பேருந்து சுமக்க முடியாமல் பயணிகளை சுமந்தது. நிறைமாத கர்பிணி கூட இப்படி சுமக்க மாட்டாள். சாய்ந்து செல்லும் பேருந்து பயணிகளுடன் காதலையும்,பல கதைகளையும் சுமந்து சென்றது. நடத்துனரின் விசில் சத்தம்... காற்றில் கரைந்து ஓட்டுனரின் காதில் விழுந்து பேருந்தை மட்டும் நிறுத்தவில்லை..அவனின் பார்வையையும் நிறுத்தச் செய்தன.பேருந்து மட்டும் பயணிக்க வில்லை..அதனுடன் அவளும் அவனும் பார்வைகளை பாஸைகளாக்கி பயணித்தார்கள் .
எம்பா நானும் தான் பார்க்கிறேன் எப்புட்டு நாலுதான் இப்படியே பார்த்துகிட்டு இருப்பீங்க
எப்ப பேசப்போகிறீங்க என்ற கொந்தகைப்பாட்டியை ...ஆத்தா ...உன் பேத்தி சம்ஞ்சதும் தான் பேசுவாள் போல ...என்ற அவனின் பேச்சுக்கு அனைவரும் சிரிக்க ..எலே எம்பேத்தி சம்ஞ்சு பிள்ளை பெத்துபோட்டுட்டாடா...கிறுக்கு பயலே...என்றவுடன் அவள் தன் அழகிய இதழ் விரித்து ...பல் தெரியசிரித்தாள்.விசில் சத்தம் கேட்டவுடன் தம்பு சிம்மக்கல் வந்திருச்சு காய்கறி பையை தூக்கி தா... என்று இறங்கி சென்றாள்.
அண்ணா சிலையை ரவுண்டு அடித்து பஸ் மேம்பாலத்தில் ஏறியது...இல்லை இல்லி திணறியது. இன்னிக்கு பஸ் வேற மக்கர் பண்ணுது... கல்லூரியின் முதல் பெல் அடிக்க இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கு.. என்ற அமெரிக்கன் கல்லூரி மாணவனை முறைத்தான்.. இன்னும் பிளஸ் டூ பசங்க மாதிரி ..கொஞ்சமாவது திருந்துங்கடா என்றான். அவன் வாய் முகூர்த்தம் பேருந்து நின்றது. நடத்துனர் தம்பிகளா இறங்கி வந்து தள்ளுங்கப்பா.. என்றார். மீனாட்சி கல்லூரி குயில்கள் இனிமையாய் இட்ஸ் டூ லேட் ஷால் வீ கோ பை வால்க் என்று பீட்டர் விட ... அட பாத்துமா கால் வலிக்க போவுது என சிவப்புக் கலர் சட்டைபோட்ட ஒரு நோட்டு மட்டும் சுமந்தவன் சொல்ல ..ஏன் தலையில சுமந்து தூக்கிட்டு போறது...தங்கச்சி பாசம் ரெம்பத்தான் என்றவளை ... மாப்பிள ..உன் தங்கச்ச்சியா ..நான் வேணுமிண்ணா தள்ளிகிட்டு போகட்டா..என்ற மஞ்சள் சட்டையை முறைத்துச் சென்றன குயில்கள்.
அனைவரும் பேருந்தை முன்னோக்கி தள்ள .. உள்ளே இருந்த ஒரு பெரியவர் இளசுகளின் அலும்பைப் பார்த்து சற்று பின்னோக்கி சென்றார். நம்ம அலமேலுவை அந்த காலத்தில் கிராமத்திலிருந்து நகரப் பள்ளிக்கு வரும் போது எவ்வளவு இனிமையாக வயல் வெளியில் ஒருவருக்கு ஒருவர் அணுசரணையாக பேசிக் கொண்டு ..கள்ளம் கபடம் இல்லாத அந்த சிரிப்பை ரசித்து.. காதல் வந்தாலும் அதை ஒருவருக்கு ஒருவர் காட்டி கொள்ளாமல் ஒரு தோழமையுடன் ...சரி கிருஸ்ணா நான் போறேன்..நீ வயல் வேளை முடித்துவிட்டு சாய்ங்காலம் வா...பேசுவோம்...என்று சிரித்துச் செல்லும் அலமுவை பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் இந்தகாலத்து பொண்களுக்கு கபட சிரிப்பு இருப்பதாகவே நினைத்தார். என்ன பெரிசு ..யோசனை.. தள்ளி உட்கார் பஸ் கிளம்பிடுச்சு...என்றவனுக்கு இடம் கொடுத்தார். இருந்தாலும் கிளம்பிய பேருந்துடன் அவர் நினைவுகளுடனே பயணித்தார்.
அய்யோ என் பணம் என் பர்ச பாத்திங்கலா... என்றவனை அனைவரும் பார்த்தனர். தம்பி கீழ பாருங்க ...இல்லை .. என்றான். தன் கலங்கிய கண்களுடன் சார் யாரும் என் பர்ச பார்த்திங்களா.. ? வண்டி தள்ளும் போது எவனே பிக்பாக்கெட் அடிச்சுட்டான் என்றான். என் அம்மா கடன் வாங்கி செமஸ்டர் பீஸ் கட்ட கொடுத்தது ...என கண்ணீருடன் சொல்ல...பாவம் எடுத்தவன் உருப்பிட மாட்டான்... நாசமாத்தான் போவாங்க என நாலைந்து நடுத்தர பெண்மணிகள் சாபமிட ... பறிகொடுத்தவன் மனதிற்குள் எதையோ புலம்பியவனைப்போல இருந்தான். எத்தனைத் தடவ சொல்லுறது... பிக்பாக்கெட் ஜாக்கிரதைன்னு ... நமக்கு தான் கவனம் வேணும் ..இப்ப வருத்தப்பட்டு என்ன பண்ணா போன வாரம் ஐந்து சவரண் நகையை கட் செய்துட்டான்.. என நடத்துனர் சொன்னது தான் தாமமதம் அனைவரும் தம் கழுத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டனர். பெண்கள் புடவையை கழுத்தை மறைத்து சுற்றிக் கொண்டனர்.
என்னப்பா பஸ் மேம்பாலத்தை விட்டு நகர மாட்டீங்குது....திடீர் பந்த் நடக்குதாம்... தேவர் சிலையை மறைத்து எதிர்கட்சியினர் சாலை மறியல் பண்ணுறாங்களாம். சரியா போச்சு... காலையில பண்ணுவாங்களா.. ஜனங்க வேலைவெட்டிக்கு போகவேணாம்... டேய் மாப்பிளை நான் நடந்து போறேன் .. முதல் பிரியட் டெஸ்ட் என் சொல்லிய வாரு நடந்தான். அவனுடன் சில பெண்களும் முணங்கி கொண்டே இறங்கினர். அவன் இன்னும் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான். பார்வையில் அவர்களும் இறங்கி நடக்கவே சமிக்க்சை இருப்பதாக தெரிந்தது. இருந்தாலும் அவர்கள் ஒரு சிலருடன் வண்டியிலேயெ அமர்ந்து இருந்தனர்.
போனமா வந்தமான்னு இரு .நூறாம் நம்பர் வார்டு மறந்திடாம..இந்த துணியை கொடுத்திட்டு பேசிகிட்டு இருக்காமா சீக்கிரமா வா... பத்து மணிக்கெல்லாம் ரேசனில் அரிசி , மண்ணெண்ணை வாங்கணும்...என்ற ஞாபகம் வர நானும் இறங்கி நடந்தேன்..
என்னா..அவனும் அவளும் என்ன ஆணாங்க ... எங்க இறங்கினாங்க...என கேட்கிறீங்களா... ? அந்தா பஸ் நிக்குது... ஏறிக்குங்க.. நிறைய கதை சொல்லும்... கேட்டுக்கங்க... அவனையும் அவளையும் பற்றி விசயம் தெரியும்.