Monday, October 28, 2013

இந்த தீ அணையாது...படித்து உறுதி செய்யுங்களேன்...!

         இத்தனை நாளாய் ஒருவனை இழந்துஇருக்கின்றோம் என்று நினைக்கத்தோன்றும் என்றால் அது நம்மையறியாமல் அவன் மீது நாம் கொண்டுள்ள பற்று , நட்பு, பிரியம் ஆகும் என இப்படி உங்களுக்கு பொருத்தமான , பிடித்தமான வார்த்தைகளால் இட்டு நிரப்பலாம். அவனை சந்தித்தப்பின் ஏற்படும் மனநிலை தேங்கிய நீரில் வீசி ஏறியப்பட்ட கல்லினால் ஏற்படும் சலனம். அது நீண்டது. அது ஓய்வு நிலைக்கு வருவதற்கு மணிநேரம் பிடிக்கலாம். அந்த மணி நேரத்திற்குள் மன அலைகள் எழும்பும் உயரம் ஆழிப்பேரலையை விட பெரியது.  உயர்ந்து எழுந்து அடங்கும் போது பிரபஞ்சம் அதனுள் அடங்கியிருக்கும். என்னை அப்படி அவனுள்ளே அடக்கியவன் வேறு யாராக இருக்க முடியும். அந்த தீ பரவ தொடங்கிய தருணம் நான் அதனுள் பொசுங்கிப்போனேன். மெல்ல சூடேறி, அதன் போக்கில் காற்றின் துணையுடன் பற்றி எரிந்து , அதனால், தாம் எரிவதுடன் அருகில் உள்ள அத்தனையையும் தன்னோடு சேர்த்து எரிய விடுவது எதார்த்தம். இந்த தீ அருகில் இருந்தாலே நம்மை சூடேற்று முன்பே தானாக  எரித்து விடுகிறது. அவன் பேச தொடங்கிய தருணம் , அவனாகவே மாறி விடுவது என்பது அறிவியல் முரண். இனி நான் அவனின் அடி வருடி என்று கூட அழைக்கப்படலாம். அதற்காக வெட்கப்படப்போவதில்லை. இது என்ன கூடா நட்பா. என்னோடு பேசக்கூடாது என்று சொல்லியும் என்னை தேடி வந்து பேசிய நட்பு. முரண்களில் தொடங்கிய முதிர்ச்சியான நட்பு. அவன் வார்த்தைகளில் சொல்லப்போனால் இது சுவரில் இறுகி, சுவரோடு சுவராக ஒண்றியுள்ள ஆணியை , அடித்து, ஆட்டி, வன்மையாக பிடுங்கி கொள்ளும் விசயம் அல்ல. நட்பு அது சுவரிலிருந்து தானாக ஸ்கூரு டிரைவர் கொண்டு அப்படியே சர சர சர என தானாக கழட்டிக்கொள்வது போன்றது நட்பு. அது சுவரில் இருந்து பூப்போல உருவி வருவது. தானாக கழண்டு கொள்வது போல , இறுக்கம் தளர்ந்து தன்னை ஒப்படைப்பது. இந்த நட்பு பூ போன்று மனம் பரப்பும். மாற்றம் என்பது மானுட தத்துவம். இந்த மாற்றம் இன்று நடந்தேறியுள்ளது. 
           
           இரண்டு வருடம் பார்த்தும் பார்க்காமலும் பேசியும் பேசாமலும், நட்பாய் இருந்தும் இல்லாமலும், ஒதுங்கியும் , ஒதுங்க முடியாமலும் இருந்த காய் தானாக கனிந்து  இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் புனைவில் ஆரம்பித்த இந்த நட்பு, அதன் தொடர்ச்சியாக எங்களுக்கு முரண்களை பரப்பி, எட்டியே பார்க்க செய்திருந்தது.  இலக்கிய வட்டத்தின் நீட்சி, எதிரும் புதிருமாக, முக நூலில் நட்பாக, கேலியாக, கோபமாக, எழுதிய எழுத்துக்களில் விமர்சகனாக இப்படி ஒரு சாராசரி சென்னை டூ மதுரை அரசு போருந்தைப்போல, சிக்கலாகவும், சிக்கனமாகவும், தாமதமாகவும், பாதுகாப்பாகவும் சென்று கொண்டிருந்தது எங்கள் நட்பு. சமீபத்திய சந்திப்புகளின் நீட்சி, அவசியம் அரசு தொடங்கியுள்ள மினி பஸ் போன்று இன்னும் பளப்பளப்பாக பொழிவாக இன்று வெள்ளோட்டம் கண்டது. இதன் பின்னால் பேசப்படும் அரசியல் பற்றி இருவருக்கும் கவலையில்லை. இந்த பேருந்துக்கு பின்னால் இலை இருப்பதில் இருவருக்கும் கவலையில்லை. எனவே , அதனை நீக்க சொன்னாலும் கவலைப்படுவதற்கில்லை. இல்லை இது வேறுமாதிரியான இலை என்று சொன்னாலும் மகிழ்ச்சி அளிக்கப் போவதில்லை.


         உன்னை தியாகம் செய்வதனால் மட்டுமே பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்” ஆம் அவனுக்காக என்னை தியாகம் செய்ய துணிந்து விட்டேன்.  புனைவு செந்திக்காக வருந்தினான். செந்தி பற்றி உயர்ந்த கருத்து கொண்டிருந்தான். எனக்கான இடத்தை கொடுத்தவன் செந்தி என்று மனசார சொன்னான். தன் பெயரில் தீ கொண்ட  அவனுக்காக பத்திரிக்கைகள் கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றன. அவன் யாரையும் உயர்த்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் செந்திக்கும் எனக்கும் உள்ள நட்பு அறிந்திராமலே , தன்னை உயர்த்திய கரத்தை உயர்த்தி பிடித்து பேசுவது இன்று அரிது. சந்தர்ப்பம் கிடைத்தால் சந்தில் சிந்து பாடிச் செல்பவர்கள் தான் அதிகம். இவன் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவன். செந்தி இதைப்படிக்க நேர்ந்தால், தயவு செய்து அந்த ஆத்மா வை உங்கள் கரங்களால் மீண்டும் பிணக்குகள் களைந்து ஏற்றுக்கொள்ளுங்கள். நல்லது செய்து நண்பரை பெருக்க வேண்டும். (பா 89) நான்மணிக்கடிகை கூறுகிறது. என்னால் இந்த இரு நண்பர்களும் மீண்டும் பிணக்குகள் நீக்கி , நட்பு கொள்வாராகினும் மதுரையில் இலக்கியம் இன்னும் நல்லவாறே வளர வாய்ப்பு உள்ளது. குற்றம் நீக்கும் கேள்வியார் நட்பு மருந்து போன்றது (பா 17) என்கிறது திரிகடுகம்.

         அவனை பேச விட்டுக்கோட்டுக்கொண்டே இருக்கலாம். அவனை பாடவிட்டு பல நேரங்களில் கேட்டு இருக்கின்றேன். நல்ல ரசனையுள்ளவன். அதனால் தான் அவனால் எதையும் ரசிக்க முடிகிறது. ரசித்ததை எழுத முடிகிறது. இவன் நட்பு பார்பதற்கு எந்த தகுதியும் பார்ப்பதில்லை என்பதை அவன் நடத்தும் வதனம் எடுத்துக்காட்டும். மனுசி பாரதியை அறிமுகப்படுத்தியவன் என்பதில் அவனை பெருமையாக சொல்வேன். இப்படி நிறைய மனுசிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவன். அறிமுகப்படுத்த தாயாராக இருப்பவன்.
இவன் கொண்ட நட்பு , இவன் பேச்சு எனக்கு , இராமாயண நிகழ்வை  நினைவுக்கு வர செய்கின்றது.  வேட்டுவன், குரங்கினத்தவன், அசுரன் ஆகியோரோடு இராமன் நட்புக் கொள்வதும் , நின்கிளை என்கிளை நின் சுற்றம் என் சுற்றம், நின் பகைவர், என் பகைவர் தீயரே எனினும் நின் உற்றார் என் உற்றார் என்று சுக்கீரீவனிடம் அவன் உறுதி மொழிவதும் நட்புக் கொள்வதற்குத் தகுதி பார்க்க வேண்டியதில்லை. இன்னுயிர்த் துணைவர்க்காக எச் செயலையும் செய்யலாம் என்பதைப் புலப்படுதுகின்றன.  

      இனி சரவணா , என் நட்பு வட்டம் உன் வட்டம் . உன் எழுத்து  இனி என் எழுத்து இதை கொண்டு செல்வது என் கடமை. என்று சொல்லும் போது இவனால் எதையும் செய்து விட முடியும் என்று எண்ண செய்தது. என்னடா அப்படி சொல்கின்றேன் என்று சொல்லி விடாதீர்கள். பிளாக்கில் நான் எழுதும் போது ஊரே என்னை பாராட்டும் , ஆனால் மதுரையின் பிரபலங்கள் என்னை பிளாக் செய்து விடும். உயிர்மை நடத்திய போட்டியில் என் பிளாக் மூன்றாவதாக வந்த போது அதிர்ச்சியில் என்னை புறம் தள்ளியவர்கள் நான் அறிவேன். வேண்டுமென்றே என்னை குறை கூறியவர்கள் மத்தியில் என் எழுத்தால், என் உழைப்பால் இன்று இவனை நட்பாக்கி கொண்டேன். அவனும் அதனை மிகப் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டான்.  சீனா அய்யா கூழாங்கற்களில்  என்னை தெரிகிறதா என்ற போது என்ன அய்யா என்னை அவ்வளவு பெரியா ஆளா பார்க்காதீங்க என்று சொன்ன அந்த ஆத்மா பற்றிய எளிமை தீயாக என்னுள் அப்போதே பரவ ஆரம்பித்து விட்டான். இந்த சுவாலை என்னையும் அவனையும் பிரிக்க முடியாமால், நட்பு கொண்டு சுவாலையாக சுடர் விட்டு, எனக்கே வெளிச்சமாய் உள்ளதை உணர்கின்றேன்.
    

     முதல் முறையாக என் நண்பன் செந்தி(புனைவு) என்னை கண்டு எடுத்தான். அதன் பின் காக்கை சிறகினிலே இதழ் ஆசிரியர் எட்வின் . உங்கள் படைப்பை அனுப்புங்கள் என்று சொல்லி என்னை எனக்கே அடையாளப்படுத்தியவர். இவர்களுக்கு அடுத்து இப்போது இவன். இவர்கள் எல்லாம் பெரிய புராணத்தில் நட்புக்கொண்ட இறைவனாக காட்சியளிக்கின்றனர்.  நட்புக் கொண்ட சுந்தரருக்காக இறைவன் பொன்னும் பொருளும் தருவதும் , தூது செல்வதும், முதலையுண்ட சிறுவனை உயிர்ப்பிப்பதும் நட்புக்காக எந்த உதவியையும் தன் தகுதிக்குப் பொருத்தமற்ற செயல்களைக் கூடச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்துவனவாக உள்ளன. என் தகுதியை உயர்த்துவதற்காக இவர்கள் நட்பு எனக்கு இறைவனின் நட்பு போன்றது. இவர்கள் மூவரும் இறைகொள்கையை மறுப்பவர்கள் என்பதும் அறிந்தவன் .


         அவனுடன் பேசியதில் எனக்கு ஆத்ம திருப்தி . சாதல், பொருள்கொடுத்தல், இன்சொல் கூறல் , கூடி இருப்பதில் மகிழ்தல், துன்பத்தில் நோதல், பிரியும் போது உள்ளம் கலங்குதல் உண்மை நண்பரின் இலக்கணம் என்று தொகுத்துரைக்கிறது ஏலாதி. (பா. 68). அவனுக்காகவே சாக துடிக்கிறது மனசு. அவன் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கத் தொடங்குகிறது. பேச்சை எங்கு தொடங்கி எதில் பொருத்தி, எதில் அவிழ்த்து, எதில் முடிப்பான் என்பது அவனுக்கே உரிய மொழியாக உருவெடுத்து , நம்மை அவன் காலத்தினுள் கட்டுண்டு இருக்க செய்து விடுகின்றது. இருந்தாலும் அவன் அவனாகவே, நான் நானாகவே பிரிந்து செல்கின்றோம் . விடைப்பெற்று, இது நாளைய சந்திப்பின் குறியீடாகவே படுகின்றது. அவன் மீது கொண்ட நட்பு விரியாலாம். ஏனென்றால் அவன் நட்பாட்டம் ஆடியவன். அவனின் சொல்லாடலை புதிய தலைமுறையும் ரசித்திருக்கலாம். உஙகள் எல்லோருக்கும் பிடித்தவன் . எனக்கும் எப்போதும் பிடித்தவன். இப்போது இன்னும் கூடுதாலாய் பிணைப்புகளுடன் அறுபடாத சேர்மமாய் …அவனின் எல்லா ஆற்றல் வட்டத்திலும் பூர்த்தியுற்றவனாய்… நானும் இணைகின்றேன். அந்த தீ பொசுக்குகின்றது…ஆனந்தமாய் சாம்பலாகின்றேன். ஆத்மர்த்தியுடனே….ஆத்ம திருப்தியில்.    

Wednesday, October 23, 2013

இப்படியும் நடக்க வாய்ப்பு உள்ளது...முயன்று பாருங்கள் !

”இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு அசிரியருடனே பிறந்துள்ளான். நீ அவருடைய  அறிவுரைகளை உண்மையான உறுதியுடன் பின்பற்றினால், இந்த வாழ்விலேயே கூட ( இப்பிறவியிலேயே) உன்னிடமுள்ள வரம்பற்ற முழுமையை உன்னால் உணர்ந்து கொள்ள இயலும்” - சுவாமி விவேகானந்தர். 

மாணவர்களை குழுக்களாக பிரித்து , அவர்களை ஆரம்ப சுகாதர நிலையங்களுக்கு களப்பயணம் செய்ய முடிவெடுத்து கல்மேடு மாணவர்களை நேற்று அழைத்து சென்றது போன்று இன்று நான் மேலும் சில மாணவர்களை அருகிலுள்ள சித்தா மருத்துவ நிலையங்களுக்கு அழைத்து செல்ல தயாரானேன்.   



அப்போது மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்த ஆசிரியை உங்க சாருக்கு வேறு வேலையில்லை, தினமும் இப்படி கூட்டிக்கொண்டு பொழுதை கழிக்கிறார், நீங்களும் ஜாலியா ஊர் சுத்துங்க.. நீங்க பார்க்காத ஆஸ்பத்திரிய புதுசா காட்ட போறார் என்று முணுமுணுப்பு என் காதில் விழுந்தது. நான் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவன் என்பதால் , சிரித்துக்கொண்டே .. என்னிடம் உள்ள புகைப்பட கருவியை எடுத்து நான் புகைப்படம் எடுக்க கற்றுக்கொடுத்த என் வகுப்பு மாணவன் தங்க மணியிடம் புகைப்படக்கருவியை கொடுத்து, நீ தான் இன்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னேன்.( அவன் எடுத்த புகைப்படம் தான் மேலே உள்ளது)

மாணவன் ஒருவனை மேற்கொண்டு கூறிய ஆசிரியையை அழைத்து வரச் சொன்னேன். இன்று இந்த மாணவர்களை அருகில் (அடுத்த தெரு ஆரம்பத்தில் )உள்ள சித்தா மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சித்தா மருத்துவ நிலையத்தின் செயல்பாடுகள் , நோய்கள் குறித்து அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து வர சொன்னேன். என் புகைப்பட கருவியை தங்க மணியிடம் கொடுத்துள்ளேன் . அவன் புகைப்படம் எடுப்பான். சார் போட்டு உடைச்சிடப்போறான்.. என்றார். சக மாணவர்களும் பொறாமையில் ஆமா சார் ... உடைச்சாலும் உடைச்சுடுவான். பரவாயில்லை பத்திரமாக எடுத்துச் செல் என்று சொன்னேன்.

வரிசையாக நிற்க சொல்லி சில அறிவுரைகள் சொன்னேன். அதற்குள் மணிப்பாண்டி சார் அதெல்லாம் கரெக்டா போய்டுவோம் சார் என்றான். ஆசிரியை சிரித்தப்படி சென்றார்.

மருத்துவர் அடைந்த மகிழ்ச்சியும், அவர் மாணவர்களுக்கு மழைக்காலம் என்பதால் கொசுவால் வரும் நோய் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

பள்ளிக்கு வந்த ஆசிரியரை நோக்கி என்ன நடந்தது என்று கேட்டேன். சார் சூப்பரா கவனிக்கிறாங்க... கேள்வி மேல கேள்வி கேட்கிறானுங்க.. என்றார். இருக்கட்டும் எதை பற்றி சொன்னார்கள் என்று ஆசிரியரிடம் கேட்டேன். அதற்குள் முந்திக்கொண்டு மாணவர்கள் நாங்கள் சொல்கிறோம் என்றார்கள். சார் நல்ல தண்ணியில மலேரியா கொசு வரும். சிரட்டை, கொப்பறை, டயர் , ஆட்டு உரல் போன்றவைகளில் விழுந்துள்ள மழை நீரினால் டெங்கு கொசு பரவும் என்று அடுக்கினார்கள். சிகிச்சை முறைகளையும் சேர்த்தே சொன்னார்கள். ஆசிரியர் அசந்து போய் நின்றார். நல்லா தான் கவனிச்சு இருக்காங்க.. பரவாயில்லை சார் .. கேட்டதை அப்படியே கூறுகிறார்கள் என்றார்.

’கல்லூரி முதல்வர்களோ, பேராசிரியர்களோ புத்தகங்களின் தாள்களில் இருந்து உங்களுக்கு அதைக்கிழித்துத் தர முடியாது. சுபாவம் அமவது அவரவர்களுடைய வாழ்க்கையிலிருந்துதான் உண்டாக வேண்டும். உண்மையைச் சொன்னால் அது உங்களுக்குள் இருந்து உண்டாகி வர வேண்டும்” என்று காந்தி கூறுகிறார்.

அவர் வகுப்பு மாணவர்கள் மதிய இடைவேளையில் ஆசிரியரிடம் தங்களையும் இது போன்ற களப்பயணத்திற்கு அழைத்து செல்ல வற்புறுத்திக்கொண்டு இருந்தார்கள். இது எனக்கும் அந்த வகுப்பு மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்.
  

Monday, October 21, 2013

எதை நோக்கிய பயணம் என்பது முக்கியம்

நீ ஏற்கனவே நிறைவானவனாக, முழுமையானவனாக இருக்கிறாய். நீ உண்மையாகவே எல்லாம் வல்லவன்.”  என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகளின் ஆழத்தை என் மாணவர்களிடம் பார்க்கின்றேன்.  பாடத்தையும் கற்பிக்கும் போது ,பாடக்கருத்தினை நேரடியான அனுபவம் மூலம் தரும் போது, மாணவன் தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, புதுமையை உள் வாங்கி, தான் ஏற்கனவே புதைத்து வைத்துள்ள அறிவை தூசி தட்டி எழுப்பி, தொடர்பு படுத்தி, புதிய கருத்தோடு பொருத்தி, ஆனந்தமாக , தானாகவே கற்றுக்கொள்கின்றான்.


   
   களப்பயணம் அவனுக்கு உற்று நோக்கல் பண்பை மட்டும் தரவில்லை என்பதை பல தருணங்களில் உணர்கின்றேன். புதிய இடம் , புதிய அணுகுமுறை, புதிய விசயம், புதிய களம், புதிய புதிய என அனைத்தையும் புதுமையாக காண்கின்றான். உணர்கின்றான். கூச்சம் என்பதை முற்றிலும் துறந்தவனாக தொடர்ந்து கேள்விகளை துளைத்து தனக்கு தேவையான விசயங்களை பெறுபவனாக மாறிவிடுகின்றான்.
நோய்த்தடுப்பும் சுகாதாரமும் என்ற பாடம் சம்பந்தமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அங்கு எவ்வகையில் சுகாதாரப்பணிகள், மருத்துவத்தொண்டுகள், நோய்த்தடுப்பு மற்றும் நோய் பற்றிய விழிப்புணர்வு செய்யப்படுகின்றன என்பது சார்பாக நேரடியாக அறிந்து வர சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாலை 3 மணிக்கு எட்டு மாணவர்களுடன் சென்றேன்.


    நானும் கார்த்திக் என்ற மாணவனும் முதலில் பைக்கில் சென்றோம். பிற மாணவர்கள் பள்ளி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். கார்த்தி டாக்டரை பார்த்து நாம் எதுக்காக வந்து இருக்கோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக்க, சாரை அறிமுகப்படுத்து என்றேன். சரிங்க சார் என்று  விறு விறு என்று உள்ளே சென்றான். கர்பிணிப் பெண்கள் தவிர யாரும் இல்லை. டாக்டர் டாக்டர் என்று எல்லா அறைகளையும் கூவி விட்டு வெளியே வந்து சார் யாரையும் காணாம் என்றான். வெளியிலிருந்து ஒரு (ஆயா என நினைக்கிறேன்) உள்ளே வந்து யார் வேண்டும் என்றார். நான் டாக்டர் இருக்கிறாரா என்றேன். அதற்குள் கார்த்தி முந்திக்கொண்டு, அக்கா டாக்டர் இருந்தா சொல்லுங்க.. நாங்க ஆஸ்பத்திரி எப்படி செயல்படுகிறது என கேட்க வந்துள்ளோம் என்றான். அவர் எங்கள் இடப்புறம் செல்லும் பாதையில் நுழைந்து , சிஸ்டர் யாரோ வந்திருக்காங்க என்றார். அவர் வெளியே வருவதற்குள் கார்த்தி உள்ளே நுழைந்தான். சிஸ்டர் எங்க ஹெட்மாஸ்டர் வந்திருக்கிறார். நாங்க ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய வந்துள்ளோம் என்று எந்த தயக்கமும் இல்லாமல் சொன்னான். நான் வணக்கம் தெரிவித்து , வருகையின் நோக்கத்தை சுருக்கமாக சொன்னேன். அப்போது அவர் இன்று நடைப்பெற்ற விசயங்களை , புள்ளி விபரங்களை மெயில் அனுப்ப முயற்சித்து இருந்தார். நான் பணியினை தொடர்ந்து செய்யுங்கள், மாணவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று வெளியில் பிற மாணவர்களுக்காக காத்திருந்தேன். அனைவரும் வந்தனர்.
தங்க மணி சார் , நாங்க இங்க தான் காய்சலுக்கு மருந்து வாங்க வருவோம் என்றான்.

    சஞ்சய் எனக்கு மண்டை உடஞ்சப்ப இங்க தான் சார் கட்டு போட்டேன் என்றனர். இப்படி அனைவரும் அப்பகுதி மாணவர்கள் என்பதால் எதேனும் ஒரு காரணத்துக்காக வந்திருந்தனர்.
சஞ்சய் டெங்கு காய்சல் இருக்கும் என்று சிகிச்சையை முதல் பருவ தேர்வு இறுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் வைத்தியம் மேற்கொண்டிருந்தான். நாகார்ஜீன் ஏண்ட சஞ்சய் இங்க டெங்குக்கு காட்டல … என்று கேட்டவாறு சிஸ்டரை நோக்கினான். நானும் ஏன் சிஸ்டர் இங்கு டெங்கு நோய்க்கு சிகிச்சை மேற்கொள்வது இல்லையா? என்றேன். அதற்கு அவர் நாங்கள் இங்கு டெங்கு சிகிச்சை மருந்து கொடுப்பதில்லை. அதன் அறிகுறிகள் தென்படுகிறதா என இரத்தத்தை சோதித்து உறுதி செய்வோம். மேல் சிகிச்சைக்கு இராஜாஜி அரசு பொது மருத்துவ மனைக்கு தான் அனுப்புவோம் என்றார்.

     மாணவர்கள் எத்தனை பேர் பணிபுரிகிறீர்கள்? என கேட்க, ஒரு டாக்டர், மூன்று  செவிலியர், இரண்டு ஆயா என்றார். வீடுவீடா மருந்து கொடுக்கிறாங்களே அவுங்கள விட்டுட்டாங்க என்றான் தங்க மணி. அவர் சிரித்துக் கொண்டே தன் உரையாடலை தொடர்ந்தார். சுகாதார விழிப்புணர்வுகள் பற்றி கூறும் போது டெங்கு , மலேரியா குறித்த போஸ்டர்களை காட்டி விளக்கினார். பொதுவான மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து சொன்னார். கர்பிணிப் பெண்கள் முன்னிலைப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ஆரம்ப சுக்காதார மையங்கள் என்றார். உடனே அருகில் இருந்த இப்ராஹிம் அட குழந்தை பிறக்கிற ஆஸ்பத்திரிடா நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல்ல. என்றான்.
   
    அவருடன் மாணவர்களும் நானும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். எதோ புதிய விசயங்களை கற்றுக்கொண்ட உணர்வோடும், தாம் தெரிந்து வைத்துள்ள விசயத்தை வெளிப்படுத்த கிடைத்த தளமாகவும், தான் பழகிய இடத்தில் உள்ள சங்கடங்களை புரிந்த உணர்வோடு சிலரும் மகிழ்ச்சியோடு விடைப்பெற்றோம். அப்போது நான் இதில் யாருடா டாக்டருக்கு படிச்சு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே டாக்டரா ஆகிறது என்று கேட்டேன். இப்ராஹிம் சட்டென்று சார் நம்ம கிளாஸ்ல விக்கி (விக்னேஸ்வரன்) தான் சார் டாக்டராகணும்ன்னு சொல்லியிருக்கான்… டேய் சொல்லுடா.. நான் டாக்டராகி இங்க வருவேன் என்று… விக்கி சிரித்தப்படி டேய் சும்மா இருடா.. என்றான்.


     “பள்ளிக்கூடத்தின் வெற்றியின் அளவை அல்ல பார்க்க வேண்டியது. (குழந்தையின்) வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாய் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். குருட்டுத்தனமான பயத்துடன் கூடிய பணிவோ கட்டாயப்படுத்தித் தோற்றுவித்த ஆர்வமோ அல்ல வேண்டியது. ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படத் தாயாரவதுதான் வேண்டும்” என்ற பெஸ்ட்டலோசியின் கல்விக் கண்ணோட்டத்தை மாணவர்களிடம் பொருத்திப் பார்த்து விடைபெறுகின்றேன்.    .       

      


Wednesday, October 16, 2013

இது தொடக்கம் அல்ல ...ஆரம்பம்.

மதுரையில் எதோ ஒரு மாற்றம் நிகழத்தொடங்கியுள்ளதை உணர முடிகிறது. இந்தி எதிர்ப்பு போராட்ட காலக்கட்டங்களில் மாணவர்களின் எழுச்சி ஓங்கியது போன்ற பிரமிப்பை உணர முடிகிறது. இவர்கள் எங்கு கூடிகிறார்கள்? எப்படி இது போன்ற கருத்துக்களை  முன் வைக்கிறார்கள் எல்லாம் மர்மமாக இருந்தாலும், செயல்பாடுகள் வெளிப்படையாகத்தான் இருக்கின்றன. சுற்றுசூழல் இயல் கல்வி குறித்த அறிவு தற்போதைய இளம் கல்லூரி மாணவர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதை சமீப காலமாக நீர் ஆதரங்களுக்காக மதுரை கண்மாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலிருந்து காணமுடிகிறது.

    ”உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால், அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால், நீயும் என்னைப் போல் ஆக முடியும்” என்ற சுவாமி விவேகனாந்தரின் பொன்மொழிகளை இன்று பக்ரித் பெருநாளில் உண்மையாக்கி கொண்டிருந்தார்கள். சிஇஓஏ பள்ளி அருகில் குழுமிய “ஐ லீட் மதுரை “ குழுவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அரசியல் வாதிகளுக்கும் முன் உதாரணமாக விளங்கினர். சென்ற வாரம் வண்டியூர் கண்மாய் சீரமைப்பு பணியினை மேற்கொண்ட பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள், கல்லூரிமாணவர்கள் எழுச்சி அரசியல்வாதிகள் மனதிலும் நல்விதையை விதைத்து இருப்பதை அறிய முடிந்தது.

     குலமங்கலம் சாலையில் கலெக்டரை சந்தித்த, மேயர், துணைமேயர், கவுன்சிலர்கள், போஸ் எம்.எல்.ஏ., வார்டு தலைவர்கள் குழுமிய அரசியல் தலைவர்கள் குழு, தாங்களும் இப்பணியினை மேற்கொள்ள இருப்பதாக தங்களின் கோரிக்கையை வைத்தனர். வாக்கிங் பாதையை கண்மாயை சுற்றி அமைக்க கேரிக்கையை வைத்து கலெக்டரின் உதவியை நாடினர். திரளாக திரண்டு இருந்த இந்த கூட்டமே , மாணவர்களின் எழுச்சியின் வெற்றி.
    யார் இந்த ஐ லீட் மதுரை அமைப்பினர் ? டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கல்லூரி மாணவர்களைக் கொண்டு , மதுரை , கோயம்புத்தூர் , சென்னை ஆகிய பகுதியில் கண்மாய் பகுதிகளை சீர்செய்து நீர் ஆதாரத்தை பெருக்க திட்டம் தீட்டியுள்ளது. மாணவர்கள் என்று சும்மா சொல்லிவிட முடியாது.  அட நாம எல்லாரும் தாங்க. இன்று இதை எடுத்து நடத்தியவர்கள் தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள், பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர்கள், மதுரை சமூகவியல் கல்லூரி மாணவர்கள், மாணவர் தலைவனான அண்ணாமலை, விஸ்வநாதன் , அருண் பிரசாத், யோகேஷ் கார்த்திக், பிரசாத், ஜெயஸ்ரீ தங்கம், ப்ரீத்தி (சாப்ட்வேர் இஞினியர்) சமூக ஆர்வலர்கள் ஸ்ரீதர் , இளைய பாரி, செல்வம் ராமசாமி, சொப்னா கார்த்திக், முகம் தெரிந்த பெயர் தெரியாத பல நண்பர்கள், ரோட்டரி கிளப் செண்டரல் மெம்பர்கள், பொது மக்கள்,அஇஅதிமுக பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும்  நான் (மதுரை சரவணன்) இணைந்து இன்று இப்பணியினை மேற்கொண்டோம்.

     ஐ லீட் மதுரை நோக்கம்? நீர் நிலைகளை காப்பது. நீர் ஆதாரத்தை பெருக்குவது, அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது. பாலைவனமாக மாறும் மதுரையை அதன் அழிவிலிருந்து காப்பது.
மாணவன் அண்ணாமலை சொல்லும் போது, நாங்கள் திரட்டிய தகவலின் படி இந்த செல்லூர், குலமங்களம், மீனாட்சிபுரம் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் 1500 அடிக்கும் மேல் குறைந்து விட்டது. நாம் மேற்கொள்ளும் இப்பணி, கலெக்டர் அவர்களின் உதவியால், பொக்கிலின் கொண்டு முட்கள் வெட்டப்பட்டு, அவை அகற்றப்பட்டு, சுத்தமாக்கப்படுவதன் மூலம் , மழைக்கால தொடக்கமான இப்பருவத்தில், நமக்கு 50 அடிகளில் நீர் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றான்.


       எம்.எல்.ஏ அவர்கள் பேசும் போது, மாநகர தந்தை இருக்கிறார் , மாணவர்கள் முன்னெடுத்து செய்யும் இப்பணியினை நீங்கள் தொடர்ந்து அரசு இயந்திரத்தைக் கொண்டு சீர்படுத்தி நீர் ஆதரத்தை திரட்ட உதவிட வேண்டும் என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் இப்பணியினை துவங்கி வைக்க, முள்களை சட சட என வெட்டி தள்ளினர் மாணவர்களும்,பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் முட்கள் கைகளை கிழித்தாலும் பரவாயில்லை என இரத்தம் சிந்தியும் வேர்வைகளை கண்மாயில் நிரப்பியும் சுத்தம் செய்து , நீர்நிலை உயர உதவினர். இக்கட்டுரையை எழுதி முடிக்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. நிச்சயம் முட்கள் அற்ற , மாணவர்கள் சுத்தமாக்கிய பகுதிகளில் மழை நீர் முத்தமிட்டு தேங்கி யிருக்கும் என்ற நம்பிக்கை இச்செயல்பாட்டினை ஊக்குவிப்பதாக இருக்கிறது. அதை விட மாணவர்கள் எழுச்சி அரசியல் தலைவர்களால் உற்று நோக்கப்படுவது சமூக மாற்றத்திற்கான எழுச்சியாக கருதுகிறேன். இதனை எடுத்து நடத்தும், வந்து இணைந்து நடத்தும், தொடர்ந்து சமூக செயல்பாடுகளில் இணைந்து செயல்படும், அனைத்து நண்பர்களுக்கும் நன்றி… வாழ்த்துக்கள்.    

Thursday, October 10, 2013

எப்போதும் விழித்து இருத்தல்

தாலாட்டு
-------------
குழந்தை கதை சொல்ல ஆரம்பித்தது
தூங்கிப்போனேன்
எழுந்து பார்த்தப்போது
குழந்தை தூங்கியிருந்தது
கதை சொல்லியப்படியே 
அம்மா சரியா.... 
என தூக்கத்தில் கேட்க
குழந்தை சொல்லாத
கதைக்கு தலையாட்டியப்படியே
மீண்டும்
தூங்கிப் போனேன்....!


---------------------------------------
உன்னோடு பேசும்
நேரங்களை விட
உன்னோடு பேசா
நேரங்களே
வேகமாக நகருகின்றன
உன்னோடு பேசுவதற்காக...!


----------------------------
ஆசை
-----------
எனக்காக
வாழ ஆசைப்பட்டதை விட
உனக்காக வாழவே
அதிகம் ஆசைப்பட்டேன்....!



----------------------------------------------
அற்புதம்
-------------
இதழ்கள் பொருத்தி
நீ
அழுத்திக் கொடுக்கும்
முத்தத்தில்
அத்தனை மன அழுத்தங்களும்
அமுங்கிப் போகின்றன



____________________________



உன் அருகாமை
எனக்கு பாதுகாப்பு

---------------------------------


எல்லா போதுகளிலும்
_______________________
ஓடும் போது
உண்ணும் போது
நண்பர்களுடன் பேசும் போது
அம்மாவுடன் உரையாடும் போது
தந்தையுடன் ஊர் சுற்றும் போது
பள்ளியில் இருக்கும் போது
பாடம் கவனிக்கும் போது
என எல்லா போதுகளிலும்
கனவுகளுடனே
குழந்தைகள் வாழ்கின்றன....!
 


Wednesday, October 9, 2013

அப்பா


நான் படித்த முதல் புத்தகம்
நான் விரும்பிய முதல் புத்தகம்
நான் முத்தமிட்ட முதல் புத்தகம்
நான் கட்டித்தழுவிய முதல் புத்தகம்
நான் அனுபவித்து படித்த முதல் புத்தகம்
நான் ரசித்துப்படித்த முதல் புத்தகம்
நான் நானாக உதவிய முதல் புத்தகம்
நான் கற்றுக் கொண்டவை அதிகமாக இருக்கும் முதல் புத்தகம்
நான் வாழ்வை தேடிய போது உதவிய புத்தகம்
நான் புரட்டிய போதெல்லாம் புதுப்புது செய்திகளை கொடுத்த முதல் புத்தகம்
நான் என்னோடு வைத்திருக்க விரும்பிய முதல் புத்தகம்
நான் உணர முடியாத முதல் புத்தகம்
நான் படித்து முடித்திராத முதல் புத்தகம்
நான் எப்போதும் விரும்பும் இப்புத்தகம்
இப்போது இல்லை
எந்த நூலகத்தில் தேடுவேன்...!

Tuesday, October 8, 2013

பேய்கள் ஜாக்கிரதை

வயல்களில்
வெள்ளைப் பேய்கள்
கால் ஊன்றி ......
இவைகளுக்கு வழிகாட்டியப்படி
மேலும் சில கலர் பேய்கள்
மஞ்சள் சிவப்பு நிறங்களில்
பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது
இரவு பகல் பாராமல்
நகரமையமாதலில்
பேராசை மனிதர்களை..
வயல்கள் மட்டும் அழியவில்லை
நம் சந்ததிக்கான
உணவு உற்பத்தியும் சேர்ந்தே…..
உணவுக்காக மண்ணை
அள்ளித் தீண்ணும் காலம் வெகுவிரைவில்….! 



Saturday, October 5, 2013

சொல்ல மறந்த கவிதைகள்...

நானும் அவளும்
-------------------------
நீ உறங்கிய வேளையில்
நான் உறங்காமல்
உன்னுடன்...
நீ பேசிய பொழுதுகளில்
அமைதியாய் இருந்து விட்டு
இப்போது
பேசித்தீர்க்கின்றேன்...
நீ அடித்த ஜோக்குகளை 
உதட்டு புன்னகையில் ரசித்த நான்
உன்னுடனே இப்போது
அறைகள் அதிர்ந்திட சிரிக்கின்றேன்...
ஓசைக்கேட்டு அனைவரும் எழுந்திடவே
உன்னை மறைக்கின்றேன்
போர்வைக்குள்
என்னுடனே...!
 

காதல் மரம்
-----------------
நீயும் நானும்
சுற்றி சுற்றி விளையாடிய
மரம்
நீயற்ற பொழுதுகளில்
இலைகளை உதிர்க்கிறது
நீ வந்த பொழுது
தளிர்க்கிறது
உனக்கு கல்யாணம் என்ற போது
ஈபிக்காரன்
வளர்ந்த கொப்புகளை
முறிக்கின்றான்
என் மனமும் சேர்ந்தே ஒடிந்து விழுகிறது.....
 


காற்றாய்....
-----------------
சிறகு விரித்து பறக்கின்றேன்
இறங்கியப்படியே
தோணியாகி மிதக்கிறேன்
டால்பின் போல துள்ளிக்குதிக்கின்றேன்
ஆகாயத்தில் குதித்தப்படியே
காற்றாய் உருமாறி
கடல் தாண்டி வருகின்றேன்
இரவில் கண் மூடி
உன்னை உறங்க வைக்க
உறங்கிப்போனாய்
இப்போதும்
சிறகு விரித்து பறக்கின்றேன்
உன் கனவில்...!
 



ஆச்சரியம்
----------------
கல்யாணவீட்டில்
செருப்பா என்று கேட்டார்
ஆம் என்று சொன்னேன்
நானும் அணிந்து கொள்ளவில்லை
அவரும் அணிந்து செல்லவில்லை
செருப்பு அப்படியே கிடக்கிறது
ஆச்சரியம் தான்....!
 


கள்ளக்காதலி
-------------------
எவ்வளவு முயன்றும்
என்னால்
உன்னை பிரிந்து இருக்க முடியவில்லை...
ஆகவே
மீண்டும் மீண்டும்
சரணடைகிறேன்...
உன் பெயர்
பேஸ்புக் என்பதை மறக்காமல் 
அனைவரிடமும் சொல்லி விடு
இல்லையென்றால்
அடுத்த சண்டைக்கு
தயாராகி விடுவாள்
பாதகி....!
 


மழை நாளில் ...
-----------------------
நேரம் காலம் தெரியாமல்
பெய்கிறது மழை
திட்டிதீர்க்கும்
நகரவாசியின் மத்தியில்
நான்
நனைகிறேன்
காமம் கொண்டு
ஆசைகள் பெருகிடவே
நனைக்கிறது மழை....
என் உடம்பினை அப்படியே
சமர்பித்து
கூடுகிறேன் கூச்சமற்று
நானும் மழையும்
பிரபஞ்சத்தில்
விரிகிறோம்
என்னைப் போல் மழையும்
மழையைப் போல் நானும்
 ..!


அகராதி
-------------
மொழிகள் அற்ற 
பிரதேசத்திலும்
உன் விழி சொல்லும்
மொழியை 
நான் அறிவேன்..!



இவை அனைத்தும் நான் முகநூலில் வெளியிட்ட கவிதைகள்.. நண்பர்களின் வேண்டுதலின் பேரில் இங்கு பதிவு செய்கிறேன். மறுபதிப்பு;

Tuesday, October 1, 2013

காதலிப்பவனின் மரண வாக்கு மூலம்...


நீங்கள் பிணங்கள் எரிவதைப் பார்த்ததுண்டா
பார்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்
உயிருக்குயிராய் காதலித்தவள்
கைவிட்ட பின் அழுததுண்டா
இருப்பின்...
எரி மூட்டியவுடன்
உடல் எழும்பும் போது
நெஞ்சு பிளக்கும் சத்தமும்
அதனை அமுக்க விழும் அடிகளையும்
உணர்ந்திருப்பீர்கள்....
கொள்ளி வைத்தபின் திரும்பி
பார்க்காமல் வீடு திரும்பும்
நீங்கள் இதை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்....
இரத்தம் சூடேறி கொதிப்பு அடைந்து
நாடி நரம்புகள் வழியாக
வெளியேற முடியாமல் கொப்பளித்து
அங்கேயே எரிந்து சாம்பலாவதை ....
கோப்பைக்குள் காதலியை புதைத்து
தினமும் இரத்தம் சூடேறி
கல்லீரல் கணையம்
என எல்லாவற்றையும்
செயல் இழக்கசெய்யும் வாதையை
உணர்ந்திருப்பீர்களானால்
பிணங்கள் எரிவதை ரசித்து பார்த்திருப்பீர்கள்
காதலித்தவர்களும்
காதலில் தோற்றவர்களும்
மரணத்தை கொண்டாடுகிறார்கள்
காதலித்துக்கொண்டோ
அல்லது
காதலில் தோற்றுக்கொண்டோ...!