இன்று குழந்தைகளை குறை கூற இயலவில்லை . ஏன் அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் கூட, அவர்கள் அதை உடனே அடுத்தவர்கள் மீது சுமத்த பார்க்கிறார்கள். டேய் வீட்டுப்பாடம் ஏண்டா எழுதவில்லை என்று கேட்டால் அடுத்த நிமிடத்தில் , நான் மட்டுமா எழுதவில்லை, அவனும் தானே என்று தங்கள் குறைகளை மறைக்க பார்க்கின்றனர்.
இன்னும் தெளிவாக கூறினால், ஒழுங்கு தவறி, ஓடிவரும் ஒருவனை , வரிசையில் செல் என்றால், அவன் மட்டும் ஓடி வருகின்றான் என்று பிறர் குறைகள் மீது சவாரி செய்து, தம்மை ஏமாற்றிக்கொள்கிறார்கள் . புத்தக்கத்தை ஏண்டா இப்படி கிழித்து வைத்துள்ளாய் என்று கேட்டால், நான் புக்கு வாங்கிய உடனே சொன்னேன் சார், எங்க அப்பா தான் மூணு மாசத்துக்கு தாண்டான்னு சொல்லிட்டார் என்று சொல்லி அட்டை போட விடவில்லை என்கின்றான். இப்படியாக மாணவர்கள் பிறர் தவறுகள் மீது சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர்.
அடுத்தவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம், தன் தவறுகளை மறைக்க பார்க்கின்றனர் அல்லது நியாயப்படுத்த பார்க்கின்றனர். ஒரு வினாவிற்கு இன்னொரு வினா பதிலாக முடியுமா? இன்று சீருடை ஏன் அணியவில்லை என்று கேட்டால் , அம்மா துவைக்கவில்லை அழுக்கா இருந்துச்சு என்று ரெடிமேட் பதிலை தந்து அம்மாவின் மீது பலியை தூக்கி போட்டுவிடுகின்றார்கள்.
தவறுக்கு தவறு விடையாக அமைந்துவிடுகின்றது.இந்த தவற்றில் இருந்து தான் எல்லா தவறுகளும் ஆரம்பமாகின்றன. இதை போக்க வேண்டியது எல்லா ஆசிரியர்களின் கடமை. மாணவர்களுக்கு தேவை சரியான மன பயிற்சியும் , அதன் மூலம் மன ஒருங்கும். சுவாமி விவேகானந்தர் சொல்கின்றார், சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.
பள்ளிகளுக்கு அரசு கால அட்டவணை தயாரித்து கொடுத்துள்ளது. தியான வகுப்புகளுக்கு நேரத்தை ஒதுக்கியுள்ளது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி தியானம் செய்தோமானால், நிச்சயம் மனம் ஒருங்கு படும். மன அமைதி பெறும் போது, தெளிவானை சிந்தனை அமைய வாய்ப்புகள் அதிகம். அதனால் அடுத்தவர்களின் குறைப்பாடுகள் தம்மை குறிக்கிடுவதை அனுமதிக்க மாட்டார்கள்.
ஆசிரியர்களும் மாணவர்களை குறைகூறாமல், நம்மை நாம் திருத்திக்கொள்வோம். மாணவர்களின் குறைபாடுகள் நம்மை குறுக்கிடுவதை தவிர்த்து, அவர்களுக்கான சரியான பாதையை காட்டுவோம். சிலர் அந்த பையன் எப்போதும் இப்படிதான் ... வேண்டும் என்றால் கேளுங்கள் என்ற பதிலை தருவதை பார்த்திருக்கின்றேன். தங்களின் தவறு அல்லது இயலாமையை தவிர்த்து , நம்மை மாற்றிக்கொள்ள பயிற்சி பெறுவோம்.
மாணவர்களும் , ஆசிரியர்களும் எல்லா சந்தர்பங்களிலும் அடுத்தவர்களின் தவறுகளுடன் போட்டி போடாமல், அதனை கடந்து செல்வோம்.
மதுரை சரவணன்.
2 comments:
பழியை அடுத்தவர் மீது சுமத்துவது ஒரு தப்பித்தல் தந்திரம்தானே.
/// தங்களின் தவறு அல்லது இயலாமையை தவிர்த்து , நம்மை மாற்றிக்கொள்ள பயிற்சி பெறுவோம். ///
உணர வேண்டிய வரிகள் நண்பரே. வாழ்த்துக்கள்
அடுத்தவர் மீது பழி போடுவதே ஒரு தந்திரம்தான்...
நல்லதொரு பகிர்வு.
Post a Comment