Thursday, June 25, 2015

ஆசிரியருக்கு பாடம் கற்றுத்தரும் மாணவர்கள் – ஆச்சரியம் அளிக்கும் அதிர்ச்சி தகவல் !


Education is not the learning of facts, but the training of the mind to think. – Albert Einstien
ஒரு நாட்டின் வளமே மனித வளம் தான். மனிதனை வளமுள்ளவனாக உயர்த்துவதற்குக் கல்வி ஒன்று தான் சிறந்த மூலதனம். அக்கல்வி தரமான ஒன்றாக அமைய ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். நவீன கற்றல் உத்திகளை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதை புரிந்து நடக்கும் உளவியலாளராக செயல்பட வேண்டும். கல்வியை குழந்தைகள் மையப்படுத்தி கற்று கொடுக்க வேண்டும்.


இன்னும் ஆசிரியர்கள் பழைய பஞ்சாங்கத்தை கையில் தூக்கி கொண்டு , நான் தான் உனக்கு ஆசிரியர், நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும். பேசாதே, கையை கட்டி உட்கார், வாயை பொத்து என்று கூறிக்கொண்டிருந்தால், நாம் மாணவனை வகுப்பறையில் புதைக்கின்றோம் , அத்துடன் நம்மையும் சேர்த்தே அழித்து கொள்கின்றோம்.
நான் இன்று ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றேன். இப்படி பட்ட நிகழ்வுகளுக்காக பல நாட்கள் காத்திருப்பேன்.காத்திருந்து இருக்கின்றேன். இந்த வருடம் என் வகுப்பில் பயிலும் மாணவர்கள் மிகவும் எழுச்சியுடன், நற்சிந்தனையுடன், அவர்களின் படைப்பாக்க திறன் வெளிப்படுத்துவபவர்களாக காணப்படுகின்றனர். அதற்கு காரணம் கடந்த நான்கு வருடங்கள், அவர்கள் ஏபிஎல் எனப்படும் குழந்தை மையக்கல்வி முறையில் பயின்றதாக இருக்கின்றது. குழந்தை மையக்கல்வி மாணவர்களின் பயத்தை நீக்கி இருப்பதுடன், அவர்களை சுயமாக சிந்திக்க வைத்திருக்கின்றது. அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.


தினமும் ஒரு விளையாட்டு என்ற அடிப்படையில் பாடம் முடிந்ததும் செயல்படுத்துவது வழக்கம். இன்று ஆங்கிலப்பாடத்திற்கான pronoun குறித்த விளையாட்டை கற்றுக் கொடுக்க, விளையாட்டு விதிமுறைகளை சொல்லி கொண்டிருந்தேன். அப்போது ராகவன் என்ற மாணவனும் முத்து பாண்டி என்ற மாணவனும் வந்து சமூகவியல் பாடத்திற்கு விளையாட்டு சொல்லி தரவில்லை. ஆகவே, நாங்களே உருவாக்கி உள்ளோம் என்றனர்.
எனக்கு நானே கை தட்டி கொண்டேன். என் முதுகை பலமாக தட்டி கொண்டேன். நான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டேன். ஆம். என் மாணவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். புதிய ஒன்றை முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். ஜனாதிபதி கையில் விருது வாங்கி இருந்தாலும் இப்படி பட்ட மகிழ்ச்சி என்னில் உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே!

நாளை நாம் ஆங்கிலப்பாடத்திற்குரிய விளையாட்டை விளையாடலாம். இப்போது ராகவன் நமக்கு விளையாட்டை கற்று கொடுப்பான். சிரித்தான். கூச்சப்பட்டான். “சும்மா சொன்னேன், சார் “ என தடுமாறினான். “அட சும்மா சொல்லு பயப்படாதே” என்றேன்.
அருகில் இருந்த நவீன், “டேய் மனசுக்குள்ளேயே வைச்சுகிட்டு இருந்தா தப்பு, கல்வின்னா உள்ளே உள்ளதை வெளிப்படுத்துவது தான், சும்மா சொல்லு. சார் தப்பா நினைக்க மாட்டார். நமக்கு உதவுவார்” என்றான். முத்துப்பாண்டி அது வந்து சார் என ஆரம்பித்தான்.
சோழர்கள் என்றால் புலி மாதிரி ஆக்சன் செய்ய வேண்டும்” என்றான் சூப்பர் என்றேன். உடனே ராகவன் , சோரர் என்றால் வில் விடுவது போல் நிற்க வேண்டும் “ என கூறி செய்து காட்டினான். அனைவரும் ஆர்வம் ஆகினர். அடுத்து பாண்டியன் என்று கூறினால் மீன் நீந்துவது போல் அசைக்க வேண்டும் என்றான். சூப்பர், எல்லோம் கை தட்டுங்கள் என்றேன்.அனைவரும் கை தட்டினார்கள்.


”சார், இவ்வளவு தான் சார் யோசித்தேன். அப்புறம் எப்படி விளையாடுவது என தெரியவில்லை “ என்றான் முத்து பாண்டி. கவலையை விடு கான்சப்ட் உன்னோடது. அதை டெவிலப் பண்ணி முழு விளையாட்ட உருவாக்குவது என் பொறுப்பு என்றேன்.
அனைவரும் கை தட்டி சூப்பர் என்றனர். இது எனக்கு இல்லை ராகவாவுக்கும் முத்து பாண்டிக்கும் கிடைத்த பாராட்டு என்றேன். மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்போது கரிகாலன் என்பேன் , நீங்கள் உடனே புலிப்போல் ஆக்சன் செய்ய வேண்டும் என்றேன். ஆமா சார் அவன் சோழ மன்னன், புலிப்போல தான் ஆக்சன் செய்ய வேண்டும் என்றான் ராகவன். இளங்கோவடிகள் என்றேன். உடனே முத்து பாண்டி வில் விடுவது போல் நின்றான். அனைவரும் இவன் சேர மன்னன் தம்பி ஆகவே வில் என்றனர். மதுரை என்றேன். பாண்டியர் தலைநகரம் என கூறி மீன் நீந்துவது போல் நீந்த ஆரம்பித்தாள் ப்ரியா.
இப்போது எல்லோருக்கும் விளையாட்டு புரிந்தது. நான் கூறும் வார்த்தையை கவனித்து , அந்த வார்த்தை எந்த மன்னர்களுடன் தொடர்பு உடையது என அறிந்து அதற்கு தகுந்த மாதிரி ஆக்சன் செய்ய வேண்டும். எங்கே ஒரு முறை செய்து காட்டுங்கள். பாண்டியன் என்றேன். அனைவரும் நீந்துவது போல் செய்கை செய்தனர். சேரன் என்றேன். வில் விடுவது போல் ஆக்சன் செய்தனர். கரிகாலன் என்றேன். உடனே புலி உறுமுவது போல் ஆக்சன் செய்தார்கள். சூப்பர் விளையடலாம். வட்டத்தில் நிற்க வேண்டும். தவறாக செய்தவர்கள் அப்படியே அதே இடத்தில் அமர வேண்டும் அதன் பின் அவர்கள் வார்த்தைகளை கூறலாம் என்றேன்.
சிலப்பதிகாரம் என்றேன் அனைவரும் வில் போன்று நின்றனர். வேம்பு என்றேன் அனைவரும் நீந்த ஆரம்பித்தனர். கல்லணை என்றேன் புலி போல் உறுமினர். இமயவரம்பன், வஞ்சி, உறையூர், கங்கை கொண்ட சோழபுரம், ராஜ ராஜன். கண்ணகி என வார்த்தைகளை கூற மாணவர்கள் அதை ,மூவேந்தர்களுள் யாருக்குரியது என சிந்தித்து செய்கை செய்து காட்டினர. தவறியவர்கள் அமர்ந்து பிறர் கூறுவது சரிதானா என பார்த்தனர்.

பாடங்கள் திட்டமிடல், பாடத்தை நிருவகித்த, பொருள் புரிந்து கொள்ள செய்தல், வளங்களை கையாளுதல் ஆகிய எல்லா வற்றையும் விட மாணவர்களை புரிந்து கொள்ளுதல் , அவர்களின் சிந்தனையை இயல்பு நிலையில் இருந்து படைப்பூக்க நிலைக்கு அழைத்து செல்லும் என்பது உண்மை ஆகிவிட்டது.
ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை சிந்தனைத்திறன்களும் வளர்ச்சியடைய கல்வி அமைப்பும், பயிற்சி முறையும், ஆசிரியரின் ஊக்குவிப்பும் அவசியம் . இவைகள் எவ்வையான உள்ளீடுகளை வழங்குகின்றன என்பதை ஆசிரியர்கள் கல்வியாளர்களாக இருந்து சீர்தூக்கி பார்த்தால், தரமான கல்வி சாத்தியப்படும்!
மதுரை சரவணன்.

4 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சரவணன் சார். வகுப்பறை இப்படி உயிரோட்டமுள்ளதாக இருக்கவேண்டும். கற்றதை எக்காலத்தும் மறக்கமாட்டார்கள்.
பாராட்டுக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அவர்களாக சிந்தித்து செயல்படும் முயற்சிக்கு நீங்கள் தரும் ஊக்கம் மிகவும் சிறப்பு...

Yarlpavanan said...

ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை சிந்தனைத்திறன்களும் வளர்ச்சியடைய கல்வி அமைப்பும், பயிற்சி முறையும், ஆசிரியரின் ஊக்குவிப்பும் அவசியம் .

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான மாணவர்கள்! சிறப்பான ஆசிரியர்! உங்கள் பள்ளி சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!

Post a Comment