Monday, May 31, 2010

தவறுக்கு வருந்துகிறேன்....

  மிகவும் வருந்துகிறேன். தேவையில்லாத பிரச்சனையில் தலையிட்டு ஏதோ அதிகபிரசிங்கி மாதிரி நாலு கமண்டு போட்டு , நடுநிலைமை வாதிமாதிரி , பதிவுலகில் சண்டை வேண்டாம் நமக்கு அவர்களின் எழுத்துக்கள் தான் தேவை அவர்கள் திருந்தி அல்லது தவறை உணர்ந்து இனி நல்ல பதிவை தருவார்கள் என்று சொன்னது தப்பா போச்சு .

     ஏதோ நாலு பதிவு போட்டமா ,பத்து கமண்டு வந்துச்சா , ஓட்டு விழுந்துச்சா , சந்தோசமா நாளை என்ன எழுதுவது என்று சிந்தித்தோம , நாளை என்ன பாடம் நடத்த வேண்டும்   என்று யோசனை செய்தோமா என்பதை விடுத்து , ஒன்றும்  தெரியாத விசயத்தில் ஏன் தலையை நுழைக்க வேண்டும் .?

     உனக்கும் பதிவுலக தோழர்களுக்கும்,தோழிகளுக்கும்  என்ன சம்பந்தம் ..? யார் அடித்தால் என்ன ...?கொச்சையாக , விரசமாக திட்டி கொண்டால் என்ன ..? நீ என்ன நாயா
நியாயம் கேட்க ...? நாய் கூட இரண்டு நாய் சண்டை போட்டால் குறைத்து ஊரை கூட்டி  மனிதனை கொண்டு விரட்டி , சண்டையை  விலக்கி விடும்...!

    நாயே உன்னையும் ஏதோ ஒரு கோஷ்டியில் சேர்த்து விட்டு , உன்  பலோவர் லிஸ்ட் இருந்து ஒருவர் விலகி விட்டாரே .... தெரிய வில்லையா...?

      தற்போது புலம்பி என்ன பயன் ....? இங்கு மனித தர்மம் , மனித நேயம் , மனிதாபி மானம் என்பதெல்லாம் செத்து சாம்பலாகிவிட்ட பின் அதன் விபூதியை அள்ளி நெற்றியில் பூசி கொண்டு களத்தில் இறங்கினால் ,இருக்கும் பலோவர்களையும் இழப்பாய் ..!
    இனியாவது தகவல் சொன்னோமா  , தகவல்களை படித்து கமண்டு மட்டும் நன்று , அருமை , வாழ்த்துக்கள், வளர்க, டமிழ் வாழ்க , என கும்மி அடித்து செல்ல பழகிகொள் .

      தவறுக்கு வருந்துகிறேன்....எனக்கு தெரிந்த தோழியோ, தோழனோ என்னை மன்னித்து விடுங்கள் இது போன்ற விசயங்களுக்கு இனி கமண்டு போடமாட்டேன் மாட்டேன்...இனி நான் உங்களை பாலோ பண்றேன்.


     எனக்கு  மட்டும் அல்ல இது எல்லாருக்கும் பாடம் ...பாடம் நடத்தும் எனக்கே பாடம் கற்று  தந்த உங்களுக்கு என்றும் நன்றி கடமை பட்டுள்ளேன் .

      மீண்டும் மனம் வருந்துகிறேன் என்னை நினைத்து. ...!






  
  

.

Sunday, May 30, 2010

நாங்கள் வடித்த கண்ணீர். ..!




மரணத்தின் விளிம்பில்
நாட்கள் எண்ணுகிறோம் ...

எங்களோடு இருந்த ...
வேம்பும், பிலாவும்
அரசும் , ஆலமரமும்
அல்ப ஆயுளில்
உயிர் விட ....
எஞ்சி இருக்கும் நாங்கள் ...
அடையாளம் காட்டவே
பிளாட் விறபனைக்கு ...!

எதிரே நீங்கள் பார்க்கும் 
நீர்... 
கண்மாய் நீர் அல்ல ...
நாங்கள் வடித்த கண்ணீர். ..!

மானுடன் திருத்த மாட்டானா   
என நித்தம் நாங்கள் 
அழும் குரல் ...
 வறண்ட கற்றாய் 
அவனை வாட்டி 
எடுத்தாலும் ...
காட்டை அழித்தது 
காசை மட்டும் பார்க்கிறான் ....
இன்றைய சில்லரைகள்
நாளைய கல்லறைகள் 
என்பது புரியாமல்...! 

இன்று அழிந்த 
காடுகள் நாடுகளாகும் 
நாடும் நாளைய 
பாலைவன சுடுகாடாய் 
நீர் இன்றி 
நிலத்தடி நீரும் வற்றி 
அனல் காற்றில் 
வெம்பிய உடலில் 
உயிர் போகும் தருவாயில் 
எங்களை போலவே  
அடையாளம் காட்டப்படுவான் 
தனக்கு தானே 
சவக் குழியை தோண்டியவன் இவன் என்று...!

Friday, May 28, 2010

காற்றும் ,நீரும்



இதற்கு அடுத்த சந்ததிக்கு
இந்த கண்மாயும்
காட்ட இருக்காது ...!

அக்கா ...
நாம் வளரும் வரையிலாவது
இந்நீர் குறையாமல் இருக்குமா...!
தங்கையே ...
இன்னும் மனிதன்
மனம் மாறாமல்
அழுக்கு குறையாமல்
இருப்பானானால்  ....
நாம் வளரும் முன்னே
இந்த கால் வைக்கும் அளவு
தண்ணீர் வற்றிவிடும் ...!

ஆறு , ஏரி , குளம்
அத்தனையும்
ஏட்டில் மட்டும் படிக்கும்
கற்பனை கருத்தாகி விடும் ..!

அக்கா...
கம்மாயில் குளிக்கத்தான்
முடியவில்லை ...
காலாவது நனைத்து விடு ...
நாளை சரித்திரத்தில்
நாமும் கற்பனை கதை
சொல்லலாம்...!

தங்கையே ...
வயல்கள் வீடுகளாகி
பூமி தாயின்
உச்சி முதல் பாதம் வரை
முடிந்தளவு துளையிட்டு
இரத்தத்தை தண்ணீராய்
உறிஞ்சினால் ...
பூமி வறண்டு தானே போகும் ...!

அக்கா ...
அது மட்டுமா ...
பிளாஸ்டிக்
வீதி தோறும் பரப்பி ...
மண்ணின்
உயிர் துளையை ...
அடைத்து
உயிர் துடிப்பை நிறுத்தும்
நம் மனித மனம் மாறவில்லை
நீர் எப்படி உள் சென்று
நிலத்தடி நீராய் கிடைக்கும் ...!

தங்கையே ...
காற்றும் ,நீரும்
கடவுளாகி ....
நான்காம் உலகப்போருக்கு
எமனாகும் மனித செயல்
நிறுத்த....
 நாம் இருவரும் கை கோர்ப்போம்
சுற்றுபுறம் காப்போம் ....
நெகிழி தவிர்ப்போம் ....
நாளை சந்ததிக்கு நாமே
முன் உதாரணமாய் இருப்போம் ...!

  


நவீன விவசாயம்



வயல்களின் நடுவில்
வீடுகளின் வெள்ளாமை !

------------------------------------------

Thursday, May 27, 2010

காதலும் , கவிதையும்


காதலிப்பவர் அனைவரும்
கவிதை எழுதுவதில்லை ...
கவிதை எழுதும் அனைவரும்
காதலிப்பதில்லை ...
எனக்கு
காதலும் , கவிதையும்
கை கூடியுள்ளது...
இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ...
ஒவ்வொரு நிமிடமும் என்னோடு இருக்கிறாள் ..
அவள் என்னை விட்டு பிரிந்ததும் இல்லை ...
நான் அவளை ஒருநாளும் மறந்ததும்  இல்லை ...
என் கரம் பிடித்து
வாழ்வை ரசித்து வாழ கற்றுத்தந்தவள் ...
உலகம் உணரச் செய்தவள்...
உலகையும் என்னையும் இணைத்தவள்
அவள் எதிலும் இளைத்தவள் அல்ல ...
என் அன்னை
என்னை பெற்று எடுத்தபோதே..
என்னோடு ஓட்டிக்கொண்டவள் ...
அவள் கொஞ்சும் மொழி அழகு
தொடை அழகு...
நடை அழகு...
என்றும் என்னை ஆசிர்வதிப்பவள் ...
சரஸ்வதி  வீட்டில் குடி இருப்பவள் ...
என் காதலி அவளே
தமிழே ...
செம் மொழி தந்தவளே
தாய் மொழியே ...!
தமிழ் என்னோடு இருப்பதால் தான்
காதலும் கவிதையும்
எனக்கு கை கூடுகிறது ..!

Wednesday, May 26, 2010

விடியல்

விடியல்
 இருளின் கடைசி மூச்சில்
பிறக்கிறது ...!

புரச்சியாளனின்  ஒவ்வொரு மூச்சும்
விடியலை நோக்கி பயணிக்கிறது !

   பயணிக்கும் பாதசாரிகளின்
வருகையில் தான்
நடை மேடை ஓர பிச்சை காரனின்
சுவாசமே நடை போடுகிறது
என்றுமே விடியாமல்...!

விடியும்
விடியல் எல்லாம்
விடியலாய் அமைந்தால்
வீதி தோறும்
விண்மீன் குவியலாய்
ஒளி வீசி ...
பொதுவுடைமை
ஜொலிக்குமே...
ஜனநாயகம்
நிலவாய் வந்து
விடியும் விடியளுக்கெல்லாம்
வழி காட்டுமே...
நடை பாதை ஓரம்
நானும் நீயும்
ஒன்றாய் படுத்து
ஒன்றாய் நடந்து
சமமாய் வாழ்வோம் ...!

இந்தியாவில் மட்டும்
இந்தியன் வாழ்வில்
நட்ச்சத்திரம் மின்னும்
நிலவு நகைக்கும்
ஒளி மங்கி ...
இரவு மட்டும்
நீடிக்கும் ...
விடியல் மட்டும்
மாறாமல் ....
என்றுமே விடியாமல் ...
என்னென்றால்
கனவு காண்கிறோம் ...
கனவாகி போன விடியலை
எண்ணி எண்ணி ...!
விடியும் ..
நேற்று போல்
அல்லாமல் ...
இந்தியாவின் தென்கோடி முனையில் ...
ஒவ்வொரு இந்தியனும்
விடியலை தேடி ...
இருளில் பதுங்கி
முகங்கள் தெரியாமல்...
விடியல்
இவன் கண்ணை மறைத்தது போல்
மேகம் மறைத்து விட்டது
என்று சொல்லியே ....
நித்தம் ஏமாந்தவனாய்  ...
உன்னையும் என்னையும் போல் ...!

Friday, May 21, 2010

தேர்வு முறையில் மாற்றம் தேவை ...!

     தமிழகத்தில் தேர்வு முறையில் மாற்றம் வரவேண்டும் என அனைத்து கல்வியாளர்களும் எதிர்ப்பார்க்கும் இவ்வேளையில் சில ஆலோசனைகள் கல்வியாளன் என்ற முறையில் ...

     தமிழக கல்வித்துறை டாக்டர் கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சமச்சீர் கல்வி முறை தமிழகத்தில் மட்டுமே சாத்தியமாகி நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள இத்தருணத்தில் தமிழகக் கல்வித்துறை தேர்வு முறையில் மாற்றம் தந்து இந்தியாவின் முன்னோடியாக திகழ சில யோசனைகளை முன் வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

       மதிப்பெண் அடிப்படையிலான மதிப்பீடு அல்லது அளவீடுகள் தான் மாணவனுக்கு பிளஸ் டூ முடித்தப் பின் நல்லதொரு உயர்க்கல்வியினை கொடுக்கிறது. மதிப்பீடுகள் மாணவனின் முழுத்திறனை சோதனை செய்வதாக அமையாமல் , அவனின் மனப்பாடம் செய்யும் திறனை பரிசோதிப்பதாகவே அமைந்துள்ளது.

     மாணவன் தான் பெற்ற பாடத்திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள திறன்களை முழுவதும் பெற்றுள்ளான என்பதை சோதிக்க மாணவனின் நினைவாற்றல், கற்பனைத்திறன் , புரிந்து கொள்ளுதல், அதனை பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் வினாக்கள்
தயாரிக்கப்பட்டு அவன் அத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

     இதில் தவறில்லை . ஆனால் மாணவனின் அனைத்து திறன்களும் பயன்படுத்தப்படுகிறதா..?அது தான் நம் தேர்வு முறையில் உள்ள சிக்கல்.ஆம்,நல்ல மான்ப்பாடம் செய்து , அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் விடைத்தாளில் கொட்டி வைக்கும் திறமைசாலிகளுக்கு மட்டுமே புரபெசனல் கோர்ஸ் எனப்படும் மருத்துவம் , பொறியியல் போன்ற பாடங்கள் கிடைக்கும்.

    சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் இராமகிருஷ்ணன் அவர்கள் மிகவும் திறமையானவர் ,ஆனால் இளம் வயதில் நினைவில் நிறுத்தி , குறிப்பிட்ட நேரத்தில் விடை எழுத தெரியாத்தால் தனக்கு புரபெசனல் கோர்ஸ் கிடைக்கவில்லை என்கிறார். ஆக, திறமைசாலிகள் உண்மையான அறிவாளிகள் நம் தேர்வு முறையில் தகுதிவாய்ந்த அவர்கள் விரும்பும் பாடத்தை உயர்கல்வியில் பெறும் வாய்ப்பு இழக்க நேரிடுகிறது.

    பிளஸ் டூ படித்து முடித்தப்பின் அவன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அதாவது இயற்பியல் , வேதியல் , உயிரியல் அல்லது கணிதம் ஆகியவற்றில் அவன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இருநூறு மதிப்பெண்களாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் அவனுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

   சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் ஒரு மாணவன் குறைந்த பட்சம் முப்பத்தைந்து சதவீதம் மதிப்பெண் பெற்று பாஸ் செய்து இருந்தாலே அவன் தேசிய நுழைவுத்தேர்வினை எழுதி , நுழைவுத்தேர்வில் அவன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேரலாம்.
  
   அது மட்டும் அல்ல சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மாநிலக் கல்லூரிகளில் பதினைந்து சதவீதம் சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் . ஆகவே, மாணவன் தனக்கு தேவையான கல்லூரியில் சேர்வதற்கும் வாய்ப்பு உள்ளது. நாமும் இது போன்று ஒரு தேர்வு முறையினை ஏன் கொண்டு வரக் கூடாது. ..?

   நுழைவுத்தேர்வினை நம் அரசு ரத்து செய்துள்ள நிலையில் நுழைவுத்தேர்வு முறைக்கு மீண்டும் செல்லத்தேவையில்லை . எனவே, பிளஸ் டூ நிலையில் தேர்வு முறையினை மாற்றி உண்மையிலெ திறமையும் , அறிவாண்மையும் உடைய மாணவன் தேர்வு செய்வதற்கு ஒரு தேர்வு முறை என் வசம் உள்ளது . தயவு கூர்ந்து தமிழக கல்வி துறையும் , கல்வி அமைச்சகமும் இதனை கூர்நேக்குமா...!?

1. பிள்ஸ் டூ மாணவனுக்கு அவனின் அந்தந்த பாட ஆசிரியரே ..அவ்வப்போது மாணவனுக்கு வைக்கும் தேர்வின் அடிப்படையிலோ அல்லது வகுப்பறைச் செயல் பாட்டினின் அடிப்படையிலோ இருபது மதிப்பெண் உள்ளீடு மதிப்பெண்ணாக வழங்கலாம்.
மாணவனின் முகதாட்சனைக்கு ஆசிரியர் ம்திப்பெண் வழங்கினாலும் பரவாயில்லை.அதனால் ஒன்றும் பெரிய வித்தியாசம் வர வாய்ப்பு இல்லை.

2.  பிளஸ் டூ மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு . மொத்த மதிப்பெண் ஜம்பது மதிப்பெண் ஆகும். அதுவும் மாணவனின் பார்தல் , கேட்டல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் எழுதும் திறனை சோதிப்பதாக அமைய வேண்டும்.ஆகவே, அதில் மூன்று மார்க் , ஜந்து மார்க் வினாக்கள் மட்டுமே கேட்கப்பட வேண்டும்.  
    குறிப்பாக இந்த தேர்வுத்தாளை அந்த பாடம் நடத்திய ஆசிரியரும் , அரசால் நிர்ணயிக்கப் படும் ஆசிரியரும் இதனை நடத்தலாம். இதனால் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்துவதில் குளறுபடிகள் நேராது . ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி தங்களுக்கு தேவையான வசதிகளை பெறவும் தேவையில்லை. அரசுக்கு பணம் மிச்சம். கல்வி அலுவலர்களுக்கு தங்களின் ரெகுலர் வேலை பாதிக்காமல் அலுவல்களை செய்யலாம். மாணவர் திறன் மேம்பட கண்காணிப்பை அதிகரிக்கச் செய்யலாம்.

3. மீதி உள்ள 130 மதிப்பெண்கள் அனைத்து மாணவனுக்கும் அவனின் உண்மையான அறிவாண்மையை சோதிப்பதாக , அப்ஜெக்டிவ் டைப் தேர்வாக இருக்க வேண்டும். அதில் மாணவன் படித்துள்ள பாடப் பகுதியில் இருந்து , அவன் பெற்ற அறிவினை
சிந்தித்து எழுதும் விதமாகவும்,பயன்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்க வேண்டும்.
வினாக்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் கோடிங்சீட்டாக அமைய வேண்டும். கணினி கொண்டு மட்டுமே திருத்த வேண்டும்.

4. மாணவனுக்கு மதிப்பெண்கள் உள்மதிப்பீடு 20+ஆண்டுத் தேர்வு 50+பொது தகுதி சோதிக்கும் தேர்வு 130= 200 அடிப்படையில் வழங்கப்படவேண்டும் .

5. தற்போது உள்ள கட் ஆப் முறையில் மாணவனுக்கு ஒவ்வெரு பாடத்திலும் அவன் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரம் வரிசை நிர்ணயம் செய்யப்பட்டு ,மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.  

  அன்பான பிளாக்கர்களே , பத்திரிக்கை நண்பர்களே இது அனைத்து வகையிலும் திறமை பெற்ற மாணவன் மட்டுமே செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்தி தரும். மேலும் எல்லா மாணவனும் பாஸ் செய்து விடும் சூழலும் உண்டு. குறைந்த பட்ச தேர்ச்சி சதவீதமான முப்பத்தைந்து சதவீதம் பெறும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
 
தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதுடன் உண்மையான போட்டியும், நல்ல கற்றல் சூழலும் உருவாகும். அறிவாளிகளும் மட்டுமே புரபெசனல் கோர்ஸ் சென்றடையும் . இதனால் சமுகத்தில் சிறந்த மருத்துவர்களும் , இஞ்ஞினியர்களும் கிடைப்பர்.நாடு வளம் பெறும்.
 
 அப்துல் கலாம் சொல்வது போல் நாடு நல்ல அரசாக மாறும், வல்லராசாகும் .

சாதனை சாதனம் ...!

தொலைக்காட்சி பெட்டி

ஒரே நேரத்தில்
குடும்பத்துடன் ....
அனைவரையும் புதைக்கும்
சவக் குழி ...!
-----------------------------------
முளை சாவுக்கு
நாமே ..
தேடி வாங்கும்
சாதனம் ...!

----------------------------------

பெரியவர்  முதல்
சிறியவர் வரை
அனைவரையும் ...
கனவுகளில் புதைத்து
வாழ்வையே கனவாக்கி
நினைவிழக்க செய்யும்
சாதனை சாதனம் ...!

Wednesday, May 19, 2010

பணநாயகம்

"பொன்னான வாக்குகள்"

உண்மை தான்
தேர்தலுக்கு தேர்தல்
தங்கம் போல்
மதிப்பு
உயர்ந்து கொண்டே செல்வதால்..!

டாஸ் மார்க்

டாஸ் மார்க்

அவன் மட்டும்
தள்ளாட வில்லை ...
அவன் குடும்பமும் தான் ...!

டாஸ் மார்க் சென்றதால்
அவன்  குடும்பம்
பெயில் ஆனது ...
அனைவரும்
அவனை போல்
நடுத்தெருவில்...!

கடவுளின் அருள் ...!

கால் கடுக்க
கல்லிலும் முள்ளிலும்
நடந்த பாதை யாத்திரை
பக்தனுக்கு ...
பொது தரிசனம்
நான்கு மணிநேரம் ஆயிற்று
சாமி தரிசிக்க ....
சொகுசாய் காரில்
வந்தவனுக்கு
சிறப்பு தரிசனம்
சில நொடிகளில்
கடவுளின் அருள் ...!


 

Monday, May 17, 2010

சில்லறை தேடி...

பார்க்கும் இடம் எல்லாம்
கல் ....
கல் நெஞ்சம் கொண்டவர்கள்
பூமியில்
விதைத்துள்ளார்கள்..!
இவை நகரமயமாதல் அல்ல
நரகமாதல் ...
நாளை சவக்குழிகளை
இன்றே தோண்டிகிறார்கள் ...!     


சூரியகாந்தி போல்
பார்க்கும் இடமெல்லாம்
மஞ்சள் கல் ....
வாழ்வில் மங்களம் உண்டாக்க அல்ல...
சந்ததியின் வாழ்வையே ...
அமங்களம் ஆக்க  !
  
உன் குழந்தை பிறக்கும் முன்
கல்லறை உருவாக்கி தருகிறாய்
சில்லறை தேடி...
பச்சை  பயிர்  முளைக்கும் இடத்தை
கருப்பை அகற்றுவதை போல்
புல்டோசர் வைத்து தகர்த்துகிறாய்  ...
நீ தர்க்கப்படுவது அறியாமலே..!



 

இன்று நீ நாளை நான்..!

கனவு ...
நீயும் நானும் இன்னும்
பூமியில்
நலமாய் வாழ்வதாய் ...!

விழித்தேன்
கண்களில் மட்டும்...
பால் பாக்கெட்டுடன்
காய்கறிகள் கேரிபேக்கில்
என் வீட்டு கொல்லைப்புறம்
பாலித்தீன் புதைந்து ,
பிளாஸ்டிக் வாளி உடைந்து
மண்ணில் கருகிய செடியுடன்...

ஆனால் நான் மட்டும் அல்ல...
ஊரே அரைக்குறை தூக்கத்துடன் ...

கனவு மட்டும்
இன்னும் அனைவரையும்
விட்டப் பாடில்லை....

எதிர் வீட்டு நாய்
வாயில் பாலித்தீன் பையுடன்
கவ்வி விளையாட...
எதிரே வந்த மாடும்
சணடையிட்டு ...
சாப்பிட்டு சென்றது ...
சாவு அறியாமல் ...
இன்று நீ நாளை நான்...
என்ற சுவற்று வசனத்தை பார்த்து
நாய் குரைத்தது...!
அதையும் பார்த்து ரசித்தோம்
நானும் நீயும்
இன்னும் முழுமையாய்
விழிக்காமலே...
பல் துலக்கிக்கொண்டே...!

நான் என் பொட்ரோல் வண்டியிலும்
அவர் டீசல் காரிலும்
அவன் ,இவன் என
அனைவரும் புகை கக்கி
தெருவே புழுதி கிளம்ப
அவரவர் அலுவலகம் சென்றோம்
அப்பாடா...
ஏசி யில உட்கார்ந்தா தான்
சுகமா இருக்கு என்றார்கள்
சுகம் எது என்று அறியாமலே..!

ஆம்
நாம் கனவுகளில்
நிஜம் உணராமலே
நலமாய் வாழ்கிறோம்...!

மதுரையை காக்க ...

  கன்னியாகுமரி கடந்த சனி அன்று சென்றேன் .   கன்னியாகுமரியின் அழகை சொல்லி மாளாது . பயணக் கட்டுரை எழுதும் முன் ,முக்கியமான ஒரு விசயம் நான் பேசியாக வேண்டும். கன்னியாகுமரி கலெக்டரை பாராட்டியே ஆக வேண்டும்.

    மதுரையும் ஒரு சுற்றுலாத் தலம் தான். கன்னியாகுமரியைப் போன்று சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் தான் . மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலோ , அதனை சுற்றியுள்ள பகுதியிலோ,  எதாவது ஒரு ஹோட்டலிலே இந்த மாதிரி ஒரு நோட்டீஸ் அல்லது விளம்பரப் பலகையையோ நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை.

     அதுவும் வார்டு வார்டாக பிட் நோட்டீஸ் கண்டது தான் எனக்கு ஆச்சரியத்தை எற்படுத்தியது. சாதாரண பெட்டிக் கடை முதல் அனைத்து வகை நட்சத்திர ஓட்டல் வரை அனைத்து தரப்பு மக்கள் புழங்கும் இடங்களிலும் இந்த வகை விளம்பரங்களை பார்ப்பது ஆச்சரியத்தையும் அதே நேரம் எனக்குள் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. ஏன் மதுரையில் இந்த மாற்றம் ஏற்படக் கூடாது?

    மதுரையை சுகாதாரமற்ற நகரமாக அறிவித்துள்ள நேரத்தில் , நாமும் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால் என்ன? நம் மாவட்டக் கலெக்டரும் இது போன்ற முயற்சி மேற்கொண்டால் பலன் கிடைத்து நம் தூங்கா நகரமும் , தூய்மையான நகரமாக மாறும்!

    நாம் காது குத்து, பால் காய்ச்சு , பூப்புனித நீராட்டு, கல்யாணம் , பிறந்த நாள் வாழ்த்து என எது எதற்கோ பிட் நோட்டீஸ் அடிப்பது போல் பத்திரிக்கை அடித்து , தெரிந்தவன் , தெரியாதவன் , பழகியவன் , அறிமுகம் ஆகியவன் , என பார்த்தவர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் கொடுப்போம். அது போல் மதுரையை தூய்மையுள்ளதாக மாற்ற நாமும் பிட் நோட்டீஸ் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே...!

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் , வார்டு வார்டாக நோட்டீஸ் ஓட்டியுள்ளது. குறிப்பிட்ட வார்டில் உள்ள பொது மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் துப்பரவு பணியாளர்கள் வசம் தங்கள் வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகள் என பிரித்து தனி தனியாக தரவும் எனவும் , நம் மாவட்டத்தை பாலித்தின் இல்லா மாவட்டமாக மாற்றுவோம் என்ற அறிவிப்பும் தடுக்கி விழுகும் இடம் எல்லாம் காண முடிந்தது.

   அது மட்டும் அல்ல ஹோட்டல்களில் சுடுதண்ணீர் தான் கொடுத்தனர். மேலும் ஒவ்வொரு ஹோட்டலிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க அறிவிப்பு ஓட்டப் பட்டு இருந்தது. இங்கு பாலிதீன் பைகள் தரப்பட மாட்டது , மேலும் அதற்கு பதிலாக துணிப்பை தான் கொடுக்கப் படும் அதற்கு என கூடுதல் கட்டணம் பெறப் படும் என அறிவிப்பும் என்னை ஆச்சரியப்படுத்தியது . நாமும் இதை நடைமுறைப் படுத்தினால் என்னா...?!


    மதுரை நிர்வாகம் இதை கவனிக்குமா...! மதுரை மக்கள் பிட் நோட்டீஸ் அடித்து மதுரையை காப்பார்களா..!மக்களே நாம் தயவு செய்து மதுரையை காக்க இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோம். எனக்கு தெரிந்த விசயத்தை நீங்களும் பலருக்கு தெரிவிக்கலாமே...!

Thursday, May 13, 2010

மதுரை மக்களே உஷார்...!

.
  மத்திய நகர் மேம்பாட்டு வாரியம் மதுரையை சுற்று சூழல் பாதுகாக்கப் பட வேண்டிய நகரமாக அறிவித்துள்ளது .
 
மதுரையில் காற்றில் மிதக்கும் நுண்ணியத்துகள்கள் அளவு 700.மைக்ரோகிராமாக உள்ளது.
நுகரும் நுண்ணிய துகள் அளவு 300.மைக்ரோகிராம் ஆகும்.

மக்களே தூங்கா நகரம் என பெயர் பெற்ற நாம் இந்த விசயத்தில் இவ்வளவு தூங்கி விட்டோமே!

   இனியாவது விழித்து கொண்டு , குப்பைகளை உரிய இடத்தில் ஈட்டு , தரம் பிரித்து , மறுசுழற்சி செய்யவும் , உரமாகவும் பயன்படுத்துவோம். குப்பைகளை தெருவில் விட்டு எறிவதை தவிர்ப்போம்.

   திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம். குறிப்பாக ஆற்று ஓரத்தில் இருக்கும் பொது ஜனங்கள் ஆற்றில் மலம் கழிப்பதை தவிர்த்து , பொது கழிப்பறையை முறையாகப் பயன் படுத்துவோம்.

   ஓப்பலாப்படி ஓரத்தில் உள்ள சில்வர் பட்டறை , மற்றும் ஆட்டிறைச்சி தொழில் நடத்தும் மக்களே, நீங்கள் தொடர்ந்து கழிவுகளை ஆற்றில் வீசுவதால் , ஆறு மாசுபடுவதை மட்டுமல்ல , காற்றும் மாசுப்படுவதை தவிர்க்க முடியாது.

 
  இரசாயன உரம் உள்ள சாக்குகளை மீண்டும் பயன் படுத்த வேண்டும் என்று ஆற்றில் அலசும் வியாபாரிகளே தயவு செய்து தாங்கள் செய்யும் தவறை உணர்ந்து , இனி இப்படி செய்வதை தவிர்க்கவும்.

    ஆற்று ஓரத்தில் வாழும் மக்களே முறையாய் கழிவு நீர் இணைப்பு பெற்று , ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தவிர்க்கவும்.

   தத்தனரி அருகில் உள்ள மக்கள் ஆற்றில் பெட்ரோலியப் பொருட்கள், பாலீஸ் பட்ட்டறை கழிவுகளை எரிப்பதை தவிர்த்தால், ஆறும் , சுவாசக் காற்றும் சுத்தமாக இருக்கும் .


வைகை சாக்கடையாய் இருப்பதை இனியாவது உணர்ந்து , மதரை மக்கள் அனைவரும் முயர்சி செய்து , நம்மை நாமே திருத்திக் கொண்டால் மட்டும் மதுரையை மட்டும் அல்ல , நம்மையும் நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

விண்ணை தாண்டி...

வீட்டில் ஏசி
காரில் ஏசி
என பயணிக்கும்
இடமெல்லாம் குளிர் சாதனம்....
குடிக்கும் பானமும்
குளிராய் இருக்க
குளிர் சாதனப் பெட்டி ...
எதிலும் குளிர்ச்சியை
விரும்பும் மனிதா...
பூமி சூட்டை உணராமல்
வசதியாய்  வாழ நினைத்து ...
சாவை அல்லவா தேடி
வசதி என கூலாய் வாழ்கிறாய்..!
  
உன்னால் வெளிப்படும் புகை
விண்ணை தாண்டி சென்றாலும்
உன்னை மண்ணில் அல்லவா
புதைக்க வழி சொல்லுகிறது...!
  

Wednesday, May 12, 2010

மனித இயல்பு

என் எதிர் வீட்டுக் காரன்
புலி  போல் சீறும்
கோபக்காரனாம் ...!
என் பக்கத்து வீட்டுக்காரன் 
சிங்கம் போல கர்ஜிப்பானம்
எதற்கெடுத்தாலும் ...!
என் முன் வீட்டுக்காரன்
நரி போல் தந்த்திரக்காரனாம் ....!
பார்த்து நட என்றான்
பின் பக்கத்துக்காரன் ...!
அது மட்டுமல்ல ...
இந்த தெருவே ஒருமாதிரி ...
என புதிதாய் வந்த எனக்கு
பாடம் புகுத்தினான் ...
இது எல்லாம் தற்போது
மனித இயல்பு என்று தெரியாமல் !

Saturday, May 8, 2010

என்னோடு வரும் நீ ...

நான் வீட்டில் கிளம்புவதில் இருந்து ...
என்னோடு வரும் நீ ...
சிவப்பாய் , கருப்பாய் , வெள்ளையாய் ...
பல நிறங்களில் என்னுடன் பயணித்தாலும் ....
என்னை போன்றே குணம் படைத்தவன் ....!
மழை எனக்கு  பிடிக்காது ...
உன்னை போலவே ..!
மழையில் நனைந்தால்
நான் நொந்து நூலாகி விடுவேன்....!
என் உடல் வாகும் உன்னை போல் தான் ...!
இருந்தாலும் மோசம் நீ ...
மழை காலங்களில் ஆனந்தமாய் நனைந்து
என்னை அல்லவா இம்சிக்கிறாய்....!
என்னை என் அன்னை மட்டும் திட்டுவாள் ...
"ஏன் ஒரு மழைக்கு கூட தங்க மாட்டேன்கிற ...?"
உன்னை ஊரே திட்டுகிறது என்பது மட்டும் வித்தியாசம்...!
மழையில் பெற்ற ஜல தோஷம் நீங்கும் வரை ...
நான் கோபப்பட்டு கிடைத்தை எல்லாம் தூக்கி எறிகிறேன்...
நீ சில சமயம் என்னையும் அல்லவா தூக்கி எறிந்தாய்
இது தான் நீ என்னிடம் வைத்துள்ள உறவா...
உன் மேடு பள்ளங்களை சரி செய்ய
சாலை வரி கட்டினாலும் ....
உன்னை மட்டும் சரி செய்ய நாள் பல ஆகிறது ஏன் ?

பள்ளிகளில் கட்டண முறை ....

     பள்ளிகளில் கட்டண முறை அமலில் வருவது வரவேற்க தக்கதாகும். ஏற்கனவே , இலவசக் கல்வி முறை உள்ள பள்ளிகளில் அரசுக்கு தெரியாமல் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது ?


      கல்வி அமைச்சர் கூறுவது போல் , ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் உதவியுடன் நர்சரி பள்ளிகள் , அரசு உதவி பெறாத அங்கிகாரம் பெற்ற தனியார் தமிழ் மீடியம் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவற்றில் தான் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் படி இன்று அனைத்து பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . வரவேற்க தக்கது.அக்கட்டனத்தை மீறி வசூல் செய்யும் பள்ளிகள் தண்டிக்கப் படுவர் என கல்வி அமைச்சரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது சாராசரி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. 


     மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். ஆனால் , நடுத்தர நிலையில் உள்ள மக்கள் தங்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனியார் அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெற்ற பள்ளிகளில் சேர்க்க மிகவும் கஷ்ட படுகிறார்கள். சேர்த்தாலும் அப்பள்ளிகளில் தொடர்ந்து படிக்க கடன் வாங்கும் சூழ்நிலையில் உள்ளனர். இதை அரசு கவனம் கொண்டு செயல்பட்டால் ஏழை மக்களின் படிப்பு தொடரும் , கடன் சுமை குறையும் வாய்ப்பு உள்ளது. 

      ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாநகராட்சி  பள்ளி , அரசு உயர் நிலை பள்ளி , மேல்நிலை பள்ளி , தனியார் உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு எந்த வித கட்டணமும் வாங்க வாங்க வேண்டாம் என சென்ற வருடமே ஆணை பிறபித்துள்ளது.
  
         ஆனால் காலம் காலமாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் குறிப்பாக நல்ல தேர்ச்சி தரும் பள்ளிகளிலும் , கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களிடம் நோட் புத்தகம் , பேனா பென்சில் என்ற வகையில் கொள்ளை கொள்ளை யாக வசூல் செய்யப் படுகிறது. குறைந்தது ஆயிரம் முதல் முதல் வகுப்பில் வசூல் நடை பெறுகிறது.மீதி வகுப்புகளுக்கு நீங்களே கணக்கீட்டு கொள்ளுங்கள். 


          அது சரி , இதை அதிகாரிகள் தட்டி கேட்க கூடாதா...? தற்போது கோவை மாணவன் தாக்குதல் போல் புகார் எதுவும் வரவில்லை , பாதிக்க பட்டவர் தரப்பில் இருந்து புகார் வந்தால் தான் தாக்குதல் நடத்தியவர்களை அரஸ்ட் செய்ய முடியும் என்பது போல் , இங்கும் , யாரும் புகார் தராததால் , அதிகாரிகளும் தங்களுக்கு தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொள்கிறார்கள். பெற்றோர்களும் புகார் கொடுத்தால் , தங்கள் குழைந்தையின் கல்வி பாதிக்கப் படுமோ என்று எண்ணி கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். 

          அரசு எத்தனை கமிட்டி போட்டு நிபந்தனைகள் கொண்டு வந்தாலும் , மக்கள் ஒத்துழைப்பு இல்லை எனில் எந்த சட்டத்தாலும் தவறுகளை திருத்த முடியாது. மக்களும் பாதிக்கப் படுவர் . தயவு செய்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டும் தான் , கமிட்டிகளாலும் அரசு திட்டங்களாலும் நமக்கு பயன் கிடைக்கும்.  மக்கள் உணர்ந்து செயல் படுவார்கள..?

Monday, May 3, 2010

மரணிக்கும் முன் ...

    நீ பேசுவது
எனக்கு புரியும் .
எனக்கு புரியாது ...
எனக்கு பிடிக்கும் ...!
மொழி நமக்கு
பிரச்சனை இல்லை...!
  நீ சிரிக்கும் போது ...
எனக்குள் வேகம் ...!
மரணிக்கும் முன் ...
உனக்கு எல்லாம்
 நானே
எல்லாம் செய்து...
உன் சிரிப்பில் ...
நானும் மகிழ்ந்திட வேண்டும்..!

நீ அழுவது
சில நேரம் புரியாவிட்டாலும் ...
பல நேரம் புரிந்து
உன்னை சமாதனம் படுத்தி ....
 என் சொல்லோடு 
செல்லையும் அல்லவா
கொடுத்தேன் ...!
உன் விரல் பட்டு
பேசும் போது ...
ஆனந்தம் சொல்லி மாளாது ...
பலர் கடிந்தாலும் ,
நொந்தாலும் , கோபப்பட்டாலும்
உறவினர் கூடி  உதைத்தாலும்
பரவாயில்லை ....
எனக்கு நீ தானடி ...
என் சொத்து ....  
சொந்தமே ...
செல்லமே ..
எந்தன் உயிரே ...
தன் பிள்ளை பேசுவது ...
யாருக்கடி பிடிக்காது ...
புரியாது...!
என் வாழ்வு உனக்கேடி ...!
நீ சொல்லும் சங்கதி ...
என்றும் எனக்கு ...
பெயில் ஆனது இல்லை...!
உங்கள் வீட்டு மழலையிடம்
பேசி பாருங்கள் ...
நீங்கள் தொடர்புக்கு அப்பால் இருந்தாலும்
தொடர்பில் இருப்பதாகவே உணர்வீர்கள்...!
என்றும் டவர் பெயிலியர் ஆவதில்லை...
ஆம்...
குடும்பம் பெயில் ஆவதில்லை...!

Saturday, May 1, 2010

உழைப்பாளி

வியர்வை துளி
அது உழைப்பாளியின்
உயிர் துளி ...!
கைகளில் உள்ள
கடுமை
உள்ளத்தில் இல்லை ...!
மென்மை அதுவே  ....
காரணமாய் ...
முதலாளியின்
சுரண்டல் ...
தெரியாமலே சுரண்டப்படுபவன் ...
மே தினம் மட்டுமே ...
அவன் அருமை சொல்லும்
விடுமுறை என்று ....
முதலாளியின் சுரண்டலுக்கு ..!

தொழிலாளி, உழைப்பாளி
அத்தக் கூலி , தினக் கூலி
மாத சம்பளக் காரன் ,
வார  சம்பளக்காரன் ,
இப்படி எப்படி அழைத்தாலும்
உன் உழைப்பின் நிறம்
சிவப்பு ....
உன் இரத்தம்
வியர்வையாய்  வருவதால் ...!

தினமும் சருகாய்
காய்ந்து...
 கிழே விழுந்தாலும்
உன் சம்பளத்தினமே....
உன் மொத்தக் குடும்பமும்
சிரிப்பில் மலரும் தினம்..!

பிறர் வாழ்வுக்கு
தன் வாழ்நாளில் தினமும்
ஒரு நாளை இழப்பவனே...
புகையில் கருகுவது
நீ மட்டும் அல்ல...
உன் வாழ்நாளும் அல்லவா...
இது தெரிந்தே ....
சமைக்கும் சத்துணவு ஆயா ...!

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.