Thursday, August 26, 2010

ஆயிரத்தில் ஒருவன்

         நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த மனிதரை பார்த்தேன். அவர் தமிழக கல்வி துறைக்கு ஒரு வரப்பிரசாதம். மரியா மாண்டிசரி, காந்தி, ஜே.கே.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரை உள்வாங்கி இருக்கும் ஒரு நல்ல மனிதர். எல்லாருக்கும் உள் வாங்குதல் என்பது சாத்தியம் .ஆனால், உள்வாங்குதலை வெளிப்படுத்துதல் என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு தான் சாத்தியம். அந்த ஆயிரத்தில் ஒருவன் தான் நம் தமிழக பள்ளிகளை  மாணவர்கள் விரும்பும் பள்ளிகளாக மாற்றி கல்வியில் ஒரு புரச்சியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அதனை தக்க வைக்க ஒரு மௌன போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்.

         நீண்ட நாட்களுக்கு முன் விஜய் டிவியில் அவரை நீயா நானாவில் பார்க்கும் போது ஒருவித ஈர்ப்புக் கொண்டேன். அவரின் எளிமை , இனிமையான பேச்சு , கல்வியின் மீது உள்ள ஆர்வம். இந்த வயதிலும் ஒரு இளமைக்கான துடிப்பு. இவை தான் தமிழக கல்வித்   துறையை பிற மாநிலங்கள் தலை நிமிர்ந்து பார்க்க செய்திருக்கிறது.தமிழகத்தில் இனிமையான கற்றல் அமைந்திருக்கிறது. தேர்வு குறித்த அச்சம் மறைமுகமாக  நீக்க பட்டுள்ளது.

          எந்த ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றாலும் நமக்கு ஒரு சிறந்த துணைத்  தேவை.நல்ல நண்பன் அமைந்து விட்டால் , வாழ்க்கையில் எல்லாமே நல்லவைகலாகத் தான் நடக்கும் . அது போலத்தான் , தமிழக கல்வி துறையின் புதுமை திட்டத்திற்கு , நம் நாயகனுக்கு துணையாக அறிவொளி நாயகன் கிடைத்துள்ளான். நான் என் அறியா பருவத்தில் கல்லூரி நாட்களில் பொழுது போக்காக சென்ற அறிவொளி திட்ட செயல் பாடுகளில் அவரின் கற்றல் முறைகளை , திட்டம் செயல்பட அவர் காட்டும் ஆர்வத்தினை பார்த்து வியந்து இருக்கிறேன். மதுரையின் துணை மேயார் பங்களா , நான் அறிவொளியில் இருந்த காலங்களில் அறிவொளிக்காக ஒதுக்கப்பட்டு, பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் மறாவாத அனுபவம். இன்று நடைமுறையில் உள்ள பூத்தக பூங்கொத்து என்பது வயது வந்தோர் கல்வி திட்டத்தில் அறிவொளி அமைப்பின் கீழ் நூலகமாக இயங்கிய ஒன்றின் வெளிப்பாடாக தான் இருக்கிறது. பள்ளிகளில் இளமையில் பாட புத்தகத்தை தவிர்த்து பிற நூல்களை படிப்பது என்பது அதிசயம் , மற்றும் ஆச்சரியம்.

          இன்று நடைமுறையில் புத்தக வாசிப்பை ஒன்றாவது வகுப்பு  முதல் நடைமுறை படுத்தி இருப்பது நம் நாயகனின் சாதனைகளில் ஒன்று. என் காலங்களில் பள்ளி பருவத்தில் நூலகம் ஒன்று உள்ளது என்பது மட்டும் தெரியும் .  அதுவும் அது ஆசிரியர்கள்  ஓய்வாக செய்தி தாள் வாசிக்க வசதி ஏற்படுத்தி தந்துள்ள ஒரு அறை என்றே பலராலும் உணரப்பட்ட இடம். . சில சமயம் தவறுதலாக கால் அடி எடுத்து வைத்தாலும் , சத்தம் போடக் கூடாது என விரட்டி அடிக்க பட்ட அனுபவமும் உண்டு.  ஆனால் ,இன்று பள்ளிகளில் மதிய இடைவேளைகளில் பார்வையிட செல்லும் போது குழந்தைகள் புத்தகங்களை , பட அட்டைகளை வைத்து கதை பேசும் அழகை ரசிக்கும் போது , தமிழகம் கல்வியில் ஒரு புரட்சிக்கு செய்து கொண்டிருப்பது தெரிகிறது.

         சென்னை கார்பிரேசன் கமிஷனராக இருந்த ஒருவருக்கு கல்வியின் மீது ஏற்பட்ட காதல் , நம் கல்வி முறையையே புரட்டி போட்டு , ஒரு சாதனையை சப்தம் இல்லாமல் நடத்த உதவி இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.என்னை போல பலர் கல்வியில் ஒரு வித மாற்றம் தேவை , மாணவர்கள் சார்ந்த தானே கற்றல் தேவை என்ற சிந்தனையில் இருந்த வேலையில் ,  மாண்டிச்சரி  முறையிலான , ஜே, கே.வின் போதனைகளை உள்ளடக்கிய , காந்தியின் வழிகளில் வாழ்க்கைக்கு உகந்த கல்வியை சென்னையின் குறிப்பிட்ட பள்ளிகளில் நடைமுறை படுத்தி வெற்றிகண்ட  நம்  ஐ.ஏ.எஸ்.அதிகாரி ,மாணவரின் கற்றல் சூழல் மாறுபாட்டுடன் கல்வி அடைவுகளிலும்  மாற்றம் கண்டவுடன் அதை சென்னையின் எல்லா பகுதிகளிலும் இந்த செயல் வழிக் கல்வி திட்டத்தை அமல்படுத்தி ,சர்வ சிக்ஷா அபியான் உதவியுடன் தமிழகம்  முழுவதும்  இந்த கல்வி முறையை நடைமுறைப்  படுத்தி,நம் கல்வி முறைகளில் , கற்றல் சூழலில் மாற்றத்தினை ஏற்படுத்தி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது , பாராட்டாமல் இருக்கவும் முடியாது.
                     செயல் வழிக் கல்வி திட்டம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தினை மேம்படுத்தியுள்ளது. ரிஷி கேசில் உள்ள கல்வி முறையை கற்று , தமிழகத்தில் அதனை நடைமுறை படுத்த நம் நாயகனுடன் உதவியாக இருந்த சென்னை மாநகரக்  கல்வி அதிகாரி மாலதி அம்மா  அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் . அறிவியல் பாடத்தின் மாவட்ட கருத்தாளராக செல்லும் போது ,இனிமையாக எந்த வித அதிகார தோரணையும் காட்டாமல் ,தன்னையும் ஒரு சக  ஆசிரியராய் காட்டி , சிரித்த முகத்துடன் பயிற்ச்சியினை தரும் விதம் பல நேரங்களில் என்னை அசை போட வைத்துள்ளது. பயிற்சியின் ஊடே தான் ஆசிரியராய் பணியாற்றிய காலங்களில் வந்த இடர்பாடுகள், அவைகளை கலைந்த விதம் , மாணவர்களை தேடி சென்று திரை அரங்குகளின் முன்னால் பிடித்த விதம், பெற்றோர்களை சந்தித்த விதம் ஆகியவைகளை அவரின் சொற்களால் கேட்பதில் உள்ள சுகம் தனி. அவை இனிமையாக இருப்பதுடன் ,நம்மையும் ஒரு சிறந்த ஆசிரியராக மாற்றும் என்பது தான் அவரின் தனி சிறப்பு. 

           இரண்டு நாட்கள் முன்னாள் கல்வி அதிகாரிகளுக்கான செயல்  வழிக் கற்றல் பயிற்ச்சியினை பார்வையிட வந்த நம் நாயகன் நம் அதிகாரிகளுடன் உரையாடிய அனுபவத்தினை பார்க்கும் போது , தமிழகம் புண்ணியம் செய்துள்ளதால் தான் இவர் திட்ட அதிகாரியாக நமக்கு கிடைத்துள்ளார் என்பதை உணர்ந்தேன்.  சிரித்து கொண்டு , ஒரு அதிகார தோரணை இன்றி , ஒரு நண்பனாய், ஒரு சக ஊழியனை போல உரிமையுடன் , ஒரு தாயுள்ளத்துடன் , அதே சமயம் கல்விக்கு அதிகாரிகள் செய்ய வேண்டிய கடமைகளை நகைச் சுவையாக எடுத்துரைக்கிறார். தன் மகளின் குழந்தையை பள்ளியில் சேர்க்க ஆலோசனை சொல்லும் போது உங்களுக்கு ஒன்றும் தெரியாது என விரட்டும் மகளை பற்றி குறிப்பிட்டு,தன் பேரக்குழந்தை படிக்கும் பள்ளியில் கராத்தே, பாட்டு , நடனம் என பல சொல்லி தருகிறார்கள். நான் சென்ற முறை பேத்தியிடம் போனில் பேசிய போது என்னம்மா  செய்து கிட்டு இருக்கே என்றேன். அதற்கு நான் சாமி கும்பிடுகிறேன் தாத்தா என்றாள். நான் என்னம்மா வேண்டிக்கிட்ட என கேட்டேன். அதற்கு தாத்தா நான் டான்ஸ் கிளாசில் சேர்ந்துள்ளேன், டான்ஸ் டீச்சர் எனக்கு இடுப்பு  சரியா வர மாட்டிங்குது ,எனக்கு இடுப்பு சரியா வளையனும்ன்னு சாமி கும்பிடுகிறேன் என்றாள் என்றவுடன் அனைவரும் சிரித்தனர். அவள் சற்று பருமன் , பாருங்க ஒரு சின்ன பிள்ளை தான் செய்யும் பணியில் ஒரு வித நேர்த்தி வேண்டும் இன்று வேண்டி  கொள்கிறாள், நாம் மிகவும் வளர்ந்தவர்கள் , நமக்கு நம் பணியில் ஒரு வித பிடிப்பு வேண்டும் , ஒரு அற்பணிப்பு வேண்டும் , நம் கடமையை சரியாக செய்ய வேண்டும் , இந்த திட்டம் வெற்றி பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது, பள்ளிகளுக்கு செல்லுங்கள் பார்வை இடுங்கள். செயல் படாத பள்ளிகளுக்கு ,திறமையான ஆசிரியரை அனுப்பி , அப் பள்ளி ஆசிரியருக்கு உதவுங்கள், தலைமை ஆசிரியரிடம் தொடர்பு கொள்ளுங்கள் , பள்ளியில் செயல் வழிக் கற்றல்  மேம்பாடு அடைவதற்கு உதவுங்கள்.யாரையும் திட்டாதீர்கள், யாருக்கும் தண்டனை கொடுக்காதீர்கள் , நீங்களே முன் நின்று ஆசிரிய பயிற்றுனர் மற்றும் மேற்பார்வையாளர் உதவியுடன் திட்டம் வெற்றி பெற உதவுக்கள் இன்று சிரித்த முகத்துடன் சொன்னார்.

             ஆம். நம் விஜய குமார் ஐ. ஏ.எஸ் . அவர்கள் தான் நான் கூறிய ஆயிரத்தில் ஒருவன். அவரால் தான் தமிழகம் கல்வியில் மாற்றத்தினை கண்டு வருகிறது. நம் மாணவர்கள் முதல் வகுப்பிலேயே செய்தி தாள் வசிக்கிறார்கள் .ஆர்வமுடன் , இடை நிறுத்தம் இன்றி கற்று தருகிறார்கள். மாணவர்கள் ஆசிரியருடன் பயம் இன்றி , சக மாணவன் துணையுடன் கற்கிறார்கள்.  அது இவர் கல்வியின் மீது கொண்டு தீரா காதலால் ஏற்பட்ட மாற்றம் ஆகும். இவர் நல்ல சுகத்துடன் பல்லாண்டு வாழ தமிழக பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.     

5 comments:

சுருதிரவி..... said...

நல்ல மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

பத்மா said...

நல்லதொரு பகிர்வு ..நன்றி

vasan said...

ஆயிர‌த்தில் ஒருவ‌ரான‌ விஜ‌ய‌குமார் ஐஏஎஸ் அவ‌ர்க‌ளை அருமையாய் அவ‌தானித்து
என்னைப்போல், அறியாத‌வ‌ர்க‌ளுக்கு செய்துள்ள‌ அறிமுக‌ம் அருமை. த‌ன்ன‌ல‌ம் ம‌ட்டுமே
த‌லைநிமிர்த்தி திரியும் நாட்டில் இத்த‌கு பொதுந‌ல‌ மாம‌னித‌ர்க‌ளும் அர‌சுப் பொறுப்பில்
இருப்ப‌து ம‌ன நிறைவாய் இருக்கிற‌து. ந‌ன்றி ம‌துரை ச‌ர‌வ‌ண‌ன்.

மார்கண்டேயன் said...

ஐயா அவரின் புகைப்படம் இணைத்திருக்கலாமே

தருமி said...

பார்க்கவில்லை.
கொடுத்த அறிமுகத்திற்கு நன்றியும் பாராட்டும்

Post a Comment