருமை , அதன் வரலாறு தெரியாமலே வெளியில் நின்றோம்.அதற்கும் நமக்கும் கால இடைவெளி இருப்பது,  வெறுமையில் உணர்ந்தேன். அதன் அமைதியும் , இயற்கையின் நறுமணமும் நம்மை அதன் வரலாற்றை கற்பனை படுத்தி பார்க்கச் செய்கிறது . அதனை ஓட்டி பெரிய பாறை உள்ளது. அதனை அடுத்து மற்றொரு குகை உள்ளது.அங்கு செல்வது கடினம் .பாறைகள் கரடு முரடாக உள்ளன. ஒருபுறம் மிகவும் சரிவாக உள்ளது. ஏறுவது கடினம்.  அக்குகையிலும் சமணர்கள் இருந்து தியானம் செய்ததாக ஆடு மேய்க்கும் சிறுவன் காசி கூறினான்.

                    யாரிடம் இதை பற்றி விரிவாகக் கேட்பது என புலம்பியபடி அய்யனார் கோவிலின் அரச மரத்தடியில் உள்ள தேநீர் கடைக்கு வந்தோம். அங்கு அரிச்சந்திரன் என்பவரை பெரியவர் காசி அறிமுக படுத்தினார். "சார்...இவரு பேரு அரிச்சந்திரன் இவரு கிட்ட கேளுங்க ..இந்த மலையின் வரலாற்றை அருமையா கூறுவாரு...". நான் என்னை பற்றி அறிமுகப்படுத்தி கொண்டு , இதன் தொன்மை , அந்த கல்வெட்டுக்களில் பொறித்த எழுத்துக்கள் என்ன   கூறுகின்றன ?என கேட்ட தாமதத்தில் "சாமி , இந்த மாதிரி நிறைய பேரு இங்க வந்திட்டு போறாங்க ...இது ஆயிரத்து இரண்டாவது பேரு...இது எங்க மலை , இதை காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலை, நாங்க பாதுகாத்தோம் , குவாரிக்கு மலையை உடைக்க லீசுக்கு விட்டுட்டாங்க ... மொராசிதேசாய் காலம் ..நாங்க போராடினோம்... பலபேர் சிறை சாலைக்கு சென்றோம் ..நானும் சென்றேன் ..பலர் உயிர் நீத்து காப்பாத்தப்பட்டது இம்மலை.."என பொரிந்து தள்ளினார். "எல்லாம் இப்ப நடந்தது சாமி...இவ்வளவு பெரிய மலைக்கு ஒரேஒரு வாட்ச்மேன் போட்டுள்ளது தொல்லியல் துறை ..!"என நக்கலாக சிரித்தார்.

      மலை அமைதியாகத் தான் இருப்பதாக நினைத்தாலும் , அது பேசத்தான் செய்கிறது. மலை தனிமையில் உறங்குவதாக நினைத்தேன் , ஆனால் அது ஒரு கிராமத்தையே உறவாக வைத்திருப்பது மலைப்பைத் தருகிறது.

  சமணர்களின் இருபத்திநான்காவது தீர்த்தங்கம் . அதாவது சமணப் பள்ளி. தென்னிந்தியாவின் சமணப் பல்கலைக் கழகமாக  இந்த சமண மலை செயல் பட்டுள்ளது. இங்கு ஆறு சமணப் படுக்கைகள் உள்ளன. சில ஆண்டுகள் முன் ஆறாவது படுக்கை இடி தாக்கி சிதைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். எட்டு குன்றங்களின் தலைமை  பீடமாக இந்த சமண மலை இருந்துள்ளது . சமணர்கள் மதுரையில் தங்கள் மதத்தை பரப்பியதற்கான தடங்கள் திருப்பரங்குன்றம் மலை, யானை மலை, பெருமாள் மலை, அழகர் மலை , நாக மலை என அத்தனை மலைகளிலும் உள்ளன.

       திருத்தக்க தேவர் இந்த சமண பள்ளியை சேர்ந்தவர் என்றும் , இவர் மதுரையில் சமண மதத்தை பரப்பியவர் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள மலையில் பொறிக்கப்பட்டுள்ள விபரங்கள் இம்மலையின் செயல்பாட்டை தெளிவாக விளக்குகின்றன. இந்த கல்வெட்டின் எழுத்துக்களை தற்கால தமிழில் பேராசிரியர் வேதாச்சலம் 'என் குன்றம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் என்கிறார் ஐம்பத்து ஆறு வயதாகும் அரிச்சந்திரன். (இப்புத்தகத்தை தேடிக் கொண்டு இருக்கிறேன்)

      இங்குள்ள கல்வெட்டில் ,"இந்த சமணப்பள்ளியில் பயிற்சி பெற்ற வடக்கே சமண மதம் பரப்ப சென்ற ஒரு சமணர் கர்நாடகாவில் செல்லும் வழியில் பாம்பு கடித்து இறந்தான்"என்ற குறிப்பு உள்ளது .

  இம்மலையில் ஒரு சோக வரலாறு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. மலை அடிவாரத்தில் காற்று அருமையாக வீசியது. காற்றை சுவாசித்துக் கொண்டே கதை கேட்பது மிகவும் அருமை. டீக்கடையில் டீஅருந்திக் கொண்டு இயற்கையை ரசித்தவாறு பேசுவது டீயை விட இனிமையாக இருந்தது. நீங்களும் டீ குடித்து காத்திருக்கவும் . (மலை இன்னும் கதை பேசும் )

16 comments:

குமரன் (Kumaran) said...

அருமை தலைமையாசிரியர் ஐயா. சென்று பார்த்து எழுதுகிறீர்கள். ஆய்வு கட்டுரையாக இல்லாவிட்டாலும் அனுபவக் கட்டுரையாக இருக்கிறது.

அன்பரசன் said...

Super Sir..

நேசமித்ரன். said...

சரவணன் மிக நன்று !

தரவுகள் சில

http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=17&fldrID=1
http://kalvetu.blogspot.com/2009/11/blog-post_9799.html

http://groups.google.com/group/minTamil/msg/93030b3bad67adcc?pli=1

தொடரட்டும் பயணம்

ஆசிரியரே தட்டச்சுப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் மலிந்திருக்கின்றன தவிர்த்தல் மகிழ்வளிக்கும் ,இடுகையின் தரம் கூடும்

சிவராம்குமார் said...

நல்ல கட்டுரை சரவணன்!

ஆயிரத்தில் ஒருவன் said...

யானை மலையில் சமன்ர்களின் கல்வெட்டுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் கீழகுயில்குடியில் சமணர்மலை உங்கள் பதிவு மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். மலை இன்னும் பேசட்டும் காத்திருக்கிறேன். (மதுரையின் புதைந்த வரலாறை உங்கள் பதிவின் மூலம் உலகில் நிறைய பேர் பார்க்க செய்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்)

Ramesh said...

Good post Saravara

மோகன்ஜி said...

நல்ல கட்டுரை சரவணன் சார்! இந்த இடம் குறித்து இப்போது தான் கேள்விப் படுகிறேன்.தகவலுக்கு நன்றி

மாதேவி said...

"சமணர்மலை" நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

மதுரை சரவணன் said...

நேசமித்திரன் அண்ணா சுட்டிகளுக்கு நன்றி. தொடர்ந்து மெருகேற்ற உங்களின் ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன. மிக்க மகிழ்ச்சி.

Veli said...

நல்ல பதிவு, தொடரட்டும் உங்கள் முயற்சி

வஜ்ரா said...

//
குகையின் பாறையில் சமணர் கால சிற்ப்பங்கள் வரையப்பட்டுள்ளன. புத்தர் உருவம் மிகவும் பெரியதாக வரைய பட்டுள்ளது.
//

சமணர்கள் என்றால் ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் மஹாவீரரை வரைவார்கள். செதுக்குவார்கள். அல்லது தீர்த்தங்கரர் என்று அழைக்கப்படும் யாரையாவது செதுக்கியிருக்கலாம். மகாவீரரும் ஒரு தீர்த்தங்கரர்.

புத்தரை ஜெயினர்கள் ஏற்பதில்லை.

மதுரை சரவணன் said...

thank u vajra. its true . its one of the jain saint.

geethappriyan said...

மஹாபலிபுரம் போலவே மிக அழகான சிற்பங்கள் , புகைப்படங்களுக்கும் கட்டுரைக்கும் நன்றி

geethappriyan said...

நண்பரே ப்ரொஃபைல் போட்டோவுக்கும் இந்த போட்டோவுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது,இரண்டாம் பதிவில் சஃபாரி போட்டவர் யார்?

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

அழகான கட்டுரை - சமணர் மலை பற்றி அருமையான கட்டுரை. நாம் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்த முறை இவ்வாறு செல்லும் போது நானும் வருகிறேன் சரவணன்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Kannan said...

வணக்கம்... நாகமலை என்பதற்கான சான்றுகள் பல இடங்களில் வலைத் தளங்களில் கிடைக்கின்றன... ஆனால் புதுக்கோட்டை எங்கிருந்து வந்து நாகமலையுடன் இணைந்தது... ஏதாவது கோட்டைகள் இங்கே உள்ளனவா... நாகமலையுடன் இணைந்து விளங்கும் புதுக்கோட்டை பற்றி விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மேலும் தடாதகை நாச்சியார் கோவில் எங்கு உள்ளது...

Post a Comment