Tuesday, April 6, 2010

, கட்டாயக் கல்வி

     இன்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாயக்கல்வி வரவேற்க வேண்டியது. அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சென்று அடைய வேண்டும் என்பதில் எந்த கருத்து மாற்றமும் கிடையாது. மாணவர்களுக்கு கல்வி சென்றடையும் விதத்தில் , கல்வி தரம் அடிப்படையில் மாறுபாடுகளை இந்த கட்டாயக் கல்வி மாற்றுமா!
    
       நேற்றுவரை அனைவருக்கும் கல்வி என்பது சட்ட முன் வரைவாக தான் இருந்தது . இன்று சட்டமாக்கப்பட்டது. அதற்கும் தற்போதைக்கும் உள்ள  வித்தியாசம் என்ன ? பள்ளி செல்லாக் குழந்தைகளை இந்த சட்டம் ஆக்கப்படும் முன் வரை , ஒரு தொழிலாளர் நல ஆய்வாளர் மட்டுமே , கண்டுபிடித்து, அவர்களை வேலைக்கு அனுப்பியவர்களை தண்டிக்க முடியும்,வேலைக்கு வைத்திருப்பவர்களையும் தண்டிக்க முடியும்.

      ஆனால் இன்று அனைவரும் வேலைக்கும் செல்லும் குழந்தைகளை கண்டுபிடித்து , இதுவரை எந்த வகுப்பில் கல்வியை விட்டு சென்றாலும், வயதுக்கு தகுந்த வகுப்பில் எந்த பள்ளியிலும் சேர்க்கலாம். இதில் நன்கொடை பெற்று நடத்தும் தனியார் பள்ளிகள் மாணவன் சேர்க்கையில் இருபத்து ஐந்து சதவீதம் கொடுத்து ஆக வேண்டும். ஆம்  அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி .குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தவறும் பெற்றோர்கள் மீது போலீசில் புகார் செய்து , வேலைக்கு அனுப்பும் பெற்றோரை சட்டப்படி தண்டிக்கலாம்.

      இன்று பள்ளிசெல்லக் குழந்தைகள் இந்தியா அளவில் ஏறக்குறைய ஒரு  கோடிக்கு நிகராக   இருப்பதாக கணக்கெடுப்பு சொல்லுகிறது.    இச்சட்டத்தை நடைமுறை படுத்த ஏறக்குறைய ஒன்னரைக்கோடி தேவைபடுகிறது. மத்திய மற்றும்  மாநில அரசுகள் இந்நிதியை 55 :45  என்ற விகிதத்தில் செலவினங்களை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்துள்ளது. ஆறு முதல் பதினான்கு வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி கட்டாய உரிமையாக்கப்பட்டாலும் சில விசயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.

      இன்று நல்ல முறையில் தேர்வெழுதி , நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களை எடுத்துக்க் கொள்வோம், ஏறக்குறைய எழுபது சதவீதம் மேல் கட்டணக் கல்வி முறையில் படித்தவர்கள் தான். ஒன்று மெட்ரிக்  பள்ளியில் படித்தவர், அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். அரசு கல்வி கொடுப்பதில் கட்டாயப் படுத்தினாலும் , அதன் தரம் அனைவருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று தமிழக அரசு அனைவருக்கும் ஒரே மாதிரி புத்தகம் கொண்டுவந்து சமச்சீர் கல்வி கொண்டுவந்தாலும் , இலவசத்துக்கும் , கட்டணக் கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசம்  மாறுபட வேண்டும்.

      காசை அள்ளி கொட்டி படிக்க வைப்பது , கல்வி அறிவு மட்டும் பெற வேண்டும் என்பதால் அல்ல , நல்ல அரசு அல்லது அதிகம் வருமானம் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து அவன் எதிர்காலம் சிறக்க வேண்டும் மற்றும் குடும்பத்தை காக்க வேண்டும் என்பதால் தான் .காசை அள்ளிக் கொட்டியவன் திரும்ப காசை பெறவேண்டும் என்பது தானே நியாயம் என்ற விதத்தில் அவனை  அறியாமலே , தவறு என்று உணராமலே , அவன் குடும்பத்தார் சம்மதத்துடன் லஞ்சம் என்று  அறியாமலே பணம் பெற முயல்வதும்,பெற்று வருவதும்  தான் இன்று நடை முறை விதியாக உள்ளது. சிலர் தைரியமாக கை நீட்டி வாங்கி மாட்டிக் கொள்வதும் உண்டு. தயவு செய்து யாரேனும் (லஞ்சம் பிளாக்கர் ) தற்போது லஞ்சப் பட்டியலில் மாட்டியவர் பட்டியலில் அவர்கள்  படித்த விபரம் அல்லது அவர்கள் மகன் அல்லது மகள் படிக்கும் பிள்ளைகளின் விபரங்களை வெளியிட்டால் நான் கூறும் விபரம் உண்மை என்பது தெரிய வரும்.


         ஆகவே கல்வி இலவசமாக தருவதுடன்,அது அனைவருக்கும் தரமானதாக போய் சேர வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முதல் அடிக்கல் தான் சமச்சீர் கல்வி என்றாலும் , படிக்கும் விசயங்கள் மட்டும் ஒன்றாக  இருந்தால் போதாது. ஆசிரியர்கள் அனைவரும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி தர வழி செய்ய வேண்டும் . காலக் கெடுவுக்குள் பாடம் நடத்த வேண்டும் என்பதால் மட்டும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி சென்று அடைய முடியாது. ஆசிரியர்கள் நேரத்திற்கு பணிக்கு வருவதால் மட்டும் கல்வி தரம் அதிகரித்து வராது. ஆசிரியர்கள் தம் கடமையை உணர்ந்து பணியினை செய்ய அரசு கடுமையான விதி முறைகளை கொடுக்க வேண்டும். தொடர்ந்து கல்வி தரம் ஆராயப்பட வேண்டும் , மதிப்பெண் அடிப்படையிலான வரைமுறைகள்  மாறி ,    திறன்கள் மாணவனுக்கு  புரியும் விதத்தில் கற்பித்து  , அவற்றை அவன் மனதில் நிறுத்தி திறனை நடைமுறை படுத்தும் விதமாக மதிப்பிடல் மாற வேண்டும்.  

        தற்போதைய நவீன கணினி யுகத்தில் அனைத்து ஆசிரியர்களும் மாணவனுக்கு இணையான அறிவு பெற அரசு பயிற்சி அளித்தாலும், கணினியை பயன்படுத்த தெரியாத பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தான் அதிகம் என்பது பயிற்சி பெற்றவர்களை சோதித்தாலே தெரிய வரும். இதை சொல்லு வதில் எந்த தயக்கமும் இல்லை . பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதை தினம் நடைமுறை படுத்துவதில்லை , அதனால் நாளடைவில் அதன் பயன்பாட்டை மறந்து விடுகின்றனர்.   பின்பு நினைவு படுத்தி ஆம் என தம் தவறை சரி செய்வதும் உண்டு. ஆசிரியர்களுக்கு ப்ராஜெக்ட் கொடுக்கப் பட்டு அது , முறையாக திருத்தப்பட்டு நடைமுறை படுத்தப் பட வேண்டும். தரம் இல்லாத ஆசிரியர்கள் தகுதி மேம்படுத்த பயிற்சி அளித்து, மீண்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் , அதே ஊதியத்துடன் மீண்டும் பணியமர்த்தப் பட வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் ஊதியம் கொடுத்தவுடன் பிடித்தம் செய்யப்பட வேண்டும். பேருந்து ஓட்டுனர் , விபத்து ஏற்படுத்தினால், அவர் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு , பயிற்சி அளிக்கப்பட்டு ,மீண்டும் பணிக்கு திரும்புவது போன்று , ஆசிரியர்கள் தரம் குறைவான கல்வி தருவதாக கண்டரியப்பட்டாலோ    , அல்லது மாணவர்கள் மதிப்பீடு செய்யும் போது தரம் குறைவதாக அறிய வந்தாலோ ,அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தொடர்ந்து பயிற்சி செல்லும் ஆசிரியர்கள் ஊதியம் கட் செய்யப் படவேண்டும். மாற்றுப் பணி தரப்பட வேண்டும். அங்கும் தரம் முறிந்தால் பணி நீக்கம் ஒன்றுதான் முடிவானது.

     அதே போன்று தரம் குறையும் தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் மூடப்பட வேண்டும் . தரம் நிர்ணயிக்கும் அளவு கோளை கல்வி சிந்தனையாளர்கள் முடிவு செய்ய வேண்டும். அண்மை  கல்வி விரைவில் அமுல் படுத்தப் படவேண்டும். அப்போது தான் மாணவர்கள் அனைவரும் அருகிலே பள்ளிக்கு செல்வர் , அந்த அந்த பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் படிக்கின்றனரா என்ற விபரத்தை கணக்கிட முடியும், பள்ளி செல்லாக் குழந்தைகள் விபரமும் அரசுக்கு கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உதவ முடியும். ஒவ்வரு பள்ளிக்கும் ஒரு ஏரியாவை கொடுத்து , அந்த ஏரியா மாணவர்கள் அனைவரும் அந்தப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என சட்டம் கொண்டுவந்தால் , பள்ளி செல்லாக் குழந்தைகள் விபரம் துல்லியமாக கிடைக்கும்  , கட்டாயக்  கல்வி சட்டமாக்கப்பட்டது நிறைவேறும்.

       எது எப்படியோ  இன்று குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி சட்டம் நிறைவேற்றப்பட்டதே , நம் முன்னேற்றத்திற்கு ஒரு அடித்தளம் ஆகும். கனவு நினைவாகும் வரை கல்வி பணி மற்றும் கல்வி சிந்தனை ஓயாது. ஒன்றுபடுவோம் கல்வி சிந்தனை வெளிப்படுத்துவோம் , வளமான பாரதம் அமைத்திட உதவுவோம். நம் தேசம் நம் கையில்.

3 comments:

Unknown said...

நம் தேச முன்னேற்றத்திற்கு ஒரு அடித்தளமாக கட்டாய இலவசக் கல்வி சட்டம் நிலைக்கும். நல்ல பதிவுக்கு நன்றி

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஹுஸைனம்மா said...

நல்ல கருத்துக்கள் முன்வைத்திருக்கீங்க; ஆசிரியர்களுக்குத் தொடர்பயிற்சி, ஏரியா குழந்தைகளுக்கு முன்னுரிமை, தொடர் ஆய்வு - இதெல்லாம் நடந்தாத்தான் கல்வித்தரம் முன்னேறும்.

Balakumar Vijayaraman said...

தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.

// பேருந்து ஓட்டுனர் , விபத்து ஏற்படுத்தினால், அவர் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு , பயிற்சி அளிக்கப்பட்டு ,மீண்டும் பணிக்கு திரும்புவது போன்று , ஆசிரியர்கள் தரம் குறைவான கல்வி தருவதாக கண்டரியப்பட்டாலோ , அல்லது மாணவர்கள் மதிப்பீடு செய்யும் போது தரம் குறைவதாக அறிய வந்தாலோ ,அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். //

இது தேவையான முறை.

Post a Comment