ரவீந்திர நாத் தாகூர் அவர்களின் நூற்றி ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக , இந்திய ரயில்வே , ஒன்பது மே அன்று ஹவுராவிலிருந்து , தாகூர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தாங்கிய இரயிலை , இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கொடியசைக்க இயக்கியது. அந்த இரயில் மதுரையை ஒன்பது அக்டோபர் அன்று வந்தடைந்தது.
இரயிலை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் எம் பள்ளி மாணவர்களின் புகைப்படம்.
இரயிலில் கண்காட்சியை பார்வையிடும் எம் பள்ளி மாணவர்கள்.
அந்த இரயிலை பார்க்க திட்டம் தீட்டி , என் பள்ளி செயலர் திரு.பி . சௌந்தர பாண்டியன் அவர்களிடம் அனுமதி பெற்று , திங்கள் பதினொன்று காலை மதுரை ரயில்வே நிலையத்தின் எட்டாவது பிளாட்பாரத்தை நோக்கி, எம் பள்ளியின் நான்காவது, ஐந்தாம் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டோம் . என்னையும் சேர்த்து ஐந்து ஆசிரியர்கள் பள்ளி பேருந்தில் சென்றோம். வெயில் வாட்டினாலும் , தீபாவளி முன்னிட்டு மதுரை அதிகாமான மக்களை சுமந்தது , தன் அழகை வெளிப்படுத்தியது.
ரயில் நிலையம் இறங்கியவுடன் பாதி மாணவர்கள் நான் இன்னும் ரயிலையே நிஜத்தில் பார்த்தது இல்லை என்று கூறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும் , அந்த வாய்ப்பை இன்று நாம் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மன மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இரயிலில் குளிர்சாதன வசதி இருக்கிறதா என ஆச்சரியம் வேறு. குளு குளு பெட்டியில் தாகூரின் நினைவுகளில் மனக் குளிர்ச்சி அடைந்தனர் மாணவர்கள்.
குரு தேவ என்று அழைக்கப்பட்ட தாகூர் கொல்கத்தாவில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தி ஒன்றில் மே எழாம் நாள் பிறந்தார். எட்டு வயதில் கவிதை புனைந்திருந்த
தாகூர் , தனது பதினாறாவது வயதில் முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டார்.
இவரது தலை சிறந்த படைப்புகள் என்பன கீதாஞ்சலி, கோரா , காரே-பிரே ஆகும்.
இரண்டு நாடுகளின் தேசிய கீதத்தை இயற்றிய தாகூரின் வாழ்வை விளக்கும் என் பள்ளி ஆசிரியை .
தாகூரின் ஓவியங்களுள் ஒன்று.
நம் தேசிய கீதமான 'ஜன கன மன' மற்றும் வங்காள தேசத்தின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பங்களா ' ஆகிய இரண்டும் தாகூரால் இயற்றப்பட்டவை.
ஆயிரத்து தொள்ளாயிரத்து பதிமூன்றாம் ஆண்டில் நோபல் பரிசை பெற்றார். நோபல் பரிசை பெற்றதில் முதல் ஐரோப்பியரல்லாதவர் என்ற சிறப்பும் உண்டு . ஆயிரத்திற்கு
மேற்பட்ட கவிதைகள், எட்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இருபதிற்கு மேற்பட்ட நாடகங்கள், எட்டு நாவல்கள் இவர் எழுதியவைகளாகும் .
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதில் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் நடைபெற்ற விவாதத்தில் தன் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க தேவை இல்லாத அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இது அவரின் அறிவு திறத்திற்கு சான்றாகும் .
தாகூரின் ஓவியத்தை பார்வையிடும் என்பள்ளி மாணவர்கள் .
தாகூரின் ஓவியத்தில் என்னைக் கவர்ந்தது இதோ....
தாகூர் பன்முக புலமை பெற்று விளங்கினார். கவிஞர் , நாடக ஆசிரியர், ஓவியர், இசைக் கலைஞர் என்று திகழ்ந்த அவரின் வாழ்க்கை என் மாணவர்களுக்கு பல துறைகளில் சாதிக்கலாம் என்ற ஊக்கத்தை கொடுத்தது. அத்துடன் வெளியே வந்ததும் ரயில்வேயின் எச்சரிக்கை படம் மற்றும் கண்காட்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் தலைமை ஆசிரியர்.
காந்தியுடன் தாகூர்.
பெட்டி ஒன்றில் அவரின் வாழ்க்கை, சாந்தி நிகேதன் , ஸ்ரீ நிகேதன் பற்றி விளக்கும் படங்கள் இருந்தன.
இரண்டாவது பெட்டியில் பாடல்கள் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.
மூன்றாவது பெட்டியில் சிறு கதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் இடம் பெற்று இருந்தன.
நான்காவது பெட்டியில் ஓவியங்கள் கண்களை கவர்ந்தன.
ஐந்தாவது பெட்டியில் அவரின் இறுதி பயணம் குறித்து விளக்கப்பட்டு இருந்தது.
மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த இந்த ரயிலை ஏற்பாடு செய்து கொடுத்த ரயில்வே துறைக்கு எம் பள்ளி சார்பாக வாழ்த்துக்கள். இன்று ரயில் ராமேஸ்வரம் அடைந்துள்ளது.