Monday, October 4, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -2

      மலை தன் வரலாறு கூறுக என கட்டுரை எழுத சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது . அது எவ்வளவு அபத்தமானது என்பது இப்போது புரிகிறது. வெறும் படத்தில் மலையைக் காட்டி அதன் வரலாற்றை எழுதச் சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு..! கிட்ட சென்று மலையைப் பார்த்த என்னாலே மலையை சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. பின் எப்படி ...? கற்பனைக் கட்டுரை என்று சொல்லியே கற்பனையே செய்ய முடியாத ஒன்றை இத்தனை நாள் செய்யச் சொல்லியிருப்பதை நினைத்து வருந்துகிறேன். 


      மணாவின்  தமிழகத்தடங்கள் புத்தகத்தில் கழுவேற்றம் பற்றி படித்தது எனக்கு நினைவில் வந்தது. சமணர்களை எதிர்த்த பாண்டியன் வரலாறுக்கும் இந்த மலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று கேட்டேன். விரிவாக கூறினார். நம்ப முடிய வில்லை இருந்தாலும் நம்பித் தான் ஆக வேண்டியுள்ளது.

      பாண்டிய மன்னர்கள் காலத்தில் சமண சமயம் மதுரையில் பிரபலமடைந்தது. சைவ மதத்தை சேர்ந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சியும் , பொறாமையும் கொண்டனர். சமண மதம் தழைத்து வருவதை கண்ட கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசி அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

     எட்டாம் நூற்றாண்டில் இந்த மலையில் நாற்பத்திஎட்டு தீர்தங்கர்கள் (சமண குருக்கள் )   இருந்ததாகவும் , அவர்களை தழுவி எட்டாயிரம் சீடர்கள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். இப்படி சமணம் வளர்ந்த நிலையில் , கூன் பாண்டியன் வெப்பு நோயால் அவதிபட்டான். அரண்மனை வைத்தியர்களால் குணப்படுத்த  முடிய வில்லை. மன்னன் குணம் பெற ஆன்மிக வழியில் சமண முனிவர்களை நாடினார். சமண குருக்களும் மூலிகை வைத்தியம் மற்றும் தியானம் மூலம் மன்னனை குணப்படுத்த முயற்சி செய்தனர்.

     சமயம் பார்த்த மங்கயர்க்கரசி அமைச்சர் குலச்சிரையர் மூலம் , திருஞான சம்பந்தருக்கு தூது அனுப்பினார். சமயம் பார்த்து பழி தீர்க்க நினைத்த அவரும்
விரைந்தார். தானும் வைத்தியம் பார்த்து குணப்படுத்துவதாக கூறினார். அப்படி தன்னால் உங்கள் வெப்பு நோய் குணமானால் , சமணர்கள் அனைவரையும் கழுவேற்றம் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

       மன்னனின் உடல் இரண்டாக பிரிக்கப்பட்டு , ஒருபுறம் அதாவது வலப்புறம் சைவ சமயம் சார்ந்தவர்களால் வைத்தியம் பார்ப்பது எனவும் , மறுபுறம் அதாவது இடபுறம் சமண குருக்களால் வைத்தியம் பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு , வைத்தியம் ஆராம்பமாயிற்று . என்ன நடந்திருக்கும் ...?

        திருஞான சம்பந்தர் பதிகம் பாடி , திருநீறு பூசி , வலது பக்கம் நோய் குணமாக , இடது பக்கம் வலப்பக்கத்தின் குளிர்ச்சி தங்காமல் வெப்பு அதிகமாக , மன்னன் திருஞான சம்பந்தரை
இடது பக்கமும் வைத்தியம் பார்க்க சொல்ல , இடது பக்கமும் திருநீறு பூசி , நோயை முற்றிலும் குணமாக்கினார். பின் என்ன நடந்திருக்கும் ..?

           மாணா தமிழகத்  தடங்களில் சொல்லியிருப்பதில் சில கருத்துக்கள் மாறுபட்டாலும் , இவை உண்மைதான் என்பது ஒரு ஒப்பிட்டில் யூகிக்க முடிகிறது.

            நோயை குணப்படுத்த முடியாத சமண குருமார்கள் நாற்பத்தி எட்டு பேரும், இந்த     
மலையின் உச்சியில் கழுவேற்றப்பட்டனர். கழுவேற்றம் நடந்த மலை உச்சி இரத்த நிறத்தில் இருக்கிறது. இப்போது அந்த இடத்தின் அருகில் அய்யனார் கோவில் தீப விளக்கு  உள்ளது. மலையின் உச்சிப் பகுதி அதுவே ஆகும்.

            மீதம் உள்ள எட்டாயிரம் சமண மதத்தைப் பின்பற்றியவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள தற்போது சாமநத்தம் என்று அழைக்கப்படும் இடத்தில் கழுவேற்றம் செய்ய பட்டனர்.இது மதுரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவாகும். விரைவில் அப்பகுதிக்கும் சென்று பார்த்து எழுதுகிறேன்.

         சமணர் ரத்தம் சிந்திய அப்பகுதி , மதுரை தமிழில் சாம ரத்தம் என்று அழைக்கப்பட்டு, அதுவே அவரச உலகில்( சாம ரத்தம் வேகமாக அழைத்து பாருங்கள் ) சாமநத்தம் என்று அழைக்கப்படுகிறது. மாணா இதை சாம்பல் நத்தம் என்பது தான் சுருங்கி சாமநத்தம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார். எது பொருத்தம் என்பது வரலாற்று ஆசிரியர்கள்தான் கூறவேண்டும். அதே போல் சமணர்களுக்கும் , சைவ சமயத்தவருக்கும் சமய வாதம் நடை பெற்றதாகவும் , சாந்த குணம் படைத்த சமணர்கள் அவர்களை வெல்ல முடியாததால் கழுவேற்றம் செய்யப்பட்டார்கள் என்கிறார்.


         இது பற்றி குறிப்புகள் பெரிய புராணத்தில் உள்ளளன. சித்திரை திருவிழாவில் ஆறாவது நாள் கழுவேற்றம் ஆகும்.

  இந்த சமண மலையில் சில பாண்டிய மன்னார்கள் நோன்பு இருந்து உடலை வருத்தி இறந்து போனதாகவும் சிலர் கூறுகின்றனர். (உடல் வருத்தி இறந்த மன்னன் உக்கிர பாண்டியன் எனவும் சொல்லுகின்றனர். )

       அய்யனார் கோவில் இடப்புறம் மலை ஏறி செல்ல படிகள் அழகாக வெட்டப்பட்டுள்ளன. படிகள் இருபுறமும் கம்பிகள் பிடிமானமாக உள்ளது. மலை செங்குத்தாக செல்கிறது. மூச்சு வாங்குகிறது . கொஞ்சம் இளைப்பாற கம்பியை பிடித்து நிற்கிறேன். தூர உருவங்கள் ஊர்வது  தெரிகிறது. காற்று அருமையாக வீசி என் வியர்வையை காணமல் போகச் செய்கிறது. மலையில் இருந்து சரிந்து விழுந்தால் நேராக குளத்தில் போய் விழலாம். குளத்தில் நான்கைந்து வாலிபர்கள் குதித்து விளையாடுகின்றனர். நீந்துகின்றனர். மலையின் மேல் இருந்து நீர் ஒழுகி வருகிறது . அது  நேராக இந்த குளத்தில் விழுகிறது. வியப்பாக இருக்கிறது. என்னுடன் வந்த மற்றுமொரு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் என்னை வியப்பில் பார்கிறார். "உங்கள் ஆர்வம் என்னை ஆச்சரியபடுத்துகிறது" என்று என்னையே வியந்து பார்கிறார். அவரின் பார்வை என்னை கூசச் செய்தது . அவரையும் போஸ் கொடுக்க சொல்லி ஒரு புகைப்படம் எடுத்து சமாதனப் படுத்தினேன் . 

     மலை மீது  சில தீர்த்தங்கர்கள் உருவம்  செதுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏதோ பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது. "சரவணன்....இங்க வாங்க .." என அழைத்த ரவியை நோக்கி சென்றேன். இன்னும் வியப்பு காத்திருகிறது. மலை தன் வரலாற்றை கூறுகிறது அப்போது புரிந்தது மாணவர்களிடன் அவர்களின் கற்பனைக்கு எட்டாத விசயங்களை எழுத செய்வது அபத்தம் ஆகும் .

     ரவியை நோக்கி பயணம் ....காற்று என்னை தள்ளிக் கொண்டு அவர் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றது. காற்றின் அருமை மலையில் தான் தெரிகிறது . நான் இப்போது மலையின் உச்சியில் இருந்தாலும் பறந்து கொண்டு இருந்தேன். மலையின் பரவசம் அதனை தொட்டு , மிதித்து , அதன் மீது பயணிப்பவர்களுக்கு தான் தெரியும். யானை மீது சவாரி செய்வது போல் உணர்ந்தேன். மிதக்கிறேன் .  எந்தன் பரவசத்தை எப்படி சொல்லுவது....? விவரிக்க வார்த்தை இல்லை . அப்போது என் பார்வை மலையின் ஒரு இடத்தில் குவிந்தது.

         (மலை தொடர்ந்து பேசும் )
        
  

9 comments:

நேசமித்ரன் said...

இனி போயிட்டே இருங்க .. இதேதான் வாத்யாரே!

மனோவியம் said...

அருமையான சரித்திர குறிப்புக்கள் ஐயா. தொடரட்டும் உங்கள் சேவை எவ்வளவோ சரித்திர குறிப்புக்கள் .இன்னும் மக்களை சென்றடையவில்லை. உங்களின் முயற்சி பாராட்டப்படவேண்டும் .வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

ஆனந்தி.. said...

நானும் மதுரை தான்! கீழக்குயில் குடி எங்களுக்கு பக்கம் தான்..நிறைய சொல்லி தான் இந்த மலை பற்றி கேள்வி பட்டுருக்கேன்..ஆனால் போனது கிடையாது..போகணும் நினைக்கும்போதெல்லாம் லேடீஸ் அங்கலாம் போகவேணாம்..அந்த மலையை நாசமாக்கிட்டு இருக்காங்க சமூக விரோதிகள் சிலர் னு பயமுறுத்துறாங்க..உண்மையா சரவணன் சார்?

manasu said...

முருகன் பாதமும் மயில் கால் தடமும் காண்பித்திருக்கிறார்கள் எங்கள் சிறுவயதில்.திருப்பரங்குன்றம் மலையை விட சமணர்மலை உயரமாய் இருந்ததாகவும் அதனால் முருகன் மயிலோடு வந்து அமர்ந்து அதன் உயரத்தை குறைத்ததாகவும் சொல்லப்பட்டது. அப்போது படிகளுக்கு கைபிடி, தண்ணீர் இருக்குமிடத்தில் இரும்பு க்ரில் எல்லாம் இல்லை.

geethappriyan said...

அருமையான் இரண்டாம் பாக பகிர்வு,நன்றி

குட்டிப்பையா|Kutipaiya said...

nalla pagirvu saravanan..thodarungal..

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

கட்டுரை தொடரட்டும் - ஒரு ஆய்வு நூலாக மலரட்டும். எழுதும் நடை நன்று - சிறு சிறு எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும். தலைமை ஆசிரியர் அல்லவா ?

இன்பச் சுற்றுலாவாகச் சென்றீர்களா ? நாம் ஏன் அடுத்த சந்திப்பு அங்கு வைத்துக் கொள்ளக் கூடாது ?

ந்ல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

good one. thanks.

Vivek said...

http://vivekranjannema.blogspot.in/

Post a Comment